
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
7. அதிருஷ்ட விஷயம்
என் அண்ணன் கண்ணப்பனைப் பற்றிச் சொன்னது போதாது; மேலும் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவனைப் பற்றி எனக்கு ஞாபகம் அதிகம் இல்லை, நான் ஒருவிதத்தில் என் அண்ணாத்தையாகிய அவனைச் சந்தித்ததே நாலைந்து தடவைகளில்தான். ஞாபகம் அதிகமில்லாத காரணத்தால் அவன் நினைவுகள் என் சிந்தனையைத் தூண்டும் சக்தி அதிகம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்று எண்ணுகிறேன்.
மன்னார்குடிக்கு அவனும் அவன் அம்மாவும் வந்து விட்டு, மாமாவிடம் பணம் கேட்டு ஏமாந்து போன சங்கதியை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அப்போதே அவன் அப்பாவுக்கு ஏதோ வியாதி. அவருக்கு ஆஸ்பத்திரிச் செலவு செய்யத்தான் தன் அண்ணனிடம் பணம் கேட்டுக் கொண்டு வந்திருந்தாள், சின்னம்மா. மாமா பணம் தரவில்லை.
“தந்திருந்தாலும் வேறு என்ன ஆகியிருக்கப் போகிறதாம்?”என்று மாமி இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள், திருவாரூரில் இருக்கும் போது சொன்னதாக எண்ணு கிறேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; அன்று கண்ணப்பன் தந்தை இறந்து விட்டதாகத் தந்தி வந்தது. மாமா வேங்கடாசலம் போய் விட்டு வந்தாரா இல்லையா என்று மட்டும் எனக்கு ஞாபகம் இல்லை.
நடக்காததையும் நடந்ததாக நினைவுபடுத்திக் கொண்டு சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை. நடந்ததை மட்டும், நடந்ததில் நினைவு இருக்கிறவரையில் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிற எனக்கு, இது ஒரு பெரிய இடையூறாகத்தான் இருக்கிறது. பல விஷயங்களைப் பற்றி நான் அவ்வப்போது அந்தந்தக் காலங்களில் விசாரித்துக் கொள்ளாமலே இருந்துவிட்டேன். விசாரித்த சில விஷயங் களிலும் கூட இப்போதோ அப்போதோ உள்ள கவனக் குறைவினால் பல என் நினைவிலிருந்து நழுவி விட்டன. எஞ்சியுள்ளவற்றை வைத்துக் கொண்டு ஒரு பூரணமான உருவத்தை சித்தரித்துக் கொள்வதென்பது சிரமமான காரியமாகத்தான் இருக்கிறது.
ஆனால், என் மாமியைக் கேட்டால், என்ன சொல்லுவாள். அந்தக் கண்ணப்பனை ஞாபகப்படுத்திக் கொண்டு என்ன ஆகவேண்டும்..? அவனை நினைத்தாலே நினைத்த அன்றைக்கு உண்ண உணவு கூட கிடைக்காதே என்பாள். ஆரம்ப முதலே அவனை அவளுக்கு கட்டோடு பிடிக்கவில்லை என்றுதான் நான் நினைத்தேன். இதற்குக் காரணம் சொல்லுகிற மாதிரி ஒரு தரம் என் அப்பாவைப் பெற்ற பாட்டி சொன்னாள்; “உன் நல்ல பாட்டியும் அவளுடைய இரண்டாவது பெண்ணுமாகச் சேர்ந்து கொண்டு உன் மாமி கலியாணமாகி வீட்டுக்கு வந்தபோது அவளை இல்லாத பாடும் படுத்தினார்கள். இப்போது அவள் என்று சொன்னாள் பாட்டி. உண்மையாகவும் இருக்கலாம். அதற்குப் பழி வாங்கிக் கொள்கிறாள். இதில் என்ன தப்பு?”கண்ணப்பனை மாமி வெறுத்ததற்கு வேறு எதுவும் காரணம் கண்டு சொல்லத் தெரியவில்லை எனக்கு என்று ஒப்புக் கொள்கிறேன்.
போகட்டும். காரணம் என்னவானால் என்ன? கண்ணப்பன் விஷயத்தில் இருபது வருஷங்களில் நடந்த காரியங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாகவே சொல்லி விடுகிறேனே.
அப்போது எனக்கு என்ன வயது என்று கூட ஞாபகம் இல்லை. ஒரு சமயம் நான் கண்ணப்பனைப் பார்த்த போது, அவன் ஒரு வீட்டுத் திண்ணையில் ஒரு காக்கையைப் பிடித்துக் கட்டிப் போட்டிருந்தான். மிகவும் சாமர்த்தியமான செயலாகப்பட்டது அது என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிலிருந்து எனக்கு அப்போது ஒன்பது பத்து வயதுக்குள் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சின்னம்மா உள்ளேயிருந்து கொண்டே “விட்டு விட்டா, அதை பாவம்!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். வேட்டி மடியை உருட்டி விட்டுக் கொண்டு அலக்ஷ்யமாக “சுஜன ஜீவனா…”என்று சீட்டியடித்துக் கொண்டு ஆனந்தமாக நின்று கொண்டிருந்தான் கண்ணப்பன். தெருச் சிறுவர்கள் எல்லாருமே வந்து அங்கு கூடிச் செய்த ஆரவாரம் இன்னமும் என் காதில் ஒலிப்பது போல இருக்கிறது. அதற்குப் பிறகு நடந்தது எதுவும் ஞாபகமில்லை. காக்காய் என்ன ஆயிற்று? அது உயிருடன் போய்விட்டதா? என்ன? என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தாலும் ஞாபகம் வரவில்லை.
நான் மாமா வீட்டை விட்டுப் போய் தஞ்சாவூர் ஹைஸ்கூலில் அப்பா வீட்டிலிருந்து கொண்டு ஐந்தாவது பாரமோ ஆறாவது பாரமோ படித்துக் கொண்டிருந்த நாட்களில் சில மாதங்கள் கண்ணப்பன் மாமா வேங்கடாசலத்தின் வீட்டில் தங்கியிருந்ததாகக் கேள்விப்பட்டதுண்டு. ஒரு சமயம், அப்போது மாமா மாயவரத்திலிருந்தார் என்று நினைப்பு. நான் மாயவரம் போன போது கண்ணப்பன் நெட்டைப் பனைமரம் மாதிரி வளர்ந்து ஒரு சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு சைக்கிள் விடக் கற்றுக் கொண்டு கீழே புழுதியில் விழுந்து புரண்டது ஞாபகம் இருக்கிறது. நான் அந்தச் சமயம், மாமா வீட்டில் தங்கியிருந்த நாலு மணி நேரமும் மாமி கண்ணப்பன் புராணத்தைத்தான் என்னிடம் பாடிக் கொண்டிருந்தாள் என்றும் நினைவு வருகிறது.
அவன் அதிக நாள் மாமா வீட்டிலே தங்கவில்லை. சொல்லிக் கொள்ளாமல், மாமி செய்த கொடுமைகளைத் தாங்காமல் ஓடிவிட்டான். எங்கே போனானோ, யாருக்குத் தெரியும்? மாமி தன் மருமானுக்கு இழைத்த கொடுமையினால்தான் அவளுக்கு வருஷத்துக்கொரு குறைப் பிரசவம் ஆயிற்றென்றும், வியாதி படுத்திற்றென்றும், அவள் தேறவே மாட்டாள் என்றும், பணம் இருந்தால் என்ன, குலத்தை வளர்க்க ஒரு பிள்ளை வேண்டாமா? என்றும் பலர் பலவிதமாகச் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் கண்ணப்பன் விஷயத்தில் தாங்கள் எதுவும் தப்புச் செய்ததாக மாமாவோ மாமியோ எண்ணியதாகக் கூட அப்போதும் சரி, பிறகும் சரி எனக்குத் தெரியவில்லை.
சாதாரணமாகத் தவறு எனக்குத் தெரியாது என்று சொல்வதுதான் உலக வழக்கம். ஆனால் தவறு எது, தவறு அல்லாதது எது என்று, எந்த உரைகல்லைக் கொண்டு யாருடைய காரியத்தை யார் காண்பது? இந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க, யோசிக்க, முடிவு காணக் கூடாத விஷய மாகத்தான் இருக்கிறது. நல்லது செய்பவர்கள் மட்டும்தான் நலம் பெறுகிறார்கள் உலகிலே என்று அப்படி ஒன்றும் சுலபமாகச் சொல்லி சாதித்துவிட முடியாது. நம் கண்ணெதிரேயே தப்பு செய்கிறவர்களை அப்படி ஒன்றும் கடவுள் தண்டித்து விட்டதில்லை. தெய்வம் நின்று கேட்கும் சொல்லித் தப்பித்துக் கொள்கிறோம். தவறு செய்துவிட்டுத் தன் வாழ்நாளில் அதற்குரிய பலனை அனுபவிக்காததற்கு ஒரு காரணம் சொல்வதற்காக, அடுத்த ஜன்மத்தில் அனுபவிப்பான் என்று சொல்லி ஆனந்தப்படும் உலகம் இது. கையாலாகாத்தனம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், நாம் என்னதான் செய்யக்கூடும்? உலகில் நிகழ்கிற தவறுகளுக்கெல்லாம் காரணம் தேடுவதென்றால், அதற்குப் பிறகு யாருக்கும் வேறு எவ்வித அலுவலையும் கவனிக்கப் போதிய அவகாசமே அகப்படாது என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித சுபாவத்திலே ஒரு பகுதிக்குப் பிறர் செய்கிற தவறுகளை எடுத்துச் சொல்லி ஆனந்தப்படுகிற ஒரு கர்வம் அதிகமாகவே இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கண்ணப்பன் தாயையும் வீட்டையும் துறந்து விட்டு ஓடிப்போனது என்னமோ உண்மைதான். மாமிதான் அவனைத் துரத்தி விட்டாள். கொடுமைக்காரி என்று எத்தனை சந்தர்ப்பங்களில் எத்தனை பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கப் புகுந்தால் ஒருநாள் பூராவுமே வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கண்ணப்பனிடம் உண்மையில் இல்லாத ஒரு அநுதாபத்துடன் என்னுடன் அப்போதும் பேசியிருக்கிறார்கள் இப்போதும் பேசுகிறார்கள். ஆனால், பேசிக் கொண்டேயிருப்பார்களே தவிர, இவர்களிலும் யாரும் யாருக்கும் உதவியதாகவும் எனக்குத் தெரியவில்லை. மாமாவும் மாமியும் செய்த குற்றத்தை எடுத்துக்காட்டி ஆனந்திப்பதிலே யுள்ள ஒரு ஈடுபாடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் இது பற்றி?
மாமாவோ மாமியோ “ஓடிப் போ”என்று சொல்லி அவனை விரட்டியிருக்க மாட்டார்கள் என்பதும் நிச்சயம். அவன் வீட்டிலிருந்த வரையில் அவனை ஏவுவதற்கு மாமிக்கு ஆயிரக்கணக்கான காரியங்கள் இருந்துகொண்டுதான் இருந்தன. சாப்பாடு சரியாகப் போட்டிருக்கமாட்டாள்; உண்மைதான். சோற்றைத் தின்னும்போதும், வாயால் பொறிந்துகொட்டி, நெஞ்சுக்குக்கீழ் இறங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள். மனசிருந்தால் என் மாமியால் எதையும் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. வேண்டாத இடத்தில் போய் மாட்டிக் கொண்டது அவன் பிசகுதானே? அம்மாவுடன், இருந்த குடிசையில் மரியாதை இருந்து கொண்டு, நடந்து ஓய்ந்திருந்த கடையைத் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தானானால், அவன் உருப்பட்டிருக்கலாம்.
ஆனால், இப்போது அவனுக்கு யோசனை சொல்லப் புகுந்த நான் எவ்வளவு வழிகளில், எப்படி எப்படியெல்லாம் உருப்பட்டு விட்டேன் அவன் வழிகளைச் சுட்டிக் காட்டிச் சொல்ல என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். இதுவும் மனித சுபாவத்தில் ஒரு சிறப்பு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கை வழிகளில் நேராகவோ தெம்பாகவோ நடக்காதவர்கள்தான். ஆனாலும், அவர்கள் பிறருக்கு வழிகாட்ட வந்துவிடுகிறார்கள், என்று எண்ணும் போது நகைப்புக் கிடமாகத்தான் தோன்றுகிறது. நகைப்புக்கிடம் என்றாலும், “இப்படிச் சிரிக்க வேண்டும்”என்று சிரித்துக் காட்டுகிறவர்களும், “அங்கிருந்து பார்த்துச் சிரிப்பது தவறு இப்படிப் பார்த்துச் சிரி…”என்று சொல்பவர்களும் நம்மிடையேயில்லாமல் இல்லை!
இந்திரனைக் கண்ட மூக்கரையன் கதையாகத்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்வேன் நான். ஆனால் எல்லோரும் இந்திரனையும் குபேரனையும் காணத்தான் விரும்புகிறார்கள். இந்த விருப்பம் கண்ணப்பனுக்கும் இல்லையா என்ன! இருந்ததினால்தான் அவன் அப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனான் என்று எனக்குத் தோன்றுகிறது. போனவன் உருண்டு புரண்டு எழுந்து எங்கெல்லாமோ எப்படியெல்லாமோ வேலை பார்த்து இருபது வருஷங்கள் கழித்து கணக்குப் பார்க்கும்போது ‘சைபர் ஒன்றுமில்லை’என்கிற நிலைக்குத் தான் வந்திருந்தான். அநுபவங்கள் இல்லையா இருந்தன, இருந்தன. அவற்றை அநுபவிக்க உண்மை உள்ளம் இல்லை. அநுபவித்ததைச் சொல்ல வாயில்லை. ஆனால் அவனும் வாழ்ந்து வாழ்ந்துதான் பெரியவனாகி விட்டான்.
என் மாமா வேங்கடாசலம் ஒன்பதினாயிரத்தைத் தொண்ணூறாயிரமாகப் பெருக்கிக் கொள்ள சென்னை வந்திருந்த சமயத்தில் நான், பல வருஷங்களுக்குப் பிறகு கண்ணப்பனைச் சென்னையில் சந்தித்தேன்.
“என்ன அண்ணாத்தையா? அடையாளமே தெரியலியே…?”என்றேன். அடையாளம் தெரியத்தான் இல்லை. ஒட்டுப்போட்ட அழுக்குச் சட்டையும், நாறிய சடையும், சிக்குப்பிடித்த தலையும், கரியும் எண்ணெயுமாக விளங்கிய வேஷ்டியுமாக அவனை அடையாளம் தெரியத் தான் இல்லை.
ஆனால், அவன் கை வழக்கம் போல அவன் வேட்டித் தலைப்பை முறுக்கி விட்டுக் கொண்டிருந்தது. வாய், “சுஜன ஜீவனா” என்று வழக்கம் போல ஊதிக் கொண்டு தான் இருந்தது.
“எப்படித் தெரியும்?”என்றான் கண்ணப்பன். “என்னடா பண்ணிக் கொண்டிருக்கே?”என்று கேட்டேன்.
“ஏதோ பண்றேன். கேட்காதேயேன்…”
“ஓடிப்போனவனுக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கலாமே என்றுதான் கேட்கிறேன். கஷ்டப்படாமல் சம்பாதிச்சு சாப்பிடுகிறயா?” என்று உலக வழக்கத்தின்படிக் கேட்டேன்.
“கஷ்டப்படுகிறேன். சாப்பிடாமல் இருக்கிறேன் பாதி நாள்” என்று சுருக்கமாகச் சொன்னான்.
“வீட்டுக்கு வா, இரண்டு நாள் இரு. அம்மா ஊரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளே போய்ப் பாரேன், சந்தோஷப்படுவாள்”என்றேன்.
“பிள்ளை இப்படி இருக்கிறானே என்று எந்த அம்மாவும் சந்தோஷப்படமாட்டாள். வரட்டுமா?” என்று திடீரென்று திரும்பிக் கூட்டத்தில் மறைந்து விட்டான்,
வீட்டுக்குப் போனதும் மாமாவிடம் முதல் காரியமாகக் கண்ணப்பனைப் பார்த்ததைத் தெரிவித்தேன். உடனேயே ஏன் தெரிவித்தோம் என்கிற எண்ணமும் வந்து விட்டது. “அந்த துரதிருஷ்டத்தைப் பற்றி நல்லவேளையில் பேச்செடுக்காதே”என்றார் மாமா.
அவருக்கு எந்த வேளையும் நல்ல வேளைதான். பணம் வருகிற வேளையெல்லாம் ஒரு கணக்கின்படிப் பார்த்தால் நல்ல வேளைதானே? என் முக பாவத்தைப் பார்த்ததும் மாமா சொன்னார்; “அவன் மைலாப்பூரில் தான் இருக்கிறான். ஒரு ஹோட்டலில் மேசை துடைப்பவனாக இருக்கிறான் என்று எனக்குத் தெரியும்”என்றார்.
அவர் கண்களிலும் அவன் பட்டிருந்தான் போலும். ஏன் அவர் அவனுக்கு இப்பவாவது உதவி செய்வதாகக் கூறவில்லை? தொண்ணூறாயிரமாகிக் கொண்டிருந்த ஒன்பதினாயிரத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆயிரமாவது கண்ணப்பனுடைய பணம்தான் என்று என் அப்பா… அடிக்கடி சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கண்ணப்பனுடைய வீட்டை விற்று வந்த இரண்டாயிரத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாக வாங்கித் தன் தங்கையை ஏமாத்தி விட்டார் மாமா என்று ஊரில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது விஷயமாக உண்மை எதையும் நிண்டி நிண்டிக் கண்டுபிடிக்க எனக்கு ஆர்வமே ஏற்படவில்லை.
“இரண்டாயிரம் ரூபாய் பெறுமான வீடுள்ளவர்கள் ஏன் சரியானபடி வைத்தியம் பார்த்திருக்கக்கூடாது? எதற்கெடுத்தாலும் அண்ணனையே ‘பணம் பணம்’என்று கேட்டு அவமானப்படுவானேன்?” என்று நான் அப்பாவை ஒரு நாள் கேட்டேன்.
“அண்ணன் நல்ல நிலமையிலிருப்பதால் வாங்கிக் கொள்ளலாமே என்கிற ஆசைதான் எந்த ஸ்திரீக்கும். வீட்டை விற்றுப் பணமாக்கிச் செலவு செய்தால். எத்தனை நாளைக்கு வரும்?”என்றார் அப்பா.
எனக்கு என்னவோ பிறருக்குச் சுலபமாகப் படுகிற பணம் பற்றிய விஷயங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. என் புத்தியிலே எங்கேயோ ஒரு இருட்டுப் புள்ளி இருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதையெல்லாம் சிந்தித்த படியே “மாமா, இப்பத்தான் நூறு ரூபாய் போட்டு அவனுக்கு ஒரு சின்னக் கடையாக வைத்துக் கொடேன்”என்றேன்.
ஏதோ சொல்ல வாயெடுத்தார் மாமா. ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவர் என்னைப் பார்த்த பார்வை அர்த்தம் நிறைந்ததாக இருந்தது. ஒரு மனிதனை உயர்த்தியும் ஒரு மனிதனைத் தாழ்த்தியும் விடுகிற சக்தி ஏதோ ஒன்று புரிந்துகொள்ள முடியாதது இருக்கிறது என்று எனக்குத் தோன்றிற்று. மனிதன் அதிருஷ்டம் என்கிறான். நல்லது – பொல்லாதது என்று சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்லுகிறான். வெறும் அதிருஷ்டம் என்கிற ஒரு அசட்டுத் தெய்வத்தின், ஒரு குருட்டுத்தனத்தின் தொண்ணூறாயிரமாகப் பெருகிற்று? கண்ணப்பன், மேசை துடைத்துக் கொண்டிருந்தான் ஹோட்டலில்?
அவனைத் தேடிப் பிடித்து, என் மாமாவுக்குக் கிடைத்த தொண்ணூறாயிரத்தில், தன் இரண்டாயிரத்துக்குரிய பங்கைக் கேட்கச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன் நான். இப்போது தெரிகிறது அது எப்படிப் பட்ட குருட்டு யோசனை என்று.



