வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

17. ஏழைகள் துன்பம்

ஏழை என்றால் வறியவர். பொருளில்லாதவர், தரித்திரர்கள் என்று எல்லோரும் அறிவர். ஆனால், ஏழை என்றால் அறியாதவர் என்று ஒரு பொருள் உண்டு. இது இலக்கிய வழக்கு.

ஒருவனைப் பார்த்து பாவம், இவன் ஒரு ஏழை என்றால் அதன் பொருள் தமிழிலே அறியாதவன் என்பதுதான். தமிழிலே இத்தகைய ஆழ்ந்த பொருளில் வழங்கி வரும் இந்தச் சொல்லில் சிறந்த கருத்து உண்டு.

அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார்
என்உடையரேனும் இலர்

என்ற வள்ளுவர் வாய்மொழியின் கருத்தையே அறியாமை என்னும் பொருளில் வரும் ஏழைமை என்னும் சொல் விளக்குகின்றது.

அறிவுடையான் உலகப் பந்தய ஓட்டத்தில் வெற்றி பெறுவான். வாழ்க்கை இன்பத்தை நுகர்வது எப்படி? உலகில் இன்புறுதற்கான சாதனங்கள் எவை? அவைகளை அடைவது எப்படி? என்பவைகளே யெல்லாம் அறிவான்; அவைகளை அடைவான்.

புத்திமான் பலவான் என்பது நாம் சாதாரணமாகக் கேட்கும் பழமொழியல்லவா?

ஆனால், மூடன் செய்கை இதற்கு முற்றிலும் வேறானது. நீக்குப் போக்குத் தெரியாமல் நிலை தவறுவான். நன்மை தீமையறியாமல் செல்வச் செருக்கால் அட்டகாசம் செய்வான். இன்புறுதற்கான சாதனங்களை யெல்லாம் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு வந்துவிடுவான். செல்வம் படைத்த அறிவீனன் கதி இதுவானால், செல்வமற்ற அறியாதார் கதி அதோகதிதான்.

தங்களுடைய உழைப்பின் சக்தியை அறிந்து கொள்ளும் அறிவற்ற மக்களே இன்று ஏழை மக்களாகத் தவிக்கின்றார்கள். உணர்ச்சி கொண்ட மக்கள் தங்கள் உழைப்பின் பலனைப் பெறப் போராடுகின்றனர். ஆகவே, ஏழை என்பது வறுமையைக் குறிப்பதானாலும், அறியாமையே வறுமைக்குக் காரணம் என்ற பொருளில் இருப்பதைக் காணலாம்.

ஏழை மக்கள் அறிவு பெற்றுத் தங்கள் துயரைத் தீர்த்துக் கொள்ள முனையும் போது அவர்களுக்கு இடையூறுகள் பல நேரலாம். அவர்களை வாட்டி வதக்கி வந்த கூட்டத்தார். தங்கள் பலம் முழுதையும் கொண்டு அடக்க முன்வருவார்கள். அடக்கப் பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழை மக்கள் இருந்தால்தான் ஒருசிலர் சோம்பேரிகளாக வாழ முடியும். சுக போகிகளாக வாழ முடியும்.

அறிவு பெற்றெழும் ஏழைகளை அடக்குததற்கு அந்தக் காலத்தில் மதம் பயன்பட்டது; பாவ புண்ணியம் பயன்பட்டது, தலைவிதி பயன்பட்டது. ஏழை ஒருவன் தன் துன்பத்திற்குத் தானே சமாதானம் செய்து கொள்ளுவான். என்ன செய்வது? நாம் வந்த வழி இது. ஆண்டவன் நம் தலையில் இப்படித் துயரத்தில் சாகவேண்டும் என்று எழுதிவிட்டான். அன்று எழுதினவன் அழித்து எழுதப் போவதில்லை! இதுவே அவன் சமாதானம்.

ஏழைகளை அடக்கி ஆண்டவர்களும் அவர்களுக்கு இந்த உபதேசத்தையே செய்து வந்தார்கள். ஒருவருடைய சுகத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் அவர்கள் பூர்வஜென்மத்தில் செய்த புண்ணிய – பாவம் மேலைத் தவத்தளாகவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் என்பது பெரியோர் வாக்கு. பூர்வத்தில் புண்ணியம் செய்யாதவர்கள் இப்பொழுது வறிஞராய்ப் பிறந்து வாடுகின்றனர். பூர்வத்தில் புண்ணியம் செய்தவர்கள் இப்பொழுது எல்லாச் செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ்கின்றனர் என்று தர்மோபதேசம் செய்து வந்தனர். இன்று இவ்வுப தேசத்திற்கு மதிப்பில்லை. கையால் ஆகாதவனுக்குத் தான் கடவுளும் தலைவிதியும் என்னும் காலம் வந்துவிட்டது.

ஏழைகளின் எழுச்சிக்கு எதிரணி எப்பொழுதும் காத்திருக்கின்றது. அந்த எதிரணியைத் தகர்ப்பது எளிதல்ல. பெருமுயற்சி, பெருந்தியாகம், பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி கிடைக்க முடியும்.

உலக இயற்கையே எளியாரை வலியார் அடக்குதல்தான். நீர்வாழ் சாதியில் பெரிய திமிங்கிலம், சுறா போன்றவைகள் சிறு மீன்களை இரையாக்கிக் கொள்ளுகின்றன. விலங்குகளில் சிங்கம், புலி போன்ற கொடு விலங்குகள் மற்ற விலங்குகளைக் கொன்று தின்று உயிர் வாழ்கின்றன. பல்லி,பாம்பு, பூனை, சிலந்தி போன்ற உயிர்களை எல்லாமும் இவ்வாறு தான் தம்மினும் மெலிந்த உயிர்களை உண்டு உயிர்வாழ்கின்றன. ஆகையால், மக்களிலும் செல்வத்தால், பலத்தால், அறிவால் வலியவர்கள் மற்றவர்களை அடக்கியாளுதல் இயல்பு என்று கூறலாம். சுரண்டுவோர் கூறும் சமாதானமும் இதுதான்.

ஆம்; இயல்புதான். ஆனால் மக்கள் மிருகப் பிராயத்திலிருந்து எத்தனையோ படி மேலேறி வந்துவிட்டனர். மக்களும் இயற்கையோடு இணைந்தே வாழ்ந்து கொண்டிருப்பார் களானால் இன்றைய உலகத்தை நாம் கண்டிருக்கவே முடியாது. மக்களும் மனிதக் குரங்குகளாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும். மக்களுடைய சிறப்பே இயற்கையை விட்டு வெளியேறிச் செயற்கையில் மேம்பட்டு வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது.

இவ்வுண்மையை உணர்ந்த மனிதர்கள் ஏழைகளைச் சுரண்ட எண்ணமாட்டார்கள். பிறர் உழைப்பில் உயிர்வாழ நினைக்க மாட்டார்கள்.

பணம் இல்லார்க்கு இடுக்கண் புரிந்து,
உண்ணும் சோற்றுப் பணம் பறித்து உழல்கின்ற படிறேன்.

பணமற்றவர்களுக்கெல்லாம் துன்பஞ் செய்கின்றேன். அவர்கள் சோற்றுக்காக வைத்திருக்கின்ற பணத்தைப் பறித்துக் கொண்டு திரிகின்ற பொய் வாழ்க்கையை உடையேன்.

எளியவர் வளைத்த நிலம்எலாம் கவரும்
எண்ணமே பெரிதுளேன்; புன்செய்க்
களிஉணும் மனையில் சர்க்ரை கலந்து
காய்ச்சுபால் கேட்டுஉண்ட கடையேன்;
துளிஅவர்க்கு உதவேன்; விருப்புஇலான் போலச்
சுவைபெறச் சுவைத்தநாக்கு உடையேன்;
நளிர்எனச் சுழன்றேன்; எனினும் உனையே
நம்பினேன்; கைவிடேல் எனையே.

புன்செய் நிலத்துத் தானியங்களைக் கொண்டு களிசெய்து உண்ணும் வீட்டில் புகுந்து சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிய பால் வாங்கிக் குடித்தேன். அதில் ஒரு துளி கூட அவர்களுக்குக் கொடுத்திலேன்.

இவ்வாறு செல்வர்கள் ஏழைகளின் நிலையை அறியாமல் நடந்து கொள்ளுந் தன்மையைத் தன்மேல் ஏற்றிக் கூறுகின்றார். இரக்க சிந்தையுடையவர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் பணமற்றவர்களின் பணத்தைப் பறிக்க முந்த மாட்டார்கள். களியையே உணவாகச் சாப்பிடுகிறவர்கள் வீட்டில் புகுந்து பசும்பால் காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்று பயமுறுத்த மாட்டார்கள்.

எளியரை வலியார் அடித்தபோது ஐயோ
என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன்;
திருவுளம் அறியும்எந் தாயே!

எளியவரை வலியார் அடித்தபோது என் மனத்தில் உண்டான கலக்கத்தை என்னால் தெளிவாகக் கூற முடியாது. பிறர் அக் கொடுமையை உணரும்படி தெளிவாகக் கூறும் வல்லமை எனக்கில்லை. இதை உன் திருவுள்ளம் அறியும்.

இவ்வாறு வலியோர் எளியோர்க்கு இழைக்கும் தீமையை வள்ளலார் எடுத்துக் கூறுகிறார். வலிமையுடையவர்கள், எல்லோர் பாலும் இரக்கம் உடையவர்களாய், மனிதத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே வள்ளலார் வாய்மொழி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *