
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
16. வறுமைப் பேய்
பிறந்த உயிர்கள் எல்லாம் வாழவே விரும்புகின்றன. இறக்க விரும்பும் உயிர்கள் எவையும் இல்லை. மற்ற உயிர்களைக் காட்டிலும் மக்களுக்கு இந்த ஆசை அதிகம். அவர்கள் உலகத்தில் இன்பத்துடன் உயிர் வாழவே விரும்புகின்றனர்.
மக்களுக்கு வேண்டியவைகளுள் முதன்மையானவை உயிர் வாழ உணவு; மானத்தை மறைக்க உடை. உணவும் உடையும் இல்லாதவர்கள் வறியவர்கள்; ஏழை மக்கள், அவர்கள் வாழ்க் கையில் இன்பம் எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் இந்த இரண்டுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைக்கின்றனர். உழைத்தும் அவர்கள் அகத்தில் அமைதி நிலைக்கும் அளவுக்கு அவை கிடைப்பதில்லை.
பூமி பரந்து கிடக்கின்றது. பூமிக்குள் செல்வம் நிறைந் திருக்கின்றது. நம் பெட்டியில் இருக்கும் பணம் எடுக்க எடுக்கக் குறைந்துவிடும். வைத்த பணத்தை எடுத்து விட்டால் பிறகு எவ்வளவு முயன்று முயன்று பெட்டி முழுவதும் துருவினாலும் ஒன்றும் கிடைக்காது.
வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியங்களும் எடுக்க எடுக்கக் குறையுமே ஒழிய வளராது. தானியக் களஞ்சியத்தை எவ்வளவுதான் கூட்டிப் பெருக்கிப் பார்த்தாலும் வைத்ததற்கு மேல் வராது.
ஆனால் நிலத்தின் தன்மை அதுவல்ல. முயல முயலப் பலன் தரும். உணவிற்கான தானியங்களைக் கொடுக்கும். உடுப்பதற்கான உடைகளின் மூலப் பொருள்களைக் கொடுக்கும். இன்னும் வாழ்க்கைக்குப் பயன்படும் உலோகப் பொருள்கள் எல்லாவற்றையும் கொடுக்கும். தன்னைச் சரண் புகுவோர்க்கு இல்லையென்று சொல்லும் வழக்கமே பூமி தேவியிடம் இல்லை.
உலகத்தில் போதுமான உணவுப்பொருள் இல்லை. நிலம் சரியான பலன் கொடுக்கவில்லை. தானியங்களின் விளைவுகள் குறைந்து விட்டன என்று கூறுவது மக்களுடைய சோம்பேறித் தனம்.
ஒரு நாடு சிறப்புற முதலில் அந்நாட்டில் பசிப்பிணி இல்லா திருக்க வேண்டும். பசிப்பிணியற்ற நாட்டில்தான் நோயில்லா திருக்கும். போதுமான சத்துள்ள உணவு கிடைக்காத மக்களே பலவகையான பிணிகளுக்கு ஆளாகின்றனர். பசியும் பிணியும் தாண்டவம் ஆடும் நாட்டில் அமைதித் தேவி வாழ மாட்டாள். கலகக் காளி புகுந்துவிடுவாள்; கொடுமைக் கூத்தாடுவாள்.
பசியால் வாடும் மக்கள் பொறுமையிழப்பர். எப்படியேனும் உயிர் பிழைத்தால் போதுமென எண்ணுவர். உயிர் வாழ்வதற்கு எதையும் செய்யத் துணிந்து இறங்குவர். இது இயல்பு ஆதலால் தான்,
உறுபசியும், ஓவாப்பிணியும், செறுபகையும்,
சேராது இயல்வது நாடு
என்று வள்ளுவர் கூறினார்.
மக்களுக்கு உண்டாகும் மிகுந்த பசி. அந்தப் பசி காரணமாக உண்டாகும் நீங்காத நோய்கள், இவைகள் காரணமாக எழுந்து நாட்டை நாசப்படுத்தும் பகைவர்- கூட்டம் இவை யெல்லாம் இல்லாதிருப்பதே நாடாகும். ஆகவே ஒரு நாட்டில் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பசிக்கொடுமை. இந்த உண்மையை மறந்த எந்த அரசியலும் நிலைத்திராது. மாறிவிடும். மாறாவிட்டாலும் அதனை மக்கள் மாற்றிவிடுவர்.
வறுமை, அதாவது உணவில்லையே உடையில்லேயே என்ற கவலையே மக்களுடைய உடல் உரத்தைக் குலைத்து விடும். உள்ளக் கிளர்ச்சியை ஒடுக்கிவிடும். உடல் தளர்ச்சி, உள்ளக் கவலை உண்டானால் வாலிபர்களும் வயோதிகராகத் தோற்றமளிப்பார்கள். வாலிபர்களின் கருத்த மயிர்கள் நரைத்து வெள்ளிக் கம்பிகளாகக் காட்சியளிக்கும். கவலையினாலேயே – உடல் தளச்சியினாலேயே விரைவில் தலைமயிர் நரைக்கிற தென்பது இன்றைய விஞ்ஞானிகளும் கண்டறிந்த உண்மை.
உணவும் உடையும், இடமும் மக்களுக்குக் கிடைக்கு மாயின் உலகத்திலே கவலை. குடிபுகாது நோய்கள் தலைகாட்ட மாட்டா. கலகமும் தோன்றமாட்டாது.
இன்று நடைபெறும் – தலைவிரித்தாடும் -சாதிச் சண்டை மதவெறி எல்லாம வறுமையை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மக்கள் வறுமையால் வாடுகின்றனர். அவ்வறிய மக்களுக்கு நலம் செய்வதாகக் கூறியே, சாதித் தலைவர்களும் மதத்தலைவர்களும், அவர்களை ஒருவரோடு ஒருவர் மோத விடுகின்றனர். நம்முடைய சாதிக்கு அதிகாரம் வந்தால் நமது வறுமை ஒழிந்துவிடும்; நமது மதத்துக்கு அரசு கிடைத்தால் நமது துன்பம் தொலைந்துவிடும் என்று சாதி-மதத்தலைவர்கள் கூறுகின்றனர்; கல்வியறிவற்ற பாமர மக்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றனர்.
வறுமையே இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் காரணம். நாட்டில் வறுமை இல்லாவிட்டடால் – எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் உடை, எல்லோருக்கும் உறையுள், எல்லோருக்கும் போதுமான ஓய்வு கிடைத்து விட்டால் நாடு அமைதியாக இருக்கும். மக்கள் ஒரே குலமாய்க் குரோதமின்றிக் கூடி வாழ்வார்கள்.
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந்து
ஓதிய வறிஞருக்கு ஏதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன்
என்று வறியோர்க்கு உதவாத தன்மையைத் தன்மேல் ஏற்றிக் கூறினார்.
பரைத்தனி வெளியில் நடம்புரிந்தருளும்
பரமனே! அரும்பெரும் பொருளே!
தரைத்தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமைச்
சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளையர் முதலினோர் எனை ஓர்
நண்பன் என்று அவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கியென் உள்ளம்
உடைந்தது உன் உளம்அறி யாதோ !
வாடிய பயிரைக் கண்டாபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோறு இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுஉளம் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சில்
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
வறுமையால் வாடுவோர் அற்ற சிறந்த சமுதாயமாக மனித சமுதாயம் வாழவேண்டும் என்பதே வள்ளலார் உள்ளம்.



