
நளினி
க. நா. சுப்ரமண்யம்
தந்திக் குமாஸ்தா
தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யருக்கு இன்று ஆபீஸிலே வேலை ரொம்பவும் கடுமை. ஊரிலே உள்ள சாவு – கலியாணம். நல்லது பொல்லாதது. லாப நஷ்டம் எல்லாத்துக்குமாகச் சேர்த்து அவர் கட்டு கட அடித்துத் தானே யாகவேண்டும்? பிறருடைய சுபச் செய்திகளையும் அசுபச் செய்திகளை தந்தியிலே தட்டித் தட்டி, அதிலே பட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கான மனப் பக்குவம் பெற்று விட்டவர் அவர். தந்தியடிக்கும் யந்திரத்தைப் போல உணர்ச்சி யற்றவர்தான் அவரும்; வேண்டுமானால் எதிலும் பட்டுக் கொள்ளாத வேதாந்தியைப் போல என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பிறர் விஷயங்களிலே வேதாந்தியைப் போலவும். தந்தி யந்திரத்தைப் போலவும் ஆகிவிட்டாரே தவிர, தன் சொந்த விஷயங்களிலும் அப்படி ஆகிவிட்டார் என்று சொல்லி விட முடியாது. சற்றே ஆத்திரமும் கோபமும் அதிகம் உடைய மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று விஜயபுரம் தபாலாபீஸீலே புதுப் போஸ்டு மாஸ்டர் வந்து வேலை ஒப்புக் கொண்டிருந்தார். புதுப் போஸ்டு மாஸ்டரும் பழைய போஸ்டு மாஸ்டரும் ஒத்துப் பேசிக் கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை தந்தி யிலாகாவைத்தான் இருவரும் நிண்டி நிண்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்று பூராவும், உடனே நடக்க வேண்டிய வேலை கெட்டது என்பது மட்டுமல்ல; நச்சுத் தாங்காமல் விசுவநாதய்யருக்கு வாழ்க்கையிலே உத்சாகம் போய்விட்டது போல இருந்தது. பழைய போஸ்டு மாஸ்டர் புதிய போஸ்டு மாஸ்டர் இருவரையுமே மனமார திட்டிக் கொண்டு, மணி ஆறானாலும் வழக்கமாத் தபாலாஸில் பேசிக்கொண்டிருந்து விட்டு வருபவர் அன்று உரிய காலம் ஆனதும் ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்காமல் விடுவிடென்று வீடு நோக்கி நடந்துவிட்டார்.
அவர் வீட்டு வாசற்படி ஏறும்போது உள்ளிருந்து சின்னம்மாளின் குரல் கேட்டது: “நளினி! அடீ நளினி! எங்கேடியம்மா தொலைஞ்சு போயிட்டே நீ?” என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தாள் சின்னம்மா.
“பாவம்! அந்தப் பொண்ணைப் போட்டு எப்போ பார்த்தாலும் படுத்திண்டு!” என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் விசுவநாதய்யர்.
நளினி தன் சின்னம்மாளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது விசுவநாதய்யர் காதில் விழுந்தது. நின்று கேட்டார். கொஞ்சுதலான குரலில் சற்று மெதுவாகவே நளினி சொல்லிக் கொண்டிருந்தாள்: “நான் எங்கேயும் தொலைஞ்சு போயிடல்லியே சின்னம்மா! கொல்லையிலே கிணத்திலேருந்து ஜலம் இழுத்து அண்டாவை ரொப்பச் சொன்னயே ரொப்பிண்டிருந்தேன்” என்றாள்.
சின்னம்மா எரிந்து விழுந்தாள்; “சரி சரி வாயாடிண்டு நிக்காதே போ! அஸ்தமிக்கப் போறது கொல்லைக் கதவைச் சாத்திப்பிட்டு வாசல்லே விளக்கு ஏத்தி வை, போ! உன்னோடு வாயாடிண்டு நிக்க எனக்குப் போது ஏது?” அவள் குரலில் தொனித்த கடுமை விசுவநாதய்யருக்குக் கோபமூட்டியது. “இந்தா! அவள் ஒண்ணும் வாயாடல்லெ! நீ தான் நாளுக்கு நாள் வாயாட ஆரம்பிக்கிறே; பாவம். அது என்ன பண்ணித்து! நீ கூப்பிடரத்துக்கு முன்னாடி அதுவந்து ஏன்னு கேக்கறது. கேட்பாரில்லையேன்னு விரட்டி விரட்டி அடிக்கறயே நீ! நன்னாருக்கா உனக்கு?” என்று சற்றுக் கடுமையாகவே கேட்டார் தன் மனைவியை.
“பொண்ணுக்குப் பரிஞ்சு பேச நீங்களும் ஆரம்பித்து விட்டேளோல்லியோ! அது உருப்பட்டாப்லேதான் போங்கோ!” என்றாள் சின்னம்மா வெடுக்கென்று.
“சித்தே அடக்கமாத்தான் பேசேன்; அப்படிப் பேசினால் உங்கப்பா ஆஸ்தியெல்லாம் போயிடுமோ?” என்றார் விசுவநாதய்யார்.
“எங்கப்பா ஆஸ்தி ஏதாவது சேர்த்து வைத்திருந்தால் இங்கே ஏன் இந்தப் படுகுழியிலே என்னைத் தள்ளியிருக்கப் போறா? தெய்வத்துக்குத்தான் தெரியும்….” என்று சொல்ல வந்ததை முடிக்கக் கூட முடிக்காமல் விசிக்க ஆரம்பித்து விட்டாள் சின்னம்மாள்.
அவளுக்குப் பக்கபலமாக ராஜுவும் அவள் காலைக் கட்டிக்கொண்டு சற்று உரக்கவே அழ ஆரம்பித்துவிட்டான்.
“ஆபீசிலேதான் அவஸ்தைன்னா. வீட்டுக்கு வந்தால்… ஆபீசிலேயே இருந்துவிட்டால் தேவலைன்னு இருக்கு!” விசுவநாதய்யர். பிறகு “உன்னை என்ன சொல்லிவிட்டேனாம் நான். பெரிசாக? என்னவோ அந்தச் சின்னப் பொண்ணைப் பிரமாதமா கோவிச்சுக்கறயே கொஞ்சம் பிரியமாகத்தான் அதோட பேசிண்டு இருக்கப் படாதான்னு கேட்டால், என்னவோ ஆத்திரம் பொத்துண்டு வந்துடுத்து அழ ஆரம்பிச்சுட்டா என்னதான் பண்றது?” என்றார் அதட்டலாகவும், கெஞ்சுதலாகவும்.
விசிப்பதை நிறுத்திவிட்டுப் பதில் எதுவும் சொல்லாமல் நின்றாள் சின்னம்மாள்.
விசுவநாதய்யர் சொன்னார்: ‘ஆபிசிலே இன்னிக்கு வேலைத் தொந்தரவு ரொம்ப ஜாஸ்தி. லேசா மண்டையை இடிக்கிறது. பால் இருந்தால் காபி போட்டுக் கொடு.’
காபி போட்டுக் கொண்டு வர சின்னம்மாள் சமையலறைக்குள் போனதும் விசுவநாதய்யர் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு கொல்லைப்புறம் போய்க் கைகால் முகம் கழுவிக் கொண்டு வந்து தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்து கொண்டு முற்றத்தில் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு “அப்பாடா!” என்று சாய்ந்தார். வாசல் திண்ணையில் விளக்கேற்றி வைத்துவிட்டு நளினி வந்தாள்.
“அப்பா! இன்னிக்கு எதித்தாத்திலே….” என்று ஆரம்பித்தாள் நளினி.
“இங்கே வா நளினி” என்று விசுவநாதய்யர் அவளைத் தன்னருகில் அழைத்து அருகில் அணைத்தாற் போல உட்கார வைத்துக் கொண்டு தலையையும் முதுகையும் தடவிக் கொடுத்தார். அவள் முகமும் கண்ணும்தான் எவ்வளவு அழகா யிருந்தன! அவள் அம்மாவைப் போலவேதான் இருக்கிறாள் இவளும் என்று பெருமையுடன் எண்ணினார் அவர். தலை வாரிப் பின்னிப் பூ வைத்தால்…?
“ஏம்மா நளினி, காலாகாலத்திலே தலைவாரிப் பின்னிப் பொட்டு இட்டுக்கப்படாதோ நீ!” என்றார் விசுவநாதய்யர்.
‘இனிமேல்தான் அப்பா!’ என்றாள் நளினி. பிறகு அவசரம் அவசரமா அன்று நடந்ததை எல்லாம் சொல்ல முற்பட்டாள்: “எதிராளாத்துக்கு இன்னிக் காத்தாலை பட்டணத்திலேருந்து ஒரு மாமா வந்தா. அந்த மாமாவை ஏதோ பாங்கிலே களவாடிபுட்டார்னு மத்தியானமா போலீஸ்காரா வந்து அழச்சிண்டு போயிட்டா” என்றாள் நளினி.
“யாராத்திலே? கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியாத்திலேயா?”
“இன்னிக்கு ஏதோ போலிஸ் தந்திபோச்சு, கைது செய்தாகிவிட்டது; பட்டிணத்துக்கு இரவு ரெயிலில் கொண்டு வருகிறோம்னு. எதிராளாத்திலே யாரு?…” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் விசுவநாதய்யர்.
“பர்வதம் மாமிக்குத் தம்பியாம்; பட்டணத்திலே ஏதோ பாங்கியிலே வேலையா யிருக்கிறாராம்” என்றாள் நளினி. சற்று நேரம் கழித்துச் சொன்னாள்;
‘எனக்கென்னவோ அவரை பார்த்தால் திருடியிருக்கப் பட்டவராகத் தோணல்லே!’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது சின்னம்மாள் வந்து விட்டாள்.
சின்னம்மாள் டம்ளரில் காபியை விசுவநாதய்யர் பக்கத்தில் வைத்துவிட்டுச் சொன்னாள்: “இன்னி முழுக்க இதான் காரியம் இவளுக்கு! எந்தாத்திலே எந்தக் கரியாப் போறவன் எப்படிப் போனால் இவளுக்கென்ன? ஊர் வம்பை யெல்லாம் விலைக்கு வாங்கிண்டு வராள்; சொன்னாத் தெரிய மாட்டேங்கறது. அந்தப் போலீஸ்காரனோடே எல்லாம் சரிக்குச் சமமா வார்த்தையாடிண்டு நிக்கறா; நீங்க கண்டிக்கிறதோ கிடையாது. நான் கண்டிச்சா கோவிச்சுக்க வேறே ஆரம்பிச்சுடறேள்” என்றாள்.
“இல்லே அப்பா! அந்த சப்-இன்ஸ்பெக்டர் வந்து நீ யார் பொண்ணுன்னு என்னைக் கேட்டார்; நான் பதில் சொன்னேன்!” என்றாள் நளினி.
“அது சரி; கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்?…” என்று விசாரித்தார் விசுவநாதய்யர்.
“அவர் ஆத்திலே இல்லவேயில்லை. கார்த்தாலை கிராமத்துக்குள் போனவர் இப்போத்தான் சித்த முன்னாடி நான் வாசல்லே விளக்கேத்திண்டிருக்கச்சே வந்தார்” என்றாள் நளினி.
“ஐயோ பாவம்! மானமான மனுஷன்; ரொம்ப சாது. அவருக்குத்தான் ரொம்பவும் கஷ்டமாயிருக்கும்” என்றார் விசுவநாதய்யர்.
எதிர்வீட்டுக் காரியங்களுக்கு அவர் அப்படிப் பரிவது சின்னம்மாவுக்குப் பிடிக்கவில்லை. “நம்ம கவலை நமக்குத் தலைக்கு மேலே கிடக்கு! அவாத்துக் காரியத்துக்கெல்லாம் நாம் கஷ்டப்படறதுன்னு ஆரம்பிச்சா அவ்வளவுதான் – நம்ம காரியம் எதுவும் நடக்காது” என்றாள்.
“அவாள் ஒத்தாசையும் நமக்கு என்னிக்காவது வேண்டித் தான் இருக்கும் ” என்று சொல்லிவிட்டு, காபி டம்ளரைக் காலி பண்ணி விடாமல் அதில் ஒருவாய் காபியுடன் நளினியிடம் கொடுத்து, “சாப்பிடம்மா” என்றார்.
“.இப்படிச் செல்லம் கொடுத்துக் கொடுத்துத்தான் அது உருப்படாமேப் போயிண்டிருக்கு” என்றாள் சின்னம்மாள்.
விசுவநாதய்யர் பதில் சொல்லவில்லை. எழுந்து வாசல் பக்கம் போனார். நளினியும் டம்ளரில் இருந்த காபியை மடக்கென்று குடித்துவிட்டு அப்பாவுடன் வாசல் திண்ணைக்கு வந்தாள். என்றைக்கும் போலிருந்தால் சின்னம்மாள் நளினியைக் கூப்பிட்டிருப்பாள். ஆனால், ஏனோ இன்று கூப்பிடத் துணியவில்லை.
எதிர்வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.
நளினி ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தாள். அதில் பாதி விசுவநாதய்யர் காதில் விழவேயில்லை. விழுந்ததில் பாதி அவர் மனசில் உரைக்கவேயில்லை. அவர் ஏதோ ஆபிஸ் ஞாபகத்தில் ஆழ்ந்திருந்தார். நளினி அன்றைக்கு நடந்த அபூர்வ சம்பவத்திலே மனம் லயித்து என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
எதிர்வீட்டுக் கதவைத் திறந்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வெளியே வந்தார். திண்ணையில் நின்று ஒரு நிமிஷம் தயங்கினார். பிறகு படி இறங்கித் தெருவைக் கடந்து விசுவநாதய்யரை நோக்கி வந்தார்.
“சாஸ்திரிகளா! வாங்கோ, உட்காருங்கோ! ஏதோ இன்னிக்குப் பெரிசா நடந்து போச்சுன்னு கேள்விப்பட்டேன்…. இப்பதான் நளினி சொன்னாள்” என்றார் விசுவநாதய்யர்.
திண்ணையைத் தட்டிவிட்டு உட்கார்ந்தார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். “என்னவோ எங்காவது கண்காணாத இடத்திலே நடந்திருந்தா எனக்கு ஒண்ணும் சிரமம் இருந்திராது. இன்னிக் கின்னு. இந்தக் காரியத்துக்குன்னு அந்தப் பிள்ளையாண்டான் என் கிரகத்தைத் தேடிண்டு வந்திருக்க வேண்டாம்! என்ன பண்றது – என் கிரகசாரம்!” என்றார் சாஸ்திரிகள்.
“என்னவோ, எல்லாம் நல்லபடியா முடியணும்னு ஈசுவரனைப் பிரார்த்திக்க வேண்டியதுதான்; நம்மவேறென்ன பண்ணமுடியும்?” என்றார் விசுவநாதய்யர்.
“அவர் அப்படிப்பட்டவர்னு பார்த்தாத் தெரியல்லை மாமா!” என்றாள் நளினி.
“அவனுக்கு வேறு யாரும் இல்லை; ஏதாவது வழக்காடற தானால் நம்பதான் செய்யணும்னு என் ஆமடையாள் சொல்றா, எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல்லே; உங்களைக் கேட்டால் தெரியும்னு…”
“எனக்குத்தான் என்ன தெரியும். இதெல்லாம் பற்றி? யாராவது வக்கீலைப் பார்த்து… நான் வேணும்னா சொல்றேன் நாளைக்குப் பார்க்கலாம். வைத்தியநாதன் தம்பி ஸ்ரீனிவாசன் வந்திருக்கான். அவன் பட்டணத்திலே பெரிய வக்கீல்னு சொல்றா; நாளைக் காலம்பற வாங்கோ; நம்ம ரெண்டு பேருமாகப் பார்த்து என்ன செய்யறதுன்னு விசாரிப்போம் ” என்றார் விசுவநாதய்யர்.
“இன்னிப் போதுக்கு இன்னும் சாப்பாடுகூட ஆகல்லே; இனிமேல்தான் போய் ஸ்நானம். சாப்பாடு எல்லாம் ” என்றார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
“என்னவோ, நம் இஷ்டப்படியா நடக்கிறது எல்லாம்? போய்ச் சாப்பிடுங்கோ; கார்த்தாலை வாங்கோ. வக்கீலைப் பார்க்கலாம்” என்றார் விசுவநாதய்யர்.



