நளினி
க. நா. சுப்ரமண்யம்

அடைத்த கதவு

சீதாராமனுக்கும் நளினிக்கும் கல்யாணம் சற்று விமரிசையாகவே நடந்தது என்று தான் சொல்லவேண்டும். அதாவது தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யரின் நிலைமைக்குக் கல்யாண “செரப்புகள்’ சற்று அதிகம்தான். இது சாத்திய மானதற்குக் காரணம் சீதராமன்தான். அவன் வரதட்சணையாக எதுவும் வாங்கிக் கொள்ள மறுத்துவிடவே பெண்ணுக் கென்று சற்றுப் பெருமையாகவே மற்றச் செலவுகளைச் சிறப்பாகப் பெற்றதில் அவருக்குப் பரம திருப்தி தான். அவனும் நல்ல ஸ்திதியில் இருப்பதாகவே விசாரித்து அறிந்து கொண்டு எல்லையற்ற ஆனந்தத்தில் அழுந்தினார்.

தாயில்லாப் பெண்ணை எப்படியோ காப்பாற்றிக் கணவனிடம் ஒப்புவிக்கும் பொறுப்புக் கழிந்து விட்டதே என்று சின்னம்மாவுக்கும் சந்தோஷம்தான். அதுவும் எப்படிப் பட்ட மாப்பிள்ளை! மூக்கும் முழியுமாக, சிவப்பாக, கண் நிறைந்த வாலிபன்! ஏதோ சொத்தும் சிறப்பும் இருந்தது என்று சொல்லிக் கொண்டார்கள் நல்லதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக சீதாராமன் சேஷ ஹோமம் எல்லாம் ஆனபிறகு தன் மனைவியையும் தன்னுடன் தஞ்சைக்கு அன்றைக்கே அழைத்துப் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அவளுக்குப் பிடித்திருந்தது. நளினி இனி தன் பொறுப்பாக விஜயபுரத்தில் இருக்க மாட்டாள் என்பது ஒன்று அவன் கணவன் அவளைப் பிரியமாக வைத்துக் கொள்வான் என்பதற்கு இது ஓர் அடையாளம் என்று கருதினாள் சின்னம்மா.

அந்தப் புது சம்பந்தம் பற்றி கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி களுக்கும், பர்வதத்தம்மாளுக்கும் பரம திருப்தி. விஜயபுரம் அக்கிரகாரத்தில் அவர்கள் சீதாராமன் காரணமாக இழந்து விட்ட செல்வாக்கை எல்லாம் நளினி காரணமாகத் திரும்பவும் பெற்றவர்களாகி விட்டார்கள். நாளடைவில் முந்திய நிலையைத் தான் எட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கை பிறந்து கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளுக்கும் புத்துயிர் தந்தது.

விஜயபுரம் அக்கிரகாரவாசிகளில் சீதாராமனைப் பற்றிக் கெட்ட அபிப்பிராயம் கொண்டிருந்தவர்கள் கூட இப்பொழுது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் காரணமாகவும், தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் காரணமாகவும் அவனைப் பற்றிச் சற்று மரியாதையாகவே பேசத் தொடங்கினார்கள். முன் நடந்ததெல்லாம் ஏதோ சிறுபிள்ளை விளையாட்டு என்று எண்ணி மறந்துவிட்டவர்கள் போலப் பேசினார்கள்.

சீதாராமன் – நளினியின் கல்யாணம் ஊரில் மற்றவர்கள் எல்லோருக்கும் திருப்தியளித்தது. ஆனால் சீதாராமனுக்கோ நளினிக்கோ திருப்தியளித்ததாக மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

மணப்பந்தலில் உதடுகளைக் கடித்துக்கொண்டு கண்களில் ஒரு மிரண்ட பார்வையுடன், தான் மாலையிட்டுக் கரம் பற்றியவனைப் பற்றி ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியாமல் உட்கார்ந்திருந்த நளினியைப் பார்க்க பார்க்க சீதாராமனுக்குக் கலவரமாக இருந்தது. அவளுடைய முகபாவம் அவனால் தெளிவு செய்து கொள்ள முடியாததாக இருந்தது. அவள் இந்தக் கல்யாணத்தில் விருப்பமோ பெருமையோ கொள்ளவில்லை என்கிற எண்ணம் சீதாராமன் மனத்தில் தோன்றியது. இந்த எண்ணத்தைத் தொடர்ந்து பலதரப்பட்ட கலவரங்கள் அவன் மனத்தில் எழுந்தன. பருவத்திற்குரிய குணம் என்று அவன் அதை ஒதுக்கி விட்டிருக்கலாம். ஆனால் என்னவோ தெரியவில்லை. ஏதோ தன்னைப்பற்றிய ஒரு பயங்கொள்ளித் தனம் அவனைத் தூண்டியது மனதை ஒரு நிலைக்கு வர வொட்டாமல் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

நளினியின் மனோநிலை விவரிக்கும் தரமானதல்ல. அவள் அறிய விரும்பியது ஒன்றுதான்: “சீதாராமனுக்கும், குரு ஸ்வாமிக்கும், அந்தப் பாங்கிக் கொள்ளைக்கும் உள்ள சம்பந்தம் என்ன? சீதாராமன் அந்தப் பணத்தைத் திருட வில்லையானால் அவன் அன்று அப்படிப் பயந்து கொல்லைப் புறமாக ஓடுவானேன்? திருடியது சீதாராமன்தான் என்றால்….?” அதற்குமேல் சிந்திக்க நளினிக்குத் தைரியம் இல்லை. ஆயுள் பூராவும் ஒரு திருடனுடன் வாழ்ந்து, அவன் திருடன் என்கிற ஞாபகம் ஒவ்வொரு நிமிஷமும் மனத்தைப் பிய்க்க சம்மதிப்பதாக இல்லை நளினி.

கல்யாணத்திற்கு முன்னதாகவே இந்தச் சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கலியாணத்திற்கு முன்னால் அவள் சீதாராமனைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் நேரில் கேட்டிருப்பாள். அவன் பதிலைப் பொறுத்திருக்கும் கலியாணம் நடப்பதும் நடக்காததும். ஆனால் இவ்வளவு தூரம் நடந்த பிறகு எப்படி நிறுத்துவது கல்யாணத்தை? கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது. கொஞ்சம் விசாரமாகவேதான் இருந்தது நளினிக்கு. ஆனால் எது எப்படியானாலும் சரி. அவர் திருடன் என்றால்? பாங்கியில் மோசடி நடத்தியவர் என்றால்? – மேலே சிந்திப்பதற்குச் சற்றுப் பயமாகவே இருந்தது நளினிக்கு.

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் என்று தன் மனத்திலேயே முடிவுகட்டிக் கொள்ள விரும்புகிறவள் போலத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டாள். ஆனால் அப்படித் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வருவதும் மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருந்தது.

உலக வாழ்க்கையைத் திண்ணையில் நின்று வேடிக்கை பார்த்து வாழ்க்கைப் பிரச்னைகளை நாடகப் பிரச்னைகளாகப் பாவித்துப் பழகியவள் அவள். தவிரவும் தீவிரமான முடிவு எதற்கும் வருவதற்குப் போதிய மனோதிடமும் அறிவு முதிர்ச்சியும் பெறாதவள். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் சீதாராமனைப் பற்றிய வரையில் அவளுக்கு ஒரு மனோ திடமும், சிந்திப்பதற்கான ஒரு முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே. குழந்தையுள்ளத்தில் சீதாராமனைப் பற்றிய வரையில் இரண்டே இரண்டு காட்சிகள்தான் நின்றன. ஒன்று முதல்தடவை சீதாராமன் விஜயபுரம் வந்தபோது அவனைப் போலீஸார் கைது செய்து அழைத்துப் போனது; இரண்டாவது குருஸ்வாமியும் அவனும் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விவாதம் செய்தது.

கல்யாணமாகிய உடனேயே தஞ்சைக்குப் புறப்பட்டார்கள் சீதாராமனும் அவனுடன் வந்தவர்களும். நளினியும் தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான் சீதாராமன். நளினிக்கும் இஷ்டமே.

இரண்டாம் வகுப்பு வண்டியில் நளினியும் சீதாராமனும் மட்டும் இருந்தார்கள். தெய்வாதீனமாகத் தனக்குச் சௌகரியமாக ஏற்பட்ட காரியம் அது என்று அவளுக்குப் பட்டது.

சீதாராமன் தான் முதலில் பேசினான்: “பட்டணத்து மாமான்னு நீ முதல் தடவை நான் வந்தபோது….” என்று சொல்லிக் கொண்டே அவளண்டையில் நெருங்கி உட்கார்ந்தான்.

சுபாவமாக உள்ள ஒரு நாணமும் கேட்க விரும்பிய கேள்வியைச் சரியாகக் கேட்க வேண்டுமே என்கிற விருப்பமும் தூண்ட நளினி சற்றே தூர நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். எப்படித் தைரியமாக, என்ன கேட்பது என்று முதலில் தெரியவில்லை.

“குருஸ்வாமி என்ற ஒருவர் வந்த அன்றைக்கு….” என்று தட்டுத் தடுமாறி ஆரம்பித்தாள்.

சீதாராமனின் ஞாபகம் சட்டென்று இன்ப உலகத்திலிருந்து அவ்வளவு இன்பகரமானதல்லாத ஒரு விஷயத்துக்குத் திரும்பியது என்பதை அவன் முகபாவம் காட்டியது. சற்றுக் கசந்த கடுமையான குரலில், “அதைப்பற்றி என்ன இப்போது?” என்றான்.

சட்டென்று அவன் முகம் மாறியதையும் அவன் குரல் கடுமையானதையும் நளினி கவனியாமல் இல்லை. கவனித்தாள். அவள் மனத்திலிருந்த சந்தேகம் சந்தேக நிலையைத் தாண்டி ஊர்ஜிதமாகிற மாதிரியாகிவிட்டது. ஆனால் தன் கனவுகளை இழக்க இவ்வுலகில் யார்தான் தயாராயிருக்கிறார்கள்? கனவென்று தெரிந்தாலும் உண்மையாகவே இருந்துவிடாதா என்று அவஸ்தைப்படுகிறார்கள் தானே மனிதர்கள்!

படபடத்த உள்ளத்துடன் நளினி சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டே கேட்டாள். “அப்படியானால் அன்று குருஸ்வாமி கூறியதெல்லாம் உண்மையேதானா?”

சீதாராமன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் குரலில் ஒலித்த ஓர் ஏக்கமும், நிராசையும், கன விழந்த பாவமும் அவன் உள்ளத்தில் சுரீரென்று தைத்தன. தஞ்சை போய்ச் சேருகிற வரையில் அவளுடன் இன்னின்ன பேசுவது, இப்படி இப்படி நடந்து கொள்வது என்று திட்டமிட்டிருந்த சீதாராமன் அவள் வார்த்தைகளாலும் குரலாலும் கிளறிவிடப் பட்ட சிந்தனைகளில் ஈடுபட்டவனாக உட்கார்ந்திருந்தான். அதுவரை அவன் உணர்ந்திராத ஓர் உணர்ச்சி அவனுக்கேற் பட்டது. பிராயச்சித்தமே இல்லாத ஒரு குற்றத்தைச் செய்து விட்டவன் போல. அவன் தலையிறங்கி சிந்தனைகளில் ஆழ்ந்தவனாக உட்கார்ந்திருந்தான். நளினியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவன் விரும்பியபோது அவள் மனத்தில் தன்னைப்பற்றி எந்தவிதமான ஞாபகங்கள் இருக்கும் என்று தான் சிந்திக்காதது தன் தவறுதான் என்று எண்ணமிட்டான்.

எப்படியோ ரெயிலில் தனிமையில் இருவரும் பொழுதைக் கழித்துவிட்டார்கள். புதுசாகக் கல்யாணமான தம்பதிகளாகக் குதூகலத்துடன் தஞ்சையில் அவர்கள் ரெயிலைவிட்டு இறங்கவில்லை. நளினியின் முகத்திலே ஒரு சோகபாவம் நிரம்பியிருந்தது. ஆனால் அவள் வாயை இறுக மூடிக் கொண்டு, கண்களில் உள்ள கலக்கத்தை மறைத்துக் கொண்டு தான் இறங்கினாள்.

அவர்களுக்கென்று தனியாக வீடு ஏற்பாடு செய்திருந்தான் சீதாராமன். நேரே அங்கேதான் போனார்கள். அஸ்தமிக்க ஒரு நாழிகையிருக்க வீடு போய்ச் சேர்ந்தார்கள் சீதாராமனும், நளினியும்.

தன் சிந்தனைகளைத் தப்புகிற உத்தேசத்துடனோ என்னவோ சீதாராமன் தன் கடைப் பக்கம் போய்விட்டுச் சீக்கிரமே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். போகுமுன் நளினியிடம், “அந்தப் பழைய கதையை எல்லாம் நீயும் நானும் மறந்துவிடுவதே நல்லது” என்று சொல்லி விட்டுப் போனான்.

அழுகை நிறைந்த மெல்லிய குரலில் நளினி, “அதெப்படி சாத்தியம்?” என்று கேட்டது அவன் காதில் விழுந்திராது.

இரவில் கடைகளுக்கெல்லாம் போய்விட்டு நளினிக் கென்று கதம்பமும், ரோஜாப் பூவும் வாங்கிக்கொண்டு சீதாராமன் வீடு திரும்பும்போது மணி ஒன்பதரைக்கு மேலாகி விட்டது. வெளி வாசற்கதவு தாளிடாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததுமே அவனுக்கு என்னவோ பக்கென்றது.

“நளினி!” என்று கூப்பிட்டான்.

இருளிலிருந்து யாரும் பதில் அளிக்கவில்லை. விளக்கை ஏற்றிப் பார்த்தான். நளினியின் பெட்டியும், படுக்கையும் வண்டிக்காரன் சாயங்காலம் கொண்டு போய் வைத்த இடத்திலேயே இருந்தன. அந்தப் பெட்டியின்மேல் வைத்திருந்த ஒரு கடிதம் கண்ணில் பட்டது. அதைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை போல் இருந்தது அவனுக்கு. ஆயினும் பிரித்தே பார்த்தான் நடுங்கிய கைகளுடன்.

நளினிதான் எழுதியிருந்தாள்: “எவ்வளவு சாமர்த்திய சாலிதான் ஆனாலும் ஓர் அயோக்கியனுடன் வாழ நான் விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவு அல்ல இது. என்னைத் தேட வேண்டாம்” என்றும், பின் குறிப்பாக. “நான் விஜயபுரம் போகவில்லை” என்றும் எழுதியிருந்தாள் நளினி.

சீதாராமனின் கைகளிலிருந்து கதம்பமும் ரோஜாப் புஷ்பப் பொட்டலமும் அந்தக் கடிதமும் நழுவித் தரையில் விழுந்தன.

அவன் அவசரத்தில் திறந்து வைத்துவிட்டு வந்திருந்த கதவு – வாசற் கதவு – காற்றில் படாரென்று அடித்துச் சாத்திக் கொண்டது!

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !