
நளினி
க. நா. சுப்ரமண்யம்
குருஸ்வாமி மறைந்தார்
இருபதினாயிரத்துக்கு நோட்டுக்களும் ஏதோ சில சில்லரைகளும் இருந்தன. அவற்றில் நோட்டுக்களை மட்டும் காணவில்லை.
சிறிது நேரம் பிரமித்துப்போய் நின்றார் குருஸ்வாமி. எப்படிப் போயிருக்கும்? யார் எடுத்திருப்பார்கள்? என்று சிந்திக்க அவருக்கு அதிக நேரம் தேவையாக இல்லை.
சீதாராமன் தான் எடுத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார், அவர் ஒரு நொடியில், அன்று எல்லாக் குமாஸ் தாக்களும் போன பிறகும் அங்கு வேலை இருக்கிறது என்று தங்கியிருந்தவன் அவன்தான். காவல்காரன் கூட இல்லாத சமயத்தில் குருஸ்வாமியும் காபி சாப்பிடப் போயிருக்கும் போது பாங்கில் தனியாக இருந்தவன் அவன்தான். அவன் முன்பின் கேட்காமல் அன்று – அந்த இருபதினாயிரம் பாங்கில் கட்டப்பட்ட தினத்தன்று அவன் திடீரென்று லீவு கேட்ட தற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? வேறு என்ன இருக்க முடியும்?…
இதற்குள் பாங்குக் காவலாளியும் வந்துவிட்டான். அவனுக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டு குருஸ்வாமி டெலிபோன் மூலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனுப்பினார். அரைமணி நேரத்திற்குள் போலீஸார் வந்து விட்டார்கள்.
தன் சந்தேகங்களைத் தெளிவாகவே குருஸ்வாமி போலீஸாருக்குத் தெரிவித்தார். அவர் சீதாராமனைச் சந்தேகித்ததே சரி என்று போலீஸ் அதிகாரிகளுக்குப் பட்டது. விஜயபுரம் போலீஸாருக்கு சீதாராமனின் விலாசத்தைத் தெரிவித்து அவனை உடனே கைது செய்து சென்னைக்குக் கொண்டு வரும்படி உரிய அதிகாரிகளிடம் உத்தரவு வாங்கி அனுப்பிவிட்டுப் போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள்.
தன்னுடைய முயற்சிகளும் யுக்திகளும் பலிக்காமல் போய்விட்டனவே என்று குருஸ்வாமிக்கு அளவு கிடந்த வருத்தம். சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தபின் சீதாராமனைப் பற்றி அவருக்கேற்பட்டிருந்த சந்தேகம் மறைந்துவிட்டது. சீதாராமன் அப்படிச் செய்திருக்கக் கூடியவனல்ல. யாரோ தன் உத்தேசங்களை அறிந்திருந்தவன்தான் அப்படிச் செய்திருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. இந்த இருபதினாயிரம் போனதை வைத்து அதிகாரிகள் பாங்கிக் கணக்குகளைச் சோதனை போடுவார்கள். குருஸ்வாமியின் பழைய விவரங்க ளெல்லாம் வெளிவந்து விடும். சீதாராமனுடன் அவனும் ஜெயிலுக்குப் போகும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும்….
இரவு பூராவும் தூங்காமல் யோசனைகள் செய்தார் குருஸ்வாமி.
மறுநாள் காலையில் வழக்கம் போல் பாங்கி திறந்ததும், எல்லா அலுவல்களையும் நேரிலேயே கவனித்தார். சீதாராமனை மறுநாள்தானே போலீஸார் கொண்டு வருவார்கள் என்று போலீஸைக் கூப்பிட்டு விசாரித்தார். பாங்கி டைரக்டர்களுக்கு இருபதினாயிரம் திருட்டுப் பற்றிச் சொல்லி விட்டு, திருடியவன் பதுங்கி விடாதிருப்பதற்காக அத்திருட்டை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். போலீஸுக்கும், பாங்கி ரைடக்டர்களுக்கும் அது நியாயம் என்றே பட்டது. இதற்குள் மணி பன்னிரண்டாகி விட்டது. சாப்பிடப் போனார் குருஸ்வாமி. பிறகு பன்னிரண்டரை மணிக்குத்தான் தலைமைக் குமாஸ்தாவுக்குச் சீட்டுக் கொடுத் தனுப்பினார். தனக்கு உடம்பு சரியாக இல்லை என்றும், மாலையில் பாங்கிக்கு வரவில்லை என்றும், பாங்கி அலுவல்களைத் தலைமைக் குமாஸ்தாவே பார்த்துக் கொள்ளலாம் என்றும் சீட்டு எழுதி அனுப்பினார். அன்று மாலைப் பொழுது வரையில் அவர் செய்ய நினைத்திருந்த ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான பொழுது இருந்தது.
மாலையில் பாங்கி சாத்தும் வேளையில் மறுபடியும் போலீஸைப் போன்லே கூப்பிட்டு ஏதோ பேசிவிட்டு எல்லாக் கதவுகளையும் சாத்திக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார் குருஸ்வாமி.
பட்டணத்து பாங்கிக் கட்டிடத்திலிருந்து கடைசித் தடவையாக அவர் வெளிப்பட்டது அதுதான்.
மறுநாள் காலையில் விஜயபுரத்திலிருந்து கொண்டுவரப் பட்ட சீதாராமனைப் பந்தோபஸ்து செய்துவிட்டுப் போலீஸார் மேலே கேஸ் எடுப்பது எப்படி என்று விசாரிக்க குரு ஸ்வாமியைத் தேடிய போது குருஸ்வாமியைக் காணவில்லை!
அன்று பட்டணத்து பாங்கி பன்னிரண்டு மணிக்குத் தான் திறக்கப்பட்டது. பாங்கிக் குமாஸ்தாக்கள் ஆச்சரியத்துடன் வெளியே நின்றார்கள் பத்தரைமணியிலிருந்து, இரண்டு நாட்களுக்கு முன் பாங்கியில் இருபதினாயிரம் கொண்டு வந்து போட்ட அதே ஆசாமி ஒரு ஐந்நூறு ரூபாய் பணம் வாங்க வேண்டும் என்று வந்து, அவனும் பூட்டியிருந்த கதவுக்கு வெளியே, பாங்கிக் குமாஸ்தாக்களுடன் காத்திருந்தான்.
பாங்கி டைரக்டர்களையும் மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு போலீஸார் ஸ்தலத்துக்கு வரும்போது மணி பன்னிரண்டு. குருஸ்வாமியின் வீட்டில் பாங்கிச் சாவிகள் மேஜை மேலே கிடந்தன. அவற்றுடன் வந்து பாங்கிக் கதவுகள் திறக்கப்பட்டன. அன்று அலுவல்கள் எதுவும் நடக்காது என்று கூறிப் போலீஸார் பாங்கிக் குமாஸ்தாக்களையும் டைரக்டர் ஓரிருவரையும் உள்ளே போக விட்டுவிட்டுக் கதவைச் சாத்தி விட்டார்கள்.
இருபதினாயிரம் போட்டுவிட்டு ஐந்நூறு ரூபாய் வாங்கிப் வந்திருந்தவன் வெளியே வராந்தாவில் இரண்டு நிமிஷம் நின்றான். உடனே வக்கீலைக் கேட்க வேண்டியது தான். இருபதினாயிரத்துக்கும் ஆபத்து வந்துவிட்டது என்று அவனுக்குப் புரியச் சிறிது நேரம் பிடித்தது.
பாங்கிப் பணப் பெட்டியில் முதல்நாள் மீதியிருந்த சில்லரையையும் இப்போது காணவில்லை. வழவழவென்று தேய்ந்து போயிருந்த ஒரு விக்டோரியா காலத்துக் காலணா தான் கிடந்தது.
“பணம் இருந்த இடத்தை முழுவதும் காலிபண்ணி விடக் கூடாதே என்று காலணாவைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறான்” என்றார் பாங்கி டைரக்டர்களில் ஒருவர்.
“நம்ப மானேஜிங் டைரக்டர் நல்லவர் தான்” என்றார் வேறு ஒருவர்.
தன் மேஜை மேல் எல்லோர் கண்ணிலும் படும்படியாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான் குருஸ்வாமி. அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தான்:
“என்னை நீங்கள் தேடுவதில் லாபம் சிறிதும் இராது. நான் என்னுடையது என்று திட்டம் போட்டிருந்த இருபதினாயிரத்தை அவன் அடித்துப் போனது எனக்குச் சகிக்கவில்லை. அதைத் தேடிக்கொண்டு போயிருக்கிறேன். அந்த இருபதினாயிரத்துடன் சேர்த்து என்னால் பாங்கிக்குச் சேரவேண்டிய தொகை முப்பத்திரண்டாயிரத்து நானூத்துச் சொச்சம்.”
தங்கள்
குருஸ்வாமி,
இவ்வளவையும் கண்ட பிறகு போலீஸ் அதிகாரி கேட்டார்: “விஜயபுரத்திலிருந்து கொண்டு வந்திருக்கிற பையனை என்ன செய்வது? இந்த அயோக்கியர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவன்தான் திருடியிருப்பான் என்று அரெஸ்ட் செய்ய உத்தரவு வாங்கினேன்!”
“அவனை விசாரித்து விட்டு விடுவதுதான் நல்லது” என்றார் டைரக்டர்களில் ஒருவர்.
போலீஸ் லாக்கப்பிலேயிருந்த சீதாராமனைப் பட்டணத்து பாங்கிக்கே அழைத்து வந்தார்கள். போலீஸ் அதிகாரி உரிய தோரணையில் அவனை விசாரித்தார். ஆனால் அவன் தனக்கு அந்த இருபதினாயிரத்தைப் பற்றியோ, குருஸ்வாமியைப் பற்றியோ எதுவும் தெரியாது என்று ஒரேடியடியாகச் சாதித்தான். அவன் சொல்வதை நம்ப மறுக்கப் போதிய சாக்ஷியமும் இல்லை. ஓடிப்போன குருஸ்வாமியே திருடன் என்று தீர்மானிப்பதில் யாருக்கும் எவ்வித ஆக்ஷேபமும் இராது. அதுவும் ருஜுவாகாமல் போகும் வரையில் அப்படியே வைத்துக் கொள்வதே நியாயம் என்றும் பட்டது எல்லோருக்கும். சீதாராமனைத் தீர விசாரித்துவிட்டு விடுதலை செய்து விட்டார்கள்.
பாங்கி டைரக்டர்களில் ஒருவர் மற்றவர்களை விட சிறிது கெட்டிக்காரர். அவர் சீதாராமனைச் சொந்த ஹோதாவில் விசாரித்தார். “குருஸ்வாமி எதற்காக முதல் நாள் உன் பேரில் குற்றம் சாட்டிவிட்டு மறுநாள் மறைந்திருக்க வேண்டும்? பணத்தை அவரே எடுத்திருந்தாரானால் ஏன் ஒரு நாள் தாமதித்தார்! உடனே அவர் போயிருக்கலாமே!” என்றார்.
பாங்கி டைரக்டராயிற்றே என்று சற்று மரியாதையாகவே, “எனக்கு எப்படித் தெரியும்? குருஸ்வாமியின் காரியங்களை நான் எப்படிச் சொல்லமுடியும்?” என்றான்.
பிறகு அவன் மனத்திலிருந்த இன்னொரு விஷயத்தை அவன் அந்த பாங்கி டைரக்டரிடம் சற்றுப் பிரத்யேகமாகவே பிரஸ்தாபித்தான். “கையில் பத்துப் பன்னிரண்டு ரூபாய் தான் இருக்கிறது. அடுத்த மாதச் சம்பளத்தில் அட்வான்ஸாக ஏதாவது பணம் தரச் சொன்னால் தேவலை” என்றார்.
கெட்டிக்கார டைரக்டர் சொன்னார்: “அதெப்படி யப்பா முடியும்? அடுத்த மாதம் நம்ப பாங்கி நடக்கிறதா என்கிறதே சந்தேகம் அந்தப் பாவி குருஸ்வாமி எங்கள் தலையிலும் கையை வைத்துவிட்டுப் போய்விட்டானே” என்றார்.
பணம் பெயராது, உத்தியோகமும் போன மாதிரிதான் என்று கண்டு கொண்டவுடனே சீதாராமனின் பாவனையும் மாறிவிட்டது. அந்த டைரக்டர் அவனை வேறு ஏதோ கேள்வி கேட்டவுடனே, “போமையா! சும்மா தொண தொணத் துண்டு” என்று பதில் கூறினான்.
கெட்டிக்கார டைரக்டர் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.
போலீஸ் அதிகாரியிடம் விடைபெற்றுக் கொண்டு சீதாராமன் வெளியேறினான்.
ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, மத்தியானம் சினிமா ஒன்றைப் பார்த்துவிட்டு, சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் போதுதான் சீதாராமன் அன்றிரவே மீண்டும் விஜயபுரம் போவது என்று தீர்மானித்தான். முதல் நாள் தன் தமக்கை வீட்டில் போலீசார் வந்தது முதல் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பது ஞாபகம் வந்தது இவனுக்கு. மிகவும் சாத்வீகமான வைதிகரான அவள் புருஷனுக்கு அவனால் விஜயபுரம் அக்கிரகாரத்தில் மதிப்பே குறைந்திருந்தாலும் குறைந்திருக்கும். அவன் அன்றே விஜய புரம் திரும்பினானானால், ஒன்றுமே இல்லை
விஷயம் ஏதோ தவறுதலாக நேர்ந்துவிட்டது என்று எல்லோர்க்கும் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். இதை உத்தேசித்தே விஜயபுரம் போவது என்று தீர்மானித்தான் சீதாராமன்.
அப்பொழுது மணி ஆறு அடித்தது. ரயிலுக்குப் போவதற்கு இன்னும் இரண்டு, இரண்டரை மணி நேரம் இருந்தது. சென்னையில் அவன் செய்ய வேண்டிய காரியங்களுக்குப் போதும் அந்த நேரம். இரண்டொருவரைப் பார்க்க வேண்டி யிருந்தது; இரண்டொரு இடங்களுக்குப் போக வேண்டி யிருந்தது. அவ்வளவையும் முடித்துக் கொண்டு சரியான சமயத்துக்கு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டான் சீதாராமன்.
ஒரு கத்தை நோட்டுகளிலிருந்து இரண்டு நோட்டுகளை அலட்சியமாக விட்டெறிந்து விஜயபுரத்திற்கு இரண்டாவது வகுப்பு டிக்கட் வாங்கினான் சீதாராமன்.
கும்பலோடு கும்பலாக மறைந்து நின்று இதைக் கவனித்த குருஸ்வாமியை சீதாராமன் பார்க்கவே இல்லை! பார்த்திருந்தாலும் லக்ஷ்யமே செய்திருக்க மாட்டான் அவன்.



