வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

32. விதவை மணம்

விதவா விவாகம் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. வழிவழியாகச் சில வகுப்பாரிடையில் இன்னும் நடந்து வருகிறது. நாகரிகம் என்று கருதிச் சில வகுப்பினர் இவ்வழக்கத்தை விட்டு விட்டனர்.

விதவா விவாகம் சாதிர விரோதம்; சமய விரோதம்; சாதி வழக்கத்திற்கு மாறானது என்று கருதியிருந்த வகுப்பினர்கள் கூட இன்று இதைச் செய்ய முன் வந்து விட்டனர்.

சாதாரண பகுத்தறிவுடைய எவரும் விதவா விவாகத்தைத் தடுக்க முன்வர மாட்டார்கள். ஆணும் பெண்ணும் சமமானவர்கள்; இருவருக்கும் சம உரிமை உண்டு; ஆற்றலிலும் அறிவிலும் இருவர்களும் ஒத்தவர்கள்தாம் என்பதை ஒப்புக் கொள்ளும் எவரும் விதவா விவாகத்தை மறுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும், வழக்கத்திலும் விதவா விவாகம் நடைபெற்றது. சாத்திரமும் சமயமும் இதைத் தடுக்கவில்லை. இதற்கு அதிக உதாரணம் தேவையில்லை. சைவ சமய ஆசாரியர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதமே போதும்.

தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலினால்

என்று திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகின்றது. சங்கிலியார் விதவை. அவர்மீது காதல்கொண்டு மணந்தார் சுந்தரர்.

ஒரு பெண்ணை ஒருவனுக்கு மணம் பேசி முடித்து விட்டால் போதும்; திருமணம் முடிந்துவிட்டதாகவே கொள்வது பண்டைய வழக்கம். சங்கிலியாருக்கு முதலில் மணம் பேசி முடிந்திருந்தது. அந்த மணமகன் மாண்டு விட்டான். சாத்திரப்படி – வழக்கப்படி அவர் விதவை; மஞ்சள் நூல் இழந்திருந்திருந்தார். விதவைக் கோலத்திலிருந்தார். அவரை மணம் புரிந்தார் சுந்தரர்.

பெண்ணடிமை புகுந்த பின் விதவா விவாகம் குறைந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையில் மட்டும் அது நடை பெற்றது. தங்களை உயர்வகுப்பினராகக் கருதிக் கொண்டிருந்தவர்கள் இவ்வழக்கத்தைக் கைவிட்டு விட்டனர்.

விதவைகள் வாலிப விதவைகள் அனைவரும் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா? இயற்கை உணர்ச்சி அவர்களை விட்டுவிடுமா? ஆகையால் அவர்களில் பலர் கள்ளத்தனமாக உள்ளத்தின் உணர்ச்சியை அனுபவித்தனர். இதனால் சிசுக் கொலைகளும், கர்ப்பச் சிதைவுகளும் அனாதைக் குழந்தைகளும் தோன்றத் தொடங்கின.

உடன்கட்டை ஏறும் வழக்கம் பண்டைத் தமிழ் நாட்டிலும் உண்டு. உண்மையிலேயே காதலன் பிரிவுக்கு ஆற்றாமல் கணவனுடன் சேர்ந்து மடிவது உடன்கட்டை ஏறுதல். இது பெண்கள் தாமாகவே மனம் விரும்பிச் செய்யும் செயல். இது நாளடைவில் மாறி, உயிர் விடச் சம்மமதிக்காத பெண்களையும், பலவந்தமாகப் பிடித்துக், கணவனுடன் சேர்த்து வைத்துக் கொளுத்தத் தொடங்கினர். இந்தக் கொடுமை வடநாட்டில் அதிகமாக நடைபெற்றது. உடன்கட்டை ஏறும் வழக்கம் இம்மாதிரி உடன்கட்டை ஏற்றும் வழக்கமாக மாறியதற்குக் காரணம் விதவா விவாகம் கைவிடப்பட்டதுதான்.

உடன்கட்டை ஏற்றும் கொடுமையைச் சட்டத்தின் மூலம் ஒழித்தவர் காலஞ்சென்ற ராஜாராம் மோகன்ராய் என்பதை உலகம் அறியும். வைதீகக் குடும்பத்திலே பிறந்த அவர் சிறந்த சீர்திருத்தவாதியாக விளங்கினார். விதவா விவாகத்தை அவர் ஆதரித்தார். அவருக்குப் பின் பொதுவாகவே இந்தியா முழுவதும் விதவா விவாகத்திற்கு ஆதரவு தோன்றியது.

நமது நாட்டில் சமூகச் சீர்திருத்தத் துறையில் உழைத்த பெரியார்கள் பலர் உள்ளனர். அவர்களில் விதவா விவாகத்தை அஞ்சாமல் ஆதரித்த அறிவாளிகள் ஒரு சிலரே.

தமிழ்நாட்டில் ஜி. சுப்பிரமண்ய அய்யரே முதலில் விதவா விவாகத்தை ஆதரித்தார். இவர் பாலியத்தில் விதவையாய் போன தமது மகளுக்குப் பம்பாய்க் காங்கிரஸ் மகாநாட்டில் தேசத் தலைவர்கள் முன்னிலையில் மறுமணம் செய்வித்தார். இதன்மூலம் இவருக்கு ஏற்பட்ட தொல்லைகள் பல. அவர் சமூகத்தார் அவரை எதிர்த்தனர்; குறை கூறினர். சமூகத்திலிருந்து விலக்குவதாகப் பயமுறுத்தினர். ஒன்றுக்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று விதவா விவாகத்தை ஆதரித்தார். இவர்தான் ஹிந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகளை முதன் முதலில் தொடங்கியவர்.

தெலுங்கு நாட்டில் வீரேசலிங்கம் பந்துலு விதவா விவாகத்தை ஆதரித்தார். பல விதவை மணங்களைச் செய்து வைத்தார். இன்றும் வீரேசலிங்கம் பந்துலு என்றால் சீர்திருத்த வாதிகளான தெலுங்கர்கள் தலைவணங்கி மரியாதை செய்கின்றனர்.

வங்காளத்தில் ஈவர சந்திர வித்தியாசாகரர் பெரிய சீர் திருத்தக்காரர். சிறந்த வடமொழி வல்லுநர். கல்வி இலாகாவில் உயர்தர உத்தியோகம் தாங்கியவர். இவர் விதவா விவாகத்தை ஆதரித்து உழைத்தார்.

பாஞ்சால மாகாணத்தில் லாலா கங்கா ராம் என்பவர் விதவா விவாகத்தை நாடெங்கும் பரப்புவதற்காகவே உயிர் வாழ்ந்தார். ஆயுள் முழுவதும் உழைத்தார். அவருடைய சொத்து முழுவதையும் இந்த இயக்கத்திற்காகவே கொடுத்தார். இவருடைய சொத்தின் உதவியினாலேயே பல மாகாணங்களில் விதவா விவாக விடுதிகள் நடைபெற்று வருகின்றன.

மகாஷ்டிரத்தில் மகாதேவ கோவிந்த ரானடே இந்த இயக்கத்தில் ஈடுபட்டுழைத்தார். இவர் உயர்தர நீதிபதியாக இருந்தவர்.

காலஞ்சென்ற பெரியார்களான ராஜாராம் மோகன் ராய், ஜி. சுப்பிரமணிய அய்யர், வீரேசலிங்கம் பந்துலு, ஈவர சந்திர வித்தியாசாகரர், லாலா கங்காராம், மகாதேவ கோவிந்த ரானடே ஆகியவர்கள் சரித்திரப் பிரசித்தி பெற்று விட்டனர். இந்திய சரித்திரத்தில் இவர்கள் பெயர் அழுத்தமாகப் பதிக்கப் பெற்று விட்டன.

ஏறக்குறைய இவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்தான் வடலூர் வள்ளலார். இவரும் விதவா விவாகத்தை ஆதரித்துள்ளார். ஆனால், சீர்த்திருத்தவாதிகள் இவர் பெயரைக் குறிப்பிடுவதில்லை. காரணம் வள்ளலாரின் கருத்துக்களைச் சீர்திருத்தவாதிகள் அறியாதிருப்பதுதான்.

கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே!

இது வடலூரார் வாக்கு. கைமையாவதை அதாவது விதவையாவதை ஒழித்து, மங்கலத்தைக் கொடுத்த இரக்கமே! என்று கூறுகிறார்.

கணவன் இறந்தபின் பெண்களுக்குத் தாலி வாங்கக் கூடாது என்று குறிப்பிடுகிறார். விதவைக் கோலம் செய்வதையே தடுக்கிறார் வள்ளலார்.

தமிழ்நாட்டில் தமிழர் மரபில் தோன்றிய, உயர்ந்த சீர் திருத்தக்காரராகிய வடலூராரின் இத்தகைய சிறந்த கருத்தை நாடறியச் செய்வது உலகம் அறியச் செய்வது வள்ளலார் அன்பர்களின் கடமையல்லவா?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *