
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
11. இயற்கையும் முருகனும்
(புராண முருகன் இயற்கை முருகன் – உருவ வழிபாடு – இயற்கையோ டியைந்த வாழ்வு – மலைவாழ்வு – எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை – திருஞானசம்பந்தரும் நக்கீரனாரும் இயற்கையைப் போற்றல்.)
புராண முருகன் என்றும் இயற்கை முருகன் என்றும் முருகனைப் பலபடக் கூறினால், முருகனை எப்படி எங்கே எம்முறையில் வழிபடுவது என்னும் ஐயம் சிலர்க்கு நிகழலாம். புராணத்திற் சொல்லப்படும் முருகன், இயற்கை முருகன் இயல்புகளை வடிவ மாத்திரையான் அறிவிக்கும் முருகன். புராணத்திற் சொல்லப்படும் முருகன் உருவினை முறையாக வழிபட வழிபட இயற்கை வடிவாயுள்ள முருகன் காட்சி யளிப்பன். ஓர் எல்லைக்குட்பட்ட உருவமே ‘முருகன்’ என்னும் உணர்வோடு வழிபாடு செய்வோர் இயற்கையின் அழகு தெரியாதவராய், முருகனியல்பை உணராதவராய் வாழ்வோ ராவர். ‘எங்கும் நிறைந்த அழகுப் பொருளை இவ்வுருவாக வழிபடுகிறேன்’ என்னும் எண்ணம் வழிபடுவோன் உள்ளத் தில் பதிந்து கிடத்தல் வேண்டும். ‘எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன்’ என்று அறிவு கூறினாலும், வடிவத்தை நினைந்து நினைந்து பழகியுள்ள நெஞ்சில் அப்பொருள் அடங்குவ தில்லை. ஒன்றையும் பற்றி நில்லாது அலையும் நெஞ்சை ஒன்றிற் பொருத்தி நிறுத்தும் ஆற்றல் உருவ வழிபாட்டிற்குண்டு. உருவம் முருகனியல்பை உணர்த்துவதாயிருத்தல் வேண்டுமென்பதை மட்டும் மறத்தலாகாது. பொறாமை பூசல் சீற்றம் முதலிய திரைகளை யெழுப்பி, இடர்ப்படும் மனத்தை ஒன்று படுத்துதற்கு உருவ வழிபாடு உறுகருவியாய் நிற்பது. ஆனால் ஓர் எல்லைக் குட்பட்ட உருவமே எல்லாம் என்று கொள்வோர் குறுகிய அறிவுடையோரே யாவர். அன்னார் அவ்வுருவமில்லா மற்ற இடங்களில் பழிபாவங்களைச் செய்யினும் செய்வர். என்னை? அவர்க்கு ஏனைய இடங்களில் முருகன் இல்லை என்னும் உணர்வுண்மையான் என்க.
“முருகன் இயற்கை வடிவாய் யாண்டு மிருப்பவன்’ என்னும் உணர்வோடு செய்யப்படும் உருவ வழிபாடு, நாளடை வில் மனக்கோட்டை அழித்து, இயற்கையிலுள்ள முருகைப் புலப்படுத்தாமற் போகாது. இப்புலப்பாடு அகப்புற வேற்று மையைக் களைவதாகும். இந்நிலை கைவரப்பெற்றோர் இயற்கை மணமுடையராய், மாறா இளமையுடையராய், கடவுட்டன்மை யுடையராய், அழியா அழகுடையராய்ப் பிறப்பிறப்புத் துன்ப மின்றி இன்ப வாழ்வில் திளைத்திருப்பர்.
முருகனை வழிபடல் வேண்டும் என்பதனை,
‘உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை, உரைத்திலன் பல மலர்கொடுன் னடியினை – உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன – தருள்மாறா – உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன், விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன், உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன்’
என்றும், உருவ வழிபாட்டையே பெரிதும் பொருளாகக் கோடலாகா தென்பதனை,
‘சுருதி புராணங்களாக மம்பகர், சரியை க்ரியா அண்டர் பூசைவந்தனை, துதியொடு நாடுந் தியான மொன்றையும் – முயலாதே-… துரிசற ஆநந்த வீடு கண்டிட – அருள்வாயே’
‘அறிவுமறி யாமையுங் கடந்த, அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன், அருண சரணார விந்தமென்று – அடைவேனோ’
‘அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு, மடியா ரிடைஞ்சல் – களைவோனே’
‘அறிவையறி வாலறிந்து – நிறைவாகி – அகிலபுவ னாதி யெங்கும், வெளியுறமெய்ஞ் ஞானஇன்ப, அமுதை யொழி யாதருந்த அருள்வாயே’
‘எங்கு நினைப்போர்கள் நேச சரவண’
என்றும்,
அகப்புற வேற்றுமையின்றி வாழ்தல் வேண்டுமென்ப தனை,
‘நீவே றெனா திருக்க நான்வே றெனா திருக்க, நேராக வாழ்வதற்குள் – அருள்கூர’
‘நானென்ப தற்றுயிரோ டூனென்ப தற்றுவெளி, நாதம் பரப்பிரம – ஒளிமீதே – ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தி யொடெ, நாளுங் களிக்கபதம் – அருள்வாயே’
என்றும்,
இயற்கை வழிபாட்டான் சாக்காடு ஒழிதலை,
‘இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதோர் இயற்கை யருள்வதும்’
என்றும் வருந் திருமொழிகளான் உணர்க.
இயற்கைவழி முருகனை வழிபடுவோர், கையால் கட்டப் படுங் கட்டடங்கள் எவ்வளவு பெரியனவாயினும், அவை கண்ணைக் கவரத்தக்கனவாயினும், அவற்றில் வாழ்தலாகாது. ஒருவேளை அவற்றில் வாழ நேரின், பெரும்பொழுது ஆண்டுக் கழியாதவாறு காத்துக் கொளல் வேண்டும்,
மீனுக்கு நீர் எத்தன்மைத்தோ அத்தன்மைத்து மக்களுக்குக் காற்று, காற்று மாசு கலவாததாயிருத்தல் வேண்டும். தூநறுங் காற்றை நகரங்களில் பெறுதல் அரிது. நஞ்சு கலந்த காற்று உள்ளே நுழைந்தால் மக்கள் வாணாள் சுருங்குமென்பது திண் ணம். தூநறுங் காற்றை விரும்புநர் காடடர்ந்த மலைவாழ்வை நாடிச் செல்வது நலம். மலைவாழ்வு மக்களை எவ்வாறு ஓம்பி வரும் என்பதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை.
மலைக்கண் வாழ்ந்து, மலைநிலக் கடவுளென்று சொல்லப் படும் இயற்கை முருகனை வழிபடுதல், இயற்கையோடியைந்து வாழ்வு நடாத்துவதாகும். மலையில் முறைப்படி வாழ்வு நடாத்து வோன் முருகைக் காணும் பேறுபெறுவன் என்பது உறுதி. மலையில் ஓடும் அருவி நீராடி, காலையில் செங்கதிர் பரப்பி எழும் இளஞாயிற் றொளியில் மூழ்கி, தூநறுங் காற்றில் படிந்து, உதிர்சருகு கனிகளுண்டு, மயில் குயில் மான் ஆன் இனங்களைக் கண்டுமகிழ்ந்து, ஒருத்தியொடு வாழ்ந்து, முருகனை வழிபட்டு வரும் ஒருவன் மாட்டு, எம்பெருமானது இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகும் மலர்ந்து, அவனுக்குப் பெருவாழ்வு நல்கும்,
‘பலகுன் றிலும மர்ந்த – பெருமாளே’
‘பலமலை யுடைய – பெருமாளே’
‘வடிவ தாமலை யாவையு மேவிய – தம்பிரானே’
‘குன்றுதோ றாடல்மேவு – பெருமாளே’ – திருப்புகழ்
இயற்கை வாழ்வை நேர்பட நடாத்துவோன், கடவுள் ஆணையெனும் நியதிக்கு மாறுபடாது வாழும் இயற்கை மகன் ஆகிறான். இயற்கை வடிவாய முருகனை இயற்கை வழி வழிபடும் ஒருவன், எவ்வியற்கை வடிவிற்குந் தீங்கு செய்ய நெஞ் சிலும் நினையான். இயற்கையழகின் நுட்பமுணர்ந்த அன்னான்,அழகு வடிவந் தாங்கித் துள்ளியோடும் மான் கன்றின்மீது அன்பு எய்ய ஒருப்படுவனோ? பசியமரத்தில் முருகன் அழகை மலராகப் புலப்படுத்தும் பூக்களைக் கூரிய நகத்தாற் கிள்ளத் துணிவனோ? இயற்கை இசைப்பாட்டைக் கூறுபடுத்த அவன் உள்ளம் இசை யுமோ? திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பெரியோரும் ஆண்ட வனைப் பாடும்போது, அவன் வடிவாய இயற்கையையும் உட னமைத்துப் பாடியிருப்பது நோக்கற்பாலது. சில திருப்பாடல்கள் வருமாறு :-
‘பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர் கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங் கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும்
இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
வீற்றிருக்கு மிழலை யாமே’
‘எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கள்தம்
புரமூன்று மெழிற்க ணாடி
உழுந்துருளு மளவையுனொள் ளெரிகொளவெஞ்
சிலைவளர்த்தோ னுறையுங் கோயில்
கொழுந்தரள நகைகாட்டக் கோகநக
முகங்காட்டக் குதித்து நீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வழிகாட்டு மிழலை யாமே’
‘உரைசேரு மெண்பத்து நான்குநூ
றாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா
யங்கங்கே நின்றான் கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல
நடமாட வண்டு பாட
விரைசேர்பொன் னிழிதர மென்காந்தள்
கையேற்கு மிழலை யாமே’
இயற்கைப் புலவராய நக்கீரனாரும் பழமுதிர்சோலையி லுள்ள நம் மலைகிழவோனைப் பாடும்போது, அவனது இயற்கை வடிவை,
‘பலவுடன்
வேறு பஃறுகிலி னுடங்கி யகில்சுமந்
தார முழுமுத லுருட்டி வேரற்
பூவுடை யலங்குசினை புலம்ப வேர்கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கம ழலரிறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீ இக்
கோழி வயப்பெடை இரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
றிழுமென விழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே’
என்று, அருவி – சோலை – மலையாகப் பாடியிருத்தல் காண்க.
இயற்கை, இறைவன் வடிவாதலால், அதைத் தெய்வப் புலவர் பாடிப்பாடி மகிழ்வர். இவ்வுண்மை தெளியாதார் வெறும் பாழை வெற்றுரையால் கூறுவர். இறைவன் வடிவாய இயற் கையைச் சிதைப்பது இறைவனைச் சிதைப்பதாகும். ஆதலால், ‘இயற்கைவழி முருகனை வழிபடல்’ என்பதனை, எவ்வுயிர்க்கும் எக்காரணம் பற்றியுந் தீங்கு செய்யாமை என்று சுருங்கக் கூறலாம். இயற்கை வனப்பையும், அதனால் விளையும் இன்பத்தையும் முறையே உணர்ந்து நுகர்வோர் எவ்வியற்கை வடிவிற்குத் தீங்குசெய்ய உடன்படுவர்? தீங்கு நினைவு தோன்றும் உள்ளத் தில் இயற்கை வனப்புணர்வாதல், இயற்கை இன்ப நுகர்ச்சி யாதல் உறுதல் அரிது. இயற்கை வனப்புணர்வும், அதனால் இயற்கை இன்ப நுகர்ச்சியும் உறும் உள்ளத்தில், என்றும் அன்பு அலர்ந்து அருட்டேன் பிலிற்றிக்கொண்டே யிருக்கும். இவ் வுள்ளத்தார் என்றும் இளையராய் அழகுடையராய் வாழ்வர்.



