ஆட்கொல்லி
க. நா. சுப்ரமண்யம்

3. 93-12-0

சிருஷ்டி தத்துவம் மிகவும் விசித்திரமானது. மனிதன் தான், சிருஷ்டித்துக் கொண்டு சௌகரியம் என்று ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறானே என்று எண்ணும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது, பிராணி களிலே மனிதன்தான் அறிவுள்ளவன் என்று சொல்கிறார்கள். சிந்தித்துப் பார்க்கும்போது அவன் அப்படி ஒன்றும் அறிவுள்ளவன் மாதிரித் தோன்றவில்லை.

மனிதன் தன்னுடைய தினசரி அலுவல்களில் சௌகரியத்துக்காகப் பணம் என்ற ஒன்றைப் படைத்துக் கொண்டான். உண்மையில், அந்தரங்க மதிப்பு எதுவுமிலாது, இருக்க முடியாத, பொய்யான அந்த ஒரு தத்துவத்துக்கு அவன் இன்று பலியாகிவிடுகிறான். நாகரிகம், சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு அவன் பணத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். எல்லோரும் அடிமைகளாக இருக்கும்போது நான் மட்டும் சுதந்திரமாக இருந்தால், பைத்தியக்காரன் என்று என்னை உலகம் சொல்லாதா என்று கேட்காமல் கேட்கிறான்.

பணத்தை ஒரு லக்ஷ்யமாக எண்ணாமல் வாழ்க்கை நடத்த முயலுகிறவனை உலகம் பைத்தியக்காரன் என்றுதான் மதிக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று சுட்டிக் காட்டுகிறது. சில சமயம் சந்திக்கும்போது, இதைக் கலியுகம் என்று சொல்வதற்குப் பதில், பணயுகம், பொருளாதார யுகம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. அடிமைப்பட்டுக் கிடப்பதில் வருத்தத்துக்குப் பதில் ஆனந்தத்தையே மனிதன் காணத் தொடங்கிவிட்டால் அதை என்ன வென்று சொல்வது?

மன்னார்குடியில் பள்ளிக்கூட வாத்தியாரான என் மாமாவுக்கு என்ன சம்பளம் வந்தது? எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு வருஷம் வாத்தியாராக இருந்தார் மாமா. அப்பொழுதும் மாமாவுக்கு என்ன சம்பளம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் மாமா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த மூன்றாவது வருஷம் மாமாவுக்கு சர்க்கார் கல்வி இலாகாவிலே வாத்தியார் வேலை கிடைத்து விட்டது. கைலாயம், வைகுந்தம் என்கிற இடத்தில் தனக்கென்று ஒரு நிரந்தரமான அம்மாமியும் மற்றவர்களும் அதுபற்றி ஆனந்தப்பட்டார்கள். சர்க்கார் உத்தியோகம் என்ற சாயுயஜ் முத்திரை எம்.ஏ. என்கிற பட்டத்தின் விளைவாகத் தனக்குக் கிட்டியபிறகு யாரும் தனக்கு நிகரில்லை என்று மாமா எண்ணுகிற மாதிரித்தான் இருந்தது;

“ராஜாவும் மாமா மாதிரி எம். ஏ. பாஸ் பண்ணிச் சர்க்கார் உத்தியோகத்திற்கு வந்துவிட வேண்டும்”என்று என்னை ஆசீர்வதித்தாள் மாமி.

எனக்கும், இதற்கு அந்த நாட்களில் சொல்ல ஆக்ஷேபம் ஒன்றும் தோன்றவில்லை. மாமாவுக்குச் சர்க்கார் வேலை கிடைத்ததற்காகச் சாத்தனூர்க் கோயிலிலும், கும்பகோணம் கோயில்கள் இரண்டிலும் நடந்த அபிஷேக அர்ச்சனை விஷயங்களில் நானும் மனப்பூர்வமாக ஈடுபட்டேன். உத்தியோக ஆர்டர் வந்த அன்று மாமாவும் அம் மாமியுமாகச் சேர்ந்து நின்று கொண்டு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அந்தப் போட்டோவில் மாமியின் கையைப் பிடித்துக் கொண்டு நானும் நிற்கிறேன். ஜிகினா வேலை செய்த ஒரு மூடிய நீலக்கோட்டு, தலையிலே ஒரு நீலக்குல்லா; அதிலும் ஜரிகையிருந்தது என்று எண்ணுகிறேன். நெற்றியிலே வழிந்த எண்ணெய்க்கு மத்தியில் ஒரு சிறிய சாந்துப் பொட்டு. இடுப்பிலே கோணலும் மாணலுமாகக் கட்டியிருந்த ஒரு பட்டுக்கரை வேட்டி. போட்டோவில் என்னுடைய இந்தத் தோற்றத்தை இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொண்டால் கூட எனக்குச் சிரிப்பு வருகிறது. அப்படி இருந்த நான், என் மாமாவின் கணக்குப்படி, என் மாமியின் பராமரிப்புப் படி, வெற்றி பெற வேண்டியவனின் சின்னங்கள் எல்லாம் பூரணமாகப் பெற்றிருந்தேன் நான். ஏன், எப்போது, எப்படி இப்படி ஆனேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என் வாழ்விலே எந்தச் சமயத்திலே வெற்றி வேண்டாம், என் மாமாவைப் போன்ற பெற்றி பெறுவதைவிட வெற்றி என்பது இல்லாமலே இருந்து விடலாம் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது என்று சொல்லத் தெரியவில்லை.

அந்தப் போட்டோவில் உள்ள என்னைப் பற்றி மட்டும் சொன்னால் போதுமா? மாமாவையும், மாமியையும் பற்றிச் சொல்ல வேண்டாமா! அம்மாமி மாமாவைவிட மூணங்குலம் உயரமாக, இரண்டு சுற்றுப் பருமனாகப் படத்திலே காட்சி அளிக்கிறாள். ஒரு சாண் அகலம் ஜரிகையுள்ள பட்டுப் புடவையைப் பொம்மைக்குச் சுற்றுவது போலச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கழுத்திலே பத்து வடம் சங்கிலிகள். கைகளிலே ஆறு ஆறு வளையல்கள். நீளத்தில் ஐம்பதங்குல இடுப்புக்கு தங்க ஒட்டியாணம். காதிலே நல்ல பளிச் சென்று சிவப்புத் தோடு. திருவாரூர் போன பிறகு தான் வைரத் தோடு வாங்கிக் கொண்டாள் மாமி என்று எண்ணுகிறேன்.

கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் மாமி, மாமா பக்கத்திலே பயந்து ஒடுங்கி நிற்கிறார் அந்தப் போட்டோவிலே. பயந்து ஒடுங்கி என்று நான் சொல்வது தவறுதான். அவர் காத்திரமே அவ்வளவுதான். அம்மாமிக்குப் பக்கத்தில், யார் நின்றாலுமே, பயந்து ஒடுங்கி நிற்கிற மாதிரித் தான் இருக்கும். சந்தேகம் என்ன? தலையில் டர்பனுடன், மூடிய கோட்டுப் பையில் பேனாவுடன் நிற்கிற மாமாவைச் சாக்ஷாத் பள்ளிக்கூட உபாத்தியாரின் நிரந்தர உருவம் என்று போற்றத்தான் வேண்டும். கையில் பிரம்பில்லை. ஆனால், மாமா யாரையும் பிரம்பெடுத்து அடித்ததாக எனக்குத் தெரியாது. வீட்டிலே பயந்த சுபாவமுள்ள அவர், பள்ளிக்கூடத்திலேயும் அப்படித்தான். யாராவது இடக்கான மாணவன் பதில் சொல்ல முடியாத, விஷமக் கேள்வி தன்னைக் கேட்டுவிட்டால் என்ன பண்ணுவது என்று பயந்த மாதிரியே இருப்பார், எப்போதும்.

நான் மாமாவிடம் எந்தப் பாடமும் படித்ததில்லை. எனக்கு எங்கே எந்த விஷயத்தில் சந்தேகம் வந்தாலும் அதே இடத்தில் அங்கேயே சந்தேகம் வந்துவிடும் மாமாவுக்கும்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் பிறகு, கோயில்களில் அர்ச்சனை அபிக்ஷேகங்கள், உற்றார் உறவினர்களுக்குக் கடிதங்கள், மாமா அம்மாமி போட்டோ எல்லாவற்றிற்கும் பிறகுதான். எனக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று, மாமாவும் அம்மாமியும் சேர்ந்து என் அதிர்ஷ்டத்தால்தான் மாமாவுக்கு அந்த உத்தியோகம் அவ்வளவு சுலபமாகக் கிடைத்தது என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாகும். அதனால் எனக்கு மாமியிடம் சலுகையும் செல்லமும் அதிகரித்தது. இரண்டாவது, இந்தப் பிரமாதமான வேலைக்கு மாதச் சம்பளம் வள்ளிசாக 93-12- 0 தான். மேலே போகப் போக உயரும். ஆனால் என்ன கணக்கு எப்படிப் பண்ணி இந்த ரூ. 93-12- 0 என்று தந்தார்கள் என்பது எனக்கு அப்போதும் தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை என்று நான் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ஆனால் எனக்கு எப்போதுமே பண விஷயங்களில் அவ்வளவாகப் போதாது என்றும் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் நான் ஒரு ஒரு சுவாரசியமான அமெரிக்கப் புஸ்தகம் ஒன்று பார்த்தேன். அந்தப் புஸ்தகத்தின் தலைப்பு “நான் எப்படி லக்ஷாதிபதி யானேன்?”என்பதுதான். எனக்கு ஒன்றும் லக்ஷாதிபதியாகிற உத்தேசம் இல்லாவிட்டாலும். அதில் என்னதான் சொல்லியிருக்கிறது என்று பார்க்கலாமே என்று ஒண்ணரை ரூபாயும் அரையணாவும் கொடுத்து அந்தப் புஸ்தகத்தை வாங்கினேன். அதில் இருபது முப்பது லக்ஷாதிபதிகள் தங்களுக்குப் பணம் எப்படிச் சேர்ந்தது என்பதை விவரித்திருந்தார்கள். ஒருவன் எல்லோரும் உபயோகித்து விட்டு எறிந்து விடுகிற தகர டப்பாக்களை யெல்லாம் பொறுக்கி எடுத்து, வேறுவிதமான உருவங்களாகச் செய்து, லக்ஷாபதியானான். ஒருவன் பெண்களுடைய தேவைப் பொருள்களில் ஒன்றை உற்பத்தி செய்து லக்ஷாதி பதியானான். இப்படியாகப் பல கதைகள் இருந்தன, அந்த நூலில்! ஆனால், அவர்களில் ஒருவராவது மாதச் சம்பளம் தொண்ணூத்திமூணே முக்கால் ரூபாயில் லக்ஷாதிபதியாவது என்று விவரிக்கவேயில்லை.

உத்தியோகத்தில் சேர்ந்து பன்னிரண்டு வருஷங்கள் பூராவும் மாதம் தொண்ணூத்தி மூனேமுக்கால் ரூபாய் சம்பளத்தில்தான் இருந்தார் மாமா. சம்பளம் உயர வேண்டும் என்று செய்து கொண்ட பிரார்த்தனைகளைக் கல்வி இலாகா ஏற்றுக் கொள்ளவில்லை. சர்க்கார்தான் ஏற்றுக் கொள்ள வில்லையென்றால் சாத்தனூர்க் கோயில் சிவபெருமானும் அந்தப் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. சிவனிடம் வந்த கோபத்தில் மாமா முருக பக்தனாகி விட்டார். அவ்வளவு தான் லாபம்! “வேலும் மயிலும் துணை”என்று முதல் வரி எழுதாமல் கடிதம் கூட எழுத மாட்டார். மாதம் ரூ. 93-12- 0 ல் எப்படிக் குடித்தனம் நடத்துவது? எப்படிப் பணம் மீதம் பிடிப்பது? எப்படி லக்ஷாதிபதியாவது?

எனக்குத் தெரியாது. மாமாவைத்தான் கேட்க வேண்டும். ஆனால், மாமாவைக் கேட்டால் என்ன செய்வார் பாவம்.”எனக்குத் தெரியாதப்பா! அதெல்லாம் ஒன்றும் எனக்குத் தெரியாது, உண்மையிலேயே உனக்கு அதுபற்றித் தகவல் உபயோகமான தகவல், ஏதாவது வேண்டுமானால்;  அம்மாமியைக் கேள்”என்பார்.

அம்மாமி என்ன சொல்வாள்? “போதுமென்ற மனத்துடன் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருந்தால், தானே கடவுள் கொடுப்பார்”என்பாள்.

போதுமென்ற மனமா?

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதா?

கடவுளா கொடுப்பார்?

மனிதன் தன்னையே ஏமாற்றிக் கொள்வதில் எவ்வளவு சமர்த்தனாக இருக்கிறான்? தவறு செய்பவனைப் போல நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் காரியங்களைச் செய்பவன். கடவுளைக் கூப்பிடுகிற அளவு வேறு யாரையும் காண முடியாது, கடவுளும் சாதிக்காத சாதாரண வாழ்வு வாழ்கிற எவனும் கூப்பிடுவதில்லை. தர்மம், நியாயம் என்பவற்றின் பெயரால், உலகில் நடக்கிற அதர்மங்களும் அநியாயங்களும் கணக்கு வழக்கில் அகப்படா. அப்போது நான் சின்னப் பையன்தான், இரண்டாவது வகுப்பில் வருஷம் பூராவுமே பெஞ்சின் மேல் நின்றேன்; படிப்பு வந்ததோ என்னவோ, காலுக்கு வலுவு ஏற்பட்டது, அடுத்த வருஷம் நான் படித்த பள்ளிக்கூடம் என் தாத்தாவுடைய சொந்தப் பள்ளிக்கூடம். ஆகவே ஒரு விதத் தொந்தரவும் இல்லாமல் என்னை நேரடியாக நாலாவது வகுப்பில் சேர்த்துக் கொண்டு விட்டார்கள், சர்க்கார் கல்வி இலாகாவில் என் மாமாவுக்கு வேலை கிடைத்தவுடன், நானும திருவாரூர் சர்க்கார் பள்ளிக் கூடத்தில் ஐந்தாவது வகுப்பில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு அப்போது வயது ஒன்பது. மாமாவோ அம்மாமியோ என்னை ஒரு வார்த்தை கூடக் கடிந்து சொல்ல மாட்டார்கள். மாமாவுக்கு எப்பவாவது கோபம் வந்தால், ‘கழுதை’என்பார் அழுத்தம் திருத்தமாக. இவ்வளவு நல்லவர்களாக எனக்குக் காட்சியளித்த இந்த மாமாவையும் ஏன் ஊரார் அவ்வளவாக மதிக்கவில்லை அவர்களைக் கண்டால் ஏன் பயப்படுகிறார்கள் பலரும் என்பது எனக்குத் திருவாரூரில் இருக்கும் போதுதான் தெரிய வந்தது.

வயதான ஒரு கிழவர் ஒரு நாள் நான் கூடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே வந்தார். காலையில் மணி எட்டேமுக்கால் இருக்கும், பள்ளிக் கூடத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. மாமா கொல்லையிலே கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். மாமி சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

“லேவாதேவி வேங்கடாசலத்தின் வீடு இதுதானே?”என்றார் அந்தக் கிழவர்.

எனக்கு லேவாதேவி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், “வேங்கடாசலத்தின் வீடு இதுதான்”என்றேன்.

“இருக்காரா, உன் அப்பா..?”என்று கேட்டார் கிழவர்.

வேங்கடாசலம் என் அப்பா அல்ல என்று சொல்ல நான் வாயெடுக்குமுன், அம்மாமி கைக் கரண்டியைச் சமையலறை வாசற் படியண்டையே வைத்துவிட்டு “யாரு…? என்று கம்பீரமாகக் கேட்டுக் கொண்டு முன் கூடத்துக்கு வந்தாள்.

“ஐயாவைப் பார்த்துப் பணத்தை தந்துவிட்டு வரச் சொல்லி ராமநாதன் அனுப்பினான்…”என்று தடுமாறினார் கிழவர்.

“ராமநாதன் அப்பனா நீ? பணம் பூராவையும் கொண்டு வந்திருக்கிறாயா?”என்று கேட்டாள் மாமி.

“நூத்தி முப்பத்தியெட்டு ரூபாய் கொண்டு வந்தேன். அவ்வளவுதான் இருக்கிறது. பதினேழு ரூபாயைத் தள்ளி விட்டுப் பத்திரத்தைக் காது கிழித்து வாங்கிப் போக வந்தேன்…”என்றார், கிழவர்.

“வயசாச்சே தவிர பணத்தாசை விடல்லியே?” என்றாள் மாமி.

“பதினெட்டு ரூபாய்தானே…”என்றார் கிழவர் கெஞ்சுதலாக,

“பதினேழோ பதினெட்டோ? கணக்காக பார்த்துக் கொடுத்துவிட்டு சீட்டைக் கிழிச்சு வாங்கிக் கொண்டு போ!” என்றாள் மாமி.

“உங்களுக்குப் பதினேழு பதினெட்டு என்ன பிரமாதமாங்க? மனசு வச்சா, வட்டி பூராவுமே தள்ளித் தரலாமே!”என்றார் கிழவர்.

“ஏது…? இடத்தைத் தந்தால் மடத்தையே பிடுங்குவே போலே இருக்கே?”என்றாள் மாமி.

“மகாலச்சுமி கணக்கா இருக்கறவங்க…”என்று ஆரம்பித்தார் கிழவர்.

“உன்னைப் போன்றவர்களுக்குப் பத்தும் இருபதும் தள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தால் எத்தனை நாளைக்கு மாகலச்சுமி கணக்கா நான் இருக்க முடியும்?”என்றாள் மாமி.

கிழவர் பதில் பேசவில்லை. மடியிலிருந்த ஒரு துணி முடிப்பை யெடுத்துப் பிரித்தார்.

“ஒங்க காசு எதுக்கும் நாங்க ஆசைப்படவில்லை. எழுதிக் கொடுத்த வட்டி கணக்குப் பண்ணித் தந்து விட்டு நோட்டை வாங்கிக் கொண்டு போங்க”என்றாள் மாமி.

இதற்குள் மாமா குளித்துவிட்டு வந்து விட்டார். “என்ன சொல்றான் கிழவன்? பணத்தைத் தள்ளித் தரணுமாமே? அதெல்லாம் சரிப்படாது. பணம் பாக்கி நின்றால், இதைக் கொடுத்துப்பிட்டு பாக்கி பணத்துக்கு ஒரு நோட்டு எழுதிக் கொடுத்துபிட்டுப் போகட்டும். இவங்க பணமும் நமக்கு வேண்டாம், நம்ப பணத்தையும் அவங்கிட்ட விட முடியாது”என்றார் மாமா.

“நீங்கள்ளாம் இப்படிச் சொன்னால்..”என்று கிழவர் ஆரம்பிக்கும் போது, புஸ்தகத்தை மூடி வைத்து விட்டு நான் அங்கே பேச்சைக் கேட்டுக் கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டாள் மாமி.

“பள்ளிக்கூடத்துக்கு நாழியாகிறதே ராஜா! நீ போய்க் குளித்துவிட்டு வா”என்றாள் மாமி.

நான் அங்கு நிற்பது அவர்கள் பேச்சிற்குத் தடையாக இருந்ததென்று எனக்குத் தோன்றிற்று. பத்து நிமிஷங்களுக்கு முன் லேவாதேவி என்றால் என்ன என்று தெரியாத எனக்கு இப்போது அதன் முழு அர்த்தம் தெரிந்துவிட்டது. வட்டிக்குப் பணம் விட்டுப் பணம் சேர்ப்பதற்குப் பெயர்தான் லேவாதேவியா? ஏழைகள் எத்தனையோ பேர் உள்ள நம்மூரில், ஏராளமான வட்டி தருவதாகச் சொல்லிக் கடன் வாங்கத் துணிகிறவர்களுக்குக் குறைவு உண்டா என்ன?

ஆனாலும் தொண்ணூத்தி மூனே முக்கால் ரூபாய் சம்பளத்தில் மீதம் பிடித்து எப்படிப் பணம் வட்டிக்கு விட முடிந்தது மாமாவுக்கும் மாமிக்கும்? கிராமத்திலிருந்து நெல் வந்து விடும். போதிய நெல் விளைகிற அளவுக்கு மாமாவுக்கு நிலம் இருந்தது. பிதுரார்ஜிதச் சொத்தாக. அவ்வளவு தான், எப்படித் தைரியமாகப் பணத்தை வட்டிக்கு விட்டு வாங்கினார் மாமா? ஏது பணம்? வட்டியும் முதலுமாக வராமல் போய்விட்டால் என்ன பண்ணுவார்? ஏமாந்து விட்டால் வாயில் விரல் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட வேண்டியதுதானோ? அப்படி இருந்தால், மாமா பணம் கொடுக்கச் சம்மதித்தாலும், அம்மாமி சம்மதிக்கமாட்டாளே? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றிற்று.

நான் குளித்துவிட்டு வந்ததும் முதல் கேள்வியாகப் “பணம் பூராவையும் கொடுத்தாரா இல்லையா கிழவர்?” என்று கேட்டேன்.

நான் கூட இதையெல்லாம் கவனிக்கத் தொடங்கி விட்டேனா என்று எண்ணுவது போல மாமி என்னைப் பார்த்தாள். மாமாதான் பதில் சொன்னார்; “ரெண்டு ரூபா தள்ளிக் கொடுத்தேன்”…

நான் பதில் சொல்லவில்லை, மாமாவே தொடர்ந்து அடுத்த நிமிஷம் சொன்னார், “பூராப் பணமும் கொண்டு வந்திருந்தான் திருட்டுப்பயல். அந்த இரண்டு ரூபாய் கூடத் தள்ளித் தந்திருக்க வேண்டியதில்லை”என்று.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *