வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்

12. சாதி வேற்றுமை

சாதி என்று தமிழில் வழங்குகிறோம். இது வடமொழிச் சொல். இதன் உண்மை உருவம் ஜாதி, ஜம் என்ற பகுதியி லிருந்து பிறந்த சொல். பிறப்பில் வேற்றுமை உள்ள பொருள் களையே ஜாதி என்ற பெயரால் வழங்கலாம். மக்கட்பிரிவு, ஜாதி என்ற பெயரால் தமிழில் குறிப்பிடவில்லை. குலம், குடி என்ற பெயர்களே மக்கட் பிரிவைக் குறிப்பவை. குலம்-பெரும்பிரிவு. குடி-தனிக்குடும்பம் பரம்பரையாக வரும் தனிக்குடும்பம் குடி. பல குடிகளின் கூட்டம் குலம். ஜாதி என்றால் மக்கள் எல்லோரும் ஒரு சாதிதான்.

இதுபோல் பறவைகள் ஒரு சாதி, விலங்குகள் ஒரு சாதி. நீர்வாழ்வன ஒரு சாதி. ஊர்வன ஒரு சாதி. இதுதான் பழந்தமிழ் நூல்களில் நாம் காணும் சாதிப் பிரிவுகள்.

நாளடைவில் இம்முறை மாறிவிட்டது. தொழில் காரணமாக நான்கு பிரிவுகள் தோன்றின. நான்கு நாற்பதாகி நாற்பது நானூறாகி, நானூறு நாலாயிரமாகி விட்டன.

இந்தப் பிரிவு காரணமாக மக்களுள் ஒற்றுமை குறைந்தது. குரோதம் வளர்ந்தது. ஒன்றுபட்டு வாழ வேண்டிய மனித சமூகம் துண்டுபட்டுப் பிளவுபட்டுக் கிடக்கின்றது. சாதி என்ற நினைப்பின் காரணமாக, மக்கள் தங்களுக்குள் இருக்கும் பிணைப்பை மறந்து விடுகின்றனர்.

நாம் உண்ணும் உணவு முழுவதையும் நாமே தேடிக் கொள்ள முடியாது. நிலத்தைப் பண்படுத்துகின்றனர் ஒரு கூட்டத்தார். நிலத்தைப் பண்படுத்துவதற்கான கருவிகளைச் செய்து கொடுக்கின்றனர் ஒரு கூட்டத்தார். நிலத்தைப் பண்படுத்துவதற்கு இரும்புக் கருவிகள், மரக்கருவிகள் தேவைப்படுகின்றன. இரும்புக் கருவிகள் கிடைப்பதற்கு இரும்புச் சுரங்கத் தொழிலாளர்கள், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் உதவி செய்கின்றனர். சாதாரணக் கொல்லு வேலை செய்வோர், தச்சுவேலை செய்வோர் உதவியும் அவசியம். இத்தகைய பல தொழிலாளர்களின் மூலமே விவசாயம் நடைபெறுகின்றது. தானியத்தை விதைத்துப் பயிராக்கி, அறுத்து, அரைத்து, சமைத்து உணவாக்கி, உண்ணும் வரையில் எவ்வளவு மனிதர்களின் உதவி தேவையென்று எண்ணிப் பாருங்கள், உண்மை விளங்கும்.

நமது வாழ்க்கையில், நாம் அனுபவித்து வருகின்ற ஒவ்வொரு பண்டங்களையும், அவைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களையும் பற்றிச் சிந்தித்துப்பாருங்கள். இவ்வாறே உலகம் இயங்கும் விதத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால் மனித வாழ்க்கையின் கூட்டுறவு விளங்கும். இந்தக் கூட்டுறவை மறந்த மக்கள்தான் சாதிப் பிரிவு காரணமாகச் சண்டையிட்டுக் கொள்ளுகின்றனர்.

எண்ணற்ற சாதிகள்! ஒவ்வொரு சாதியினரும், வேறு வேறு விதமாக உடையணிகின்றனர். ஆண்களின் உடையில் அவ்வளவு வேறுபாடில்லை. பெண்களுக்குள் தான் உடை வேறுபாடு, கல்யாணம், கருமாதிபோன்ற சடங்குகளில் சாதியின் பெயரால் வேறுபாடுகள். நகையணிவதில் கூட சாதி வேற்றுமை.

இப்பொழுது ஓரளவு சாதி வித்தியாசம் பாராட்டுவது மறைந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் வரையிலும் ஏன் இன்று கூடச் சிலரிடம் சாதி மனப்பான்மையுண்டு. ரயிலிலோ மோட்டாரிலோ பிரயாணம் செய்யும் போது முன்பின் அறியாத இருவர் பேசிக்கொள்ளும் போது, முதலில் ஊரை விசாரிக்கின்றனர். இரண்டாவது தொழிலை விசாரிக்கின்றனர்; மூன்றாவது தாங்கள் என்ன வர்ணமோ? என்று சாதியை விசாரிக்கின்றனர். இதன் பிறகே குடும்பத்தைப் பற்றி விசாரிக் கின்றனர். இந்த வழக்கம் இன்னும் இருந்துவருவது சாதி வெறி மாறவில்லையென்பதற்கு அடையாளம்.

இந்தச் சாதி வெறி எந்த அளவு மனித சமூகத்தைத் துன்புறுத்துகின்றது என்பதைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள். ஒரு உயர்தரப் பதவியில், ஒரு பிராமணர் இருந்தால் அவர் தன்னுடைய சாதிக்கே சலுகை காட்டுகின்றார். ஒரு முதலியார், ஒரு பிள்ளை, ஒரு நாயுடு, ஒரு ரெட்டியார், ஒரு நாடார் போன்ற எந்த மனிதர் இருந்தாலும் அவர்கள் தங்கள் சாதியினருக்குச் சலுகை காட்டப் பின்வாங்குவதேயில்லை.

சாதிவெறி பிடித்தவர்கள் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்துவிட்டால், அதனால் பலருக்குத் தீங்கு விளைகின்றது. உழைப்பும், தகுதியும், திறமையும் உடைய பல ஊழியர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவிகள் கிடைப்பதில்லை.

சாதியின் பேரால் கட்சிகளும், சங்கங்களும், சண்டைகளும் தோன்றுகின்றன. இவைகள் மக்களுடைய ஒற்றுமையைக் கெடுத்துக் கலகத்தையும் குழப்பத்தையும் உண்டாக்குகின்றன. கலகமும், குழப்பமும் நிலவும் நாட்டில், தொழில் வளர்ச்சி குன்றும்; விவசாயம் தடைபடும்; நாட்டின் பொருளாதாரம் குறையும்.

நீண்ட நாட்களாக நமது நாட்டில் நிலைத்துப் பெருகி வந்த சாதிச் சண்டைகளே நம்மை அந்நியர்க்கு அடிமையாக்கின என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே.

நமது வள்ளலார் , பல பாடல்களில் சாதி வித்தியாசம் பாராட்டுவது அர்த்தமற்றது: சாதி என்பது பொய், கற்பனை என்று பாடியிருக்கின்றார்.

நால்வருணம், ஆச்சிரமம், ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளையாட்டே.

நால்வகைச் சாதிகள் கூறுதல், நால்வகைச் சாதிகளுககும் தனித் தனி ஒழுக்கம் உண்டென்று கூறுதல், அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் எல்லாம் அறிவுடையார் செய்கையல்ல; சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் செயல். அறியாமையால் எழுந்தது.

சாதிமதம் சமயம் எனும் சங்கடம்விட்டறியேன்.

மக்களைப் பிரித்து வைத்திருப்பது சாதி, மதம், சமயம் என்பவைகள் இவைகள் மக்கள் சமூகத்திற்குச் சங்கடத்தை உண்டாக்குவன.

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்.

ஆதலால் இந்தச் சங்கடத்திலிருந்து நீங்கினேன்.

சாதியை, நீள் சமயத்தை, மதத்தையெல்லா
விடுத்து, என்றன்னை ஞான
நீதியிலே, சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானை.

இந்தச் சங்கடம் விளைக்கும் சாதிவெறியை விட்டேன். மதவெறியை விட்டேன். அதன் பிறகுதான் அறிவின் வழி

நீதி மார்க்கத்தில் – அன்போடு கூடிய உண்மை மார்க்கத்தில்-நின்றேன்.

மேலே காட்டியவை இராமலிங்கரின் கருத்துக்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழரின் பண்பாட்டை மீண்டும் நிலை நிறுத்துவதே வள்ளலாரின் நோக்கம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *