
வடலூரார் வாய்மொழி
சாமி சிதம்பரனார்
7. ஆராயும் அறிவு
அறிவே மக்களுக்குச் செல்வம், அறிவின்மையே வறுமை, அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவுடையவர்க்கு ஆண்மையுண்டு; திறமையுண்டு; செல்வம் உண்டு; வாழ்க்கையில் வெற்றியுண்டு; இன்பம் உண்டு; எதிர்காலத்தை அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. அறிவிலார் என்னுடையரேனும் இலர். அறிவிலார்க்கு இடம், பொருள், ஏவல் எல்லாமிருந்தும் பயனில்லை. அவற்றை அநுபவிக்கும் வழியை அறியமாட்டார்கள்; அவர்களுக்குத் திறமையோ, வாழ்க்கையில் வெற்றியோ, இன்பமோ எதுவும் இருக்க முடியாது. இதனால்தான் அறிவு அனைவர்க்கும் வேண்டும்! வேண்டும்! என்று பறை சாற்றுகின்றனர். இக்கருத்தையே வள்ளுவரும் வலியுறுத்துகின்றார்.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
என்ற குறளால் இதைக் காணலாம்.
அறிவிலே பொது அறிவு, சிறப்பறிவு என்று இரண்டு வகை. பொது அறிவு, பசி, தாகம், சரீர இன்பம் இவற்றை உணர்தல்; இவற்றைத் தேடுவதிலேயே வாழ்நாளைப் போக்கல். இவ்வறிவு மக்களினம், விலங்கினம், பறவையினம் எல்லாவற்றிற்கும் பொது. இவ்வறிவு உயிருள்ள – நடமாடும் -பிராணிகளிடமெல்லாம் உண்டு. ஆனால் சிறப்பறிவு மக்களுக்கு மட்டிலும் சொந்தம். நல்லது இது, தீயது இது; செய்யத் தகுந்தது இது செய்யத் தகாதது இது; இதைச் செய்தால் இப்படி முடியும். என்றெல்லாம் சிந்தனை செய்து செயலில் இறங்கும் அறிவே சிறப்பறிவாகும்.
இந்தச் சிறப்பறிவு படைத்தவர்கள் சிலர்தான். அவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது; இவ்வுலகம் நாகரிகம் பெற்றிருக்கிறது; இவ்வுலகம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடத்துக் கொண்டிருக்கிறது. எல்லா மக்களிடமும் அதாவது பெரும்பாலான மக்களிடம் சிறப்பறிவு இருந்தால் இவ்வுலகம் இன்னும் உயர்ந்த நிலையிலிருக்கும்.
இந்தச் சிறப்பறிவு – படிப்பினால் – புத்தகப் படிப்பினால் மட்டும் உண்டாவதில்லை. பிறர் சொல்லிக் கொடுப்பதனாலும் வருவதில்லை. தானே உணர்வதனால் வளர்வதாகும்; ஓதா விட்டாலும் உலகப் போக்கை உய்த்துணர்ந்து சிந்தனை செய்வதனால் வருவதாகும். இது பற்றிய வள்ளலார் கருத்து கீழ் வருமாறு:
ஓதாது உணர்ந்திட ஒளியளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெரும் சோதி.
அருட்பெரும் சோதி என்பதற்கு இரக்கத்தோடு கூடிய பேரறிவு என்பதே பொருள். வௌச்சத்தில் எல்லாவற்றையும் காண முடியும். அதுவும் பெரிய வெளிச்சத்தால் காண முடியாத பொருள் எதுவும் இருக்க முடியாது. ஆதலால்தான் அறிவை ஒளியென்றும், ஜோதியென்றும், விளக்கென்றும் குறிப்பிடுகிறார் இராமலிங்கர்.
புத்தகங்களைப் படிக்காமலே உலக நிலைமையை உணர்ந்து கொள்ளும்படியான அறிவை எனக்களித்தாய், மற்றும் செய்யக்கூடிய செயல்களுக் கெல்லாம் ஆதரவாகவும் இருக்கின்றாய். இரக்கத்தோடு கூடிய பேரறிவாகிய நீ தான் இந்த நிலையை எனக்களித்தாய்! என்பதே மேலே காட்டிய அடி களின் பொருள்.
இந்தச் சிறப்பறிவை அவர் பாராட்டும் முறையைப் பாருங்கள்:-
ஏடகத்தே எழுதாத மறைகள் எல்லாம் களித்தே
என் உள்ளத்தே எழுதுவித்த என் உரிமைப் பதியே!
என்று உண்மையை வெளியிடுகிறார். ஏடுகளிலே – அதாவது சாத்திரங்களிலே – வேதபுராண இதிகாசங்களிலே – எழுதப் படாத இரகசியங்களையெல்லாம் என் உள்ளத்தில் களிப்போடு எழுதச் செய்தாய்; எனக்கே உரிமையாக என் உள்ளத்தில் வளர்ந்திருக்கின்ற அறிவே ! இதுவே இவ் வடிகளின் பொருள்.
ஆகவே படிப்பதனால் மட்டும் உலக நிகழ்ச்சியை மக்களின் மனோ நிலைமையை – உலகம் மாறிக்கொண்டு வரும் போக்கை- உணர்ந்து கொள்ள முடியாது. சிந்தனை சக்தியால் தான் உலகப்போக்கை உணர்ந்து கொள்ள முடியும் என்று முழக்கஞ் செய்கிறார்.
இவ்வுலகில் பேரறிஞராகக் கருதப்படுகிறவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையிலே தேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றனர். சிலர் அரசியல் துறையிலே வல்லுநர்கள்; சிலர் பொருளாதாரத் துறையிலே தேர்ந்தவர்கள்; சிலர் கதைகள்-கட்டுரைகள் எழுதுவதிலே தேர்ந்தவர்கள்; சிலர் கற்பனைகள் நிறைந்த கவிதைகள் புனைவதிலே அறிஞர்கள்; சிலர் வைத்தியத் துறையிலே வல்லவர்கள்; சிலர் சிற்பத் துறையிலே சிறந்தவர்கள்; சிலர் விஞ்ஞானத் துறையிலே வித்தகர்கள். இவ்வாறு பலர் தங்கள் தங்கள் துறையிலே இணையற்றவர்களாக விளங்குகின்றனர். ஆயினும் இவர்கள் எல்லோரும் நம் தமிழ்நாட்டுப் பெருந்தகையார் இராமலிங்கம் அவர்கள் கருத்துப்படி பேரறிவு படைத்தவர்கள் அல்லர். இவர்கள் இரக்கத்தோடு கூடிய பேரறிவு படைத்தவர்களாக இருந்தால் உலகினரை ஒன்று சேர்க்க உழைப்பர்; உலகத்தினரை ஒரே ஒரே சமுதாயமாக்க உழைப்பர். உலக ஒற்றுமையைக் கருதுவோர் இக் கூட்டத்தினருள் எவரேனும் இருந்தால் அவர்கள் அருட்பெருஞ்சோதியைக் கண்டவர்கள் என்பதில் ஐயமில்லை.
இந்த இரக்கத்தோடு கூடிய பேரறிவு-அதாவது அருட் பெருஞ் சோதியை – யார் பெறமுடியும்? சாதிப்பற்றை விட்டவர்கள் – இனப்பற்றை ஒழித்தவர்கள் – சமயப்பற்றை மறந்தவர்கள்-தேசப்பற்றைக் கூடத் துறந்தவர்கள் தான் பெற முடியும். தன் சாதியிலே மட்டிலும் பற்றுள்ளவர்கள் மற்றச் சாதியினரிடம் அன்பு காட்ட இடமில்லை; தன் இனத்தைப் பெரிதெனக் கூறுபவர்கள் மற்ற இனத்தாரிடம் வெறுப்புக் காட்டுவர்; தன் சமயத்திலே மட்டும் வெறி கொண்டவர்கள் மற்றச் சமயத்தவர்களை வெறுப்பார்கள்; தன் தேசம் மட்டும் முன்னேற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை படைத்தவர்கள் மற்ற நாட்டினரை அடக்கியாள முயல்வார்கள். இவைகளையெலலாம் நாம் கண் கூடாகக் காணுகின்றோம். இத்தகைய பற்றுடையவர்களிடம் இரக்கம் ஏது? பேரறிவு ஏது? இவைகளை விட்டவர்கள் உள்ளத்தில் தான் இரக்கத்துடன் கூடிய பேரறிவு தோன்றும். இக்கருத்தை,
சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெரும் சோதி
என்று விளக்கியிருக்கிறார் இராமலிங்கர்.
சிந்தனாசக்தி படைத்தவர்களே இவ்வுலகத்திலே துன்பமில்லாமல் வாழமுடியும். சிந்தனாசக்தியின் மூலம் வளர்ந்த பகுத்தறிவின் வழியில் நடப்பவர்களே உலகத்தில் பயன் பெற்று வாழ முடியும். உலக ஒற்றுமைக்கு – மக்கள் ஒரே குலமாக வாழ்வதற்கு- முட்டுக்கட்டைகளாக இருக்கின்ற சாதி, மத, பொருளாதராரச் சண்டைகளைப் பகுத்தறிவு வாதிகளே ஒழிக்க முடியும். பகுத்தறிவின் மூலம் துன்பமில்லாமல் வாழக்கூடிய வழியை அறிந்தவர்கள் தான் இவ்வுலகில் எண்ணிய நன்மை களையெல்லாம் பெற்று வாழமுடியும். பகுத்தறிவுதான் எண்ணி யவற்றையெல்லாம் கொடுக்கும் இயல்புடையது.
இவ்வாறு வீரமுழக்கம் செய்கிறார் வள்ளலார்.
எனைத்தும் துன்பிலா இயல்பளித்து, எண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெரும் சோதி.
ஆதலால் பகுத்தறிவையே வாழ்க்கைக் கருவியாக உலக மக்கள் கொள்ள வேண்டும் என்பதே நமது தமிழ் வள்ளலாரின் ஆவல். இந்த நிலை உலகில் என்று ஏற்படுகிறதோ அன்றே உலகில் ஒற்றுமை நிலவும். உலக மக்கள் எண்ணிய இன்பங்களை யெல்லாம் பெற்று இன்புறுவர் என்பதும் உறுதி. வெறும் பகுத்தறிவு மட்டிலும் போதாது. அது இரக்கத்தோடு கூடிய பகுத்தறிவாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
வள்ளலாரின் இக்கருத்தே பண்டைத் தமிழரின் கருத்தாகும். எழுத்துப் புத்தகங்களைக் கற்றல் ஒரு தொழில்தான். ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் துறையில் தேர்ந்திருப்பது போல், சிலர், கவிகளை – காவியங்களைக் கற்றுத் தேர்ந்திருக் கின்றனர். கல்வி, படிப்பு, கற்றல், படித்தல், ஓதல் முதலிய கல்வியைக் குறிக்கும் சொற்களெல்லாம் தொழிற் பெயர்களாக இருக்கின்றன. இதைக்கொண்டே கல்வியும் ஒரு தொழில்தான் என்பதைக் காணலாம்.
செந்தாப் புலவராகிய திருவள்ளளுவர் கல்வி வேறு, அறிவு வேறு என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்:-
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்
என்பது வள்ளுவர் வாக்கு. எவ்வளவு படித்தருந்தாலும் – எவ்வளவு நுட்பமான பொருள்களைக் கூறும் நூல்களைக் கற்றிருந்தாலும் அது அறிவாகாது. ஒருவனுடைய இயற்கையறிவே எக்காரியத்திலும் முன்னிற்கும், இதுவே குறளின் கருத்து.
அந்த இயற்கை அறிவுதான் சிந்தனா சக்தியென்பது. எந்தப் பொருளைக் கண்டாலும், அந்தப் பொருளின் தன்மையை ஆராய்ந்து அறிய வேண்டும். எந்தச் செய்தியைக் கேட்டாலும் அந்தச் செய்தியின் உண்மையைக் கண்டுபிடிக்க முயல வேண்டும். இதுவே அறிவு வளர்வதற்கு வழி. இவ்வழியில் தங்கள் அறிவைத் தீட்டிக் கொண்டவர்களே நுண்ணறிவாளர்கள்.
உலக மக்கள் எல்லோரும் சிந்தனா சக்தியுடையவர்களாகி நுண்ணறிவு பெற்று விளங்குவார்களாயின் உலகம் ஒன்று படும்; எல்லோரும் சமாதானமாக வாழ்வர்; வீண் சண்டை சச்சரவுகள் நடைபெற வழியில்லை. இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்திருந்தனர். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ் நூல்களில் காணலாம். தமிழரின் இச்சீரிய கொள்கையையே நமது புரட்சிப் புலவரும், எல்லோருக்கும் விளங்க இனிய பாடல்களின் மூலம் விளக்கியுள்ளார்.



