முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்

5. பாட்டும் ஓவியமும் இசையும் பிறவும்


(இயற்கை வழிபாட்டுப் படிகள் – பாட்டு, ஓவியம், இசை – இயற்கைப் படம் பாட்டு – இளங்கோ, சேக்கிழார், கம்பர் ஓவியங்கள் – தமிழ் நூல்கள் – தமிழர்க்கொரு விண்ணப்பம் – கலித்தொகையும் திருக்கோவையாரும் – திருக்கோயிலும் ஓவியமும் – ஓவியமும் காவியமும் – உருவ வழிபாட்டின் நுட்பம் – ஓவியமும் இயற்கையும் – மலையும் கோயிலும் – செயற்கை அணிகள் – இசையும் யோகமும் – அப்பரும் பதஞ்சலியாரும் – இசையும் இயற்கையும் – இசையும் இறைவனும் – வன்றொண்டர் – ஷேக்ஸ்பியர் – இசையும் ஒழுங்கும் – சேக்கிழார் – எட்டுப் பொருள் வழிபாடு – ஞாயிறு வழிபாடு – உடலோம்பல். )

இயற்கை அழகை உணரும் பேறு பெறுதல் எளிதன்று. அரிதில் முயன்று அப்பேறு பெற்ற ஒருவன் எக்காரணம் பற்றியும் அதை இழத்தலாகாது. அப்பேற்றிற்கு இடர் விளைக்கப் பல திறப் பேய்களிருக்கின்றன. அப்பேய்களின் சூழ்ச்சிக்கு எளிமை யாய் இரையாகாதவாறு மகன் தன்னைக் காத்துக் கொள்வதே அறிவுடைமை. இதற்கென் செய்வது?

இயற்கையை இடையறாது மகன் நினைந்த வண்ணமிருத் தல் வேண்டும். ஒன்றை இடையீடின்றி நினைந்து கொண் டிருக்கும் இயல்பு மிகச் சிலர்க்கே அமைவதுண்டு. மற்றப் பெரும்பான்மையோர்க்கு அவ்வியல்பு எளிதில் அமைவதில்லை. ஆதலால் இயற்கை நினைவினின்றும் பிரியாதவாறு தம்மைக் காக்கவல்ல முயற்சிகளில் இவர் தலைப்படுதல் சிறப்பு. இம் முயற்சியை வழிபாடு என்றுங் கூறலாம். வழிபாடுகள் பலதிறத் தன. அவரவர் தத்தம் ஆற்றலுக் கியன்றதும், இயல்பிற்குப் பொருந்தியதுமாக உள்ள ஒவ்வொருவித வழிபாட்டைக் கொள்வாராக.

ஈண்டுச் சிறப்பாக முத்திற வழிபாடுகளைக் குறிக்கிறேன். ஒன்று பாட்டு; மற்றொன்று ஓவியம்; இன்னொன்று இசை. இவை மக்கள் உணர்வையும் இயற்கையையுந் தொடர்புப் படுத்தத்தக்க பாலங்கள் போன்றன.

முதலாவது பாட்டை எடுத்துக் கொள்வோம். பாட்டாவ தென்னை? இயற்கையே பாட்டு. இயற்கை பாட்டெனில் அதன்உள்ளுறையாக உள்ள முருகு அல்லது அழகும் பாட்டாகும். இயற்கையை உள்ளவாறு எழுத்தால் அணிபெற வரைவதும் பாட்டே. இப்பாட்டை இயற்கையின் படம் என்று சொல்லலாம்.

இயற்கை எப்பொருளை உளத்தில் பதிக்கிறதோ, அப் பொருளையே அதன் படமாக உள்ள பாட்டும் பதித்தல் வேண்டும்; அங்ஙனம் பதிவியாதது பாட்டன்று.

குருமணி உறைந்து உருண்டு திரண்டாலென இருள் சூழ்ந்த கொண்டல் முடியும், செஞ்ஞாயிற்றின் எழுகதி ருமிழும் இளவெயிலில் ஒன்றி அழகு காட்டும் பச்சைப் பசுங்காட்டுப் போர்வையும், மணி கொழித்து முழவார்த்துச் சங்கொலிக்கும் அருவி யணியும், வண்டு யாழ்மூரலும், குயில்பாட்டும், மஞ்ஞை யாட்டுங் கொண்ட ஒரு மால்வரை நிற்கிறது. அவ்வரையை எழுத்தால் ஓவியமாக ஒரு புலவன் வரைந்த பாட்டு மற்றோரிடத் தில் பொலிகிறது.

அம்மலையைப் பாராது இப்பாட்டைக் கண்ணுற்ற வேறொரு புலவனும், இப்பாட்டைக் காணாது அம்மலையை நோக்கிய மற்றொரு புலவனும் ஒரு நிலையத்தில் சந்திக்கின்றனர். முன்னையபுலவன் பாட்டின் சிறப்பைக் கூறப் புகுந்தான். பாட்டுப் பொருளை அவன் விரித்துப் பகருங்கால், பொருளின் பத்தைச் செவிமடுத்த மற்றொருவன், ‘இஃதென்ன பாட்டா? மலையா? வழியிடை யான் கண்ட ஒரு மலையைப்பற்றிப் பேசு கிறீரே! அம்மலையின் படமோ இப்பாட்டு? அம்மலை, புறத்தே வழங்கிய காட்சியையும் இன்பத்தையும், இப்பாட்டு அகத்தே வழங்குகிறதே!’ என்று மகிழ்வெய்தினான். பின்னை அவ்விரு புலவருங் குறித்த மலை போந்து, அம்மலை பாட்டாகப் பாவியுள்ள அழகை யுணர்ந்து இன்புற்றனர். இன்பத்தில் இருவரும் ஒருவராயினர்.

புறத்தே இயற்கையைக் காண்போன் எத்தகை இன்பத்தை நுகர்கிறானோ, அத்தகை இன்பத்தை அவ்வியற்கைப் பாட்டை ஓரிடத்திலிருந்து படிப்போனும் நுகர்தல் வேண்டும். இத்தன்மை வாய்ந்த ஒன்றே பாட்டாகும்.

பாட்டுக்குரிய பொருட் காட்சியையாதல், அதற்குரிய இன்பத்தையாதல் வழங்காதது பாட்டாகாது. அது வெறுஞ் சொற்கட்டேயாகும். அது விரைவில் உலுத்துப்போகும்.

இயற்கையை உள்ளவாறு குறிக்கும் பாட்டை அணிபெற யாக்க வல்லான் எவன்? புலன்களை இயற்கை வழிப்படுத்தித் தூய்மை செய்து, இயற்கை யழகை உளத்தால் முகர்ந்து,உணர்விற்கு இன்பவிருந்தூட்டும் ஒருவனே இயற்கையைப் பாட்டில் வடிக்கவல்லான். அப்புலவன் இயற்கையைப் பாட் டோவியமாக வரையும்போது, அவன் புலன்களிலும், உளத்தி லும், உணர்விலும், இயற்கையும், இயற்கைப் பொருளுறுப்புக் களும், கூறுபாடுகளும், இயல்புகளும், பிறவும் எவ்வாறு படிகின்றன என்று சொல்லலும் வேண்டுமோ? அவன் இயற்கை வண்ணமாகிறான்.

இயற்கை படியும் இடந்தொறும் அழகெனும் முருகன் எழுந்தருள்வன். ஆகவே இயற்கையைப் பாடப் புகுவதும் முருகன் வழிபாடாதல் காண்க. இயற்கையைப் பாட இயலாதார் இயற்கைப் புலவர் பாடிய பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதி, இயற்கை இன்பத்தில் திளைப்பாராக. இதுவும் முருகன் வழிபாடாகும்.

உலகில் பல இடங்களில் பல புலவர் தம் தம் மொழியில் இயற்கையைப் பாட்டோவியமாக எழுதியிருக்கிறார். நந்தமிழ்ப் புலவரும் இயற்கைப் படம் பல வரைந்து நமக்கு உதவியுள்ளனர். அப்படங்கள் பல்லாயிரக் கணக்காகக் கடலெனப் பெருகிக் கிடக்கின்றன. அக்கடலினின்றும் இரண்டொரு துளி எடுத்துச் சொட்டுகிறேன்.

‘திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீ ராடை யிருநில மடந்தை
யரசுகெடுத் தலம்வரு மல்லற் காலை’

இஃது இளங்கோ வரைந்த அந்திவான் ஓவியம்.

‘நீலமா மஞ்சை ஏங்க நிரைக்கொடி புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல் காட்ட
ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள்’

இது சேக்கிழாரது கார்கால ஓவியம்.

‘தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ’

‘புவியினுக் கணியா யான்ற பொருடந்து புலத்திற் றாகி
அவியகத் துறைக டாங்கி ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத்தெளிந்து தண்ணென் றொழுக்கமுந்தழுவிச்சான்றோர்
கவியெனத் தெளிந்த கோதா வரியினை வீரர் கண்டார்’


‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
அய்யோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் போனான்’

‘வெயிலிள நிலவேபோல் விரிகதி ரிடைவீசப்
பயில்மர நிழலீனப் பனிபுரை துளிமேகப்
புயல்தர விளமென்கால் பூவள வியதெய்த
மயிலின நடமாடும் வழியினி யனபோனார்;

இவை கம்பரின் எழுத்தோவியங்கள்.

உலகிடை வாழ்ந்த பெரும்புலவர்கள் அழகெனும் முருகன் வழிபாட்டை இடையீடின்றி நிகழ்த்தற் பொருட்டுப் பாக்களால் காவியங்களையும், நாடகங்களையும், வாழ்த்துக்களையும், பிறவற்றையும் பாடினார்கள். இப்பாட்டுத் தொண்டால் அவர்கள் இயற்கை வடிவான இறைவனோடியைந்த இன்ப வாழ்வை இவ்வுலகிலேயே பெற்றார்கள். அவர்கள் பாடிய பாட்டுக் காவியங்கள் எழுத்துக்களல்ல; சொற்களல்ல; சீர் களல்ல; தளைகளல்ல; அடிகளல்ல; தொடைகளல்ல. அவைகள் இயற்கையின் எழுத்தோவியங்கள். உலகை நோக்கும்போது தோன்றும் மலைகளின் அணியும், காடுகளின் செறிவும், செடி கொடிகளின் நிரையும், பசும்பயிர்ப் பரவையும், கருங்கடலும், செஞ்ஞாயிறும், நிலவுத் திங்களும், நீல வானமும், பறவைகளின் துழனியும், விலங்குகளின் ஈட்டமும், மக்களின் கூட்டமும், அக்கூட்டத்தின் உழவு வாணிபம் ஆட்சி அறம் மொழி வழக்கு ஒழுக்கமும், பிறவும் காவியங்களிலுங் காணக் கிடக்கின்றன. ஒவ்வொரு காவியமும் இயற்கை உலகின் ஒவ்வொரு படமாகும்.

இயற்கையில் முருகு உறைகிறது. இயற்கை பாட்டாம் போது, அப்பாட்டிலும் முருகு உறைகிறது. பாட்டுக்களா லாக்கப்பெறுங் காவியமோ முருகன் வீற்றிருந்தருளுங் கோயி லாகிறது. இக்கோயில் வழிபாடு முட்டின்றி நடைபெறும் இடங் களில் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருக்கும்.

முன்னைத் தமிழ்ப் பெரும் புலவரும் பாட்டுக் காவியப் பெருங்கோயில் பல அமைத்திருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, ஐம்பெருங்காப்பியம், பெரியபுராணம், கம்பராமா யணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருப்புகழ் முதலிய தமிழ்க்கோயில்களிருக்கின்றன. ஆனால் வழிபாடு மட்டும்அருகியிருக்கிறது. இக்காலத் தமிழ் மக்கள் கைம்மாறென்னே! என்னே! ‘அர்ச்சனை பாட்டேயாகும்’ என்று தமிழ்க் கடவுள் பாட்டையே விழைந்து நிற்கிறது. பாட்டு வழிபாடோ அருகி நிற் கிறது. பாட்டுத் தொண்டில்லாத இடத்தில் அன்பேது? இன் பேது? மகிழ்ச்சியேது? இதனால் தமிழ் மக்கள்பாலும், அவர்கள் வாழ்விலும் அழகெனும் முருகன் ஆடுதலொழிந்தான். முதல் முதல் இயற்கையில் முருகெனும் அழகைக் கண்ட தமிழர்கள் நிலை இவ்வாறாயிற்று! அழகைக் கண்டவர்கள் அழகிழந்தார்கள்! தமிழர்களே! இயற்கை உங்கள் செல்வம்; அதன் அழகு உங்கள் உடைமை; அவ்வழகுப் பாட்டு உங்கள் அணி. மீண்டும் அவை களைப் பெற முயலுங்கள்; நீங்கள் பண்டை நிலை எய்துவீர்கள்.

உங்கள் தமிழ்ப் பெரும் இன்ப நிலையங்களுள் ஈங்குக் கலித்தொகையும் திருக்கோவையாரும் என்னுள்ளத்தைக் கவர்கின்றன. அவைகளின் எழுத்து, சொல், சீர், தளை, அடி, தொடை என்னும் ஒவ்வொன்றிலும் இயற்கையும், அழகும், பாட்டும் மருவுகின்றன. அவைகளில் யாண்டும் மணம்; யாண் டும் இளமை; யாண்டுங் கடவுள் தன்மை; யாண்டும் அழகு! என்னருமைத் தமிழ் மக்களைச் சிறப்பாகக் கலித்தொகை, திருக்கோவையார் முதலிய நூல்களோடு உறவுகொண்டு வாழுமாறு வேண்டுகிறேன். பெண்ணைப் பேயின்பப் பொரு ளெனக் கருதுந் தூர்த்தர்கட்குத் திருக்கோவையார் காம நூலாகத் தோன்றலாம். பெண்ணை முருகாகப் போற்றுவோர்க் கன்றோ திருக்கோவையார் இன்ப நூலாகத் தோன்றும்?

இயற்கை அழகுப் பொருளிலும் தமிழ்ப் பாக்களிலும் முருகைக் காண இயலாத சகோதரர்பொருட்டு, ஆங்காங்கே முருகப்பெருமானுக்குத் திருக்கோயில்கள் கட்டப்பட்டிருக் கின்றன. அத்திருக்கோயில் வழிபாட்டானும் பேறு பெறலாம்.

திருக்கோயில் என்பது கட்டிடமன்று; அஃது அந்நினைவை யூட்டுவதுமன்று. திருக்கோயில், இயற்கையையும் இயற்கையின் உள்ளுறை பொருளையும் – நினைவூட்டுவது. நாடுகளில் எத் துணையோ கட்டிடங்களிருக்கின்றன. இக்கட்டிடங்கட்கும் கோயில் கட்டிடங்கட்கும் வேற்றுமையுண்டு. கோயில்களின் தலை, உடல், உறுப்பு, உள்ளம் எல்லாம் ஓவியங்களால் அணி செய்யப் பட்டிருத்தல் காண்கிறோம். மற்றக் கட்டிடங்களில் ஓவியங்கள் அமைக்கப்படுவதில்லை. நம் முன்னோர் கோயில் களை ஓவியமாக்கியதன் நுட்பத்தை ஓர்தல் வேண்டும். இயற்கை, அதன் உள்ளுறை என்னும் இரண்டின் சாயல்களே கோயில் களாயின. இயற்கையும், அதனை விட்டுப் பிரியாத அதன்உள்ளுறையாம் அழகும் கோயில்களில் பலதிற ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன.

ஓவியங்கள் என்பன காவியங்கள் போன்றவை. காவியன் இயற்கையைக் கவியாக எழுதுகிறான். ஓவியன் இயற்கையை ஓவியமாக வரைகிறான். காவியமும் ஓவியமும் ஒரு நோக்குடை யனவே. கருத்தில் இரண்டும் இயற்கை யழகையே பதிக்கின்றன.

காவியன் கண்ணுங் கருத்தும் எங்ஙனம் இயற்கைக் கூறு களில் படிகின்றனவோ, அங்ஙனே ஒவியன் கண்ணுங் கருத்தும் அவைகளில் படிகின்றன. ஓவியன் இயற்கையுடன் இயற்கையாய் நின்றே ஓவியமெழுதல் கருதற்பாலது.

இயற்கை வடிவங்களைப் புலன்கள் வழி உளத்தில் நிறுத்தி, உணர்விற்கொண்டு, அவைகளைக் கையால் படமாகவும் வடிவ மாகவும் முறையே எழுதலும் அமைத்தலும் எவ்வளவு அருமை? கல்லாகவும் பளிங்காகவும் பிறவாகவும் கிடக்கும் பிண்டப் பொருளிலே, சிற்பன் உணர்விலுள்ள இயற்கையழகின் நுண்மை வடிவம், அவன் கையின்வழி யிறங்கி உருக்கொள்கிறது. இவ்வுரு, தான் திகழுந் கல்லையும் பிறவற்றையும் மறைத்து இயற்கை யழகைப் பொருத்துகிறது.

இத்தகைய ஓவியத்தை என்னென்று கூறுவது? என் னென்று கொள்வது? ஓவியம் கல்லா? பளிங்கா? நிறமா? ஓவி யம் முகிழ்த்ததும் கல்லும் மரமும் பளிங்கும் மறைகின்றன. இயற்கை நுட்பமுணராத செயற்கை மாக்கட்குப் புலனாகும் பொருளைப்பற்றிய ஆராய்ச்சியே ஈண்டு வேண்டுவதில்லை. அன்னார் செயற்கையில் தொடக்குண்டு கிடப்போர். இயற்கை நுட்ப முணர்ந்தோர்க்கே ஓவியத்தின் பெற்றி புலனாகும். ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்து மகிழ்ந்து கருதக் கருத அது புலன் களுக்கு இன்பூட்டி இயற்கை அழகாம் முருகை உணர்த்துகிறது. ஓவியம் மகனைக் கவர்ந்துகொண்டே இயற்கையழகில் அவனைக் கூட்டுகிறது. இவ்வோவியத்தை என்னென்று கொள் வது? இதை இயற்கை யழகின் சாயல் என்று கூறலாம்; அல்லது இயற்கையழகின் குழவி என்று கொள்ளலாம்.

கையால் செய்யப்படுவது செயற்கை யென்றும், கையால் செய்யப்படாதது இயற்கையென்றும் முன்னர் ஓரிடத்தில் குறிப்பிட்டதை ஈண்டு அன்பர்கட்கு நினைவூட்டுகிறேன். அதைக்கொண்டு, ஓவியமும் கைபுனைந்தியற்றும் ஒன்றாகலான், அதை ஈண்டு ஏற்பதென்னை என்று சில அன்பர்கள் ஐயுறலாம். ஓவியம் இயற்கையழகின் பெற்றியை நினைவூட்டி உணர்த்தலானும், அஃது இயற்கையுடன் புலன்களை ஆற்றுப்படுத்த லானும், இயற்கை வழிபாட்டிற்கு அஃது ஏற்றற்குரியதே. ஓவிய உருப்பெறாத கீறல்களும் பிற கோரங்களும் புலன்களை இயற்கையுடன் ஆற்றுப்படுத்தாமையான், அவை செயற்கையின் பாற் படுவனவாம். ஓவியமோ புலன்களை இயற்கையுடன் தொடர்புப்படுத்துகிறது. இதுபற்றியே ஓவியத்தை இயற்கை யழகின் சாயல் என்றும், குழவி என்றுங் கிளந்து கூறலானேன். அழகுறையும் இயற்கை நிலையத்தைத் திறக்கவல்ல திறவு என்று வேறு வழிபடுத்தியும் ஓவியத்தைக் கூறலாம். கருத்தை இயற்கை யுடன் தொடர்புப்படுத்தும் செயற்கைக்கும், மற்றச் செயற் கைக்கும் வேற்றுமையுண்டென்க. ஓவிய வழிபாடு, இயற்கை வழிபாட்டின் தொடக்க நிலையிலிருப்போர்க் குரியதென்று மேலே சொற்றதும் ஈண்டுக் கருதற்பாற்று.

ஓவியங்களின் பெருக்கே கோயிலென்பது. கோயிலி னுள்ளே ஒளிரும் ஒவ்வொரு வடிவமும் இயற்கையழகின் குழவியெனும் ஓவியத்தின்பாற்பட்டதே. எனவே ஓவியக்கூட மாக விளங்குங் கோயில், இயற்கையின் தன்மையையும், அதனுட்பொருளின் இயல்பையும் மக்கட்கு உணர்த்துவதென்க.

இந்நோக்குடன் அமைக்கப்பெற்ற ஓவிய நிலையமாந் திருக்கோயில் செல்வோர் ஆண்டெழுந்தருளி யுள்ள பொருளை எவ்வுணர்வுடன் வழிபடல்வேண்டும்?

திருக்கோயில் உள்ளிருக்கும் முருகப் பெருமான் திருவுரு வம், மணம் இளமை கடவுட்டன்மை அழகு என்னும் இவை கட்கு அறிகுறி என்னும் உணர்வோடு (KUfid) வழிபாடு செய்தல்வேண்டும். இவ்வுணர்வோடு செய்யப்படாதது கல் செம்பு வழிபாடாக முடியும். இதனால் அறியாமை நீங்காது; அழகின்ப அன்புந் தோன்றாது.

‘திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச்
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவ னங்கே’


எனவரூஉம் அருணந்திசிவத்தின் திருவாக்கையோர்க.

நம் முன்னோர் முருகப்பெருமானுக்குப் பெரிதும் மலை களினும் மலையின் பாங்கரினுமே திருக்கோயில் கட்டினர்; ஒவ்வொரு குன்றும் முருகன் திருக்கோயிலென நம் முன்னோர் அறிவுறுத்தியுள்ளனர். நக்கீரனார் தமது திருமுருகாற்றுப் படையுள் குன்றுதோறாடலைக் கொண்டதும் உன்னத்தக்கது. முருகன் வழிபாட்டைச் செயற்கைக் கோயிலளவோடு நம்மவர் நிறுத்திவிடப் போகிறாரென்று அஞ்சி, நந்தமிழ்ச் சான்றோர்இயற்கைக் கோயிலாகிய மலையையுங் கோயிலெனக் கொள்ளு மாறு நமக்கு அறிவுறுத்தினர். முருகனை மலையாக வழிபடின், பின்னை அம்மலை பெரு உலகமாகி முருகன் உண்மை வடிவைப் புலப்படுத்தும்.

முருகன், இயற்கையழகுக் கடவுள் என்ற உணர்விலாச் சிலர், முருகன் திருவுருவைச் செயற்கை அணிகளால் அழகு செய் கிறார். இயற்கை அழகனைச் செயற்கை அணியா அழகு செய் யும்? திருவிழா திருவிழாவெனச் செயற்கைத் தீநெறி பற்றித் திரிபவர்க்குப் பெரிதும் இரங்குகிறேன். முருகன் விழாக்க ளெல்லாம் இயற்கை அழகுணர்வையூட்டுமாறு கொண்டாடப் பெறல்வேண்டும். இல்லையேல் விழாக்களின் பொருள் இறந்து படும்.

இனி இசை வழிபாட்டின்மீது கருத்தைச் செலுத்துவோம். இசை வழிபாட்டை யோக வழிபாடென்றுங் கூறலாம். இசை யின் பயன் எதுவோ அதுவே யோகத்தின் பயனும். யோக மாவது, புலன்கள் ஒருமைப்பட்டுக் கருவி கரணக் குறும்புகளை ஒடுக்கிக் கூட்டும் அமைதியில் இருமை உணர்வுகெட, அறிஞர் அகமுகத்தில் நிகழ்த்தும் ஒரு வழிபாடு. ‘ஒன்றியிருந்து நினை மின்கள் உந்தமக்கு ஊனமில்லை’ என்றார் அப்பெரம்பெரு மானாரும். ‘யோக; சித்த வ்ருத்தி நிரோத:’ எனப் பதஞ்சலியார் யோகம் என்னுஞ் சொற்குப் பொருள் விரித்திருத்தலை நோக்குக. இந்நிலையை இசையுங் கூட்டுதலால், இசையின் பயனையும் யோகத்தின் பயனையும் ஒன்றென உரைக்கிறேன்.

இசைஞானியைச் சிறந்த யோகி என்று யான் சொல்வேன். ஈண்டு யோகம் யோகம் என்று சொல்வது, பிறவற்றில் கடவுள் இல்லையென்றும், தம்பால் மட்டுங் கடவுளுண்டு என்றுங் கருதி, எல்லாவற்றையுந் துறந்து, வழி துறையின்றி, மூச்சைப் பிடித்துப் புலன்களைக் கெடுத்து, உடல் நலனுக்குக் கேடுசூழச் சிலர் கொள்ளும் போலி யோகத்தை யன்றென்க. பொருளில்லாத யோகமுறைகள் பல இடைக்காலத்தில் புகுந்து விட்டன. புலன்களின் திருவிளையாடல்கள் வழியுழலாது, நெஞ்சை நிலைபெறுத்தி, அமைதியில் நின்று, ஒன்றில் ஒன்றி, இருமையற அதை (அவ்வொன்றை) உன்னுவது யோகம். இந்நிலையை ஒவ்வொருவரும் அவரவர் இயல்பிற்குரிய முறையில் அடைதல் கூடும். புலன்களும் கருவி கரணங்களும் ஒன்றும்நிலை கூட்டும் இயல்பு இசைக்குமுண்டு. ஆகவே இசைவழிபாடுஞ் சிறந்த ஒன்றென்க.திரையற்ற நீர்போல் நெஞ்சினைத் தெளிவுபடுத்திக் கொண்டு, அமைதி கெழுமிய ஓரிடத்தமர்ந்து, இப்பரந்த வையகத்தை உற்றுநோக்கும் ஒருவனுக்கு எல்லாம் இசைமய மாகப் புலனாகும். அந்நோக்கில் நிலைத்துத் திளைப்பத் திளைப்ப, அவன் தன்னில் அவ்விசை முழங்குவதுணர்வன்; மேலும் மேலும் அவன் அந்நிலையில் படியப்படிய, எல்லா வற்றிற்கும் முதலாகவுள்ள அழகுப்பொருள் இசைமயமா யிருத்தலையும் உணர்வன்.

எல்லாம் வல்ல மெய்ப்பொருள் உலகு உயிர்களில் பொருந்தியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எங்ஙனம் அப்பொருள் பொருந்தி யிருக்கிறதெனில், அஃது அவற்றுள் இசைபடப் பொருந்தியிருக்கிறதென்க. உலகு உயிர் கடவுள் மூன் றும் இசையில் பிணிக்கப்பட்டுக் கலந்து நிற்கின்றன. இக்கலப்பே அத்துவித நிலையென்று அறிஞர் கூறுப. அத்துவித நிலையும் இசை பரந்த ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள அழகுப்பொருள் இசைமயமா யிருக்கிறதெனில், மற்றவைகளை இசை மயமென்று சொல்லவேண்டுவதில்லை. ஆண்டவன் இசைமயத்தன் என்னும் உண்மையை நந் தமிழ்ப் பெரியோர்கள் உணர்ந்து உலகிற்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள்.

‘ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய்’

என்று வன்றொண்டர் தமது தோழராங் கடவுளை வழுத்தி யிருத்தல் காண்க.

இசையா யிருப்பவனும் இறைவன்; இசைப்பயனா யிருப்பவனும் அவன். என்னே இசையின் மாண்பு! இசை வண்ணமாயுள்ள ஒன்றை இசையால் எளிதில் பெறலாமன்றோ? ஆகவே இசை வழிபாடும் இறைவனுக்கு இனியதொன்றாகும்.

இசையின் இயல்புகள் பலப்பல. அவைகளுள் ஒன்று அதாவது தலையாயது பன்மையை ஒருமைப் படுத்துவது. இசையில் இன்பம் மருவுதற்குங் காரணமிதுவே. புலன்கள் ஒருமையுற்றுக் கருவி கரணங்களின் கொட்டத்தைக் குலைக்கு மிடத்தில் எழுவது இசை. மற்ற இடத்தில் எழுவது வசை. இசை பாடப் புகுவோனுடைய புலன்கள் பன்மையுணர் விழந்து ஒருமையுணர்வு பெறுகின்றன. இசையைச் செவிமடுப்போனும் அந்நிலை எய்துகிறான். பொறிபுலன் கருவி கரணச் சேட்டை களினின்றும் மகனை இசை விடுதலை செய்கிறது. அவைகளி னின்றும் விடுதலையடையும் ஒருவன் பின்னை எதனுடன் இசைவன்? அவன் இன்ப அன்புப் பொருளாம் அழகுடன்இசைவன். உயிர் சார்ந்ததன் வண்ணமா யிருப்பதொன்றாகலின், அஃது ஒன்றை விடுத்ததும் மற்றொன்றைப் பற்றல்வேண்டு மன்றோ?

இவ்வாறு இசைஞானி சேட்டைகளினின்றும் விடுதலை யடைந்து, இன்ப அன்பில் இசைதலால், அன்பை அவன் எவ்வுயிரினுங் காண்கிறான். இந்நிலை எய்தும் ஒருவன் எவ் வுயிர்க்காதல் தீங்கு செய்வனோ? செய்யான். எவ்வுயிரிடத்தும் இரக்கங்கொள்ளும் ஒரு பெருந் தன்மையை இசை கூட்டுகிறது.

ஒருவன் உலகில் இசைப் புலவனா யிருத்தல் வேண்டும். அல்லது இசைகேட்டு உருகும் உளத்தனா யிருத்தல் வேண்டும். இரண்டும் பெறாத ஒருவன் மக்கள் இனத்தில் சேர்ந்தவனல்லன். அவனால் இசை வண்ணமாயுள்ள மன்பதைக்கே கேடு உண் டாகும். இசை இனிமை உணராதவன் கொலைஞனே யாவன். இவ்வாறே ஷேக்ஸ்பியர் என்னுங் கவிமன்னர் கருதுகிறார். ஆதலால், மக்கள் இன்ப வாழ்விற்கு இசை இன்றியமையாத தென்க.

இசை இயற்கையில் பரந்து நிற்கிறது. எல்லாம் இசைமய மென்று மேலே சொல்லப்பட்டது. முனிவரர் போல அடங்கித் தலைசாய்த்து நிற்குஞ் செஞ்சாலிகள் மென்காற்றில் ஒன்றோ டொன்று கொஞ்சிக் கொஞ்சி இசை பாடுகின்றன. வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து மழை தவழும் மூங்கில்கள் ஒன்றோடொன்று அளவளாவி இசை பாடுகின்றன. வண்டுகள் பாண் மிழற்றுகின்றன. வலம்புரிகள் சங்கீதம் முழக்குகின்றன. பறவைகளின் பாட்டொலியை என்னென்று பகர்வேன்! அழகிய வானம்பாடி! உன்பாட்டை என்னென்பேன்! வானத்தில் நீ இவரும்போதும், இழியும் போதும் உன்னிசையும், முறையே இவர்ந்தும் (ஆரோகணம்) இழிந்தும் (அவரோகணம்) உலகிற் கூட்ட உனக்கு எவரே கற்பித்தார்? ‘கீதமினிய குயிலே’ உன்பால் இனிமையை எவரே அமைத்தார்? குழந்தைகளின் மழலை இசைக்கு நிகருண்டோ? ஆ! ஆ! பெண் தெய்வங்களின் மொழியோ பண்மயம்! பண்மயம்! இவ்வாறு இசை இயற்கையுடன் படர்ந்து நிற்கிறது. இவ்விசையுடன் இசைவதே பாணன் இசையும்.

மக்கள் அனைவரும் பாணராகார். மக்கள் ஒலி யெல்லாம் இசையாகா. என்னை? இயற்கையில் இசை ஒழுங்குபட்டே நிற் கிறது. இயற்கையின் ஒழுங்கும், அதனுடன் மருவும் இசையின் ஒழுங்குங் கருதற்பாலன. ஒழுங்குபட்ட வாழ்வுடையான்இயற்கைவழி நிற்பவனாகிறான். அவன் வாழ்வு இசையுடைய தென்க. ஒழுங்குபட்ட வாழ்வில், ஒழுங்குபட்ட நடையில், ஒழுங்குபட்ட பேச்சில் இசை சுவைக்கும். ஒழுங்கு பற்றி, நிரை நிரையே, ஒரேவிதமாக நடக்கும் போர் வீரர் அணியில் இசைமணக்கும். ஒழுங்குபட்ட இடங்களிலெல்லாம் இசை யுண்டு என்று சுருங்கச் சொல்லலாம். ஒழுங்கை விடுத்து நீங்காத இசை, ஒவ்வொன்றிலுங் கொண்டுள்ள உறவும் அழகின்பாற் பட்டதென்க.

இயற்கை ஒழுங்கில் ஒளிரும் இசை வண்ணமாயுள்ள அழகை அல்லது முருகை உணர உலகில் ஒழுங்கிசை வேண்டற் பாலது. இயற்கை ஒழுங்கு பற்றியே நம் முன்னோர் இசை ஒழுங்கு வகுத்தனர். அதுவே இசையியல் என்பது. முத்தமிழுள் இசையும் ஒன்றாய் அழகு செய்தல் ஈண்டுக் கருதற்பாலது. ஒழுங்கிசை மிடற்றின் வாயிலாகவும், நரப்புக் கருவிகள் வாயி லாகவும் வெளிப்போந்து, இன்பம் பயக்கும் முறைகள் அறிஞ ரால் காணப்பட்டன.

ஒழுங்கிலா இசை வசையேயாகும். ஒழுங்குக்கு உட் பட்டதே இசையாகும். புலன்களும் கருவி கரணங்களும் ஒழுங்கு பட்டவழி எழுவது இசை என்று மேலே கூறப்பட்டதும் ஈண்டு உன்னத்தக்கது.

ஒழுங்குபட்ட இசை தன்னைப் பாடுவோரையுஞ் செவி மடுப்போரையும் இன்பப் பேற்றிற்குரிய ஒருமை நிலை எய்தச் செய்தலான், அவ்விசைப்பாடும் இறை வழிபாடென்று கொள் வது பொருத்தமேயாகும். உலகில் இசை வழிபாடு பெருகப் பெருக (உலகில்) அன்பும் இன்பும் பெருகும்.

இசைவழி ஆண்டவனை வழுத்திப் பேறுபெற்றோர் பலர். அவருள் தமிழ் நாட்டுப் பெரியோர் ஒருவரை ஈண்டு நினைக்கி றேன். அவ்வன்பர் குழலில் இசை பாடி இறைமைப் பேறு பெற்ற வர். அவரது இசை, எவ்வெவ் வழியில் படர்ந்து, உலகிலும் உயிரிலும் ஊடுருவிப் பாய்ந்து, முடிவில் எல்லாவற்றையுங் கடந்த முழு முதற் பொருளைக் கவர்ந்தது என்பதைச் சேக்கிழார் பெருமான் செவ்விய தமிழ்ப் பாடல்களாக இசைத்துள்ளார். அப்பாடல்களில் சில வருமாறு :-

‘வள்ளலார் வாசிக்கு மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறையஞ் செழுத்தாக ஒழுகியெழு மதுரவொலி
வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கு மேலேமரர் தருவிளைதேன்
தெள்ளமுதி னுடன்கலந்து செவிவார்ப்ப தெனத்தேக்க’


‘ஆனிரைக ளறுகருந்தி அசைவிடா தணைந்தயரப்
பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றுமிளங் கன்றினமும்
தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும்
மான்முதலாங் கான்விலங்கு மயிர்முகிழ்த்து வந்தணைய’

‘ஆடுமயி லினங்களுமங் கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய மருங்குதொழில் புரிந்தொழுகுங்
கூடியவண் கோவலருங் குறைவினையின் றுறைநின்றார்’

‘நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினான்
மலிவாய்வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழும்
சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன்சாரும்
புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்’

‘மருவியகால் லிசைத்தசையா மரங்கண்மலர்ச் சினைசலியா
கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா எழுகடலு மிடைதுளும்பா’

‘இவ்வாறு நிற்பனவுஞ் சரிப்பனவு மிசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண மேவியவொன் றாயினவான்
மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையா ரடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனையுருக்க’

‘மெய்யன்பர் மனத்தன்பின் விளைத்தலிசைக் குழலோசை
வையந்தன் னையுநிறைத்து வானந்தன் மயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில் நடம்புரியும்
ஐயன்றன் திருச்செவியின் அருகணையப் பெருகியதால்’

அன்பர்களே! இசைவழிபாட்டின் பெருமையை நோக்குங் கள்; இப்பாடல்களைப் பார்த்துப் பார்த்து மகிழுங்கள். நிலை யியற் பொருளையும் இயங்கியற் பொருளையும் ஒன்றுபடுத்திப் பின்னைத் தன்மயமாயுள்ள ஆண்டவன்பால் இசை அணை கிறது. இதன் நுட்ப மென்னை? இசையாளனுக்கு எல்லாத் தத்துவங்களும் மறைந்து, அவையெல்லாஞ் சிவமாகப் பொலிவ தென்க. இப்பெருநிலை கூட்டும் இசைப்பாட்டையும் ஒருவித வழிபாடாகக் கொள்ளலாமன்றோ?

இவ்வழிபாடுகளல்லாத வேறு வழிபாடுகளும் இருக் கின்றன. வழிபாடு என்பது அவரவர் அன்புநிலை அறிவாற்றல் முதலியவற்றைப் பொறுத்து அமைவது. அவரவர் தத்தம் நிலைக் கேற்றவாறு ஒவ்வொருவித வழிபாட்டைக் கொள்ளலாம்.

எல்லா வழிபாடுகளின் முடிவும் ஒன்றே என்பதை மட்டும் எவரும் மறத்தலாகாது.

இன்னும் ஒரு வழிபாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன். இயற்கை வழிபாடுகளுள் அது சிறந்த ஒன்றாகலின், அதை இறுதியில் குறிப்பிடுகிறேன். ஏறக்குறைய எல்லா வழிபாடுகளும் அதன்கண் அடங்கும். அவ்வழிபாடாவது இறைவனை எட்டு வடிவமாகப் போற்றுவது. அவ்வெட்டாவன; நிலம் நீர் நெருப்பு காற்று வெளி திங்கள் ஞாயிறு உயிர் என்பன. இவை ஒவ்வொன் றையுங் தனித்தனி வழிபடலுமுண்டு. இவற்றை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ பிரித்து வழிபடலுமுண்டு. எல்லா வற்றையுஞ் சேரவைத்து வழிபடலுமுண்டு. இவ்வெட்டுக்கும் அடிப்படையாக

நிற்கும் அறிவுப் பிழம்பான அழகுப் பொரு ளொன்றே.
நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ’

– மாணிக்கவாசகனார்

உளத்தை இப்பரந்த அண்டத்தின்மீது நிறுத்தினால், பசும்புற்களும், தூறுகளும், பொழில்களும், காடுகளும், மலை களும் – கேணிகளும், ஆறுகளும், கடல்களும் – நெருப்பும் – காற் றும் -இவை யெல்லாவற்றிற்கும் நிலைக்களனாயுள்ள வெளியும் – கொண்ட உலகமும், மேலும் உள்ளின் திங்களும் – ஞாயிறும் – அவ்வுள்ளத்தில் புகுந்து நிலவுதல் பெறலாம். இவ்வேழும், இவற்றை உள்ளும் தானும் (உயிரும்) சேர்ந்து எட்டாதல் காண்க. இவ்வாறு நாடோறும் இவற்றை உள்ளும் பயிற்சியில் தலைப் படுவோர் நாளடைவில் முதலில், முதல் ஐந்தையும், பின்னை யொன்றையும் நெஞ்சம் தொட்டு விரைந்தோடுமாறும், ஞாயிற் றில் மட்டுஞ் சிறிது நேரம் நெஞ்சம் நிலைபெறுமாறும் பயிலல் வேண்டும். இப்பயிற்சி முதிர முதிர வழிபாட்டில் மகன் அமர்ந் ததும் முதலாறும் நெஞ்சில் நுழைவதருகி, ஞாயிறு புகுவது மட் டும் பெருகும். முடிவில் ஞாயிறு வழிபாடொன்றே நிலைக்கும். இவ்வழிபாட்டில் ஏனைய வழிபாடுகள் ஒடுங்கிவிடும்.

ஞாயிறு வழிபாடு வளர வளர உள்ளத்துள் ஒளிரும் ஒரு பேரொளி கிளர்ந்தெழுதற்கு வழி ஏற்படும். ஞாயிற்றொளியும் உள்ளொளியும் ஒன்றுபடப்பட, மகன் தன்னொளி என்னும் ஒன்றில் மூழ்கும் பேறு பெறுகிறான். இதுவே தன்வழிபாடு அல்லது உயிர் வழிபாடு என்பது. இவ்வழிபாடு கைவரப்பெற்றஒருவன் மேற்போந்த பொருளெலாம் தன்னில் விளங்குவ துணர்வன். இதன் முதிர்ச்சி, அவை எல்லாவற்றிற்கும் அடிப் படையாக உள்ள பேரழகை யுணரும் பெருநிலை கூட்டும். இப் பெரு நிலையை வாதவூரடிகள்,

‘இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன்
நீ யலாற் பிரிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை
யாருன்னை யறியகிற் பாரே’


என்று விளக்கி யிருக்குமாற்றா னறிக. இந்நிலை எய்தினோர்க்கு நரை திரை மூப்பு சாக்காடுண்டோ?

எளிதில் சிறிதுநேரங் கொள்ளக்கூடியதாய், விரைவில் தன் வழிபாடெனும் உயிர் வழிபாட்டைக் கூட்டக் கூடியதாயிருப் பது ஞாயிறு வழிபாடே யாகும். இவ்வழிபாட்டைப் பற்றிப் பேசாத நமது நாட்டுக் கலைகளில்லை. உடலோம்பல் முறை யிலும் ஞாயிற்றொளியில் மூழ்குமாறும், அதை அகத்தில் எண்ணுமாறும் சொல்லப்பட்டிருக்கின்றன. மேல்நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளரும் ஞாயிற்றின் ஒளியிலுள்ள நுட்பங் களைப் புதிது புதிதாகக் கண்டு வருகின்றனர். ஆதலால், நாடோ றும் ஞாயிறு வழிபாடு நிகழ்த்துவது சிறப்பு.

முருகன் அடியாராகிய நக்கீரனார், ‘உலகம் உவப்ப வல னேர்பு திரிதரு – பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு…, என்று திருமுருகாற்றுப்படையைத் தொடங்குகிறார். ஞாயிறு முரு கனுக்கும், நீலக்கடல் மயிலுக்கும் உவமை. நீலக்கடலோரத்தில் நின்று, அந்நீலக்கடன்மீது தவழ்ந்தெழும் இளஞாயிற்றொளி யில் புறம் மூழ்க, அகத்தே அதைநினைந்து நினைந்து வரின், பெறற்கரிய பேறு பெறலாம். இளஞாயிறு திரட்டி வரும் உயிர்ப் புக்கு (Ozone) ஓர் அளவில்லை. அவ்வுயிர்ப்பன்றோ மக்களை நோய்வாயினின்றுங் காப்பது? இளமை, அழகு முதலியவற்றை ஞாயிற்றொளியும் உயிர்ப்பும் நல்குவது போல வேறெவை நல்கும்?

எம்பெருமான் முருகனோ குணங்குறியில்லாதவன். அவன் செஞ்ஞாயிற்றின் வாயிலாக உலகிற்கு அருள் சுரக்கிறான். காலையில் முருகன் செஞ்ஞாயிறு வடிவாக நீலக்கடலெனும்நீலமயிலில் காட்சி அளிக்கிறான். அக்காட்சி என் புலன்களை – புந்தியை – உயிரை – எல்லாவற்றையுங் கவர்கிறது. அதை என் னென்று ஏழையேன் எண்ணி எழுதுவேன்!

ஞாயிற்றின் புறநுட்பமுணர்ந்து, அதை வழிபடுவோர் வழிபடுக; அதன் அகப்புற நுட்பமுணர்ந்து அதைப் போற்று வோர் போற்றுக. ‘உலக முவப்ப வலனேர்பு திரிதரு – பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு’ என்னும் உரையின் பொருளில் முருகன் பொலிதலை யுணர்ந்து, அவனை உலகம் போற்றுவ தாக.

முருகன் உடலாக உள்ள இயற்கையின் வழிபாட்டைப் பெற, அவ்வியற்கைக் கூறுகளில் எதையேனும், அல்லது இயற்கையுடன் ஆற்றுப்படுத்த வல்ல வேறு ஒன்றையேனும் துவக்கத்தில் கொள்ளலாம். முடிவு இயற்கை வழிபாடாதல் வேண்டும். அவ்வழிபாடு, இளமை – மணம் – கடவுட்டன்மை – அழகு – ஆகிய வற்றையுடைய முருகையுணர்த்தும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *