முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்

9. பொதுநெறியும் தமிழும்


(தமிழ்நாட்டுக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பு – பழந் தமிழ்நாட்டைக் காண வழி – இல்லறம் – சமரச நோக்கு- அருணகிரி நாதரும் சமரசமும் – தமிழர் கண்டது பொதுநெறி – முருகன் எல் லார்க்கும் உரிய கடவுள் – உலக குரு வருகை – இயற்கை வழிபாட்டின் பெருக்கம் – முருகனும் தமிழனும் – தமிழ்ப் பொருள் – அருணகிரி யாரும் தமிழும்.)

தமிழ் நாட்டாரென்று சிறப்பாகக் கூறுதற்குப் பல காரணங்களுண்டு. அவைகளுள் ஈண்டு இரண்டொன்று குறிக்கிறேன். இயற்கையிலுள்ள முருகை முதல் முதல் கண்டவர் தமிழ் நாட்டார். முருகனுக்குரிய செவ்வாய்க் கோளுக்குந் தமிழ் நாட்டுக்குந் தொடர்பு உண்டு. முருகனுண்மை கண்டு, இயற்கை வாழ்வு செலுத்தி, நோன்பு காத்து, அழியாப் பேறு பெற்ற சித்தர்கள் வாழ்ந்த நாடு நமது தமிழ்நாடு. முருகன் நோன்பும், வழிபாடும், பிறவும் இன்னும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவைகளின் முறைப்பாடுகள் இந்நாளில் குலைந்துவிட்டன. நோன்பையும் வழிபாட்டையும் ஒழுங்குபட நிகழ்த்தினால், மீண்டும் பழந் தமிழ்நாட்டைக் காணலாம்; சித்தர்களைக் காணலாம். பண்டைநாளில் தமிழ் நாட்டி னின்றும் மக்கள் வாழ்வுக்குரிய அன்புத் துறைகள் உலகில் பரவியதுபோல இந்நாளிலும் பரவும். இப்பொழுது உலகிற்கு வேண்டற்பாலன நோன்பும் இயற்கை வழிபாடும். இவைகளை மீண்டும் உலகில் உயிர்ப்பிக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளல் வேண்டும். ஆதலின், தமிழ்நாட்டிற் பிறந்த ஒவ்வோர் ஆண்மகனும் பெண்மகளும் இல்லறமேற்று, முருகனை வழிபட்டு, சான்றோரை ஈன்று, உலகை உய்விக்கக் கடமைப் படல் வேண்டும். ‘பிள்ளைகள்’ என்று, என்பு தோல் போர்த்த கூடுகளைப் பெறுவதால் என்ன பயன்? பிள்ளைகள்பால் முருகெனும் அழகு ஒழுகல் வேண்டும்.

முருகன் வழிபாட்டிற்கு இல்லறம் இன்றியமையாதது. இல்லறம் என்பது இயற்கையறம். இவ்வறம் இழிவான சிற்றின்ப நிறைவேற்றலுக்கு ஏற்பட்டது என்று நினைப்பது அறியாமைஇல்லறம், இளமை அழகு முதலியவற்றைக் காத்து, மக்கட்பேறு நல்கி, கடவுட்டன்மை எய்துதற்கு, இயற்கையில் இயல்பாக அமைந்துகிடக்கும் நல்லறம். இவ்வறத்துக்குரிய பெண்தெய் வத்தைப் பேயாகக் கருதுவது கொடுமை கொடுமை என்று மேலே சொன்னதை மீண்டுஞ் சொல்லி வலி யுறுத்துகிறேன். பெண்ணோடு கூடி வாழ்ந்து, முருகனுக்குரிய நோன்பு வழிபாடு களை முறைப்படி நிகழ்த்தி, முருகனிடத்து உறுதியை வளர்த்துப் பிணி மூப்புச் சாக்காட்டைத் தொலைக்க முயல்வது அறி வுடைமை.

எம்பெருமான் முருகன், தமிழ் நாட்டவரால் முதல் முதல் காணப்பட்ட இறைவனாயினும், அவன் எல்லா உலகங்களையும் நடாத்தும் ஆண்டவனா யிருக்கிறான். அவனது நோன்பும் வழி பாடும் எல்லார்க்குமுரியன. அவனை அவ்வந்நாட்டார் அவ்வந் நாட்டு மொழியில் பலபெயரிட்டு வழிபடுகிறார். அப்பெயர்ப் பொருளை ஆய்ந்து பார்த்தால், அது தமிழில் முருகன் என்னுஞ் சொல்லுக்குரிய பொருளாகவே பெரிதும் முடியும்.

சமரச உணர்வில்லாச் சமயபேத நாட்டமுடையார் முருக னுண்மை காண்டலரிது. முருகனைத் தொழுவோர், ‘முருகன் எல்லாச் சமயத்தவர்க்கும் உரிய கடவுள்’ என்னும் பொது உணர்வு பெற்றவரா யிருத்தல்வேண்டும். ‘கடவுளர் பலர்; சம யங்கள் பல’ என்னும் வேற்றுமை உணர்வு அவர்க்கு இருத்தல் கூடாது. வேற்றுமை உணர்வு உள்ளமட்டும் முருகனை அறிதல் இயலாது. வாதங்களையும் பேதங்களையும் கடந்து நிற்பது முரு கெனுஞ் செம்பொருள். சமயப் போரிடுதல், பொறாமை பகைமை காழ்ப்பு முதலிய பேய்களை வழிபடுவதாகும். இவ் வழிபாடு, அன்புக் கடவுள் உண்மையை விளங்கச் செய்யாது. கடவுளுண்மை விளங்கப் பெற்றோர் ஒருசமய உணர்வு அதா வது அன்பு நெறி உணர்வு விளங்கப்பெறுவர். இப்பேறு பெற்ற வர்க்குச் சமய வாதமும் சமய பேதமும் கடவுள் உண்மையை மறுப்பதுபோலத் தோன்றும். உலகிலுள்ள பலதிறச் சிறுமை களில் தலையாயது பல சமய உணர்வுகொண்டு, சமயப் போரிடு வது என்று தெளிக. ‘பன்முகச் சமயநெறி படைத்தவரும் யாங் களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படி றரும்’ என்றார் தாயுமான சுவாமிகள். ஆதலால், முருகன் அடியார்க்குச் சமய வாதமாதல் சமய பேதமாதல் இல்லை என்க. முருகன் அருள் பெற்று உண்மை கண்ட அருணகிரியார் சமயவாதபேதங்களை மறுத்து உலகிற்கு உய்யுநெறி காட்டு கிறார். அவர்தந் திருவருண் மொழிகளுட் சிலவருமாறு :-“சமய பேதத்தவர்க் கணுகொணா மெய்ப்பொருள்”

“கலகலென மிக்க நூல்க – ளதனாலே – சிலுகிஎதிர் குத்தி வாது செய்யுமொரு வர்க்குநீதி, தெரிவரிய சித்தியான – உப தேசம் – தெரிதர விளக்கிஞான தரிசன மளித்து வீறு, திருவடி எனக்கு நேர்வ தொருநாளே’

‘சமய விரோத சாங்கலை வாரிதியை’

‘குவலயங் கற்றுக் கத்தி யிளைக்கும், சமயசங் கத்தைத் தப்பி யிருக்கும் குணமடைந் துட்பட் டொக்க இருக்கும் – படிபா ராய்’

‘தத்வம், பலவையுங் கற்றுத் தர்க்கமதத்வம் பழியாதே’

‘கலைமேவு ஞானப் பிரகாசக் – கடலாடி – ஆசைக் கட லேறி, பலமாய வாதிற் பிறழாதே – பதிஞான வாழ்வைத் தருவாயே’

அருணகிரிநாதர் மற்றுமோரிடத்தில், ‘கும்பகோணமோ டாரூர் சிதம்பரம்’ என்னுந் திருப்புகழின் இறுதியில், “உல கெங்கு மேவிய தேவாலயந் தொறு பெருமாளே’ என்று திருவாய்மலர்ந்திருக்கிறார். இச்சமரசமுடையாரே முருகனடி யாராவர்.

பழந்தமிழர் கடைப்பிடித்த நெறி உலகிலுள்ள எல் லார்க்கும் உரியது; பொதுவானது. அந்நெறி மீண்டுந் தமிழ் நாட்டில் உயிர்பெறல் வேண்டும். இப்பொழுது ஆன்றோர் அருளிய நூல்களில் அந்நெறி திகழ்கிறதன்றி, மக்கள் வாழ்வில் அஃது ஊடுருவி நிற்கவில்லை. உலகிற்குத் தமிழ்நாடு வழி காட்ட வேண்டுமேல், பழைய பொதுநெறியுணர்வை, முதலில் தான் பெறல் வேண்டும். இடையிடையே பலதிறச் சிறுமைக் கொள்கைகளும் பிற இழிவுகளும் தமிழ்நாட்டில் புகுந்து, அதன் இயற்கைப் பொதுநெறிக்குக் கேடுவிளைத்தன; விளைக்கின்றன. இளமையும் மணமும் கடவுட்டன்மையும் அழகும் உடையதாய் இயற்கையை உடலாக்கொண்டதாயுள்ள ஒரு பொருள் எவர்க்கு உரியது? எவர்க்கு உரியதாகாது? அஃது எல்லார்க்கும் உரியது. அப்பொருளை உணர்த்தும் இயற்கை வழிபாடும் எல்லாருங் கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் கண்ட பொதுநெறி இதுவே.

முருகன் என்பது கடவுளைக் குறிக்குந் தமிழ்ச்சொல். இயற்கை என்பதுந் தமிழ்ச் சொல். இவ்விரண்டும் அவ்வந் நாட்டு மொழிகளால் பல பெயர் பெற்றிருக்கின்றன. மொழி வேற்றுமைகொண்டு போரிடுவது அறிவன்று. மொழி வேற் றுமை கருதாது, மொழிப் பொருளைக் கருதுவது அறிவுக்கழகு. தமிழ்மக்கள் கண்ட அழகுப் பொருளும், அதை அடைதற்குரியஇயற்கைச் செந்நெறியும் எம்மொழிப் பெயரால் வழங்கப்பட்டா லென்ன? ஆண்டவன் ஒருவன் என்பதும், அவன் இளமை மணம் இறைமை அழகு உடையவனா யிருக்கிறான் என்பதும், அவ் வாண்டவனை அடைதற்குரிய நெறி இயற்கைச் செந்நெறி என்ப துமே கொள்ளற்பாலன. இப் பொதுக்கொள்கையைப் பரப்ப வேண்டுவது தமிழ் மக்கள் கடமை. தமிழ் மக்கள் தங்கள் கடனை யாற்றினும் ஆற்றுக; ஆற்றாதொழியினும் ஒழிக. உலகில் பல விடங்களில் பொதுநெறி பரவ, ஆண்டவன் அருளெனும் இயற்கை துணைபுரிந்து வருகிறது. பொதுநெறியில் நீண்ட நாளாக நின்று ஒழுகிவந்த தமிழ்மக்களது வழித்தோன்றல்களின் முயற்சியும் கூட்டுறவும் இயற்கையுடன் கலப்பின், அந்நெறி விரைவில் ஆக்கமுறும். இக்கருத்துக் கொண்டே ‘தமிழ்மக்கள் கடமை கடமை’ என்று அடிக்கடி வலியுறுத்துகிறேன்.

முருகனைப் பின்னே வந்த ஆசிரியரும் ஏற்று வழி பட லாயினர். அவர்தம் வடமொழி மறை முடிவு ‘சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம்’ என்று முருகனை மும்முறை போற்றியிருத்தல் காண்க. இடைக் காலத்தில் தமிழ் மக்கள் முருகனைச் சிவமாக்கொண்டு போற்றும், ஒரு நெறி பற்றி னார்கள். அற்றைஞான் றெழுந்த தமிழ்மறையும் ‘சமர சூரபன் மாவைத் தடிந்தவேல் – குமரன்’ என்றும், ‘நஞ்செந்தில் மேய வள்ளி மணாளன்’ என்றும், ‘நன்கடம்பனை’ என்றும் முருகனைச் சிறப்பித்திருக்கிறது.

எம்பெருமான் அருள்பெற்ற மெய்யடியார் கால தேச வர்த்தமானத்துக்கேற்றபடி ஆங்காங்கே குருமாராகத் தோன்றி அறநெறி வளர்த்துவந்தனர்; வருகின்றனர். முருகன் கூறெனச் சொல்லப்படும் சனத்குமாரரை ஒரு பெருங் குருவாகத் தியோசா பிகல் சங்கத்தார் கொண்டிருப்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. எம்பெருமான் அருள்பெற்ற மெய்யடியார் ஒருவர் எல்லாச் சமயத்தவரும் போற்றுஞ் சமரசஞான குருவாகத் தோன்றப் போவதுண்மை. அவர் தமிழ்நாட்டிலேயே தோன்றப்போகிறார். உலக குருவாகக் கடவுளே வாரார். அவர் அருள்பெற்ற மெய் யடியவரே குருமாராக வருவது வழக்கம். அக்குருமாரை முழு முதற் பொருளாகவுஞ் சிலர் கொள்கிறார். ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்பது கந்தரநுபூதி. முருகை முறைப்படி போற்றி முருகரான சித்தர் பலருளர். சித்தரைக் கடவுளரென் றும் பலர் போற்றுகிறார். உலகுய்யப் பலவிடங்களில் தோன்றி யவர் அச்சித்தர் கூட்டத்தவரே யாவர்.

முருகனுக்குரிய இயற்கை வழிபாடும் யாண்டும் பெருகி வருகிறது. இப்பொழுது மேல்நாட்டறிஞரிடை ஒரு புத்துணர்வு பிறந்திருக்கிறது. நோயிலா வாழ்வு பெறல்வேண்டு மென்றும், உடலில் இளமை அழகு நெகிழா வண்ணங் காத்து வரல் வேண்டுமென்றும், அதற்கு இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தல் வேண்டுமென்றும், கவலையீனத்தால் நோய் நேரினும் மருந்துண்ணாது இயற்கைவழி நின்று நோய் போக்கல் வேண்டு மென்றும் ஆங்கு ஓருணர்வு தோன்றியிருக்கிறது. இவ்வுணர்வு, பழந்தமிழர் கொண்ட இயற்கை வழிபாட்டை ஒருவாறு குறிப்ப தாகும். ஆதலின், இந்நாளில் சிறப்பாக முருகனுக்குரிய இயற்கை வழிபாட்டிலும் நோன்பு முதலியவற்றிலும் தமிழ்மக்கள் மெய் யன்பு செலுத்தி வருவார்களாக.

முருகன் எல்லா மொழிகட்குமுரிய இறைவன். ஆயினும், அவனது வடிவாகிய இயற்கையின் இனிமையே தமிழ் என்னும் ஒரு மொழியாக நிலவுகிறது. இம்மொழியால் அவனைப் போற்றுவதும் பாடுவதுஞ் சிறப்புடைமையாகும். பண்டைத் தமிழர் இயற்கைவாழ்விலேயே தோய்ந்து கிடந்தவர். அவர் கண்டு கேட்டு உண்டு உற்று உயிர்த்தவெல்லாம் இயற்கையே. இயற்கை நடுவண் அவர்தம் வாழ்வு தழைத்துநின்றது. இவ் வாழ்வுடையார்க்கு இனிமையூட்டுவது எதுவாயிருக்கும்?

இயற்கை அவர்க்கு இனிமையூட்டியிருக்கும். அந்நாளில் இனிமை என்பது ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று வழங்கப்பட்டு வந்தது. இயற்கை இனிமையைத் ‘தமிழ்’ என்று கொண்ட அப்பழைய மக்களிடை, இயற்கைப் பொருள் வேற்றுமை குறிக்கவும், வேறு பல வாழ்வுத் துறை குறிக்கவுஞ் சொற்கள் அரும்பியபோது, அவர்கள் அச்சொற்கட்கும், அச்சொற்களாலாகிய மொழிக் கும், இயற்கை இனிமையைத் ‘தமிழ்’ என்று தாங்கள் வழங்கி வந்த வழக்கை யொட்டியே ‘தமிழ்’ என்னும் பெயர் சூட்டியிருப் பார்கள். ‘தமிழ் தழீஇய சாயலவர்’ என வரூஉஞ் சிந்தாமணிப் பாட்டுக்கு, ‘இனிமை தழுவிய சாயலுடையார்’ என்று நச்சி னார்க்கினியர் தமிழுக்கு இனிமைப் பொருள் கண்டிருத்தலை யோர்க. ‘தேனுறை தமிழும்…’ என்று கல்லாடனாரும், ‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும்…’ என்று கம்பரும் ‘தமிழ்’ என்பதை இனிமைப் பொருளில் அமைத்தோதியிருத்தல் காண்க.

இயற்கை, முருகன் உடல். இயற்கைத் தமிழை (இனி மையை) என்னென்று சொல்வது? இயற்கை முருகனைத் தமிழ் முருகன் என்று கூறல் பொருந்தும். ஆகவே, முருகனுக்குந்தமிழுக்குமுள்ள தொடர்பு கூர்த்த மதியால் உன்னத்தக்கது. தமிழ் முருகனைத் தமிழாலன்றோ போற்றுதல் வேண்டும்? ஏத்துதல் வேண்டும்? பாடுதல்வேண்டும்? முருகனடியார் பலர் முருகனைத் தமிழ்ப் பாமாலையால் அணி செய்து செய்து அன்பால் குழைந்து குழைந்துருகினர். இரும்பு நெஞ்சைக் குழைக்குந் தன்மையும், வெம்மையுளத்தைத் தணிக்குந் தண்மையும் இன்பத் தமிழுக்கு உண்டு.

முருகனடியாராகிய அருணகிரியார் வடமொழிப் புலமை யுமுடையார். அவர் திருப்பாக்களில் வடமொழி மலியாத இட மில்லை. அவர் திருப்பாட்டைத் தென்மொழியும் வடமொழி யும் பாலும் பழமும் போல் இனிமை செய்கின்றன. வடமொழி மணிகள் ஏராளமாகக் கொழிக்கத் தமிழ்மழை பொழிந்த அருணகிரிப் புயலும், ஆங்காங்கே தமிழைப் பற்பல விதமாகச் சிறப்பித்துப் போற்றி யிருத்தலின், அன்னார் உட்கிடக்கையைத் தேர்வோமாக.

‘அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்தியுனை
அன்பொடு துதிக்க மனம் – அருள்வாயே’


‘செந்தமிழ்சொல் மாலைக் கார’


‘செந்தில்வாழ் செந்தமிழ்ப் – பெருமாளே’


‘வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர – முருகோனே’


‘பலபல பைம்பொற் பதக்க மாரமும், அடிமை சொலுஞ் சொற் றமிழ்ப் பனீரொடு, பரிமள மிஞ்சக் கடப்பமாலையும் – அணிவோனே’


‘காவி யத்துறைக ளுணர்வோர் படித்ததமிழ், செவியார வைத்தருளு – முருகோனே’
‘உலகில் – பலபாஷை – திக்கித்திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபோய்ச், செற்றைச் சட்டைக் குடிலைச் – சுமை பேணும் – சிக்கற்றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப் புகலப் – பெறுவேனோ’


“முதிய மாதமி ழிசைய தாகவே, மொழிசெய்தே நினைந் – திடுமாறு’


‘தண்டமிழில் மிகுநேய – முருகேசா’


‘சரணாரவிந்தமதுபாட, வண்டமிழ்விநோதம் – அருள்வாயே’


‘தமிழிற்பாடல் கேட்டருள் – பெருமாளே’


‘முத்தமிழ் வாணரோது, சித்திர ஞானபாதம் – அருள் வாயே’


‘முத்தமிழ் வித்வ விநோதா’

‘தூயவர் கதித்த முத்தமிழ் மாலா யோதிய, செழிப்பை – நத்திய சீலா’


‘செஞ்சொல்சேர் சித்ரத் – தமிழாலுன் – செம்பொனார் வத்தைப் – பெறுவேனோ’


‘கனத்த செந்தமி ழால்நினை யேதின, நினைக்க வுந்தரு வாயுன தாரருள்’


‘எழிற் மலத் திணைக்கழலைத், தமிழ்ச்சுவையிட் டிறப் பறஎய்த், திடக்கருணைத் றத்தெனைவைத் – தருள்வாயே’


‘செகதல மீதிற் பகர்தமிழ் பாடற், செழுமறை சேர்பொற் – புயநாதா’


‘தமிழால் உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் – புரிவாயே’


‘சித்ரத் தமிழ்கொடு, கவி மெத்தச் செப்பிப் பழுதற, எழுதிக்கற் பித்துத் திரிபவர் – பெருவாழ்வே’


‘செந்தமிழ் நூலோன் குமரன்குகன்’

‘மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமி ழால், வைதா ரையும் அங்கு வாழவைப்போன்’ என்று அருணகிரியார் தமது தமிழ்மறைக்கண் ஓதியிருக்கு மாற்றானறிக. ‘முத்தமிழால், வைதாரையும் அங்கு வாழவைப் போன்’ என்னுந் திருவாக்கால் தமிழுக்கும் முருகனுக்குமுள்ள இயைபு நன்கு விளங்குதல் காண்க.

தமிழ்மொழி பேசும் அன்பர்களே! உங்களுக்கும் முரு கனுக்குமுள்ள தொடர்பை உன்னுங்கள்; உங்கள் மொழியின் மாண்பை உணருங்கள்; இவ்வினிய மொழியால் முருகனைப் பாட்டால் பாடி மகிழ எழுங்கள்; இயற்கையில் முருகு தமி ழாய்ப் பொலிவதைப் பாருங்கள்; இன்பம் நுகருங்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *