
ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்
1. நல்ல பாட்டி
என் மாமா வேங்கடாசலத்தின் கதையைச் சொல்லுகிற சாக்கில் நான் என்னைப் பற்றியேதான் சொல்லப் போகிறேன். வாழ்க்கையிலே தோல்வி யுற்றவனுக்குத் தன்னைப் பற்றியே பேசிக் கொள்வதைப் போல வேறு இன்பமும் உண்டா? தன்னைப் பற்றியே பேசிக் கொள்வதற்குச் சாக்கு ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் சாக்கும் இருந்து விட்டால், நல்லதுதானே?
“இல்லானை இல்லாளும் வேண்டாள்”என்கிற பழைய வாக்கியத்துக்கு உதாரணம் நான். இந்த வாக்கியத்துக்கு எப்படிப்பட்ட அர்த்தங்கள் கற்பிக்க முடியும் என்பதை அனுபவித்துப் பார்த்திருப்பவன்தான் உணர முடியும். என் மாமா இல்லாதவர் அல்ல, இருபத்தைந்து வருஷங்களுக்கும் அதிகமாக மாசம் நூறு ரூபாய்க்குள் சம்பளம் வாங்கி, எப்படியோ இரண்டு இரண்டரை லக்ஷ ரூபாய் பணம் சேர்த்தவர். பணமே சேர்க்காதவனாகிய நான் இருந்த பணத்தையும் செலவழித்துவிட்டு, இல்லாளுக்கும் வேண்டாதவனாக இருக்கும் நான், வேங்கடாசலத்தின் வாழ்க்கையும் அப்படி ஒன்றும் பிரமாதமான வெற்றி அல்ல தோல்விதான் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு திருப்திபட்டுக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும், சாதாரண ஜனங்கள் எதை வைத்து மதிப்பிடுகிறார்கள்? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி என்று எண்ணத் தோன்றும். நல்லவன், அறிவாளி என்று சொல்லுகிறவனைக் கூடப் பணக்காரனைப் போற்றுவதைப் போல உலகம் போற்றுவதில்லை. ஏன் இது என்று விசாரிக்க நான் தத்துவாசிரியன் அல்ல. உலகத்து உண்மை இதுதான் என ஏற்றுக் கொள்கிறேன். எனக்கும் பணம் சம்பாதிக்க ஆசைதான். ஆனால், செலவழிக்கத்தான் தெரிந்ததே தவிரச் சம்பாதிக்கத் தெரியவில்லை.
என் தகப்பனாரையும் என் மாமாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்கு வாழ்க்கையின் தத்துவமே பிடிபடுவது போல இருக்கிறது. என் மாமா, “பணம், பணம்” என்ற நினைப்பிலேயே மூழ்கிக் கிடந்தார். என் தகப்பானர் நல்ல உத்தியோகத்தில் இருந்தார். உத்தியோகத்தில் இருந்தவரையில் என் மாமாவைவிட, அதிகச் சம்பளமும், ரிடையரான பின் அதிகப் பென்ஷனும் வாங்கிக் கொண்டிருந்தார். அப்படி ஒன்றும் பெரிய குடும்பப் பொறுப்பும் இல்லை அவருக்கு. இருந்தும் அவர் கையில் பணம் சேரவில்லை. அவர் சேர்த்த பணத்தையும் ஒரே பிள்ளையாகிய நான் செலவு செய்து விட்டேன். “ஏண்டா இப்படிச் செலவு செய்கிறாய்?”என்று அவர் என்னை நேர்முகமாகக் கேட்டதில்லை. “பணம் ஆயிடுத்தா? இன்னும் பணம் வேண்டுமா? ஐம்பது அனுப் பட்டுமா. போறுமா? நூறாக அனுப்பட்டுமா?” என்றுதான் நான் ஏராளமாகச் செலவு செய்து கொண்டிருந்த நாட்களிலெல்லாம் கேட்பார். பிறரிடம் எப்பவாவது, ஏதாவது அதிருப்தியாகச் சொல்வார். அது கூட, “அவன் பின்னாடி கஷ்டப்படப் போகிறான்”என்று வருத்தத்துடன் சொல்வாரே தவிரக் குற்றமாகச் சொல்ல மாட்டார்.
இப்போது கஷ்டம் நேருகிறபோதெல்லாம் நான் என் அப்பாவையும், என் மாமாவையும் எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன். நினைப்பதற்கு விஷயம் ஏராளமாகவே இருக்கிறது. இருவரும் இறந்து விட்டார்கள். என் அப்பா இறந்து நாலைந்து வருஷங்களாகின்றன. மாமா இறந்து இரண்டு வருஷங்களாகின்றன. ஒப்பிட்டுப் பார்க்கும்போது, என் மாமாவின் வாழ்க்கையும் அப்படி ஒன்றும் வெற்றிகரமான வாழ்க்கையல்ல என்று எண்ணி நான் திருப்தியடைகிறேன். அவர் பிள்ளையைக் கூடச் சரியாக வளர்க்கத் தெரியாதவர். என் தகப்பனாரின் வாழ்க்கையைப் பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை. எனக்குத் தெரிந்து கடைசி இருபது வருஷங்களில் அகப்பட்டவர்களிட மெல்லாம் சற்றுக் கூடவோ குறைத்தோ தன் சுயசரிதத்தைப் பேசிக் கொண்டே காலம் தள்ளி வந்தார் என் அப்பா. பாவம்! அவருக்குப் பேச வேறு என்ன இருந்தது? என் மாமா தன்னைப் பற்றிப் பேசி நான் கேட்டதில்லை.
தன்னைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல் இருப்பது தான் வாழ்விலே வெற்றியடைந்தவனுக்கு அடையாளமோ?
எனக்கு எப்படித் தெரியும்?
நான் வெற்றி பெற்றவன் அல்ல.
என் மாமாவைப் பற்றிய என் நினைவுகளை வரிசைப் படுத்திக் கொள்ள முயலுகிறேன். முதன் முதலில் அந்த மாமாவைப் பார்த்த சந்தர்ப்பம் எனக்கு ஞாபகமிருக்கிறது. அது என் ஆறாவது வயதில். அதற்கு முன்னரும் பார்த்திருக்க வேண்டும்தான். ஆனால் அது என் ஞாபகத்தில் இல்லை.
நாங்கள் அப்போது நரசிங்கன் பேட்டையில் இருந்தோம். அப்பாவுக்கு எதற்கெடுத்தாலும் எப்பப் பார்த்தாலும் யாரிடமாவது கோபம் வந்து கொண்டேயிருக்கும். அன்று ஏதோ ஒரு கன்றுக் குட்டியைத் துரத்திக் கொண்டு போய்க் கீழே விழுந்து விட்டார். நான் சின்னப் பையன் தானே? அவர் விழுந்ததைப் பார்த்துச் சிரித்து விட்டேன். அவ்வளவுதான், அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. கன்றுக்குட்டியை விட்டுவிட்டு, அதைக் கட்ட வைத்திருந்த தும்பாலேயே என்னை வெளுத்து வாங்கி விட்டார். அந்த ரோஷத்திலே நான் என் “நல்ல”பாட்டியுடன் மாமாவாத்துக்குக் கிளம்பி விட்டேன்.
“நல்ல பாட்டியாமே, நல்ல பாட்டி?”என்பாள் என் அப்பாவைப் பெற்ற பாட்டி. “நல்ல பாம்பு அவள்! அவ்வளவும் விஷம்”. அது என்னவோ எனக்கு இன்னமும் சொல்லத் தெரியவில்லை. என்னைப் பற்றிய வரையில், என் அம்மாவைப் பெற்ற பாட்டி நல்ல பாட்டியாகவே தான் இருந்தாள். அவள் எனக்குத் தெரிந்து அதிக நாள் உயிருடன் இருக்கவில்லை என்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம், என்னுடைய ஒன்பதாவது வயதில் எனக்கு அம்மை போட்ட போது, பாட்டிக்கும் அம்மை கண்டது. அவள் இறந்து விட்டாள். அவள் இறந்துவிட்டதால்தான் நான் பிழைத்தேன் என்று அப்பாவே சொல்லுவார். எனக்காகத் தன் உயிரையே கொடுத்த பாட்டியை நல்ல பாட்டி என்று தான் நான் எண்ணுகிறேன். வேறு எப்படி நினைக்க முடியும்?
என் மாமாவைப் பற்றிய முதல் நினைவையன்றோ சொல்ல வந்தேன்? பாட்டியுடன் நான் நரசிங்கன் பேட்டையிலிருந்து கும்பகோணத்துக்குக் கிளம்பி விட்டேன். கும்ப கோணத்திலிருந்து நாலு மைல் உள்ள சாத்தனூருக்குப் போய், அங்கிருந்து ஒரு வாரத்தில் மன்னார்குடிக்குப் போக வேண்டும் என்றாள் பாட்டி. என் மாமா எம்.ஏ. படித்துப் பாஸ் செய்திருந்தார். ‘எம்.ஏ.’என்றால் என்ன என்று பாட்டிக்கும் தெரியாது; எனக்கும் தெரியாது. ஆனால், எம்.ஏ. பாஸ் செய்த மாமா ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டார் என்றுதான் நினைப்பு எங்கள் இருவருக்கும். மன்னார்குடியில் மாமாவுக்குப் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர் வேலை ஆகி யிருந்தது. அவரோடு நானும் போய் மன்னார் குடியில் படிக்கலாம் என்றாள் பாட்டி.
“நீ…?”என்று கேட்டேன்.
“நானும் வருவேன். நான் இல்லாமலா?”என்ற நல்ல பாட்டி, “மாமி சின்னவள். அவளுக்கு ஒண்ணும் தெரியாது. நான் இல்லாவிட்டால் குடித்தனம் சரியாக நடக்குமா?”என்றாள்
ஓடிக் கொண்டிருந்த ரெயில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டு, வெளியே எதிர்ப்பக்கமாக ஓடிய மரங்களின் ஒரு வரிசையைக் கண்களை விரலால் அமுக்கி இரண்டாகப் பண்ணிக் கொண்டிருந்தேன். எனக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.
“ஏன் பாட்டி? ஊரில் இருப்பவர்கள் எல்லோருமே என் மாமாதானே?”என்று கேட்டேன்.
ரெயிலில் இருந்த இரண்டொருவர் கூடச் சிரித்தார்கள் என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு கிழவி, “கெட்டிக்காரப் பிள்ளை”என்று எனக்கு சர்டிபிகேட் கொடுத்தாள்.
“எல்லோருமே மாமா ஆகிவிடுவார்களா?” என்றாள் நல்ல பாட்டி. “தெருவோடுபோகிறவர்களை மாமா என்று உறவு சொல்லிக் கூப்பிட்டால் மட்டும் மாமா ஆகிவிடுவார்களா? இந்த மாமா உனக்கு எல்லாம் செய்வாரே ?”
“என்ன செய்வார்? சொல்லு?”என்றேன்.
“கண்ணாலங் கட்டி வைப்பார்…”என்றாள் ரெயிலில் உடன் இருந்த கிழவி.
“மாமா வீட்டிலே பெண்ணிருக்கா?”என்று கேட்டேன் நான், என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது.
நல்ல பாட்டி இதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. “போனவுடனே, உனக்குப் பாலும் சோறும் பிசைந்து போடுவதற்கு ஒரு வெள்ளிப் பேலா வாங்கித் தருவான் மாமா”என்றாள்.
இப்பொழுது ஞாபகம் வருகிறது எனக்கு. என் அப்பாவுக்கு வெள்ளிப் பாத்திரங்களைக் கண்டாலே பிடிக்காது. அம்மா என்றைக்காவது தப்பித் தவறி வெள்ளி டம்ளரில் காபி கொண்டு வந்து வைத்தாளானால், “அப்படி என்ன வெள்ளி வேண்டியிருக்கு? பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளேன். காபியை சூடாக வெள்ளி டம்ளரில் கொணர்ந்து வைத்துக் கை சுட்டு விட்டது”என்று காபி டம்ளர் எல்லாவற்றையும் எடுத்து வெளியே எறிந்து விடுவார். அவருக்குப் புனா டம்ளரில் காப்பி சாப்பிடத்தான் பிடிக்கும். அதில் மட்டும் எப்படிக் காபி கைசுடாமல் இருக்குமோ? எனக்குத் தெரியாது.
சாப்பிடுவதற்கு அதுவும், பாலும் சோறும் கலந்து தின்பதற்கு, வெள்ளிக் கிண்ணம் கிடைக்கும் என்ற பாட்டியின் பதில் அந்த வயதில் எனக்குப் பிரமாதமான திருப்தி அளித்தது என்றே நினைக்கிறேன். சாத்தனூரில் வண்டி விட்டிறங்கி வீட்டிற்குள் போனதுமே நான் “வெள்ளிப் பேலா எங்கே?”என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டேன் என்றும் நினைக்கிறேன். இரண்டொரு நாளைக்குள்ளாகவே மாமாவும் எனக்கு வெள்ளிப் பேலா வாங்கி வந்துவிட்டார்.
மன்னார் குடியில் இரண்டாங் கிளாஸில் நான் படித்த வருஷம் பூராவும் அந்த வெள்ளிக் கிண்ணத்தில்தான் பாட்டி எனக்குச் சோறு எடுத்து வைப்பாள். “என் கிண்ணம், என் கிண்ணம்”என்று தான் நான் சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு லீவுக்கு நான் நரசிங்கன் பேட்டை திரும்பிய போது “வெள்ளிக் கிண்ணத்தில் சோறு போட்டால்தான் சாப்பிடுவேன்” என்று பிடிவாதம் பிடித்து, “அப்பா காதில் விழப் போகிறது” என்று அம்மா என்னைச் சமாதானம் செய்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முதல் வருஷத்துக்குப் பிறகு என் அம்மாமி அந்தக் கிண்ணத்தை எடுத்துத் தன் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொண்டு விட்டாள். பிற்காலத்தில், நான் இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கும் போது மாமி, அந்தக் கிண்ணத்தை “ராஜாவுடைய வெள்ளிக் கிண்ணம்”என்று யாரிடமாவது காட்டிக் கொண்டிருப்பாள். காதில் பட்டாலும் காதில் விழாத மாதிரி இருந்து விடுவேன். “என் கிண்ணம்”என்று அதைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு என்ன லாபம்? மாமாவுக்குக் கூடச் சொந்தம் இல்லை அந்தக் கிண்ணம்; மாமிக்குத்தான் சொந்தம். சின்ன விஷயம்தான். ஆனால், காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதைச் சிறு துரும்புதானே காட்டும்? கற்பாறை காட்டுமா?
சாத்தனூரில் மாமா வீட்டுக்குப் போனவுடனேயே எனக்கு இன்னொரு சந்தேகமும் தோன்றிற்று. “ஏன் பாட்டி, ரெயிலில் வருகிறபோது, மாமி ரொம்பச் சின்னவள் ஒன்றுமே தெரியாது, என்றாயே… மாமி பெரியவளாகத் தானே இருக்கிறாள்?”என்றேன்.
மாமி உண்மையிலேயே பெரியவளாகத்தான் இருந்தாள்.வேங்கடாசலம் உருவத்தில் சிறியவர். ஐந்தடி இரண்டங்குலம் உயரமும், ஒற்றை நாடி சரீரமும் உள்ளவர். நல்ல சிவப்பில்லை, நல்ல கறுப்புமில்லை; ஒருவிதமாக மாநிறமாக இருப்பார். அம்மாமி நல்ல கறுப்பு. உயரம் மாமாவை விட இரண்டங்குலமாவது அதிகம் இருக்கும். ஆகிருதியும் பெரிதுதான். இரட்டை நாடி என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் நேரடியாகக் கேட்ட கேள்வி என் பாட்டிக்கு சிரமமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மாமிக்குத் தன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து பேசியது போலத் தோன்றியது போலும். என்னைத் தன் அரவணைப்பில் அணைத்துக் கொண்டாள். “ராஜா ராஜா”என்று என்னிடம் உசிராகத்தான் இருந்தாள் என்று எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதற்குக் காரணம், அப்பொழுதுதான் அவள் முதல் தடவை கர்ப்பமாகியிருந்து “அபார்ஷனாகி”ஒரு தினுசான துயர மனோபாவம் பெற்றிருந்தாள் என்று சொல்லலாம். என்னைத் தன் பிள்ளையாகவே எண்ணி, எனக்கு எல்லாம் செய்யத் தயாராக இருந்தாள் என்று கூடச் சொல்லலாம், என்று எனக்கு இப்போது நினைத்துப் பார்க்கும் போது தோன்றுகிறது.
என் மாமாவைப் பற்றி அந்தச் சந்திப்பிலோ அதற்குப் “பிறகோ தனியாக எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அவர் உருவம் பற்றிச் சொல்லி விட்டேன். அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக எதுவும் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாமி தான் அந்தக் குடும்பத்திலே சர்வாதிகாரி என்று சொல்ல வேண்டும். அந்த ஏகாதிபத்யத்தைத் துணிந்து எதிர்த்தவள் நல்ல பாட்டி ஒருத்திதான். ஆனால் அவர்களிருவருக்கும் சண்டை எதுவும் நடந்து நான் பார்த்ததாகவும் ஞாபகம் இல்லை. தனித்தனியாக இருவருமே வீட்டு யசமானரிடம் தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்வார்கள். தாய் தன்னிடம் வந்து முறையிடும் போது, மாமா, “ஜானகி!”என்று கம்பீரமாகக் கூப்பிடுவார். அதற்குப் பிறகு, தேர் மாதிரி அசைந்து வந்து மாமி ஈஸிசேருக்குப் பக்கத்தில் நிற்பாள். மாமா, என்ன சொல்வாரோ, மாமி என்ன பதில் சொல்வாளோ எனக்குத் தெரியாது. என் பாட்டிக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன். இருவரும் ரகசியம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
என் இரண்டாங் கிளாஸ் வாத்தியாருக்கும் பெரிய கிளாஸ் வாத்தியாரான என் மாமாவுக்கும் இடையே ஏதோ ஒரு மன வருத்தம் அதி சீக்கிரமே ஏற்பட்டுவிட்டது. என் வாத்தியார் வந்து ஒரு சமயம் என் மாமாவை இருபத்தைந்து ரூபாய் கடன் கேட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. மாமா கொடுத்தாரோ கொடுக்கவில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு மறுநாள், நான் ஏதோ ஒரு கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று என்னைப் பெஞ்சியின்மேல் ஏற்றிவிட்டார், என் வாத்தியார். மன்னார்குடியில் படித்த அவ்வருஷத்தில் பெரும் பகுதியை நான் பள்ளிக் கூடத்தில் பெஞ்சியின் மேல் நின்றேதான் கல்வி பயின்றேன். என் மாமா பணம் தர மறுத்ததற்காகவா என்னைப் பெஞ்சியின் மேல் நிறுத்திக் களித்தார் என் வாத்தியார்? அல்லது கடன் வாங்கி விட்டாரே. அந்தப் பாபத்துக்குப் பிராயசித்தமாக இவன் பெஞ்சி மேலே நிற்கட்டும் என்று எண்ணினாரோ அவர்? எனக்குத் தெரியாது. நான் ஒரு வருஷம் பூராவும் பெஞ்சியின் மேல் நின்றேன்; காரணம் எதுவுமில்லாமலே என்றுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
யாரோ ஏதோ செய்து விடுகிறார்கள். அதன் விளைவுகள் எங்கேயோ, எப்படியோ தெரிகின்றன. மனிதன் கருமம் என்றும், விதி என்றும் ஏதோ சொல்லிக் கொண்டு தனக்குத் தானே ஆறுதல் தேடிக் கொண்டு காலம் தள்ளுகிறான்; நாட்களைக் கடத்துகிறான். காரண காரிய பந்தங்கள் எப்படிப்பட்டன, ஏன் உண்டாகின்றன. அவற்றைப் போக்க வழியென்ன என்று விசாரிக்கும் தீரம் மிகச் சிலருக்கே ஏற்படக்கூடும். அப்படித் தீரம் உள்ளவனும் கூட சிந்தனை யுடன் திருப்தி அடைந்து விடுகிறான். கண்டு கொண்ட உண்மைகளைக் கடைபிடிக்க யாருக்குமே தெம்பு உண்டாவதில்லை.
என் கால்களில் அப்போது போதிய வலுவிருந்தது. நான் தினமும் பெஞ்சியின் மேல் நின்றேன். வீட்டிலே அதைப் பற்றி யாரிடமும் சொன்னதில்லை நான். என் மாமாவுக்குத் தெரியவே தெரியாது அது பற்றி. பெஞ்சியின் உயரத்திலிருந்து நின்று கொண்டு என் வகுப்பு மாணவர்களின் தலைக்கு மேலே பார்ப்பதும் நல்லதென்றுதான் எனக்கு அப்போது தோன்றியிருக்க வேண்டும். அது எனக்கு மட்டுமே பிரத்தியேகமான ஒரு நோக்கு. அதைப் பகிர்ந்து கொள்ளுவதற்கு யாரும் வருவதில்லை. இன்று எனக்குள்ள தனி நோக்கும் அதே போலத்தான் என்று தோன்றுகிறது. வாழ்வில் வெற்றியையும் தோல்வியையும் கணிக்க முயலுகிற எனக்கு இந்த நோக்கு மிக மிக அவசியம் என்றே தோன்றுகிறது. வருஷம் பூராவும் என்னைப் பெஞ்சியின் மேல் ஏற்றி வைத்த அந்த வாத்தியார் வாழ்க என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.



