நளினி
க. நா. சுப்ரமண்யம்

பட்டணத்து பாங்கி

“பட்டணத்திலுள்ள அநேக பாங்கிகளிலே எது சிறந்தது. எது பணமும், நாணயமும், நாகரீகமும், மரியாதையும் கொண்டது?” என்று யாரையாவது கேட்டால் பதில் சொல்ல வெகுவாகத் தயங்குவார்கள். ஒன்றுக்கொன்று போட்டி போடக் கூடிய பல பாங்கிகள் இருக்கின்றன. ஆனால் எது மிகவும் திறமையற்றது, பாங்கி என்கிற பெயருக்கே லாயக் கற்றது. நாணயமோ, பணமோ இல்லாதது? என்று கேட்டால் யாரும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள் – தயங்காமல் கொள்ளாமல் உடனே பட்டணத்து பாங்கிதான் என்று பதில் அளித்துவிடுவார்கள்.

ஆனால் சமீப காலம் வரையில் அதாவது ஒரு வாரத்துக்கு முந்தி வரையில் பட்டணத்து பாங்கி என்கிற பெயரே யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனால் இந்த ஒரு வாரத்திலே அது பெயரும் புகழும் பெறக்கூடிய வகையில் பல காரியங்களைச் சாதித்துவிட்டது.

கேவலம் ஒரு இருபதினாயிரம் ரூபாய் திருட்டுப் போனதைச் சமாளித்துக் கொள்ள முடியாமல், பாங்கியை மூடிவிட்டார்கள் என்றால் அதைப் பாங்கி என்று எப்படிச் சொல்வது? இருபது கோடியா, இருபது லக்ஷமா கொள்ளை போனது? இரண்டும் இல்லை; இருபதினாயிரம்! அதைச் சமாளிக்க முடியாமல் பாங்கி முறிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டவுடனேயே பட்டணம் நகைக்கத் தொடங்கி விட்டது. அந்தப் பாங்கியிலே பணம் போட்டிருந்தவர்கள் சொல்பப் பேர்வழிகள்தான்; அதுவும் மிகவும் சொற்பப் பணம் தான் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு பணம் போன துக்கம் ஒருபுறம் இருக்க, இந்தப் பாங்கியில் போய்ப் பணம் போட்டோமே என்கிற உணர்ச்சிதான் அதிகமாகத் தலைதூக்கி நின்று நகைக்கத் தூண்டியது.

இட வசதி அதிகம் கிடைக்காத இந்த நாட்களிலே மிகவும் நல்ல இடத்தில், வசதியான பெரிய இடத்தில்தான் பட்டணத்துப் பாங்கி குடியேறியிருந்தது. பெரிய கூடத்தில் பளபளக்கிற தேக்குமரத் தடுப்புக்கு மேலே பித்தளைக் கிராதிகள் கண்ணைப் பறித்தன. இரண்டு சேவகர்கள் பம்பரம் போலச் சுழன்று கொண்டிருந்தனர்;

அவர்கள் சற்றே வெளிச்சமான இடத்துக்கு நடந்தால் போதும் அவர்கள் டவாலி வில்லைகள் டால் வீசின. நாலைந்து குமாஸ்தாக்கள் ஓயாமல் ஒழியாமல் எப்பொழுதும் பெரிய பெரிய புத்தகங்களைத் தூக்க மாட்டாமல் தூக்கிப் போட்டுப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லா பாங்கிங் அலுவல்களும் உண்டு என்று விளம்பரம் செய்வார்களே அது போல, அந்த பாங்கிலும் எல்லா பாங்கிங் அலுவல்களும் உண்டு. அதுமட்டுமல்ல; சின்ன பாங்கிகளில் உள்ளது போல் ஒரே ஆசாமி எல்லா அலுவல்களையும் பார்த்துக் கொண்டான் என்றும் இல்லை. ஒவ்வொரு அலுவலுக்கும் ஒவ்வொரு குமாஸ்தா உண்டு. ஒவ்வொரு குமாஸ்தாவும் சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்றாலும் ஜோராகச் சட்டை போட்டுக்கொண்டு, ஜோராகக் கிராப் சீவிக்கொண்டுதான் வந்து கொண்டிருந்தார்கள். யாராவது தப்பித் தவறி வருகிற மனிதரையும் ஒவ்வொரு ஜன்னலிலும் கால்மணி நேரமாவது காக்க வைக்கிற தோரணையிலும் குறைவில்லை.

இந்த பாங்கியின் மானஜிங் டைரக்டர், ஏஜெண்டு எல்லாம் ஒருவரே. அவர் பெயர் குருஸ்வாமி. பெயருக்குப் பின்னால் நாலைந்து பட்டங்கள் இருந்தன. இந்த பாங்கிக்கு முன்னால் அவர் பல கம்பெனிகள் ஆரம்பித்துத் திவாலாக்கி யிருப்பவர் என்பது பட்டணத்தில் பலபேருக்குத் தெரியாது. ஏனென்றால் குருஸ்வாமி அதற்குமுன் கல்கத்தா, லாகூர் போன்ற வடக்கத்தி இடங்களில் இருந்து வியாபாரம் செய்தவரே தவிர, பட்டணத்தில் அவருக்கு அதிகமாக நட மாட்டம் இருந்ததில்லை; தனி நண்பர்களும் இருந்ததில்லை. குருஸ்வாமியின் பேச்சு வியாபகத்தில், அவர் நடையுடை பாவனைகளில் மயங்கிச் சிலர் இரண்டொரு வருஷங்களுக்கு முன் அவரை வைத்து ஒரு பாங்கி நடத்த ஒப்புக் கொண்டார்கள். வடக்கே நிலைமை தெளியாது, இனி அங்கே சமாளிப்பதற் கில்லை என்று அறிந்துகொண்ட குருஸ்வாமி இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆரம்பத்தில் நல்லெண்ணத்துடன்தான் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அந்த நல்லெண்ணம் அதிக காலம் நீடிக்கவில்லை. அவசரத் தேவைகளுக்குப் பாங்கி, பணத்தைக் கையாட குருஸ்வாமி தயங்கவில்லை. ஒன்றிரண்டு தரம் கையாடிய பிறகு தொழில்முறை சரியாகத் தெரியாத சகோதர அப்பாவி டைரக்டர்கள் கவனியாதது கண்டு, தயக்க மில்லாமலே கையாடவும், அவசியம் இல்லாத போதும் பணம் எடுக்கவும் தலைப்பட்டார்! ஆயிற்று; பட்டணத்து பாங்கி மூடப்படவேண்டிய சந்தர்ப்பத்தைக் குருஸ்வாமி ஏற்படுத்திக் கொண்டார். தகுதியான சந்தர்ப்பத்தில் தான் மாட்டிக் கொள்ளாதிருப்பதற்கு ஏதாவது யுக்திசெய்துவிட்டு நழுவி விடுவது என்பதுதான் அவருடைய வேலைத் திட்டம்.

விதி குறுக்கிட்டது. அவர் என்ன பண்ணுவார்?

சீதாராமன் – ஆமாம், விஜயபுரம் அக்கிரகாரத்திலிருந்த வைதிக சிரோமணி கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் சம்சாரம் பர்வதத்தம்மாளுடைய சகோதரனான சீதாராமன் வேலை யில்லாமல் பட்டணத்துக்கு வந்து தெருத் தெருவாகத் திரிந்து கொண்டிருந்தவன். அகஸ்மாத்தாக ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் குருஸ்வாமியைச் சந்தித்தான். பிறகு அவர் பட்டணத்து பாங்கியின் ஏஜெண்டு என்று தெரிந்துகொண்டு சந்தித்தான் நாலைந்து தடவைகள் வெகு மரியாதையாக. பிறகு ஒருநாள் தன் கஷ்ட நிலைமையைச் சொல்லி, தனக்கு அவர் பாங்கியில் வேலை போட்டுத் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டான். குருஸ்வாமிக்கு அவனிடம் ஏதோ பற்றுதல் விழுந்தது; வேலைக்கு எடுத்துக் கொண்டார்.

சீதாராமன் வந்ததனால் என்று சொல்வதற்கில்லை. ஊரெங்கும் பணப் புழக்கம் அதிகமானதன் காரணமாகப் பட்டணத்து பாங்கியிலும் ஓரளவு பணம் புரண்டது. வெகு சீக்கிரமே கடையைக் கட்டிவிட்டுக் கிளம்பிவிடுவது என்று எண்ணியிருந்த குருஸ்வாமி, இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் நிறையப் பணம் கிடைக்கும்போலிருக்கிறதே என்று எண்ணிக் காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண் போகவில்லை. பட்டணத்துப் பாங்கியிலே கூடக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் பெருகிக்கொண்டிருந்தது.

அவ்வளவு குமாஸ்தாக்களும் இருந்தார்கள் என்று பெயரே தவிர அவர்களையும் மீறி குருஸ்வாமியே பணம் போடுகிறவர்கள், வாங்குகிறவர்கள் எல்லோரையும் கவனித்துக் கொள்வார். அவருக்கு அதிலே ஓர் உண்மையான அக்கறையிருந்தது! வழக்கம் போல் அப்படிக் கவனித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் யாரோ ஒருவன் பாங்கு திறக்கையிலேயே ரொக்கமாக ஒரு பை நிறையப் பணம் கொண்டுவந்து அந்தப் பாங்கியிலே கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றான்; இருபதினாயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தான் அவன், அவன் எதற்காகத் தன் பாங்கியைத் தேடி வரவேண்டும் என்பது குருஸ்வாமிக்குச் சற்று ஆச்சரியமாகவேயிருந்தது. அவன் எதற்காக வந்திருந்தால் என்ன? அவன் எவ்வளவுதான் யுக்திக்காரனானாலும், அவனையும்விட யுக்திக்காரனில்லையா குருஸ்வாமி?

இதைப்பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்குவதற்கு முன்னரே அன்றுமுதல் ஒரு வாரத்திற்கு லீவு வேண்டும் என்று சீதாராமன் ஒரு விண்ணப்பம் கொண்டு வந்து தந்தான். சீதாராமன் ஒரு வாரம் ஊரில் இருக்க மாட்டான் என்பதுபற்றி குருஸ்வாமிக்குச் சந்தோஷம் என்றே சொல்ல வேண்டும்; லீவு கொடுத்துவிட்டார்.

பாங்கி வேலைகள் வழக்கம் போலவே நடந்தன. அன்று வசூலான பணத்தையெல்லாம் மத்தியானம் மூன்று மணிக்கு வாங்கித் தன் பெட்டியில் வைத்துப் பத்திரமாக இரண்டு பூட்டுக்களையும் பூட்டினார் குருஸ்வாமி. நாலு மணிக்கு ஆபீஸிலுள்ள குமாஸ்தாக்களெல்லோரும் கிளம்பத் தயாராகி விட்டனர். சீதாராமன் மாத்திரம் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்; பழைய வியவகாரங்கள் ஏதாவது எழுத வேண்டியது பாக்கியிருக்கும் என்று எண்ணினார் குருஸ்வாமி.

அவர் காபி சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் போது சீதாராமனும் போய்விட்டான். அவன் தன் சகோதரி விஜய புரத்தில் இருப்பதாகவும் அங்கு போவதாகவும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தான். ஐந்து மணி வரையில் ஏதோ தபாலிருந்து – சொந்தத் தபால் -எழுதி முடித்தார். பிறகு பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார்.

இரவு ஒன்பதுமணி வரையில் அவருக்கு ஒன்றும் சந்தேகம் தட்டவில்லை. ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுவிட்டுத் துப்பறியும் நாவல் ஒன்றைப் படிக்க ஆரம்பிக்கையில் ஏதோ ஞாபகம் வந்தது. அவர் பாங்கிக்கும் வீட்டுக்கும் அதிக தூரம் இல்லை நடந்தே போய்விட்டார். வாசல் காப்போன் இன்னும் சாப்பிட்டுவிட்டு வந்து படுக்கவில்லை. கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போய்ப் பெட்டியை திறந்து பார்த்தார். கட்டு நோட்டுகளையும் காணவில்லை.

சரியாக இருபதினாயிரத்துக்கு நோட்டுக்கள் இருந்தனவே!….

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !