வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

28. உயிர்ப் பலி

மனிதன் அறிவற்றவனாயிருந்த காலத்திலே காற்றைக் கண்டு கலக்கம் அடைந்தான். நீரோட்டத்தைக் கண்டு நிலை கலங்கினான். நெருப்பைக் கண்டு நெஞ்சம் நடுங்கினான். தகதகவென்று பிரகாசிக்கும் சூரியனைப் பற்றிச் சிந்தித்தான்; ஒன்றும் புரியவில்லை. காலையில் அதன் இளங் கதிரில் காய்ந்து இன்புற்றான். நடுப்பகலில் அதன் கொடும் வெயிலில் அகப்பட்டு வருந்தினான்; மாலையில் அதன் மஞ்சள் நிறக் கதிரால் மனம் மகிழ்ந்தான்.

இரவிலே வானத்திலே வளர்ந்து எழுந்த பிறைச் சந்திரனால் பெரிதும் களிப்புற்றான். பூரணச் சந்திர பிம்பத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தான். இந்த நிலையிலே அவனால் இவைகளைப் பற்றி இன்னவையென்று தீர்மானிக்க முடியவில்லை.

தலைவெடிக்கக் கதிரவன் காய்கின்றான். வெயிலிலே தலை நீட்ட முடியவில்லை. பூமியிலே அடி வைக்க முடியவில்லை. அடிவைத்தால் அவ்வளவுதான்; கால்கள் வெந்து குழம்பாகி விடும் போல் காணப்படுகிறது. சிறிது நேரத்தில் வானத்திலே கருமேகங்கள் கவிந்துவிடுகின்றன. கண்ணைப் பறிக்கும் படியான மின்னல்கள்; காது செவிடுபடும் படியான இடிமுழக்கம் சோவென்று மழை பெய்கின்றது. வாடிய பயிர்கள் தழைக்கின்றன. கொதித்த பூமி குளிர்ச்சியடைகின்றது. வெயிலால் வெந்து வாடிய மக்களின் உடலிலே உற்சாகம், உள்ளத்திலே ஊக்கம், மனத்திலே கட்டுக்கடங்காத மகிழ்ச்சி தோன்றுகின்றன.

இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு அந்தக்காலத்து மனிதர்கள் ஆச்சரியப்பட்டனர். இவைகளுக்குக் காரணத்தை அறிய முயன்றனர். அவர்கள் அறிவிலே ஒன்றும் புலப்படவில்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தனர். தம்மைக் காட்டிலும் சக்தி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் இக்காரியங் களைச் செய்கிறார்கள். அவர்களை நாம் வணங்க வேண்டும் அவர்களை நாம்வணங்காவிட்டால் அவர்களால் நமக்குத் தீமை ஏற்படும் என்று எண்ணினார்.

இந்த எண்ணம் காரணமாகவே காற்று ஒரு தெய்வம்; வாயு ஒரு பகவான்; நெருப்பு ஒரு கடவுள்; அக்கினி ஒரு ஆண்டவன்; தண்ணீர் ஒரு தெய்வம்; வருணன் ஒரு பகவான்; சூரியன் ஒரு தெய்வம்; சந்திரன் ஒரு தெய்வம் இவ்வாறு, அவர்கள் கண்ட அதிசயங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கினர்.

இந்த முறையிலே, ஆதிகாலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பலவாயின. எந்த நாட்டிலும் இந்தப் பல தெய்வக் கொள்கைகளே இருந்தன.

தெய்வங்கள் பலவென்று சொல்வது தவறு. தெய்வம் ஒன்றுதான் என்று அந்தக் காலத்திலே கூறியவர்கள் புரட்சிக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். சாக்ரடீசு, ஏசுநாதர், நபிநாயகம் போன்றவர்கள் ஏக தெய்வக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த காரணத்தினாலே அல்லல்களுக்கு ஆளாயினர்.

இயற்கைப் பொருள்களையெல்லாம் தெய்வங்கள் என்று நம்பிய மக்கள் இயற்கை நிகழ்ச்சிகளையெல்லாம் தெய்வச் செயல்கள் என்று நம்பிய மக்கள் அவைகளை ஆராதித்தனர்; அவைகளுக்குத் தாங்கள் உண்ணும் உணவுகளை, குடிக்கும் பானங்களை வைத்துப் படைத்தனர்.

இவ்வாறுதான் தெய்வங்களுக்குப் பலியிடும் வழக்கம் ஏற்பட்டது. இவ் வழக்கம் இல்லாத நாடுகளேயில்லை. உலக சரித்திரத்தைப் படிப்போர், கேட்போர் இவ்வுண்மையை அறிவார்கள்.

மக்கள் அறிவு வளர்ச்சியடைந்த பின் பல இயற்கை நிகழ்ச்சிகளின் உண்மைகளை அறிந்தனர். பல தெய்வ வணக்கங்கள் பல நாடுகளிலும் ஒழிக்கப்பட்டன. பல தெய்வ வணக்கங்கள் ஒழிக்கப் பட்டதோடு கூடவே பலியிடும் வழக்கங்களும் ஒழிக்கப்பட்டன.

தெய்வம் என்பது சத்தியம் உண்மை அறிவு, அன்பு, ஒளி என்பவைகள். இத் தெய்வ உணர்ச்சி மனித சமூகத்தில் வளர வேண்டும் என்றால் அதை மறுப்பார் எவரும் இல்லை. எந்த விஞ்ஞானமும் இத்தகைய தெய்வத்தை இல்லையென்று சொல்லவில்லை. மகாத்மாவின் கொள்கை இதுவே. தெய்வத்தின் பெயரைச் சொல்லி மனித சமூகத்தை ஏமாற்றுகிறவர்களுக்கே விஞ்ஞானம் எமனாக நிற்கிறது.

இவ்வளவு அறிவும் நாகரிகமும் வளர்ந்த இக்காலத்திலும் பழைய அநாகரிகச் சின்னங்கள் மறைந்துவிடவில்லை. மக்களிடம் இருந்த பழைய மூட நம்பிக்கைகள் முழுவதும் ஒழிந்து போய் விடவில்லை. பழைய காட்டு மிராண்டித்தனமான செயல்கள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இத்தகைய பழைய மூடத்தனமான செயல்களிலே பல தெய்வ வணக்கம் ஒன்று. பலதெய்வ வணக்கம் நிலைத்திருக்கும் வரையிலும், அவைகளுக்குப் பலியிடும் வழக்கம் நிலைத்துத் தான் இருக்கும்.

நாகரிகம் பெற்ற மனித சமுதாயத்திலே பல தெய்வங்கள் வாழ முடியாது. அநாகரிகமுடைய சமுதாயத்தில் தான் பல தெய்வங்கள் வாழ முடியும். பலதெய்வ வணக்கங்களும், அவைகளுக்குப் பலியிடும் அநாகரிக வழக்கங்களும் கட்டாயமாக ஒழிக்கப் பட வேண்டும்.

மக்கள் தாமே சீர்திருந்துவார்கள் என்று கூறும் வாதம் தவறு. எந்தக் காலத்திலும் மக்கள் தாமே சீர்திருந்தியதில்லை. மதத் தலைவர்களும், சீர்திருத்தவாதிகளும் ஜன சமூகத்தின் எதிர்ப்பு வெள்ளத்தில் தான் நீந்தினார்கள். அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து தான் தங்கள் கொள்கைகளை நிலை நாட்டினார்கள். இந்த உண்மையை அறிந்தவர்கள் மக்கள் ஒப்புக்கொள்ளா விட்டாலும், எதிர்த்தாலும் பலாத்காரமாகச் சீர்திருத்தத்தைப் புகுத்துவதை மறுக்கமாட்டார்கள்; எதிர்க்க மாட்டார்கள்.

பலதெய்வக் கொள்கையை வள்ளலார் ஒப்புக் கொள்ளவில்லை. அவைகளைச் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடுகின்றார். இச் சிறுதெய்வங்களுக்குப் பலியிடும் அநாகரிகத்தை வன்மையாகக் கண்டிக்கிறார். பலியிடுவதைக் கண்டு உள்ளம் வருந்துகிறார். இதைப்பற்றி அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்.

சிறுதெய்வக் கொள்கை மக்களுக்கு நன்மை தருவது அல்ல. துன்பங்களைத்தான் உண்டாக்குகின்றது. ஒரு சிறு தெய்வம் பல பெயர்களைக் கொண்டிருக்கின்றது. அது ஆடு, மாடு, பன்றி, கோழி, எருமைக் கடா முதலியவற்றைப் பலியாகக் கொள்கின்றது. இதைக் காணும் போதெல்லாம் நான் மனம் நொந்து உடல் நடுங்குகின்றேன். மக்களுக்குத் துன்பத்தைத் தருகின்ற இந்தச் சிறுதெய்வக் கோயில்களைக் காணும் போதெல்லாம் நான் அஞ்சுகிறேன்! என்று கூறுகின்றார்.

நலிதரு சிறிய தெய்வம்ஒன்று ஐயோ,
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு, பன்றி, குக் கிடங்கள்,
பலிகடா முதலிய உயிரைப்,
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொந்து உளம்நடுக் குற்றேன்;
லியுறு சிறிய தெய்வவெம் கோயில்
கண்டகா லத்தினும் பயந்தேன்.

இதுவே அப்பாடல்.

ஆகவே மக்களின் பழைய மூடத்தனத்தின் சின்னமாகிய சிறுதெய்வக் கொண்டாட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்; நாகரிக மக்கள் வாழும் உலகத்தில் இன்னும் அநாகரிகமான தெய்வங்களை வைத்துக் கொண்டிருப்பதும், அவைகளுக்குப் பலியிடுவதும் மனித சமூகத்திற்கே அவமானம், என்பதே வடலூரார் கருத்தாகும். இக் கருத்து உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட ஒப்புக் கொள்ளும் உண்மை யாகும்.

வடலூரார் கருத்து இன்று முழுவதும் நிறைவேறா விட்டாலும், தெய்வங்களின் பெயரால் பலியிடுவது தவறு என்ற கருத்து நிறைவேறிவிட்டது. அரசாங்கச் சட்டம் தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடுவதைத் தடுக்கின்றது. பல தெய்வ வணக்கமும் நாளடைவில் ஒழிந்து போகலாம் என்பது உறுதி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *