ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்

2. மாமாவும் மருமானும்

மனிதனுடைய நினைவு என்பதிருக்கிறதே, அதைக் களஞ்சியமென்று சொல்வதா, கடல் என்று கொள்வதா? நெல்லைப் போட்டு வைத்திருந்து களஞ்சியத்திலிருந்து தேவையுற்றபோது எடுத்துக் கொள்கிற மாதிரித்தான், மனிதன் நினைவுகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு, அவசியப்பட அவசியப்பட வெளிக் கொணருகிறான். இந்தக் களஞ்சிய விஷயத்தில் ஒன்றுதான் குறை. எப்போதுமே எதுவுமே நாம் எதிர்பார்க்கிற வரிசையில் வெளிவராது. நாம் எதிர்பாராத ஒரு விதியைப் பின்பற்றித்தான் மனிதனுக்கு நினைவுகள் ஏற்படுகின்றன. ஒரு விஷயத்தை, ஒரு முகத்தை, ஒரு பெயரை, ஒரு அல்ப சமாசாரத்தை ஒரு சமயத்தில் நாம் விரும்பி மனத்துக்குக் கொணர முயலும்போது, அது குளிக்க இழுத்துக் கொண்டு போகும் நாய்க் குட்டியைப் போலப் பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு அசைய மறுத்துவிடும். வேண்டாதபோது அநாவசியமாகத் துருத்திக் குறுக்கிடும். இதெல்லாம் பற்றி யோசித்தால் நினைவுக் கடல் என்று சொல்வதுதான் பொருந்தும் என்று கூடத் தோன்றுகிறது. கடலின் அலைகள் ஒரு கணக்கிலும் அகப்படா. முத்துக் குளிப்பவன் கிளிஞ்சல்களைத் தவிர வேறு எதையுமே பல தடவைகள் வெளியே கொண்டு வர மாட்டான். திடீரென்று ஒரு பிடி கிளிஞ்சலில் ஒன்பது முத்துக்கள் சிதறி விழுவதும் உண்டு.

என் நினைவுகளை ஒழுங்குபடுத்திச் சொல்ல முயல்வது வியர்த்தமான காரியம் என்றே தோன்றுகிறது. ஒரு வரிசையாகத்தான் சொல்ல வேண்டும் என்று நான் முயன்றாலும், எனக்கு ஆதாரமான என் நினைவு அந்த வரிசைக்கு உட்பட மறுக்கும்போது நான் என்ன செய்ய? நினைவுகள் முண்டிக் கொண்டு வருகிற வரிசையிலேயே சொல்கிறேன். அதுவும் கவர்ச்சியாக இராது என்று யார் சொல்ல முடியும்?

என் மாமாவுக்கு என்னைத் தவிர இன்னும் ஒரு மருமானும் உண்டு. அவன் பெயர் கண்ணப்பன். என் அப்பா சர்க்கார் உத்தியோகஸ்தர்; இங்கிலீஷ் படித்தவர். அவன் அப்பா வெற்றிலை பாக்குக் கடைக்காரர். மண்டை மண்டையாகக் கையெழுத்துப் போடுவதைத் தவிர தமிழில் அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது, சொத்து சுதந்திரமும் இல்லாதவர். இவரைப் பற்றி அதிகமாகத் தான் கவலைப் பட்டால் தனக்கும் அந்த மாதிரி ஒரு கதி நேர்ந்து விடுமோ என்று பயம்போலும் என் மாமாவுக்கு. மாமா வேங்கடாசலமோ, மாமி ஜானகியோ எனக்குத் தெரிந்து அந்த குடும்பத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். ஏன்? உறவு முறையில் என் தகப்பனாரும், கண்ணப்பனின் தகப்பானரும் மாமாவைப் பற்றிய வரையில் ஒன்றுதான். என் தகப்பனார் என் மாமாவுக்கு அக்காள் புருஷன், கண்ணப்பனின் தகப்பனார் அவர் தங்கை புருஷன்.

என் மாமாவுக்குத் தங்கையிடமோ அக்காளிடமோ குறைந்த பிரியம் என்று சொல்ல அதிகப் பிரியம் முடியாது. இருவரிடமும் ஒரே மாதிரித்தான் பிரியமும் பிரியமில்லாமையும்.

இதில் ஜானகி மாமி இட்டதைத்தான் சட்டமாக மாமா ஏற்றுக் கொண்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. காரணமே இல்லைதான் இதற்கு. ஆனால் காரணம் உண்டோ இல்லையோ, உள்ளதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்? எனக்குத் தெரிந்த வரையில், என் அப்பா சர்க்கார் உத்தியோகத்திலிருந்தது ஒன்றுதான் எங்களிடம் மாமாவும் மாமியும் பிரியமாக இருந்ததற்குக் காரணம் என்று. இப்போது எண்ணிப் பார்க்கும் போதுகூட எனக்குக் தோன்றுகிறது. மாமாவும் சர்க்கார் உத்தியோகம் தேடிக் கொண்டிருந்தார் அப்போது.

சாதாரணமாக எல்லாருமே வாழ்க்கையை நடை முறை என்றும், லக்ஷ்யமென்றும் பிரித்துக் கொண்டு விடுகிறார்கள். தினசரி நடப்பு என்றும், தருமம் என்றும் பிரித்துக் கொண்டு விடுகிறார்கள். இந்தப் பிரிவினை இல்லா விட்டால் வாழ்க்கை சாத்தியமாவதே இல்லை போலும். லக்ஷ்யத்திலிருந்தும், தர்மம் என்று சொல்லப் படுவதிலிருந்தும் நடைமுறையைப் பிரித்து வைத்து அதற்கேற்ப நடந்துவிடுவது சௌகரியமாக இருந்தது; சுலபமாக இருந்தது. சிக்கலான பிரச்னைகளைக் கூட “நடக்க வேண்டியது இப்படித்தான். ஆனால், அது லக்ஷ்யம். நடக்கக் கூடியது இதுதான்” என்று சுலபமாக்கி நடந்து விடுகிறவர்கள் தான் வாழ்க்கையிலே வெற்றி பெறுகிறார்கள்.

என் தந்தை நல்ல உத்தியோகத்தில் இருந்தார். பணத்துக்கோ பதவிக்கோ பஞ்சமில்லை. நானே தான் அதைச் சொல்லுகிறேன் என்றாலும், எனக்குப் படிப்பும் நன்றாக வந்தது. அம்மாவும் சாப்பாட்டுக்கும் துணிக்கும் இருக்குமிடத்துக்கும் கஷ்டம் வராமல் சௌகரியமாக இருந்தாள். நான் ஒரே பிள்ளை. இருந்தும் எனக்குத் தான் மாமாவும் மாமியும் போட்டி போட்டுக் கொண்டு எல்லாம் செய்தார்களே தவிர, அந்த மருமானுக்கு எதுவும் செய்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணப்பனின் அப்பா ஜீவனம் வெற்றிலை பாக்குக் கடையின் உதவியால் ஓடிக் கொண்டிருக்கிறது. மாதத்தில் பத்து இருபது வருவாய் வந்தாலே சிரமம். என் சித்தி உடுக்கத் துணியில்லாமல், இருக்க ஒரு ஓட்டைக் குச்சு வீடு தவிர வேறு எதுவும் இல்லாமல், பாதி நாள் உண்ணப் போதிய உணவு இல்லாமல், இரண்டு வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, நாலு வருஷத்துக்கு ஒன்றைப் பறிகொடுத்துக் கொண்டு, கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். மீனாச்சி சித்திக்கும் கண்ணப்ப அண்ணனுக்கும் மாமா செய்வது நியாயம்தானா என்று நான் சிறுவனாக இருக்கும் போதே நினைத்துக் கொள்வேன். ஆனால் அதை வாய் விட்டுச் சொல்வதில் அசௌகரியங்கள் உண்டு என நான் எப்படியோ தெரிந்து கொண்டிருந்தேன். நடைமுறை, லக்ஷயம் என்கிற பிரிவினை சகவாஸ தோஷத்தால் என்னையும் ஆட் கொண்டு விட்டது போலும்.

ஏழைமை என்பது என்ன, ஒட்டுவாரொட்டியா? தன் தங்கை மகனேதான் என்றாலும், ஏழையானதனால் அவனைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு செய்தால், தங்களையே அமுக்கி விடுவான் என்று எண்ணினார்கள், அவன் தங்கள் மேலே பாரமாக ஏறி உட்கார்ந்து கொண்டு மாமாவும் அம்மாமியும். அப்படித்தானே தோன்றுகிறது இப்போது சிந்தித்துப் பார்க்கும் போது?

மனுஷ்யனாகவே சிருஷ்டித்துக் கொண்டதுதான் இந்த ஏழைமை என்கிற வியாதி. அதைக் கண்டு ஏன் மனிதன் இப்படிப் பயப்படுகிறான்? கிட்ட நெருங்கினால் ஒட்டிக் கொள்ளும் என்கிறது மாதிரி, ஒதுங்கி ஓடுகிறானே? ஏன்? தருமம், நீதி, நியதி என்பவையெல்லாம் அறிந்து படித்தவர்கள் கூட இப்படி நகர்ந்தால் வியாதி அதிகரிக்காமல் என்ன செய்யும்?

ஒரு தரம் நான் மன்னார்குடியில் இரண்டாம் வகுப்பில் பெஞ்சியின் மேல் நின்றுகொண்டிருந்த வருஷம் என் சின்னம்மா மீனாச்சியும் அவள் மூத்த பிள்ளை கண்ணப்பனும் அங்கு வந்தார்கள். கண்ணப்பனுடைய சிக்குப் பிடித்த தலையையும், ஒட்டுப் போட்ட சட்டையையும் பார்த்த எனக்கு என்னவோ போல இருந்தது: ஆனால் அவன் வேட்டி மடியை முறுக்கிக் கொண்டே “கஜன ஜீவனா”என்று உத்ஷாகமாக ஊதிக் கொண்டிருந்தது பிடித்திருந்தது. நானும் அதுமாதிரி ஊதிப் பார்த்தேன். அதே சமயம் வேட்டி மடியையும் பிடித்து முறுக்கினால்தான் ஊதவரும் என்றான் கண்ணப்பன். வேட்டி மடியைப் பிடித்து நன்றாகவே முறுக்கினேன். அப்படியும் எனக்கு ஊத வரவில்லை.

கண்ணப்பன் எனக்கு நாலு வருஷங்கள் மூத்தவன். ஆனாலும் நாலாங் கிளாஸ்தான் படித்துக் கொண்டிருந்தான். “அப்பா சம்பளங்கட்ட மாட்டேங்கறார்”என்பான் அவன்.

நானும், “நாலு வருஷத்தில் இரண்டு கிளாசுக்கு மேல் பாஸ் செய்வதில்லை”என்று அவனுக்கு ஆறுதலாகச் சத்தியம் செய்தேன்.

“ராஜா, அந்த வண்டி அசட்டோடு பேசாதேயடா! நீயும் அசடும் அழுக்குமாகிவிடுவாய்” என்றாள் மாமி.

ஆனால் மாமிக்குக் கோலியாடத் தெரியாது; பம்பரம் சுற்றத் தெரியாது; பலிங் சடுகுடுப் பாட்டுகள் தெரியாதே! இவ்வளவும் எனக்குக் கற்றுக் கொடுத்தவன் கண்ணப்பன். நான் கண்ணப்பனுடன் சேர்ந்து அசடானேனோ அழுக்கானேனோ எனக்குத் தெரியாது. யாருடனும் கலக்காமல் ஒருவனாகவே இருந்து மூலையில் உட்கார்ந்து கிடக்கிற பழக்கம் கண்ணப்பன் வந்ததோடு எனக்குப் போய்விட்டது. ஆறேழு மாதங்களில் நான் சுற்றுவட்டாரத்துப் பிள்ளைகளில் யாரையுமே அதுவரை சந்தித்தது கூடக் கிடையாது. வந்து ஆறேழு நாட்களுக்குள்ளாக அவர்கள் எல்லாரையுமே ஒரு பத்துப் பதினைந்து பேர்வழிகளை, கண்ணப்பன் தான் அறிந்து கொண்டது மட்டுமல்ல. எனக்கும் அறிமுகம் செய்து வைத்து விட்டான். அதற்குப் பிறகும் நான் அசடாகி விடவில்லையென்றுதான் எண்ணுகிறேன். ஆனால்; தினமும் வேட்டி சட்டையை அழுக்காக்கிக் கொண்டுதான் வீடு திரும்புவேன்.

“காலிலும் கையிலும் இருக்கிற அழுக்கை அலம்பி விட ஒரு கட்டி சோப் வேண்டும்”என்பாள் மாமி.

“என்னைச் சொல்றயே.. கண்ணப்பனுக்கு ரெண்டு கட்டி சோப் வேண்டுமே”என்பேன் நான்.

மாமிக்கு அந்தப் பேச்சுப் பிடிக்காது. கண்ணப்பன் பேச்சையே அவள் எடுக்க மாட்டாள். ஒருநாள் “கண்ணப்பன் இன்னும் இரண்டு நாளில் ஊருக்குப் போய் விட்டானானால் நீ மறுபடியும் கெட்டிக்காரனாகி விடுவாய்”என்றாள் மாமி. எவ்வாறு என்பது எனக்குத் தெரியவில்லை. அசடு கெட்டிக்காரனாக ஆவது அப்படியெல்லாம் சுலபமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், கண்ணப்பன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி என் கண்களைக் கலக்கிற்று. “சின்னம்மா போகட்டும். கண்ணப்பன் மட்டும் இங்கிருக்கட்டும் மாமி” என்று சொல்லிப் பார்த்தேன்.

“ரெண்டு பேருமே போகட்டும், சீக்கிரம் போகட்டும்”என்றாள் மாமி, பல்லைக் கடித்துக் கொண்டு.

“ஏன் மாமி அப்படிச் சொல்றே! கண்ணப்பன் நல்லவன் மாமி. பள்ளிக் கூடத்துச் சம்பளத்தை மட்டும் சரியாகக் கொடுத்தால் நன்றாகப் படிப்பான் மாமி”என்று சொல்லிப் பார்த்தேன்.

“உனக்குத் தெரியாத விஷயத்திலெல்லாம் நீ தலையிடாதே?”என்றாள் மாமி சற்றுக் கடுமையாகவே.

ஆமாம். உண்மைதான். எனக்கு அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லைதான். உலகத்தில் எதையோ வைத்து எதையோ மதிப்பிடுகிறார்கள். எதையோ இல்லாததை யெல்லாம் வைத்து முக்கியமானதையெல்லாம் மதிப்பிட்டு முடிவு கட்டி விடுகிறார்கள். ஏன், எப்படி, எதற்காக, என்றெல்லாம் என்னால் இன்னமும் கண்டு கொள்ளத்தான் முடியவில்லை. அன்று சிறு பையனாக இருந்தபோது மட்டும்தான் என்றில்லை, இப்போதும் கூட என்னால் பல விஷயங்களைத் தெளிவாகக் கண்டு அறிந்து கொள்ள முடியவில்லை. உலகிலே நடப்பதைக் காண்கிறேன். ஆனால் கண்டதற்குக் காரணங்கள், ஆதாரங்கள் அறிய முடியவில்லை. மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இது மனித சுபாவத்தின் அடிப்படை என்பதைத் தவிர எனக்கு வேறு ஒரு காரணமும் தோன்றவில்லை உலகில் நடக்கிற அநீதிகளுக்கெல்லாம்.

பணக்காரனிடம் பணம் சேருகிறது. ஏழையினிடம் படிப்படியாகப் பணம் குறைகிறது. கண்கூடாக இது தினமும் காண்கிற விஷயம்தான். பணக்காரனுக்கு உதவ, பாங்குகள் முதல், தனி மனிதர்கள் வரையில் எல்லோருமே தயாராக இருக்கிறார்கள். உறவினர்கள் போட்டி போட்டுக் கொண்டு, இந்த லாபமில்லாத உதவியை ஒரு ஏழை உறவினனுக்குச் செய்தால், அந்த ஏழை உறவினன் ஏழைமை நீங்கா  விட்டாலும், அன்புடனும் ஆதரவுடனும் ஒரு கவலை நீங்கி யிருக்கமாட்டானோ? உதவி தேவையாகிற இடத்திலே, உதவி தேவைப்படுகிற காலத்திலே கிடைக்கக் கூடாது என்பதுதான் ஈசுவர சிருஷ்டியின் நியதியா? உடையவர்கள் என்றும் உடையவர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காக மனிதன் தானாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறையோ இது! அப்படியும் நடந்து விடுவதில்லையே? உள்ளவன் ஒன்றும் இல்லாதவனாகப் போவதையும், உடனே அவனை உற்றாரும் உறவினரும் விட்டு நீங்குவதையும் நாம் சகஜமாக உலகிலே காண்கிறோம் அப்படியும் உள்ளவர்களுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ அறிவு ஏற்படுவதில்லையே, அது ஏன்?

சின்னம்மா ஒரு காரணமாகத்தான் அண்ணன் வீடு தேடி வந்திருந்தாள் என்று கண்ணப்பன் கிளம்புகிற அன்றுதான் எனக்குத் தெரிந்தது. அவள் புருஷனுக்குக் காச நோய் கண்டிருந்தது. அவள் புருஷனுக்குக் கவனிக்க முடியவில்லை. மாதா மாதம் வந்து கொண்டிருந்த பத்திருபதிலும் மண் விழுந்துவிட்டதனால் நாலைந்து குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு சித்தி என்ன செய்வாள், பாவம்? புருஷனுக்கு வைத்தியம் செய்து, இன்னும் கொஞ்சம் முதல் போடவும் ஒரு இருநூறு ரூபாய் பணம் வேண்டும்; அண்ணன் கொடுக்க மாட்டானா என்று வந்திருந்தாள். இடுப்பில் சூம்பிய முகமும் பெருத்த வயிறுமாக ஒரு குழந்தையுடன் அவள் நின்ற காட்சியே பரிதாபமாக இருந்தது.

எனக்குப் பரிதாபமாக இருந்து என்ன லாபம்? அன்றும் என்னிடம் பணம் இல்லை. நாற்பது வருஷங்கள் கழித்து இன்றும் என்னிடம் பணம் இல்லைதான். சின்னம்மா மீனாச்சி இறந்து போய் எத்தனையோ வருஷங்களாகி விட்டன. அவள் இடுப்பில் வயதுக்கு மீறிய தொந்தியுடன் எச்சில் வழிய உட்கார்ந்திருந்த அந்தக் குழந்தையும் இந்தத் துயரம் நிறைந்த உலகிலே அதிக நாள் தங்கவில்லை; ஐந்தாவது வயது வருவதற்குள் அதன் வாழ்க்கையும் முடிந்து விட்டது. ஆனால், மீனாச்சிகளைப் போன்றவர்களுக்கும், அவள் குழந்தைகளைப் போன்றவர்களுக்கும், இன்னமும் உலகிலே குறைவில்லையே? இன்னமும் முடியவில்லையே என்று சில சமயம் நான் அவர்கள் துயரத்தையும் பணம் கொண்டு துடைக்க என்னால் நினைப்பதுண்டு. ஆனால் அதே சமயம், “என்ன அகம்பாவம் இது? அவர்கள் துயரத்தையெல்லாம் துடைக்க முன் வர நான் யார்? பணம்தான் துடைக்குமா?… சரி… துயரங்களைத் துடைப்பது யார்?”என்று சிந்தித்துக் கொள்வேன்; சமாதானமடைவேன். என் அல்ப காரியங்களில் மனத்தைச் செலுத்தி விடுவேன்.

என் மாமாவிடம் அப்போதும் பணம் இருந்தது. மேலும் பணம் சேர்ந்து கொண்டிருந்தது. தன் தங்கை கேட்ட பணம் இருநூறையும் கொடுக்க அவருக்கு மனமில்லாவிட்டாலும் ஐம்பது அறுபதாவது கொடுத்து அனுப்பலாம் என்று தான் அவர் எண்ணினார்.

“ஐம்பது அறுபது கொடுத்தால் போதாது அவருக்கு”என்று மரியாதையாகத் தான் கணவனின் தங்கையைப் பற்றிச் சொன்னாள் மாமி.

“அப்படிச் சொன்னால்.. இருநூறையும் கொடு என்கிறாயா?”என்றார் மாமா.

“அதெப்படி முடியும்? நம்மிடம் இருநூறு இருந்தால் தானே அதைப் பிற்காலத்தில் உபயோகப்பட ஐந்து வருஷத்தில் நானூறாக்கலாம்?”

“பின்னே, என்ன சொல்லுகிறாய்?”

“பத்து ரூபாய் கொடுத்தனுப்புங்கோ. என்னை வந்து புத்தி கேக்கறேளே. கொட்டிக்கிடக்கு என்று பெண்டாட்டியைக் கையாலாகாதவன் இங்கு அனுப்பினானாம்! இன்னொரு கைலாகாதவன் என்னை வந்து யோசனை கேட்கிறானாம்!”என்றாள் மாமி கம்பீரமாக.

இந்த வார்த்தைகள் பல வருஷங்களுக்குப் பிறகு எனக்கு இப்போது ஞாபகம் வருகின்றன. என் மாமியின் அந்தக் கம்பீரமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு அப்போது வயது போத வில்லை. நாளடைவில்தான் நான் அதை அறிந்து கொண்டேன். “பிற்காலம்”என்று சொல்லும்படியானதற் கெல்லாம் அஸ்திவாரமாக அமைந்தவை அந்த வார்த்தைகள் என்பதை நான் பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போதே மாமாவும் மாமியும் தங்கள் வாழ்க்கை லக்ஷயத்தைத் தெளிவு செய்து கொண்டு விட்டார்கள். அதன்படி நடக்க அவர்கள் இனித் தயங்க மாட்டார்கள்.

மாமா ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு போய்த் தன் தங்கையையும் மருமகனையும் ரெயிலேற்றி விட்டு வந்தார். மன்னார்குடியிலிருந்து சிதம்பரத்துக்கு ஒன்றரை டிக்கட் வாங்கிக் கொடுத்தார்.

‘எத்தனை கொடுத்தேள்” என்று மாமாவைக் கேட்டாள் மாமி.

“டிக்கட் வாங்கிக் கொடுத்தேன். பையன் கையில் வெள்ளிப்பணமாக ஒரு ரூபா கொடுத்தேன்”என்றார் மாமா… சபாஷை எதிர்பார்க்கும் குரலில்.

ஆனால் மாமி “சபாஷ்”சொல்லவில்லை; அதற்கு அவசியம் இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *