
நளினி
க. நா. சுப்ரமண்யம்
கல்யாணப் பேச்சு
வாழ்க்கையிலே வேடிக்கை பார்ப்பதற்கென்றே பிறந்தவர்கள் பலர் உண்டு. எந்த அனுபவமும் அவர்களை நெருக்கித் தொடாது. தாமரை இலையில் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இருந்து வாழ்ந்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். கஷ்டமோ சுகமோ துக்கமோ. அவர்கள் உள்ளத்திலே உரைப்பது கிடையாது. கனவு கண்டு விழித்தவர்கள் போலப் பிரமாதமான அனுபவத்தையும் கூட உதறிவிட்டு இருந்து விடுவார்கள்! ஒரு நாடகத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறவனைப் போல் அவர்கள் வாழ்க்கை பூராவுமே ஒரு நாடகமாகக் கழிந்துவிடும். எல்லாவற்றையும் கவனித்து, மற்றவர்களை விடச் சற்று அதிகமாகவே நுணுக்கங்களை ஆராய்ந்து, துளித்துளி ஈடுபட்டும் விடுவார்கள். ஆனால் எல்லாம் நாடகம்தானே, இதில் ஈடுபடவேண்டிய அவசியமே கிடையாதே, என்று அவர்கள் மனசில் எப்போதும் சிந்தனை இருக்கும்.
இப்படி நாடகம் பார்க்கிற மாதிரி வாழ்க்கையைக் கழித்து விடுபவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அதிர்ஷ்டம் உண்மையானது; தனம் பொருள் பதவி போல வெறும் மாயை அல்ல. ஒரு விதமான மனோபாவத்தில் எழுந்த காரணத் தத்துவத்தையே அளித்து விடுகிறது, தத்துவமோ கொள்கையோ மற்றும் எவ்விதமான ஈடுபாடுகளோ இல்லாத வாழ்க்கை நடத்து கிறவர்களைவிட அவர்கள் நல்வாழ்க்கை நடத்துகிறார்கள்.
மனிதர்களுக்கு, மனிதகுலத்துக்கு எவ்வளவு தினுசான அனுபவங்கள் உண்டோ அவ்வளவும் தனி மனிதர்களுக்கும் உண்டென்பது உண்மை என்றே தோன்றுகிறது. உதாரணமாக இந்தப் பட்டும் படாமலும் இருக்கிற தன்மை ஒவ்வொரு மனிதனுடைய ஆயுளிலும் ஒரு பருவத்தில் இருக்கிறது. ஒரு சிலருக்கு அது அதிக காலம் நீடிக்கிறது; பலருக்கு அது சீக்கிரத்திலேயே மறைந்து விடுகிறது. அப்படியிருப்பது சாத்தியமல்ல என்று வாதிப்பவர்கள் கூட உண்டு என்றுதான் சொல்லவேண்டும்; அது வேதாந்திகளின் மனப்பான்மை; பலருக்கும் சாதாரணமான பலருக்கும் ஏற்காது என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பருவத்தில் பொருந்துவதாகவே அமைந்திருக்கிறது. அப்படி அமைந்திருப்பதனால்தானே வாழ்க்கை நடத்துவதே சாத்தியமாகிறது?
எல்லையற்றது, மீளமுடியாதது என்று எண்ணுகிற பல துயரங்கள் ஒருவனுக்கு ஏற்படத்தான் ஏற்படுகின்றன. ஒன்றை மீறமுடியாது என்று எண்ணுகிற பொழுதே இன்னொன்று ஏற்பட்டுவிடும். இவ்வளவையும் மீறி வாழ முயற்சி செய்யாதவர்கள் மிகச் சிலரே. வாழ்க்கை என்கிற முயற்சிக்குப் பட்டும் படாமலும் இருக்கிற தன்மை சற்று அதிகமாகவே தேவையாக இருக்கிறது.
இதெல்லாம் அனாவசியமான தத்துவ விசாரம் என்றே தோன்றுகிறது. நளினி என்கிற சிறுமி பதினான்கு வயது தாண்டிப் பெரியவளாகிக் கொண்டிருப்பவள்
சமையற் கட்டில் உட்கார்ந்து கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக் கலாமே தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது என்று சின்னம்மாளும் சின்னம்மாளையே போன்ற விஜயபுரம் அக்கிரகாரமும் சொல்கிறது. இது தத்துவமல்ல. வழக்கத்தால் ஏற்பட்டுவிட்ட ஒரு மரபு, ஒரு கட்டுப்பாடு – அவ்வளவுதான்.
இந்தக் கட்டுப்பாடு அவசியமல்ல; இப்படி ஒன்று இருப்பதே இந்த நாளில் அசந்தர்ப்பமானது என்று நளினி எண்ணுகிறாள் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்க இன்னும் நளினி பழகவில்லை. அவள் பாட்டுக்குத் தன் இஷ்டப்படி நடந்து கொள்கிறாள். அதுவும் சின்னம்மா சொல்வதற்கு நேர் எதிராக நடந்து கொள்வதே தனக்கு நல்லது என்கிற முடிவுக்கு அவள் ஆரம்ப காலத்திலேயே வந்துவிட்டாள் என்று தான் தோன்றுகிறது.
“வாசலில் போகாதே!” என்று சின்னம்மா உத்தர விட்டாளானால், போகத்தான் வேண்டும் என்று ஓர் எண்ணம் அவளுக்கு ஏற்படுகிறது. சின்னம்மாள் திட்டினால் விசுவ நாதய்யர் பரிந்துகொண்டு, “தாயில்லாக் குழந்தை” என்று ஆரம்பித்துவிடுவார். மற்றத் தாயில்லாக் குழந்தைகளின் விஷயம் எப்படியோ – நளினியின் விஷயத்தில் தாயில்லாக் குழந்தையாக இருப்பதே மிகவும் சிரேஷ்டமான காரியமாக இருந்தது.
“வயது வந்த பெண் திண்ணையிலேயே உட்கார்ந் திருந்தால், தெருவிலே என்ன சொல்லுவார்கள்?” என்று சின்னம்மா கேட்டாள்.
“திண்ணைக்கு வராததுகள் மகராஜி எல்லாம் ஒழுங்காகத் தான் இருக்கான்னு அர்த்தமோ?” என்பார் விசுவநாதய்யர்.
“அதுக்குச் சொல்லல்லே! கல்யாணத்தைப் பண்ணிக் கொடுத்துட்டா அதற்கப்புறம் நம்ம பொறுப்பு விட்டது” என்பாள் சின்னம்மா.
“தானே ஆற காலத்திலே ஆறது” என்பார் விசுவ நாதய்யர். இந்தக் கல்யாணம் அஸ்திரத்துக்குத் தன்னால் பதில் சொல்ல இயலாது என்று அவருக்குத் தெரியும். கல்யாணத்தைப் பற்றிச் சின்னம்மா தொடங்கியவுடனேயே அவர் எழுந்து நகர ஆரம்பித்துவிடுவார்.
“ஆற காலம்னா இன்னும் ஆறு வருஷம் ஆகணும் போலிருக்கு? வயசும் பதினஞ்சு ஆகப்போறது… என்பாள் சின்னம்மா தன் வெற்றியைத் தொடர்ந்து.
“பதினாலு ஆகல்லே இன்னும் அதுக்குள்ளே பதினஞ்சு, பதினாறுன்னு…” என்று விசுவநாதய்யர் முணுமுணுப்பார்.
“தானே நாளைக்கு ஆயிடுது! அப்புறம்?” என்பாள் சின்னம்மா, அவள் அதைச் சொல்கிற பாவத்திலே நாளைக்கே பதினாறு ஆகிவிடும் போலப் பயம் தொனிக்கும்!
விசுவநாதய்யர் பதில் சொல்லாமல் பேச்சை வேறு வழியில் திருப்ப யத்தனித்தார். “நாளைக்கு நாலுபேர் என்னைத் தான் சொல்லுவா: தாயில்லாப் பொண்ணு, அதுக்குக் கலியாணமாகனுமென்று இவளுக்குக் கவலையிருக்கு மான்னு….”
விசுவநாதய்யர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு வாசலுக்கோ ஆபீஸுக்கோ, வேறு எங்கேயோ போய் விடுவார்.
தன்னைப் பற்றிய இந்த விவாதத்தையும் நாடகத்தைக் கவனிப்பது போலக் கவனித்து மனத்தில் வாங்கிக் கொண்டாள் நளினி. தன்னைப் பற்றியது என்பதற்காக, அது அவள் மனசில் அதிகமாக உரைக்கவில்லை. தெருவில் நின்று வண்டி வந்தால் யார் வீட்டுக்கு யார் வருவது என்று வேடிக்கை பார்க்கிற மாதிரியே இதையும் வேறு யாரையோ பற்றிய விவாதம் என்று எண்ணியவள் போல வேடிக்கை பார்த்தாள்.
சில சமயம் அவள் தனக்குக் கல்யாணம் ஆவது பற்றியும் சிந்திப்பதுண்டு. பட்டும் படாமலுமிருக்கிற தன்மை அவளிடம் எவ்வளவுதான் ஊறிப் போயிருந்தது என்றாலும் அக்கிரகாரத்தில் பிறந்த பெண், வயசாகிக் கொண்டிருக்கிற பெண், வளர்ந்து பெரியவளாகி மற்றவர்களைப் போலக் குடித்தனம் நடத்த ஆசைப்படுகிற பெண் என்பதனால் அவள் தனக்கு வரப்போகிற மணாளனைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாதல்லவா?
ஆனால் அவள் எண்ணிச் செய்வதென்ன? சின்னம்மா தொந்தரவுக்காகத் தானே போய்த் தேடி யாரையாவது அழைத்து வந்து, “இவர்தான் என் புருஷர்” என்று சொல்லிவிடுவதா? அது தற்போதைய நாகரீகத்தில் விஜயபுரம் அக்கிரகாரத்தில் சாத்தியமான காரியம் அல்லவே! விஜயபுரம் அக்கிரகாரத்துச் சம்பிரதாயப்படி அப்பா பணம் சேகரித்து வைத்தாக வேண்டும்; அம்மா கல்யாணத்துக்கென்று அப்பளாம் இட்டு வைப்பது முதல் மற்றும் பல சாமான்களும் சேர்த்தாக வேண்டும்; இவ்வளவும் ஆன பிறகு ஜாதகம் பார்த்துப் பொருந்திய வரனை அழைத்து வந்து அவனுக்குப் பெண்ணைக்காட்டி….
நளினியே தேடிக்கொண்டுவிட முடியுமானால் தேடிக் கொண்டுவிடுவாள். வாசலில் நின்று சும்மா, ஒரு பயனும் இல்லாமல், கால் வலிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கே ஆட்சேபங்கள் சொன்ன சின்னம்மா, நளினி மனத்தில் இருந்த இந்த எண்ணத்தை அறிந்து கொண்டிருந்தாளானால் இன்னும் என்னென்ன சொல்லியிருப்பாளோ!
தன் மனத்திலிருந்தது என்ன என்று சரியாக நளினிக்கே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். தெரிந்திருந்தால் சின்னம்மாவுக்குக் கோபமூட்ட வேண்டும் என்கிற ஒரு காரணத்துக்காகவேணும் அவள் அதை வெளியிட்டே சொல்லியிருப்பாள். வேடிக்கை பார்ப்பதில் உள்ள ஈடுபாடு காரணமாகத் தான் என்று வைத்துக்கொள்ளலாம் – நளினிக்கு வேடிக்கை பார்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களைச் சிருஷ்டித்துக் கொள்ளவும் சாமர்த்தியம் இருந்தது.
விஜயபுரம் அக்கிரகாரத்திற்கு இரண்டுதரம் வந்து இரண்டுதரமும் தன்னாலேயே வரவேற்கப்பட்ட அந்த சீதாராமனைப் பற்றி நினைத்தபோதெல்லாம் அவள் சற்று தடுமாற்றம் அடைந்தாள்.
அதென்னமோ, அவள் மனத்தில் தனக்கு வரப்போகிறவன் சீதாராமன் மாதிரிதான் இருக்க வேண்டும் என்று ஊர்ஜீதமாகி யிருந்தது. சீதாராமனாகவே இருந்தால் கூட நல்லதுதான்; ஆனால் ஊரார் எல்லோரும் அவனைப் பாங்க் கொள்ளைக்காரன் என்றும் அயோக்கியப் பதர் என்றும் பலவாறு கூறியது அவள் காதில் விழாமல் இல்லை. பாவம்! சாதுவான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் பிழைப்பிலே மண் விழுந்தது அதனால்தான் என்று வேறு அவனைத் தூற்றினார்கள்.
ஆனால் நளினி நினைக்கவில்லை சீதாராமன் அயோக்கியன் என்றே அவள் நினைக்கவில்லை. ஓடிப்போன அவன் எதற்காக அப்படிப் பயந்து ஓடிப்போக வேண்டும் என்று தானே தெளிவாகும்; பிறகு மீண்டும் ஒருதரம் சீதாராமன் வருவான் விஜயபுரம் அக்கிரகாரத்துக்கு என்று எண்ணினாள் அவள்.
அன்று காலையில் விஜயபுரம் அக்கிரகாரத்திற்குள் வந்து கொண்டிருந்த வண்டியில் சீதாராமனே வந்தாலும்…. என்று எண்ணினாள் நளினி. உள்ளே போக எழுந்தாள்; நின்று பார்த்தாள்.
வண்டி நேரே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் நடுவேதான் முன் இரு சந்தர்ப்பங்களில் போலவே நின்றது. ஆனால் வண்டியிலிருந்து இறங்கியது சீதாராமன் அல்ல. ஆனால் சீதாராமன் மாதிரியும்தான் இருந்தது என்று கவனித்தாள் நளினி. நரைத்த சிகையும் ஏழெட்டு நாள் தாடியும் பஞ்சகச்சமும், நெற்றியில் விபூதியுமாக வண்டியிலிருந்து இறங்கியவருக்கு சீதாராமன் சாயல் இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் அது சீதாராமன் அல்ல.



