
நளினி
க. நா. சுப்ரமண்யம்
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
அன்று மாலை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வயல் வெளிகளில் தன் அலுவல்களை எல்லாம் பார்த்துக் கொண்டு வீடு திரும்பும்போது அஸ்தமன சமயம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டொரு நாழிகையில் இருட்டி விடும். அதி காலையில் வீட்டுப் பால் காபி ஒன்றரைச் சேர் சாப்பிட்டு போனதுதான். அதற்குப் பிறகு அவர் ஜலபானம் கூடப் பண்ணவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு ஆட்களுடன் நின்று வேலை செய்துவிட்டுத் திரும்பினார்.
விஜயபுரம் எல்லையை எட்டுகிறபோது பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்து விட்டது. அக்கிரகாரத்துக்குள் வருகிற போது, வீடு சேர்ந்ததும் ஹாய்யாக ஸ்நானம் பண்ணி விட்டு, நாலு வாய் சாப்பிட்டுவிட்டு, அக்கடா என்று திண்ணையிலே துணியை விரித்துக் கொண்டு சிறிது நேரம் படுத்திருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வந்தார்.
தெருவாசிகள் எல்லாரும் அதாவது அச்சமயம் அங்கிருந்தவர்கள் எல்லாரும் தன்னை ஏதோ ஒரு தினுசாகப் பார்ப்பது போலப் பட்டது சாஸ்திரிகளுக்கு. முகத்திலே, தலையிலே ஏதாவது வைக்கோல் தூசு தும்பு ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று கைகளால் தடவிப் பார்த்துக் கொண்டார். பின்னர் என்ன?
வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். எதிர் வீட்டில் தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் வீட்டில் அப்பொழுது தான் நளினி ஒரு சிறு கல் விளக்கை ஏற்றிவாசல் திண்ணைப் பிறையில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாள். வாசல் திண்ணையிலே ஒரு சிறு பிறையில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்துவிட்டால் எவ்வளவோ அலங்காரமாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ மங்களகரமாகத் தான் இருக்கிறது என்று எண்ணினார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். வானத்திலே நட்சத்திரம் சுடர் விடுவதைப் போல ஒரு சிறு கைவிளக்கு
தெருவுக்கே அலங்காரமாகி விடுகிறதே!
எதிர்வீட்டு நளினி வயசுதான் அவர் பெண் எச்சுமூவுக்கும். ஆனால் வீட்டு வாசலிலே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்று எச்சுமுக்கு பிறகு சொன்னால் ஒழிய ஞாபகமே வராது. “அஸ்தமிக்கிற சமயம் ஆயிற்றே; வாசலிலே ஜலம் தெளித்துக் கோலமிட்டு ஒரு விளக்கையும் ஏற்றி வைக்கக்கூடாதோ? வீட்டிலே பெரியவள் ஒருத்தி இருந்தாளே! அவள் என்னதான் அப்படிச் செய்து கொண்டிருந்தாளோ! லக்ஷ்மீகரமான வேளையிலே வாசற் கதவு அடைத்துத் தாளிட்டிருப்பதா? என்ன குடித்தனம்! என்ன பொம்மனாட்டி!” என்று பசியின் வேகத்தால் அதிகரித்த ஆத்திரத்துடன் நினைத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
வாசற் கதவைச் சற்று ஆத்திரத்துடனேயே தட்டினார்.
அவருடைய பிள்ளை ராஜு – ஏழெட்டு வயசுப் பையன் வந்து கதவைத் திறந்தான். திறந்தவுடனேயே, அன்று நடந்த அசாதாரணமான சம்பவங்களைத் தன் தகப்பனாருக்கு ஒரே மூச்சில் சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல் துடித்தது அவனுக்கு.
“அப்பா! இன்னிக்கி போலீஸ்காராள்ளாம் நம்மாத்துக்கு வந்தா அப்பா! வந்து…. வந்து…” என்று மேலே எப்படி எந்த வரிசையில் எதைச் சொல்வது என்று அறியாமல் திண்டாடினான்.
சாதுக்கள் நிறைந்த விஜயபுரம் அக்கிரகாரத்திலே சாது என்று சிறப்புப் பெயர் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தப்புத் தண்டாவுக்கு வழி மறந்தும் போகாதவர். போலீஸ் காரர்கள் தன் வீட்டுப் பக்கம் வந்திருந்தார்கள் என்று கேட்டவுடனேயே அவர் வெலவெலத்துப் போய்விட்டார்! தன் மனைவி ஏதோ சொல்ப அளவில், தவலை சொம்பு என்று அடகு வாங்கிக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வதுண்டு என்று அவருக்குத் தெரியும். அது விஷயமாக ஏதாவது தவறு செய்துவிட்டு… தன் பெயரைச் சந்தி சிரிக்க அடித்து விட்டாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது அவருக்கு. அது ஒன்றுதான் குறைவாக இருந்தது. நிலம் சரியானபடி விளையவில்லை இவ்வருஷம்: வைதிகத் தொழிலும் இப்பொழுதெல்லாம் முன்போல் இல்லை. அதை மதிப்பவர்களே குறைந்து கொண்டிருந்தார்கள் போல இருந்தது. சரிதான். போலீஸ் காரர்களும் சேர்ந்து கொண்டால் பிழைப்பு நடந்தாற் போலத் தான் என்று எண்ணமிட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
அவர் பையன் ராஜு சொல்லிக் கொண்டிருந்தான்: “பட்டணத்திலேருந்து மாமா வந்தா இன்னிக்காத்தாலை; மத்தியானம் போலீஸ்காரா வந்து மாமாவை அழைச்சுண்டு போயிட்டா” என்றான்.
“மாமா வந்திருந்தானா? ஏண்டி! யாரு சீதாராமனா?” என்று கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியார், ஊஞ்சலில் சுருட்டி மடக்கிக் கொண்டு படுத்திருந்த தன் மனைவி பர்வதம்மாளை பார்த்து.
பர்வதம் பதில் அளிக்கவில்லை.
“ஏன் அப்பா? நளினி சொல்றா: நாளைக்கு மாமாவை விட்டுபுடுவான்னு விட்டுடுவாளா. அப்பா? இல்லாட்டா மாமாவை ஜெயில்லே போட்டுடுவாளா அப்பா,” என்றான்.
ஜெயில் என்ற உடனே சும்மா படுத்திருக்க முடிய வில்லை பர்வதம்மாளுக்கு. விசித்து விசித்துக் கொண்டே எழுந்துவிட்டாள். நாள் பூராவும் அழுது அழுது அவள் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன; அன்று பூராவும் சாப்பிடவும் இல்லை – சமைக்க அடுப்பு மூட்டப்போன சமயம் போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். அன்று அவள் அடுப்பே மூட்டவில்லை. அவள் தலை அலங்கோலமாகப் பரந்து கிடந்தது.
அவளைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுவிட்டார் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள். அவர் கர்நாடகப் பேர்வழி. இந்தக் காலத்திய காதல் தத்துவமெல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனால், தன்னுடன் கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் வாழ்ந்து சுகதுக்கங்களைச் சரி அளவாகப் பகிர்ந்து கொண்டு, தன் குழந்தைகளுக்கும் தாயாகிவிட்ட அவள் கஷ்டப்படுவது அவர் மனத்தைப் பாதித்தது.
“என்னடீ நடந்தது? குழந்தை சொல்றது எனக்குப் புரியவில்லையே! நீதான் மனத்தைத் தேத்திண்டு நடந்ததைச் சொல்லு ஆகவேண்டியதைப் பார்க்கிறேன்” என்று பரிவுடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
“எல்லாத்தையும் சமாளிக்க ஒரு பொம்மனாட்டியை விட்டுட்டு நீங்க நாள் பூராவும் எங்கேயாவது தொலைஞ்சுட்டா….” என்று முணுமுணுத்தாள் பர்வத்தம்மாள்.
“என்னடி பண்ணச் சொல்றே? நம்ம பிழைப்பு அப்படி யிருக்கே? தெய்வம் தலையிலே எழுதியிருக்கச்சே நம்ம என்ன பண்றது?” என்றார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். சற்று முன் அவர் குரலில் தொனித்த பரிவு இப்போது இல்லை. அவர் மனைவியின் குற்றச்சாட்டு அந்தப் பரிவை அழித்து விட்டது.
“கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் போதுமே இந்தப் பொணங்களுக்கெல்லாம்… ஏதோ நடந்துவிட்டதே, அதைச் சரியாகச் சொல்லி, ஆகவேண்டியதைச் செய்யச் சொல்லணு மேன்னு இல்லையே! உம்; தவிர, நாள் பூராவும் சாப்பிடாமே கொள்ளாமே….” என்று சிந்தித்தார் அவர்.
அவருடைய பத்தினி கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டுத் தடுமாறிய குரலில் அன்று நடந்த சம்பவங்கள் பூராவையும் சொன்னாள். சீதாராமனைப் போலீஸ்காரர்கள் அன்று மாலை ரயிலிலேயே பட்டணம் அழைத்துப் போய்விட்டதாக நளினி விசாரித்துக்கொண்டு வந்து சொன்னதாகவும் சொன்னாள்.
இடிந்து போனவர்போல் அப்படியே ஊஞ்சலில் உட்கார்ந்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். சீத்தாராமனை அவருக்கு என்றுமே பிடிக்காது. அவனுடைய அண்ணா தஞ்சாவூரிலிருந்த ஜெயராமனைத்தான் அவருக்குப் பிடிக்கும். நல்ல யோக்கியன். கனாந்தம் அத்தியயனம் செய்திருந்தான். இந்த சீதாராமன் சிறுவயதிலிருந்தே தறிதலை என்று பெயர் வாங்கினவன்தான். பட்டணத்திலே போய் ஏதோ உத்தியோகம் தேடிப் பிடித்தான் அந்த உத்தியோகம் நிலைக்கும் படியான வழியிலே நடந்து கொள்ளக்கூடாதோ? சரி, உத்தியோகத்துக்கு ஹானி வந்ததோடு மட்டுமா போயிற்று? விஜயபுரத்தில் இருந்த அக்காளைத் தேடிக்கொண்டு உறவு கொண்டாடிக் கொண்டு என்றுமில்லாமல் வந்து, வந்த இடத்தில் போலீஸ்காரர்கள் பிடித்துக்கொண்டு போக நேர்ந்ததை என்ன என்று சொல்வது? அவன் எப்படியாவது தொலைகிறான் என்றால், கூடத் தன்மானம் போய்விட்டதே என்றிருந்தது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியாருக்கு. அவர் பிறர் கையைப் பார்த்து ஜீவனம் பண்ணுகிறவர்; அதுவும், விஜயபுரம் அக்கிரகாரவாசிகள் முகம் பார்த்துப் பிழைக்க வேண்டியவர். சங்கடமான நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டானே அந்தப் படுபாவிப் பயல்!
“என்ன இருபதினாயிரம்னா இன்ஸ்பெக்டர் சொன்னார்?” என்று தன் காதில் ஒருதரம் விழுந்ததையே நம்பாதவராகக் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
பர்வதம் பதில் சொல்லவில்லை. அவள் வேறு ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அந்த யோசனையின் முடிவாகக் கடைசியில் சொன்னாள்: “இதோ பாருங்கோ! சீதாராமனுக்கு உங்களையும் என்னையும் விட்டா வேறு யாரு கதியிருக்கா? நம்மதான் ஆகவேண்டியதைப் பார்க்கணும். என்ன செய்யணுமோ என்னவோ, தீர விசாரிச்சு…”
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் குறுக்கிட்டார்: “செய்யலாம்! நீயும் அடுப்பை மூட்டிச் சமை, நான் ஸ்நானம் பண்ணி சாப்பிட்டுவிட்டு அப்புறம் எதிராளாத்து விசுவாநதய்யரை என்ன செய்யறதுன்னு கேட்டுண்டு வரேன்…. என்னமோ பார்க்கலாம்” என்றார்.
அந்தமட்டும் தன் கணவன் தன் தம்பிக்கு உதவி செய்ய ஆட்சேபம் சொல்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிப் பர்வதத்தம்மாளுக்குப் பரம திருப்திதான். எப்படியாவது தம்பியைப் பற்றிச் செய்ய வேண்டியதைச் செய்யற சாக்கிலே விஜயபுரம் அக்கிரகாரத்தை விட்டுச் சில நாட்களேனும் எங்கேயாவது போய்விட்டு வந்தால் தேவலை என்று எண்ணினாள் பர்வதம். அன்று காலை சீதாராமன் வந்த பொழுது அவன் எவ்வளவு பெருமையாக அக்கிரகாரத்து ஸ்திரீகள் எல்லோருடனும் பேசினாளோ, அவ்வளவுக்கவ்வளவு இப்போது அவர்கள் கண்களில் படாமல் இரவோடு இரவாகவே கிளம்பிவிட்டால் தேவலை போல இருந்தது!
சமையல் காரியத்தைக் கவனிக்கப் போனாள்.
ஊஞ்சல் பலகையில் சிந்தனையில் ஆழ்ந்தவராக உட்கார்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அதிகநேரம் இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே திண்ணைக்குப் போனார். எதிர்வீட்டுத் திண்ணையில் விசுவநாதய்யர் உட்கார்ந்திருப்பது அவர் கண்ணில் பட்டது.



