
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
6. முருகைக் காண முனைப்பையறுத்தல்
(முனைப்புக்கூடாது – சூரன் போர் – புராண நுட்பம் – உருவக நுட்பம் – பிற்காலப் பௌராணிகம் – போர்க்களம் – சூரன், முருகு இவைகளின் உட்பொருள் – முனைப்புள்ளவரை முருகை உணரல் இயலாது – இரக்கமும் முருகனும் – ஞானசக்தியே முருகன் வேல் – முருகனது அருள் விரைவு.)
முருகனை வழிபடப் புகுவோரிடம் முனைப்புறுதல் கூடாது. இயற்கையி லுறையும் முருகு முனைப்புடையோர்க்குப் புலனாதலரிது. முனைப்பும், அதன் கான்முளைகளாகிய அழுக் காறு அவா வெகுளி முதலியனவும், மகனை நரை திரை மூப்புக் காளாக்கி, முடிவில் அவனைச் சாக்காட்டுக் கிரையாக்குகின்றன. பெறுதற்கரிய மக்கட் பிறவியைப் பெற்றும், அதைப் பிணிமூப்பு சாக்காட்டுக் கிரையாக்குதல் அறிவுடைமை யாகாது. முனைப்பு மக்களைக் கொல்லும் பெருங்காலன். முனைப்புடையார் முருகனை எங்ஙனம் உணர்தல்கூடும்?
கந்தபுராணத்துள்ளே சூரபன்மன் போர் சொல்லப் பட்டிருக்கிறது. அஃது இங்கே நினைவிற்கு வருகிறது. சூரன் முனைப்பால் பல வடிவந் தாங்கி எந்தையுடன் பெரும்போர் புரிந் தான். முடிவில் ஒன்றுமியலாது எல்லாமிழந்து, அவன் தன்னந் தனியனாய் நின்ற வேளை, அவனது முனைப்புச் சிறிது நேரம் ஒடுங்கி ஒதுங்கி நின்றது. அந்நேரத்தில் யாண்டுமுள முருகு அவ னுக்குப் புலனாயிற்று. மீண்டும் முனைப்பு மானமெனும் வடி வுற்று அடர்ந்ததும், முருகைக் காணாது, பகைமை யுளங் கொண்டு, அவன் போர் புரிந்தான்.
‘அண்ணலார் குமரன் மேனி அடிமுதன் முடிவின் காறும்
எண்ணிலா ஊழி காலம் எத்திற நோக்கி னாலும்
கண்ணினா லடங்கா துன்னிற் கருத்தினா லடங்கா தென்பால்
நண்ணினா னமருக் கென்கை அருளென நாட்ட லாமே’
‘போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கு
மேயின பொருள்கண் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ’
‘சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டு மங்கை
தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு
ஆழுதல் வேண்டுந் தீமை அகன்றுநான் இவற்கா ளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மான மொன்றே’
‘ஒன்னலர் பொருட்டா லேகி உறுசம ரிழைத்த செம்மல்
தன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுதி யாகும்
வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற் றென்றால்
என்னுடை வயத்த வன்றோ உணர்ச்சியு மியாக்கை முற்றும்’
என வரூஉங் கந்தபுராணப் பாடல்களை நோக்குக
இப்புராண நுட்பத்தை ஈண்டுச் சிறிது ஆராய்வோமாக. புராணத்தில் போர் முழக்கம் பெருமிதமாகப் பேசப்படுகிறது; வீரச்சுவையும் ஆங்காங்கே பொங்கி வழிகிறது. பலதிறப் போர்க் கருவிகள் மின்னுகின்றன. என்னே போரின் காட்சி! இவை யாவும் உருவகங்கள்!
உருவகங்கட்குரிய பொருளை நூற்கண் யாண்டாயினும் ஆசிரியர் புகுத்தியிருப்பர். அணிகளின் (அலங்கார) இன்பத்தை நுகரும் அறிஞர், அவைகட்குரிய பொருளையுணர்ந்தும் இன் புறுவர். அணியியல் அளவோடு நின்று பயன் பெறுவோரைப் பற்றி ஈண்டுக் கருத வேண்டுவதில்லை. முன்னைநாள் காவியர் உவமமென்னும் உடலில், பொருளென்னும் உயிரையும் புகுத் தும் முறையைக் கடைப்பிடித்து நின்றனர். பின்னை நாளில் தோன்றிய ‘பௌராணிகம்’ வெறும் உருவகங்களில் (அவையுஞ் சுவையற்ற போலிகளில்) கருத்தைச் செலுத்திக் காவிய உலகிற்கே கேடு சூழ்ந்தது. அம்முன்னை நூல்களையும், இப்பின்னை நூல் களையும் பகுத்தறியவேண்டுவது ஆராய்ச்சித்துறை நண்ணு வோர்கடன்.
சூரன் போரில் அறியக் கிடப்பதென்னை? சூரன் போர் நுட்பம் புராணத்திலேயே அடங்கிக் கிடக்கிறது. ஒவ்வோர் உள்ளமும் போர்க்களம். அக்களத்தில் நாடோறும் சூரனுக்கும் முருகனுக்கும் போர் நடந்தவண்ணமிருக்கிறது. சூரன் முனைப்பு; முருகன் அருட்கடவுள்.
ஒவ்வோர் உயிரிடத்தும் முனைப்பு உண்டு. இதை நிகழ்ச்சியில் உணர்கிறோம். முனைப்பால் விளைவது நன் மையா? தீமையா? தீமை என்பது வெள்ளிடைமலை. தீமைக்குமுதலாகவுள்ள முனைப்பைக் களையவேண்டுவது உயிரின் கடமையன்றோ?
உயிர் கொடிய முனைப்பால் விழுங்கப்பட் டுண்மையான், அஃது அக்கடனாற்ற இயலாதுகிடக்கிறது. ஆனால் உயிருக் குயிராயுள்ள அருட்கடவுள் அக்கடனாற்றி வருகிறது. உயிருக் குயிராய்க் கடவுள் யாண்டிருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்.
பிறர்க்குக் கேடு சூழ முனைப்பெழுவதுபோலப் பிறர்க்கு நலன் செய்ய ஏதாவதொன் றுறுகிறதா இல்லையா என்பதை உன்னுவோமாக. ஒன்றுறுவதை உணர்கிறோம். அஃதென்னை? அதுவே இரக்கம் என்பது. இரக்க நிகழ்ச்சி இல்லை என்று எவருஞ் சொல்லார். இரக்கம், உறுவதாய் நிகழ்வதாய் உணர்வ தாயிருப்பது, இரக்கம் பண்பு. இப்பண்பின் பண்பியாயிருப்பது கடவுள். பண்பியின்றிப் பண்பில்லை யென்பது இயற்கை அறம். பண்பையுடைய பொருள் பண்பி. பண்பாகிய இரக்கம் பெருகப் பெருகப் பண்பியாகிய இறையுண்மையை யுணரலாம்.
முனைப்பு, உயிரைத் தன்பக்கம் இருத்திவைக்கிறது. உயிரை முனைப்பினின்றும் மீட்க ஆண்டவன் அருள் புகுகிறது. இரண்டிற்கும் போர் நிகழ்கிறது. இப்போரே சூரன் – முருகன் போரென்க.
முனைப்பு எப்பொழுது அழிந்துபடும்? திருவருள் பதியப் பதிய அறிவாற்றல் அதாவது ஞானசக்தி எழும். அஃதெழுந்து பாயும்போது முனைப்பு அழிந்துபடும். ஞானசக்தியே முருகன் வேலென்பது.
சூரன் முனைப்பால், முனைந்து போர் புரிந்தபோது, யாண் டும் முருகனைக் கண்டானில்லை. அம்முனைப் பொடுங்கிய போது அவன் யாண்டும் முருகனைக் காணும் பேறு பெற்றான். மீண்டும் அம்முனைப்புச் சிறிது தலை காட்டியதும், அவன் அப்பேற்றை இழந்தான். முனைப்பு, கடவுளைப்பற்றிய உணர் வையும் எண்ணத்தையுந் தகைந்து மறைக்கும் நீர்மையது. அதுவே இறப்பைத் தந்து, பிறப்பென்னும் பேதைமைக்கு வித் தாக நிற்பது. ஆதலால் முனைப்பாம் அரக்கனைக் கொன்று, பிணிமூப்பு சாக்காடொழித்து, இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகுமுடைய முருகனைப் பெற முயலல்வேண்டும்.
‘உதறில் எனதெனு மலமறில் அறிவினில், எளிது பெற லென மறைபறை யறைவதொர், உதய மரணமில் பொருளினை அருளுவ – தொருநாளே”இரவு பகலற எனதற நினதற – அநுபூதி’
‘யான்எனதற் றிடுபோதம்
யானறிதற் கருள்வாயே’
‘எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீதம் – அருள்வாயே’
‘இருவினையு மலமுமற இறவியொடு பிறவியற ஏகபோக மாய் நீயுநானுமாய் – இறுகும்வகை பரமசுகம் அதனையருள்’
‘இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் – கொடுபோகி – இடுகாட்டி லென்னை எரியூட்டு முன் னுன் இருதாட்கள் தம்மை – உணர்வேனோ’
‘பேரவாவ றாவாய்மை பேசற் – கறியாமே – பேதைமாத ராரோடு கூடிப் -பிணிமேவா – ஆரவார மாறாத நூல்கற்றடி நாயேன் – ஆவிசாவி யாகாமல் நீசற் – றருள்வாயே’
‘வீதிவழியின் உயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை – கொண்டுநீபம் – விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற வெட்சித் திருத்தாள் வணங்குவேனோ’
‘உயிர் – அலையாமுன் – கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல், கூட்டிச் சற்றருள் – புரிவாயே’
‘இளமகி ழும்படு முன்ப தம்பெற உணர்வேனோ’
‘கொக்காக நரைகள் வருமுன மிக்காய இளமையு டன் முயல், குற்றேவல் அடிமைசெ யும்வகை – அருளாதோ’
‘எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி – அவதாரம் – இனியுன தபயம் எனதுயிர் உடலும் இனியுடல் விடுக – முடியாது’
‘இருமலும் ரோக முயலதன் வாதம் எரிகுண நாசி – விடமேநீர் – இழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை – இவையோட -பெருவயி றீளை எரிகுலை சூலை பெருவலி வேறு – முளநோய்கள் – பிறவிகள் தோறு.ம் எனைநலி யாத படியுன தாள்கள் – அருள்வாயே’
‘ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மானந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பும்அ றார்தினைப் போதளவும்
ஓங்கா ரத்துள் ளொளிக்குள் ளேமுருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய் யாரென்செய் வார்யம தூதருக்கே’
‘கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே’
‘கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியோ டுமகந் தையையே’
– அருணகிரியார்
அரிவை கொஞ்சுறக் கொஞ்சுபைங் கிள்ளையே
தாலம் பாளை மதுக்குட மேந்திய
சமர மாபுரிச் சண்முக வேலனே’
‘உயிர்ப்பிணி தவிர்க்கு மருத்துவ னென்கோ
உடற்பிணிக் கொருமருந் தென்கோ
மயக்குறு மனத்தி னினைவெனும் பனியை
மாற்றிய கதிரவ னென்கோ
வியப்புறு புரண சொரூபநின் னருளை
வினையனே னேதெனப் புகல்கேன்
கயத்துரி தரித்தோன் புதல்வனே போரூர்க்
காங்கெயா தேங்கொளி மணியே’
– சிதம்பர சுவாமிகள்
‘பிறந்திறந் துழலும் பெருவியா தியையும்
பெரும்பசி நோய்ச்சுடத் தளர்ந்து
நிறங்குலைந் தொருவர் பின்றிரிந் துழலு
நிரப்பெனுங் குறுவியா தியையுந்
திறந்தருள் கடைக்கட் பார்வையா மருந்தால்
தீர்த்தருள் புரியுநா ளுளதோ
அறம்பொரு ளின்பம் வீடருள் தணிகை
ஆறுமா முகதயா நிதியே’
– கந்தப்ப தேசிகர்
‘உருகா மனமுஞ் சிவஞான முணரா வறிவு முனதுபுகழ்
ஓதா நாவு மோதக்கேட் டுவந்தே யினிய நதிபோலப்
பெருகா விழியு முடையேனைப் பிறவிக் கடலில் வீழாமற்
பேணியெடுத்திங் கெனதுள்ளம் பிரியா விரிஞ்சைப் பதிவாழு
முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கு
முனைவா வருக மலராறு முகவா வருக திருமாலின்
மருகா வருக மயிலேறு மன்னா வருக அடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகா மணியே வருக வருகவே’
– மார்க்கசகாயதேவர்
என்று அடியார்கள், தங்கள் முனைப்பொழியுமாறும், பிறவித் துன்பம் நீங்குமாறும் அருள் புரியுமாறு முருகனை நோக்கி வேண்டுதல் காண்க.
யான் எனது என்னுஞ் செருக்கறுத்தல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் எழுதலே சாலும். அவ்வெண்ணஞ் செம்மைசேர் உள்ளத்தினின்றும் எழுவதாயிருத்தல் வேண்டும். அது முருக னருளெனுங் காந்தத்தால் ஈர்க்கப்படும். அச்சீரிய எண்ணமுடை யாரை ஆட்கொள்ள முருகன் அருளா விரைந்து நின்றுகொண் டிருக்கிறது. உய்வுபெறல் வேண்டுமெனும் வேட்கையுடன் ‘முருகா! ஆட்கொள்க’ என்று ஒருமுறை இரந்து வேண்டினும், முருகனருள் பெறலாம். முனைப்பு வளரும் நெஞ்சுகொண்டு ‘முருகா முருகா’ என்று பல்கோடி முறை கூவிக் கூவிக் கூத்தாடி னாலும் முருகனருள் கூடல் அரிது. முருகனுக்கு வேண்டுவது முனைப்பிலா அன்புஉள்ளம். அன்புக்கு முருகன் மிக எளியன்.
என்றும் அழியாதவாறு இளமை காத்து அழகு பெற உலகியல் முறைகள் பல கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் யான் எனது என்னுஞ் செருக்கைச் செகுத்து, இயற்கை மணமும், மாறா இளமையும் கடவுட்டன்மையும், அழியா அழகுமுடைய முருகனை இடையீடின்றிப் போற்றிப் பாடி நினைந்துவரின், அவன் அருளை எளிதிற் பெறலாம்.
‘பழகிய வினைகள் பொடிபட அருளில், படிபவர் இத யம் – உறுகோவே’
‘செம்மனத்தர் மிகுத்த மாதவர், நன்மைபெற்ற உளத்திலே மலர், செல்வசிக்கல் நகர்க்குள் மேவிய – பெருமாளே’
திருப்பழனி வாழ்வுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி வரு – பெருமாளே’
‘அடியவ ரிச்சையி லெவை யெவை யுற்றன அவைதரு வித்தருள் – பெருமாளே’
‘நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தி லஞ்சலென்ற – பெருமாளே’
‘கருதுவார் மனம் புகுந்த – பெருமாளே’
‘கழலிணை யணியும் அவருடன் முனிவு கனவிலு மறியாப் பெருமாளே‘
காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு கால்முருக வேளெனவும் – அருள்தாராய்’
‘குற்றமற்றவ ருளத்தில் உறைவோனே’
“முருகா எனவோர் தரமோ தடியார் முடிமேல் இணைதாள் – அருள்வோனே’
‘ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா எனவோ – தருள்தாராய்’
‘ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுத்திட் டுரைப்பார்கள் சித்தத் – துறைவோனே’
இத்திருப்புகழ்களை ஓதிய அருணகிரிநாதர் தமது பின்னை வாழ்வில் முருக னருட்செல்வத்தால் பெற்றபேறுகள் பலப்பல. அவைகளை உலகுய்ய அவ்வன்பர் பல தமிழ்ப் பாக்களாகத் திரு வாய்மலர்ந்தருளினர். அவர், தாம் சாக்காடெய்து நிலையில் முருகனருள் பெற்று உய்யுநெறி கண்டனர். அம் முருகனடி யாரை ஈண்டு நினைந்து வாழ்த்துவோம்.



