
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
4. கொடுக்கல் வாங்கல்
அந்தக் கிழவனார் வந்து போன பிறகு நான் என் மாமாவினுடைய கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் என்னையும் அறியாமலேயே கவனம் செலுத்தத் தொடங்கினேன். மனிதனின் ஆதி காலத்திய கவனங்களும் ஈடுபாடுகளும்தான் அவனுடைய பின் உள்ளத்தையும் வாழ்க்கையையும் சமைக்கின்றன என்பது உண்மையானால் கொடுக்கல் வாங்கல் என்கிற தத்துவம் என் வாழ்க்கையை ஒரு தினுசாகச் சமைத்திருக்க வேண்டும். பணத்தைப் பற்றிய சகல விஷயங்களையும் அறிந்து கொண்டு செயலாற்ற எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது நான் அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
வேதாந்திகள் சொல்லுகிறார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொண்டுவிட்டால், அந்த விஷயத்தை ஜயித்து விட்ட மாதிரித்தான் என்று. எனக்குப் பணத்தைப் பற்றிச் சகல விஷயங்களையும் அறிந்து கொள்ள என் இள வயதிலேயே வசதிகள் ஏற்பட்டன என்பது உண்மைதான் என்றாலும் நான் பணத்தை ஜயித்து விடவுமில்லை. பணம் இல்லாமையை ஜயித்து விடவுமில்லை. என் மாமாவின் காரியங்களால் எனக்கு ஏற்பட்டதெல்லாம் பணத்திடம் ஒரு அலக்ஷியம்தான். பணம் என்பது இத்தகைய சக்திகள் உள்ளதா? இதன் சக்திகளுக்கு நாம் அடிமைப்பட்டு விடா திருப்பது அவசியம் என்பதுதான் நான் என் விடமிருந்து கற்றுக் கொண்ட உண்மை. அது நல்ல படிப்பினை அல்ல என்று எப்படி யார் சொல்ல முடியும்!
என் மாமாவே பிற்காலத்தில், எனக்குக் குடியும் குடித்தனமும் ஏற்பட்டு, பட்டணத்தில் நான் பணத்துக்கு அல்லல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு தரம் வந்து, என்னுடன் நாலைந்து நாட்கள் தங்கினார். “இப்படி இருக்கிறாயே, ராஜா, கெட்டிக்காரத்தனமாக, செட்டுங் சுட்டுமாக இருந்து பணத்தை ஆளத் தெரியவேண்டாமா?”என்று கேட்டார்.
அப்போது நான் சொன்னேன், “மாமா, கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்கள் நீங்களே. பணம் உங்களை ஆளுகிறதா, நீங்கள் பணத்தை ஆளுகிறீர்களா?”என்று.
மாமா- சிறிது நேரம் யோசித்தார். “கெட்டிக்காரத்தனமான பேச்சு தான்”என்றவர், “கெட்டிக்காரத்தனம் மட்டும் போதாது வாழ்க்கையைச் சரிவர நடத்துவதற்குப் பணமும் வேண்டும். பணம் இல்லாது வாழ்கிற வாழ்க்கையைச் சரிக்கட்ட எந்தக் கெட்டிக்காரத்தனமும் போதாது, போதாது”என்றார்.
எனக்கும் அது தெரிந்தது. அப்போதும் தெரிந்தது, இப்போதும் தெரிகிறது. ஆனால் பணத்துக்கு அடிமைப் பட்டுக் கிடப்பதைவிட, பணம் இல்லாமைக்கு அடிமைப் பட்டுக் கிடப்பது நல்லது என்று எனக்குத் தோன்றியது. நான் என்ன செய்ய?
மாமா அந்தத் தடவை வந்தவாசியிலிருந்து பட்டணத்துக்கு வந்தது கூட ஏதோ கொடுக்கல் வாங்கல் கணக்குகளை நேர் செய்யத்தான் என்பது ஞாபகம் வருகிறது எனக்கு. அவர் கையில் ஒரு விசேஷம் இருந்தது என்று எல்லோரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு காரியத்துக்கென்று ஒருவருக்குப் பணம் கொடுத்தாரானால் பணத்தை வாங்கியவருக்கு அது அந்தக் காரியத்துக்கு உபயோகப்படாது. உபயோகப்பட்டாலும் காரியம் பலிக்காது. ஆனால், கடன் கொடுத்த மாமாவுக்கு அது வட்டியும் முதலுமாக, ஒன்றுக் கிரண்டாக, உரிய காலத்தில் திரும்பி விடும். இப்படி ஒரு அதிர்ஷ்டமுள்ள கை, என் மாமாவினுடையது.
நாள் தவறாமல், பைசா விடாமல், மாமா கணக்கு எழுதுவார். மணி மணியான எழுத்துக்களில், நான் பிறந்த வருஷத்தில் வாங்கிய ஒரு பவுண்டன் பேனாவால், எனக்குப் பன்னிரண்டு வயதாகும் போதும் கணக்கு எழுதினார். எனக்கு இருபத்தி நாலு வயதாகும் போதும் கணக்குகளை அதே பேனாவால் தான் எழுதிக் கொண்டிருந்தார். பட்டணத்தில் அவர் என்னைத் தேடி வந்து என் வீட்டில் நாலு நாள் இருந்த போதும், அதே பேனாவினால் தான் கணக்கு எழுதினார். எனக்கு அப்போது வயது முப்பத்திரண்டு. நாலே முக்கால் ரூபாய்க்கு ஒரு பேனாவை விலைக்கு வாங்கி ஒரு ஆயுள் பூராவும் வைத்துக் கொள்வதென்பது எல்லோருக்கும் கூடிவருகிற காரியமல்ல. என்னிடம் பதினெட்டு மாதங்களுக்கு அதிகமாக ஒரு பேனாவும் நிற்பதில்லை, தொலைந்து போய் விடும். இதைப் பற்றி யோசிக்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. மாமாவின் பவுண்டன் பேனா கைபட்டுப் பட்டு உடலுக்குள் மசி தெரிகிற அளவுக்குத் தேய்ந்திருந்தது. நிப்பு முன்னைக்கிப் போது இரட்டைப் பங்கு பட்டையடித்தது. ஆனால், அந்தப் பேனாவை விடாமல் வைத்திருந்தார் மாமா.
“இந்தப் பேனாவை எனக்குக் கொடுத்து விடேன் மாமா! அப்படியாவது உனக்குள்ள பண அக்கறை எனக்கு வந்துவிடுமா. பார்க்கிறேன்”என்றேன் நான் ஒருநாள்.
“இந்தப் பேனாவையா? எனக்குச் சம்மதம்தான். உனக்குக் கொடுத்து விடுகிறேன்”என்றார் மாமா. தர மாட்டார் என்று எனக்குத் தெரியும். மேலே என்ன சொல்லப் போகிறார் என்று கவனித்தேன். “இவ்வளவு நாளாக என்னிடம் இருந்து விட்ட பேனாவைக் கொடுத்து விட்டேனானால், அம்மாமி என்னைக் கோபித்துக் கொள்ளுவாளேடா, ராஜா”என்றார் மாமா.
உண்மைதான். அம்மாமி கோபித்துக் கொள்ளுவாள் தான். அம்மாமிக்கு மாமா மட்டுமல்ல, அந்தப் பவுண்டன் பேனாவும் கூடப் பயந்துதான் வாழ்க்கையை நடத்தி நீடித்து வந்து கொண்டிருந்தது என்பது உண்மைதானே? மாமாவும் அம்மாமியும் இப்படி ஒருவர் மேல் ஒருவர் பாரத்தைப் போட்டு விட்டு தர்மமான முறையிலே சேகரித்து வந்தார்கள், ஆரம்ப நாட்களிலிருந்தே.
கொடுத்து வாங்குவதற்கு மாதச் சம்பளம் தொண்ணூத்தி மூணே முக்கால் ரூபாயில் எப்படி அவர்களிடம் பணம் இருந்தது என்று நான் அப்போது யோசிக்காமல் இல்லை. ஆனால் மர்மம் பல வருஷங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. என் மாமாவுக்கு மாமா ஒருவர். ராமலிங்கம் என்று பெயர். அவர் நல்ல பணக்காரர். சொத்து சுதந்திரங்கள் ஏராளமாக இருந்ததுடன் திருப்தியடைந்து விடாமல், அந்த மனிதர், ஏலச்சீட்டு, மாதச் சீட்டு என்றெல்லாம் ஏதேதோ செய்து பணம் புரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பணம் புரட்டுவதென்பது மிகவும் சிரமமான காரியம்தான். எனினும் மாமா அவரிடம் ஒரு மாதம் ஏலச் சீட்டுக்குப் பணம் கட்டி விட்டு, மறு மாதமே ஏலப் பணத்தை வாங்கித் தன் கொடுக்கல் வாங்கல்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அரை வட்டிக்கு வாங்கி, இங்கு இரண்டு வட்டிக்கு விடுவதில், முதலில்லாத லாபம் ஒன்றுக் கிரண்டாகக் கிடைத்து வந்தது.
எனக்கு ராமலிங்கத்தையும் அவரைச் சேர்ந்தவர்களையும் நன்றாகவே நினைவிருக்கிறது. கொள்ளைப் பணக்காரராக இருந்த அவர் நாளடைவில் க்ஷணித்துப் போய், கடனும் விஷம் போல் ஏறி, மஞ்சள் கடிதாசி நீட்டுகிற நிலையில் இறந்து போனார். அவர் சாகும் போது என் மாமாவுக்கு மட்டுமே அவர் ஏழாயிரம் ரூபாய் வரையில் தர வேண்டும் என்று மாமா கணக்குச் சொன்னார். அந்த ஏழாயிரத்துக்கு ஈடாகப் பட்டணத்தில் பாதையில்லாத ஒரு பொட்டைப் பிராந்தியத்தை மாமா ஏலத்தில் எடுத்தார் ஹைகோர்ட்டில். மொத்தம் ஒன்பதினாயிரம் செலவில் மாமா கைக்கு வந்த அந்தச் சொத்தை விற்க ஏற்பாடு செய்யும் போதுதான் பட்டணத்தில் என் வீட்டில் நாலு நாள் தங்கியது.
“உன் மாமாவுக்கு ஆனமாதிரி அதே வழியிலே நீயும் போக நேர்ந்து விட்டால் என்ன மாமா பண்ணுவது?”என்று
கேட்டேன் நான்.
“எப்படியடா ஆகும் அந்த மாதிரி?”என்றார் மாமா. “நான் கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்பதற்காக என்னை என்னபாடு படுத்தியிருக்கிறார் மாமா? நான் அப்படியெல்லாம் யாரையாவது அவஸ்தை பண்ணியது உண்டா? நீயே சொல்லு? நியாயமான தருமமான முறையில் நமக்குள்ள பணத்தை நாம் அடைய முற்படுவதில் தவறில்லை. கடவுளே உன் பக்கம் இருப்பார். அநியாயமாக அதருமமாகப் பேராசைப் பட்டால்தான் ஆபத்து வரும்”என்று தன் தத்துவத்தை விளக்கினார் மாமா.
கடவுள் என்பவர் தருமத்துக்கும் கட்டுப்பட்டவர்; அதருமத்துக்கும் கட்டுப்பட்டவர். நியாயத்துக்கும் கட்டுப் பட்டவர். அநியாயத்துக்கும் கட்டுப்பட்டவர். மனிதன் கடவுளை மட்டுமல்ல, தருமத்தையும் அதருமத்தையும் நியாயத்தையும் அநியாயத்தையும் தனக்காகவே உற்பத்தி செய்து கொள்கிறான். இதை வாய்விட்டு நான் என் மாமாவிடம் சொல்லவில்லை. சொன்னால் என்ன லாபம்? அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். இவ்வளவு எளிய தெளிவான விஷயத்தையும் ஏற்றுக் கொண்டாரானால் அவருடைய பணப் பிரபஞ்சத்தின் அடிப்படையே தகர்ந்துவிடுமே! அவர் மாமிக்கு அதற்குப் பிறகு என்ன பதில் எப்படிச் சொல்வது?
மாமா சமயம் ஒன்று வாய்த்தது என்று எனக்குச் சொல்ல வேண்டியதைத் தொடர்ந்து சொன்னார். “நீ கூடத் தான் ராஜா எனக்கு ஒரு ஐநூறு ரூபாய் வரையில் தர வேண்டும். நான் அதைப்பற்றி என்ன செய்கிறேன்? எப்பாவாவது ஒரு தரம் ஞாபகப் படுத்துகிறேனா? நோட்டு எழுதித் தா என்று கேட்கிறேனா? நீயே சொல்லு”
எந்த ஐந்நூறை மாமா சொன்னார் என்று எனக்குத் தெரியும் நான் என் மாமா வீட்டில் இரண்டாவது கிளாஸ் முதல் மூன்றாவது பாரம் வரையில் படித்தேன். பிறகு எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்தேன். பிறகு கோவையில் போய் அவருடன் இருந்து கொண்டு இண்டர் மீடியட் வகுப்பு இரண்டு வருஷமும் படித்தேன். இவ்வளவு வருஷங்களிலும் அவர் எனக்காகச் செலவு செய்தது என்று பணமாக நானூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்க்குக் கணக்கெழுதி என்னிடம் கொடுத்து என் அப்பாவிடம் கொடுத்து பணம் வாங்கித் தரச் சொன்னார். பொய்க் கணக்கு நோட்டுகளிலிருந்து எடுத்த சரியான செலவுக் கணக்கு ஒன்றுமில்லை. அது மாமாவின் கணக்கு நோட்டுகளிலிருந்து எடுத்த சரியான செலவுக் கணக்குத்தான். இதில் சாப்பாடு போட்ட கணக்கெல்லாம் வரவில்லை. எனக்குச் செலவு செய்ததை மட்டுமே கணக்கெடுத்துத் தந்திருந்தார் மாமா. நியாயமான தருமமான பட்டியல்தான் அது. ஆனால் எனக்கு ஞாபகம் இருக்கிறது – அப்பா இந்த பணத்தைத் தர மறுத்து விட்டார். “யாருக்காக செலவழித்தான். மருமானுக்குச் செலவழித்து விட்டு பில் போட்டுத் தருகிறானே பில்? இல்லாதவன் என்றால் தரவேண்டியது நியாயந்தான். கொடுக்கப் போவதில்லை நான்”என்று சொல்லிவிட்டார் அப்பா கண்டிப்பாக.
“நான் சம்பாதித்துத் தந்து விடுகிறேன் மாமா”என்றேன் ஒரு தரம் என் மாமாவிடம். இப்போது கூட ஞாபகம் இருக்கிறது. மாமி சொன்னாள்; “நீ சம்பாதிக்கப் போவதுமில்லை, திருப்பித் தரப் போவதுமில்லை. எதற்காக வீண்பேச்சு? உன் மாமா செலவழித்த பணத்திலே இது வீண் போனதுதான். போகட்டும். கடவுள் புண்ணியத்திலே இது ஒண்ணும் பிரமாதமான விஷயம் இல்லையே..”என்றாள் மாமி. மாமா ஒன்றும் பதில் சொல்லவில்லை. நான் சம்பாதிக்க மாட்டேன், தரமாட்டேன் என்று மாமி சொன்ன போது, எனக்கு ரோஷம் வந்தது. ஆனால், இப்பொழுது முப்பது வருஷங்களுக்குப் பிறகு, சிந்தித்துப் பார்க்கிறபோது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்படித் தெரிந்தது என் மாமிக்கு, பண விஷயங்களில் என் பலஹீனம்? நான் இப்படித்தான் இருப்பேன் என்று அவள் அப்போதே நிதானப் படுத்திக் கொண்டிருந்தாளே, அது எப்படி? எதைக் கொண்டு? இப்படியெல்லாம் யோசித்து யோசித்து நான் மனத்தைக் குழப்பிக்கொள்கிறேனே தவிர, விஷயம் புரிகிற மாதிரியில்லை.
மாமி மாதிரியே பணத்தில் கெட்டிக்காரியாக, ஒரு செட்டுங்கட்டுமாகக் குடும்பம் நடத்துகிறவளாக, பெண்மணி எனக்கு மனைவியாக வாய்த்திருந்தால்…? என்று நான் என்னையே கேட்டுக் கொள்ளுகிறேன். பதில் சொல்ல முடியாத கேள்விதான் இது.
அந்தக் காலத்தில் என் மாமாவுக்கு நான் பட்ட கடனைத் தலையைச் சுற்றித் திருப்பி எறியாமல் இருந்தது. குற்றம்தான். நான் இப்போது “தொட்டதெல்லாம் துலங்க மாட்டேன்”என்கிறது என்று என் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு. என் மனைவி மட்டுமல்ல, மாமாவிடம் கடன் வாங்கிப் பட்டுப் போன இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர் வந்து என்னுடன் இதுபற்றி இதேமாதிரி அபிப்பிராயம் சொல்லிப் போவதுண்டு. இந்த வாலிபர்களில் ஒருவர், என் மாமாவுக்கு மாமா ராமலிங்கத்தின் பிள்ளை. அவன் பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் போது அதன் அப்பா ஏராளமான கடனை வைத்துவிட்டு மனம் முரிந்து இறந்து போனார். கடனுக்கும் இருந்த சொத்துக்கும் சரியாகப் போய்விட்டது என்று கைகழுவி விட்டு, சாமிநாதன் பி.ஏ. படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு, உத்தியோகத்திற்குப் போய்விட்டான். அவன் சொத்தைச் சேர்த்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த என் மாமா அவனுக்கு சிறு விஷயங்களிலாவது உதவி செய்திருக்கலாம். ஒரு தரம் அவன் உதவி நாடிக் கேட்டதுண்டு என்றுகூட எனக்குத் தெரியும் ஆனால் மாமா, உதவி செய்ய இஷ்டப் பட்டிருந்தாலும், அம்மாமி அனுமதித்திருக்க மாட்டாள்.
இன்னொரு பையன் சொன்னேனே அவன் பெயர் ராமசாமி. அவன் என் மாமாவினுடைய மைத்துனன் பிள்ளை. அதாவது என் அம்மாமியினுடைய தம்பி பிள்ளை. மாமா அம்மாமியின் பண மோகத்தால், மாமா குடும்பத்தார் மட்டும்தான் கஷ்டப்பட்டார்கள் என்பதில்லை. அம்மாமி குடும்பத்தார் பலரும் கஷ்டத்துக்குள்ளானார்கள். அதே நிர்வாகத்தைச் சமாளிக்க மாட்டாமல் அக்கா தானே என்று போல அவள் தம்பியும் பல சந்தர்ப்பங்களிலும் குடும்ப மாமியிடமும் நோட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கி வந்தான். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது நாலாயிரம் ஐயாயிரம் என்றாகிவிட்டது. மைத்துனனின் நிலங்களில் ஒரு பகுதியை இதற்கு ஈடாக எழுதி வாங்கிக் கொண்டார் என் மாமா. இன்னும் ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் நாளடைவில் கொடுத்துவிட்டு, அதுவும் சிறுகச் சிறுக நூறும் இருநூறுமாகக் கொடுத்துவிட்டு, நிலங்களில் மற்றப் பகுதிகளையும் எழுதி வாங்கிக் கொண்டு விட்டார். நல்ல வேளையாக இதற்குள் ராமசாமி படித்துத் தேறி நல்லதோர் உத்தியோகத்தில் அமர்ந்து விட்டான். பிள்ளையை நம்பி அவன் தகப்பனாரும் பட்டணத்துக்கு அவன். வீட்டோடு வந்து விட்டார். அந்தப் பையனும் அடிக்கடி சொல்வான்; “வேங்கடாசலம் விடுகிற மூச்சுக் காற்றே விஷக்காற்று. அங்கு யாரும் அருகில் இருந்து தப்பமுடியாது”என்று.
பண விஷயங்களில் ஆசை பேராசை என்றில்லாமல் நிராசையையே இருபது முப்பது வருஷங்களாகப் பயின்று வந்திருக்கும் என்னால், என் மாமாவைப் பற்றி சிறிது அநுதாபத்துடனாவது சிந்தித்துப் பார்க்க முடிகிறது. மற்றவர்களால், அவரால் சிரமப்பட்டவர் களாதலால், அவரிடம் சிறிதும் அநுதாபம் காட்ட முடியவில்லையென்பதில் ஆச்சரியம் ஒன்று மில்லையே? ஆனால் அவர் அநுதாபத்தையோ அன்பையோ, எங்கள் பாராட்டுதல்களையோ எதிர்பார்த்து நிற்கவில்லை. முண்டித் துருத்திக் கொண்டிருக்கும் கற்கள்மேல் உருளும் ரோடு ரோலர் போல அவர் பணம் ஒன்றே குறியாகப் போய்க் கொண்டிருந்தார். கொடுக்கல் வாங்கல் என்பதே நியாயமில்லாதது, தருமமற்றது என்று அவர் மனத்தில் என்றுமே தோன்றியதில்லை. “அப்படியிருந்தால் எனக்கு. நான் கொடுத்த ஒன்பதினாயிரத்துக்கு தொண்ணூறு ஆயிரம் வருமா?”என்று அவரே கேட்பார்.
ஹைகோர்ட்டில் ஒன்பதினாயிரத்துக்கு ஏலம் எடுத்த அவர் மாமாவின் சொத்தை ஒரு வருஷத்திற்குள் தொண்ணூறாயிரத்துக்கு, அதாவது ஒன்றுக்குப் பத்தாக அவர் விற்று விட்டார்.



