ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்

12. “நீயாவது வந்தாயே!”

நான் சாதாரணமாக எந்தக் கலியாணத்துக்கும் போகிற வழக்கம் கிடையாது. போய்விட்டு வந்து அங்கு யாரும் என்னை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விடப் போகாமலே இருந்து விடுவது மேல் என்று எனக்குத் தோன்றும். வாழ்க்கையில் எவ்விதத்திலும் வெற்றி பெறாதவனை, பணம் காசு கையில்லாதவனை, யார் எப்படி வரவேற்று உபசரித்துவிடப் போகிறார்கள்? நெருங்கிய உறவினராக இருந்தால் கூடத்தான் என்ன? பணமில்லாத வரையில் என்னை யாரும் மதிக்கத் தயாராக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கூட்டத்தில் போய் நானும் ஒருவனாக நின்று விட்டு வருவானேன்? போகாமலே இருந்து விடலாமே என்றுதான் எனக்குத் தோன்றும். எனக்குத் தெரிந்து இருபது வருஷங்களில் நான் எந்தக் கலியாணத்துக்கும் போனதில்லை.

“ஏன் வந்தாய்” என்று கேட்கிற மாதிரி என்னை யாராவது பார்ப்பதற்கு இடந்தராமல் “ஏன், ராஜா, வராமல், இருந்து விட்டாய்?” என்று கேட்கும்படி வைத்துக் கொண்டால் போதும் என்று எனக்குத் தோன்றும். சாதாரணமாகக் கலியாணங்கள் நம்மூரில் பொருளாதார அடிப்படையில் நடப்பவை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள். விதவைகளை அபசகுனம் என்று சொல்லுகிறவர்கள் ஏன் ஏழைகளுக்கும் இந்த மாதிரி சமயங்களில் வெளியே தலைகாட்டக் கூடாது என்று தடை விதிக்காமல் இருந்து விட்டார்கள் என்று நான் ஆச்சரியப் பட்டதுண்டு. ஏழைகள் கண்பட நடக்கிற எந்தப் படாடோபமான கல்யாணமும் பலிப்பதில்லை என்பது அபிப்பிராயம்.

என் மாமா வேங்கடாசலத்தின் பிள்ளை சீநிவாசனுக்குக் கல்யாணம் என்று கடிதம் வந்தது முதல் எனக்கு என்னவோ அந்தக் கலியாணத்துக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. கலியாணக் கடிதாசைப் பார்த்ததுமே என் மனைவி சொன்னாள்; “உங்கள் மாமா பிள்ளைக்குக் கல்யாணம். மார்பிலே சந்தனமும் வாயிலே வெற்றிலை பாக்குமாக நாலு நாள் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு வாருங்கள்”என்றாள்.

“நீ வரப் போவதில்லையா?”என்று கேட்டேன்.

“நான் எதற்கு?”என்றாள் என் மனைவி. “நீங்கள் அவாத்திலேயே சாப்பிட்டு வளர்ந்தவர். போக வேண்டியது நியாயம்தான். உங்க மாமி நம்ப கல்யாணத்துக்குக் கூட வரவில்லை. உண்மையில் நான் வேங்கடாசலத்தைப் பார்த்திருக்கிறேனே தவிர, மாமியை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லையே…?”

“இப்போது பார்த்துவிடேன்”என்றேன்.

“கட்டிக்கொள்ள நல்ல புடவை ஒன்று கிடையாது. நான் வரவில்லை ஒருத்தர் கல்யாணத்துக்கும்”என்றாள்.

அதற்குமேல் அப்பீல் கிடையாதென்று எனக்குத் தெரியும். இந்த நகை புடவை விஷயத்தை என் மனைவி எடுத்துப் பேச ஆரம்பித்துவிட்டாளானால், நான் ஒதுங்கிக் கொண்டு விட வேண்டியதுதான். அதற்குமேல் எனக்குப் பேச வாய் கிடையாது என்பது அநுபவ பூர்வமாகத் தெரிந்த விஷயம். பதில் சொல்லாதிருந்து விடுவேன். அதுதான் சௌகரியம்.

மாமா கலியாணக் கடிதாசைக்கூட மிகவும் மட்டமான பேப்பரில் அச்சிட்டிருந்தார். “ஏராளமாகப் பணமும் நகையும் சாமானும் வாங்கியிருப்பார். ஒரே பிள்ளை, பல லக்ஷக்கணக்காக சொத்திருக்கிறது. இருந்தும் பத்திருபது ரூபாய் செலவிட்டுக் கல்யாண அழைப்பிதழ் அடிக்க மனசு வரலியே?”என்றேன், பேச்சை மாற்றுகிற உத்தேசத்துடன். “பெரிய உத்தியோகஸ்தர் வீட்டுப் பெண். இவர் எப்படியிருந்தாலும் அவர் கல்யாணத்தை நன்றாக நடத்தி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது. சதிர்க்கச்சேரி, பாட்டுக் கச்சேரி கூட இருக்கிறதே?…”என்றாள் என் மனைவி.

இந்த மாதிரி வைபவங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆசைதான். ஆனால் நிலைமை இடந்தரவில்லை. ஏழையென்று இடிபடுதை விட வராமலே இருந்து விடுவதுதான் நல்லது என்று அவள் எண்ணியதில் எனக்கும் சம்மதந்தான். நான் சாதாரணமாகப் போயிருக்க மாட்டேன். என்னமோ போக வேண்டும் என்று தோன்றிற்று. அதுவும் சென்னைப் பட்டணத்திலேயே கல்யாணம், மாமா அம்மாமியையும் பார்த்து நாளாயிற்று. போய் ஒருதரம் பார்த்துவிட்டு வரலாமே என்றுதான் இருந்தது. என்ன சொன்னாலும் வெள்ளிக் கிண்ணத்தில் பாலுஞ்சோறுமாகப் பிசைந்து வைத்து ஊட்டிய அம்மாமி அல்லவா?

“இருந்தாலும் மாமாவும் அம்மாமியும் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்திருக்கலாம், நேரில் வந்து கூப்பிட்டிருக்கலாம்” என்றேன் நான், என் மனசிலுள்ள குறையைத் தெரிவிக்கிற மாதிரி.

என் மனைவிக்கு அவர்கள் வராததே நல்லதென்று தோன்றிற்று. “நாமும் பணக்காரர்களாக இருந்தால் வந்திருப் பார்கள்தான்..”என்றாள்.

“ஒருநாள் வந்திருப்பதற்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்?”என்றேன்.

“அது பணம் படைத்தவர்களுக்குத்தான் தெரிய முடியும். நமக்கு எப்படி தெரியும்?”என்றாள் என் மனைவி.

ஒரு நிமிஷம் கழித்துச் சேர்த்துக் கொண்டாள். “இந்த ஜன்மத்தில் நமக்குத் தெரியவும் போவதில்லை”என்றாள்.

அதற்குப் பதில் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. பேசாதிருந்துவிட்டேன். கலியாணத்துக்குப் போவது என்று தீர்மானித்தவுடன், மாப்பிள்ளை அழைப்பிலிருந்தே போய்விடாலாமே என்று தோன்றிற்று. கிளம்பும் போது என் மனைவி சொன்னாள்

“மாமா வீட்டிலிருக்கும் போது சிறு வயசு. அவர்களிடம் ஒன்றும் கற்றுக் கொள்ளாதிருந்து விட்டீர்கள். இப்போது இந்த நாலு நாளிலாவது ஏதாவது உபயோகமாக பாடம் கற்றுக் கொண்டு வாருங்கள்”என்றாள்.

“அவ்வளவு சுலபமாகவா கிடைத்துவிடும் வாழ்க்கையில் உபயோகமான பாடம்?”என்று கேட்டுவிட்டுக் கிளம்பினேன்.

தோய்த்துத் தோய்த்துக் காவியேறிய இடுப்பு வேஷ்டி யுடனும், தோள் பட்டை கிழிந்திருந்த ஒற்றைச் சட்டையின் கிழிசலை மறைக்க துண்டுமாக நான் கலியாணத்துக்குக் கிளம்பினேன். அதற்காக நான் கிழிசல் சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலாவது சொல்லி யிருக்கிறதா என்ன? எனக்குள்ளதைத் தானே நான் போட்டுக் கொள்ள முடியும்! என்ன.. துணி வாடகைக்கு வாங்குவதா? அப்படி வாங்க வேண்டுமென்றாலுங்கூட எந்த லாண்டிரிக்காரன் கடன் தருவான்?

ஆனால் நான் தற்பெருமைக்காரன் அல்ல, என் கிழிசல் சட்டையும் பற்றி எனக்குப் பெருமையில்லை. வேண்டுமென்று வேஷம் போட நான் தயாராயில்லை. நான் ‘நான் தான்’வேறு யாராகவும் இருக்க விரும்பவில்லை; வேறு யாருக்காகவும் மாறவேண்டும், என்றும் விரும்பவில்லை. இந்த மாதிரியெல்லாம் மனக் குழப்பங்கள் வரும் என்பதற்காகத் தான் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கலந்து கொள்ளக் கிளம்புவதில்லை. இந்தத் தடவை ஏதோ என்னவோ போக வேண்டும் என்று தோன்றிக் கிளம்பி விட்டேன். நான் போய்ச் சேர்ந்தபோது மாப்பிள்ளை அழைப்பு மேள தாளத்துடன் கோயிலை விட்டுக் கிளம்பி விட்டது. அந்த ஊர்வலத்தில் என் மாமாவைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிந்தவர்களைக் காணவில்லை. பெண் வீட்டார் ஆணும்  பெண்ணுமாக நாற்பது ஐம்பது பேர்வழிகள் இருந்தார்கள். மாமா பக்கத்தில் போய் “அம்மாமி வரவில்லையா?”என்றேன்.

“வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு ரெயிலில் வந்த களைப்பு. இன்று, காலையில்தான் வந்தோம். ராஜா” என்றார் மாமா. பிறகு என்னைத் திரும்பிப் பார்த்தார். “நீ வராது இருந்துவிடப் போகிறாயே, நாளைக் காலை வந்து பார்க்கலாம் என்றிருந்தேன்”என்றார் மாமா.

பிள்ளை வீட்டாருக்கு என்று ஒரு பெரிய பங்களாவை அமர்த்திக் கொடுத்தார் பெண்ணின் தகப்பனார். மாடியிலும் கீழுமாக அந்தப் பங்களாவிலே ஏழெட்டுக் கூடங்களும் பத்துப் பன்னிரண்டு அறைகளும் இருந்தன. அதில் தங்குவதற்கு வந்திருந்தவர்கள் என் மாமா, மாமி, மாப்பிள்ளை சீனிவாசன், நான், நால்வரும்தான்; ‘நல்ல வேளை, நானும் வராவிட்டால்…’என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

மாமி என்னைக் கண்டதும் வாய் நிறைய, மனம் நிறையத்தான் வரவேற்றாள். ஆனால் “உன் பெண்டாட்டி வரவில்லையா? உள்ளூரிலேயே இருந்துகொண்டு…”என்றாள்.

“ஊருக்குப் போயிருக்கிறாள்”என்று சொல்லி விடலாமா என்று எண்ணினேன். ‘பொய் சொல்வானேன்? நிஜத்தை சொன்னால்தான் என்ன நஷ்டம்?’என்று தீர்மானித்துக்கொண்டு சொன்னேன். “கட்டிக்கொள்ளப் புடவையுமில்லை; போட்டுக்கொள்ள நகையுமில்லை. பெரிய கல்யாணத்துக்கு வர மனசில்லை அவளுக்கு”என்றேன். “கட்டிக்கப் பட்டுப்புடவை தரமாட்டேனா? போட்டுக் கொள்ள ஒரு செட் வைர நகை தரமாட்டேனா?” என்றாள் மாமி.

சட்டென்று நான் “நிஜமாகவா மாமி?”என்றேன்.

நான் வேண்டுமென்றே தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டு விட்டேன் அவள் சொன்னதை என்று புரிந்து கொண்ட அம்மாமி வாயை மூடிக் கொண்டுவிட்டாள். அப்படி ஒன்றும் அன்பையும் உறவையும் அவள் விலைக்கு வாங்கத் தயாராக இல்லை.

அன்றிரவு மாமா படுத்துக் குறட்டைவிட ஆரம்பித்ததும் சீனிவாசன் என்னைக் கூப்பிட்டான். போய் வெளிவராந்தாவிலே உட்கார்ந்து இருவரும் பல விஷயங்களைப் பேசினோம். அவனைக் குழந்தையாக இருக்கும்போது நான் பார்த்தது. அதற்குப் பிறகு கால் மணி நேரம் கூடச் சந்தித்துப் பேசியது கிடையாது. “நன்றாகப் படித்தான் ராஜா. அந்த நாளில் இருந்த மாதிரியே இருந்தான். நல்ல பிள்ளை” என்று பிறர் சொல்லிக் காதில் விழுந்ததுண்டே தவிர நேரில் அவனைப் பற்றி எதையும் கண்டு அறிந்து கொள்ள எனக்குச் சந்தர்ப்பமேயில்லை. ஆனால் அன்றிரவு கண்டு கொண்டேன். பணக்கார வீட்டுப் பிள்ளையாக, தற்பெருமைச் சூனியமாக இல்லாமல் பையன் மிகவும் அடக்கமாக அறிவுள்ளவனாக இருந்தான் என்பதைக் கண்டு கொண்டேன்.

“வேறு யாருமே வரவில்லை என் கலியாணத்துக்கு!”என்றான்.

எனக்குப் புரிகிற மாதிரி இருந்தது அவன் மனோபாவம். அவன் தன் அப்பா அம்மாவைக் குறை கூறவில்லை தன் குறையைத்தான் கூறிக் கொண்டான். அதை அவன் சொன்ன மாதிரியிலேயே அவன் அடக்கம் தெரிந்தது.

“நான் வந்ததே ஆயிரம்பேர் வந்த மாதிரி சீனிவாசா”என்றேன் நான், என் சட்டையின் தோள்பட்டைக் கிழிசலைத் துளாவிக் கொண்டு.

“உன்னைப் பற்றி அம்மா நேற்றுக் கூட ரெயிலில் நெடுகப் பேசிக்கொண்டு வந்தாள்”என்றான் சீனிவாசன்.

என்ன பேசியிருப்பாள் என்று எனக்குத் தெரியும். பிரியத்துடன் அம்மாமிக்கு என்னிடம் அளவு கடந்த மாதிரியான குழந்தைகளிடம் ஒரு தாய்க்கு இருக்கக் கூடிய அனுதாபமும் உண்டு. நொண்டி, முடம், சவலை என்கிற அனுதாபம் அது. உய்யாது, உய்ய வழியறியாது தடுமாறும் குழந்தை இது என்று என்னைப் பற்றி ஆதிமுதலே உணர்ந்திருந்தாள் அவள். தன் பிள்ளையும் பல விதங்களிலும் என்னைப் போலவே இருந்தான் என்பது அடிநாட்களில் அவளை வெகுவாகப் பயமுறுத்தியிருக்கவே வேண்டும். இப்போது, அவன் பிறந்து இருபத்தி மூன்று வருஷங்களுக்குப் பிறகு, குணாதிசயங்களில் எப்படியிருந்தாலும், தன் பிள்ளை என்னைவிடச் “சாதாரணமாக”இருந்தான் என்பதில் அவள் அளவற்ற தைரியம் பெற்றிருப்பாள். அந்தத் தைரியம் அவள் தன் பிள்ளைக்குத் தந்து விட்டுப்போகக் கூடிய லக்ஷங்களினால் உரம் பெற்றிருக்கும்.

“சொன்னால் உனக்கோ மற்றவர்களுக்கோ நம்பிக்கை வராது. ஆனால் இந்தக் கல்யாண விஷயத்தில் பணம் என்றோ மற்றபடி எது பற்றியுமோ, அப்பாவோ அம்மாவோ வாயே திறக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்வது நல்லது என்பது எங்கள் அபிப்பிராயம். பெண் பிடித்திருந்தால் சொல்லு, நீயே முடிவு செய்துவிடு என்று சொல்லிவிட்டார்கள்”என்றான் சீனிவாசன்.

“அதுதான் சரி. நீயாகப் பார்த்துத் தீர்மானித்துக் கொண்ட விஷயம் தானே இது? நல்லது”என்றேன் நான். வேறு என்ன சொல்வது? பெண்ணுக்கு எந்தெந்த நகை போட வேண்டும் என்று மாமி எதற்காகச் சொல்ல வேண்டும்? வீட்டுக்கு நாலு பெண்கள் வந்தாலும் போட்டுக் களிக்கப் போதுமான நகைகள் அவளிடமே இருந்தன. தன் பெரிய ஆகிருதியில் ஒரு செட்டுக்குப் பதில் இரண்டு செட்டுகளை வேண்டுமானால் அவள் அணிந்து கொள்ளலாம். மற்றதைப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைக்கலாமே தவிர வேறு என்ன செய்ய முடியும்? தவிரவும் பெண் வீட்டாரும் நல்ல பணக்காரர்கள். பெண்ணுக்கு வேண்டிய நகைகளை அவர்களே அன்புடன் செய்து போட்டிருப்பார்கள். இருந்தாலும், பேரம் செய்யாமல் எதையும் ஏற்றுக் கொள்வது மாமாவையும் அம்மாமியையும் பற்றிய வரையில் பெரிய விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

ஸ்ரீநிவாசன் தன் ஆசை அபிலாக்ஷைகள் லக்ஷியங்கள் முதலியன பற்றி அன்றிரவு வெகுநேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான். வாழ்வின் முதற்படியில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்த அவன் சொன்னதை யெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. தவிரவும் அன்று பொங்கிய உணர்ச்சிகளைச் சொல்லித் குதூகலிக்க நான் ஒருவனாவது அகப்பட்டேனே என்று அவனுக்கு உல்லாசமாக இருந்திருக்கும். மறுநாள் காலையில் அவன் காலேஜ் தோழர்கள் இருவர் வந்து விட்டார்கள். அதற்குப் பிறகு அவன் என்னிடம் மனம் திறந்து பேசவில்லை. அதற்கு அவசியமில்லாது போய் விட்டது.

மாமா வேங்கடாசலம் அடிக்கடி என்னைக் கூப்பிட்டு வைத்துப் பேசினார். அவருடன் பேச வேறு யார்? பணத்தை ஆட்கொல்லி என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன் நான், ஆனால் என் மாமாவின் லக்ஷங்கள் இப்படி அவர் பக்கத்தில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லாமல் உறவினர்களைக் கொன்றுவிட்டிருக்கும் என்று என்னால் கற்பனையில் கூடக் கண்டிருக்க முடியாது. அந்தக் கல்யாணத்துக்குப் போய் நேரில் கண்ணாரக் கண்டிராவிட்டால், நான் கூட அதை நம்பியிருக்க மாட்டேன். “எல்லோரும் பணக்காரரைப்பற்றி இப்படி அப்படி என்று ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் சமயம் வாய்த்தால் போய் ஒட்டிக்  கொள்ள மாட்டார்களா?”என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் நான் அப்படி நினைத்தது தவறு என்பது என் கண் முன்னாலேயே ருஜுவாகி விட்டது.

பெண் வீட்டுப் பெண்மணிகளுக்கு மத்தியில் என் மாமி தனியாக நிற்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கண்ணில் ஜலம் வந்தது. போய் உடனேயே என் மனைவியை அழைத்து வரலாமா என்று எண்ணினேன். ஆனால் என் மனைவி அப்படி ஒன்றும் கூப்பிட்டவுடன் வந்துவிட மாட்டாள் என்றும் தெரியும் எனக்கு. என்னை விடப் பிடிவாதக்காரி அவள்!

மாமிக்கு வருத்தமோ இல்லையோ அவள் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வேங்கடாசலம் மட்டும், “அவள் வந்திருக்கக் கூடாதா? பெரம்பூரில்தானே இருக்கிறாள்? வில்லிவாக்கத்தில்தானே இருக்கிறான்?”என்று அடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டிருந்தார். அதே மூச்சில் “நீயாவது வந்தாயே ராஜா”என்றார்.

“வெளியூரில் இருந்தால் ராஜா கூட வந்திருக்க மாட்டான்”என்றாள் மாமி.

வந்திருப்பேன் என்று நான் சொல்லவில்லை. ஒரு விதத்தில் இப்போது கூட ஏன் வந்தோமென்று எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் அதற்கு காரணமில்லாது போய் விடவில்லை.

பெண் வீட்டில் சமையலுக்கு வந்திருந்த கோஷ்டியில் கண்ணப்பன் என் கண்ணில் பட்டுவிட்டான். முகூர்த்தம் எல்லாம் ஆனபிற்பாடு, மத்தியான சாப்பாடு எடுத்து வைக்க வந்த ஆசாமிகளில் கண்ணப்பனும் ஒருவன். எனக்கு வந்த கோபத்தில் நடுப்பந்தியிலேயே நான் கண்ணப்பனை பெண் வீட்டார் அத்தனை பேருக்கும் மத்தியில் ஸ்ரீநிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். ஸ்ரீநிவாசனுக்கு என் கோபம் புரிந்தது என்று எண்ணுகிறேன். பெண் வீட்டார் காதில் எதுவும் விழுந்தது மாதிரிக் காட்டிக் கொள்ளாமல் பெருந்தன்மையாக இருந்து விட்டனர்.

சாப்பாடெல்லாம் ஆன பிற்பாடு அம்மாமி என்னிடம் சொன்னாள்; “பணம் என்னவெல்லாம் பண்ணும் என்று எனக்கே இப்போதுதான் தெரிகிறது ராஜா”என்றாள்.

“என்னென்ன பண்ணாது என்று தெரிகிறது என்று சொல்லு அம்மாமி!” என்றேன்.

அடுத்த வேலையிலிருந்து கண்ணப்பனைக் கல்யாண வீட்டில் காணவில்லை. அவனைப் போகச் சொல்லி விட்டார்கள் போலும். என்னையும் போகச் சொல்ல முடியுமானால் பெண் வீட்டார் போகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் மாமாவும் அம்மாமியும் எதுவும் சொல்லாத வரையில் அவர்கள் என்ன செய்ய இயலும்?

கல்யாணம் நாலு நாளும் இருந்துவிட்டுத்தான் நான் வீடு திரும்பினேன். சிந்திப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் விஷயம் நிறையவேதான் கிடைத்தது எனக்கு.

முற்றும்.

★★★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *