
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
10. பின்னைத் திரிபுகள்
(முருகனைப்பற்றிப் பின்னை எழுந்த கொள்கைகள் கதைகள் முதலியன – சமயப் பிணக்குகள் – புராண உலகம் – கடவுளை மறந்த செயல்கள் – திரிபுகளும் புரட்டுகளும் – புராண ஆராய்ச்சி – புராணங் களின் முக்கூறு. புராணத்தில் முருகன் தோற்றம் – முருகன் பிறப் பில்லாதவன் – புராணங்கூறுந் தோற்றத்தின் உள்ளுறை – முருகன் இயற்கைமுதல்வன் – சத் சித் ஆனந்தம் முறையே தந்தை தாய் சேய் – ஆறுமுகம் முதலியன.)
இதுகாறும், இளமையும் மணமும் கடவுட்டன்மையும் அழகுமுடைய ஒன்றை – இயற்கையை உடலாக்கொண்ட இறை வனை – தமிழ் முருகனை – நினைந்து நினைந்து மகிழ்ச்சியுடன் எழுதிக்கொண்டு வந்தேன். இனி அம்முருகனைப் பற்றிப் பின்னே எழுந்த கதைகள், கொள்கைகள் முதலியவற்றைக் குறித்து மிக வருத்தத்துடன் சிலவுரை பகரப் புகுகிறேன். இயற்கையைப் போர்வையாக் கொண்ட முருகனைப்பற்றிய அழகுக் கொள்கை இடைநாளில் பலவழியில் திரிக்கப்பட்டது. திரிவால் நாட்டுக்கு என்ன விளைந்தது? நாட்டு நலத்துக்கும் மக்கள் ஒழுக்கத்துக்குங் கேடு விளைந்தது. மக்கள் மனக்கோட்ட மன்றோ நாட்டைக் குலைப்பது?
மொழி வளர்ந்து ஆக்கம் பெறப்பெற முருகனைப் பற்றிய பாடல்கள் பல எழுந்தன. புலவோர் நேரே இயற்கையில் நாட் டங்கொண்டு பாடிவந்த நாட்களில் முருகன் திருநெறி செம்மை யாகவே யிருந்தது. பிற்றை நாட் புலவோர் இயற்கையை நாடாது, இயற்கையின் சாயலாக வரையப்பெற்ற ஓவியங்களின் நுட்பந்தேறாது, ஓவிய எடுப்புக்களையே பொருளாக்கருதிப் பாடியபோதே, முருகன் செந்நெறியில் மாசு படரலாயிற்று. மேலுந் தொடர்ந்து போந்த ‘தந்திர மந்திர புராணங்கள்’ முதலியன, குப்பைகளைக் கொணர்ந்து மலைமலையாகச் செந்நெறியில் குவித்தன. முன்னே, முருகன் என்றதும், அவனது உடலாகிய இயற்கைமீது எல்லார் கருத்தும் படியும். இப் பொழுது முருகன் என்றதும், பலர் கருத்து இயற்கைமீது படிவ தில்லை. இவர் கருத்தை அழுக்குத் தொடக்குகள் ஈர்த்துக்கொள்கின்றன. மக்கள் கருத்தில் மாறுபாடு உற்றதேயன்றி, முருகன்பால் எவ்வித மாறுபாடும் உறவில்லை. முருகன் என்றும் இயற்கை வடிவா யிலங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் திரிபுமில்லை; மாசுமில்லை. அவனை உணர மக்கள் கொண்ட நெறியிலேயே அழுக்குப் படர்ந்தது.
சரித்திர உலகில் நுழைந்து, அதைச் சிறிது நோக்கினால், நமது நாட்டில் எத்துணைக் கொள்கை யுடையார் புகுந்தனர் என்பது தெரியவரும். அவரவர் விரும்பியவாறு செம்மை நெறியைத் திரித்துவிட்டனர். ஆண்டவனை அவரவர் விழையும் வண்ணம் வழிபட அவரவர்க்கு உரிமையுண்டு. ஆனால் அவ்வுரிமையை நெறியல்லா நெறியில் பயன்படுத்தி, ஆண்டவன் அழகு நெறியைச் செகுத்தலாகாதன்றோ?
நமது நாட்டில் இடைநாளில் இயற்கைச் செந்நெறி பலதிறக் கவட்டைகளாகப் பிரிக்கப்பட்டது. அவை, சைவம், வைணவம் சமணம் பௌத்தம் முதலியன. இப்பெயர் வேற்று மையைப்பற்றிக் கவலையுறவேண்டுவதில்லை. இவை யாவும் இயற்கைச் செந்நெறியையே குறிக்கோளாகக் கொண்டு உலகில் நிலவி யிருப்பின், மக்கள் வாழ்வுநிலை கெட்டிராது. அவ்வச் சமயங்கண்ட அறிஞரோ இயற்கைக்குரிய வழிகளாகவே அவை களைக் கோலினர். அவர்தம் வழிவழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளுஞ் சழக்கர் கூட்டங்கள், ஒரே சமயம் பலவாகப் பிரிந்த உட்கிடக்கையை உணராது, இயற்கைக்குரிய செம்மை நெறியைச் செயற்கைக்குரிய வெம்மை நெறிகளாக்கின. செயற்கை வெம்மையால் உலகம் வெந்து கொண்டிருக்கிறது.
சைவ வைணவ சமண பௌத்தர்கள் பின்னாளில் அறநெறி பிறழ்ந்து, ஒருவரோடொருவர் மலைந்து, போரிட்டு, ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய ஏட்டுச் சுவடிகள் பலப்பல. அவைகளுள் சில, இன்னுஞ் சமய ஒழுக்க நூல்களாகப் பிடிவாதத்தாலும், கண்மூடி வழக்கத்தாலும், துரபிமானத்தாலும் கொள்ளப்பட்டு வருகின்றன. சமயவாதிகள் – இளமையும், மணமும், கடவுட் டன்மையும், அழகுமுடையதாய் இயற்கையினூடே இரண்டற விராவிநிற்கும் முருகை, மனம் போனவாறு தூற்றியும், வைதும், இழித்தும் ஏடுகளில் கீறிவிட்டார்கள். முருகன் என்னும் தமிழ்ப் பெயரைச் சமய வெறியர் விரும்பாதொழியினும், இயற்கை முதற்குத் தாம் விரும்பும் வேறு பெயரைச் சூட்டியாவது, செந் நெறி நின்று, அம்முதலை வழிபட்டிருக்கலாம். இயற்கையின் உட்பொருளை எப்பெயரால் வழுத்தினாலென்ன? இயற்கைக் கடவுள், முருகன் என்னும் பெயர் தாங்கினாலென்ன? அரிஅரன் என்னும் பெயர் பெற்றாலென்ன? அல்லா ஜோஹோவா முதலிய எப்பெயரால் அழைக்கப்பட்டாலென்ன? உள்ளம் மட் டும் இயற்கை முதல்மீது படிந்து கிடத்தல்வேண்டும். இயற்கை அன்புக் கடவுளை மறந்து, பகைமை பொறாமை முதலிய பேய் களை உளங்கொண்டு, எரிந்து, பிறரையும் பிறர் கொள்கையையுந் தூற்றுவது, இறைவனை உணர்த்தவல்ல இயற்கைச் செந்நெறி யில் நிற்பதாகுங்கொல்!
தமிழர் வழிபட்டு வந்த முருகன், இயற்கை முதல்வன் என்ற உண்மையைப் பகைமை பொறாமை மேலீட்டான் உணர முய லாது, அவனைத் தாங்கள் வணங்குங்கடவுளினின்றும் வேறு படுத்தி, இழிதுறையில் தாக்கிச் சிறுமைச் சுவடிகள் பல மாக்க ளால் எழுதப்பட்டன. அவ்வேடுகளைக் கண்ணுற்ற தமிழ் மக்க ளிற் சிலர், சீறி எழுந்து, நெறிபிறழ்ந்து, மறுப்பெழுது மிடுக்கில், ‘எல்லார்க்கும் ஒரே கடவுள்’ என்னும் உண்மையையும் மறந்து, மற்றவர் போற்றுங் கடவுளரை இழித்துக் கூறலாயினர். இழித் தலும், பழித்தலும், தூற்றலும், போற்றலும் செல்லுமிடம் ஒன்றே என்பதை அன்பர்கட்கு நினைவூட்டி மேற்செல்கிறேன். சமயப் பூசல்களும் மறுப்புக்களும் மலிந்து, நாட்டை எரித்த வேளை யில், ஒவ்வொரு சார்பிலுஞ் சிலர் எழுந்து ஒன்றுபட்டுக் கட வுளர்க்குள் உறவு கற்பித்துக் கொண்டனர். புராணக் குப்பை களைக் கிளறினால், தும்பு தூசுகள் பறத்தல் காணலாம். தும்பு தூசுகள் அறிவுக் கண்ணைக் கெடுக்குமாகலான், குப்பைகளை ஈண்டுக் கிளறாது, ஒரு நொடிப்பொழுது அவைகளை மேற் பார்வையிடலாம்.
வடமொழிப் பாரதத்தில் சொல்லப்படும் முருகன் தோற் றத்துக்கும், அம்மொழி ஸ்காந்தத்தில் சொல்லப்படும் முருகன் தோற்றத்துக்கும் வேற்றுமையிருக்கிறது. முருகன் தோற்றம் மற்றுமுள்ள புராணங்களில் இன்னும் பலவாறு பேசப்பட்டிருக் கிறது. பரிபாடல் முருகனைப் பற்றிப் பழிப்புரை பகர்ந்திருக் கிறது. சிவாகமங்களிற் சில பரிவார தேவருள் முருகன் ஒருவன் என்று செப்புகின்றன. சில சிவபுராணங்கள் முருகனைச் சபித் திருக்கின்றன. மற்றச் சமய நூல்கள் முருகனைப் பற்றி வெளியிட் டுள்ள கருத்துக்களை ஈண்டுக் குறிக்க வேண்டுவதேயில்லை. இவ்வசைகளைக் கண்ட முருகன் மாட்டுப் பற்றுடையார் சிலர், இகல்கொண்டு, மறுப்புக் கூறி, அவ்வச்சமயக் கடவுளரையும் இழித்துத் தூற்றிப் பழிக்குப் பழி வாங்கினர். விரிவு கௌமார நூல்களிற் காண்க.இப்போராட்டத்தால் நாட்டின் சீரே குலைந்தது. மறுப்பு நூல்களை நமது நாட்டைக் கொலை செய்யவல்ல காலன் கருவிகள் என்று யான் கூறுவேன். மறுப்பு நூல்களிலுள்ள கயமை உரைகளை என்னென்று சொல்வேன்? பொறாமையால் பகைத்துக் கனன்று சீறித் தம்மை மறந்து போரிடுங் கயவர் வாயினின்றும் எத்தகைச் ‘செவ்விய மலர்கள்’ உதிருமென்று சொல்லலும் வேண்டுமோ? தொடக்கத்தில் ஒருவரோடொரு வர் பிணங்கிப் போரிட்டபோது, ஒருவரையொருவர் இழி மொழிகளால் ஏசிக்கொண்டு, பின்னை ஒற்றுமை விளைந்த வேளையில், அவரவர் தத்தங் கடவுளர்க்குள் மாமன் மருகன் தந்தை பிள்ளை முதலிய உறவுமுறை வகுத்து, அளவளவின ரென்று ஊகித்துணர இடனிருக்கிறது. பிணங்கியபோது ஏசிய மொழிகளும், இணங்கியபோது உறவுகொண்ட மொழிகளும் அவ்வந்நாளைய நூல்களில் விரவிக் கிடக்கின்றன. இந்நிலை நேர்ந்த காலத்தை நாட்டின் குழப்பக் காலம் என்றுரைக்கலாம்.
இக்குழப்பத்துக்குப் பின் தோன்றிய அறிஞர் சிலர் எல்லாப் பொய்கட்கும் புரட்டுகட்கும் நியாயங்கூறப் புறப் பட்டனர். இப்பொய்ப் புரட்டுகட்கும் அவர் உட்பொருள் (தத்துவார்த்தம்) உரைக்கத் துவங்கினர். அதையும் இதையுஞ் சேர்த்துக் குழம்புங் கூழுமாக்கினவருஞ் சிலருளர். எத்தனையோ கூறு கூறாக நமது நாட்டுப் பழங்கொள்கை சிதறிச் சிதறிப் பாழ் பட்டது. அப்பாழுங் காலத்தையுங் கோலத்தையும் நினைக்கவும் நெஞ்சமெழவில்லை.
இருபதாவது நூற்றாண்டில் வாழும் நாம் – ஆராய்ச்சி யுலகில் வதியும் நாம் – பிறநாட்டுக் கூட்டுறவு பெற்றுள்ள நாம் – என் செய்வது? என் செய்வது என்று வாளா கிடத்தலாகாது. ஆண்டவன் நமக்கு அறிவை வழங்கி யிருக்கிறான். கண்ணுக் கெதிரே உண்மை நூலாகிய இயற்கை யுலகம் காட்சியளிக்கிறது. அறிவுகொண்டு, இயற்கை யுலகமெனும் உண்மை நூல் பயின்று, உண்மை காண உழைக்க வேண்டுவது நமது கடன்.
பகைமை பொறாமை இகல் முதலிய தீக்குணங்களின்றி, உண்மை காணவேண்டுமென்னும் வேட்கை மீக்கூர்ந்து, ஆராய்ச்சித்துறை நண்ணினால், முருகெனும் நம் தந்தையைக் கொழுகொம்பாக் கொண்டுள்ள நமது இயற்கைத் தாய் வழிகாட்டுவாள். எந்தை முருகனிருக்கும்போது, அன்னை இயற்கை யிருக்கும்போது நமக்கென்ன குறை? செயற்கையுடன் நமக்கென்ன வேலை? என்ன விளையாட்டு? இயற்கைக் கடவுள் ஆணை வழி நின்று, நமது கடனாற்றுவோமாக.
முருகனைப் பற்றிப் பின்னை நாளில் நமது நாட்டில் குவிந்த குப்பைகள்மீது நாட்டஞ் செலுத்த வேண்டுவதில்லை. குப்பை என்றைக்காதல் விலக்கப்படும்; அல்லது மண் அதைத் தின்று மறைக்கும். அழுக்கு உலகைக் கனவிலுங் கருதாதிருக்குமாறு அன்பர்களை வேண்டுகிறேன். என்றுமுள்ள இயற்கையின்பால் நாம் அணைவோம்; அதன் உட்பொருளாகிய முருகை யுணர முயல்வோம்.
‘முருகன் இயற்கையை உடலாக்கொண்ட உயிர்’ என்னும் பழங்கொள்கையில் நெஞ்சம் நிலைக்க. முருகன் என்னும் பெயருக்குப் பதிலாக வேறு எப்பெயர்கொள்ளினுங் கொள்க. முருகன் என்னும் பெயர் மிகத் தொன்மையது. ‘நாம் பற்றுக் கோடாகக் கொண்ட பொருள் இயற்கையின் உள்ளுறையா யிலங்குஞ் செழும்பொருள்’ என்னுங் கருத்தினின்றும் மட்டும் பிறழலாகாது. இவ்வுறுதிக்கண் திளைத்து நின்று, ‘முருகன் இயற்கை வடிவினன்’ என்னுங் கொள்கைக்கு அரண் செய்யும் நூல்களையுங் கதைகளையும் முற்றுமோ, ஒரோ வழியோ ஏற்பது நலன்.
குப்பை என்று வழங்கப்படும் ஏட்டுச் சுவடிகளில் பேர் பெற்று விளங்குவன புராணங்கள். புராணங்கள் தமிழ் நாட்டின் முதல் நூல்களல்ல. புராணங்கள் வேறு உலகினின்றும் நந்தமிழ் நாட்டிலே குடியேறினவை. புராணமென்னுஞ் சொல்லே தமிழ்ச் சொல்லன்று. புராணம் தமிழ் நாட்டில் புகுந்த பின்னர்த் தமிழரும், புராணம் என்னுஞ் சொல்லை ஆட்சியில் கொணர்ந் தனர்.
‘பெரிய புராணம்’ என்பது தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு தனி நூல். இப்புராணம் பதினெண் புராணக் கூட்டத்திலாதல், பிற புராண இனத்திலாதல் சேர்ந்ததன்று. இத்தகைப் புரா ணங்கள் இரண்டொன்று போகத் தமிழிலுள்ள ஏனைய புராணங்கள் யாவும் வடமொழியினின்றுந் தமிழில் பெயர்த்துப் புலவர்களால் எழுதப் பட்டனவே.
புராணங்கள் முதல் முதல் நன்னோக்கத்துடன் எழுதப் பட்டன. நன்னோக்கத்துடன் எழுதப்பட்ட புராணங்களில் இயற்கை உண்டு; பாட்டு உண்டு; இறை உண்டு; வாழ்வு உண்டு; அறம் உண்டு; ஒழுக்கம் உண்டு; அன்பு உண்டு; எல்லாம் உண்டு. புராணங்களின் உட்கிடக்கையை யோராது, பின்னே பாட்டுப் பாடப் பயின்றோ ரெல்லாரும் புராண நாடகத்தில் புத்தி செலுத்தி நடிக்கத் தொடங்கினர். அவரால் புராணம் பெருங்கூத்தாக முடிந்தது. சமயவெறியர் பலர், பிற சமயக் கடவுளர் நிந்தனையொன்றையே குறிக்கொண்டு, போலிக்கதைகள் புனைந்து, புராணம் பாடத் தொடங்கினர். காமுகர் சிலரும் புரா ணம் பாடியுள்ளனர். இப்புராணங்களிலுள்ள வருணனைகள், மொழி அன்னையின் எழின் முகத்தில் அம்மைப்புள்ளி வார்த்து, இயற்கையை மறைப்பனவாயின; கதைகளோ, விலங்கும் வெறுக்கத் தக்கன. இப்போலிப் புராணங்களால் மொழிக்கும், கடவுள் நெறிக்கும், வழக்க ஒழுக்கங்கட்குங் கேடு விளைந்தது என்று சுருங்கச் சொல்லலாம்.
புராணம் என்னுஞ் சொல்லைக் கேட்டதும் கண்டதும் ‘கடவுள் நூல்’ என்று ஏழை மக்கள் ஏமாந்து போகிறார்கள். பலர் ‘புராணமா? குப்பை’ என்று பொதுவாகப் புராண உலகையே கடிகிறார். உண்மை நூலாராய்ச்சியுடைய அறிஞருள் ஒருசிலர் புராண உலகிலுள்ள நன்மை தீமைகளைப் பகுத்துணர்கிறார். பொதுவாகப் புராண உலகம் மதிப்பிழந்துவிட்டது.
இந்நிலையில் இந்நாளில் புராண உலகில் நுழையிலோ அந்தோ! இருண்மயம் இருண்மயம்! புராண உலகில் இருள் கொண்டல் கொண்டலாகத் திரண்டு உருள்கிறது. இருட்டில் என் செய்வது? ஆனால் இடையிடையே மின்னொளி தோன்றித் தோன்றி மறைகிறது. ஒளி தோன்றும்போது உற்று நோக்கினால் நச்சுக் கடலுள்ள இடமும், பாலாழியுள்ள இடமும் புலனாகும். பாலாழியின் பக்கல் அணையவேண்டுவது அறிஞர் கடமை. உண்மை நூல்கள் பல ஆராய்ந்து, ஆராய்ச்சியால் தெளியும் அறிவுத் துணைகொண்டு, புராணங்களைப் பகுத்துணர்வது அறிஞர்க்கழகு.
யான் புராணங்களை முத்திறமாகப் பிரிப்பது வழக்கம். ஒன்று மெய்வரலாறுகளைத் தெரிப்பது; இன்னொன்று தத்துவ நுட்பத்தை உலகோர் பொருட்டுக் கதைகளாகப் புனைந்துரைப் பது; வேறொன்று பொய்யே புகல்வது. முதலினத்திற் சேர்ந்த புராணங்கள் மிகச் சில. கடைக் கூட்டத்திற் சேர்ந்த புராணங்கள் பல. இவை, இயற்கை நுட்பமும் தத்துவ ஆராய்ச்சியுங் குன்றிய காலத்துப் பொழுதுபோக்குக்கெனச் சொற்புலவராலும், சமயவெறியராலும், காமுகராலும் யாக்கப்பட்டன. இடை வகுப்பைச் சேர்ந்த புராணங்களே ஆராய்ச்சிக்குரியன.
புத்தர் ஜாதகக் கதைகள் தோன்றிய நாள்தொட்டு நமது நாட்டில் புராணங்களுந் தோன்றலாயின. தத்துவ நுட்பங்களை மக்கள் எளிதில் உணருமாறு கதை வடிவாக எழுதப்பட்ட நூல் களே இப்புராணங்கள்.ஆண்டவன்பால் பிரிவின்றி அவனது அருள் பொலிகிறது. ஆண்டவனை ஆணாகவும், அவனது அருளைப் பெண்ணாகவும் கொள்வது நமது நாட்டு வழக்கம். இவ்வழக்கையொட்டிப் புல வர் ‘உமைநங்கையோர் பங்குடையாய்’ என்று பாடுவர். இதன் கருத்தென்னை? ‘அருளோடு கூடிய ஆண்டவனே’ என்பது கருத்து. ‘அருளது சத்தியாகும்’ என்று ஞானசாத்திரம் நவில் கிறது. ஆண்டவனையும், அவனது அருளையும் புராணம் வேறு முறையில் கூறும். முறையில் வேறுபாடிருக்கிறதேயன்றிக் கருத் தில் வேறுபாடில்லை. ஆண்டவனையும் அருளையும் முறையே தலைவன் தலைவியாகக் கொண்டு, புராணம், திருமணம் – விளையாட்டு – முதலிய படலங்கள் வகுத்துக் கதைகளாக உருவகஞ்செய்து, அணிபெறக் கூறும். ஆகவே புராணங் கூறு வதை அங்ஙனே பருமையாகக் கோடலாகாது. அங்ஙனங் கொள் வோருமுளர். அவர் மதமே “பௌராணிகம்’ என்பது.
புராணங்கள் புனைந்துகூறுங் கதைகளின் உட்பொருள் உணர்வோர்க்கு அவைகளின் நுட்பம் விளங்கும். இன்னும் புராணங்கட்கெனப் பரிந்து பேசுமிடம் இந்நூலன்று. இந் நூலின் போக்கிற்கேற்பப் புராண உலகைப்பற்றிச் சிறிது கூறல் இன்றியமையாததாயிற்று.
இனிப் புராண உலகுக்கும் முருகக்கடவுளுக்கு முள்ள தொடர்பு குறித்துச் சிலவுரை பகர விரும்புகிறேன். முருகன், இயற்கை முதல்வனாக நின்று, இயற்கையை இயக்கி, அதன் வாயிலாக உயிர்கட்கு நலஞ் செய்து வருவதைப் புராணங்கள் பல திருவிளையாடல்களாகப் புகல்கின்றன. புராணங்களின் உட்கிடக்கையை உணர்தல் வேண்டும். உட்கிடக்கையை உண ராது வெறுங் கதைகளை மட்டும் கோடல் முருகன் இயல்பைத் தெளிவதாகாது. ‘முருகன் இயற்கையின் உள்ளுறை’ என்னுங் கொள்கைக்குப் புராணக் கதைகள் அரண் செய்யும். அரண் செய்யுமாறே இனிய நறும் புராணங்கள் யாக்கப்பட்டுள்ளன.
முருகனைப்பற்றிக் கூறும் புராணங்கள் பல. அவைகளுள் தலையாயது மஹா ஸ்காந்தம். இப்புராணத்தின் ஒருகூறு கச்சியப்ப சிவாச்சாரியரால் தமிழில் பாடப்பட்டிருக்கிறது. இதுவே தமிழ்க் கந்தபுராணமென்பது. இப்புராணத்துக்கு வழி சார்புகளாகச் சில நூல்கள் செய்யப்பட்டன. ஈண்டு எடுத்துக் காட்டிற்குத் தமிழ்க் கந்தபுராணத்தையே கொள்கிறேன்.
தமிழ்க் கந்தபுராணத்துக்கும் முற்றும் உட்பொருள் கூற யான் புகுகிறேனில்லை. பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்பார்த்தல் என்னும் முறை (தாலிபுலாக நியாயம்) பற்றி இரண் டொன்று எடுத்துக் காட்டல் சாலும். முதலாவது முருகன் தோற்றத்தை மட்டுஞ் சிறிது ஆராய்வோம்.
இதை ஆராய்ந்தாலும் முருகன் இயற்கை முதல்வன் என்பது புலப்படும். புராணக் கதையின் உள்ளுறையை ஓராது, வாயில் வந்தவாறு பிதற்றுவது அறியாமை. உலகில் ஒருவ னுக்கும் ஒருத்திக்கும் பிறக்கும் குழந்தைபோல் சிவனுக்கும் உமைக்கும் முருகன் பிறந்தான் என்று கருதுவோர் மிகக் கீழ்நிலையிலிருப்போர். இவர் புராணக் கதைகளை உள்ளவாறே நம்புவோர். எங்கும் நிறைந்துள்ள முருகு யாண்டுத் தோன்றும்? யாண்டு ஒடுங்கும்?
‘கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொற்ற
எந்தை அருணாடி யிருக்குநாள் எந்நாளோ’
என்று வேதாந்த சித்தாந்த சமரச ஞானச் செல்வராகிய தாயுமானார் வழுத்திய அருணகிரிநாதர்,
‘காணொ ணாதது உருவோ டருவது, பேசொ ணாதது உரையே தருவது, காணு நான்மறை முடிவாய் நிறைவது – பஞ்சபூதக் – காய பாசம தனிலே யுறைவது, மாய மாயுடலறியா வகையது* * ‘
‘சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞான சிவ, சமய வடி வாய்வந்த அத்துவித மானபர, சுடரொளிய தாய்நின்ற நிட்கள சொரூபமுத – லொருவாழ்வே – துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலம், அதனில்விளை யாநின்ற அற்புத சுபோதசுக, சுயபடிக மாவின்ப பத்ம பதமே அடைய – உணராதே’
‘போத நிர்க்குண போதா நமோநம, நாத நிஷ்களநாதா நமோநம’
‘சுருதி யூடு கேளாது, சரியை யாளர் காணாது, துரிய மீது சாராது – எவராலுந் – தொடரொ ணாது மாமாயை, யிடைபு காது ஆனாத, சுகம கோத தீயாகி – யொழியாது – பருதி காயில் வாடாது, வடவை மூளில் வேகாது, பவனம் வீசில் வீழாது – சலியாது – பரவை சூழி லாழாது, படைகள் மோதில் மாயாது’
‘வாசித்துக் காணொணாதது,பூசித்துக் கூடொணாதது, வாய்விட்டுப் பேசொணாதது – நெஞ்சினாலே – மாசர்க்குத் தோணொணாதது, நேசர்க்குப் பேரொணாதது, மாயைக்குச் சூழொணாதது’
‘ஒல மறைக ளறைகின்ற வொன்றது, மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர், ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ – ரெவராலும் – ஓத வரிய துரியங் கடந்தது, போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும், ஊனு முயிரு முழுதுங் கலந்தது – சிவஞானம் – சால வுடைய தவர்கண்டு கொண்டது, மூல நிறைவு குறைவின்றி நின்றது, சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ – னவியோமஞ் – சாரு மநுப வரமைந்த மைந்தமெய், வீடு பரம சுகசிந்து இந்த்ரிய, தாப சபல மறவந்து நின்கழல் – பெறுவேனோ”
‘பாணிக்குட் படாது சாதகர், காணச்சற் றொணாது வாதிகள், பாஷிக்கத் தகாது பாதக – பஞ்சபூத – பாசத்திற் படாது வேறொரு, பாயத்திற் புகாது பாவனை, பாவிக்கப் பெறாது வாதனை – நெஞ்சமான – ஏணிக்கெட் டொணாது மீதுயர், சேணுக்குச் சமான நூல்வழி, யேறிப்பற் றொணாது நாடினர் – தங்களாலும் – எதுச்செப் பொணாத தோர்பொருள்’
என்று போற்றிய ஒரு பொருளோ தோற்றக்கேடுடையதாகும்? இயற்கை மணமுடையான், மாறா இளமை யுடையான், கட வுட்டன்மை யுடையான், அழியா அழகுடையான், எம்பெரு மான் முருகனே எல்லாம்; அவனே சிவன்; அவனே திருமால்; அவனே யெல்லாம்.
‘ஐந்து பூதமு மாறு சமயமு, மந்த்ர வேதபு ராண கலைகளும், ஐம்ப தோர்வித மான லிபிகளும் – வெகுரூப – அண்ட ராதிச ராச ரமுமுயர், புண்ட ரீகனு மேக நிறவனும், அந்தி போலுரு வானும் நிலவொடு – வெயில்காலும் – சந்த்ர சூரியர் தாமு மசபையும், விந்து நாதமு மேக வடிவம, தன்சொ ரூபம தாக வுறைவது – சிவயோகம்’
‘சுருதி யாயிய லாயியல் நீடிய, தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள், தொடர்பு மாயடி யாய்நடு வாய் மிகு – துணையாய்மேல் – துறவு மாயற மாய்நெறி யாய்மிகு, விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள், சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு – சுடர் வீசும் – பருதி யாய்மதி யாய்நிறை தாரகை, பலவு மாய்வெளி யாயொளி யாயெழு, பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு – பரமாகும்’
எனவரூஉந் திருப்புகழ்ப் பாக்களை ஆராய்க. எல்லாமாய் விளங்குஞ் செம்பொருட்குப் பிறப்பேது? இறப்பேது?
‘புராணத்தில் முருகன் தோற்றம் கூறப்பட்டிருக்கிறதே. அஃதென்னை? என்று சிலர் ஐயுறலாம். புராணம் கூறும் முருகன் தோற்ற வரலாறும், ‘அவன் இயற்கை முதல்வன்’என்பதை வலியுறுத்தவே எழுந்ததென்க. இதை ஆராயின் உண்மை காணலாம்.
முருகன், சிவபெருமான் திருக்கண்களி னின்றுந் தோன்றி, காற்றாலும் (வாயுவாலும்) நெருப்பாலும் (அக்னியாலும்) தாங்கப் பெற்று, நாணற் (சரவணப்) பொய்கையில் குழந்தையாய், மண்ணில் (பூமியில்) திருவிளையாடல் புரிந்தான் என்று புராணங் கூறுகிறது, இதனை ஆராய்ந்தால் முருகன், மண் புனல் தீ வளி வெளி என்னும் ஐந்து பூதங்கட்குங் காரணன் என்பது புலனாகும். சிவம் – வெளி; வாயுவும் அக்கினியும் – முறையே காற்றுந் தீயும்; சரவணப் பொய்கை – புனல்; பூமி – மண். இவ் வுண்மை கண்ட கச்சியப்ப முனிவர் தமது தணிகைப் புராணத் தில்,
‘ஓங்கொளியாய் விசும்பாதி தொறுமியலுந்
தனதியல்பை உருவின் மாட்டும்
பாங்குபெறத் தெரித்ததுபோற் பலபொறியாய்ப்
பரமர்விழி பயந்த ஞான்று
தேங்கொளியாய் வெளியடர்ந்து வளிதொடர்ந்தொள்
ளொளிபடர்ந்து தெளிநீர்ப் புக்கு
நீங்கிவிளை யாட்டயர்ந்து தணிகையமர்
பெருவாழ்வை நினைந்து வாழ்வாம்’
என்று முருகனைப் போற்றியிருப்பது ஈண்டு உன்னற்பாலது. இச்செய்யுட்கணுள்ள உள்ளுறை அறிஞர் கருத்தைக் கவரும். முருகப்பெருமான் இயற்கை முதல்வன் என்பதைக் கதை வாயி லாகப் புராணம் அறிவுறுத்தும் நுட்பத்தை ஞான நூல் துணை கொண்டு ஆராய்ந்து உணரவேண்டுவது அறிஞர் கடமை.
சிவபெருமானைத் தந்தையென்றும், உமையம்மையைத் தாயென்றும், முருகனைப் புதல்வனென்றுஞ் சொல்லப்படு வதும் புராண முறை. இம்முறைபற்றி அன்பர்கள் பரம்பொருளைப் போற்றி வருவது நமது நாட்டு வழக்கத்தை யொட்டியது. நாட்டுக் கல்வி அருகியுள்ள இந்நாளில் இவ்வழக்கின் பொருள் முதலியன மறைந்து கிடக்கின்றன. என் செய்வது?
‘தந்தை தாய் புதல்வன்’ என்று புராணம் கூறும் முறையின் உட்பொருளை விரித்துக் கூறவேண்டுவதில்லை. பரம்பொருள் சச்சிதானந்த (சத் சித் ஆனந்தம் – உண்மை அறிவு இன்பம்) மயமா யிருப்பது என்பதைத் தந்தை தாய் சேய் என்று புராணங் கூறு கிறது. சத் – உண்மை-சிவம்; சித் – அறிவு – சக்தி; ஆனந்தம் – இன்பம் – குகன். இவ்வுண்மையை உலகோர்க்கு உணர்த்துவதேசோமாஸ்கந்த மூர்த்தம் என்பது. (உமையோடு கூடிய ஒருவனும் கந்தனும் என்றபடி.) சத் சித் ஆனந்தமென்னும் மூன்றும் சொல் லால் வேறு பட்டிருப்பது போலத் தோன்றினும், அவை பொருளால் ஒன்றையே குறிப்பனவாம்.
அகல நீள உயரங்கொண்ட ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். அகலம் நீளம் உயரம் என்னும் மூன்றும் தனித் தனி பிரிந்து நிற்பனவா என்றும், இவை தம்மைக் கொண்டுள்ள பொருளை விடுத்தாதல் நீங்கி நிற்பனவா என்றும் கூர்ந்து நோக்குவோமாக. நோக்கின், மூன்றும், ஒன்றை விடுத்தொன்று பிரிந்து நில்லா என்பதும், தம்மைக்கொண்டுள்ள பொருளையும் விடுத்து நீங்கி நில்லா என்பதும் செவ்வனே விளங்கும்.
அகல நீள உயரம் போன்றன சத் சித் ஆனந்தம். இம் மூன்றையுமுடைய பொருள் போன்றது பரம்பொருள். இதனைப் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தமது ‘திருவலங்கற்றிரட்டு’ என்னும் நூற்கண்,
‘எதிலே நீளமோ அதிலே அகலமும் – எதிலே அகலமோ அதிலே நீளமும் – எதிலே கனமோ அதிலே நீளமும் – எதிலே நீளமோ அதிலே கனமும் – எதிலே அகலமோ அதிலே கனமும் – எதிலோ கனமோ அதிலே அகலமும் – உண்டன் னணமே யுணரின் முறையே – எங்கே அறிவோ அங்கே உண்மையும் -எங்கே உண்மையோ அங்கே அறிவும் – எங்கே இன்பமோ அங்கே அறிவும் – எங்கே அறிவோ அங்கே இன்பமும் – எங்கே இன்பமோ அங்கே உண்மையும் – எங்கே உண்மையோ அங்கே இன்பமும் – எங்கே சிவையோ அங்கே சிவமும் -எங்கே சிவமோ அங்கே சிவையும் – எங்கே சேயோ அங்கே சிவையும் – எங்கே சிவையோ அங்கே சேயும் – எங்கே சேயோ அங்கே சிவமும் – எங்கே சிவமோ அங்கே சேயும் – ஆமென் றறிபவர் தாமே அறிஞர் – போமுன் றெரிவீர் பூமியு ளீரே’
என்று விளங்க ஓதியிருத்தல் காண்க.
செம்பொருள் என்பது உண்மை (சத்) அறிவு (சித்) இன்ப (ஆனந்த) வண்ணமாயிருப்பது. உயிர்கள் பெறவேண்டுவது இன்பம். இன்பப்பேற்றிற்கு மெய்யறிவு இன்றியமையாதது. மெய்யறிவிற்கு வேண்டற்பாலது உண்மை. உண்மையும் மெய்யறிவும் விளங்கிய போதே ( இவைகளுடன்) பிறப்பது இன்பம். இவ்வாறு பிறக்கும் இன்பத்தைச் சேயென்றும், உண்மையைத் தந்தையென்றும், அறிவைத் தாயென்றும் உவமித்துப் புலவர் பாடுகின்றனர். புராணங்களோ இன்ப மெனுஞ் சேய்க்குத் ‘திருவவதார’ப் படலங்கள் வகுக்கின்றன. புலவர் பாக்களின் உள்ளுறையையும் ‘திருவவதார’ப் படலங்களின் உள்ளுறையையும் உயிராகக் கொண்டு, மற்ற அணி களையும் வருணனைகளையும் அழகிய உடலாகக் கற்றவர் கொள்வர். உருவக அலங்காரக் கதைகளைப் பொருளாக மற்றவர் கொள்வர்.
இன்ப (ஆனந்த) மயமாயிருக்கும் ஆண்டவனே என்னை யாளுடைய முருகன். இன்பத்தில் (ஆனந்தத்தில்) ஏனைய இரண்டுமிருத்தல் இயல்பு. (சத் சித் தெனும்) சிவஞ் சத்திக்குக் (ஆனந்தமெனுங்) குகன் பிறந்த வரலாறு கூறும் புராணத்தின் நுட்பந்தேர்க.
‘சிவனே குகன் குகனே சிவன்’ என்பதை, ‘சிவ குமாரன் முருகன்’ என்று கூறப் போந்த புராணமும் புகலாமற் போக வில்லை.
‘அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள் பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய’
‘ஈச னேயவ னாடலான் மதலையா யினன்காண்
ஆசி லாவவ னறுமுகத் துண்மையா லறிநீ
பேசி லாங்கவன் பரனொடு பேதக னல்லன்
தேசு லாவகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல்’
‘ஆதலி னமது சத்தி அறுமுக னவனும் யாமும்
பேதக மன்றா னம்போல் பிரிவிலன் யாண்டு நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும்
போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்’
என்று கந்தபுராணங் கூறுதல் காண்க. இப்புராணமே,
‘ஊரி லான்குணங் குறியிலான் செயலிலா னுரைக்கும்
பேரி லானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரி லானுயிர்க் கடவுளா என்னுளே நின்றான்’
என்று முருகனை வழுத்துதலுணர்க. கந்தபுராணம் மற்றுமோ ரிடத்தில்,
‘உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல்
வலைப்படு கின்றான் போல வருந்தியே யிரங்கா நின்றான்
கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலிற் றோன்றி
அலைப்படு தன்மைத் தன்றோ அறுமுக னாட லெல்லாம்’
என்று புகல்கிறது.
புராணத்தின் திருவிளையாடல் நுட்பங்களைச் சிறிது முயன்று பார்த்தல்வேண்டும். ஞானநூலாராய்ச்சியிலார்க்குப் புராணக் கதைகள் பொய்போலத் தோன்றும். அந்நூலாராய்ச்சி உடையார் கதைகளின் உள்ளுறையை உணர்ந்து இன்ப நுகர்வர். உள்ளுறைக்கு (தத்துவார்த்தத்துக்கு) அடங்காத புராணங்களு முண்டு.
புராணம் ‘சிவனே முருகன்’ என்று கூறுவது ஒருபால் கிடக்க. ‘சிவனே முருகன் – முருகனே சிவன்’ என்று அநுபூதி மானாகிய அருணகிரிநாதருங் கூறியுள்ளனர்.
‘மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர – மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம, தெரிசன பரகதி யானாய் நமோநம, திசையினு மிசையினும் வாழ்வே நமோநம – செஞ்சொல் சேருந் – தினைபுன வனிதை மணாளா நமோநம, திரிபுர மெரிசெய்த கோவே நமோநம, ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் – தம்பிரானே’
இவ்வாறு வேறு பலவிடங்களிலும் நம் பெரியார் அருளிச் செய்துள்ள பாக்கள் பல உண்டு.
இயற்கை முதல்வனாகிய முருகன் ஆறுமுகங் கொண்டது, வேல் தாங்கியது, சூரரைத் தடிந்தது, இருமாதரை மணந்தது முதலிய வரலாறுகளிலுள்ள உண்மைகளைக் குமார தந்திரம், கந்தபுராணம், திருப்புகழ், சுப்ரமண்ய பராக்கிரமம், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பிரபந்தங்கள் முதலியவற்றிற் காண்க.
ஆறுமுகம் – பிரணவத்தோடுகூடிய அஞ்செழுத்தின் (பஞ்சாக்கரத்தின்) அறிகுறியென்றும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ் என்னும் ஆறினும் நிறைந்து நிற்கும் சிதாகாச வடிவத்தை அறிவுறுத்துவதென்றும், அறுசமயப் பொருளை விளக்குவதென்றும், வேறு பல நுட்பங்களை உளங்கொண்ட தென்றும் சொல்லப்படுதல் காணலாம். சிவஞ் சக்தி யிரண்டும் ஒன்றுபடும் சுத்த பிரமநிலையே சுப்பிரமணியம் என்று சொல்லப் படுவதிலும் அறுமுக உண்மை உண்டு. (சிவ பெருமானுக்கு ஐம்முகம். சக்திக்கு ஒருமுகம். இரண்டுஞ் சேர்ந்த ஒன்றற்கு ஆறு முகம்.) ஆறாவது முகம் அதோமுகம் என்றுஞ் சொல்லப்படு கிறது. ஐம்புலனும் ஒன்றப்பெறும் சான்றோர்பால் விளங்கும் (சித்சக்தி) ஆறாவதறிவுக்குப் பொருளாவது ‘அதோமுகம்’ என்பது. ‘அஞ்சுமுகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும்’ என்றார் நம் நக்கீரனார். அவரே திருமுருகாற்றுப்படையுள் ஆறுமுகங் களைப் பற்றி,’மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்
‘பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுகம்
ஆர்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்
காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுகம்
எஞ்சிய பொருள்களை யேமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக்
கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட்டன்றே யொரு முகம்
குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம்
மூவிரு முகனு முறைநவின் றொழுகலின்’
என்று கூறியிருத்தல் காண்க.
சூரர் – ஆணவம் கன்மம் மாயை. (சூரபன்மன் – ஆணவம்; சிங்கமுகன் – கன்மம்; தாரகன் – மாயை.) (சூரபன்மனொடு முரு கன் பொருத நுட்பம் மேலே ஓரிடத்தில் விளக்கப்பட்டிருக்கிறது) வள்ளி – இச்சாசக்தி, தெய்வயானை – கிரியா சக்தி, வேல் – ஞான சக்தி. முருகனுடைய இச்சையால், கிரியையால், ஞானத்தால் மக்களிடத்துள்ள இச்சையும், கிரியையும், ஞானமும் கூர்ந்து விளங்கவேண்டுமாதலால், அவன் முறையே மூன்றற்கும் அறி குறியாக வள்ளி தெய்வயானை வேல் என்னும் மூன்று சக்தி களையுந் தாங்கியுள்ளான். முருகனை வழிபடுவோர் மூன்றும் விளங்கப்பெறுவர். முருகன் வழிபாடு இப்பொழுது குறைவுற் றுள்ளமையால், மக்கள், இச்சை கிரியை ஞானம் விளங்கப் பெறாது, வறுமை முதலிய சிறுமைகளுக்கு அடிமைப்பட்டு இடர்ப்படுகிறார்கள். வள்ளியைக் கிரியையாகவும் தெய்வ யானையை ஞானமாகவுங் கூறும் முறை வேறொன்றுளது. இதனை, ‘கல்லகங் குடைந்த செவ்வேல் கந்தனோர் தருவ தாகி – வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப் – பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட் டன்பர் – எல்லவர் தமக்கு முத்தி யிருங்கனி யுதவு மென்றும்’ எனவருங் கந்த புராணச் செய்யுளால் உணர்க. இம்முறை ஐந்தொழிலிலும், சரியையாதி பாதங்களிலும் உறுஞ் சக்தி பேதங்களைக் கொண்டது. இவ்வேற்றுமைகளைக் குறித்து ஈண்டு மல்லாட வேண்டுவதில்லை.
இயற்கை மணமுடையான், மாறா இளமையுடையான், கடவுட்டன்மை யுடையான், அழியா அழகுடையான் முருகன்என்பதைப் புராணங்கள் ஒரு விதமாகவும், ஆகமங்கள் மற்றொரு விதமாகவும் மக்கள் அறிவு நிலைக்கேற்ற வண்ணங் கூறியிருக் கின்றன. எல்லாமாயுள்ள பொருளை எப்படிக் கூறினாலென்ன? நுட்பத்தை யுணரவேண்டுவது அறிஞர் கடன். முருகன் உண் மையைக் கதைகளாக உருவகப்படுத்தி உலகோர்க்கு அறிவுறுத் தும் புராணங்களின் உட்பொருள் தேறாது, கதைகளை மட்டும் பொருளாக் கொள்வது சில வேளைகளில் இடர் விளைப்ப தாகும்.



