
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
5. கிராமத்துச் செய்திகள்
ஒன்பதினாயிரம் ரூபாயைத் தொண்ணூறாயிரம் ரூபாயாகப் பண்ணுகிற வித்தை எல்லோருக்கும், கைவராது தான். என் மாமா விஷயத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று என்று நான் பல தடவைகளில் சிந்தித்துப் பார்த்ததுண்டு. நடந்தது என்னவோ உண்மையே தவிர, எப்படி என்பது தெரிந்திருந்தால் நான் தொண்ணூறாயிரம் இல்லா விட்டாலும் ஒரு ஒன்பதாயிரமாவது பண்ணியிருக்க மாட்டேனா?
அதே வித்தை ஏன் என் மாமாவினுடைய மாமாவுக்கு கைவரவில்லை? ஐயாயிரத்தை ஐம்பதினாயிரம் பண்ணி விடுகிற உத்வேகத்துடன்தான் பெரியவர் பணத்துக்குக் கஷ்டம் எவ்வளவோ இருந்த போதிலும், பட்டணத்துகச் சொத்தை; விற்றுவிடாமல் பிடிவாதமாக வைத்திருந்தார். மலிவாகத்தான் கிடைத்தது அந்த இடம் அவருக்கு. இரண்டாயிரம் மூவாயிரம் கடன் கொடுத்துவிட்டு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அந்த இடத்துக்கு எங்கிருந்தும் போகப் பாதை கிடையாது. பிறர் நிலத்தில் கால் வைத்துத்தான் போய்ச் சேர வேண்டும். அல்லது இறங்கலாம். அந்த வழியாக நகர சபையார் ஒரு பாதை ஏரோப் பிளேனிலோ, ஹெலிகாப்டரிலோ போய் போடப் போகிறார்கள் என்றும், அந்தப் பாதை அந்த நிலத்தின் வழியாகப் போகும் என்றும், அப்படிப் போகும் போது பாதைக்கான நிலத்தை வாங்க கார்ப்பரேஷன் காரர்களே நல்ல பணம் கொடுப்பார்கள் என்றும், பாதைக்கு இரு மருங்கிலும் வீடு கட்டுவதற்கும் இடம் இருக்குமாதலால் அந்த நிலங்களும் நல்ல விலைக்குப் போகும் என்றும் பெரியவர் கணக்குப் போட்டு வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அது அவரைப் பற்றிய வரையில் பலிக்கவில்லை.
என் மாமாவுக்கும் சுலபத்தில் தானாக எதுவும் பலித்து விடவில்லை, ஏலத்தில் அதை எடுத்துவிட்டு மாமா அது பற்றியே சிந்தனையாக நாலைந்து தடவைகள் வெளியூர் களிலிருந்து பட்டணத்துக்கு வந்தார். பக்கத்து நிலத்துக்காரர் களையெல்லாம் பார்த்துப் பேசினார். இரண்டொரு தரம் என்னையும் அழைத்துக் கொண்டு போய்ப் பேசினார். ஒரு பிரஹஸ்பதி தன் நிலத்தின் மூலம் அங்கு போய்ச் சேர நாலடிப் பாதை தருவதாகவும், அதற்கு ஐயாயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டான் என்று எனக்கு ஞாபகமிருக்கிறது. இன்னொருவன், நிலத்தையே என்னிடம் விற்றுவிடு. அதற்குப் பன்னிரண்டாயிரம் தருகிறேன் என்றான். மாமா பொறுமையாகச் சுற்று வட்டாரத்துச் சொந்தக்காரர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு வந்தார். வெள்ளைக்காரக் கம்பெனி முதலாளி ஒருவன், ஒரு தொழிற்சாலை நடத்தத் தனக்கு நிலம் வேண்டும் என்றும் தனக்குச் சொந்தமான இடத்துடன் அது சேர்ந்திருப்பதால் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அறுபதினாயிரம் தருகிறேன் என்றும் சொன்னான். மாமா சமயம் கிடைத்தது என்று லக்ஷம் கேட்டார். முடிவில் தொண்ணூறாயிரத்துக்கு விற்று விடடார்.
இந்த பேரம் நடந்து முடிந்த போதும் என் மாமாவுக்கு மாதம் தொண்ணூற்றி மூணேமுக்கால் ரூபாய்தான் சம்பளம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்குள் திருவாரூரில் தொடங்கி அவர் பத்து ஊர்களில், சர்க்கார் பள்ளிக் கூடங்களில் வேலை பார்த்துவிட்டார். சைதாப்பேட்டையில் ஒரு வருஷம், தஞ்சாவூரில் ஒரு வருஷம், மாயவரத்தில் இரண்டு வருஷங்கள், கோவையில் இரண்டு வருஷங்கள், திருச்சிராப்பள்ளியில் மூன்று வருஷங்கள், வந்த வாசியில் இரண்டு மூன்று வருஷங்கள் என்று. உத்தியோகம் உயரவில்லை; மாறிற்று. பள்ளிக் கூடத்தில் பாடம் சொல்லித் தர லாயக்கில்லை என்று அவரை டிரெனியிங் ஸ்கூலுக்கு மாற்றினார்கள். அங்கிருந்து, பிறகு டெபுடி இன்ஸ்பெக்டராகப் போட்டார்கள். இந்த பேரத்துடன் மாமா லக்ஷாதிபதியாகிவிட்டார். அதற்காக அவர் உத்தியோகத்தை விட்டு விட்டாரா என்ன? அந்தத் தொண்ணூற்றி மூணேமுக்கால் ரூபாய் சம்பளத்தையும் பற்றிக் கொண்டு ஏழை உபாத்தியாயர்களிடமிருந்து பெறக்கூடிய வாழைக்காய், நெய் வாழை இலை முதலியவற்றைத் திருப்தியுடனும் நன்றியுடனும் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். கிடைத்த தொண்ணூற்று மூணே முக்கால் ரூபாயிலும் நாற்பது ஐம்பது என்று மீதம் பிடித்து அதையும் வட்டிக்கு விட்டுக் கொண்டு ஜாம் ஜாமென்று வாழ்ந்து வந்தார்.
பணம் சேர்ந்தது அவருக்கு என்று சொன்னால், மிகைப்படுத்திச் சொல்வது ஆகாது. தானாகவே வந்து சேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஜன்மத்தில் அவர் புண்யங்கள் எதுவும் செய்ததில்லை என்று எனக்கும், அவர் சுபாவமறிந்த மற்றவர்களுக்கும் தாராளமாகவே தெரியும். பணம் இப்படி வந்து சேர்ந்தது எதனால்? போன ஜன்மத்துப் புண்யமாகத்தான் இருக்க வேண்டும். வேறு என்ன? புரியா காரியம் கண்முன்னே நடக்கும்போது, நடப்பதைக் காணும்போது, ஜன்மாந்திர வாசனையென்றும், கொடுத்து வைத்தவன் என்றும் சொல்வதின் அர்த்தம் புரிகிற மாதிரித்தான் இருக்கிறது. அப்படியெல்லாம் நமக்கு நாமே விஷயங்களை விளக்கிக் கொள்ளாவிட்டால் எதுவுமே சரியாக விளங்காது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன், மாமா கொடுத்து வைத்தவர்தான். இல்லாவிட்டால், அவருடைய மாமாவின் சொத்துக்களும், மைத்துனரின் சொத்துக்களும் தாமாகவே அவரைத் தேடி வந்து அடைவானேன்?
சாத்தனூரிலே இதுபற்றிப் பலர் பலவிதமாக அர்த்தப்படுத்திச் சொன்னார்கள். பொறாமை பாதி. இந்த மாதிரி நம்மால் இருக்க முடியவில்லையே என்று ஆற்றாமை பாதி. ஆனால் மாமா, நாளடைவில் பணக்காரராகி விடுவார் என்பதில் கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் காவேரிக் கரையில் இரண்டு வேலி நஞ்சையுடனும் கீழத் தெருவில் உப்புப் பூத்து உதிர்ந்த சுவர்களுடன் கூடிய ஒரு வீட்டுடனும் தொடங்கிய வேங்கடாசலம், இரண்டு மூன்று லட்சங்களுக்கதிபதியாகி விடுவார் பத்துப் பதினைந்து வருஷங்களிலே என்று, கிராமத்திலும் கூட யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் எங்கள் கிராமத்திலே என் மாமாவிடம் பணம் கடன் வாங்காதவர் யார் என்று விரல் விட்டுச் சொல்ல எனக்கு யாரையுமே தெரியவில்லை.
நான் மாமாவுடன் கிராமத்துக்குப் போன சந்தர்ப்பங்கள் எல்லாம் எனக்கு இப்போது ஞாபகத்திலிருக்கின்றன. முதல் பாரத்தில் மாமா வீட்டிலிருந்து கொண்டு திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும் போது முதல் முதலாக நான் மாமா அம்மாமியுடன் சாத்தனூர் போனேன். பத்தே நாட்கள் தான் கிராமத்திலிருந்தோம். அப்போது எத்தனையோ பேர்வழிகள் வந்து வந்து மாமாவைப் பயபக்தியுடன் பார்த்து விட்டுப் போனார்கள். அந்த நாட்களில் மாமாவிடம் பணம் அதிகம் சேர்ந்து விடவில்லை. ஆனால் அவரிடம் சேர்ந்து விடும் என்கிற நிச்சயத்தில், சேர்ந்து விட்டால் பிறகு நம்மை அவர் மறக்காதிருக்க வேண்டுமே என்கிற நினைப்புடன், பலர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள் என்று சொல்ல எனக்குத் தோன்றிற்று. இப்போது யோசித்துப் பார்க்கும்போது அது சர்க்கார் உத்தியோகஸ்தனுக்கு கிராமத்தார் காட்டிய வெறும் மரியாதை அல்ல; பணத்துக்குக் காட்டிய மதிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
“வேங்கடாசலம் கெட்டிக்காரன். கை நிறையப் பணம் சேர்த்துவிடுவான் பாரேன்”என்று ஏதோ ஒரு வியாச்சியத்தில் சொத்துக்களையெல்லாம் தோற்றுவிட்டு, பண்டைய பெருமையைக் காட்டிய பித்தளைக் குமிழ்கள் வைத்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ரத்தினம் பிள்ளை தன் மனைவியிடம் சொன்னார்.
நான் உத்திரத்தின் மேல் ஒரு குருவி கூடு கட்டியிருந்ததைப் பார்த்துக் கொண்டு நின்றேன். ரத்தினம் பிள்ளையின் மனைவி, காமாச்சியாச்சி சொன்ன பதில் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
“இதிலே அவன் கெட்டிக்காரத்தனம் என்னங்கறேள்? பானை பிடிச்சவ அதிருஷ்டம்தான் வேணும்”என்றாள்.
“அந்தப் பொண்ணுக்கும் தான் என்ன?”என்றார் ரத்தினம் பிள்ளை.
மாமியைப் “பொண்ணு” என்று அவர் சொன்னது எனக்குச் சிரிப்பு மூட்டியது. நான் இரைந்தே சிரித்து விட்டேன்.
காமாச்சி ஆச்சி சொன்னாள்; “பெரியவங்களைப் பழிக்கக் கூடாதுடா ராசா, பழிக்கக் கூடாது. ஆமாம், சொத்துச் சேத்து அத்தனையும் உனக்குத் தானே கொடுக்கப் போறாங்களாம்? அவங்களுக்குப் புள்ளையா குட்டியா?”
“அவ்வளவு நல்ல மனசு படைச்சவங்களுக்குத் தானே பிறக்காமலா போவுது”என்றார் ரத்தினம் பிள்ளை.
நான் இந்தப் பேச்சைக் கண்ணும் காதும் வைத்து என் மாமாவுக்குப் பிரியமான படிச் சொல்லி வைத்ததற்கும், ரத்தினம் பிள்ளை வந்து என் மாமாவைத் தன் வீட்டின் பேரில் ஐநூறு ரூபாய் இரண்டு வட்டிக்குக் கடன் கேட்பதற்கும் சரியாகவே இருந்தது. ரத்தினம் பிள்ளைக்கு ஐநூறு ரூபாய் சுலபமாகவே கிடைத்து விட்டது. அவர் வீடு அந்தக் கிராமத்தில், இப்போது விலைவாசிகள் இருக்கிற நிலையில், மூவாயிரமாவது பெறும்.
மாமா தன் சொத்தையெல்லாம் தனக்குப் பிடித்த மருமகனான எனக்குத்தான் தரப் போகிறார் என்பது கிராம மக்கள் கட்டிய முடிவு. அப்போது மாமாவுக்குக் குழந்தை களில்லை, வயது அதிகமாகி விடவில்லை என்றாலும், இனிப் பிறக்காது என்று எப்படியோ ஊரார் முடிவு கட்டி விட்டார்கள். ஊரிலே மாமாவை எல்லோருக்குமே பிடித்திருந்தது என்றே நான் நினைக்கிறேன். அவர் உள்ளூர்க்காரர், பணக்காரராகிக் கொண்டிருந்தார். மரியாதைக்குரியவர். ஆனால், மாமியைக் கண்டால் யாருக்கும் பிடித்ததில்லை; அவள் அசலூர்க்காரி என்பதும் காரணமாக இருக்கலாம். வேறு காரணங்களும் இருக்கலாம்.
எங்கள் கிராமத்தாருடன் லேவாதேவி செய்வது பற்றி மாமாவுக்கும் அம்மாமிக்கும் தர்க்கம் நடந்த போது ஒரு சமயம் நான் கேட்டிருக்கிறேன்.
“உள்ளூரிலே இம்மாதிரி பணத்தை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தால் கடைசியில் பொல்லாப்பு வரும்”என்றாள் மாமி.
“நல்ல புள்ளிகளாகப் பார்த்துத்தான் தருகிறேன். பணமும் போய்விடாது. நமக்குப் பெரிய இடங்களில் கொடுத்து வாங்குவதில் மதிப்பு ஏறும்”என்றார் மாமா.
“அதென்னமோ, உங்கள் கிராமத்து விஷயங்களில் நான் குறுக்கே வரவில்லை. இருந்தாலும் நல்லதற்கில்லை இது என்று தான் எனக்குத் தோன்றிற்று”என்றாள் மாமி பிடிவாதமாக.
“நீயே சொல்லு. யாருக்குக் கொடுத்த பணம் பொல்லாப்புக்குக் காரணமாகிவிடும் என்று சொல்லு பார்ப்போம்?”என்று மாமா தன் கொடுக்கல் விவரங்களைப் பூராவும் ஆதியோடந்தமாகச் சொன்னார்.
அதில் எதிலும் அம்மாமியால் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. “உள்ளூரிலே போடுகிற பணம் வீண்”என்றாள் மாமி, விட்டுக் கொடுக்காமல்.
“அதுதான் ஒன்றுக்குப் பத்தாக உதவும் பாரேன். கொடுக்க முடியாவிட்டால் நிலமாகவும் வீடாகவும் வந்து விட்டுப் போகிறது”என்றார் மாமா.
இப்போது முப்பது வருஷங்களுக்குப் பிறகு, யோசித்துப் பார்க்கும் போது, மாமி சொன்னது நிஜம், மாமா சொன்னதும் நிஜம்தான் என்று தோன்றுகிறது. இரண்டொரு குடும்பத்தாருடன் பொல்லாப்பு வந்ததும் உண்மைதான். ஆனால், கீழத்தெரு முழுவதும், இரண்டு வரிசையிலுமுள்ள பதினெட்டு வீடுகளுமே மாமாவினுடைய ஆதிக்கத்துக்கு வந்துவிட்டன என்பது உண்மை. நல்ல நஞ்சையாக ஒரு ஏழெட்டு வேலிகள் வரையில் அடைபடாத கடன்களுக்கு ஈடாக வந்தன என்பதும் உண்மைதான்.
கிராமத்திலே மாமியை, “ராணியம்மா!” என்றுதான் சொல்வார்கள். சிவப்பும், பச்சையும், வெள்ளையும், தங்கமுமாக நாலைந்து செட்டுகள் நகைகள் வைத்திருந்தாள் மாமி. சுமக்க முடியாத உடம்பைச் சுமந்து கொண்டதுடன் அதன்மேல் ஒரு முப்பது நாற்பது சரவன் கனத்தையும் ஏற்றிச் சுமந்து கொண்டிருந்தாள். முன்னைக்கிப்போது பணம் சேர்க்கிற பெருமையிலே, பூரிப்பிலே, அதிகமாகப் பெருத்தும் இருந்தாள். பணம் சேர்க்கிற சிரமத்திலே கறுத்தும் இருந்தாள். சிற்பி செதுக்கிய கருங்கல் உருவம்தான் அவள். ஆனால், சிற்பியும் நல்ல சிற்பியல்ல; கருங்கல்லும் நல்ல கருங்கல் அல்ல. அந்த உருவத்தைச் செதுக்கும்போது சிற்பிகள் உள்ளத்தையும் கையையும் கலைத் தேவிக்குப் போட்டியாகத் தோன்றிய ஒரு கேலித் தேவி மயக்கி இருக்க வேண்டும். மாமியை, ஊரார் ‘ராணியம்மா’என்று சொல்லும்போது எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வரும்.
மாமாவும், மாமியும், நானும் உடன் வரத்தான், கிராமத்துக் கோயிலுக்குப் போகும் காட்சியை இப்போது நினைத்துக் கொண்டாலும் கூட எனக்குச் சிரிப்பு வருகிறது. முடமுடவென்று ஒன்றரைச் சாண் அகலம் ஜரிகையுள்ள ஒரு ஆரணிப் புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டு, நகைகளில் ஒரு சுமையை அணிந்து கொண்டு, நெற்றிக் கருப்பிலே சிவப்புப் பொட்டு பளபளக்க அம்மாமி கிளம்புவாள். மாமா அடக்க ஒடுக்கமாக வீட்டு வேலைக்காரன் மாதிரிக் கிளம்புவார். அம்மாமியும் நானும் வேகமாக நடந்து முன்னாடி கோயிலை அடைந்து விடுவோம், நான், “மாமா வரட்டுமே”என்றால், “தானே வரார்”என்று அலட்சியமாகப் பதில் அளிப்பாள் அம்மாமி. இந்த அலட்சிய வார்த்தைகளைக் கிளப்புவதற்காகவே நான் தினமும் “மாமி மாமா வரட்டுமே”என்று சொல்வேன். சிவன் சந்நிதியில் நின்று தேவாரம், திருவாசகம் சொல்லாமல் மாமா வரமாட்டார். முருகன் சந்நிதியில் நின்று, துண்ணூறு நெற்றியிலே பளபளக்க, மாமா கண்களை மூடிக் கொண்டு முருகன் புகழ் ஒரு பத்தாவது பாடாமல் கிளம்பமாட்டார். மாமிக்கும் சந்நிதிகளில் கூட்டத்தில் நிற்கப் பிடிக்கும். ஓரொரு சமயம் அம்மன் அணிந்திருக்கும் நகைகளையும் அவற்றின் தராதரத்தையும் கணக்கெடுத்துப் பார்ப்பாள். சாத்தனூர்க் கோயில் பணக்காரக் கோயில். பணக்கார வீட்டுப் பெண்களுக்கு இருப்பது போலவே அந்தச் சாத்தனூர்க் கோயில் அம்மனுக்கும் பெட்டி பெட்டியாக நகைகள் இருந்தன. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் அம்மாமி எத்தனை ஜன்மங்கள் பாடுபட்டாலும், அத்தனை நகைகளைச் சேர்க்க முடியுமா?
இது அம்மன் சந்நிதியில் நடக்கக் கூடிய விசேஷம். மற்றச் சந்நிதிகளில் அம்மாமியைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். அலட்சியமாக, சூழ்ந்துள்ளவர்களை ஓரக் கண்ணால் பார்த்து, அம்மாமி ஆனந்தப்படுவாள் என்பதை நான் கவனிப்பேன். அம்மாமிக்குக் கடவுள் பக்தி உண்டோ இல்லையோ எனக்கு நிச்சயமாக சொல்லத் தெரிய வில்லை. என் மாமாவுக்குத் தெய்வ பக்தி பூரணமாக உண்டு.
நான் இப்போது யோசித்துப் பார்க்கிறேன். பணம் சேர்ப்பதில் ஈடுபாடுள்ள எல்லோருக்குமே தெய்வ பக்தியும் அதிகமாக, இருப்பதற்குக் காரணம் ஏதாவதிருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வடநாட்டிலே பல கோடீஸ்வரர்கள் பணம் சேர்ப்பதும் செலவழிப்பதும் எல்லாம் ஒரு தெய்வத்தின் அல்லது தேவியின் பெயரால்தான், அப்படி ஒரு தான தருமம் என்று கோயில் ஆதினத்தை ஆதாரமாக வைத்துப் பணம் சம்பாதித்தலே. அதற்குச் சர்க்கார் வரி விதிக்க முடியாது என்பது ஒரு சிறு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் எனக்குத் தோன்றுகிறது யோசிக்கும்போது. பணம் சேர்ப்பதென்பது என்னவோ; எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல் தான். பாவங்கள் செய்து செய்துதான் பணம் சேர்க்க வேண்டும். பண மூட்டையுடன் பாவ மூட்டையும் பெரிது ஆகாதிருப்பதற்காக பணக்காரர்களாக விரும்புகிறவர்கள் கடவுள் பக்தியையும் உடன் கைக் கொள்ளுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. பணத்தாசையுடன், அதன் மறு அம்சமாகக் கடவுள் பக்தியும் தோன்றி விடுகிறது என்பது தான் சர்வ சாதாரணமாக நாம் உலகில் காண்கிற விஷயம். பணத்தாசையில்லாமல் கடவுள் படைத்தவர்கள் பரம ஏழைகளாக இருப்பதை நாம் பக்தி மட்டும் கண் கூடாகப் பார்க்கிறோம். கடவுள் பக்தி சேராமல், பணத்தாசை மட்டும் இருந்ததாக நான் இது வரையிலும் யாரைப் பற்றியும் தெரிந்து கொண்டதில்லை. பணம் என்கிற கடவுள் பக்தி என்கிற புண்ணியமும் பாவமும் ஒன்றையொன்று அடித்துக் கொண்டு, மனிதரைப் பாதிக்காது, பணம் மிஞ்சும் என்கிற நினைப்புத்தான் பலர் மனத்திலும் ஆட்சி செலுத்துகிற மாதிரி எனக்குத் தோன்றியது. ஆனால் எனக்குத் தோன்றுவதை யெல்லாம் வைத்துக் கொண்டு உலகத்தை அளக்க நான் புறப்படுவது சரியல்லவே! என் மாமாவின் வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கும்போது இம்மாதிரி சிந்தனைகள் தோன்றுவது சரியேயென்றாலும் இந்தச் சிந்தனைகளை மட்டும் கொண்டு உலகை அளக்கக் கூடாது என்றும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
என் மாமா லக்ஷப் பிரபு ஆன பிறகும் நான் அவருடன் ஒரு தரம் சாத்தனூர்க் கிராமத்துக்குப் போனேன். அப்போது அவருக்கு ஒரே ஒரு பிள்ளையிருந்தான். அவனுக்கு ஏழு வயது. அந்தத் தடவை சாத்தனூரில் எல்லோரும் அந்தப் பையனைத்தான் சீராட்டினார்கள். போற்றினார்கள், பாராட்டினார்கள். என்னை யாரும் கவனிக்கவில்லை. நான் அல்ல லக்ஷத்துக்கெல்லாம் உண்மையான வாரிசு என்பது தெரிந்தபின், என்னைப் பற்றி கிராமவாசிகள் கவலைப்படுவார்களா?



