முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்

1. முருகன் பொருளும் பொதுமையும்

[முருகன் – முருகு – முருகின் சொற் பொருள் – மணம் இளமை கடவுட்டன்மை அழகு – பழந்தமிழர் கூர்த்த மதி – முருகன் ஒரு கூட்டத்தவர் கடவுள் அல்லன் – மொழி வேற்றுமையால் இறைவன் பல பெயர் பெறல் – மணம் இளமை இறைமை அழகு எல்லார்க்கும் பொது.]

முருகன் எவன்? முருகையுடையவன் முருகன்.  முருகு என்றால் என்னை?  முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்.  அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கன நான்கு.  அவை மணம், உளமை, கடவுட்டன்மை, அழகு என்பன.  இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழுமுதற்பொருளை அழைத்தது வியக்கத்தக்கது.  இயற்கை மணமும், மாறா இளமையும் எல்லாப் பொருளையுங் கடந்தொளிருந் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற் கிடம் பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது கூர்த்தமதி புலனாகிறது.

உலகத்தின் நானா பக்கங்களிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் தங்கள் அறிவாற்றலுக் கேற்றவாறு, தங்கள் தங்கள் மொழியில் கடவுளுக்குப் பலதிறப் பெயர்கள் சூட்டியிருக்கிறார்கள்.  அப்பெயர்கள் ஒவ்வொன்றினும் ஒவ்வொரு சிறப்புப் பொருள் விளங்குகிறது. சிலவற்றில் பொருத்தமில்லாப் பொருள்களும் உண்டு.  முருகன் என்னுஞ் சொல்லிலோ அறிஞர் போற்றும் பொருள்களே மிளிர்கின்றன; ஆதலால் அறிஞர் போற்றற்குரியதும், மகிழ்ச்சியூட்டக் கூடியதும், பொருத்த முடையதுமாக இருப்பது முருகன் என்னுந் திருப்பெயர்.

முருகன் ஒரு கூட்டத்தவர்குரிய கடவுள் என்று கருதுவது அறிவுடைமையாகாது.  எக்கூட்டத்தவர் எம்மொழியால் போற்றும் எப்பொருளாயினும், அப்பொருட்கண் இறை இயல்புகள் காணப்பெறின், அதைக் கோடலே அறிவுடைமையாகும்.  இயற்கை மணமும், மாறா இளமையும் கடவுட்டன்மையும், அழியா அழகும் அறிவிற் சிறந்த எச்சமயத்தவருங் கொள்ளும் ஆண்டவனுக்கரிய இயல்புகளாம்.  இவ்வியல்புகள் அமைந்த ஒன்றைத் தமிழ் மக்கள் முருகன் என்று வழுத்துகிறார்கள். ஏனைய மொழியினரும் அவ்வியல்புகளின் பொருள் நல்க வல்ல தமது மொழியால் தாம் வழிபடும் இறைவனுக்குப் பல பெயரிட்டழைக்கலாம், அப்பெயர்ப் பொருளை ஆராய்ந்து, தமிழில் பெயர்த்தெழுதினால் அது முருகாக விளங்குதல் வேண்டும்.  தமிழ்ப் பெயராகிய முருகெனுஞ் சொல் தனக்குரிய பொருண்மை அழியப் பெறாது எம்மொழியில் வழங்கப் பட்டாலென்ன?  கடவுளை மணமுடையதாகவும், இளமையுடையதாகவும், இறைமையுடையதாகவும், அழகுடையதாகவும் எவர் எம்மொழிப் பெயரால் தொழினும் ஆண்டு எம்பெருமான் முருகன் எழுந்தருள்வானென்க.

மணமும் இளமையும் கடவுட்டன்மையும் அழகும் எவருடைமை?  இவை எல்லார்க்குமுரிய உடைமை யல்லவோ? ஆதலால் மணமுடைமை, இளமையுடைமை, கடவுட்டன்மையுடைமை, அழகுடைமை ஆகிய இவைகளைப் போற்ற மறுப்போர் முருகனைப் போற்ற மறுப்போராவார்.  மணமுடைமை முதலிய நான்கினையும் போற்ற மறுப்போர் இருப்பு நெஞ்சமும் வன்கண்மையுமுடைய முரடராயிருப்பர்.  அன்னார் நெஞ்சில் முருகு அலர்தலும் அரிது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *