
நளினி
க. நா. சுப்ரமண்யம்
மூன்று வருஷங்களுக்குப் பிறகு
குருஸ்வாமியை விஜயபுரம் அக்கிரகாரத்தில் தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்க விட்டு விட்டு, கொல்லைப்பக்கம் குளிப்பதற்காகப் போன சீதாராமன் யார் கண்ணிலும் படாமல் அப்படியே மறைந்து போய் மூன்று வருஷங்களாகி விட்டன. குருஸ்வாமி தன்னையும் ஏமாற்றத் துணிவும் சாமர்த்தியமும் உள்ள ஒருவன் பிறந்தானே என்று ஆச்சரியத்தில் மூழ்கியவராக அன்று பூராவும் காத்துக் கொண்டு இருந்துவிட்டு அஸ்தமிக்கும் சமயத்தில் ரயிலேறிச் சென்னை செல்ல முயற்சிக்கையில், முதலில் டிக்கெட் இல்லாத குற்றத்துக்காகவும், பிறகு யார் என்று யாரோ கூறிவிட வேறு பெரிய குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டார். அவருக்கிருந்த சாமர்த்தியத்தில் பாதி, கையில் காசில்லாத காரணத்தினால் மறைந்தே விட்டது. மற்றப் பாதியும் சீதாராமனிடம் தோற்று விட்டதினாலே போய் விட்டது போலும்! எது எப்படியானாலும் குருஸ்வாமிக்கு நாலு வருஷங்கள் தண்டனை விதித்து விட்டார்கள்.
சீதாராமன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் பட்டணத்துக்கு வக்கீல் விலாசத்தில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குத் தந்தி அடித்து விட்டுத் தன் வீட்டுக்கு வந்தபோது, விருந்தாளியைக் காணவில்லை. அவன் பெட்டி படுக்கை எல்லாம் வைத்த இடத்திலேயே இருந்தன. அதைப்பற்றி அவர் சிறிதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. எப்படி எந்த நிமிஷம் அவன் மறைந்தான் என்று எல்லா விஷயங்களையும் கூர்மையாகவே கவனித்துக் கொண்டிருந்த நளினிக்குக் கூடத் தெரியாது. குருஸ்வாமி என்பவன் தனக்காகத் திண்ணையிலே காத்திருந்தான் என்று சீதாராமனுக்குத் தெரியும். அதுபற்றி அவனுக்கு அவ்வளவாகத் திருப்தியில்லை என்று அவளுக்குத் தெரியும். ஏதோ பண விஷயமாக இருவரும் தகராறு செய்து கொண்டிருந்தார்கள் என்று அவர்கள் பேசிய விஷயங்களிலிருந்து அவள் அநுமானித்துக் கொண்டிருந்தாள்.
மத்தியானம் மீண்டும் அவர்களிருவரிடையேயும் விவாதம் நடக்கும் என்று எதிர் பார்த்திருந்தாள் அவள்.
சீதாராமனைக் காணவில்லை என்றவுடனே விசுவ நாதய்யருக்கு முதலில் தோன்றிய விஷயம்: பட்டணத்துப் பையன் கிணற்றில் தப்பித் தவறி விழுந்துவிட்டிருப்பானோ என்பது தான்! ஆழமில்லாக் கிணறுதான் அவர் வீட்டுக் கிணறு. அவரே அதில் இறங்கித் துளாவிப் பார்த்துவிட்டார்.
சின்னம்மாளுக்கு ஒரே கோபம். வழக்கமாகப் பத்து மணிக்கெல்லாம் கணவனுக்குச் சாப்பாடு போட்டுவிட்டுச் சற்று நேரம் அக்கடா என்று படுத்திருப்பாள் அவள். இன்று அவள் சாப்பாடும் கெட்டுவிட்டது; ஓய்வும் கெட்டுவிட்டது! கோபம் வருவது இயற்கைதானே! “ஊரிலிருக்கிற கரியாப் போவானுக்கெல்லாம் இடங்கொடுத் திண்டிருந்தால் என்ன எல்லாம் நடக்குமோ!” என்றாள் அவள்.
“கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளைத் தெரிந்த தோஷம்” என்று முணுமுணுத்துக்கொண்டே தலையை ஈரம் போகத் துவட்டிவிட்டுத் தனியே சாப்பிட உட்கார்ந்தார் விசுவநாதய்யர்.
“பர்வதத்தம்மாளுக்கு வாய்ச்சிருக்கிற அருமைக்குத் தம்பியைப்பற்றிச் சொல்லிமுடியாது போங்கோ!” என்றாள் சின்னம்மா.
“எல்லோருமே உன் தம்பி மாதிரி இருந்துவிட முடியுமா?” என்றார் விசுவநாதய்யர்.
“என் தம்பியை இழுப்பானேன் இங்கே! அவன் கிடக்கான் எங்கேயோ!” என்று சினுங்கினாள் சின்னம்மா.
இப்படியாக சீதாராமனுடைய வருகையும் திடீர் மறைவும் விசுவநாதய்யருக்கும் அவர் சம்சாரத்திற்கும் இடையே ஒரு சண்டையை மூட்டிவிட்டன – அவ்வளவுதான்.
பல நாளாக சீதாராமனைப் பற்றிய ஞாபகமே இல்லாத நளினிக்கு இன்று அதெல்லாம் நடந்து சரியாக மூன்று வருஷங்களான பிறகு என்னவோ ஞாபகம் வந்தது. சீதாராமனைப் பற்றிய சமாச்சாரங்கள் எல்லாம் அவளுக்கு ஒன்றுவிடாமல் நன்றாக ஞாபகத்திலிருந்தன என்பது சற்று ஆச்சரியப்பட வேண்டிய விஷயமே.
நளினி வாசல் திண்ணையில் தூணில் சாய்ந்தபடியே உட்கார்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் யோசனையில் ஆழ்ந்திருப்பது புதிதல்ல. அவளுக்கென்ன கவலையிருந்தது யோசனைகளைத் தவிர? காலாகாலத்தில் அவள் அப்பா கலியாணத்தைப் பண்ணி வைத்திருந்தாரானால் இதற்குள்ளாகவே அவளுக்குக் குடும்பக் கவலை எல்லாம் ஏற்பட்டிருக்கும். வயசு பதினைந்தாகப் போகிறது; இன்னும் கலியாணத்திற்கான ஏற்பாடுகளையே காணவில்லை. அவள் வயசுக்குச் சற்று வளர்த்தியான பெண் தான் நளினி. தவிரவும் அவள் பயமே இல்லாமல். சாதாரணமாக, தான் பெண், பயந்து வெட்கிச் சமையல் அறையிலேயே கிடக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டு எல்லோருடனும் சமமாக வார்த்தையாடுவாள்.
“அவனை ஒண்ணும் சொல்லாதே!” என்று விசுவநாதய்யர் சொல்லிச் சொல்லி வந்ததன் பலனாகச் சின்னம்மாளும் அவளை எதுவும் சொல்வதை நிறுத்திப் பல நாட்களாகி விட்டன.
“எப்படியாவது போகிறாள். எனக்கென்ன? நான் பெற்றெடுத்த பெண்ணா?” என்று முணுமுணுத்துக் கொண்டே சும்மா இருக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். ராஜுவுக்குப் பின் பிறந்த பேபிக்குச் சாதம் ஊட்டக்கூட அவள் நளினியைக் கூப்பிடுவது கிடையாது!
இப்படியாக நளினி வாசல் திண்ணையில் தூணில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்து அழியாக் கனவுகள் கண்டு கொண்டிருப்பது தினசரிக் காரியமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அக்கிரகாரத்திலே நடப்பதெல்லாம் நளினிக்குத் தெரியும். அவளுக்குத் தெரியாமல்தான் அங்கு ஒன்றும் நடந்து விட முடியாதே! யார் வீட்டுக்கு யார் யார் வருகிறார்கள்? யார் யார் வீட்டிலே சமீபத்திலே என்னென்ன நடக்க இருக்கிறது? என்று தன் வயசுக்கு மீறிய ஓர் அறிவுடனே நளினி சொல்லுவாள். ஆனால் ஒன்று அவளாக வம்பு வளர்க்கத் தன் வீட்டு வாசல் இறங்கி எங்கும் போவது கிடையாது. யாராவது வந்து தன்னுடன் பேசினால் தான் அவள் பேசுவாள் கூச்சமில்லாமலே யாருடனும் பேசுவாள். மற்றப்படி அவள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்த படியே இருக்க ஆக்ஷேபிப்பதே யில்லை.
எதிர்வீட்டு வாசலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வந்து உட்கார்ந்ததைக் கண்டவுடனே நளினி அவரைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். மூன்று வருடங்களாக, சீதாராமன் வந்து போனது முதலே அவருக்குக் கெட்ட காலந்தான் என்று சொல்லவேண்டும். ‘பாவம்! ஆளே எப்படி மாறிப் போய் விட்டார்!’ என்று நினைத்தாள் நளினி. அப்படிப்பட்ட தொழில் அவருடையது. சீதாராமன் பண்ணிய பாவத்திற் கெல்லாம் அவர் பிராயச்சித்தம் செய்யவேண்டி யிருந்தது. சீதாராமன்தான் அப்படிப்பட்ட பாவம் என்ன பண்ணினான் என்று அக்கிரகார வாசிகளுக்கு நிச்சயமாகத் தெரியுமா? அதுவும் ஒன்றும் இல்லை. ஒருதரம் வந்தான்; யார் கண்ணிலும் படாமல் கொல்லைப்புறம் சுவர் ஏறிக் குதித்து ஓடி விட்டான்! அவன் செய்தது என்னவானால் என்ன? ஊரிலே அதே அக்கிரகாரத்திலே பரம்பரையாகப் பல குடும்பங்களுக்குப் புரோகிதர் என்று சொல்லிக்கொண்டு எதிர் வரிசையிலே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குப் போட்டியாக, ராமச்சந்திர சாஸ்திரிகள் என்று ஒருவர் கும்ப கோணத்திலிருந்து வந்து குடியேறிவிட்டார். அவ்வளவு தான் அருமை மச்சினனால் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியார் கண்ட பலன்.
பர்வதத்தம்மாளை நினைக்கும் போது நளினிக்கே சிரிப்பு வந்தது. ஆனால் அது முழுச் சிரிப்பு அல்ல; பரிதாபங் கலந்த சிரிப்பு. பர்வதத்தம்மாள் இப்பொழுதெல்லாம் முன் போலத் தன் தம்பியின் பெருமையைப் பேசுவதற்காக, ஏதாவது கடன் வாங்க வருகிற சாக்கில் எதிர்வீட்டுக்கோ பக்கத்து வீட்டுக்கோ போவது கிடையாது; உண்மையில் அவள் எங்குமே கிளம்புவது கிடையாது. பெட்டிப்பாம்பு தான் அடங்கிக் கிடந்தாள். ஆனால் இத்தனைக்கும் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் வாய் திறந்து அவளை எதுவும் சொல்வது கிடையாது. ஆனால் அதனால் நிலைமை மாறி விடுமா? அல்லது உண்மை மறைந்து அழிந்துவிடுமா?
சென்னையிலிருந்து, வழக்கு நடத்தாமலே வெற்றி கண்டு விட்ட பெருமிதத்துடன், வக்கீல் வாங்கிக் கொண்ட இருநூற்றைம்பது ரூபாயும் திரும்பவில்லை என்றாலும், பாதகமில்லை என்று விசுவநாதய்யர் தந்தி கண்டவுடனே கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளும், பர்வதத்தம்மாளும் திரும்பினார்கள். ஆனால் விசுவநாதய்யர் அவர்களை உள்ளே அழைத்துப் போய் ரகசியமாக விஷயத்தைச் சொன்னவுடனேயே அவர்களுடைய முகங்கள் தொங்கிவிட்டன. முதல் இரண்டு நாள் என்னவோ விஷயம் ரகசியமாகத்தான் இருந்தது; பிறகு அக்கிரகாரம் பூராவும் எப்படியோ இது பரவிவிட்டது. எல்லோரும் சீதாராமனைப் பற்றியே பேசத் தலைப்பட்டார்கள்.
ரகசியமாக இருந்திருக்க வேண்டிய அச்செய்தி எப்படி ஊரெல்லாம் பரவியது என்பது நளினிக்கு அன்றும் சரி இன்றும் சரி – ஆச்சரியமாகவே இருந்தது. சின்னம்மா சொன்னது நளினியின் காதிலும் விழாமல் இல்லை: “நம் ஆத்திலேதான் ஒரு நியூஸ் பேப்பர் இருக்கே?” என்று அவள் சொன்னாள். ஆனால் நளினி யாரிடமும் சீதாராமனைப் பேசவில்லை என்பது உண்மை. விசுவநாதய்யரைப் பற்றிச் சந்தேகிக்க இடமே கிடையாது. தானுண்டு தன் வேலை யுண்டு என்று இருப்பவர் அவர். இந்த விஷயத்தில் தான் தவறிப்போய் ஏதோ கொஞ்சம் பிறர் விஷயத்திலும் ஈடுபட்டு வக்கீல் அமர்த்தி எல்லாம் செய்தார் – தோல்வியுற்றார். இனி, தன் ஆயுளில் அவர் பிறர் காரியங்களில் தலையிடத் துணிய மாட்டார். சின்னம்மாளும் சொல்லியிருக்க மாட்டாள். கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளும் அவர் சம்சாரமும் இதைப்பற்றிப் பேசியே இருக்க மாட்டார்கள். பின் எப்படி எல்லாச் செய்திகளும் வெளிவந்து விட்டது! ஊகமாகக் கூடஇல்லை விவரங்களுடன் எப்படியோ வெளிவந்திருந்தது! இது, விடை காண முடியாத ஒரு புதிராகப்பட்டது நளினிக்கு. ஆனால், ஆளில்லாத அந்தரத் தபால்கள் நம்மூரில் புது விஷயம் அல்லவே! ரகசியம் என்று நாம் எண்ணிப் பத்திரப்படுத்தி வைக்கும் எவ்வளவு விஷயங்கள் பகிரங்கமாக அம்பலத்துக்குக் காரணமில்லாமலே வந்துவிடுகின்றன!
சென்னையிலிருந்து விஜயபுரம் திரும்பிய விநாடி யிலிருந்தே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் துரதிஷ்டம் தொடங்கிவிட்டது என்று சொல்லவேண்டும். நாளுக்கு நாள் அவர் புரோகிதம் குறைந்தது. ஒரு விசேஷ தினமென்றால் நிற்கச் சாவகாசமில்லாமல் பம்பரமாகச் சுழன்று சம்பாதிக்கும் வைதிகப் பிராமணர் இப்போது வீட்டுத் திண்ணையை விட்டு இறங்குவதே கிடையாது. அவர் அப்படி என்னதான் பெரிய தவறு செய்துவிட்டார் என்பதுதான் நளினிக்குப் புரிய வில்லை.
எதிர்வீட்டுத் திண்ணையில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் இரண்டே நிமிஷம்தான் உட்கார்ந்திருந்தார். தெருவோடு அவருக்குப் போட்டியாகச் சமீபத்தில் வந்து முளைத்த கும்பகோணம் ராமச்சந்திர சாஸ்திரிகள் தர்ப்பைக்கட்டும் கையுமாகப் போவதைக் கண்டதும், மனம் தாளாது உள்ளே எழுந்து போய்விட்டார்.
நளினியும் உள்ளே போக எழுந்தாள். போய்க் குளித்து விட்டு வந்தாள். அப்பா கூப்பிடுகிற சமயத்துக்குச் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் சின்னம்மாவிடம் அனாவசியமாக வசவு கேட்க நேரிடும் அல்லவா?
எழுந்த நளினி நின்றாள். தூரத்தில் எங்கேயோ ரயில் ஊதுகிற சப்தம் கேட்டது. ஓடம் போக்கி ஆற்றுப்பாலத்தின் மேலே ரயில் ஓடுகிற சப்தம் கடகடவென்று காலை அமைதியைக் கலைத்துக் கொண்டு எழுந்து ஓய்ந்தது. அக்கிரகாரத்துக் கோடியில் இருந்த பிள்ளையார் கோயிலைத் தாண்டிக் கடகடவென்று குதிரைச் சலங்கை மணியின் சப்தையும் அழுத்திக்கொண்டு ஒரு குதிரை வண்டி உருண்டு வரும் சப்தம் கேட்டது.
நின்று யார் வீட்டுக்கு யார் வருவது என்று பார்க்கத் தாமதித்தாள் நளினி.



