நளினி
க. நா. சுப்ரமண்யம்

பெரிய வக்கீல்!

விஜயபுரத்துக்குத் தன் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த போது ஸ்ரீனிவாசனை எல்லோரும் – அதாவது விஜயபுரத்தில் எல்லோரும் – பெரிய வக்கீல் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் விஜயபுரத்திலே விசுவரூபம் எடுத்த சீனிவாசன் சென்னைப் பட்டணத்திலே சாதாரண மனிதனையும் விடச் சின்னவனாகத்தான் காட்சியளித்தான்.

விஜயபுரத்திலேயாகட்டும் வேறு இடத்தில் தானாகட்டும் அவனுடைய அண்ணன் வைத்தியநாதனுக்கு மதிப்பு ஒரே மாதிரிதான். அவனுக்கு ஒரு மளிகைக் கடையிருந்தது. சுமாரான மளிகைக்கடை ரொம்பச் சின்னதுமில்லை. மிகப் பெரியதுமில்லை. தினசரி இருபது முப்பது ரூபாய்க்கு வியாபாரம் ஆகும். அதற்குமேல் அதிக வரும்படியுள்ளவன் போல வைத்தியனாதன் வேஷம் போடுவதும் இல்லை. அவனுடைய அந்தஸ்தும் மதிப்பும் விஜயபுரத்திலே எல்லோருக்கும் தெரியும்.

அண்ணனைப் போலவேதான் தம்பியுமிருப்பான் என்று தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யரைப் போலவே விஜயபுரம் அக்கிரகாரவாசிகள் எல்லோரும் எண்ணியதிலே ஆச்சரியம் ஒன்றுமில்லை. “வைத்தியனாதன் தம்பி ஸ்ரீனிவாசன் வந்திருக்கான்; அவன் பட்டணத்திலே பெரிய வக்கீல்னு சொல்றா. நாளைக் காலம்பற வாங்கோ. நம்ப ரெண்டு பேருமாப் போய்ப் பார்த்து என்ன செய்யறதுன்னு விசாரிப்போம்” என்று விசுவநாதய்யர் எதிர்வீட்டுக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் சொல்லியபோது மனத்தில் ஸ்ரீனிவாசனைப் பெரிய வக்கீல் என்று நினைத்துதான் சொன்னார்.

இருவரும் போய்ப் பார்த்த போதும் ஸ்ரீனிவாசன் பெரிய வக்கீல் மாதிரியேதான் பேசினான். அவன் பேச்சை மட்டும் கொண்டு மதிப்பிடுவது என்று வந்துவிட்டால் பட்டணத்திலேயே அவனைவிடப் பெரிய வக்கீல் கிடையாது என்று சொல்லும்படியாக இருக்கும். கட்டுக் கட என்று தந்தி ஆங்கிலம் அறிந்த விசுவநாதய்யருக்கும் ஆங்கிலமே அறியாத வைதிகப் பிச்சுக் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியாருக்கும் அவன் பேச்சு பிரமிப்பைத் தருவதாகத்தான் இருந்தது. அவர்கள் அர்த்தமே புரிந்து கொள்ள முடியாதபடி உச்சரிக்கக்கூட முடியாதபடி எவ்வளவு வார்த்தைகளை அவன் எவ்வளவு லாகவமாக உச்சரித்தான்! உபயோகித்தான்!

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மிரண்டு போனதிலே ஆச்சரியம் இல்லை. தன் மனைவியின் தம்பி சீதாராமனிடம் அவருக்கு உள்ளூர நல்ல அபிப்பிராயமே கிடையாது. என்றாலும் அதற்காக அவன் எக்கேடு வேண்டுமானாலும் கெடட்டும் என்று விட்டு விட்டிருக்கவும் முடியாது அவரால். இயற்கை யிலேயே பிறர் கஷ்டத்தைத் தம்மாலான அளவுக்கு நிவர்த்திக்க வேண்டும் என்கிற ஆசையும் கொள்கையும் உள்ளவர் அவர் தம் உறவுக்கே வந்துவிட்ட ஓர் ஆபத்தை தவிர்க்க முன்வந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது மட்டுமல்ல. அவர் அப்படித் தாமாக முன் வந்திராவிட்டால் அவருடைய தர்மபத்தினி பர்வதத்தம்மாள் சும்மாவிட மாட்டாள்; அவளுக்கு அந்தத் தம்பியிடம்தான் பிரியம் அதிகம்!

பட்டணத்துப் பெரிய வக்கீலின் பேச்சைக் காலையில் கேட்டு விட்டு வந்த பிறகுதான் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி யாருக்கும் தெரிந்தது தன் மைத்துனன் எவ்வளவு பெரிய குற்றத்தை இல்லை குற்றங்களைச் செய்திருக்கிறான் என்பது. பாங்கிலிருந்து இருபதினாயிரம் ரூபாய் திருடி விட்டான் என்று மட்டும் எண்ணியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். வக்கீல் ஸ்ரீனிவாசனின் பேச்சைக் கேட்டை பிறகு சீதாராமனின் குற்றம் பன்மடங்காக நூறு மடங்காகப் பெருகிவிட்டது. வக்கீல் ஸ்ரீனிவாசன் சரமாரியாக வர்ணித்தான் அவன் குற்றங்களை. அவை குற்றங்களாக மட்டுமில்லாமல் ஏதோ சட்ட புஸ்தகத்தின் நம்பர்களாகவும் உருமாறி விசுவரூபம் எடுத்துக் காட்சியளித்தன. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் மனத்திலே. அந்த வார்த்தை மழையிலே திக்குமுக்காடிப் போனார் அவர்.

‘அப்படியானால் ஒன்றும் செய்வதற்கில்லையாக்கும்? ஈசன் விட்ட வழி. என்ன பண்றது?’ என்று எழுந்திருந்து கிளம்பிய கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளை மடக்கி உட்கார வைத்து மீண்டும் பேசினார் வக்கீல். ஈசன் விட்ட வழியல்ல விஜயபுரத்தில் இல்லாவிட்டாலும் சென்னைப் பட்டிணத்தில் எல்லாமே வக்கீல் சீனிவாசன் விட்ட வழிதான். வேறு வழி கிடையாது என்பது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் மனசிலே பசுமரத்தாணி போலப் பதிந்தது. அடாடா! வக்கீல் சீனிவாசன் என்று ஒருவன் இப்பூவுலகில் சென்னை மாநகரில் இருக்கும் போது, பாவம்! புத்திகெட்ட மனிதர்களே. என்ன மடத்தனம் என்று கடைசியில் எண்ணத் தொடங்கிவிட்டார் சாஸ்திரிகள்.

வெகு விநயமாக, விழுந்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லாத குறையாக சாஸ்திரிகள் சொன்னார்: “என்னமோ எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களாகப் பார்த்துக் கருணை பண்ணியாகணும். பிள்ளையாண்டானைக் காப்பாற்றிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு” என்றார்.

வக்கீல் சீனிவாசன் தாழ்மையுடனே சொன்னார். “என்னவோ என்னாலானது செய்கிறேன்.” சிறிது நேரம் யோசித்துவிட்டுப் பிறகு சொன்னார்: வேலைத் தொந்தரவு தாங்காமல் சிலநாள் நிம்மதியாக அண்ணாவோடே இருந்து விட்டுப் போகலாம்னு வந்தேன். வந்த இடத்திலேயும் வேலைத் தொந்தரவு தொடர்ந்து வரது. நம்ம சௌகரியத்தை மட்டும் கவனித்தால் போதுமா? நமக்கு ஏதோ கொஞ்சம் உள்ளது. பொருள் அறிவு எல்லாத்தையும் தான், கடவுள் பரோபகார்த்தமாகத்தானே கொடுத்திருக்கிறார்? மறுபடியும் பட்டணம் போய் நுகத்தடியிலே தலையைக் கொடுக்க வேண்டியது தான். தவிரவும் உங்களைப் போன்றவர்களுக்குச் செய்யாமே வேறு யாருக்குத் தான் செய்யப்போகிறேன்?”

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குப் புரியவேயில்லை

தன் நன்றியை அந்தப் பெரிய வக்கீலுக்கு எப்படித் தெரிவித்துக் கொள்வது என்று அவர் எழுந்தார்; விசுவநாதய்யரும் எழுந்தார்.

சாஸ்திரிகள் சொன்னார்: “நான் வரட்டுமா? போய்ப் பட்டணத்துக்குக் கிளம்ப மூட்டை முடிச்செல்லாம் ஏற்பாடு செய்கிறேன், அவளும் வருவாள்…”

வக்கீல் சீனிவாசன் கேட்டார்; “சாயந்திரத்துக்குள்ளே எல்லாம் ஏற்பாடாகி விடுமா?” என்று.

“எதெல்லாம்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

சாஸ்திரிகளுடைய அந்தக் கேள்வி சீனிவாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒன்று அவர் பெரிய அப்பாவியாக இருக்கவேண்டும். அல்லது பணக்காரராக இருக்க வேண்டும் எதுவாகயிருந்தால் அவருக்கென்ன?

இரண்டுமே லாபகரமானதுதான்.

“இன்று சாயங்காலம் கிளம்பினால் நாளைக்காலையில் பட்டணம் போயிடறோமா?” என்றான் சீனிவாசன்.

“ஆமாம்” என்றார் சாஸ்திரிகள். ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்று.

“உடனே ஏற்பாடு செய்து பெயில் வாங்கலாம். மற்றப்படியும் நடவடிக்கை எல்லாம் எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கையிலே ஐந்நூறு ரூபாய் இருந்தால் போதும். வேண்டுமானால் பிறகு மேலே பார்த்துக்கொள்ளலாம்” என்றார் சீனிவாசன்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மூர்ச்சை போட்டு விழுந்து விடாமல் நிமிர்ந்து நின்றதையே பெரிய ஆச்சரியம் என்று தான் சொல்லவேண்டும். அவர் இதயம் ஐந்நூறு…. ஐந்நூறு…. ஐந்நூறு என்று ஒவ்வொரு தரமும் சொல்லிக் கொண்டே அடித்துக் கொண்டது. மூச்சுத் திணற வாய் திறவாமல் நின்றார் அவர்.

அவர் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக அர்த்தம் செய்து கொண்டான் சீனிவாசன். “வீட்டிலேயும் நன்றாக விசாரி யுங்கள். சீதாராமன் என்னென்ன சொன்னான் என்று விசாரித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஏதாவது அக்காளிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொன்னானா என்று விசாரியுங்கள்” என்றான்.

இதெல்லாம் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் காதிலேயே விழவில்லை. அவர் ஐந்நூறு – ஐந்நூறு – ஐந்நூறு ஜபத்திலேயே ஆழ்ந்திருந்தார்.

சீனிவாசன் மேலும் சொன்னான்: “நாழியாகிறது. நானும் கிளம்புவதாக இருந்தால் அண்ணாவிடம் ஜோலி பேச வேண்டியது நிறைய இருக்கிறது. சாயந்திரம் வாருங்கோ சாஸ்திரிகளே” என்றான்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் விசுவநாதய்யரும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். வழியிலே விசுவ நாதய்யரை விசாரித்தார் சாஸ்திரிகள், “ஐந்நூறு ரூபாயா பிடிக்கும்?” என்று.

விசுவநாதய்யர் ஆறுதல் கூறினார். “அப்படி ஒண்ணும் ஆகாது. இருந்தாலும் ஆபத்து சமயத்துக்குத் தயாராகத்தானே இருக்கணும்? அதுவும் பட்டணத்துக் கரையிலே செலவு கொஞ்சம் ஜாஸ்திதான் ஆகும். ஐந்நூறு வேண்டாம். இருநூறு, முன்னூறு எடுத்துக் கொண்டு போறதுதான் நல்லது” என்றார்.

“இருநூறு முன்னூருக்கு நான் எங்கே போவேன்?” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

விசுவநாதய்யர் இதற்குப் பதில் எதுவும் சொல்ல வில்லை. தவிரவும் அவர் ஆபீஸ் போக நாழியாகி விட்டது. அவசர அவசரமா சாஸ்திரிகளைப் பிரிந்து வீடு சென்றார்.

விசுவநாதய்யர் வீட்டுக்குள் வந்ததுமே நளினி கேட்டாள்; “ஏன் அப்பா! வக்கீல் என்ன சொன்னார்?”

வழக்கத்துக்கு விரோதமாக விசுவநாதய்யருக்கே நளினியிடம் கோபம் வந்தது. “போடி கழுதை! போய் இலையைப் போடச் சொல்லு. நாழியாறது. குளிச்சுட்டு வரேன். சாப்பிட்டு விட்டு ஆபீஸ் கிளம்பணும் ” என்றார்.

சாப்பிடும் போது விசுவநாதய்யர் தனக்கு ஏன் நளினியிடம் கோபம் வந்தது என்று தனக்குள்ளாகவே விசாரணை செய்து பார்த்துக் கொண்டார். காரணம் எதுவும் புலனாகவில்லை. ஆபீஸுக்குப் போகும் போது நளினியை அருகில் அழைத்து ஒரு வார்த்தை சொல்லாமல் அவள் தலை மயிரை ஒரு தரம் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார் விசுவநாதய்யர்.

எதிர் வீட்டிலே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும், பர்வ தத்தம்மாளும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஐந்நூறு… ஆயிரம் என்று சாஸ்திரிகள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் பர்வதத்தம்மாளின் கட்சி தான் கடைசியாக வெற்றி பெற்றது. ஆனால் தான் பெற்ற வெற்றி காரணமாகப் பர்வதத்தம்மாள் தன் கழுத்திலிருந்த ஒரே ஆபரணமாகிய இரண்டு வடம் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தாள். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் பல வருஷங்களா அணா அணாவாக மிச்சம் பிடித்துத் தபாலாபீஸ்ல கட்டியிருந்த நூற்றிருபதில் நூறு ரூபாயை வாங்கி வந்தார்.

கையில் முந்நூறு ரூபாய் சில்லரையுடன் பட்டணத்துக்குக் கிளம்பினார்கள். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும், பர்வதத்தம்மாளும், பட்டணத்துப் பெரிய வக்கீல் சீனிவாசனும்.

விஜயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் குமாஸ்தாக்களில் சிலர் தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது ஸ்ரீனிவாசனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் அவன் லக்ஷ்யம் செய்திருக்க மாட்டான். அவனைப் போலப் பெரிய வக்கீல்கள் இதை எல்லாம் லக்ஷ்யம் செய்தால் கட்டுமா?

ஒரு டிக்கட் குமாஸ்தா மற்றவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்; “மாயவரம் டிக்கெட்டைக் கொடுத்து விட்டு விஜயபுரத்திலே இறங்கினவனை நம்ம வைத்திநாதன் தம்பியாச்சே என்று கவனிக்காதது போல இருந்தோம். இப்போ என்னடான்னா, சிகரெட்டும் கையுமாவந்து ஸெகண்டு கிளாஸ் டிக்கெட்டு வாங்கி வண்டியிலே ஏறி உட்கார்ந்துக்கறான் பெரிய மனுஷன்… என்ன சொல்றது?” என்றான்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் அவர் மனைவியும் மூன்றாவது வகுப்பிலேதான் பிரயாணம் செய்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கோ அவர் மனைவிக்கோ ஸ்ரீனிவாசனுக்கோ தெரியாது அதே இரவு எழும்பூரில் விஜயபுரத்துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு சீதாராமன் கிளம்பிக் கொண்டிருந்தான் என்பது. அவர்கள் ஏறியிருந்த வண்டி பட்டணத்திலிருந்து வந்த வண்டியைத் திண்டிவனத்தில் சந்தித்தது; ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !