
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
15. ஒரே உலகம்
உலகம் ஒன்றுதான். நாம் காணும் இவ்வுலகம் ஒரே உருண்டையாகத்தான் இருக்கின்றது. இந்த உலகத்தைத் தவிர இன்னும் எண்ணற்ற உலகங்கள் இருப்பது உண்மை. விஞ்ஞானி களும் இதைக் காட்டிலும் விரிந்த பல உலகங்கள் உண்டென உரைக்கின்றனர். புராணக்காரர்களும் பல உலகங்கள் உண்டெனப் புகல்கின்றனர்.
ஆனால் புராணங்காரர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேற்றுமையுண்டு. புராணக்காரர்கள் கண்டறிந்த உலகங்கள் பதினான்கு. நமது உலகுக்கு மேலே ஏழுலகம்; கீழே ஏழுலகம். அடுக்குப் பானை போல் இந்தப் பதினான்கு உலகங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்திருக்கின்றன. பதினான்கு உலகங்களிலும் பதினான்கு வகையான உயிர்த்தொகைகள் வாழ்கின்றன. இவற்றைப் பற்றித் திட்டமாகக் கட்டுப்பாடாக இந்த உலகங்களை யெல்லாம் சுற்றிப் பார்த்தவர்களைப்போல் எழுதி விட்டார்கள். இந்து மதப் புராணங்களைப் படித்தவர்களுக்கு இதைப்பற்றித் தெரியும்.
ஆனால் விஞ்ஞானிகள் கூறும் உலகங்களுக்குக் கணக்கில்லை. இந்த உலகங்களைக்காட்டிலும் இன்னும் பெரிய பெரிய உலகங்கள் உண்டு; நாம் காணும் சூரியனைக் காட்டிலும் இன்னும் பெரிய சூரியர்கள் உண்டு. எத்தனையோ சந்திரர்கள் உண்டு என்றெல்லாம் கூறுகின்றனர்.
இவைகளில் யார் கூறுவது உண்மை? யார் கூறுவது பொய்? என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இருவர் கூற்றிலிருந்தும் நமக்குத் தெரியும் உண்மை. இன்னும் பல உலகங்கள் உண்டென்பதுதான்: இந்த உலகம் ஒன்றாக இருக்கிறது என்பது தான். இந்த உலகத்தைப் பொறுத்த வரையிலும் உருவத்தில் ஒன்றேயென்பதில் ஐயமில்லை.
ஒன்றாக உள்ள இவ்வுலகத்தில் மக்கள் மாத்திரம் ஒன்றாக இல்லை; சிறிது சிறிது உருவத்தில் வேறுபட்டிருக்கின்றனர். இவை இயற்கையில் உண்டான வேற்றுமைகள். அந்தந்த நாட்டின் பூபாகத்தில் உள்ள தட்பவெப்ப நிலைமை காரணமாக உண்டான வேறுபாடுகள்.
ஆனால் கொள்கையில் மக்களிடம் வேறுபாடேயில்லை. இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்பதில் எந்த மக்கள் கருத்திலும் வேற்றுமை இல்லை. எல்லா மக்களும் ஒரே கருத்துடனேயே வாழ்கின்றனர்.
பிறந்த நமக்கு இறப்பு உண்டு. இருக்கும் வரையிலும் நாம் இவ்வுலகில் இன்பத்துடன் வாழவேண்டும். நோயற்று வாழ வேண்டும். உலகில் உள்ள இயற்கை அதிசயங்களைப் பார்க்க வேண்டும் கண்ணுக்கினிய காட்சிகளைக் காணவேண்டும். காதுக்கினிய மொழிகளைக் கேட்க வேண்டும். உடலுக்கு இன்பந்தரும் விஷயங்கள் நுகர வேண்டும்.
இதுவே மக்களுடைய முடிந்த நோக்கம். இதற்காகவே மதம், ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கம், அரசாங்கச் சட்ட திட்டங்கள், சுதந்திரம், கலை, கலைவளர்ச்சி, வேத புராண சாதிரங்கள் எல்லாம். இன்பத்துடன் வாழ்வது மக்கள் நோக்கம். இந்நோக்கம் ஈடேற அவர்கள் பின்பற்றும் வழிகளிலே வேற்றுமைகள் பல. இந்த வேற்றுமைகளின் மூலம் மனிதகுலம் பலப்பலப் பிரிவாகப் பிரிந்து கிடக்கின்றது.
மக்கள் யாவரும் பிறப்பிலே ஒன்று. அவர்கள் பிறப்பிலே வேற்றுமையில்லை என்பதே இன்றைய அறிஞர்களின் கொள்கை பண்டைய ஞானிகள் என்போரும் இவ்வுண்மையை மதங்களின் மூலம், மத உபதேசங்களின் மூலம் வெளியிட்டிருக்கின்றனர். இருந்தும் மக்கள் எவரும் இதனைப் பின்பற்றுவதில்லை. பேசுகின்றவர்கள் எல்லாரும், மக்கள் அனைவரும் ஒன்று என்று பேசுகின்றனர். எழுதுகின்றவர்கள் எல்லோரும் மக்களுடைய பிறப்பிலே வேற்றுமையில்லை என்று எழுதுகின்றனர். இவ்வாறு பேசுவது பேச்சுக்கு மெருகு; எழுதுவது எழுத்துக்ககு அழகு; அவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இதுவே காரணம்.
ஒவ்வொரு நாடும் கூறுவது. தங்கள் நாட்டு மக்கள் இன்பத்துடன் வாழவேண்டும்; வறுமையின்றி வாழ வேண்டும்; அடிமையின்றி வாழ வேண்டும் என்பதுதான். இது உண்மையானால் ஏன் ஒரு நாட்டோடு மற்றொரு நாடு முட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் மோதிக் கொள்ள வேண்டும்? பாமர மக்களின் உயிரைப் போர்க்களத்திலே ஏன் பலி கொடுக்கவேண்டும்? பாமர மக்களின் உழைப்பை-செல்வத்தைப் போரின் மூலம் ஏன் பாழ்படுத்த வேண்டும்? இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
உலகம் பலவாறு பிரிந்து சண்டையிட்டுக் கிடப்பதற்குக் காரணம் உலகப் பொதுமக்கள் அல்லர். உலகப் பொதுமக்கள் இடையில் ஒத்த கருத்துண்டு; ஒன்றுபட்டு வாழவேண்டும் என்னும் எண்ணம் உண்டு; எல்லா மக்களும் ஒன்றுதான் என்னும் உள்ளக்கிடக்கை உண்டு. ஆனால், இந்த ஒற்றுமைக்கு உலை வைப்பவர்கள் ஒரு சிறிய கூட்டத்தினர். இச்சிறிய கூட்டத்தினருக்குத் தந்நலத்தை தவிர வேறு கொள்கையில்ல.
தாங்களே மக்களுக்குத் தலைவராக விளங்க வேண்டும்; தங்கள் சொற்படியே உலகம் ஆடவேண்டும்; உலகத்திலே பாடுபட்டும் பட்டினி கிடக்கும் கூட்டம் நிரந்தரமாக வாழ வேண்டும்; பாடுபடாமலேயே பரமாநந்தம் அனுபவிக்கும் சிறு கூட்டமும் சிரஞ்சீவியாக வாழவேண்டும்; அப்பொழுது தான் அவனியை நாம் அடக்கி ஆளலாம்; எல்லோரும் வேற்றுமையின்றி இன்புற்று இணைந்து வாழும் நிலைமை ஏற்பட்டு விட்டால் நமது தனிப் பெருமதிப்புக்குத் தலைவலி வந்துவிடும்; என்று எண்ணும் ஒரு சிறு கூட்டம் உண்டு. இந்தச் சிறு கூட்டமே இன்று உலகத்தைச் சின்னாபின்னப்படுத்திச் சீரழித்து வருகின்றது.
இந்தக்கூட்டம் விரிந்திருக்கும் சாதி வலையிலே, மத வலையிலே, சமூக வலையிலே, இன வேற்றுமை வலையிலே, அரசியல் பித்தலாட்ட வலையிலே பொதுமக்களிற் பலர் வீழ்ந்து தடுமாறுகின்றனர். இத்தடுமாற்றத்தாலேயே உலகம் ஒன்றுபட முடியவில்லை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விரித்து வைத்திருக்கும் மேற்கண்ட வலைகள் அறுபடும் காலங் குறுகிவிட்டது. விரைவில் அந்த மாயவலைகள் எல்லாம் மக்கிப் போய்விடும். மக்கள் விடுபடுவர்.
இன்றைய உலக வேற்றுமைக்குக் காரணம் மக்களுடைய அறியாமை. பையித்தியக் காரணத்தனமான உண்மை உணராமை, இதை வள்ளலார் அழகாகக் கூறியுள்ளார்.
பித்தெலாம் உடைய உலகர்தம் கலகப்
பிதற்றெலாம் என்று ஒழிந் திடுமோ?
பைத்தியக்காரத்தனமான எண்ணங்களையும் கொள்கை களையும் உடையவர்கள் உலகத்தில் உள்ளவர்கள். அவர் களுடைய கலகத்திற்குக் காரணமான உளறுதல்கள் எல்லாம் என்றுதான் ஒழியுமோ! உலகம் ஒன்றாகுமோ அறியேன்.
ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ!
உலகில் உள்ள மக்கள் எல்லாரும் ஒன்றே என்று
நினைக்கும் – அவ்வாறே பார்க்கும்- அந்த நினைப்புடனேயே நடந்து கொள்ளும் உணர்ச்சி எப்பொழுதுதான் வருமோ!
கள்ளவா தனையைக் களைந்து அருள்நெறியைக்
காதலித்து ஒருமையில் கலந்தே,
உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று
ஓங்குதல் என்றுவந்து உறுமோ!
வஞ்சத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை நீக்கி, அன்புடன் வாழ்வதில் ஆவல்கொண்டு, ஒன்றாகி வாழ்வதில் விருப்புற்று, உண்மையிலேயே இந்த உலகமெல்லாம் ஒன்றாகிக் களிப்படைந்து உயர்ந்து வாழும் வாழ்வு என்றுதான் வந்து சேருமோ!
இவ்வாறு ஒற்றுமையின் உயர்வை வெளியிட்டார். உலகம் ஒன்றாகி வாழ்வதிலேதான் இன்பம் உண்டு என்பதைக் குறிப்பிட்டார். சற்றுப் பொறுத்துச் சிந்தித்தார். உலகப் போக்கைக் கண்டார். மக்களிடம் மாறிவரும் மனப் பான்மையை உணர்ந்தார். தன் விருப்பம்-உலகமெல்லாம் ஒன்றாகி இணைந்து வாழ வேண்டும் என்னும் தன் ஆசை-நிறைவேறும் காலம் விரைவில் வந்துவிடும் என்று நம்பிக்கை கொண்டார்.
ஒருமையின் உலகெலாம் ஓங்குக! எனவே
ஊதின சின்னங்கள்!
ஊதின சங்கம்!
ஒன்றுபட்டு உலகமெல்லாம் உயர்ந்து வாழ்க என்று ஊது குழல்கள் எல்லாம் ஊதின; வெற்றிக்கு அடையாளமாகச் சங்குகளும் பூம்பூம் என்று முழங்கின.
இவ்வாறு எதிர்காலத்தை உணர்ந்து கூறினார் வள்ளலார். இந்த நாள் இன்று நம்மை அணுகிக் கொண்டிருக்கின்றது. உலகெலாம் ஒன்றே என்ற உணர்ச்சி பரவி வருகின்றது. இதை இனி எவராலும் தடுக்க முடியாது.



