
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
7. அருணகிரியாரும் பெண்ணுலகும்
(அருணகிரியார் – மக்களும் பிழைபாடும் – பிழை பாட்டை உணர்வோர் பெறுவது – விடுதலைக்குத் திறவு – கிறிஸ்து – மாணிக்க வாசகர் – துறவொழுக்கமும் அருணகிரியாரும் – அருணகிரியாரும் அழகும் – அருணகிரியாரும் பெண்ணுலகும் – விலைமாதரையே அருணகிரியார் தூற்றியது – அருணகிரியார் பெண்ணுலகைத் தூற்றவில்லை – பெண்ணாசையைக் கடிதல் பெண்ணைக் கடித லாகாது – அருணகிரியார் பெண்ணுலகைப்பற்றிக் கொண்ட கருத்து – அருணகிரியார் நோய் போக்கிக்கொண்ட முறை அருணகிரியார் முன்னிலை பின்னிலை – அருணகிரியாரும் முருகனும் -பெண் மக்களுங் கடவுளும் – பெண்ணை வெறுத்தல் துறவாகாது – பெண்மை தாய்மை இறைமை – திருப்புகழ்ச் சிறப்பு.)
அருணகிரிநாதர் இளமையில் பெண்ணுலகின் பெருமை அறியாது, அதை இழிந்த காம உலகமாகக் கொண்டு, அந் நெருப்பில் வீழ்ந்தார். பெண்ணின்பாலுள்ள இறைமை கரு தாது, பெண்ணைக் காமக்கூடாகக் கருதி வீழ்வோர் பின்னை அடையும் பேறென்னை? சொல்லலும் வேண்டுமோ? அன்னார் வெம்மை மேலீட்டான் பலதிறக் கொடுங் கொடும் நோய்களால் பீடிக்கப்பட்டு இடர்ப்படுவர். அவர் உறுப்புக்களை யெல்லாம் வெம்மை எரிக்கும். தம்மை விட்டு நீங்கா எரியிடை நின்று அவர் தவிப்போராவர். அவர்க்கு உணவுண்டோ? உறக்கம் உண்டோ? என்ன இன்பம் உண்டு? நிரையத் துன்பமன்றோ அவர் அடை வது? பெண்ணைக் காமக் கூடாகக் கருதிய பயன் இஃதேயாகும். நம் அருணகிரிநாதரின் முன்னைய வாழ்வு இவ்வாறாக முடிந்தது. ஆனால் அருணகிரிநாதர் இறுதிவரை காம எரியால் எரிந்து கரிந்து நீறானாரில்லை. காம எரி தணிக்கும் தண்புனல் அவர்க்குப் புலனாயிற்று. அதனால் அவர் உய்ந்தார்.
அருணகிரிநாதர் தமது இளமையைச் செயற்கை வெம்மைக்கு இரையாக்கித் தொழுநோய் (குட்டம்) முதலிய நோய்களால் பீடிக்கப்பெற்றுச் சாக்காடடையும் நிலையெய்திய ஞான்று, முருகனை வழிபடும் இயற்கைச் செம்மைநெறி பற்றும்பேறு அவர்க்குக் கிடைத்தது. அப்பேறு, பிணிமூப்பு சாக்காடெய்தா அநுபூதி நிலையை அவர்க்குக் கூட்டிற்று. அப்பெரியார்தம்பாலுற்ற நிகழ்ச்சிகளைக் கல்லையும் மண்ணையும் உருக்கத் தக்க செந்தமிழ் வண்ணப் பாக்களால் பாடி நமக்குதவி யுள்ளார். தம்மை யடைந்த தொழுநோய் அதாவது குட்டம் முதலிய நோய் கட்கு அவர் மருந்துண்டாரில்லை. இயற்கை வடிவாய முரு கனைப் போற்றியே அவர் அந்நோய்களைப் போக்கினர். நோயிலா ஒன்றைக் கருதும் நெஞ்சம், நோயை யழித்து, நோயிலா வாழ்வையே யளிக்கும்.
அருணகிரிநாதர், தாம் காம வெம்மைக் குழியில் வீழ்ந்து, பலதிற நோய்களால் பீடிக்கப்பட்டதை முன்னிட்டு, முருகனை நோக்கி நிகழ்த்திய முறையீடுகள் பலப்பல. அவைகளில் இரண்டொன்று வருமாறு :-
. . . . . . மங்கையோரால்
துன்பமு டங்கவழி நோய்சி ரங்கொடு
சீபுழு வுஞ்சல மோடி றங்கிய
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
சூலைமி குந்திட வேப றந்துடல்
துஞ்சிய மன்பதி யேபு குந்துயர்
ஆவி விடும்படி சீர்ப தம்பெறு விஞ்சை தாராய்’
‘வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
மாவலிவி யாதி குன்ம மொடுகாசம்
வாயுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
மாதர்தரு பூஷ ணங்க ளெனவாகும்
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
பாயலைவி டாது மங்க இவையால்நின்
பாதமல ரான திண்க ணேயமற வேம றந்து
பாவமது பான முண்டு வெறிமூடி
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
ஈனமிகு சாதி யின்க ணதிலேயான்
ஈடழிதலான தின்பின் மூடனென வோது முன்புன்
ஈரஅருள் கூர வந்து எனையாள்வாய்’
அருணகிரியார் குட்டம் முதலிய நோய்களானும் பீடிக்கப் பட்டார் என்று தெரிகிறது . இதனை,
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்தம்
எரிவ ழங்கு வெப்பு வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கும் இவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு மடியாதே
மருவி யின்றெ னக்கு மாக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி தரவேணும்’
எனவரூஉந் திருத்தணிகைத் திருப்புகழான் அறிக.
அருணகிரி அடிகள், தாம் பெண்ணைக் காமப் பொரு ளாகக் கருதி, நிகழ்த்திய பிழைபாட்டை உணர்ந்து, கழிவிரக்கங் கொண்டு, அதைப் பொறுத்தருளுமாறு முருகனை நோக்கி,
— பரத்தையர் மோகம்
* * *
பொறுத்தருளிச் சடக்கெனஅப்
புறத்திலழைத் திருத்தியளித் திடுவாயே’
என்று வேண்டியிருத்தல் காண்க.
மற்றோரிடத்தில் அருணகிரிநாதர் ஐயன் பொறையை வியந்து பாராட்டுகிறார்.
‘கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழனியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் திலும்வேலும்
கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழல்வேனைப்
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப்
பொழுதும் வந்திக்கைக் கற்ற எனைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் றுளதோதான்’
மக்கள் என்றும் ஏதாயினும் பிழை நிகழ்த்தும் பான்மை யினர்கள். பிழை ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு விதமாக நிக ழும். பிழைபாட்டினின்றும் மக்கள் முற்றும் விடுதலை யடைதல் அரிது. பிழைபாடு வளர்ந்து கொண்டே சென்றால் முடிவு என்ன ஆகும்?
ஆண்டவன் திருவருள் மக்கள் உள்ளத்தில் பதியுமட்டும் மக்கள் தவறிழைத்தல் நில்லாது. அதனால் துன்பமும் வளர்ந்து கொண்டே போகும். துன்ப வளர்ச்சியை மறிக்க வழியுண்டு.
மறவினை நிகழ்த்தி வழுக்கி வீழ்ந்து வீழ்ந்து, அதன் பயனாகத் துன்பத்தில் இடர்ப்படுதலினின்றும், விடுதலை யடைய விரும்பாத மக்களில்லை. ஆனால் விருப்பத்தை வினையி லாற்றி முடிவுகாண மக்கள் பெரிதும் முயல்கிறார்களில்லை.
துன்பம் மிக மிக, மக்கள் முயற்சியில் தலைப்படுவார்கள். ‘அந்தோ! அறியாமையால் இவ்வினை புரிந்தோம்! அதன் பய னாக இத்துன்பம் நிகழ்ந்தது; நாம் ஏன் மறவினை நிகழ்த்தல் வேண்டும்? ஏன் இயற்கைக்கு மாறுபட்டு நடாத்தல் வேண்டும்?’ என்று கடந்த நிகழ்ச்சிகள்மீது மக்கட்குக் கழிவிரக்கந் தோன்றும். இத்தோற்றுவாயே விடுதலைக்குத் திறவு தேடுவதாகும். முன்னே நிகழ்த்திய பிழைகுறித்து வருந்த வருந்த மகனுக்கு அழுகை பெருகும். உண்மையாக வருந்தி அழும் ஒருவன், மீண்டும் பழம் பிழையைப் புதுக்க எண்ணுவனோ? மகனது உண்மை அழு கையைக் கண்டு, அன்னையினுஞ் சிறந்த ஆண்டவன் வாளா கிடப்பனோ? ஆண்டவன் திருவருள், மகன் துன்பந் தீர்க்கும் மருந்தாகும். துன்பத்தில் வீழ்ந்து இடர்ப்பட்ட மகன், ஆண்ட வன் திருவருளை எப்படிப் பற்றிக்கொள்வான் என்று சொல்ல வேண்டுவதில்லை. கடலில் அமிழும் ஒருவனுக்குத் தோணி கிட்டினால், அவன் எத்தகை மகிழ்வெய்துவன்? அதனினும் பன்மடங்கு மகிழ்ச்சி, பிறவிக்கடலில் அமிழும் மகனுக்குத் திருவருள் தெப்பங் கிடைக்கும்போது உண்டாகுமன்றோ? பின்னை மகன் அப்புணை பிடித்து இன்பக்கரை நண்ணுவன். ஆதலால், தாங்கள் நிகழ்த்திய பிழையைப் பொறுத்தருளு மாறும், இனிக் குற்றம் தங்கள்பால் நிகழாதவாறு தங்களைக் காத்துக்கொள்ளும் ஆற்றல் தங்கட்கு அருளுமாறும், மக்கள் அருட்கடவுளை நோக்கி, வருந்தி வருந்திக் கசிந்து கசிந்துருகிக் கண்ணீர்விட்டழும் அழுகை, அவர்கட்கு உய்யுநெறி காட்டு மென்க. இத்திருவருண் நெறியை உலகுக்கு அறிவுறுத்திய கிறிஸ்து, மாணிக்கவாசகனார் முதலிய பெரியோர்களை ஈண்டு வணங்குகிறேன்.
அருணகிரிநாதர் கடவுளை மறந்து பற்பல கொடுஞ் செயல் நிகழ்த்தினார்; பின்னை அவர் அச்செயல்குறித்து வருந்தி முருகனை நோக்கி முறையிட்டுக் கசிந்து கசிந்துருகினார்; முருகன் அருள் பெற்றார். ஆண்டவன் இருப்பது எற்றுக்கு? மக் கள், தங்கள் பிழைபாடுணர்ந்து வருந்தித் தன்னைக் கூவி யழைக்கும்போது ஓடிவந்து அவர்களைக் காக்கவன்றோ ஆண்டவனிருக்கிறான்? மக்கள் தங்கள் பிழைபாடு குறித்துக் கசிந்துருகுவது மட்டும் உண்மையதா யிருத்தல்வேண்டும். கசிவு உண்மையா போலியா என்பது ஆண்டவனுக்குத் தெரியும். எங்குமுள்ள ஆண்டவனை ஏமாற்றல் எவராலும் முடியாது.
அருணகிரியார், தங்குறையுணர்ந்து, அதை மன்னித்தருளு மாறு குறையிலா நிறைவாக உள்ள முருகனை நோக்கி, அழுது முறையிட்ட பாக்கள் ஆயிரம்! ஆயிரம்!
அவைகளுள் சிலவருமாறு :-
புரைபடுஞ் செற்றக் குற்ற மனத்தன்
தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குங் துரிசாளன்…
பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின்…
கரையறுஞ் சித்ரச் சொற்றமிழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங்…
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ’…
‘புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாவி
பொறையி லாத கோபீகன் முழுமூடன்…
புகழி லாத மாமூகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடு போய்வீழு மதிசூதன்…
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி குலபாதன்…
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி யருள்வாயே’…
‘அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சுபூதம்…
அடைசிய சடவனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத…
கவடனை விகடனை நானா விகாரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பிவீழுங்…
களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ தெந்தநாளோ’…
‘அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
சன்பிலன் துன்பவன் புகழ்வாரா…
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
தங்குமிங் குந்திரிந் திரைதேடுஞ்…
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந் தருவாயார்…
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
தண்டையம் பங்கயம் புகழ்வேனோ’…
‘ஆசார வீன னறிவிலி கோபா பராதி யவகுணன்
ஆகாத நீச னநுசிதன் விபரீதன்…
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவசன்
ஆகாச நீர்ம ணனல்வளி யுருமாறி…
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென நினையாமல்…
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய நினைவாயே’…
‘மதியணுவி லாத கோபி குருநெறியி லாத பாவி
மனநிலை நிலாத பேயன் அவமாயை…
வகையதுவி டாத பேடி தவநினைவி லாத மோடி
வரும்வகையி தேது காய மெனநாடும்…
விதியிலிபொ லாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூள னெனைநீயும்…
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
மிகுமுன துரூப தான மருள்வாயே:’…
‘எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் விளைவாகி…
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் வெறிபோல…
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா யழியாதே…
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ தருள்தாராய்…
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிருதா ளருள்வோனே’…
தமது வேண்டுகோளுக்கிரங்கி முருகன் ஆண்டருளியதை,
‘ஏகாப்பழி பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
ஈடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே’…
‘அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை, அருள் போற்றும் வண்மை – தரும் வாழ்வே’
‘… விலைமாதர் … கண்ணழிவு வைத்த புத்தி, ஷண்முக நினைக்க வைத்த, – கன்மவச மெப்ப டிக்கு – மறவேனே’
‘கருணை யடியரொ டருணையி லொருவிசை, சுருதி புடைதர வருமிரு பரிபுர, கமல மலரடி கனவிலு நனவிலு – மறவேனே’
‘வயிலி நகரில் அருள்பெற மயில்மிசை, உதவு பரிமள மதுகர வெகுவித, வனச மலரடி கனவிலு நனவிலு – மறவேனே’
‘அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமும் – மறவேனே’
‘கதிபெற்றிட நோக்கிய பார்வையும் – மறவேனே’
‘எனது தலையிற் பதங்கள் – அருள்வோனே’
என்று அடியவர் பெருமான் நன்றியோடு போற்றல் காண்க.
அருணகிரிநாதர் திருப்புகழை நன்கு ஆராய்ந்தால், முருகனைப்பற்றிய பல உண்மைகள் பெறலாம். ‘பேதபேதமொ டுலகாய் வளர்வது’ என்று அவர் உலகிற்கு அறிவுறுத்திய ஒரு மெய்யுரையை ஈண்டுக் குறித்தல் சாலும். உலகாய் அதாவது இயற்கையாய் வளரும் பொருளை உணர முயலாது, இயற்கை இன்பங்களைத் துறந்து, ‘யோகிகள்’ என்றும், ‘சந்நியாசிகள்’ என்றுஞ் சிலர் திரிவதை அருணகிரியார் பல இடங்களில் மறுத்து வெறுக்கிறார்.
‘அனித்த மான ஊனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு ஓடாத வகைசாதித் …
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல்’
எனவும்,
‘காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் தடுமாறிக்…
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் திரியாதே’…
எனவும் வருந் திருமொழிகளை ஓர்க.
அருணகிரிநாதர் இத்தகைப் போலித் துறவொழுக்கம் பூண்டாரில்லை. அவர் உலகைவிடுத்து ஓடினாரில்லை. ஆனால் அவர் உண்மைத் துறவொழுக்கம் பூண்டார். உண்மைத் துறவா வது, உளத்திலுள்ள அழுக்காறு அவா வெகுளி முதலிய பேய் களையோட்டி, அவ்விடத்தில் அன்புக் கடவுளை எழுந்தருளச் செய்து, உலகை முருகெனக் கொண்டு, அருள் வாழ்வு நடாத்துவது. அருணகிரியார் அருள் வாழ்வு பெற்று, இயற்கையின் உள் ளுறையாக உள்ள முருகெனும் அழகை உணரும் பேறுபெற்றார். அவர் இப்பேறு பெற்றது, பலவிடங்களில் முருகனை அழகெனப் போற்றியதால் தெரிகிறது.
‘அழகான மேனிதாங்கிய வேளே’
‘திருக்கைவேல் அழகிய பெருமாளே’
‘முதுமலை அழக குருநாதா’
‘புதுமாமயில் மீதணை யாவரும் அழகோனே’
‘சிவஞானப் பொருளூட்டு முண்டக அழகோனே’
கனகமயிலின் அழகுபொழிய கருணைமருவி வரவேணும்’
‘மணிமுதிராடக வெயில்வீசிய அழகா தமிழ் பெருமாளே’
‘ஐந்திந்த்ரியங்கள் வென்றொன்று மன்பர்
அங்கம் பொருந்தும் அழகோனே’
“அயிலு மயிலு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே”
– திருப்புகழ்
அருணகிரிநாதர் உலகையே முருகாக்கொண்டு, இயற்கை அழகுணர்ந்தவரெனில், அழகுப் பெண்மக்களை ஏறக்குறைய ஒவ்வொரு திருப்புகழிலும் இழித்துக் கூறியதென்னை என்று சிலர் வினவலாம். அருணகிரியார் பெண்ணை வெறுத்துக் கூறி யதுபோல, எவருங் கூறவில்லை என்று பேசுவோர் பலர் என் பதை யான் அறிவேன். யான் மேலே பெண்களைத் தெய்வமென் றும், அவர்கள் மாட்டு முருகைக் காண்டலே பேரின்பமென்றும் விரித்தோதியுள்ளேன். எனது உள்ளக்கிடக்கை அருணகிரியார் கருத்துக்கு அரண்செய்வதாகாது என்று அன்பர் சிலர் கருதல் கூடும். ஆதலால், அருணகிரியார் பெண்மக்களைப்பற்றிக் கொண்ட கருத்தை, அவர் மொழிகொண்டு ஆராய்வோமாக.
அருணகிரியார் பெண்மக்களை இழித்துக் கூறியுள்ளது உண்மையே. எப்பெண்களை அவர் இழித்துக் கூறினார்? அவர் பொதுவாக பெண்ணுலகை இழித்துக் கூறினார் என்று கோடலாகாது.
‘ஒருவரைத் தனிமனைச் சயனமெத் தையினில்வைத்
தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட்டினிதாக
ஒருவரைத் தமதணைக் கருகுற …
ஒருவரைப் பரவசப் பட …
உயிர்பிழைப் பதுகருத் தளவுமுப் பசமெனச் செயுமானார்’
‘ஒருவ ரொடு கண்கள் …
ஒருவ ரொடு செங்கை யுறவாடி
‘ஒருவ ரொடு சிந்தை ஒருவ ரொடு நிந்தை
ஒருவரொ டிரண்டு முரையாரை’
‘விரகுடன் நூறாயிர மனமுடை பாவிகள்’
‘முப்பதுகோடி மனத்தியர்’
எனவரும் உரைகளாலும், வேறு உரைகளாலும் அருணகிரியார் இழித்துக் கூறிய பெண்கள் யாவர் என்பது ஆராயற்பாலது. அவர் இழித்துக் கூறிய பெண்மக்கள் வேசையர்களேயாவர். இவ்வுண்மை, ‘மிக மன மருள்கொடு பதியிலவர்’, ‘ பண் பிலாடம்பரப்பொது மாதர்’, ‘பொருட்பறி மாதர்’, ‘பொன்பறி விலைமாதர்’, ‘பிடித்த இடைப் பொதுமாதர்’, பொன்தரப் பற்றும் பொதுமாதர்’ எனவரூஉந் திருப்புகழ்க் கருத்துக்களான் வெள்ளிடைமலைபோல் விளங்குதல் காண்க. ‘மானம்விற்ற லுக்கே பெண்ணாகப் பிறந்தோம்’ என்று கருதி வாழ்ந்துவரும் பொருட் பெண்டிர்கள் பெண் தெய்வங்களல்ல. அவைகள் பேய்கள். தெய்வப் பெண் வடிவு தாங்கிய உயிர்களை ‘அவைகள்’ என்றும், ‘பேய்கள்’ என்றும் எழுதும் மறத்துக்குள்ளானது குறித்து வருந்துகிறேன். அவர்களைப் பேயாக்கிய கொடுமை தீயொழுக்க முடைய ஆண் மக்களுடைய தாகும். ஆணுலகு தூய்மை யடையு மட்டும் வேசையருலகமென்று ஒன்றிருந்தே தீரும். வேசையர் கூடா ஒழுக்கத்தைத் தம் மரபுத் தொழிலாகக் கொண்டு வாழ் கின்றனர். அவர் சேர்க்கையால் பேய் வாழ்வும் நோய் வாழ்வுங் கூடுமேயன்றித் தெய்வ இன்ப வாழ்வு மலராது. அவர்பால் முரு கெனுந் தெய்வமணமும் கமழாது. அவரால் தீயொழுக்கமும், அதனால் பல கேடுகளும் பரவலால், அவரை அறிஞர் இழித்துக் கூறுகிறார்.
முருகெனும் அழகு, நல்லொழுக்கமுடைய நங்கையர் மாட்டே ஒளிர்வது. அவ்வழகே பாட்டாகப் பரவி நிற்பது. அவ் வியற்கை யழகில் தோயும் உளமுடைய பாவலர்க்குப் பெண் ணின் கடவுட்டன்மை விளங்கும்.
பெண்ணைச் சிற்றின்பப் பொருள் என்று நினைந்து கொண்டிருக்கு மட்டும் மெய்யுணர்வு பிறத்தலரிது. அருண கிரியார் உலகோரை நோக்கி ‘பெண்ணைச் சிற்றின்பப் பொரு ளாகக் கருதி இடர்ப்படாதேயுங்கள்’ என்னும் பொருளை அறிவுறுத்தும்வழித் தமது உள்ளத்தை நொந்தவாறு காண்க.
பெண்ணைச் சிற்றின்பப் பொருளாகக் கருதுவதும் பேரின்பத் தெய்வமாகக் கருதுவதும் இந்நெஞ்ச மன்றோ?
பெண் பெண்ணாகவே யிருக்கிறாள். அவளைப் பேயாக்குவதும் தெய்வமாக்குவதும் ஆடவர் உளமேயாகும். ஆதலால் ஆடவர் உளத்தைத் திருத்துவதே அருணகிரியாரின் அன்புமொழி யென்க. அருணகிரியார் அருளிய பெண்களைப்பற்றிய பாடல் களைத் துருவித் துருவி ஆராய்ந்தால், அப்பாடல்கள் தோறும் இந்நுட்பம் புலனாகும். ‘திருப்புகழ்’ப் பாக்களை உற்றுநோக்குக.
அருணகிரியார் பெண்ணாசையைக் கடிந்து கூறியிருத்தல் உண்மை. பெண்ணைக் கடிதலுக்கும் பெண்ணாசையைக் கடித லுக்கும் வேற்றுமையுண்டு. பெண்ணைக் காமமெனும் ஆசைப் பொருளாகக் கொள்வதொன்று; பெண்ணைத் தெய்வமாகக் கோடல் இன்னொன்று. பெண்ணை ஆசைப் பொருளாகக் கருது வது அறியாமை. அவ்வழகைக் கடவுளாகக் கருதுவது அறிவு. கீழோர் பெண்ணைக் காமப் பொருளென்று கொண்டு இடர்ப் படுவர்; மேலோர் பெண்ணைத் தெய்வமென்று கொண்டு இன்புறுவர். மக்கள் நல்லறிவு பெறும்போது, பெண்ணை ஆசைப் பொருளாக எண்ணும் நெஞ்சைக் கடிதல் இயல்பு. அருணகிரிநாதரும் பெண்ணின்மாட்டெழும் காமவேட் கையைக் கடிந்தாரே யன்றிப் பெண்ணைக் கடிந்தாரில்லை. அவர்,
‘மடவாரொடு – உருகியே வருபெற்றி மதனநா டகபித்து, ஒழியுமா றொருமுத்தி தரவேணும்
கலவியை நிந்தித் திலகிய நின்பொற், கழல் தொழும் அன்பைத் தருவாயே’
‘விரகினி லெனதுறு மனம துருகிய, பிரமையு மறவுன தருள் கைவர’
‘மயல் கவலைபட்டு, திருடனென வெட்கி – அலை வேனோ’
‘அரிவையர்கள் ஆசைப் பாட்டிலே – கொடியேன்யான்’
‘விளையு மோக மாமாயை கழலுமாறு நாயேனும், விழலனாய் விடாதேநின் – அருள்தாராய்’
‘காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்த, கால்களை மறக்கைக்கும் – வருமோதான்’
‘மாதர் – இருகண் மாயையி லேமூழ் காதே, உனது காவிய நூலா ராய்வேன், இடர்படா தருள் வாழ்வே நீயே – தரவேணும்’
என்று பெண்ணாசையைக் கடிந்து, அவ்வாசை வலையில் சிக்குறுவதால் விளையுங் கேட்டை,
‘மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள் போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறி செவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளி
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ’
என்று விளக்கியிருக்குமாற்றானுணர்க.
இவ்வாறு பெண்ணாசையைக் கடிந்து கூறிய அருணகிரி யார் பெண்ணைப் போற்றி யிருக்கிறாரோ வெனில், போற்றி யிருக்கிறார் என்று தியங்காது சொல்க. பெண்ணில் முருகை யுணர்ந்த பின்றை அருணகிரியார், ‘அரிய பெண்களைக் காமப் பொருளாகக் கொண்டு கெட்டேனே’ என்று வருந்துகிறார். அரிய பெண்கள் நட்டைப் புணர்ந்து, பிணியுழன்று சுற்றித் திரிந்த… எனவரூஉந் திருப்புகழில் அருணகிரியார் பெண்ணைப் பற்றிக் கொண்ட கருத்துப் புலனாகிறது. பெண்களை “அரிய” என்னும் அடையால் அவர் சிறப்பித்திருத்தல் அறிக. அருண கிரியார், பெண்ணாசையைக் கடிந்து முருகனை வேண்டும் போது, பல இடங்களில், ‘பெண்ணுடன் கூடியுள்ள முருகன்’ என்னுங் கருத்தமையப் பாடிக் குறிப்பாகப் பெண்ணின் பெரு மையை விளக்குகிறார். எடுத்துக் காட்டாக இரண்டொன்று வருமாறு: அக்குறிப்பு, ‘குரவநறுமளககுழல் கோதிக் காட்டியே’… அரிவையர்கள் ஆசைப் பாட்டிலே- கொடியன் யான்’ என வரூஉந்திருப்புகழில், ‘கரிய குழல் குறமகளை வேலைக் கரத்தணை பெருமாளே’ என்றும், ‘விடமும் அமுதமும் மிளிர்வன இணைவிழி… மகளிர் மகளிரு மலபல வினைகொடு’ எனவரூஉந் திருப்புகழில்’ ‘புனமதி லினிதுறை – தனிமானும், அமரர் அரிவையும் இருபுடையினும் வர… சரவண சுரபதி பெருமாளே’ என்றும் வருதல் காண்க.
அருணகிரிநாதர் வேறு ஒரு வழியாகவும் பெண்ணின் பெருமை பேசுதல் நோக்கற்பாலது.
‘நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்எந்த நேரத்தினுங் கோலக் குறத்தியுடன் வருவான்’
– அலங்காரம்
‘குறநற் பாவை தாட்பணி, கருணை தமிழிற் பாடல் கேட்டருள் – பெருமாளே’
‘பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய – மணவாளா’
– திருப்புகழ்
‘மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம்
வந்திக் குந்தணிக் காம வாஞ்சையன்’
‘வனசரி பதயுக கஞ்சம் வணங்கும் பாக்ய
கதம்பன்’
– திருவகுப்பு
‘பணியா வெனவள் ளிபதம் பணியும்
தணியா அதிமோ கதயா பரனே’
‘பாளைக் குழல்வள் ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே’
‘மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே’
– அநுபூதி
மேலும் நம் பெரியார்,
‘மங்கையர் சுகத்தை வெகு, இங்கிதமெ னுற்ற மனம்,உன்றனை நினைத் தமைய – அருள்வாயே’
‘வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள், மாயம தொழிந்து – தெளியேனே – மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து, மாபத மணிந்து, – பணியேனே – ஆதியொடு மந்தமாகிய நலங்கள், ஆறு முகமென்று – தெரியேனே’
என்று பெண்ணைப் பேயென்று நினைப்பதினின்றும் நீங்கி, அவளைத் தெய்வமென்று போற்றுவதை யோர்க.
மற்றுமோரிடத்தில் அடிகள், ஒரு பாட்டின் ஒரு பாதியில் பெண்ணை மாயையாகக் கருதி இடர்ப்பட லாகாதென்றும், மற்றொரு பாதியில் அப்பெண்ணை முருகாகப் போற்றுதல் வேண்டுமென்றுங் குறிப்பாக அறிவுறுத்தியுள்ள நுட்பத்தை உணர்வது அறிவுடைமை.
‘பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண்
சேலென் பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே’
எனவரூஉங் கந்தரலங்காரச் செய்யுளால், மெய்யடியார் உண்மையை நன்கு தெருட்டிக் காட்டல் உணர்க.
அருணகிரிநாதர் பெண்ணாசையைக் கடியப் புகுமிடங் களில் பெண்ணின் அழகை அதாவது முருகை வியந்து வியந்து பாடுகிறார். அப் பாமலர்களில் இயற்கை மணங் கமழ்கிறது.
‘தேனுலாவிய மாமொழி’ ‘இனி தாங்கனி வாயமு தூறல்கள்’ ‘அளிபுறா மயிலென்று சொலுங்குரல்’ ‘அமுத மொழி பதறியெழ’ ஆலுமயி லொத்த தோகையர்கள்’ ‘நெய்த்தகரிகுழல் அறலோ முகிலோ’ ‘முகிலாமெனும் அளகம்’ ‘மதிபோ லுயர் நுதலும்’ ‘முகிழாகிய நகையும்’ ‘முருகு செறிகுழல் முகி லென நகில்நறு’ முளரி முகையென இயலென மயிலென, முறுவல் தளவென நடைமடை வனமென’ ‘வேலையு நீலமும் வழுவாங் கிருவாள் விழி’ ‘சோதிம மதிபோல் முகம்’ ‘மாந்தளிர் போல் வடிவம்’ ‘மயில் குயிலெனும்புட்குரற் பகர’
‘இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
யிணையிலாச் சத்திவிழி யார்பசும் பொனிறர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்ட செவி பவளநீ லக்கொடிக
ளிகலியா டப்படிக மோட்டும் பொனுறு திங்கள்மேவும்
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட’
எனவரூஉந் திருவாக்குகளில் இயற்கைப் பொருள் செறிதல் காண்க. இவ்வியற்கை வனப்பை முருகெனக் கண்டு தொழாது, இதை இழிவெனக் கருதிக் கெடும் பாழும் மனக்கொடுமையை என்னென்று சொல்வது? அருணகிரியார் பெண்களைச் சிறுமை யாகக் கருதி, அவர்கள் உறவு கொண்டபோது, பிணி மூப்படைந்து வருந்தியதும், பின்னை அவர்களை முருகாகக் கொண்ட போது, இளமை அழகெய்தி, அநுபூதி நிலை பெற்றதும் உன்னற்பாலன. பெண்ணைத் தெய்வமாகப் போற்றும் ஒருவன் எக்குற்றத்துக்கும் ஆளாகான் என்பது ஒருதலை.
அருணகிரிநாதர் பெண்ணை மாயையென்று கருதியபோது விளைந்ததென்னை? அவர் அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்ட பின்னை நேர்ந்ததென்னை? முன்னே முதுமையும் நோயும் உற் றார்; பின்னே இளமையும் இன்பமும் பெற்றார். முன்னர்ப் பெற்ற முதுமைநோய் போக்க அவர் காய கற்பங்களுண்டனரோ? இல்லை. இல்லை. பின்னை என் செய்தார்? இயற்கையின் அடிப் படையாயுள்ள முருகெனும் இளமையை யுணர்ந்து, அவ்விள மையை உன்னி உன்னி, இளமைப்பேறு பெற்றார். சார்ந்ததன் வண்ணமாகும் இயல்பு உயிர்க்கு உண்டு. என்றும் மாறா இளமையுடைய முருகனைப் போற்றுவோர் என்றும் இளையரா யிருத்தல் இயல்பு.
அருணகிரியார் முன்னை வாழ்வில் பெற்ற முதுமை நோய் நிகழ்ச்சிகளை நினைந்து, அம்முதுமை நோய் வேண்டாவென் றும், நோயிலா வாழ்வும் இளமையும் வேண்டுமென்றும், இப்பேற்றை அருளவல்ல ஆண்டவன் இளையோன் என்றும் உலகிற்கறிவுறுத்திய பாக்கள் பலப்பல. அவைகளில் சிலவருமாறு :-
‘நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல மருள்வாயே’
‘எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேற்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து வளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து மிகநீளும்
இழவுகளை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தின் அருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை யருள்வாயே’
‘பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப தொருநாளே’
‘இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள் மருங்கி ணங்கிய
இளமை கிழம்படு முன்ப தம்பெற வுணர்வேனோ’
‘கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
குற்றவேல் அடிமை செயும்வகை யருளாதோ’
‘நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக மதனூடே
நாதமொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாமலேக வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு தருவாயே’
‘நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே’
‘பங்க நீறெழ வேல்விடு இளையோனே’
‘அசுரர் தூள்பட அயில்தொடும் அறுமுக இளையோனே’
‘கோ தாட்டிய ஸ்வாமி யெனவரும் இளையோனே’
‘இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறை வகுக கந்த என்றும் இளையோனே’
‘மரகத நாரா யணன் மருமக சோணாசல
மகிப சதாகாலமும் இளையோனே’
‘இளமையுமு னழகுபுனை ஈராறு தோணிரையும்
இருபதமும் அறுமுகமும் யானோத ஞானமதை யருள்வாயே’
யாண்டுமுள இறைவன் பெண் மக்களிடத்து உறைதலை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பதன் உட்கிடக்கை என்னை என்று சிலர் ஐயுறலாம். இறைவன் யாண்டுமிருப்பது உண்மை. அவன் யாண்டு முள்ளதை உணரும் ஒருவன் எத்தகைக் கேடும் நிகழ்த்த ஒருப்படான். கேடு நிகழ்த்துவோர் பெரிதும் ஆண்ட வன் உண்மையை யாண்டுங் காணாதவரேயாவர். இவ்வுண்மை யுணர்வெனும் விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் மனமாசு கள் பல. அவைகளுள் சிறந்தது பெண்ணைக் காமப் பொரு ளாகக் கருதுவது. இம்மாசுள்ள ஒருவன் எல்லாக் கொடுமை கட்கும் உறையுளாவன். ஆதலால் எல்லாக் கொடுமைகட்குந் தாயகமாயுள்ள இம்மாசு ஒன்றினைக் கழுவ முயல்வது மக்க ளின் தலையாய கடமையாகும்.
காம உணர்வின்றி உலகில் வாழ முடியுங்கொல் என்றும், உலகில் படைப்பு எங்ஙனம் நிகழும் என்றும் சிலர் கருதலாம். பெண்ணை வெறுத்துக் காட்டுக்கோடும் போலியறத்தை யான் முற்றும் வெறுப்பவன். ஆண் பெண்ணுடனும் பெண் ஆணுட னும் வாழ்ந்து, உலக வளர்ச்சிக்குத் துணைபுரிவது, இயற்கை யறமென்பது எனது கொள்கை. இயற்கை யறமாவது, ஒருத்தியும் ஒருவனும் காதல் வழி நின்று, இரண்டோர் உயிர்களை யீன்று, பின்னைக் கூடல் நீத்து, உள்ளொளி காண முயல்வதாகும். காதல்நெறி விடுத்துக் காமவெறியில் புகுவோன் சாமளவும் அந்நெருப்பில் வீழ்ந்து வெந்தொழிவன்.
பெண் ஆணுடன் கூடலும், ஆண் பெண்ணுடன் கூடலும் எற்றுக்கு? பிள்ளைப் பேற்றிற்கென்று சொல்ல வேண்டுவ தில்லை. ‘பிள்ளைப் பேறு’ நோக்கின்றி, ஆண் பெண்ணுடன் கூடுவது, பெண்ணைக் காமப் பொருளாகக் கருதுவதாகும்.
ஒருவன் ஒருத்தியுடன் கூடி வாழ்ந்து பிள்ளைப் பேறு பெற்ற பின்னர் அவ்வொருத்திபால் தாய்மை மலர்கிறது. தாய்மை மலர்ந்த ஒருத்தியைத் தாயாகவே கருதல் அறி வுடைமை. தாய்மைக் கருத்து நுழையப்பெற்ற ஒருவனுக்கு நாளடைவில் அவள் மாட்டு இறைமை காய்த்துக் கனிதல் புல னாகும். அவ்வுணர்வு யாண்டுமுள்ள இறையைப் புலப்படுத்தும்.
பெண்ணின்பால் பெண்மை தாய்மை இறைமை என்னும் மூன்று நீர்மைகள் விளங்குதல் கருதற்பாலது. பெண்ணைக் காமப்பொருளென்று கருதிக் கொண்டிருக்குமட்டும் இறைமை உணர்விற்கு இடமேது? ஆதலால் இறைமை யுணர்விற்குப் பெருந்தடையாயுள்ள காம எரி, தங்கள் மனத்தி லுறாவண்ணம், ஆண் மக்கள் இளமைதொட்டுப் பயின்று வரல்வேண்டும். பெண்ணைக் காமப் பொருளெனக் கருதும் மனமாசு, பெருந் துன்பத்துக்கு ஊற்றா யிருத்தலான், பெண்ணைக் கடவுளெனக் கருதுமாறு ஆணுலகை நோக்கி வேண்டுகிறேன். இங்கே சுருங் கிய உரைகளால் எனது உட்கிடக்கையை வெளியிட நேர்ந்தமை யால், இதைப்பற்றி விரிந்த விளக்கம் விரும்புவோர், யான் எழுதியுள்ள ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூலை முற்றும் படித்துப் பார்ப்பாராக.
ஆண்டவனை இயற்கை வாயிலாகவும், பாட்டு ஓவியம் இசை வாயிலாகவும் வழிபடலாம் என்று மேலே சொல்லி யிருக் கிறேன். காமத்துக்குக் கசிந்துருகும் பாழ்நெஞ்சம் மாறப் பெற்றோரது புலன்கட்குப் பெண்ணின்பாலுள்ள இயற்கை வடிவும், பாட்டும், ஓவியமும், இசையும் விருந்தாகும். இவ்வழி பாட்டை நிகழ்த்த நிகழ்த்தப் பெண்ணின்மாட்டுத் திகழும் இறைமை புலனாகும்.
இத்தகைய இறைமைப் பொலிவிற்கு நிலைக்களனாக நிற்கும் பெண் யாண்டில்லை? எவ்வீட்டில் இல்லை? பெண் தெய்வம் யாண்டும் எழுந்தருளி யிருக்கிறது. இத்தெய்வத்தைக் கண்டு பேறு பெறுங் கருத்துப் பெறாது, காசிக்குங் காட்டுக்கும் ஓடுவது அறியாமையா? அறிவுடைமையா? அன்பர்களே! உன் னுங்கள்! இறைமைக்கு உறையுளாக நிலவும் பெண்ணைக் காமப்பொருளெனக் கருதிப் பாழ்படும் நெஞ்சைப் பிளந்தெறிய வேண்டுமன்றோ? காமக்கண்ணாடியைக் கழற்றி நோக்கினால்,கடவுளைப் பெண்ணில் காணலாம்; பின்னை அக்கடவுளை எங்குங் காணலாம். காமப்பொருளென்று பெண்ணைக் கருதுவது, கடவுள் காட்சிக்கு இடையூறு நிகழ்த்தலான், அவ் விழிந்த கருத்தை மாற்றுமாறு ஆணுலகிற்கு விண்ணப்பஞ் செய்து கொள்கிறேன். ஆகவே பெண்ணைக் காமப் பொரு ளென்று கருதுவது வாழ்விற்கு நலந்தருவதா அல்லது பெண்ணைக் கடவுளென்று கருதுவது வாழ்விற்கு நலந்தருவதா என்பதை அன்பர்கள் ஆய்ந்து ஓர்ந்து உண்மை யுணர்வார்களாக.
சில போலி வேதாந்திகள் பெண்ணாசையை வெறுத்துக் கூறாது பெண்ணையே வெறுக்கிறார்கள். யாண்டுமுள்ள இறை வன் பெண்ணின்பால் இல்லை என்பது அவர்கள் கொள்கை போலும்! இக்கொள்கை, உண்மை வேதாந்தத்துக்கு அரண் செய்வதன்று.
பெண்ணைக் காமப் பொருளாகக் கருதலாகாது என்னுங் கொள்கைக்கு அருணகிரியாரின் பின்னைய வாழ்வு பேரிலக்கிய மாக நிற்கிறது. அவர்தம் வாழ்வுநுட்பம் உணராதார், ‘அருண கிரிநாதர் பெண்ணை வெறுத்தவர்’ என்று பொதுப்படப் பருமையாகக் கூறுவர். அருணகிரியார் மறை மொழிகளை நுணுகி ஆராய்வோர்க்கு அவரது உள்ளக்கிடக்கை நனி விளங்கும்.
முருகன் அருள்பெற்ற மெய்யடியாராகிய அருணகிரியார், எல்லாவிடத்தும் முருகைக்கண்டு, குழைந்து குழைந்துருகு முளத்தில் பெருக்கெடுத்தோடும் இன்ப வெள்ளத்திற் றோய்ந்து, பாடிய திருப்புகழை என்னென்பேன்! என்னென்பேன்! திருப் புகழ், சந்த அலைவீசுஞ் செந்தமிழ்க் கடலன்றோ? சிவபெரு மானை வழிபட்டு நால்வர் தமிழ்வேதம் பாடினர். திருமாலை வழிபட்டுப் பன்னிருவர் தமிழ்வேத மோதினர். முருகனை வழி பட்டு அருணகிரிநாதர் தமிழ்வேதமருளினர். அருணகிரியாரின் திருப்புகழும், ஏனைய பாடல்களும் தமிழ் மறையேயாகும். செம் மொழியிற் சிறந்த அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை ஓதும் போதும், பிறர் ஓதக் கேட்கும் போதும், முருகக் கடவுளின் நுண்ணிய வடிவம் அகத்தில் புலனாவது போன்ற ஒரு தோற்ற மும், ஒரு வித அன்பும், இன்ப எழுச்சி மேலீடும் நிகழ்வதைப் பெறலாம். குமரகுருபர சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், இக்காலத்துப் பாவலராக இலங் கிய நம் சுப்பிரமணிய பாரதியார் முதலியோர் முருகக் கடவுளைப்பற்றிப் பாடிய பாடல்களிலும் முருகைக் காணலாம்.



