
நளினி
க. நா. சுப்ரமண்யம்
பட்டணத்து மாமா
பட்டணத்து மாமா என்று நளினி விளையாட்டாகப் பெயர் சூட்டிய அந்த வாலிபன் உண்மையிலேயே பட்டணத் திலிருந்து வந்தவன் தான். விஜயபுரம் அக்கிரகாரத்தில் நளினி வீட்டிற்கு நேர் எதில் வீட்டில் அவனுடைய மூத்த சகோதரி வசித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்காகத்தான் வந்திருந்தான்.
அவன் பெயர் சீதாராமன். அவனுக்கு வயசு இருபத்திரண்டுக்குள் தான் இருக்கும். ஒல்லியாக, உயரமாக, மூக்கும் முழியுமாக, பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். பி.ஏ. படித்தவன். மேலே கணக்கு வழக்கு என்று கொஞ்சம் அதிகமாகவும் படித்து இரண்டொரு பட்டங்களும் பெற்றவன். அவனுக்குப் பட்டணத்து பாங்கிகளில் ஒன்றிலே வேலையாகியிருந்தது. வேலை கிடைத்து ஒரு வருஷம் இருக்கும். லீவு கிடைத்த சந்தர்ப்பத்திலே, தன் சகோதரியைப் பார்த்துவிட்டு அவளுடன் இரண்டொரு நாள் தங்கி விட்டும் போகலாம் என்று எண்ணி வந்திருந்தான் சீதாராமன்.
அவன் வந்ததில் அவன் அக்கா பர்வதத்தம்மாளுக்கு அளவற்ற திருப்தி, அவள் கணவர் வைதீகர்; கொஞ்சம் கட்டுப்பெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். சொல்ப நிலபுலன்கள் உள்ளவர். வைதீகத் தொழில் செய்து காலங் கடத்தியவர். வைதீகன் என்பதிலே ஏதோ கொஞ்சம் அகெளரவம் உண்டு என்று உள்ளூர அந்தரங்கத்தில் எண்ணியிருப்பவள் பர்வதம்மாள். பட்டணத்து தம்பி வந்து தங்கள் வீட்டில் சிலநாள் தங்கிப் போவதனாலே விஜயபுரத்து அக்கிரகாரத்திலே தன்னுடைய மதிப்பு சற்றே ஓங்கும் என்று அவள் எண்ணியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தத் தம்பியைப் பற்றி அவள் ஏற்கனவே தன் சிநேகிதிகள் பலரிடமும் கூறியதுண்டு. தம்பி என்றால் பட்டணத்துத் தம்பிதான் அவளுக்கு ஞாபகம் வரும். அந்தத் தம்பிக்கு மூத்தவனான இன்னொரு தம்பி தனக்கிருந்தது பர்வதத்துக்கே மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அந்தத் தம்பியும் வைதீகன்தான்; தஞ்சாவூரிலே புரோகிதம் பண்ணிக் கொண்டிருந்தான்.
பட்டணத்து தம்பியின் வருகையைக் கொண்டாட பர்வதம் வெகுவாகப் பாடுபட்டாள். ஏதோ வீட்டிலிருக்கிற சாமான்களையே கடன் வாங்குகிற சாக்காக வெளியே சென்று அண்டையில் இரண்டொரு வீடுகளுக்கு தன் தம்பி வந்திருக்கிற விஷயத்தை நைஸாகச் சொல்லி விட்டு வந்தாள். இப்படி அவள் எதிர் வீட்டுச் சின்னம்மாளிடம் வந்து தன் தம்பியைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது நளினியும் உடன் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இப்போ சித்தே முன்னாடி குதிரை வண்டியிலே வந்து இறங்கினாரே, அவரா? உங்கள் தம்பியா அவர்?” என்றாள் நளினி.
பர்வதத்துக்கும், நின்று இன்னும் ஒரு நிமிஷம் தன் தம்பியைப் பற்றிப் பேசலாமே என்று ஆசை. “ஆமாம்! நீ பார்த்தயோல்லியோ? பாக்கறதுக்கு அழகாயிருப்பான்!…. நாழியாறது. பாவம்! பதினாறு மணி நேரம் ரயிலிலே வந்த அலுப்பு! சீக்கிரம் சமைச்சுப் போட்டா சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் அலுப்புத் தீரத் தூங்குவான்… ஆமாம் மாமி! உங்காத்திலே சேமியா இருக்கோ? இருந்தாக் கொஞ்சம் கொடுங்கோ. அது வந்ததும் வாங்கிண்டு வரச் சொல்லித் திரும்பத் தடுந்திடுரேன். என்னிக்கும் வராதவன் இன்னிக்கு வந்திருக்கான்; நாள் பார்த்து அது பக்கத்துக் கிராமத்துக்குத் தொலைஞ்சுடுத்து மிராசு பண்ண! எண்ணம்மா பண்றது?”
சின்னம்மா வீட்டிலே சேமியா இல்லை. பர்வதத்திற்கும் சேமியா அப்படி ஒன்றும் அவசியம் இல்லைதான். அப்படி என்ன மாப்பிள்ளையா வந்திருந்தான் சேமியாப் பாயஸம் பண்ணிப் போட? தம்பிதானே! ஏதாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு போனால்தானே சின்னம்மாவிடம் தன் தம்பியைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேச இயலும்?
“உங்க தம்பி ஒருவாரம் இருப்பாரா?” என்று ஏதாவது கேட்க வேண்டுமே என்று சொரத்தில்லாமல் கேட்டு வைத்தாள் சின்னம்மா.
“அதென்னமோ வந்ததும் வராததுமா சொல்லிப்புட்டான். இரண்டொரு நாளிலே திரும்பணும்னு. பட்டணத்து பாங்கியிலே வேலை? இவன் இல்லாமே அங்கே பாங்கியிலே எல்லாருமே திணறிப் போவாளோல்லியோ? சீக்கிரம் போகணும்னுதான் சொன்னான்” என்றாள் பர்வதம்.
கடைசியில் தன் தம்பியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் போக பர்வதத்துக்கு மனமில்லைதான். ஆனால் எப்படியோ நிறுத்தி விட்டுப் “போய்ட்டு மத்தியானமா வரேன்” என்று விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
அவள் போன பின் சின்னம்மா சற்றுக் கேலியாகவே சொன்னாள். “பிரமாதமாகத் தம்பியைப் பத்திப் பீத்திக்கிறதுக்கு வந்துட்டா இங்கே! அதிசயத் தம்பிதான்! பட்டணத்திலே நாற்பது ரூபாய்க்கு லாட்டரி அடிச்சிண்டிருப்பான்! இங்கே….”
நளினி பேசாமல் இருந்திருக்கக் கூடாதா பாவம்! குறுக்கிட்டாள்; வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
“அவர் வண்டியிலேருந்து வந்து இறங்கச்சே நான் பார்த்தேன். நன்னாகத்தான் இருந்தார்” என்றாள் நளினி.
“பெரிய மனுஷி கணக்கா உட்கார்ந்துண்டு வம்பளந் துண்டு! போடி கழுதை! அண்டாவிலே ஜலம் இல்லே; கிணத்திலேருந்து இழுத்துக் கொண்டு வந்து கொட்டு!” என்று நளினியை அதட்டினாள் சின்னம்மா.
நளினி இங்கு சீதாராமனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது போலவே அங்கே எதிர்வீட்டில் சீதாராமனும் நளினியைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான்.
“இன்னிக்கு நான் வந்து வண்டியிலேருந்து இறங்கச்சே எதிராளாத்திலே ஒரு பொண்ணு பத்துப் பனிரெண்டு வயது இருக்கும்….” என்று சீதாராமன் தன் தமக்கையிடம் ஆரம்பித்தான்.
“ஊருக்கு வரத்துக்கு முன்னாடியே பொண்ணையும் பாத்து வச்சுட்டாயா? இனிமே முகூர்த்தத்துக்கு நாள் வைக்க வேண்டியதுதான் பாக்கியாக்கும்! வரட்டும்; அத்திம்பேர் வந்தவுடனே சொல்லி நாள் பார்க்கச் சொல்றேன்” என்றாள் பர்வதம் கேலியாக. ஆனால் பெருமையுடன். இந்தச் சமயத்தில் தன் கணவர், வைதீகர் என்பது கூடப் பெருமை அளிக்கிற விஷயமாக இருந்தது போலும் அவளுக்கு.
“போ அக்கா! அந்தப் பெண்ணு கொஞ்சம் வாய்த் துடுக்குக்காரின்னு பட்டுது எனக்கு. என்னைப் பார்த்துப் ‘பட்டணத்து மாமாவைப் பாத்தியாடா!’ என்று தன் இடுப்பில் இருந்த குழந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். என் காதிலே விழும்படியா வயசான பொண்ணு இப்படிக் கூச்சமில்லாம…” என்று சொல்லி நிறுத்தினான் சீதாராமன்.
“நல்ல பொண்ணுதான்; கள்ளங் கபடில்லாத பொண்ணு மனசிலே நினைக்கிறதை வாயிலே சொல்லிப் புடும். இளைய தாயார்கிட்டே மாட்டிண்டு சிரமப்படறது!” என்றாள் பார்வதத்தம்மாள்.
“ஐயோ பாவம்! நன்னாத் தலைவாரி நல்ல புடவை கட்டி தலைபின்னி விட்டா அழகாகக்கூட இருக்கும்” என்றான் சீதாராமன்.
அவனுடைய சகோதரி அவன் சொன்னதைக் காதில் வாங்காமலே சொன்னாள்! “தங்கமான பொண்தான். இங்கே அடிக்கடி வரும். போகும். ஆனால் இப்போ அவ இளைய தாயார் தர்பார் பண்றா; முன்னைப் போல வந்து போற தில்லை. எங்கிட்டே உசிரா ஒட்டிண்டிருக்கும். நம்ம எச்சுமுவும் அவளும் ரொம்ப சினேகிதம்” என்றாள்.
“அத்திம்பேர் சாயங்காலம்தான் வருவாரோ?” என்று பேச்சை மாற்றும் உத்தேசத்துடன் கேட்டான் சீதாராமன்.
“அது போறதும் வரதும் ஒரு நிலையா என்ன? போனா போனதுதான். வந்தா வந்ததுதான்! ஏதாவது நிலையாச் சொல்லிப்புட்டுப் போற வழக்கம்தான் கிடையாதே! பாவம்! உனக்குப் பசிக்கிறாப்லே இருக்கும்! இரு. ஒரு நொடியிலே அடுப்பை மூட்டிச் சமைச்சுப் போட்டுடறேன்” என்று சொல்லிக்கொண்டே சமையல் அறையை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள் பர்வதம்.
சமையல் அறை வாசல்படியைத் தாண்டும்போது எதிர் வீட்டு நளினியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்த விஷயம் ஞாபகம் வந்தது அவளுக்கு. வாசற்படியிலேயே நின்று தன் தம்பியைப் பார்த்துச் சொன்னாள்: “சீதா! நீ கெட்டிக்காரன் தாண்டா” என்றாள்.
“என்ன?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் சீதாராமன்.
“அந்தப் பெண்ணைப்பத்தி மேலே என்னைப் பேச விடாமே ஒரு நொடியிலே பேச்சை மாத்திவிட்டாயே. நீ! இருந்தாலும் நீ கெட்டிக்காரன் தாண்டா!” என்றாள் பர்வதம்.
“பின்னே என்ன பண்றது? யார் அந்தப் பொண்ணுன்னு உங்கிட்ட கேட்ட குத்தத்துக்காக அதுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சுவிடறதுன்னு ஆரம்பிச்சுடறே நீ” என்று சொல்லிச் சிரித்தான் சீதாராமன்.
“இல்லே; சரியான ஜோடிதான்னு என் மனசிலேயும் பட்டது. அவளும் ரொம்பக் கெட்டிக்காரி தான்; உனக்கேத்த கெட்டிக்காரிதான்” என்றாள் பர்வதம்.
“எனக்கு அசட்டுப் பொண்தான் வேணும். கெட்டிக்காரப் பொண்ணைக் கட்டிண்டு அவஸ்தைப்பட என்னாலே முடியாதம்மா!” என்றான் சீதாராமன்.
அதற்குமேல் பேசிக்கொண்டு நின்றால் சமையல் காரியம் தாமதமாவிடும் என்று பர்வதம் அடுப்பு மூட்டப் போனாள். ஆனால் அவள் அடுப்பு மூட்டியாவதற்கு முன், அவர்கள் வீட்டு வாசல்கதவை யாரோ படபடவென்று அதிகாரத்துடன் தட்டும் சத்தம் கேட்டது. அவளுடைய மூன்றாவது பிள்ளை ஏழெட்டு வயசுப் பையன் – போய்க் கதவைத் திறந்தான். சீதாராமன் கூடத்தில் ஊஞ்சலிலே உட்கார்ந்திருந்தான். பர்வதத்தம்மாள் கையில் கிரோஸின் சிம்மணியுடன் சமையல் அறை வாசற்படியண்டை நின்றாள்.
தெருவாசலுக்கப்பால் ஏழெட்டுப் போலீஸ்கார்களும், தெருவிலே ஏகமாகக் கும்பலும் நிற்பதைக் கண்டதுமே பர்வதத்தம்மாளுக்குப் பாதிப் பிராணன் போய்விட்டது! கையிலிருந்த சிம்ணி கீழே நழுவி விழுந்து அணைந்தது! “ஐயோ!” என்று கூவ வாயெடுத்தாள்: ஆனால் வாயிலிருந்து சப்தம் ஒன்றும் வெளிவரவில்லை!



