ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம் 

10. மற்றவர்களைப் போலிருக்க

சாத்தனூருக்கு நான் போக நேர்ந்தபோதெல்லாம் ஒரு விஷயம் என் கவனத்தைக் கவரும். ஒவ்வொரு வீடும் ஒரு தனிப் பிரபஞ்சம் போலத்தான் இருக்கும். எனினும் ஒவ்வொருவரும் மற்றவர்கள் எல்லோரையும் போலத்தான் இருக்க முயலுவார்கள். சாத்தனூர் என்ற கிராமத்துக்கே ஒரு தனி ஆத்மா உண்டு. அந்த ஆத்மாவின் தனித் தனி ஸ்வரூபங்கள்தான் அங்கிருப்பவர்கள் எல்லோரும் என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரித்தான். ஒருவர் மாதிரி எல்லா விஷயங்களிலும் இன்னொருவர் இருப்பது என்பது மிக மிக அபூர்வம்.

சாத்தனூரில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இப்படித் தான் என்று சொல்லலாம் இல்லையா? ஆனாலும் தான் தெரிந்தோ தெரியாமலோ எல்லோருமே ஒரு சாதாரண மனிதன் என்ற கற்பனைக்கேற்ப வாழ்க்கை நடத்த முயலுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். செய்கையில் எப்படியானாலும், சொல்லளவில் யாருமே தான் தனிப்பட்டவன் என்று ஏற்றுக் கொள்வதில்லை. தனிப்பட்டவன் என்று ஏற்றுக் கொண்டு ஒதுங்கி, அசாதாரணமான மனிதனாக இருக்க முயல்பவனைச் சாத்தனூரும் வெளியுலகும் பைத்தியக்காரன், அஸத்து என்று குறை கூறி ஒதுக்கி வைக்க முயலுகிறது.

சாதாரணத்வம் சராசரித் தன்மை எல்லா மனிதர்களையும் எப்படி எப்படியெல்லாமோ ஆட்டி வைக்கிறது. மாமா வேங்கடாசலத்தையும் மாமியையும் அது ஆட்டி வைத்த ஆட்டங்களை நான் நேரில் கண்டதில்லை; பிறர் மூலமாகக் கேள்விப்பட்டதுதான். ஏனெனில் ஸ்ரீநிவாசன் பிறந்த பிறகு நான் இருபத்திநாலு மணி நேரமாவது என் வீட்டில் போய்த் தங்கியிருந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். எனக்குப் போக இஷ்டமில்லை என்பதுமில்லை; அவர்கள் அழைக்கவில்லை என்பதுமில்லை. எப்படியோ அது நேரவில்லை.

பதினேழு வயதாவதற்குள் சற்றேக்குறைய ஒன்பது வருஷங்கள் என் மாமா வீட்டிலேயே அவர்களுடைய அருமை மகன் போல வளர்ந்தவன் நான். என் பதினேழாவது வயதுக்குப் பிறகு, இண்டர் பரீட்சை எழுதிய பிறகு, நான் ஒரு நாள் கூட அவர்கள் வீட்டிலே போய்த் தங்குவதற்குச் சந்தர்ப்பமோ அவசியமோ ஏற்படவில்லை. மாமிக்கும் பிள்ளையில்லாத வரையில் நான் பிள்ளை போல வீட்டிலே இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இப்போது பிள்ளை பிறந்து விட்ட பிறகு எனக்கு அந்த வீட்டிலே இடமில்லை. இதெல்லாம் பற்றி நானோ மாமாவோ மாமியோ சிந்தித்து ஒரு அளவில் நடந்ததாகச் சொல்லவில்லை. எப்படியோ தானாகவே ஏற்பட்டது; நடந்தது.

நான் இண்டர்மீடியட் பரீட்சை எழுதிவிட்டு, தஞ்சாவூர் வந்தபோது என் அம்மா இறந்துவிட்டாள். அந்தச் சாவுக்குக் கூட மாமா மட்டுந்தான் வந்தார். அம்மாமி குழந்தையுடன் வரமுடியவில்லை என்றார் மாமா. சாவு வீட்டிலே வந்து உட்கார்ந்து கொண்டு, தஞ்சாவூரில் யாரோ நகைத் தரகுக் காரர்களிடம் சொல்லி, பச்சையும் சிவப்புமாக அம்மாமிக்கு ஒரு கல் இழைத்த அட்டிகை வாங்குவதில் முனைந்திருந்தார் மாமா என்பது ஞாபகம் இருக்கிறது எனக்கு. அதைத் தவிர வேறு எதுவும் மாமாவைப் பற்றி அந்த சமயத்தில் கவனித்தது என் மனசில் நிற்கவில்லை.

“குழந்தையாக இருந்தவரையில் சரி. இப்போது உன் அம்மாவும் போய் விட்டாள். இனிமேல் உனக்கும் உன் மாமாவுக்கும் எப்படி நெருங்கிய உறவு இருக்க முடியும்?”என்று அப்பா கேட்டார்.

என் அப்பாவைப் பெற்ற பாட்டிக்கு எப்பவும் என் மாமாவைக் கண்டால் பிடிக்காது – அம்மாமியைப் பற்றிக் கட்டோடு நல்ல அபிப்பிராயமே கிடையாது. அவள் சொன்னாள் “வாரிசு இல்லாதபோதே சொத்துச் சேர்க்கறதில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டிருந்தவர்கள் இப்போ வாரிசும் வந்தாகிவிட்டது. இனி அனாவசியமாக வேறு யாரையாவது கவனித்துக் கொண்டு, பொருளையும் அன்பையும் வீணாக்க முடியுமா?” என்று.

நான் மட்டும் “ஸ்ரீனிவாஸன் பிறந்த பிறகு அம்மாமி பணத்துக்காக அப்படி ஒண்ணும் பறப்பதேயில்லை”என்றும், மாமாவும் முன்மாதிரியெல்லாம் கண்டிப்பாகவோ கருணையில்லாமலோ இருப்பதில்லை; சற்றுத் தாராளமாகவே தான்  இருக்கிறார்”என்றும்தான் கேள்விப்பட்டேன். மற்றவர்களைப் போல் இருக்க வேண்டும் என்கிற ஆசையால் எழுந்த ஒரு விஷயம் இது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சொத்து ஏராளமாகச் சேர்ந்துவிட்டது. யார் யார் சொத்தோ எப்படி எப்படியோ மாமாவை வந்தடைந்து விட்டது. ஸ்ரீநிவாசன் பிறக்கும் போதே ஒரு லக்ஷத்துக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாகத்தான் பிறந்தான். அதற்குப் பின்னரும் பழக்க வேகத்தால் மாமாவின் பணம் அடிக்கடி குட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கும். அவர் வேண்டாமென்றால் கூட அவரிடம் கடன் வாங்க வருகிறவர்களும் வாங்கிய கடனைத் தாட்சண்யமில்லாமல் வசூலிப்பவர் அவர் என்று தானாகவே உள்ளதைக் கொடுத்து விடுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். போதாதற்கு ஸ்ரீநிவாஸன் வந்த அதிருஷ்டம் மாமாவுக்குக் கூட உத்தியோகம் உயர்ந்து சம்பளமும் படிப்படியாக அதிகமாயிற்று. இன்னமும் வாழைக்காய் வந்தாலும் நெய்யாக வந்தாலும் வாங்கிப் போட்டுக் கொள்ள மறுப்பதில்லை. ஆனால் தேடிக் கொண்டு போவதில்லை அவராக.

வாழ்க்கையில் அவர் வைத்த இரண்டு ஆசைகளும் நிறைவேறி விட்டன. ஒன்று – பொருள்; மற்றது – புத்திரன். அதனால் ஒரு குறைவுமில்லை வேங்கடாசலத்துக்கு, என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அடிக்கடி உடம்பைப் படுத்தியது. அம்மாமிக்கும் உடம்பு சரியாக இல்லை. பிறந்த குழந்தைக்கும் உரிய காலங்களில் அந்தந்த காலத்துக்கு உரிய உபாதைகள் வந்து படுத்தின.

“ஒருவரால் கஷ்டப்பட்டு அக்கஷ்டம் நீங்கி ஆசுவாஸப்படும் போதுதான் பாசம் வளரும்”என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுவாள். பாட்டி வேதாந்தமாகவே இது தோன்றினாலும் கூட அடிப்படையான ஒரு உண்மையைச் சொல்லுகிறது  என்றுதான் எனக்குத் தோன்றியது.

சாதாரணமாக எந்தக் குழந்தையிடமும் உடன்  இருப்பவர்களுக்குப் பாசம் வளருவது இப்படித்தானே? பெற்றோருக்கு அன்பும் அநுதாபமும் அதிகமாக இருக்கும் கஷ்டப்படுகிற பிள்ளையிடம்தான் என்பதும் நாம் கண்கூடாகக் காண்கிற ஒரு விஷயம்தானே?

தன் பிள்ளையின் வளர்ச்சிக்கும் என் மனோபாவத் துக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிற மாதிரி மாமியே ஆரம்ப நாட்களில் உட்கார்ந்து எனக்குக் கடிதம் எழுதுவாள். மிகவும் சிரமப்பட்டு அவளுக்குத் தமிழ்கூடச் சரியாக எழுத வராது. தன் பிள்ளை என்னைப் போலவே நான் குழந்தைப் பருவத்தில் இருந்த மாதிரியே இருக்கிறான் சீனிவாஸன் என்று அடிக்கடி என்க்குத் தெரிவிப்பாள். சீனிவாஸனுக்கு உடம்புக்கு கஷ்டம் வந்துவிட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வாரத்துக்கு இரண்டு மூன்று கடிதங்கள் கூட எழுதிவிடுவாள். படிப்பில் முழுகியிருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் தொந்தரவாகத்தான் இருக்கும். ஆனால் அப்போது தெரிய வில்லை. என் ரோஹிணி நக்ஷத்திரம் விளைவித்த விஷயம் இது என்று. ரோஹிணி நஷ்த்திரம் உடையவனால் தன் மாமாவுக்குத் தீங்கு விளையும் அவன் மாமாவைப் பற்றிக் கெடுதல் நினைக்காதபடி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நினைப்பில் மாமி இப்பாடுபட்டு எனக்குக் கடிதங்கள் எழுதினாள் என்று எனக்கு அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும் போது தெரிகிறது. மற்றவர்களைப் போல இருக்க மாமாவும் அம்மாமியும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், பழக்க தோஷத்தால் அவர்களால் முடியாது. காரணம் இல்லாமல் அவர்கள் எதுவும் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் இப்போது நினைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுகிறது.

தனக்கென்று பண்ணிக்கொண்ட பெரிய பெரிய நகை களையெல்லாம் ஸ்ரீனிவாஸன் என்கிற அழகுருவத்துக்குப் போட்டுச் சுமக்க வைத்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தாள் மாமி. நாளொரு நகையும் பொழுதொரு சட்டையும் வயிற்றி லொரு கட்டியுமாக குழந்தை வளர்ந்து கவலைக்கும் கருத்துக்கும் இடமானான். வழக்கம் போல வாய் விட்டே சில சமயங்களில் சொல்லி விடுவாராம் அந்நாட்களில் “பெண் குழந்தையில்லாத வீடு”என்ன வீடு என்று. மாமி என்ன நினைத்தாளோ தெரியாது. ஆனால்  “இனிமேல் குழந்தை என்று பேசினால் தாயின் உசிருக்கே ஆபத்து வந்துவிடும், ஆமாம்”என்று. ஒரு குழந்தையை முழுசாகக் காப்பாற்றிக் கொடுத்த அந்த டாக்டர் எச்சரித்து விட்டார்; ஒரே பிள்ளை தான் என்று தீர்மானித்த பிறகு அந்தக் குழந்தையைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் கணவனும் மனைவியும் என்று என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது.

இன்று நினைப்பிலே இல்லாததையும் சேர்த்து என்னால் காண முடிகிறது. அப்போது தெரியாத விஷயங்கள் சில இப்போது தெரிகிற மாதிரி இருக்கின்றது. அதை வைத்துக் கொண்டு இப்போது அனுபவ அறிவு என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். எனக்கென்னவோ மாமா அம்மாமியைப் பற்றிய சிந்தனைகள் இன்பம் பயப்பதாகவும் இல்லை; துன்பம் தருவதாகவும் இல்லை. அவர்களைக் கவனித்த மட்டும் எனக்கு அனுபவ அறிவு ஏற்பட்டதாகக் கூட சொல்ல முடியாதுதான். அப்படி அவர்களை அறிந்திருக்க மாட்டேனா? எந்தெந்த விதங்களில் மாமா எப்படி எப்படி என்னென்ன செய்து வெற்றி பெற்றார் என்று கவனித்துக் கொண்டு லாபம் அடைந்திருக்க மாட்டேனா?

மாமாவுடைய கதையைச் சாக்காக வைத்துக் கொண்டு என் கதையைத்தான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பித்தேன்.. ஞாபகமிருக்கிறதா? என் கதையைச் சொல்லுவதும், மாமா கதையைச் சொல்வதும் அப்படி ஒன்றும் சுலபமான காரியமல்ல என்றே தோன்றுகிறது. சிந்தித்துப் பார்க்கும் போது, என் விஷயத்திலும் சரி, மாமா விஷயத்திலும் சரி, எத்தனையோ மனோபாவங்கள், ஆசைகள் லக்ஷியங்கள் சிக்கலான பின்னலாகப் பின்னிக் கிடக்கின்றன. பாட்டும் தாளமும் கொண்டு வண்ணச் சிக்கெடுக்கிறார்களே சிறுமிகள் அந்த மாதிரியான பின்னல் கோலாட்டம் அல்ல வாழ்க்கை செயற்கையாக ஏதோ ஒன்றை முக்கியமாக வைத்துக் கொண்டு, அந்த நோக்கிலிருந்து ஓரளவுக்கு வாழ்க்கைச் சிடுக்குகளை விடுவிப்பது, சாத்தியமாக இருக்கலாம். ஆனால் அது, வாழ்வுச் சிடுக்கைப் பூராவும் விடுவிப்பது ஆகாது. வாழ்க்கையில் ஊடுருவிச் செல்கிற ஒரு சரடைப் பூராவும் கண்டுவிட்டால் நம்மைப் போற்றிக் கொள்கிறோம்; பாராட்டிக் கொள்கிறோம்.

மாமாவின் முழு வாழ்வில் இரண்டு சரடுகளைக் கண்டு விட்டேன் நான் என்று சொல்லலாம். ஒன்று பணம், இரண்டாவது புத்திரன் என்று சொன்னேன், ஆனால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டு விடக் கூடிய வாழ்க்கை யல்ல அது என்பதை நானும் ஏற்றுக் கொள்ளவேதான் வேண்டியிருக்கிறது. பதினேழு குறைப் பிறசவங்களுக்கும், ஒரு பிள்ளைக்கும் தாயான அம்மாமி அவர் வாழ்க்கையிலே ஒரு முக்கியமான சரடு. அந்தப் பிள்ளையே பின்னால் வந்த ஒரு முழுச்சரடு. தவிர, டயாபடீஸ் நோய், ஊரக்காரர் உற்றார் உறவினர் உறவுகள், தெய்வபக்தி, 1912-ல் வாங்கின பவுண்டன் பேனா, 1914-ல் யுத்த ஆரம்பத்தில் வாங்கிய ஒரு நல்ல சைக்கிள், கடவுள் பக்தியும் ரோஹிணி பயமும், காலையிலும் மாலையிலும் டாக்டரைப் பார்த்தாலும் இரண்டு மாசத்துக்கொருதரமே பில்லைத்தரும் சுபாவம், தினசரிக் கணக்குகள், உரத்த பேச்சு… இப்படியாக எத்தனை எத்தனையோ சேர்த்துப் பின்னிய பின்னல் என் மாமா வேங்கடாசலம்.

வேங்கடாசலமே இப்படியானால், மாமியைப் பற்றி என்ன சொல்வது? அப்படி ஒன்றும் சுலபமாக எதுவும். சொல்லிவிட முடியாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லிவிட முடியாததுதான். அவள் மனசிலே பிரித்தெடுக்க முடியாத சரடுகள் எத்தனையோ பின்னிக் கிடந்தன. மாமா தன் மனசிலுள்ளதை வெளியிட்டுச் சில சமயம் சொல்லி விடுகிற எளிய சுபாவம் உள்ளவர். மாமி எதையும் வெளியிட்டுச் சொல்லிவிடவே மாட்டாள்.

ஒரு சம்பவம் இப்போது ஞாபகம் இருக்கிறது எனக்கு, அப்போது மாமா தஞ்சாவூரில் இருந்தார். மேலவீதியில் நல்ல வீடாக எடுத்துக் கொண்டு குடியிருந்தார். நான் படித்துப் பாஸ் பண்ணிவிட்டு, என் வாழ்க்கையை எந்தெந்த விதங்களில் குட்டிச்சுவராக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக ஒரு மாமாங்கத்துக்கும் அதிகமாகவே நடைபெற்று விட்டது. மாமா பிள்ளை சீனிவாசன் வளர்ந்து பெரியவனாகிப் பட்டணத்தில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். தஞ்சாவூரில் ஏதோ ஒரு மாநாடு நடந்தது. வேடிக்கை பார்க்க நண்பர்கள் இருவருடன் போய்விட்டு நான் மாலையில் சாவகாசமாக மாமாவையும் பார்க்கப் போனேன். நான் போன சமயம் மாமா வீட்டிலில்லை; மாமி மட்டும்தான் இருந்தாள்.

“காலையிலே வந்தேன் என்றாய்… சாப்பிட வரக் கூடாதோடா ராஜா?”என்றாள் மாமி.

நான் சிரித்துக் கொண்டு பேசாதிருந்தேன். என் சிரிப்பை சரியானபடி அர்த்தம் செய்துகொண்டு, மாமி சொன்னாள்; “முன்னெல்லாம் மாதிரியில்லையடா இப்போது, பையன் பெரியவனான பிறகு நம்மை ஊரார் கஞ்சன், வயிறாரச் சாப்பிட மாட்டார்கள் என்கிறார்கள் என்று சொல்லிக் காட்ட ஆரம்பித்து விட்டான்”என்றாள்.

துயரமும் பெருமையும் ஒருங்கே கலந்த குரலில் மாமி இதைச் சொன்னது எனக்கு வேடிக்கையாக இருந்தது. “பையனுக்காக நீங்கள் இருவரும் இப்படி மாறிவிட்டீர்களாக்கும்.”என்றேன்.

“பின்னே என்னடா செய்வது ராஜா ? இங்கே பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவன் யார் வீட்டுக்காவது போனால், டிபன் தருகிறார்கள், காபி தருகிறார்கள். நீயும் அதுமாதிரி என்னுடன் வருகிறவர் களுக்குத் தர வேண்டும் என்று ஆரம்பித்து விட்டான்.”என்றாள் மாமி.

ஏது, பிரமாதமான புரட்சிதான். ஆனால் அதே சமயம் மாமியால் ஓடியாடிச் செய்ய முடியாதே என்றும் சிந்தித்தேன். நான் அறிந்ததற்கிப்போது அவள் இன்னும் ஒரு சுற்றுப் பருத்திருந்தாள். ஒரு அங்குலம் குள்ளமாயிருந்தாள் என்று தோன்றிற்று.

மாமி கெட்டிக்காரிதான் என்கிற எண்ணம் எப்பவுமே எனக்குண்டு. இப்போதும் அவள் என் மனசிலிருப்பதை அறிந்து கொண்டாள். “சமையல்காரி போட்டுக் கொண்டிருக்கிறேன், சத்திரம் மாதிரித்தான் இங்கே சாப்பாடு, டிபன் எல்லாம்…”என்றாள்.

“சமையல்காரி ஒருத்தியும் உன்னிடம் அதிக நாள் தங்கமாட்டாளே?”என்று வாய்விட்டுச் சொன்ன பிறகுதான் அது தப்பாக அர்த்தப்படப் போகிறதே என்று தோன்றிற்று, “நல்லபாட்டி சொல்வாளே, விஷயந் தெரிந்து, சமைக்கத் தெரிந்த யசமானிகிட்டே, எந்தச் சமையற்காரியும் அதிக நாள் தங்கமாட்டாள் என்று”என்று சேர்த்துச் சொன்னேன்.

“நிஜந்தானப்பா ராஜா. நிக்கத்தான் மாட்டேங்கறாள். மாசத்துக்கு ஒருத்தியாக மாற்றித்தான் ஆக வேண்டியிருக்கு”என்றாள். பிறகு “நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கே?”என்று கேட்டாள்.

“சாரமில்லாத விஷயம் அது. அதைப்பற்றி என்ன விசாரணை வேண்டியிருக்கு?” என்று பேச்சை மாற்றினேன்; “சீனிவாஸன் படிக்கிறானா?”

“படிக்கிறான். தனியாக ஹாஸ்டலில் இருக்கிறானே என்றுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கு. நான் பட்டணத்தில் போய்க் குடித்தனம் போடலாம் என்று பார்க்கிறேன்..”

“மாமா…?”

“ஹோட்டலில் சாப்பிடட்டுமே? சீநிவாஸனுக்கு ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளுமோ ஒத்துக் கொள்ளாதோ? நான் போய் இருந்தால் நல்லது”என்றாள் மாமி.

சமையற்காரியைக் கூப்பிட்டு எனக்குக் காபி கொண்டு வந்து தரச் சொன்னாள். கைவளைகளும், சாவிக் கொத்தும் குலுங்க எழுந்து போய் இரும்புப் பெட்டியைத் திறந்து “வைர நெக்லெஸ் பண்ணிக் கொண்டேன் ராஜா” என்று எடுத்துக் காட்டினாள்.

“வரப்போகிற மருமகளுக்கு இப்பவே நகை சேர்க்க ஆரம்பித்து விட்டாயாக்கும்?”என்றேன் நான்.

நாஸுக்காக அதற்குப் பதில் சொல்லாமல் விட்டு விட்டாள். “நாலாயிரத்து இருநூறு ரூபாய் ஆச்சு…”என்றாள். “பத்திரமாக எடுத்து வை மாமி”என்றேன்.

“மற்றவாள் எல்லோரையும் போல இருக்கக் கொடுத்து வைக்க வேண்டும் ராஜா. நீ ஏன் மற்றவாளை எல்லாம் போல இருக்க மாட்டேன் என்கிறாய்?”என்று விசாரித்தாள் மாமி.

நான் நைஸாக ‘மருமகளுக்கு நகை’என்று சொன்னதற்கு மாமி பேச்சளவில் தீர்த்துக் கொண்ட வஞ்சம் இது என்று எண்ணிக் கொண்டு கிளம்பிவிட்டேன். மாமாவைப் பார்க்கக் கூடத் தங்கவில்லை.

“மற்றவாளைப் போலிருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்”என்றாள் மாமி. உண்மைதான். எல்லோருமே நாலாயிரத்து இருநூறு ரூபாய்க்கு வைர நெக்லெஸ் வாங்கும் படியான நிலையில் இல்லாவிட்டாலும், இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம். அந்த விஷயத்தில் மாமாவும் மாமியும் மற்றவர்களைப் போன்றவர்கள்தான். எனக்குத்தான் அந்த ஆசையில்லை. வைர நெக்லெஸும் இல்லை. வைர நெக்லெஸுக்கான பணமும் இல்லை, அந்த ஆசையும் இல்லை. என் மனைவியைப் பற்றிய வரையில் அவள் ‘மற்றவர்களைப் போல இருக்கத் தெரிந்தவள் தான்…!’என்று புன்சிரிப்புடன் சிரித்துக் கொண்டே நான் கிளம்பினேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *