நளினி
க. நா. சுப்ரமண்யம்

மீண்டும் வந்தவன்

சீதாராமனே வந்திருந்தான் என்றால் நளினி அதிக திருப்தி அடைந்திருப்பாள் என்பது உண்மைதான். அவனை விட வயதானவராக அவன் சாயலாகவே வேறொருவர் வந்திருந்ததும் ஒரு விதத்தில் நளினிக்குத் திருப்தியே தந்தது.

சீதாராமனை அச் சந்தர்ப்பத்தில் விஜயபுரம் அக்ரகாரவாசிகள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. மூன்று வருஷங்களுக்குமுன் நடந்த சம்பவங்கள் அநேகருடைய ஞாபகத்திலிருந்து அழிந்தே போயிருக்கும் அல்லது அந்த ஞாபகங்களின் வேகம் சற்றுக் குறைவாகவே இருக்கும். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் காரணமாக “பாவம், சாது! அவர் பிழைப்பிலே மண்ணைப் போட வந்து முளைத்தானே!” என்று சீதாராமனைத் திட்டியவர்கள் தான் அதிகமே தவிர, பாங்கிக் கொள்ளைக் காரன், அயோக்கியப் பதர் என்று சீதாராமனையே தெரிந்து திரட்டியவர்கள் சொல்லப் போனால் மிகவும் குறைவு தான். சொல்லப் போனால் மிகவும் குறைவுதான்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் என்னவோ அன்றே அவனை மன்னித்துவிட்டார். அவரால் மன்னிக்க முடிந்தது. விதி என்கிற ஒன்று எல்லாவற்றிற்கும் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் ஆட்டி வைக்கிறது. யாரும் தன்னுடைய காரியங்களுக்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதற் கில்லை என்கிற ஒரு சித்தாந்தத்தைப் படைத்துவிட்டவர் களுடைய வாழ்க்கை உண்மையிலேயே சுலபமானதாகி விடுகிறது. அவர்களுக்கு விரோதிகளும் அதிகம் ஏற்படுவ தில்லை. எல்லோரையும் விதியின் விளையாட்டுக் கருவிகள் என்று அவர்கள் எண்ணுவது போல அவர்களே விதியின் விளையாட்டுக் கருவிகளாகக் காற்றடிக்கிற பக்கம் ஒதுங்கிக் கொண்டு எப்படியோ காமா சோமாவென்று மேடுபள்ளம் அதிகமில்லாத வாழ்க்கை நடத்திவிடுகிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு மிகவும் சிரமமான தசைதான் அது.

ஆனால் அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கூடத் தன் சிரமதசை எப்பொழுது விலகும் என்று அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. விலகுமா என்று கூட அவர் சிந்திக்க வில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்பிருந்த சிரமமல்லாத தசைக்கும் இப்பொழுதுள்ள சிரமதசைக்கும் உள்ள வித்தி யாசம் மிகவும் சொல்பமே என்று அறிந்தவர் போல இரண்டையும் ஏற்றுக் கொண்டு அனுபவித்தார்.

பர்வதத்தம்மாளோ அப்படியல்ல! சிரமத்தில் பாதி அவளாகக் கிளறிவிட்டுக் கொண்டு பட்ட சிரமம். அதனாலேயே அதிக சிரமம் தந்தது என்றுகூடச் சொல்லலாம். “தம்பி, தம்பி” என்று பெருமை பீத்திக்கொண்டு அடுத்த வீடுகளுக்குப் போய் ஏதாவது கடன் வாங்க வந்த சாக்கில் பட்டணத்துத் தம்பியின் பிரதாபங்களைப் பற்றி ஒரு சர்க்கம் சொல்லிவிட்டு வந்த அந்த மனநிலைதான் அவளை அதிகமாகத் துன்புறுத்தியது. அக்கிரகாரத்து ஸ்திரீகள் நாலு பேர் கூடினால் நாக்கில் நரம்பில்லாமல் பிறரைப் பற்றித் துளியும் அனுதாபமே தொனிக்காமல் வம்பளக்கக் கூடியவர்கள் தான். எனினும் தனித்தனியே ஸ்திரீகளாகக் கருதும் போது மிகவும் மென்மை யான இளகிய அனுதாபம் நிறைந்த மனம் படைத்தவர்கள் தான். அதாவது பிறரைப் பற்றி வம்பளக்கும் போதே தங்களுக்கு அம்மாதிரி நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்று சிந்திக்கிறவர்கள் தான் வம்பளக்கும் கோஷ்டியில் யாராவது ஒருவர் “ஐயோ பாவம்!, என்று ஒருதுளி அனு தாபமும் பரிவும் காட்டிவிட்டால் போதும் எல்லோருமே “ஐயோ பாவம்!” என்று அங்கலாய்க்கத் தொடங்கி விடுவார்கள். மனத்தில் இருக்கும் அனுதாபம் பொங்கி வழிந்து பொல பொலக்கத் தொடங்கிவிடும்.”

பர்வதத்தம்மாளைப் பற்றி முன்பெல்லாம் நல்லபிப் பிராயம் வைத்திராதவர்களுக்குக்கூட சீதாராமன் காரணமாகவும் (தெரிந்தே தெரியாமலோதான்!) கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் சிரமதசை காரணமாகவும் இப்போது மனசிலே நல்லபிப் பிராயம்தான். நளினியின் சின்னம்மாளே இதற்கு உதாரணம். முன்பெல்லாம் பர்வதத்தம்மாள் வந்தால் சின்னம்மா முகம் கொடுத்துக் கூடப் பேசமாட்டாள். இப்பொழுது நளினிக்குப் போட்டியாக அவள் கூடச் சிறிது நேரம் சிலசமயம் பர்வதத்தம்மாளுடன் பேச வருவாள். வேறு எதுவும் முக்கியமான விஷயம் பற்றி இராது. ஊர் வம்பு, பிறருக்குச் சொல்லா விட்டால் திருப்தி தராத வீட்டுக் காரியங்கள் – இந்த மாதிரி.

நளினியின் தகப்பனார் விசுவநாதய்யர் தந்தி மெஷின், அது பாட்டுக்குக் கட்டுக் கட வாசிக்குமே தவிர அந்தக் கட்டுக் கடவின் அர்த்தமெல்லாம் அதன் பொறுப்பல்ல. நாலைந்து நாட்களே அவருக்கு சீதாராமனைப் பற்றி ஞாபகம் இருந்தது. அதற்குப் பிறகு அவனை அடியோடு மறந்துவிட்டார். அவருக்கு எவ்வளவோ கவலைகள்!

இன்று காலையில் நளினி எதிர்வீட்டுக்கு யாரோ விருந்தாளி வந்து இறங்குவதைக் கவனித்துக்கொண்டு நிற்கையில் ஸ்நானம் செய்துவிட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டே அவர் வாசலுக்கு வந்தார். வேடிக்கையாக நளினியைக் கோபித்துக் கொண்டார். “இந்த அக்கிரகாரத்திலே உனக்கு வேடிக்கை பார்க்க நாள் பூராவும் அப்படி என்னதான் இருக்கிறதோ!” என்றார்.

“வேடிக்கை பார்க்கறதுக்குன்னு பட்டணத்திலே பெண்ணுக்கு ஒரு மாளிகை கட்டித் தாருங்களேன்” என்று கூறிக்கொண்டே சின்னம்மா வந்தாள்.

“மாளிகை கட்டித் தருபவனாக வந்தால் தானே கட்டித் தரான் நீ சொல்லணுமோ! நளினிக்கு நல்ல அதிர்ஷ்ட ஜாதகம் ” என்றார் விசுவநாதய்யர்.

“தெரியறதே! வரவேண்டிய காலத்திலே மாப்பிள்ளை கூட வராதிருக்கிறதே அதிர்ஷ்டம்தான்” என்று கேலி செய்தாள் சின்னம்மா.

இந்த விவாதத்தைக் காதில் வாங்கியும் வாங்காமலும், ஆனால் சிந்தனையில் போட்டுக் கொள்ளாமலே நின்றிருந்த நளினி தன் தகப்பனார் பக்கம் திரும்பிச் சொன்னாள்: “எதிராளாத்துப் பர்வதத்தம்மாளுடைய தஞ்சாவூர் தம்பி வந்திருக்கிறார். இப்பத்தான் வந்து வண்டியிலிருந்து இறங்கினார்.”

ஆமாம்; நளினி ஊகித்தது சரியே. வந்திருந்தது தஞ்சாவூரிலிருந்த ஜெயராம சாஸ்திரிகள்தான். அவர் சாதாரணமாக விஜயபுரத்துக்கு வரப்பட்டவரல்ல. தன் சகோதரியிடம் வாஞ்சைக் குறைவு என்பதல்ல. அவர் ஊரைவிட்டு வந்து விட்டாரானால் அவருடைய ஜீவனம் சிரமப்பட்டுப் போகும். தவிர, நாலைந்து குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவர் மனைவி தனியாகக் கஷ்டப்பட வேண்டி வந்துவிடும். இதை எல்லாம் உத்தேசித்து அவர் ஊரை விட்டுக் கிளம்புவதே கிடையாது. மிகவும் அவசியமான காரியம் இருந்தாலொழியக் கிளம்பமாட்டார்.

இப்பொழுது அவர் விஜயபுரம் வந்திருந்தது மிகவும் ஒரு அவசியமான காரியத்தை முன்னிட்டுத்தான். என்ன காரியம் என்று நளினியோ, விசுவநாதய்யரோ, சின்னம்மாளோ அவர்கள் வீட்டுத் திண்ணையிலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டு நின்றபொழுது ஊகிக்கவில்லை.

ஜெயராம சாஸ்திரிகள் வைதிகர்தான். ஏதோ புஸ்தகங் களிலிருந்தும், குருமுகமாக அத்தியயனம் செய்தும் நெட்டுருப் போட்டிருந்த மந்திரங்களைக் கடகடவென்று உருட்டிவிட்டு அணாக் கணக்கில் தட்சிணை வாங்கி, ரூபாய்க் கணக்காக அதைப் பெருகவிட்டு, தம்பிடிக் கணக்கில் செலவு செய்து மிச்சம் பிடித்து ஏதோ தங்குவதற்கு ஒரு வீடு, கூட்டுச் சீட்டு இரண்டொன்றில் கொஞ்சம் பணம் என்று லௌகிகம் தெரிந்த மனிதராகத் தான் காலந் தள்ளி வந்தார். தஞ்சாவூர் நகரிலிருந்த எத்தனையோ வைதிகர்களில் அவரும் ஒருவர்; சற்றுக் கெட்டிக்காரர். கூடியவரையில் நியம நிஷ்டை தவறாதவர் என்று அவருக்குப் பெயர்.

அவர் வந்து தமக்கை வீட்டு வாசலில் வண்டியிலிருந்து இறங்கு முன்னரே ஒரு தினுசாக எதிர்வீட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பெண்ணைப் பார்த்துவிட்டார். பார்ப்பதற்குப் பெண் லட்சணமாகத்தான் இருந்தாள். அவர் தம்பி சீதாராமன் சொன்னது வாஸ்தவம்தான். சர்க்கார் உத்தியோகம் பார்த்து வந்தவருடைய பெண். பார்க்க அழகாகவும் இருந்தாள் தாயில்லாத பெண்ணென்று சற்றுச் சிறப்பாகவே எல்லாம் செய்வார்கள். தன் தம்பியினுடைய ஆசை பைத்தியக் காரத்தனமான ஆசை என்றே முதலில் ஜெயராம சாஸ்திரிகளுக்குப் பட்டது.

ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அவர் தம்பிக்குத் தான் என்ன குறைவு? வயது அதிகமில்லை. பார்க்க நன்றாகத் தான் இருந்தான். பி.ஏ. படித்தவன். கொஞ்ச காலம் நல்ல உத்தியோகமும் பார்த்தவன். எப்படியோ கையில் கொஞ்சம் பணம் சேரவே சொந்தத் தொழில் செய்தான். சொந்தத் தொழில் செய்வது லாபகரமானது. பிறரிடம் கைகட்டிச் சேவகஞ் செய்து கண்ட லாபம் என்ன என்று அவன் கேட்டதும் உண்மைதான். இரண்டு வருஷமாக நாணயமாகவே தொழில் செய்கிறான். ரைஸ் மில் ஒன்று, எண்ணை மில் ஒன்று, ஒரு மளிகைக் கடை எல்லாம் சிறிய அளவில்தான். என்னவோ இதுவரை நஷ்டம் வராமல் ஏதோ கூடியவரையில் லாபகரமாகவே தான் நடந்தும் வருகிறது. பொறுப்புத் தெரியாதவன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் தமையன் என்கிற முறையில், தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து அவனுக்குச் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவது தன் கடமை என்று உணர்ந்தார் ஜெயராம சாஸ்திரிகள்.

அவர் யோசனைதான் அது. விஜயபுரம் தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் சம்மதித்தால் அவர் பெண் நளினியை மணந்துகொள்ளச் சீதாராமனுக்கு ஆசை.

“பெண் வீட்டுக்காராளாக வரணுமே தவிர நம்ம போய்க் கேட்கலாமோடா?” என்று ஆட்சேபங்கள் செய்து பார்த்தார் சாஸ்திரிகள்.

“பெண் வீட்டுக்காராளுக்கு என்னைப் பற்றி விவரம் தெரியாது. தப்பாக நினைக்கும்படியாகக் கூடச் சந்தர்ப்பங்கள் இருந்தன ” என்றான் சீதாராமன்.

“மூன்று வருஷத்துக்கு முன்னோடி விஜயபுரம் போனேன்னு சொன்னயே, அப்போ ஏதாவது….” என்று ஜெயராம சாஸ்திரிகள் கேட்டார். இந்த நாகரிக உலகத்தின் வேதத்திற்கேற்ப நடந்து சமாளித்துக் கொள்வது சாஸ்திரி களுக்குச் சிரமமாகத்தான் இருந்தது. அவர் தீங்கு செய்தாலும், தவறு செய்தாலும், பாவம் செய்தாலும் தற்கால சௌகரியத் தார்த்தத்தை உத்தேசித்தும் பிற்காலத்தில் ஏற்ற பரிகாரமும் பிராயச்சித்தமும் செய்துவிடத் தயாராக இருக்கிற மனோ பாவத்திலேயேதான் செய்பவர். யாரும் பிராயச்சித்தத்தை தீமையின் விளைவை அனுபவிக்க முடியாமல் போய்விட முடியும் என்று அவர் எதிர்பார்த்திருப்பவரல்ல. சீதாராமன் என்னென்ன பாபங்கள் செய்தானோ, என்னென்ன பரிகாரங்கள் செய்து எப்படி எப்படி அனுபவித்துச் சரிக்கட்ட இருந்தானோ என்பதுபற்றி அவர் மனத்தில் உள்ளூரப் பெருங் கவலைதான். அவன் பட்டணத்துப் பாங்கியில் வேலையாக இருந்து, அதை விட்டு வந்தபின் நடந்த சில சம்பவங்கள் அவர் மனத்திற்கு இன்று நினைத்தாலும் திகைப்பும் பீதியையும் ஊட்டுவனவாகவே இருந்தன. ஆனால் அதற்காகத் தம்பியை விட்டுக் கொடுத்துவிட முடியுமா?

சீதாராமன் மற்றதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஒரே அடியாகச் சொன்னான்: “நீ விஜயபுரம் போய்ப்பார். நான் தஞ்சாவூரில் இருக்கிற சமாசாரம் கூடத் தெரியாது. நீயும் அக்காவைப் பார்த்துப் பல வருஷங்களாகின்றன. போய் விட்டு வா. அந்தப் பெண்ணுக்கு இன்னும் கலியாணமாகா விட்டால் விசாரித்துப் பார். சம்மதித்தார்களானால் முகூர்த்தம் கூட வைத்துக்கொண்டு வந்துவிடு” என்றான்.

“பைத்தியக்காரப் பயல்! ரெண்டு எழுத்துப் படிச்சுட்டா மனசிலே என்னெல்லாமோ தோணத் தொடங்கி விடறது. அப்புறம் கட்டிப்பிடிக்க முடியறதில்லை” என்று முணு முணுத்துக் கொண்டதான் ஜெயராம சாஸ்திரிகள் விஜய புரத்துக்குக் கிளம்பினார். காலை ரயிலில் கிளம்பினார் – மாலை அல்லது இரவுக்குள் திரும்பிவிடுவதாக.

வண்டியிலிருந்து இறங்கும் போதே பெண்ணைப் பார்த்தாகி விட்டது கல்யாணமாகவில்லை. சரி, அக்காவை விசாரித்தால் மற்றவை தெரிந்துவிடுகிறது என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் போனார்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு என்னவோ விசுவ நாதய்யரைச் சந்தித்து அது விஷயமாகக் கேட்கவே மனம் வரவில்லை. அசாத்தியமான காரியத்தைச் சாதிக்க முடியாதா, பார்க்கலாமே என்று பார்ப்பதற்குப் பெண்களுக்குள்ள சுபாவமோ, அல்லது நளினி தன் தம்பிக்கு மனைவியாக வந்து வாய்க்கமாட்டாளா என்கிற ஓர் ஆசையோ, அல்லது நளினிக்கு சீதாராமனிடம் ஒரு பிரியம் விழுந்திருந்தது என்று கண்டு கொள்ள இருந்த ஒரு இயற்கையான சாதுர்யமோ தூண்ட சின்னம்மாவிடம் பர்வதத்தம்மாள், அன்று மத்தியானமே விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டாள். இந்தக் கல்யாணத்துடன் விஜயபுர அக்கிரகாரத்திலே தன் மதிப்பே ஒரு படி உயர்ந்துவிடும் என்று அவள் எண்ணினாள்.

கல்யாணமாகி விட்டால் போதும், மாப்பிள்ளை யாரானால் என்ன என்பது சின்னம்மாவின் அந்தரங்க அபிப்பிராயம். ஆனால் வெளிப்படையாக, அவரைக் கேட்கணும் என்று சொல்லி விட்டுச் சும்மா இருந்துவிட்டாள்.

மாலையில் விசுவநாதய்யர் ஆபீஸிலிருந்து திரும்பி வந்த பிறகு சின்னம்மாவுக்கும் அவருக்கும் இடையே இது குறித்து விவாதம் நிகழ்ந்தது. விசுவநாதய்யருக்கு சீதாராமன் நல்ல வரன் என்றே பட்டது. ஆனால் பழைய கலவரம்….?

அவர் நளினியைக் கேட்டார்.

“போ, அப்பா!” என்றாள் நளினி என்றுமில்லாத லஜ்ஜையுடன்.

“இல்லையம்மா; சொல்லு, கேலி இல்லை. உன் சந்தோஷம் இதைப் பொறுத்துத்தானே இருக்கு?” என்றார் விசுவநாதய்யர்.

“அந்தக் குருஸ்வாமின்னு ஒருத்தர் வந்தப்போ அவருக்குப் பயந்துண்டு ஓடிப் போனாரே…. எனக்குச் சொல்லத் தெரியல்லையப்பா!” என்று மனத்திலிருந்ததை மறைத்தும் மறைக்காமலும் பதில் அளித்தாள் நளினி.

சின்னம்மா குறுக்கிட்டாள்: “அதெல்லாம் பழைய சமாசாரம். அந்தக் குருஸ்வாமி காலிப்பயல். ஜெயில்லே இருக்கான். என்ன மிரட்டினானோ என்னவோ!”

“அது சரி. ஆனால் இவர் ஒண்ணும் தப்புத் தண்டாச் செய்யல்லேன்னு தெரிஞ்சுட்டா எனக்கு நிம்மதியாக இருக்கும். இல்லாட்டா ஆயுஸு பூராவும்…” என்றாள் நளினி.

விசுவநாதய்யர் அன்று மாலையே ஜெயராம சாஸ்திரிகளைச் சந்தித்துத் தன் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்தார். ஜாதகம் பொருந்தியே இருந்தது.

கல்யாணத்துக்கான பேச்சுகளெல்லாம் முடிந்த பிறகு கல்யாணத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் நடந்தது.

நளினிக்கு மட்டும் மனசிலே ஒரு கலவரம்: “எனக்கு நிச்சயமாக அவர் குற்றம் செய்யவில்லை என்று தெரிந்தால் தான் நிம்மதி பிறக்கும்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். விசுவநாதய்யரிடம் இரண்டொரு தரம் பிரஸ்தாபித்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. என் மாப்பிள்ளை ரொம்ப நல்லவன். நீ வேணுமானால் கல்யாணம் ஆன பிறகு அவனைக் கேட்டுப் பாரேன்” என்றார்.

கல்யாணம் ஆவதற்கு முன் நளினிக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவும் இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !