
நளினி
க. நா. சுப்ரமண்யம்
விஜயபுரத்தில்
“நளினி! அடீ நளினி! எங்கேயடிம்மா தொலைஞ்சு போயிட்டே!” என்று சமையல் அறையிலிருந்தபடியே குரல் கொடுத்தாள் சின்னம்மா.
“ஏன் சின்னம்மா! இதோ இருக்கேனே. முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரத்துக்குள்ளே எட்டுத் தரம் கூப்பிட்டுடறயே!” என்று கூறிக்கொண்டே. அந்தக் கோபத்திலும் தன் விளையாட்டுத் தனத்தை மறக்காமல், குதித்துக் குதித்துக் கொண்டே உள்ளே வந்தாள் நளினி.
“கெட்ட கேட்டுக்கு வாய்வேறே கிழியறது! திண்ணையிலே நின்னுண்டு தெருவோட போற தடியனை எல்லாம் பார்த்துண்டு… கல்யாணம் பண்ணிக் குடியும் குடித்தனமுமா நாலு பிள்ளை பெத்தெடுக்க வயசாச்சு!” என்றாள் சின்னம்மா.
“நாலு பிள்ளையா?” என்று கேட்டுவிட்டுக் கலகல வென்று சிரித்தாள் நளினி.
அவள் சிரித்தது சின்னம்மாவுக்கு அதிக ஆத்திரத்தை ஊட்டியது. “வர வர நன்னாத்தானிருக்கு உன் காரியம் எல்லாம்! சொன்னா சித்தி படுத்தறா அப்படீம்பா ஊரெல்லாம். ஒங்கப்பாவுக்கு வேறே பயந்துண்டு கிடக்க வேண்டியிருக்கு!” என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டே தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் உள்ளே வந்துவிட்டார்: “பாவம், அந்தப் பொண்ணைப் போட்டு ஏன் சதாப் படுத்திண்டே இருக்கே! தாயில்லாப் பொண்ன்ணு கொஞ்சம் கரிசனமாகத்தான் இரேன்” என்றார்.
“அதெல்லாம் சரி; தாயிருக்கிற பிள்ளை பசியாலே துடித்து வாடறது கேப்பாரில்லை. அதுக்குச் சாதம் பிசைஞ்சு வைச்சு அரைமணியா உலர்ந்து போறது. சாதத்தை ஊட்டுடின்னு கூப்பிட்டுச் சொன்னால் நான் பொல்லாதவள்; அவள் தாயில்லாப் பெண்…” என்றாள் சின்னம்மா.
“ஏண்டியம்மா நளினி! காலாகாலத்திலே அந்தக் குழந்தைக்கு வேண்டியதைச் செய்துவிட்டு அப்புறம் ஏதாவது கூத்தடிக்கப்படாதா?” என்றார் விசுவநாதய்யர்.
“இல்லேப்பா; மளிகைக்கடை வைத்தா மாமா பிள்ளை ராமு வந்தான். அவங்கிட்டே அவன் சித்தப்பாவைப் பத்தி விசாரிச்சுண்டிருந்தேன்….” என்றாள் நளினி.
“உம்….” என்றார் விசுவநாதய்யர்.
“பத்து வயசு ஆறதுக்குள்ளே எத்தனை ஊர் வம்படி அம்மா உனக்கு!” என்றாள் சின்னம்மாள்.
“ராமு சொன்னான் அவன் அம்மா சொல்லிண்டிருக்கானு. இந்தக் கட்டுப் பெட்டியும் அந்த அசட்டுப் பொம்மனாட்டியுமா அந்த வக்கீலை நம்பிப் பணத்தை எடுத்துண்டு பட்டணத்துக்குப் போயிருக்காளே, என்ன ஆகுமோன்னு சொன்னாளாம்” என்றாள் நளினி.
“வைத்தியநாதய்யர் என்ன சொன்னாராம்?” என்று கேட்டார் விசுவநாதய்யர்.
“வைத்தா மாமா சொன்னாராம்: ‘கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அப்படி ஒண்ணும் ஏமாந்து பணத்தை விட்டு விடமாட்டார். கெட்டிக்காரர்தான்’ அப்படின்னாராம். “உங்க தம்பி சாமர்த்தியம் உங்களுக்கே தெரியாது.” என்றாளாம் அவர் மனைவி. “என்னத்தை பண்றது. ஸ்ரீனிவாசனை எனக்குக் கூடத்தான் பிடிக்கவில்லை. ஆனால், தம்பியாச்சே;எங்காதுக்கு வராதடா”ன்னு எப்படி மனந் துணிஞ்சு சொல்றது? அப்படின்னாராம் வைத்தா மாமா, அவர் மனைவி பதில் சொன்னாளாம். “இந்தக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், அவர் பெண்டாட்டி; அவர் மச்சினன் இவா விஷயமா உங்க தம்பியாலே சிவனேன்னு இருக்கிற நம்மபேரு சந்தி சிரிக்கப் போகிறது” என்றாளாம். மற்றதை எல்லாம் கேக்கறதுக் குள்ளே சின்னம்மா கூப்பிட்டா- “வந்துட்டேன்” என்றாள் நளினி.
“உனக்கு அக்கிரகாரத்திலே ‘நியூஸ் பேப்பர்’னு நல்ல பேர் தாண்டி வச்சிருக்கா” என்றாள் சின்னம்மா சிரித்துக் கொண்டே.
“ராமு எங்கே இப்போ?” என்று விசாரித்தார் விசுவநாதய்யர். மற்ற விஷயங்களையும் அவனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினார் அவர்.
நளினி சொன்னாள்: “நீ கேட்டால் அவன் ஒண்ணும் சொல்லவே மாட்டான். எங்கிட்ட சொல்றான்னா உங்கிட்டேயும் சொல்வானா என்ன? தவிர, மேட்டுத் தெருவிலே குத்துப் பம்பரம் ஆடப் போயிட்டான் என்றாள். “இனிமே சாயந்தரம் பார்த்தாத்தான் அவனைப் பாக்கியை விசாரிக்கலாம்” என்று வருத்தத்துடன் சொன்னாள் நளினி.
பிறகு குதித்துக் கொண்டே சமையலறைக்குள் போய் அழ ஆரம்பித்துக் கொண்டிருந்த ராஜுவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, இடதுகையில் சாதம் பிசைந்து வைத்திருந்த வெள்ளிப் பேலாவை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். “அம்மு சாப்பிடறயாடா?” என்று தன் இடுப்பிலிருந்த ராஜுவைக் கேட்டுக் கொண்டே, கூடத்தில் இருந்த சின்னம்மாவை லக்ஷ்யமே செய்யாமல் மீண்டும் வாசல் பக்கம் போய்விட்டாள்.
“நன்னாருக்குடி கேட்பாரில்லே! இந்தப் பெண் அடிக்கிறகூத்து?” என்று முணுமுணுத்தாள் சின்னம்மா.
“கெட்டிக்காரக் குட்டி! ஊரிலே எத்தனை அசடும் அசமஞ்சமும் இருக்கு! அவாளை எல்லாம் போலவா இருக்கா நம்ம நளினி?” என்று பெருமையுடனேயே சொன்னார் விசுவநாதய்யர்.
இதை மறுத்துச் சொல்லச் சின்னம்மாவாலும் முடியாது. அவள் சொன்னாள்; “இருந்தாலும் அடங்காப் பிடாரியாக, வம்பு அளக்கரவளாக இருக்கப்படாது! “
“தானே சரியாகப் போறது, சின்னப் பெண் தானே!” என்றார் விசுவநாதய்யர்.
“நாளைக்குக் கல்யாணம் பண்ணிண்டு ஒத்தராத்திலே. போய் அடங்கி நடக்கத் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றாள் சின்னம்மா.
“ஏதோ நம்ம நளினியைப் பிரியமா வச்சுக்கிறவனாகத் தான் ஒருத்தன் வருவான்” என்றார் விசுவநாதய்யர்.
“அது எப்படியானாலும் சரி. எங்கேயாவது இளையாளாக மாத்திரம் கொடுத்துடாதேங்கோ! எவ்வளவு பிரியமாக இருந்தாலும் சரிதான். மூத்தாள் குழந்தைகளைப் படுத்தறான்னு ஊரிலே அபவாதம் சொல்லிண்டுதான் இருப்பா” என்றாள் சின்னம்மா.
விசுவநாதய்யருக்கும் கோபம் வந்தது. ஆனால் பேச்சை வளர்த்திக் கோபத்தையும் வளர விடுவானேன் என்று பேச்சை நிறுத்துகிற சாக்கில் சொன்னார்: “சரி சரி வம்பளந்துண்டு நிக்க எனக்குப் பொழுதில்லை. வெந்நீர் எடுத்து வை; ஸ்நானம் பண்ணிவிட்டு ஆபீசுக்குக் கிளம்பணும். ”
இடுப்பில் குழந்தையுடன் வாசல் திண்ணைக்குச் சென்ற நளினி, வழக்கம் போலச் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த குழந்தையிடம் பயமுறுத்தலாகவும் வேடிக்கை யாகவும் “பூச்சி! பூச்சி!” என்று கூப்பிட்டாள்.
“ச்சி… ச்சி….” என்று மழலை பேசியது குழந்தை.
“சாப்பிடறயா! அம்முவை எல்லாம் பூச்சிக்குப் போட்டுடட்டுமா?” என்றாள் நளினி.
“ச்சி… ஓடு” என்றது குழந்தை.
வாலை ஆட்டிக்கொண்டு நாலு கால்ப் பாய்ச்சலாக அங்கு ஓடிவந்த பூச்சிக்கு ‘அம்மு’ நிறையவே கிடைத்தது. பருப்பும் நெய்யும் விட்டுப் பிசைந்த சோற்றைத் தினம் சாப்பிட்டு அந்தப் பூச்சி கொழு கொழுவென்றுதான் இருந்தது. அதன் வால் பிய்ந்து விடும் போல ஆடிக்கொண்டிருந்தது.
பூச்சிக்குக் கண்டு மிஞ்சிய சாதத்தைக் குழந்தைக்கு ஊட்டி விட்டு வெள்ளிப் பேலா காலியானதும் உள்ளே போக நளினி யோசனை செய்த சமயத்திலே அக்கிரகாரத்து பிள்ளையார் கோவிலைத் தாண்டிக் கொண்டு ஒரு குதிரை வண்டி வந்தது. விஜயபுரத்துக்குப் பக்கத்திலே வெள்ளைக் குதிரை, அதுவும் அந்த மாதிரி வெள்ளைக் குதிரைபூட்டிய வண்டி அது ஒன்று தான் உண்டு. சாதாரணமாக அக்கிரகாரத்திற்கு வரும் யாரும்
அந்த வண்டியை அமர்த்திக் கொண்டு வருவதில்லை. யாராவது மைனர்ப் பிள்ளைமார்களோ, உல்லாச புருஷர்களோ அல்லது பட்டணத்துப் பெரிய வக்கீல் ஸ்ரீனிவாசனைப் போலப் பிறர் செலவில் பிரயாணம் செய்கிறவர்களோதான் அந்த வண்டியில் ஏறுவார்கள். அந்த வண்டிக்காரன், தன் வண்டியின் மதிப்புப் பூராவையும் உணர்ந்தவன். சற்று அதிகமாகவேதான் கூலி கேட்பான்.
அந்தக் குதிரை வண்டி அக்கிரகாரத்துக்குத் திரும்பி வருவதைக் கண்ட நளினி, இடுப்பில் வயிறு நிறைந்த குழந்தையுடன், கையில் காலி வெள்ளிப் பேலாவுடனும் “அதோ பார், குதிரை வண்டி” என்று குழந்தையிடம் சொல்லி விட்டுத் தானே குதிரை வண்டியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். இரண்டு நாள்களுக்கு முன் ஒரு குதிரை வண்டி அதே மாதிரி வந்து கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டு வாசலில் நின்றதும், அதிலிருந்து “பட்டணத்து மாமா?” என்று தான் பெயர் சூட்டிய வாலிபன் இறங்கியதும், அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வந்தன நளினிக்கு.
இந்தக் குதிரை வண்டியும் நேரே வந்து நளினியின் வீட்டிற்கெதிரேதான் நின்றது! அதே வாலிபன்தான் அதிலிருந்து இறங்கினான். இறங்கிய சீதாராமன் தன் தமக்கையின் வீட்டைப் பார்க்குமுன் நளினி வீட்டைத்தான் பார்த்தான். நளினி இடுப்பில் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தான். போன தடவையும் விஜயபுரம் அக்கிரகாரத்தில் இவளைத் தான் முதலில் பார்த்தேன். இப்பொழுது இவளையேதான். பார்க்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே திரும்பித் தன் தமக்கையின் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைத்தான். வீடு பூட்டியிருந்தது அவன் கண்ணில் பட்டது.
திரும்பி நளினியின் வீட்டுப் பக்கம் வந்து, “அவாள்ளாம் எங்கே?” என்றான்.
“ஊரிலில்லை” என்று முதலில் சுருக்கமாய்ப் பதில் அளித்தாள் நளினி. பிறகு அது போதாதென்று எண்ணிய வளாக விவரமாகச் சொன்னாள். “உங்க கேஸை நடத்தப் பட்டணத்துக்குப் போயிருக்கா” என்றாள்.
“கேஸா! என்ன? கேஸா?” என்றான் சீதாராமன் பிறகு, “அட, பரமசிவா!” என்றான்.
“உங்க அக்காதான்….” என்று சொல்ல ஆரம்பித்தாள் நளினி.
“அது சரி; உங்கப்பா இருந்தாக் கூப்பிடு” என்றான் சீதாராமன்.
தன் தகப்பனாரிடம் விஷயத்தைச் சொல்ல உள்ளே போனாள் நளினி. சொல்லிவிட்டு இரண்டே நிமிஷத்தில் வெளியே வந்தாள். “பெட்டி படுக்கையைக் கொண்டு வந்து இங்கே வைக்கச் சொன்னா. உங்களை உள்ளே வரச் சொன்னா” என்று சீதாராமனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
பெட்டி படுக்கையை உள்ளே கொண்டு வந்து வைத்து விட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு வண்டிக்காரன் போய் விட்டான். விசுவநாதய்யரும் சீதாராமனும் உள்ளே முன் கூடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப் பங்களில் நளினி சாதாரணமாக வெளியே வந்திருக்க மாட்டாள். ஆனால், என்னவோ தெரியவில்லை இடுப்பிலிருந்த குழந்தையைக் கூடக் கீழே விடாமல் வெள்ளிப் பேலாவை மட்டும் சமையல் அறையில் வைத்து விட்டு மீண்டும் திண்ணைக்கு நகர்ந்தாள்.
வாசல் திண்ணையில் ஒரு புது மனிதன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள்.
“யாரு மாமா?” என்று விசாரித்தாள் நளினி.
“சீதாராமன் இங்கேதான் இருக்கான்?” என்று விசாரித் தான் புது மனிதன்.
“ஆமாம், நீங்க யாரு?” என்று விடாமல் கேட்டாள் நளினி.
“என் பெயர் குருஸ்வாமி” என்றார் வந்தவர்.
“நீங்க வந்திருக்கிறதாகப் பட்டணத்து மாமா கிட்டச் சொல்லட்டுமா?” என்றாள் நளினி.
“வேண்டாம். தானே வருவான். பத்து நிமிஷம் கழித்துப் பார்க்கிறேன்” என்றார் குருஸ்வாமி.
இவ்வளவு நேரம் நளினியின் இடுப்பிலே சும்மா இருந்த குழந்தை ராஜு குருஸ்வாமியைப் பார்த்துக் கையையும் காலையும் வீசினான்.
“ஓடா… போடா…..” என்றான் ராஜு.
குருஸ்வாமி சிரித்தார்.
நளினிக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தை ராஜுவுக்கு அந்த
குருஸ்வாமியைக் கண்டால் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் சும்மா பேசாமல்தான் உட்கார்ந் திருந்தார்.



