வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

34. அடித்துப் படிப்பித்தல்

இளங்கன்று பயமறியாது : இது குழந்தைகளுக்கும் பொருந்தும். பாலகர்களுக்குப் பயம் தெரியாது. மாசு மறுவற்றது அவர்கள் உள்ளம். அத்தகைய குற்றமற்ற உள்ளத்திலே குறைகள் நிரம்பும்படி செய்பவர்கள் அவர்களுடன் பழகுகிறவர்கள் தாம்.

முதலில் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்க்கும் அன்னையர் குழந்தைகளைக் குறைபாடின்றி வளர்க்க வேண்டும். கடுஞ்சொல் கூறாமல், கனிந்து பேசி, அவர்களைக் கட்டுப் பாட்டுக்குள் அடங்கி நடக்கும்படி செய்ய வேண்டும். இத்தகைய பொறுமையும், அன்பும் தாய்மார்களுக்கு அவசியம்.

இரண்டாவது, தந்தையர் குழந்தையின் முன்னேற்றத்திற்குப் பொறுப்பாளிகள். முரட்டுத்தனமும் பிடிவாதமும் குழந்தைகளிடம் ஏற்படுவது இயற்கை. அவைகளை வளர விடுதல் நன்றன்று; வளரவிட்டால் நாளடைவில் அச்சிறுவர்கள் சிறுமிகள் எதற்கொடுத்தாலும் சண்டித்தனம் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆதலின், பக்குவமாகப் பாலர்களைச் சமாதானப்படுத்துங் குணம் தந்தைமார்களுக்கு அவசியம். குழந்தைகளைச் சமாதானப்படுத்திச் சாந்தமுடன் நடத்தத் தெரியாதவர்களே அவர்களை அடிப்பார்கள்; கடிந்து கொள்ளுவார்கள். பாவம் ! பச்சிளம் பாலகர்களுக்கு என்ன தெரியும்? அவர்களை அடிப்பதும், பயமுறுத்துவதும் அவர்களுடைய அறிவை மழுக்குவதாகும்; ஆற்றலைச் சிதைப்பதாகும். இவ் வுண்மையைப் பெற்றோர்கள் அறிதல் நன்று.

மூன்றாவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்குப் பொறுப்பாளிகள், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து; தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். இவைகள் நாம் கேட்டிருக்கும் பழமொழிகள். அறிவு வளர்ச்சி, உடல் வலிமை, நல்லொழுக்கம், ஒற்றுமை உணர்ச்சி பரந்த மனப்பான்மை, அனைவரிடத்திலும் அன்புடன் பழகுதல் கல்வி வளர்ச்சி இவைகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாளிகள் ஆரம்பக் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தாம்.

இளங் குழந்தைகளுக்கு மத வித்தியாசங்களைக் கற்பிப்பது பெருந்தவறு. அந்த மதம் உயர்ந்தது; இந்த மதம் உயர்ந்தது; முஸ்லிம்கள் இந்துக் கோயில்களை இடித்தார்கள் விக்கிரகங்களை உடைத்தார்கள்; இந்துக்கள் முஸ்லிம்களை வெறுத்தார்கள்; அவர்களுடைய மசூதிகளை இடித்தார்கள். கிறிஸ்துவர்கள் நம்முடைய மதத்திற்கு மாறானவர்கள்; புத்தர்கள், சமணர்கள் இந்து மதத்தை அழிக்க முயன்றார்கள்; வைணவர்களும் சைவர்களும் புத்த மதத்தையும், சமண மதத்தையும் அழித்து விட்டார்கள் என்றெல்லாம் சிறுவர்களுக்குப் போதிப்பதனால் அவர்கள் உள்ளத்தில் மதவெறுப்பு வேரூன்றுகின்றது.

எல்லாவற்றிலும் குழந்தைகளைக் கோலேடுத்து அடிப்பது கொடுமை! பெருங்கொடுமை! ஒரு சிறுவன் குறும்புத்தனம் செய்தால் அவன் செய்த குறும்பை அவன் உணரும்படி செய்தல் வேண்டும். இதுவே மீண்டும் அவன் அக்குற்றத்தைச் செய்யாமலிருப்பதற்கு வழி.

கற்றுக் கொடுத்த பாடத்தை ஒரு சிறுவனுக்குத் திருப்பிச் சொல்லத் தெரியா விட்டால், மீண்டும் அவன் உள்ளத்தில் உணரும் வகையில் சொல்லித்தர வேண்டும். பன்முறையும் சொல்லித்தர வேண்டும். இதுவே ஆசிரியிர் கடமை.

இதை விட்டுவிட்டுக் குறும்புத்தனம் செய்ததற்காக இளைஞர்களை அடிப்பது அறிவீனம்; பாடம் தெரியவில்லை என்பதற்காகப் பாலர்களை அடிப்பது பாதகச் செயல்.

இளம்பிள்ளைகளுக்கு அடித்துக் கல்வி புகட்டுவது அறியாமை; கொடுமை; பொறுத்துக் கொள்ள முடியாதது; என்பதை வள்ளலார் நன்றாக எடுத்துக் காட்டியுள்ளார்.

தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால், பயிற்றும்
தொழிலிலே வந்தகோ பத்தில்,
சகிப்பிலா மையினால் அடித்தனன்; அடித்த
தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும்.

கூட்டமாகக் கூடிச் சிறுவர் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் ஏற்பட்ட கோபத்தினால், பொறுமையென்னும் குணம் இல்லாமையால் அவர்களை அடித்துவிட்டேன். அப்படி அடித்த சமயத்தில் என் மனம் கலங்கிய கலக்கத்தை உன்னுடைய திருவுள்ளந்தான் அறியும்: என்று கூறுகிறார்.

சகிப்புத்தன்மை உடையவர்கள் தான் ஆசிரியத் தொழிலுக்குத் தகுதியானவர்கள்; அவர்களாலேயே சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இளம்பிள்ளைகளைப் பயமுறுத்தி அடித்துக் கல்வி கற்பிக்கும் வழக்கம், வளர்கின்ற பயிரின் தலையைக் கிள்ளுவதேயாகும்.

சிறுவர்களை அடிப்பது வெறுக்கத்தக்கது; அடித்துப் பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது. இதை வடலூர் அடிகள் விரும்பவே இல்லை. இதை மற்றொரு நிகழ்ச்சியாலும் காணலாம்.

புராணிகர் சுந்தரம் பிள்ளை என்பவர் வடலூர் அடிகளின் நண்பர்; அவர் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும் போது, அவர்கள் செய்யும் தவறைத் திருத்தும் பொறுமையற்றவர்; அவர்களை அடிப்பார். அச்செய்கையைக் குறித்து அவருக்கு இராமலிங்கர், ஒர செய்யுளின் மூலம் அறிவுரை கூறினார்.

படிப்பதுநன்று எனத்தெரிந்த பாங்குடையாய்!
மன்றுள் வெளிப் பரமன் அன்பே
தடிப்பதுநன்று எனத்தெரிந்த சதிர் உடையாய்!
அறம்நவின்ற தவத்தாய்! வீணில்
துடிப்பதுஇலாத் தூயமனச் சுந்தரப்பேர்
உடையாய்! என் தோழ! கேள் நீ!
அடிப்பதும், அச் சிறுவர்களை அடிப்பதும், நன்று
அல; என்மேல் ஆணை! ஆணை!

இதுவே அச் செய்யுளாகும். எல்லோரும் படிப்பது நல்லது என்று உணர்ந்த மனப்பாங்கு உள்ளவனே! சபையில் வெளிப்படையாக நடமாடும் பரமன் மீதுள்ள அன்பு உள்ளத்தில் உரம் பெறுவதே நன்று என்ற அறிந்த ஆற்றலுடையவனே! அற நூல்களில் சொல்லப்பட்ட தவத்தையுடையவனே! வீணாக ஆத்திரம் கொள்ளாத தூயமனமுள்ளவனே! சுந்தரம் என்னும் பெயர் உள்ளவனே ! என் தோழனே! தயவுசெய்து நான் சொல்வதைக் கேள் ! உன்னிடம் கல்வி பயிலும் சிறுவர்களை அடிப்பதும் அடிக்கடி அவர்களை அடிப்பதும் நன்மை அல்ல, என்மேல் பலமுறை ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்; அடிப்பதை அடியோடு நிறுத்திவிடு.

இவ்வாறு தன் தோழருக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருப்பது படிப்போர் உள்ளத்தை உருக்கும். படிப்புச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் வடலூரார் கருத்தைப் பின் பற்றுவது நலம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *