

முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
குமரகுருபரர்
உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே
உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமே
கலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே
அலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே
அறிவு ளறிவை யறிவு மவரும் அறிய வரிய பிரமமே
மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே
வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே
-முத்துக்.பிள்: வருகை 9
இழுமெ னருவி சொரியு மிமைய முதல்வி புதல்வன் வருகவே
இயலு நடையும் வடிவு மழகும் எழுத வரியன் வருகவே
ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே
ஒருவ னிருவ ரொடுகை தொழுநல் உபய சரணன் வருகவே
விழுது விடுவெ ணிலவு பொழியு நகையன் வருக வருகவே
விளரி பயிலு மளியு ஞிமிரும் விரவி குரவன் வருகவே
மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே
வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே
-முத்துக்.பிள்: வருகை 10
கச்சியப்பர்
துய்யதாம் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில்சீ ரடியார் வாழ்க வாழ்கஇப் புவனமெல்லாம்.
– கந்த புராணம் 5.4:6
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம்.
– கந்த புராணம் 6.24:261
புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா
நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி.
– கந்த புராணம் 6.24:262
நூன்முகம்
இயற்கை பல அழகிய வடிவங்களாய்க் காட்சியளிக்கிறது. அக்காட்சியை மறுப்போரில்லை. இயற்கையைக் கூர்த்த மதியால் ஆராய ஆராய அதன் உள்ளுறையொன்று உணர்வில் உறுகிறது. இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர். உயிரை முருகு அல்லது முருகன் என்று தமிழ் நாட்டார் கொண்டனர். இவ்வுடலையும் உயிரையும் உலகம் ஆராய்ந்த வண்ண மிருக்கிறது. அவரவர் ஆராய்ச்சியிற் போந்த உண்மைகளும் பலப்பல. இன்னும் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது.
முருகனைப் பற்றிய பலதிறக் கொள்கைகள், கதைகள் கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதல் முதல் முருகனுண்மை கண்ட பழந்தமிழர், முருகனை எவ்வாறு கொண்டனர் என்று ஆராயத் தலைப்பட்டதில், அவர் முருகை மணமும் இளமையும் கடவுட்டன்மையும் அழகுமுடைய செம்பொருளாகக் கொண்டனர் என்பதும் பிறவும் விளங்கின. இக்கொள்கை அடியேனுக்கு மிக விழுமியதாய்த் தோன்றிற்று. இவ்விழுமிய கொள்கை நாட்டில் நிலைபெறின், நாட்டுக்குப் பலவழியிலும் நலன் விளையுமென்னும் வேட்கை என்மாட்டெழுந்தது. வேட்கை மேலீட்டான், அமயம் வாய்ந்துழி வாய்ந்துழி, விழுமிய கொள்கையைப் பற்றிப் பேசியும் எழுதியும் வருகிறேன்.
காரைக்குடியினின்றும் முகிழ்த்த குமரன் என்னுந் திங்கள் மலரின் முதலிதழில், என்னால் எழுதப் பெற்ற முருகன் என்னுஞ் சிறு கட்டுரை யொன்று வெளிவந்தது. அக்கட்டுரையைக் கண்ட நண்பர் சிலர், அதை நூல்வடிவாக வெளியிடுமாறு கடிதம் எழுதிக் கொண்டேயிருந்தனர். அக்கட்டுரை ஒரு திங்கள் தாளுக்கென எழுதப்பட்டமையான் அதை யான் நினைந்தவண்ணம் எழுதல் இயலாமற் போயிற்று. அன்பர்கள் விழைந்தவாறு, பின்னை அக்கட்டுரையை முதன் முறை நூலாக்க முயன்றபோதும், அதனிடை, நினைந்த பல பொருள்கள் சேர்க்கப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை. ஆகவே, முதற் பதிப்பில் மிசச் சில பொருள் சேர்த்து நூலுக்கு முருகன் என்னுந்தலைப்பீந்தேன். அப்பதிப்பு 1925-ம் ஆண்டு வெளிவந்தது.
அழகைப்பற்றி என்பால் கருக்கொண்டிருந்த பல பொருளை இரண்டாம் பதிப்பில் உருக்கொள்ளச் செய்யலாமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வெண்ணம் இரண்டாம் பதிப்பில் ஒருவாறு முற்றுப்பெற்றது. இரண்டாம் பதிப்பு 1927-ம் ஆண்டு வெளிவரலாயிற்று.
இரண்டாம் பதிப்பில் பல புதுப்பொருள் கூட்டப்பட்டன. நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்கு `முருகன் அல்லது அழகு’ என்னுந் தலைப்பு அணியப்பட்டது. அழகை அடிப்படையாகக் கிடத்தி நூல் எழுதப்பட்டமையான், நூலுக்கு அம்முடி சூட்டப்பட்டதென்க.
இயற்கையழகை முருகெனக் கொண்டு பழந்தமிழர் வழிபாடு நிகழ்த்தி வந்தனர். இவ்வாறு முருகனை வழிபடுனோர் தொகை நாளடைவில் அருகிவிட்டது. அதனால் பல கடவுளர் உணர்வு, பன்னெறி உணர்வு, போராட்டம், கட்சிகள், பிரிவுகள் முதலிய இழிவுகள் தோன்றலாயின. பழைய இயற்கை வழிபாடு மீண்டும் நாட்டில் உயிர்த்தெழல் வேண்டுமென்பது எனது வேணவே. அவ்வவா மேலீட்டான் யாக்கப்பட்ட நூல் இது.
இந்நூற்கண், முருகன் சொற்பொருள் விளக்கம், அழகினியல், இளமைப்பேறு, இயற்கை யழகே முருகென்பது, பாட்டு ஓவியம் இசை இவைகளின் வழி இயற்கை அன்னையை வழிபடல், பெண்ணின் பெருமை, நோன்பின் திறம், முருகனடியார் இயல்பு முதலியன ஓதப்பட்டிருக்கின்றன. இந்நூலை முற்றும் பயில்வோர் உள்ளத்தில் இயற்கை வழிபாட்டில் ஆர்வம், ஒரே கடவுள் ஒரே நெறி என்னும் உறுதி எவ்வுயிர்க்குந் தீங்கு நினையாப் பேரறம் முதலியன நிலவும்.
இயற்கை என்னும் எனது ஆருயிர் அன்னைக்கும் அவ்வியற்கையை விடுத்து என்றும் நீங்காத அழகு என்னும் அப்பனுக்கும் இந்நூலைக் கோயிலாக்கி தமிழ் மலர் தூவி ஒல்லும் வகை வழிபாடு நிகழ்த்தியிருக்கிறேன். வழிபாட்டு முறையில் குற்றங் குறைகளிருப்பின், பொருத்துருளுமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.
மூன்றாம் பதிப்பு 1930-ம் ஆண்டிலும் நான்காம் பதிப்பு 1938-ம் ஆண்டிலும், ஐந்தாம் பதிப்பு 1943-ம் ஆண்டிலும் ஆறாம் பதிப்பு 1944-ம் ஆண்டிலும் ஏழாம் பதிப்பு 1946-ம் ஆண்டிலும் வெளிவந்தன. இஃது [1950-ம் ஆண்டு] எட்டாம் பதிப்பு.
முதுமையில், என் கண்களில் ஊறு நேர்ந்தது. சிகிச்சை செய்யப்படும் இவ்வேளையில், இவ்வெட்டாம் பதிப்பு அச்சாகியது. எனது நிலை கண்டு, அச்சுப் பிழை பார்த்துத் துணைபுரிந்த வித்துவான் – அன்பு கணபதி அவர்கட்கு எனது நன்றி உரியதாக.
பிழை பொருக்க.
திருவாரூர் வி. கலியாணசுந்தரன்



