வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

38. பிள்ளை விளையாட்டு

குழந்தைகள் சிறுவர்கள் சேர்ந்து விளையாடுவதைப் பிள்ளை விளையாட்டு என்பர். விளையாடுவதிலே கருத் தொன்றும் இல்லை; பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே அவர்கள் பலவகையான விளையாட்டுக்களை விளையாடுவார்கள்.

ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு சிறு பிள்ளைகளிடம் இல்லை. தாம் பார்த்தவற்றை, தமக்கு எளிதாகச் செய்ய கூடியவற்றை, அவை தப்போ சரியோ செய்து களிப்பார்கள்; மகிழ்வார்கள். விளையாடுவார்கள். இது குழந்தைகளின் பண்பு.

இவ்வுலகிலே இன்று மக்களைச் சுரண்டுவதற்கு உதவுகின்ற சமயங்களைப் போற்றுவது சிறுபிள்ளைத்தனம்! சமயங்களின் பெயரால் நிலவுகின்ற கலைகளைக் கொண்டாடுவது சிறுபிள்ளை விளையாட்டு! சமயக் கலைகள் காட்டும் நிலை களைக் கொண்டாடுவதும் சிறுபிள்ளை விளையாட்டு! அச் சமயக் கலைகளின் காட்சிகளும் பிள்ளை விளையாட்டு! அச் சமயங்களாலும், கலைகளாலும் கூறப்படும் பிள்ளை விளையாட்டு! அச் சமயங்களாலும், கலைகளாலும் கூறப்படும் கடவுள்களை நம்புவதும் கொண்டாடுவதும் பிள்ளை விளையாட்டு ! இவற்றை நம்பவேண்டாம் என்று கூறுகின்றார் இராமலிங்க அடிகள்.

அறிவுள்ளவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமயங்களையும், அந்த சமயக் கலைகளையும். அக் கலைகள் கூறும் பல திறப்பட்ட தெய்வங்களையும் கட்டிக்கொண்டு அழமாட்டார் கள். பகுத்தறிவற்ற சிறுவர்கள்தாம் அவற்றை நம்பித்திரிவார்கள். பகுத்தறிவுள்ளவர்கள் சமரச சன்மார்க்கத்தையே விரும்பு வார்கள். இதுதான் வடலூர் அடிகளாரின் கருத்து.

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும், அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்,
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளையாட்டென நன்கு அறிவித்திங்கு எனையே
பிள்ளையெனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே!
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசே! என் சாற்றும் அணிந் தருளே!

இப்பாடல் மக்களின் மனத்திலே பகுத்தறிவுணர்ச்சியை ஊட்டும் பாடல்.

இவ்வுலகிலே இன்று நிலவும் பல சமயங்களும் உண்மையை விளக்குவன அல்ல. அவை மக்களைக் கொள்ளையடிக்கும் தொழிலோடு கூடியவை. மக்களுடைய அறிவையும், செல்வத்தையும் சுரண்டுவதற்கே அவை உலவுகின்றன.

சமயக் கூட்டங்கள் கூவுகின்ற கலைகளும் உண்மைகளை உரைப்பவை அல்ல. வஞ்சத்தையும், கள்ளத்தையும் அடிப்படை யாகக் கொண்டவையே அக் கலைகள்.

அக் கலைகளால் கூறப்படும் நிலைகள் கதிகள் சாட்சிகள் தெய்வங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. சிறு பிள்ளைகளின் விளையாட்டுக் கருவிகளைப் போன்றவை தாம்.

இந்த உண்மையை எனக்குத் தெளிவாக அறிவித்தாய்; என்னையும் உனது பிள்ளையாக ஏற்றுக்கொண்டாய்! எனக்கும் பிள்ளையென்று பெயர் வைத்தாய்! என் உள்ளத்திலே ஒளிரும் அறிவாகிய தலைவனே உன் பெருமையே பெருமை!

என்றும் அழியாத உண்மையை உணர்ந்த அன்பர்கள் போற்றும்படி அழகிய பொதுமன்றத்திலே ஒப்பற்ற நடன மாடும் அரசே! எனது பாமாலையையும் அணிந்தருள்வாய்!

இதுதான் இந்தப் பாடலில் அடங்கியிருக்கும் பொருள். சமயங்களையும், சமய நூல்களையும், அவற்றின் கூற்றுக் களையும் நம்புகின்றவர்கள் சிறுபிள்ளைகள் என்று கூறியது இப்பாடல்.

சாதிபேதம். வருணாசிரம தருமம், ஆசிரம தருமங்கள் அனைத்தும் பொருளற்றவை; சிறுபிள்ளைத்தனமான செயல்கள்! என்று மேலுங்கூறுகிறார் இராமலிங்க அடிகள்.

பிர்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு வகைச் சாதிகள் வகுத்திருக்கின்றனர். பிரம்மச்சரியம், கிருகதம், வானப்பிரதம், சந்தியாசம் என்று நால்வகை ஆசிரமங்கள் கூறுகின்றனர். இந்த நால்வகை வருணங்களுக்கும், நால்வகை ஆச்சிரமங்களுக்கும் தனித்தனி ஒழுங்கங்களும் வகுத்திருக் கின்றனர். இவற்றை ப்பற்றிக் கூறும் கலைகள் நூல்கள் பல விருக்கின்றன. அவற்றை உண்மையென்று சொல்லுவதும், நம்புவதும் சிறுபிள்ளைத்தனம்; சிறுபிள்ளை விளையாட்டு என்பதே ராமலிங்கர் கருத்து.

மடமையை நீக்கி உண்மையை உணர்ந்தவர்களே உத்தமர்கள்; அவர்களே சாதி, சமயச் சாக்கடைகளில் சிக்கிச் சாகமாட்டார்கள். வீணில் கிடந்து அலைந்து திரியமாட்டார்கள். உண்மைகளைக் கண்டறிவார்கள். இக்கருத்தை அவர் பல பாடல்களிலே பாடியிருக்கின்றார். இக் கருத்துடைய செய்யுள் ஒன்றைக் காண்போம்.

நால்வருணம், ஆச்சிரமம்; ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே!
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே!
கால்வருணம் கலையாதே ! வீணில் அலையாதே!
காண்பனவெல் லாம்எனக்குக் காட்டியமெய்ப்பொருளே
மால்வருணம் கடந்தவரை மேல்வருணத்தேற்ற
வயங்குநடத் தரசே! என் மாலை அணிந் தருளே!

நால்வகை வருணங்களைப் பற்றியும், நால்வகை ஆச்சிரமங் களைப் பற்றியும், அவற்றுக்குரிய ஆசாரங்களைப் பற்றியும் சொல்லுகின்ற சாத்திரங்கள், வரலாறுகள் எல்லாம் சிறந்த கருத்துடையன அல்ல. சிறுபிள்ளைகளின் விளையாட்டு களைப் போன்றவை.

அறிவுள்ளவர்கள் தோலின் நிறத்தைக் கொண்டு மேல் வருணம், கீழ்வருணம் என்று கண்டறிய மாட்டார்கள். நீ உன் ஞானக் கண்ணைக் கொண்டு இவ்வுண்மையைத் தெரிந்து கொள் என்று எனக்கு உண்மைகளையெல்லாம் எனக்குக் காட்டிய மெய்யறிவே.

மயக்கம் என்னும் வரணத்தைக் கடந்த வரை உயர்ந்த வருணத்தவராக வாழும்படி செய்வதற்காக விளங்குகின்ற நடனத்தில் வல்லவனே! என் பாமாலையையும் அணிந்தருள்வாய்!

இராமலிங்க அடிகள் நாத்திகர் அல்லர். உண்மையான அன்பு நெறியைத் தழுவியவர், அவர் சமயங்களை வெறுத்துப் பேசுகின்றார். சமய நூல்களை அருவருக்கிறார்; சமயங்களை வெறுத்துப் பேசுகின்றார். சமய நூல்களை அருவருக்கிறார்; சமயங்கள் கூறும் தெய்வங்களை நம்பவேண்டாம் என்று நவில்கின்றார். வருணாசிரம தருமத்தை வெறுக்கின்றார். நால்வகை ஆச்சிரமங்களையும் வெறுக்கின்றார். அவற்றுக்கான ஒழுக்கங்களையும் விரும்பவில்லை.

இவற்றிலே நம்பிக்கை வைப்பது சமரச சன்மார்க்கத்திற்கு ஒத்துவராது என்பதே அவர் கருத்து.

ஒரு சாதியிலே பற்றுக் கொண்டவன் மற்றொரு சாதியிடம் அன்பு காட்டுவதில்லை. வெறுப்புக் கூடக் காட்டுகின்றான். ஒரு சமயத்திலே வெறிகொண்டவன் பிற சமயத்தை வெறுக்கின்றான். சாதி வெறியும், சமய வெறியும் மக்கள் சமூகத்தின் ஒற்றுமைக்கு உலைவைக்கின்றன. இனவெறியும் அப்படித்தான்.

உலக மக்களிடையிலே சாமாதானம் நிலவ வேண்டுமானால், சமரச சன்மார்க்க நெறி பரவவேண்டுமானால் சமரச சன்மார்க்கத்திற்குத் தடைக் கற்களாக நிற்பவை சமய வேற்றுமை, சாதி வேற்றுமை, இன வேற்றுமை, நிற வேற்றுமை ஆகியவையே. ஆகையால்தான், இவற்றை ஆதரிக்கும் கொள் கைகள், நூல்கள், கலைகள், காட்சிகள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாதவை; சிறுபிள்ளைகளின் விளையாட்டுக்களைப் போன்றவை என்று விளக்கியிருக்கின்றார். மேலே காட்டிய இரண்டு பாடல்களும் இந்த உண்மைகளை விளக்கும் பாடல்கள்.

அன்புள்ளவர்கள் – கருணையுள்ளவர்கள் – இரக்க முள்ள வர்கள் எந்த வெறியிலும் அகப்பட்டு அல்லற்பட மாட்டார்கள். மக்கள் சமூகத்தை ஒன்றாகக் காண்பர்; ஆருக்குத் துன்பம் நேர்ந்தாலும் அன்புடன் உதவி புரிவர்; அதனால் அகமகிழ்வர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *