நளினி
க. நா. சுப்ரமண்யம்

சீதாராமனும் குருஸ்வாமியும்

உள்ளே முன் கூடத்தில் உட்கார்ந்து பேசத் தொடங்கிய சீதாராமனுக்கும் விசுவநாதய்யருக்கும் இடையே பேசுவதற்கு அதிக விஷயம் இல்லாததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

புதுசாக சீதாராமனை அன்றுதான் சந்தித்த விசுவநாதய்யர் முக்கியமான பல விஷயங்களைப் பற்றி எதுவும் பேச முடிய வில்லை.

சீதாராமன் சொன்னான்: “தப்பாக ஏதோ அரெஸ்டு பண்ணிக்கொண்டு போய்விட்டார்கள். சென்னை சேர்ந்ததுமே என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுவித்து விட்டார்கள்.”

தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். “என்னவோ எல்லாம் நல்லபடியாக முடிந்தது” “கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் அவர் சம்சாரமும் நேற்றுத் தான் கிளம்பினார்கள். பாவம்! வீண் செலவு” என்றார் சட்டென்று இப்படிச் சொன்னது தவறோ என்று அவருக்கே தோன்றியது. “நீங்கள் விடுவிக்கப்பட்டது பற்றி அவர்கள் ரொம்பவும் சந்தோஷப் படுவார்கள்” என்றார்.

“ஆமாம்: அக்காதான் என்னைப் பற்றி ரொம்பவும் கவலைப் பட்டிருப்பாள்” என்றான் சீதாராமன்.

“ஆமாம் ஆமாம்” என்று சொல்லித் தலையை ஆட்டினார் விசுவநாதய்யர்.

“அக்காவுக்கு எப்பொழுதுமே என்னிடம்தான் பிரியம் ஜாஸ்தி. என்னைத்தான் அவள் பிள்ளை போல வைத்து வளர்த்தா” என்றான் சீதாராமன்.

“நேத்திக்கித்தான் கிளம்பிப் போனார்கள்” என்றார் விசுவநாதய்யர். மறுபடியும், வேறு என்ன சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

“இன்றே தந்தி அடிக்கிறேன். இன்றே புறப்பட்டு நாளைக்கு வந்துவிடலாம் ” என்றான் சீதாராமன்.

“ஆமாம், அதுதான் நல்லது; நம்ம வைத்தா தம்பியோடு கூடத்தான் போயிருக்கா, விலாசம் விசாரிச்சு நானே ஆபீஸ் போனதும் தந்தி அடிச்சுடறேன்” என்றார் விசுவநாதய்யர்.

“உடனே புறப்பட்டு வந்துவிடச் சொல்லி அடியுங்கோ” என்றான் சீதாராமன்.

இவ்வளவு உரிமை கொண்டாடிக் கொண்டு அவருடன் பேசிக் கொண்டிருப்பது தவறு என்று பட்டது சீதாராமனுக்கு. அவர் யார்? தன் அக்காவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் என்பதனால் அவருடன் உறவாட அவனுக்கு ஏற்பட்டு விடுமா என்ன? தவிர, திருடியதாகக் குற்றம் சாட்டப் பட்டு ஜெயிலுக்குப் போனவன் எப்படிப் பட்டவனோ என்று அவர் ஆச்சரியப்படாமல் இருப்பாரா? இந்த மட்டும் உட்கார வைத்துப் பேசினாரே. அதுவே பெரிசு என்று எண்ணினான் சீதாராமன்.

எழுந்தான்: “நான் போய் வரட்டுமா?” என்றான்.

விசுவநாதய்யரும் எழுந்தார். “எங்கே போகப் போறேள்! நாளைக் காலையிலே அவாள் வந்துடறா. அதுவரையில் இங்கேயே தங்கலாமே!” என்றார்.

“என்னால் உங்களுக்கு அசௌகரியம்” என்றான் சீதாராமன்.

“அசௌகரியம் என்ன? ஒன்றுமில்லை; ஒருநாள் நீங்கள் இங்கே தங்கினதால் எனக்கு ஒன்றும் அப்படி அசௌகரியம் ஏற்பட்டு விடாது. இங்கேயே இருக்கலாம்” என்றார் விசுவநாதய்யர்.

“முன்னே பின்னே தெரியாதவனிடம் நீங்க ரொம்ப ஆதரவா இருக்கேள்’ என்றான் சீதாராமன்.

“அப்படி ஒண்ணும் இல்லே. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். அவர் சம்சாரமும் எங்காத்துக்கு ரொம்பவும் சிநேகிதம்தான். சட்டையைக் கழட்டி விட்டு ஸ்நானம் பண்ணுங்கோ. இரண்டாங் கட்டிலே வெந்நீர் இருக்கு. நான் ஆபீஸுக்குப் போய்ப் பதினோரு மணிக்கு வரேன். அப்புறம் சாப்பிடலாம்” என்றார் விசுவ நாதய்யர்.

“நளினி! நளினி!” என்று கூப்பிட்டார்.

இடுப்பில் ராஜுவுடன் நளினி உள்ளே வந்ததும் அவளிடம் சொன்னார்: “இந்த மாமாவுக்கும் குளிக்க வெந்நீர் எடுத்து வை. சின்னம்மா கிட்டேச் சொல்லு – இவரும் இங்கே சாப்பிடுவார்னு.”

நளினி சொன்னாள்: “சரி: ஆனால் இந்த பட்டணத்து மாமாவைத் தேடிண்டு வாசல்லே யாரோ ஒத்தர் காத்திண்டிருக்கார்!”

“யார் அது?” என்றான் சீதாராமன் திடுக்கிட்டவனாக.

அவன் முகத்தில் படர்ந்த கவலைக் குறியை நளினியும், விசுவநாதய்யரும் கவனிக்காமல் இல்லை.

“யாரோ குருஸ்வாமியாம். வந்து பத்து நிமிஷமாச்சு. வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கார்” என்றாள் நளினி.

“குருஸ்வாமியா?” என்றான் சீதாராமன். அவன் முகத்தில் படர்ந்த கவலைக் குறி மறைந்தது. அவன் குரலிலே ஓர் அலட்சியம் தொனித்தது. ஆனால் ஓர் அசட்டுக் குறியும் படர்ந்தது; ஏதோ விஷயம் தெரியாது தடுமாறுகிறவன் போலிருந்தான் அவன்.

இரண்டொரு வினாடியில் சமாளித்துக் கொண்டான். பிறகு சொன்னான். “என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் போனான்.

விசுவநாதய்யர் சட்டையை மாட்டிக் கொண்டு ஆபீசுக்குக் கிளம்பத் தயாரானார்.

நளினி தன் இடுப்பிலிருந்த ராஜுவைக் கீழே விட்டு விட்டு அவளுடைய பட்டணத்து மாமாவைப் பின் தொடர்ந்து வாசல் பக்கம் போனாள்.

வாசலில் வந்த சீதாராமனைக் கண்டவுடன் குருஸ்வாமி எழுந்து திண்ணையிலிருந்து இறங்கி சீதாராமனை நோக்கி வந்தார். இருவரும் எதிரும் புதிருமாகத் தெரு திண்ணையில் நெருங்கி உட்கார்ந்தார்கள்.

சீதாராமன் கேட்டான்: “எப்பொழுது நீங்கள் இங்கே வந்தீர்கள்?” என்று.

“நீ வந்த ரெயிலிலேயே தான் நானும் வந்தேன்” என்றார் குருஸ்வாமி புன்னகையுடன்.

“ஓஹோ!…. உங்களுக்கு விஜயபுரத்தில் யாரும் உறவு இருப்பதாக எனக்குத் தெரியாதே!” என்றான் சீதாராமன்.

“நானும் விஜயபுரம் வரதாக நினைக்கவேயில்லை” என்றார் குருஸ்வாமி. இரண்டொரு நிமிஷங்களுக்குப் பிறகு அழுத்தமாக “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்!” என்றார்.

“என்னைப் பார்க்கவா?” என்றான் சீதாராமன் ஆச்சரியத்துடன்.

“ஆமாம். உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்!” என்றார் குருஸ்வாமி.

“நான் வந்த ரெயிலிலேதான் வந்தேன் என்கிறீர்கள்; ஆனால் நான் பார்க்கவில்லையே!” என்றான் சீதாராமன்.

“நீ இரண்டாவது வகுப்பில் வந்தாய். நான் மூன்றாவது வகுப்பில் வந்தேன்” என்றார் குருஸ்வாமி.

“அது சரி…”

“அதுதான் சரியல்ல என்று சொல்ல வந்தேன். நீ இரண்டாவது வகுப்பில் ஏறியது இதுதான் முதல் தடவை. நான் மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்ய நேர்ந்ததும். பல வருஷங்களில், இதுதான் முதல் தடவை” என்றார் குருஸ்வாமி.

“அப்படியா?” என்றான் சீதாராமன் ஓர் ஏளனச் சிரிப்புடன்.

“அந்த நிலைமையை மாற்றிக்கொண்டு போவது என்கிற உத்தேசத்துடன்தான் உன்னைப் பார்க்க இப்போது வந்தேன்” என்றார் குருஸ்வாமி.

“என்னை நீ பார்த்ததால் நிலைமை மாறிவிடும் என்று எனக்கு நம்பிக்கையில்லையே!” என்றான் சீதாராமன்.

“எனக்குப் பூரண நம்பிக்கையிருக்கிறது” என்றார் குருஸ்வாமி.

“அதைப்பற்றி எனக்கு ஒரு ஆக்ஷேபமும் இல்லை. விஜய புரத்திலே இரண்டு நாள் தங்கினால் நீ என்னை மறுபடியும் வந்து பார். எனக்கு இப்போ நாழியாகிறது” என்று எழுந்தான் சீதாராமன்.

அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் குருஸ்வாமி. அவர் பிடியிலிருந்து உதறமுடியவில்லை சீதாராமனால். உதறித் தள்ளிவிட்டு நகர்ந்துவிட முடியாது.

“என்ன வேண்டும் உனக்கு?” என்றான் சீதாராமன்.

“அப்படிப் பேசு; அதுதான் சரி” என்றார் குருஸ்வாமி. சற்று நேரங் கழித்துச் சொன்னார்: “உட்காரப்பா உட்காரு. பிறத்தியார் கவனிக்காமல் காதோடு காது வைத்த மாதிரி காரியத்தை முடித்துக் கொள்வதுதான் பரஸ்பரம் லாபகரமான வழி. உட்காரு.”

சீதாராமன் உட்கார்ந்தான். தோல்வியுற்றுவிட்டதைக் காட்டிக்கொண்டால் ஆபத்து என்று உணர்ந்தவனாகச் சொன்னான்: “உன்னைப் பட்டணத்திலே ரொம்பப் பேர் தேடிண்டிருக்காளாமே?”

“தேடட்டுமே! இந்தக் குருஸ்வாமி அதற்கெல்லாம் பயந்துவிடற ஆசாமியில்லை” என்றார் குருஸ்வாமி.

“தெரிகிறது.”

“தெரிந்தா? இன்னொன்றும் தெரிந்துகொள் உனக்கு நல்லது. நான் சொல்றபடி கேட்காது போனால் உன்னையும் நாளைக்கே பலர் தேட ஆரம்பித்து விடுவார்கள்” என்று பயமுறுத்தினார் குருஸ்வாமி.

“தேடட்டுமே! குருஸ்வாமி செய்கிற காரியத்தை சீதாராமனால் செய்ய முடியாதா?” என்றான் சீதாராமன்.

“அவ்வளவு நன்றாகச் செய்ய முடியாது என்றுதான் நான் சொல்கிறேன். சீதாராமனுக்கு இம்மாதரி விஷயங்களில் அனுபவம் போதாது” என்றார் குருஸ்வாமி.

“இதென்ன வெட்டிப் பேச்சு? வந்த காரியத்தைச் சொல்லு” என்றான் சீதாராமன் பொறுமை இழந்தவனாக.

“அப்படி வா தம்பி!” என்றார் குருஸ்வாமி. மேலும் சொன்னார்: “நான் நியாயப்படி நடக்கிறவன். தவிர உன் சாமர்த்தியத்தையும் ஒப்புக்கொள்கிறேன். என்னையே ஏமாற்றி விட்டாயே நீ! சபாஷ்! எனக்கு வேண்டியது நியாயம்தான்.”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” “புரியறதுக்கு அவசியமே கிடையாது தம்பி. எனக்குச் சேரவேண்டியது பதினாயிரம்தான்” என்றார் குருஸ்வாமி.

“பதினாயிரமா? ஏதப்பா எங்கிட்டப் பதினாயிரமும் இருபதினாயிரமும்!” என்றான் சீதாராமன்.

‘ஏது எப்படி என்றெல்லாம் உரக்கச் சொல்லலாமா?’ என்று கூறி நகைத்தார் குருஸ்வாமி.

இதற்குள் ஆபீசுக்குக் கிளம்பத் தயாராக விசுவநாதய்யர் வெளியே வந்தார். அவர் சீதாராமனிடம். “குளிச்சு விட்டுத் தயாராக இருங்கள்; நான் பதினோரு மணிக்கு வரேன்” என்றார்.

“சரி” என்றான் சீதாராமன். “தந்தியை அடித்து விடுங்கள்” என்றான்.

விசுவநாதய்யர் போனபிறகு குருஸ்வாமியிடம் சீதாராமன் சொன்னான்: “நீ சொல்ற விஷயங்களைக் கவனத்தில் வைக்கிறேன். எதற்கும் சாயங்காலம் வா நீ.”

குருஸ்வாமி சிறிது நேரம் யோசித்து விட்டுச் சொன்னார்: “வரேன். ஆனால் அதற்குள் எங்கிட்ட ஏதாவது விளையாடலாம்னு ஏற்பாடு செய்யாதே உன்னால் சமாளிக்க முடியாது.”

குருஸ்வாமி போனபிறகு கொல்லைக் கூடத்திற்குக் குளிக்கப் போனான் சீதாராமன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !