வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

29. இம்மையும் மறுமையும்

இந்த உலகத்தில் இன்பமில்லை; வேறு எங்கோ ஒரு உலகத்தில்தான் இன்பம் ஊற்றெடுத்து ஓடுகின்றது; இங்குள்ள மக்கள் யாராயினும் இந்த உடலோடு அந்த உலகத்தை அடைய முடியாது; இறந்த பிறகுதான் அவ்வுலகம் சென்று, அந்த இன்பத்தை அடையமுடியும்; ஆதலால் அதற்கான காரியங்களை அனைவரும் செய்யவேண்டும் என்று கூறுபவர்களின் கூற்றுக்களைப் பகுத்தறிவுவாதிகள் ஒத்துக்கொள்ளுவதில்லை.

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாம்என்று எண்ணி யிருப்பவர்
பித்த மனிதர், அவர்சொல்லும் சாத்திரம்
பேய் உரையாம், என்றுஇங்கு ஊதேடா சங்கம்

என்று சங்கநாதம் செய்கிறார் பாரதியார். செத்த பிறகு சிவலோகம் சேர்வோம்; வைகுந்தம் சேர்வோம் என்று எண்ணியிருப்பவர்கள், இவ்வெண்ணங் காரணமாக இவ்வுலகில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் புறக்கணிப்பவர்கள் பைத்தியக்காரர்கள்; தங்கள் செய்கைதான் சரி, தங்கள் எண்ணந் தான் சரி என்பதற்காக அவர்கள் காட்டும் சாத்திரங்கள் அறிவு டையவர்களால் எழுதப்பட்டவையல்ல. அவைகள் மக்களுக்குத் தீங்கு செய்ய எண்ணிய பேய்கள் கூறிய மொழிகள் என்று விளக்கமாகக் கூறிச் சென்றார் பாரதியார்.

ஆகவே, இம்மையின்பம், மறுமையின்பம் இரண்டும் இவ்வுலகில் உள்ளவைகள்தாம் என்பதை அறிவுடையவர்கள் மறுக்கமாட்டார்கள். இந்த நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முன்வருவார்களானால் எல்லா மக்களும் இன்புறுவதற்கு வழியுண்டு.

இரண்டின்பமும் இவ்வுலகிலே உள்ளவைகள்தாம்; அவைகள் இன்னின்னவை; அவைகளை அடையும் வழியும், முறையும் இவையிவை என்பதை வடலூரார் பாரதியாருக்கு முன்பே விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இம்மையின்பம் மறுமையின்பம் இரண்டையும் பாருங்கள்.

நல்ல உடம்பையும், பழுதற்ற அவயங்களையும் பெற்றிருக்க வேண்டும்; போதுமான அளவுக்கு எல்லாச் செல்வங்களையும் எய்த வேண்டும்: நன்மை தீமையைக் கண்டறியும் பகுத்தறிவு வேண்டும்; பசியினால் வாடுதல், பிணியினால் நலிவுறுதல், கொலையினால் பிறர்க்குத் தீங்கு செய்தல் கூடாது; இவைகள் வாழ்க்கையின்பத்திற்குத் தடை விளைவிப்பவை. உறவினர், நண்பர், அயலார் என்ற வேறுபாடின்றி எல்லோருடனும் ஒன்றாகக் கலந்து உறவாட வேண்டும். மனைவியுடனும் கூடிப் புத்தரப்பேறு பெற்று இன்புற வேண்டும். இவ்வாறு வாழ்வது இம்மையின்ப வாழ்வாகும்.

இவர்கள் அன்பு, தயை ஒழுக்கம், அடக்கம், பொறுமை, உண்மை, பரிசுத்தம் முதலிய நல்ல குணங்களை மேற்கொள்ள வேண்டும். முயற்சியனால் மேலே கண்ட இன்பங்களைப் பெற்றுப் புகழுடன் வாழவேண்டும். இதுவே இன்பத்தின் பயன், இதனை வள்ளலார் வாசகத்தால் காணுங்கள்.

இம்மையின்பமாவது: மனிதப் பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும், புவனத்திலும் போகங்களிலும் குறைவின்றி நல்லறிவுடையவர்களாய், பசி, பிணி, கொலை முதலிய தடைகள் இல்லாமல் உறவினர் சிநேகிதர் அயலார் முதலியோரும் தழுவ, சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியோடு விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மையின்ப லாபம் என்று அறியவேண்டும்.

இம்மையின்பத்தை அடைந்தவர் பெருமை எதுவென்று அறியவேண்டில், அன்பு, தயை, ஒழுக்கம், அடக்கம், பொறுமை, வாய்மை, தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று, விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறியவேண்டும்.

இது வள்ளலார் கூறிய வசனம். இதன்மூலம் இம்மை யின்பம் இன்னதென்று தெளியலாம் மறுமையின்பத்தைப் பற்றி அவர் கூறியிருப்பதையும் காண்போம்.

சிலகாலம் மாத்திரம் இன்பத்தை அனுபவிப்பது இம்மை யின்பம் பெருமுயற்சியால், பெரிய காரியங்களைச் சாதிப்பது; அப்பெரிய காரியங்களைச் செய்வதன்மூலம் இன்புறுவது; பிறரையும் இன்புறச்செய்வது. இதுவே இன்பமாகும்.

இம்மையின்பம் என்ற சொல்லப்பட்டவைகள் என்றும் நிலைத்திருக்கும் படி செய்யவேண்டும். இம்மை யின்பத்திற்குத் தடையாக இருப்பவைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும். மாறுபடாத நல்ல குணத்திலே நிலைத்து நீடித்த புகழ் பெற வேண்டும்.

மறுமை யின்பமாவது யாதெனில்: உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்று, பெரிய முயற்சியால் பெரிய விஷயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமையின்ப வாழ்வென்று அறியவேண்டும்.

மறுமையின்ப லாபம் எதுவெனில், உயர் பிறப்பைப் பெற்று இம்மையின்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்கள் எல்லாம் பொருந்த உயர்நிலையில் சுத்த விடயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமையின்ப லாபம் என்று அறியவேண்டும்.

மறுமையின்ப லாபத்தை அடைந்தவர் பெருமையாதென்று அறியவேண்டில், அன்பு, தயை முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை, எண்ணிய படி தடை படாமல் முயன்று பல நாள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறியவேண்டும் என்று வள்ளலார் மறுமையின்பத்தைப் பற்றி விளக்கியிருக் கின்றார்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்து அடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற் கென்றே எனையிந்
யுகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே

என்ற செய்யுளும் குறிப்பிடத்தக்கது. இகத்திலே பரத்தைப் பெறமுடியும்; இம்மையிலே எல்லா உயர்வையும் அடை முடியும்; என்ற உண்மையை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது.

மேலே கூறியவற்றால் இம்மை மறுமை என்பன இரண்டும் இவ்வுலகில் உள்ளவைகளே என்பதை அறியலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *