
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
6. சீக்குண்டாம் டாக்டருண்டாம்
நானும் யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். மனிதன் எத்தனையோ நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு வாழ்க்கையைச் சாத்தியமாக்கி எப்படியோ நடத்தி வருகிறான். போன தலைமுறையின் நம்பிக்கைகள் இந்தத் தலைமுறையில் பரிகாசத்துக்கு இடமாகின்றன. மூட நம்பிக்கைகளுக்கும் ஒரு கணக்கில்லை என்பதை ஒப்புக் கொள்ள ஒருவரும் முன்வருவதில்லை.
போன தலைமுறையில் சகுனத்தில் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். கடவுளுக்குத் தேங்காயை உடைத்துவிட்டால் தாங்கள் நினைத்ததெல்லாம் வெற்றியாகி விடும் என்று எண்ணினார்கள். மஞ்சள் துணியில் முடிந்து வைத்துவிட்டு, இஞ்ஜெக்ஷன் செய்து கொள்ளப் பயந்து கொண்டு, உடம்பு தானாகவே தெய்வத்தின் அருளால் சரியாகிவிடும் என்று எண்ணினார்கள். இப்படியாக ஆயிரமாயிரம் சொல்லலாம். அதேபோல இந்தத் தலைமுறையின் பிரத்தியேக நம்பிக்கைகள் என்றும் ஒரு ஆயிரத்துக்குக் குறையாமல் சொல்லலாம். சரியோ தப்போ தினசரிப் பத்திரிகைகள் கூட “இன்று நாள் எப்படி?”என்று ஜோசியம் போடத் தொடங்கிவிட்ட காலம் இது. நமது வாழ்க்கையிலே பொருளாதாரப்புள்ளி விவரங்கள் எப்படிப் பட்ட கொடுங்கோலாட்சி செலுத்துகின்றன என்று சொல்லி முடியாது. விஞ்ஞானம் என்ற முடிவு காணாத ஒரு கடலில் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். விஞ்ஞானம் வேதாந்தத்தின் முடிவுகளை வற்புறுத்துகிறது என்று சொல்லக் கூடச் சிலர் பெருமைப் படுகிறார்கள். ஆனால் விஞ்ஞானத்தின் மூலம் வேதாந்தத்தை நம்புவார்களே தவிர, நேரடியாக யாரும் இன்று வேதாந்தத்தை நம்பத் தயாராக இல்லை என்பது வெளிப்படை.
நம்பிக்கைகளைப் பற்றிய சிந்தனை எப்படி என் மனசில் தோன்றியது? ஆமாம்.. என் மாமாவும் என் மாமியும் போட்டி போட்டுக் கொண்டு எனக்குச் செய்ததற்கெல்லாம் நான் அவர்களுடைய மூட நம்பிக்கைகளிலே இன்று ஒரு காரணம் கண்டுகொண்டு விட்டேன் என்று எண்ணுகிறேன். ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தவரானதால் மாமாவுக்குத் தீங்கு விளையும் என்பது மூடநம்பிக்கைதான். யோசிக்கப் போனால், அதில் அர்த்தம் எதுவும் இல்லை என்று சொல்ல வேண்டும். ரோஹிணியில் பிறந்தவர்கள் எல்லோரும் கிருஷ்ண பகவான்கள் அல்ல, அப்படியிருக்க முடியாது என்பதை எல்லோருமே ஒப்புக் கொண்டு விடுவார்கள். ரோஹிணியில் பிறந்தவர்களுடைய மாமன்மார்கள் எல்லோரும் கம்ஸன்களா? இல்லவே இல்லை. இருந்தாலும் என்னைப் பற்றியவரையில் இந்த ரோஹிணி என்கிற மூட நம்பிக்கை நன்மை பயத்தது என்றே சொல்வேன்.
நான் ரோஹிணி நக்ஷ்த்திரத்தில் பிறந்தவன். பணத்தாசையால் உந்தப்பட்டு, கொடுக்கல் வாங்கல் நடத்தி, எல்லா வழிகளிலும் பணம் சேகரித்துக் கொண்டிருந்த என் மாமா வேங்கடாசலத்தைக் கம்ஸன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் அதை உணர்ந்து மாமாவோ அம்மாமியோ எனக்குத் தானாக எதுவும் செய்து விடவில்லை. யாரோ ஒரு ஜோசியன் சொல்லி விட்டான். “ரோஹிணியில் பிறந்த மருமகனுக்கு, எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் செய்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களுக்குப் பரிகாரம், தோஷ நிவர்த்தி”என்று. அன்று முதலே எனக்கு மாமா வீட்டில் ராஜோபசாரம்தான். அதற்காக அவர்கள் எனக்குத் தினமும் பாலும் தயிருமாகப் போட்டார்கள் என்றோ, பட்டும் ஜரிகையுமாக வாங்கித் தந்தார்கள் என்றோ அர்த்தமில்லை. அவர்கள் தினமும் சாப்பிட்ட ஜீரக ரசத்தையும் சுட்ட அப்பளத்தையும், வற்றல் குழம்பையும், நீர் மோரையும், புழுங்கலரிசிச் சோற்றையும் தாராளமாகப் போட்டார்கள். அந்த உணவை உண்டு அவர்கள் ஊன் விருத்தியடைந்தது. வருஷத்துக்கொரு தரம் அம்மாமி தன் ஒட்டியாணத்துக்கு இரண்டு பவுன் சேர்த்துப் பெரிது பண்ணிக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மாமாவும் அவர் ஆகிருதிக்குப் பெரியவராகத்தான் விளங்கினார். நான்தான் உணவு போதாமல், ஹோட்டலுக்குப் போவதும், வயிற்று வலியால் அவஸ்தைப்படுவதுமாக, நோஞ்சானாக இருந்தேன்.
வெள்ளிப் பாத்திரத்தில் பாலும் சோறும் உண்பது ஒரு இரண்டு வருஷங்களுக்கு மேல் அதிகம் நீடிக்கவில்லை. நல்ல பாட்டி போனதுடன் அதுவும் போய் விட்டது. ‘என்’வெள்ளிப் பேலாவை அம்மாமி தன் பெட்டியில் பத்திரப் படுத்தி வைத்துப் பூட்டிவிட்டாள். என்றாவது அகஸ்மாத்தாக அது என் கண்ணில் பட்டால்தான் உண்டு.
எனக்கு அவர்கள் பிரியமாகத்தான் செய்தார்கள், மாமா என்னை அதட்டியதேயில்லை. அவசரமாக ஏதாவது வேண்டுமானால் கூட மாமி என்னைக் கடைத் தெருவுக்கு அனுப்ப மாட்டாள். “அவனுக்கென்ன தெரியும் பாவம் குழந்தை, கடைக்காரன் அவனை ஏமாற்றி விடுவான்”என்பாள். அதுவும் உண்மைதான். இப்போது எண்ணிப் பார்க்கும்போது, மீதிக் காசையும் தொலைத்துவிட்டு வந்து விடுவேன் என்கிற பயம்தான், மாமி என்னை எந்த வேலையும் ஏவாமல் தடுத்தது, என்று எனக்கு தோன்றுகிறது. எது எப்படியானாலும் எனக்கு சௌகரியமாகத்தான் இருந்தது. பிறந்த வீட்டில் செல்லமென்பதே அறியாத நான் மாமாவுக்கும் மாமிக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தேன். மூன்றாவதிலிருந்து ஐந்தாவது கிளாஸ் வரை ஒரு மூன்று வருஷங்கள் – பிறகு முதல் பாரத்திலிருந்து நாலாவது பாரம் வரை ஒரு நாலு வருஷங்கள் ஆக மொத்தம் என் இளமைப் பருவத்தில் ஒன்பது வருஷங்களை நான் என் மாமா வீட்டிலேதான் கழித்தேன். பணத்தில் கருத்து வை என்கிற ஒரு விஷயத்தையாவது நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்குமே என்று என்னையும் மீறிச் சில சமயம் நான் எண்ணுவதுண்டு.
அதே சமயம் அப்படி மாமா வாழ்விலே என்ன வெற்றி கண்டு விட்டார். நான் என்ன தோல்வியடைந்து விட்டேன் என்று எண்ணி நான் என்னைத் தேற்றிக் கொள்வதும் உண்டு. பணம் சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கை லக்ஷ்யம் என்று சொன்னால் என் மாமா வாழ்விலே வெற்றி பெற்றவர்தான். ஆனால் அவரே தன் வாழ்வில் தோல்வியை எற்றுக் கொண்டு வருந்திய ஒரு காலம் வந்தது. அதை சொல்லத் தானே ஆரம்பித்தேன் இப்போது. ஆனால் அதைச் சொல்லுமுன் அதற்கு ஆதாரமாக அமைந்த சில விஷயங்களையும் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. நினைவுக்கு வருகிற இங்கொன்றும் அங்கொன்றுமான விஷயங்களை வரிசைப்படுத்திச் சொல்வதிலே தனியாக ஒரு இன்பம் காண முடிகிறது. பணம் என்கிற ஒரு தேவிக்குப் பலியாகி செலவு செய்துவிட்ட பணத்துக்குப் பழங்கணக்கு எழுதித் திருப்திப்படுகிற மாதிரித்தான் இது. செலவு செய்து அடைந்த அதே இன்பம் கணக்கு எழுதி அடைய முடியுமா?
யோசித்துப் பார்க்கும் போது அதுவும் முடியும் என்று தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் என் மாமா ஒரு நாள் விடாமல் நாற்பது ஐம்பது வருஷங்களாகக் கணக்கெழுதி வருவானேன் ?
மனிதனுக்கு இன்பம் பெற வழிகள் கணக்கற்றவை இருக்கின்றன. வைக்கோலைச் சுவைத்துச் சாப்பிடுவதில் கூட இன்பம் கண்டு விடுவான் மனிதன்.
பிறர் சொத்தையும் பணத்தையும் எண்ணிப் பார்த்து பெருமையோ சிறுமையோ பட்டுக் கொண்டிருக்கிற மனிதர் களையும் தான் நமக்குத் தெரியுமே!
இது போகட்டும். இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு. நான் நோஞ்சான் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். என் மாமாவும் மாமியும் பார்வைக்கு தெரிந்த நாள் திடகாத்திரர்களாகத்தான் இருந்தனர். ஆனால் எனக்குத் தெரிந்த நாள் முதலாக மாமாவுக்கு டையாபிடிஸ் என்கிற வியாதி உண்டு. கடவுளின் பெயரை எட்டுத்தரம் சொல்வார் மாமா என்றால் டையாபிடிஸ் என்கிற பெயரை ஒரு நாளில் ஒரு இருபத்திநாலு தடவைகளாவது பயபக்தியுடன் உச்சரிப்பார் அவர். டையாபிடிஸ் என்கிற வியாதிக்கு அரிசி அதிகமாக உபயோகப்படுத்தக் கூடாது. கறிகாய்கள் சேர்க்க வேண்டும் என்று வாரத்தில் இரண்டு நாள் யாராவது சொல்லி வைப்பார்கள். கறிகாய் வாங்குகிற உத்தேசத்துடன் முழுசாக வெள்ளி பணம் ஒரு எட்டணாவை மாற்றி இரண்டணாவுக்குக் கறிகாய் வாங்கி வந்தால் அதிகம் எடுத்துக் கொண்டு கிளம்புவார் மாமா. ஆனால் பணத்தை பாதி நாள் மார்க்கெட்டுக்குப் போய்விட்டுப் பணத்தை மாற்றாமலே அவர் வந்து விடுவதும் உண்டு.
ஒரு சமயம் நான் இண்டர் மீடியட்டில் கோவையில் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது இது. மாமா எட்டணா கொடுத்து கறிகாய், என்னிஷ்டப்படி வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். நான் சமர்த்தாகப் போய் மார்க்கெட்டில் வெண்டைக்காய் பேரம் செய்துவிட்டு, பையில் காசுக்குத் துளாவும் போது காசை எங்கேயோ தொலைத்து விட்டேன் என்பது தெரிந்தது. வழக்கமாக மாமா வாங்கி வருகிற வாழைக்காய் கூட அன்று நான் வாங்கி வரவில்லை. கறிகாய்க்குப் பதில் நான் எட்டணாவை வள்ளிசாக முழுசாகத் தொலைத்து விட்ட விஷயத்தைத் “தொட்டுக் கொண்டே”ஒரு வாரம் பூராவும் சாப்பாடு நடந்தது.
மாமாவின் வியாதிக்குப் பெயர் டையாபிடிஸ். மாமியின் வியாதிக்குப் பெயர் தெரியாது. ஆனால், அவளும் வியாதிக்காரிதான். பட்டணத்து டாக்டர்கள், வேலூர் டாக்டர்கள், தஞ்சாவூர் டாக்டர்கள், கோவை டாக்டர்கள், திருவாரூர் டாக்டர்கள் என்று எல்லோரும் அவர்களுக்குரிய காலத்தில் முயன்றும் அவள் வியாதிக்கு ஒரு பெயர் சொல்ல முடியவில்லை யென்பது அந்த நாட்களில் விந்தையாகத் தோன்றியதுண்டு எனக்கு. இப்போது யோசித்துப் பார்க்கும் போது பெயர் தந்திருந்தால் மட்டும் என்ன பிரயோசனம் என்று தோன்றுகிறது. முதலில் மாமி பெண் டாக்டர்களிடம் மட்டுமே போவது என்கிற வழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தாள். பிறகு, டாக்டர் என்று யார் வந்தாலும் மருந்து கேட்பது என்று ஏற்பட்டு விட்டது. எல்லோரும் மருந்து சொன்னார்கள்; மாத்திரைகள், சீல் போட்ட புட்டி மருந்துகள், சீல் போடாத புட்டி மருந்துகள், உள்ளூர்ச் சரக்குகள், வெளியூர்ச் சரக்குகள் எல்லாம் அடுக்கடுக்காக தந்து அலமாரியில் ஏறின. பாதி சாப்பிட்டதும் பாதி சாப்பிடாததுமான மருந்துகள் ஒரு பெட்டி கொள்ளாமல் இன்னொரு பெட்டியிலும் வழிந்து நிரம்பின. ஒன்றும் அம்மாமியின் வியாதியைக் குணப்படுத்தவில்லை.
வைதீகமான மனப்பான்மையுள்ளவர்கள் சிலர் வைதீகமான சடங்குகள் பல சொன்னார்கள். சிலர் சனிக்கிழமை விரதம் சொன்னார்கள். சிலர் ஞாயிறு விரதம் சொன்னார்கள். சிலர் செவ்வாய்க்கிழமை நாள் பூராவும் மௌனமாக இருந்து, ஒரு ‘கப்’பால் மாத்திரம் சாப்பிட்டு விட்டு உபவாஸம் இருந்தால் நல்லது என்றார்கள். மாமாவும், மாமியும் வாரம் பூராவும், ஒவ்வொரு நாளும், உபவாசம் இருக்கத்தான் தயாராகவே இருந்தார்களே! சாப்பாட்டுச் செலவும் குறையுமே? ஆனால் பலன்தான் இல்லை. யாரோ சொன்ன தீர்த்த யாத்திரையும் செய்து பார்த்தார் மாமா. இந்தத் தீர்த்த யாத்திரைகளில் மாமா அம்மாமியுடன் போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால், வேலைக்குக் குந்தகமில்லாமல் மாமா லீவு நாட்களிதான் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டியதாக இருந்தது. அந்த மாதிரி லீவு நாட்களில் நான் என் தகப்பனார் வீட்டுக்குப் போய்விடுவேன்.
இப்போது எண்ணிப் பார்க்கும் போது என் அப்பாவுக்கும் என் மாமாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் நன்றாகவே தெரிகின்றன. மாமா வீட்டைத் தேடி அந்த ஆரம்ப நாட்களில் கூட யாரும் அதிகமாக வர மாட்டார்கள். வந்தாலும், அவசியமிருந்தால் ஒருநாள் இரண்டு நாளுக்கு மேல் தங்க மாட்டார்கள். தங்கினால் சாப்பாடு கிடைக்காது
உதாசீனம் கூடக் கிடைக்கலாம். என் தகப்பனார் வீட்டில் அப்படியில்லை. யார் வந்தாலும், எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கிவிடுவார்கள். ஏன் வருகிறார்கள், எதற்காக வருகிறார்கள் என்ற காரணமே வேண்டியதில்லை. யார் யாரோ உறவுக்காரர்கள், உறவில்லாதவர்கள் எல்லோரும் வருவார்கள்; வந்து காரணமில்லாமலே பல நாட்கள் தங்குவார்கள். என் அப்பாவுக்கு முன் கோபம் கொஞ்சம் அதிகம் உண்டு. யாரையாவது பிடித்து எதற்காகவாவது இறைவார். ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். “பேச்சுத்தான் இரைந்து பேசுவானே தவிர, அவன் குணம் தங்கம். மனசில் எவ்வித கல்மிஷமும் இல்லாதவன்” என்று அப்பாவைப் புகழ்ந்து கொண்டே அவர் இரைந்ததற்காக இன்னும் நாலுநாள் இருந்து விட்டு போவார்கள். நான் கோடை விடுமுறை நாட்களுக்கெல்லாம் விருந்தாளி போல என் வீடு திரும்புகிறபோது, வீட்டிலே எப்போதும் கலகலவென்று கல்யாணம் போலத்தான் இருக்கும். அம்மாவும் முகம் கோணாமல் எல்லோருக்கும் செய்வாள். யாராவது உதவி என்று தேடி வந்தால், அப்பா கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். திரும்பி வராத கடன் அது என்று தெரிந்திருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்.
“இப்படி கண்டவருக்கும் கேட்டவருக்கும் வட்டியில்லாமல் பணம் கொடுத்தால் நமக்குத் தேவைப்படுகிறபோது யாரடா ராஜா நமக்குக் கொடுப்பார்கள்?”என்று மாமா என்னைக் கேட்டார்.
“உன்னிடம் வாங்கிக் கொள்வார்”என்பேன் நான் சிரித்துக் கொண்டே. “உன்னிடம் தான் ஏராளமாகப் பணம் இருக்கே மாமா”என்பேன்.
“ஐயையோ…!”என்பாள் மாமி.
“பணத்தில் ஏராளம் என்று கூட உண்டா?” என்று என்னைக் கேலி செய்வார் மாமா.
“போதுமான” பணம் கூட சம்பாதித்துச் சேமிக்கத் தெரியாத நான் “ஏராளமான பணம்”என்று பேசியது எவ்வளவு முட்டாள் தனம் என்று இப்போது உணருகிறேன்.
அப்பாவின் குணத்தையும், மாமாவின் குணத்தையும் பற்றியல்லவா சொல்ல வந்தேன்? மாமா இரைந்து யாரையும் ஒரு வார்த்தையும் பேசமாட்டார். கையில் பணமிருந்தாலும், கழுத்தை நெறிக்கிற சமயத்திலும், “இல்லை”என்ற சொல் தான் அவர் வாயிலிருந்து வருமே தவிர, தவறிப் போய்க் கூட “இருக்கு” என்று வந்து விடாது. என் அப்பாவின் குணத்தைக் கொண்டவன் நான். ஔதார்யம் மிக்கவனை உலகம் ஊதாரி என்று சொல்லுகிறது. கஞ்சன் என்று சொல்லுகிற அதே மூச்சில் உலகம் என்னவோ என் மாமாவைப் போன்றவர் களைத்தான் பாராட்டுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. யாரும் நெருங்க மாட்டார்கள்; உண்மைதான். ஆனால் கஞ்சனுடைய காசும் காசுதானே; அதுவும் மதிப்புக் குரியதுதானே என்பது உலகத்தின் கட்சி என்று தோன்றுகிறது.
மாமியின் வியாதியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். மாமா தன் டயாபடிஸுக்கு எந்தவிதமான மருந்தும் தேடிச் செல்லமாட்டார். ஆமாம்; மாமியினுடைய பெயர் தெரியாத வியாதிக்கு, அவர் தான் சம்பாதித்ததில் பாதி என்று சொல்லமாட்டேன், பத்தில் ஒரு பங்கு என்றும் சொல்ல மாட்டேன், இருபதில் ஒரு பங்காவது செலவிட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். ரூபாயைப் பைசாக்களாக மாற்றி, எண்ணி எண்ணிச் செலவு செய்கிற என் மாமா இவ்வளவு செலவு செய்தது பெரிய விஷயம்தானே? ஒவ்வொரு தடவையும் உள்ளத்து ரத்தம் வெளியே தெறிக்கத் தான் தன் பர்ஸிலிருந்து ரூபாயை எடுத்து மருந்து வாங்கி வருவார்.
நான் கோவையில் இண்டர்மீடியட் படிக்கும் போது, மாமியின் வியாதிக்குப் பதினேழு வயது ஆகிக்கொண்டி ருந்தது என்று எண்ணுகிறேன். வருஷத்துக்கு ஒரு முறையாக அவள் பதினேழு குறைக் குழந்தைகளுக்குத் தாயானாள். பிறந்த குழந்தைகள் வயிற்றிலேயே மரித்துப் பிறந்தன என்பது ஆறுதல் தரக்கூடிய விஷயமாகக் கூட இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இந்த வியாதிக்கு டாக்டர் என்ன பெயர் சொல்ல முடியும்? எப்படி வைத்தியம் செய்வார்கள்? பூர்வ ஜன்மத்துப் பாபம் என்று சொன்னார்கள் சிலர்,
நான் சின்னவன் என்கிற உரிமையுடன் ஒவ்வொரு தடவையும் மாமியிடம் சொல்வேன். “மாமி, இந்தத் தடவை நீ ஒரே சமயத்தில் நாலு குழந்தைகளைப் பெற்றுவிடு”என்பேன்.
கண்களில் ஈரத்துடன் “நீ சொல்கிறபடி பலிக்கட்டுண்டா ராஜா”என்பாள் மாமி.



