முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்

2. அழகின் இயலும் கூறும்

[அழகு – அழியா அழகு – அழியும் அழகு – நக்கீரனாரும் அழகும் – இயற்கை செயற்கை – உள்பொருள் இல்பொருள் – பருமை நுண்மை – அழகரும்புமிடங்கள் – அழகுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பு – அழகின் பன்மை ஒருமை – அழகு புரியுந்துணை – அழகும் புலன்களும் – புற அழகு அக அழகு – அழகுக்குத் தோற்ற ஒடுக்கமின்மை – பேரின்பம் சிற்றின்பம் – வன்றொண்டர் மாணிக்கவாசகர் – அழகும் இன்பமும் – அகநானூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, திருக்கோவையார் – பெண்ணும் அழகும் – அழகுக் கோயில்கள் – அழகும் வாழ்வும் – அழகிடை மணம் இளமை கடவுட்டன்மை மருவல் – அழகு பெரும் வழி – உணவு முறை – பெருந்திண்டி களியாடல் மருந்துகள் முதலியவற்றின் கேடுகள் – மேல்நாட்டார் இயற்கை முறை – கந்தழி – பாண்டி நாட்டில் கடவுளை அழகாகக் கொண்டது – திருமுருகாற்றுப் படையில் முருகின் நான்கு கூறு].

இனி மணம், இளமை, கடவுட்டன்மை, அழகு என்னும் நான்கு பொருளில் அழகு என்பதை மட்டும் யான் ஈண்டுச் சிறப்பாக எடுத்துக் கொள்கிறேன்.  என்னை? அழகு உள்ள இடத்தில் ஏனைய மூன்றும் விரவி நிற்றலின் என்க.  அழியா அழகில் மணமும் இளமையும் இறைமையும் கலந்து நிற்றலும் இயல்பு.

அழியா அழகு என்று ஈண்டுக் குறிப்பிட்டது உன்னற்பாலது.  அழியா அழகெனில் அழியும் அழகென்று அன்றுண்டோ என்னும் ஐயம் சிலருள்ளத்திலாதல் பிறக்கலாம்.  அழகின் அழியாமை நோக்கி ஈண்டு `அழியா’ என்னும் அடையால் அழகைச் சிறப்பித்ததன்றி, அழியும் அழகுக்கு எதிர்மறையாக `அழியா’ என்று அழகைச் சிறப்பிக்கவில்லை யென்றுணர்க.

உலகில் ஒவ்வோருண்மைக்கும் மாறுபட்ட போலியுண்டு.  போலிக்கண் உண்மை யின்மையான், அஃது அழிந்துபடுகிறது.  இம்முறையில் அழியா உண்மையழகிற்கும் மாறுபட்ட அழியும் போலி யழகென்று ஒன்றிருக்குமன்றோ?  அப்போலி அழகை அழியும் அழகு என்று அழைக்கலாமன்றோ?

இதனால் அழகை இருகூறுபடுத்தி அழியா அழகு, அழியும் அழகு என்று சொல்லவேண்டுவதில்லை.  அழிவதை அழகென்றுங் கொள்ள வேண்டுவதில்லை.  இது பற்றியே `அழியா’ என்று அழகைச் சிறப்பித்தவாறு காண்க.  அழகுப் போலியை `அழியும் அழகு’ என்றதும் முகமன் என்க.

இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையோடு படிந்து, இயற்கையை ஆய்ந்து, இயற்கையி லுறையும் அழகெனும் முருகைக் கண்ட பழந்தமிழ்ப் புலவர்கள் அழகின் இயல்பைப் பற்றி என்ன கூறியுள்ளார்கள்?  அதைச் சற்று நோக்குவோம்.

பழந் தமிழ்ப் புலவர்களுள் ஈண்டு நக்கீரனார் ஒருவரைக் கோடல் சால்பு.  நக்கீரனாரின் புலமை கருதி மட்டும் அவரை ஈண்டுக் கொள்ள வேண்டுவதில்லை. அவர் இயற்கையில் முருகையுணர்ந்து, முருகாற்றுப்படை பாடியதில் தமது புலமை செலுத்தியவர் என்னுந் தொடர்புரிமை கொண்டு, அவரை ஈண்டுக் கோடலே ஏற்புடைத்து.  நக்கீரனார் தாமுணர்ந்த அழகைப் பொது முறையில் திருமுருகாற்றுப் படையாகப் பாடி மகிழ்ந்தார்.  அவ்வாற்றுப் படைக்கண் ஓரிடத்தில் அழகின் இயல்பு இத்தகைத்தெனச் சிறப்பு முறையில் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.  `கைபுனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு’ என்று அப்புலவர் அழகியல் தெரித்தவாறு காண்க.

கையால் செய்யப்படுவது செயற்கை.  கையால் செய்யப்படாதது இயற்கை.  மலையும் ஆறும் காடும் கடலும் எவர் கையால் ஆக்கப்பட்டன?  ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் எவரால் செய்யப்பட்டன?  புனலுக்கு தண்மை ஈந்தவர் எவர்?  நெருப்புக்கு வெம்மையூட்டினவர் யாவர்?  இயல்பாக அரும்பிய இவைகளின் அழகே கைபுனைந்தியற்றாக் கவின்பெரு வனப்பாகும்.  மற்றையது போலி.

கைபுனைந்தியற்றா இவ்வழகு அழியாத் தன்மையது என்று மேலே தொகையாகச் சொல்லப்பட்டது.  அதை ஈண்டு வகைப்படுத்திச் சில உரை பகர்தல் நலனெனத் தோன்றுகிறது.  அழகு உள்பொருளா அல்லது மக்கள் உள்ளம் இயற்கையில் படியும்போது அங்கே உருவெளியாய்த் தோன்றும் இல்பொருளா என்பது ஆராயத் தக்கது.  அழகைப்பற்றி எண்ணாத இடமில்லை; பேசாத இடமில்லை; போற்றாத இடமில்லை.  அழகின் மாட்டு உலகங் கொண்டுள்ள பற்றுப்போல வேறெதன் மாட்டும் அஃது அப்பற்றுக் கொண்டில்லை.  `அழகு அழகு’ என்றே உலகம் அழகின் உறைந்து நிற்கிறது.  இவ்வாறு அழகுடன் வாழும் உலகை நோக்கி, `அழகு எப்படி இருக்கிறது’ என்று வினவின், அதைச் சொல்லால் சொல்ல இயலாது அது விழிக்கிறது.  புலன்களுக்கும் பொருளாகாத ஒன்றைப் பற்றி என்ன சொல்வது? என்னே அழகின் நுட்பம்.

`புலன்கட்குப் பொருளாகாமை’ என்னும் ஒன்று கொண்டு, அழகிற்கின்மை கூறலாமோ எனின், அஃதும் அறமெனத் தோன்றவில்லை.  என்னை? உணர்விலுறுத்தல், வினையாற்றல், துன்ப நீக்கி இன்பமாக்கல் முதலியன அழகால் பெறுகிறோம்.  இத்தகை நிகழ்வுடைய ஒன்றன் இருப்பை எங்ஙனம் மருத்தல் கூடும்?

உலகில் புலன்களுக்குப் பொருளாகும் பொருள்களுமுண்டு; பொருளாகாப் பொருள்களுமுண்டு.  இவைகளை முறையே பருமை (Concrete) என்றும், நுண்மை (Abstract) என்றும் உலகங் கொண்டிருக்கிறது.  பருமைக்கு உண்மை கூறலும், நுண்மைக்கு இன்மை கூறலும் அறிவுடைமையல்ல.  என்னை?

ஊனப் புலன்களுக்குப் பொருளாகாது உணர்வில் நிகழ்ச்சிளவில் உறுத்தும் பொருள்களுமுண்டு.  அறிவு அறம் அன்பு நீதி முதலியன புலன்களுக்கு வடிவால் காட்சி வழங்கும் பருப்பொருட்களல்ல.  இவை காட்சி வழங்காமையான், இவற்றின் உண்மைக்கும் மறுப்புக் கூறலாம் போலும்! இவை உள்ளனவேயன்றி இல்லனவல்ல.  இவற்றின் உண்மை இவற்றையுடைய பருப்பொருள் வாயிலாக உணரக் கிடக்கிறது.  அறிஞன்வழி அறிவும், அறவோன் வழி அறமும், அன்பன் வழி அன்பும், நீதிமான் வழி நீதியும் உணர்விற்படுதல் ஓரற்பாற்று.  இவைபோன்ற பல நுண்மைகளிருக்கின்றன.  இவற்றுள் அழகுமொன்று.  அழகுடைப் பொருள் கொண்டு அழகையுணர்கிறோம்.  ஆகவே, அழகென்பது பருப் புலன்களுக்கு வடிவாகத் தோன்றாத நுண்ணிய உள்பொருளெனக் கொள்க.  அஃது உருவெளியன்றெனத் தெளிக.

அந்நுண்மைப் பொருள் யாண்டும் நீக்கமற நிற்பது.  யாண்டும் நிறைந்துள்ள அந்நுண்பொருள் சில வேளைகளில் சில இடங்களில் தனதிருப்பை உயிர்கட்கு அறிவுறுத்தவோ என்னவோ மின்னொளிபோல் தன் (நுண்ணிய) தோற்றத்தைப் புலப்படுத்துகிறது.  இளஞாயிறு தனது செங்கதிரை நீலக்கடலில் பரப்பும்போது அப்பரவையிடை அழகு ஒளிர்கிறது.  அஞ்ஞாயிறு தனது இளவெயிலை, பசுங்கடல் பொங்கியெழிந்தாலென உருண்டு திரண்டு பரந்து ஒளி நுழைதற்கு மிடமின்றிச் செறிந்து மிடைந்து சரிந்து சாய்ந்து நிற்குங் குறிஞ்சிக் காடுகளின் பச்சை மேனியில் உமிழும்போது அவ்விடை அழகு அரும்புகிறது.  திங்கள் தன் பால்நிலவை, வெள்ளை வெளேலென வெள்ளி அறல் படர்ந்தாலென மிளிரும் வெள்ளிய மணல்மீது காலும்போது அங்கே அழகு ஒழுகுகிறது.  இவ்வாறு சில வேளைகளில் சில இடங்களில் அழகு தனது நுண்ணிய காட்சி வழங்குதல் உணர்க.

அழகு எதன் வாயிலாக உணரக் கிடக்கிறது?  அழகு தன்னையுடைய இயற்கை வாயிலாக உணரக் கிடைக்கிறது.  அதற்கும் இதற்குமுள்ள தொடர்பென்னை?  அழகுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பை என்னென்று கூறுவது?  (அழகின் உடல் இயற்கை.)  இயற்கையினூடே அழகு நீக்கமின்றி விராவி நிற்கிறது.  இயற்கையை விடுத்து அழகை ஆராய்ந்துணரல் அரிது.  அழகின் இருப்புணர்தற்குக் கருவியாயுள்ள இய்கையும் அழகைப்போல உள்பொருளேயாம்.  இயற்கை, பலப் பல வடிவங்காகத் தோன்றித் தோன்றி மறையினும், அதன் முதல் கேடுறுவதில்லை.  உள்ளதற்குத் தோற்றமே யன்றி அல்லதற்குத் தோற்றமில்லை என்பது அளவை.  அழியாது கிடக்கும் இயற்கை முதலுக்கு அடிப்படையாக நிலவுவது அழகாகும்.  அழகினின்றும் அரும்பி மலர்ந்து காட்சியளிப்பது இணற்கை என்று சுருங்கச் சொல்லலாம்.  அழகுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பு நோக்கி, அஃதே இஃது, இஃதே அஃது என்று கொள்ளலாம்.

தனக்கு அடிப்படையாக நிற்கும் அழகைப் பலப் பல வடிவங்களாக இயற்கை காட்டிக் காட்டி, உலகைக் கவர்ந்து மகிழ்ச்சியூட்டுகிறது.  ஒவ்வோர் இயற்கைப் பொருட்கண் கருத்தை ஒற்றி ஒற்றி, உன்ன உன்ன அதனதன்.  அழகு தனித்தனியே உணர்வில் உறுதல் பெறலாம்.  அப்பயிற்சி முதிர முதிர எல்லா இயற்கைப் பொருட்கும் அடிப்படையாக ஒரே அழகு நிலவல் உணரலாம்.  எனவே, அழகு தனித் தனிப் பன்மையாகவும், பரந்த ஒருமையாகவும் உயிர்கட்கு உறுதுணை செய்தல் ஓர்க.

அழகு உயிர்கட்குப் புரிந்துவரூஉம் உறுதுணையை என்னென் றுரைப்பது?  அழகோ, புலன்கட்குப் பொருளாகாதது.  அஃது உயிர்கட்குப் புரிந்துவரூஉந் துணையோ, அளவில் அடங்காதது.  அழகு புலன்கட்குப் பொருளாகிறதில்லை.  ஆனால் அது புலன்கட்கு விருந்தாகிறது.  அழகில் தோயாத புலன்கள் உரமிழந்து உலர்ந்து போகும். புலன்கெட்ட வாழ்வு உயிர்கட்கு ஏது?  வளர்ச்சியேது? இன்பமேது?  இன்ப நுகர்ச்சிக்கு வாயாகவுள்ள புலன்கள் அழகில் படிந்த வண்ணமிருத்தல் வேண்டும். அப்படிவால் புலன்கள் பருகும் விருந்தமிழ்தம் உடலையும் உயிரையும் ஓம்புவதாகும்.

அழகு புறத்தே நிற்பதுபோல அகத்தேயும் நிற்கிறது.  புறமும் அகமும் ஒன்றும்போது அழகுணர்வு புலனாகும்.  அதற்குக் கருவிகளாக இருப்பனவே புலன்கள்.  அப்புலன்கள் அழகில் தோய்ந்ததும், ஆங்காங்குள்ள அழகு மலரினின்றும் மணம் வீசுவது போலத் தன்னினின்றும் தன் ஒளி பொழியத் தொடங்குகிறது.  அதனால் உடலும் உயிரும் ஆக்கமுறும்.  அழகு புலனாகாத நுண்மையதாய் இலகிற்குப் புரிந்துவரூஉம் உதவி உணர்வால் உணரத்தக்கது.

உலகிற்கு அடிப்படையாய் நின்று துணைபுரியும் அழகு, தோற்ற வொடுக்கமுடையதாயின், அதை அழகு என்று அழைத்தல் பொருந்தாது.  தோற்ற ஒடுக்கமுடைய மாறுதலை (விகாரத்தை) அழகு என்று எங்ஙனம் அழைப்பது?  தோற்றவொடுக்கமிலா ஒன்றே அழகாகும்.  அத்தகைய ஒன்றைப் படைப்பவர் யாவர்?  வளர்ப்பவர் யார்? இக்கருத்துப் பற்றியே அழகை அழியா இயற்கை அழகு என்று ஆன்றோர் ஆண்டு வருகின்றார்.  அவ்வழகில் தோய்ந்து அழகராய நக்கீரனார், அழகைக் `கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு’ என்று கூறிப் போந்தார்.  இவ்வழகே பழந் தமிழர் போற்றி முருகாகும்.

கை புனைந்தியற்றா இயற்கை அழகின் கருத்தைப் பதிய வைத்துள்ள ஒருவன், அதனோடு புணருந்தொறும் புணருந்தொறும் அவனுள்ளத்துள் சொலற்கரிய இன்பங்கிளர்ந்தெழும்.  அவ்வின்பத்தைப் பின்வந்தார் பேரின்பமெனவும் சிற்றின்பமெனவும் பிரித்துக் கூறினார்.  பண்டை நாளில் இன்பம் இன்பமாகவே பிரிவின்றிக் கிடந்தது.  மக்கள் வாழ்வு, செயற்கையில் வீழ்ந்த நாள்தொட்டு, இன்பம் பேரின்பமெனவும் சிற்றின்பமெனவும் பிரிந்தது போலும்! பண்டைத் தமிழ் நூல்கள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றை மட்டும் அறிவுறுத்தலை இன்றுங் காணலாம்.  மக்கள் செயற்கை வாழ்கில் தலைப்பட்ட நாள்தொட்டு வீட்டின்பமென ஒரு தனியின்பம் வகுக்கப்பட்டது போலும்! முன்னை நாளில் நான்காவதாகிய வீட்டின்பமெனும் பேரின்பம் மூன்றாவதாகிய இன்பத்தில் அடங்கியிருந்தது.  ஆதலால், இயற்கையழகில் தோயும் ஒருவனதுள்ளம் நுகரும் இன்பம் சிற்றின்பமாமோ பேரின்பமாமோ என்று ஆராய வேண்டுவதில்லை.  அதை முறைப்படி இன்பமென்று மொழியலாம்; பின்னைய வழக்குப்படி பேரின்பமெனச் சொல்லலாம்.  அவ்வின்பத்துக்கு ஒப்பாகவாதல் உயர்வாகவாதல் வேறோரின்பமுளதோ?  அவ்வின்பத்தையன்றோ வன்றொண்டர் நுகர்ந்தார்?  மாணிக்கவாசகர் பருகினார்? 

அவ்வின்பம் அழகுள்ள இடங்களிலெல்லாமிருக்கும்.  அழகில்லா இடமுமுண்டோ?  இவ்வுலகமே அழகுவடிவம்.  இவ்வழகிய உலகிடை நின்று அண்ணாந்து பார்த்தால், மேலும் கீழும் சுற்றும்முற்றும் அழகு சொரிவது காணலாம்.  அழகிய நீலப் படாத்தின் விரிவில் நித்திலந்தூவினாலென வானத்திலூருஞ் செவ்விய அழகை என்னவென்று வருணிப்பது?  ஞாயிற்றின் ஒளியை என்னென்று நவில்வது?  திங்களின் நிலவை என்னென்று கூறுவது?  கரிய காட்டின் காட்சியை எப்படி எடுத்துக் காட்டுவது?  கைநீட்டும் அலைகடலின் கவினை எங்ஙனம் சுழறுவது?  என்னே அண்டத்தின் அழகு! இவையெலாஞ் சேர்ந்த ஒன்றே இயற்கை யன்னையின் அழகு வடிவம்.  அவ்வழகே அழியா அழகு.  அதுவே முருகென்னும் பேரழகு.

பண்டைத் தமிழ்மக்கள், இயற்கைவழி வாழ்வு செலுத்தி, அதற்கு அடிப்படையாயுள்ள அழகுண்மை கண்டு அவ்வழகால் இயற்கை அழகுபெறுவது நோக்கி, அவ்வியற்கையை வழிபட்டு, முழுமுதற் பொருட்கு அழகு என்னும் பொருள் பட முருகன் என்னும் பெயரணிந்தார்கள்.  அவர்கள் இயற்கை வாயிலாக முருகைக் கண்டு நுகர்ந்த இன்பத்தை அகநானூறு, கலித்தொகை, பத்துப் பாட்டு, திருக்கோவையார் முதலிய நூல்களில் காணலாம்.  அவ்வின்ப ஊற்றைத் திறக்கவல்ல அழகு இயற்கை வாயிலாகக் காணக் கிடக்கிறது.  இயற்கையில் உள்ளத்தைப் பதித்து, அதனோடு ஒன்றி வாழ்ந்துவரின் இயற்கைப் பேரழகு – முருகு – புலனாகும்.

செம்பொன்னையுருக்கி வார்த்தாலெனக் காட்சியளிக்கும் அந்திவான் செக்கரழகும், கொண்டல் கொண்டலாக ஓடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் ஒழகும், அத்தண்புனல் மணற் கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில்களின் அழகும், அவைகளில் பச்சைபாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவைகளினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழகும் மக்கள் உள்ளத்துள்ள இன்ப ஊற்றைத் திறப்பனவல்லவோ?  மயிலாடும் அழகும், மான் நடக்கும் அழகும் நந்தூறும் அழகும் புலவருக்கு விருந்தல்லவோ?

இவ்வழகெலாந் திரண்ட அழகே பெண்ணழகு.  பெண், மாதர் என்னுஞ் சொற்களுக்கு அழகென்பதே பொருள்.  பல திற இயற்கை அழகுகளெல்லாம் அவள் மாட்டிருத்தலால், அவளை அழகெனும் பெண் – மாதர் – என்று நந்தமிழ் மக்கள் அழைத்தார்கள்.  அழகுக்கு உறைவிடமாகிய பெண்ணின்பால் எது இல்லை?  எல்லாமிருக்கின்றன.  அவள்மாட்டு முகிலுண்டு; மானுண்டு; மலர்களுண்டு; குயிலுண்டு; மயிலுண்டு; மானுண்டு; பிறவும் உண்டு.  முருகன் வடிவெலாம் அவள்.  அவள்பால் முருகை அழகைக் காண்டலன்றோ இன்பம்?

இத்தகைய இன்பப் பொருளைத் துன்பப் பொருளாக எவன் கொள்வான்?  காமுகன் – கீழ்மகன் – கயவன் – கொள்வான்.  இயற்கையின்ப நுட்பந் தெரிந்த ஒருவன் ஒரு நாளும் பெண்ணைத் துன்பப்பொருளாகக் கருதான்.  பெண்ணினல்லாள் பாட்டாக இருக்கிறாள்; எந்தை முருகனாக இருக்கிறாள்; தூய இன்பமாக இருக்கிறாள்.  அப் பெண் தெய்வத்தைத் தொழுகிறேன்.  பெண்ணெனும் தெய்வ அழகு, அறியாமை அழுக்காறு அவா முதலிய கொடுமைப் பாறை உடைத்து, இன்ப ஊற்றைத் திறக்கும்.  அவ்வின்பத்தில் தோய்ந்த பழந்தமிழ்ப் புலவர் பாடல்கள் முருகன் உறையும் அழகுக் கோயில்களாம்.  பழந்தமிழ் நூல்களைப் படிப்பதும் அழகெனும் முருகனை வழிபடுவதாகும்.

முருகன் இயற்கை வாயிலாகத் தனதழகை நாடோறும் பொழியாதிருப்பின் உலகில் அழகேது?  அழகில்லையேல் வாழ்வேது?  ஒருவனது வாழ்வு அவனது அழகையே பொறுத்து நிற்கிறது.  உடலில், நரம்பில் உரங்குன்றப் பெறுகிறவன் அழகுடையவனாயிரான்.  ஒருவனது உடல் நலத்தை அவனது அழகு புலப்படுத்தும் உலகிலுள்ள உயிர்களெல்லாம் உடல் நலமுற்று இன்பந் துய்த்து வாழ்தல் வேண்டும் என்னும் பேரருளா` முருகன் இயற்கை வாயிலாக அழகை உதவுகிறான்.  எம்பெருமான் நீலக்கடலில் காலையில் நெருப்புப் பிழம்புபோல ஞாயிறாக் புறப்பட்டு உலகுக் குதவாவிடின், உலகம் என்ன பாடுபடும்? அவன் திங்களாக அமுதம் பொழிந்து உலகுக் கின்ப மூட்டுவதை உணராத புலன்களும் புலன்களாமோ?  முருகன் மலையாக நின்றும், ஆறாக ஓடியும், காடாக விளங்கியும், கடலாக ஒலித்தும், உடலாக உடனிருந்தும் உயிர்களை ஓம்பிவரும் திருவருட்டிறத்தை எவரே புகழ வல்லார்?  முருகன் இயற்கை வாயிலாக ஆடிவரும் திருவிளையாடல்களை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

இயற்கை வாயிலாக முருகன் புரிந்து வரும் பேருதவியை மக்கள் நேரே பெறுவார்களாயின், அவர்கள் என்றும் அழியா அழகுடையவர்களா யிருப்பார்கள்.  இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வில் மக்கள் தலைபடலால், அவர்கள் விரைவில் அழகு குன்றி மாண்டுவிடுகிறார்கள்.  ஆதலால் மக்கள் இயற்கைக்கு அரணாமாறு வாழ்வு நடாத்தப் பயில்வார்களாக.

இயற்கை வாழ்வு நடாத்துவோர் உள்ளம், அழுக்காறு அவா முதலிய `யம தூதர்கள்’ உலவும் நிலமாகாது.  அவர்கள் உள்ளம் அன்பு இரக்கம் முதலிய `தெய்வ கணங்கள் வாழும் நன்னிலமாகும்.  அழுக்காறு அவா முதலிய பேய்த்தன்மைகள் மகனை நோய்வாய்ப்படுத்தி விரைவில் அவனைக் கொள்ளும்.  அவையில்லா அன்பு இரக்கம் முதலிய தெய்வ நீர்மைகள் ஒருவனது வாழ்வை வளர்க்கும்.  இதற்குரிய வழி இயற்கையழகாம் முருகை – முருகனை – வழிபடுவதாகும்.  `என்றும் இளையாய் அழகியாய்’ என்று முருகனது இயல்பை ஓதிய நக்கீரனார், `உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவரை யான் பின் செல்லேன்’ என்று அருளிச்செய்திருத்தல் காண்க.  என்றும் அழியா அழகை விரும்புவோர் எம்பெருமான் முருகனடியைத் தமக்குரிய புகலாக் கோடல் வேண்டும்.

இயற்கை வாயிலாக முருகு என்னும் அழியா அழகை உணர்ந்தவர் பால் என்றும் மணமே கமழ்ந்து கொண்டிருக்கும்.  அவர்மீது புலால் மணம் கமழாது.  அவர் மணத்துக்கென வேறு செயற்கைப் பொருளைத் தேடவேண்டுவதில்லை.

வைகறைத் துயிலெழுந்து, காலைக் கடனை ஒழுங்காக முடித்து, தண் புனலாடி, நறுங் காற்றில் மூழ்கி, ஞாயிற்றொளியிற் படிந்து, இயற்கை உணவுகொண்டு புறத்தை அழகு செய்தும், வாழும் ஒருவன் மீது இயற்கை கணங் கமழுமென்பது ஒருதலை.  இவ்வாழ்வு பெறாத சோம்பரின் புறத்திலும் அகத்திலும் அழுகல் நாற்றம் வீசும்.  இயற்கை வாழ்வு நடாத்தும் ஒருவனது உள்ளும் புறமும் முருகெனும் அழகு கோயில் கொள்கிறது.  அழகுள்ள இடத்தில் புலால் முடைக்கு இடமேது?  அழகில் மணமிருத்தல் இயல்பு. 

இயற்கை மணங்கமழப் பெறுவோர் என்றும் இளமையுடையராயிருப்பர்.  இயற்கை மணம் உடல் நலனுக்குக் கேடு சூழாது.  மக்களை முதுமை யணுகாதவாறு அம்மணங் காத்துவரும்.  அழகில் மணம் ஒன்றி நிற்றல் போல அதன்கண் இளமையும் ஒன்றி நிற்கிறது.  இளமை விரும்பாதார் உலகில் உளரோ?  அகவை முதிர்ந்த கிழவனும் மீண்டும் இளமை பெற விரும்புவன் இளமையில் மக்களுக்குள்ள காதலுக்கோ ரளவில்லை. இளமை முருகன் கூறுகளிலொன்று.  ஆகவே என்றும் இளமையுடையவராக வாழ விரும்புவோர் எம்பெருமான் முருகனை எப்பொழுதும் நினைந்த வண்ணமிருப்பாராக.

இயற்கைக்கு முதலாக (காரணமாக) உள்ள முருகு என்றும் இளமையா யிருப்பதால்,  இயற்கைப் பொருள்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றுகின்றன.  முருகின் இளமை குன்றுவதாயின், இயற்கையும் தன் செயலில் குன்றும்.  ஆனால் இயற்கை எத்துணைக் காலம் எவ்வெவ்வழியில் தொழிற்படினும், அஃது இளைத்துச் சலித்துச் சாய்வதில்லை.  என்னை?  முதலாகவுள்ள முருகு என்றும் இளமையாயிருப்பதால், வினையாகிய இயற்கையும் என்றும் இளமை என்னும் வளமை குன்றாமல், ஒரு பெற்றியாய்த் தன்செயலைச் சலிப்பின்றிச் சாய்வின்றி நடாத்திக்கொண்டு போகிறது.  ஆதலால் இயற்கைவழி முருகை யுணர்வோன் என்றும் இளையனாயிருப்பன்.

மலைக்கிழங்கை உண்டும், காட்டுப் பழங்களைத் தின்றும், வயல் மணிகளை (தானியங்களை)ப் புசித்தும், கடற்காற்றைப் பருகியும் வாழ்வோரை விரைவில் முதுமை அணுகாது.  இயற்கைப் பொருள்களைத் தங்கள் விருப்பப்படி வேறு பல பொருளொடும் புலாலொடுங் கலந்து அவித்துப் பதன்செய்து விலாப்புடைக்க உண்பதிலேயே பொழுது போக்கும் மாக்களை விரைவில் முதுமை அடர்ந்து வருத்தும்.  பெருந் திண்டியானும், களியாடல்களானும், தீயொழுக்கத்தானும் உடல் வளத்தைக் கெடுத்து, முதுமையென்னும் மூதேவியை மணந்துகொண்ட சிலர், மீண்டும் இளமையாஞ் சீதேவியை மணக்க முயல்கிறார்.  இம்முயற்சியில் தலைப்படுவோருட் சிலர் பொன் வெள்ளி இரும்பு இவைகளால் செய்யப்பட்ட மருந்துகளை உண்கிறார்; சிலர் நடைப் பயிற்சி குதிரையேற்றப் பயிற்சி முதலிய துறைகளிலிறங்குகிறார்; சிலர் படுக்கையோடு கிடந்து, `கடவுளே கடவுளே’ என்று வாயால் மட்டுங் கடவுளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  அமெரிக்கா, ​ெஜர்மனி முதலிய இடங்களில் முதுமை நீக்கி இளமைபெற இளங்குரங்குகளின் உயிர்ப்பு முளைகளைப் பெயர்த்து மக்கள் பால் அவைகளை அமைக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது.  ஓருயிர் நலத்துக்கு இன்னோர் உயிரைக் கொல்வது இயற்கைச் செந்நெறியாகாது.  இயற்கைக்கு மாறுபட்டு வாழ்வைத் தொடக்கத்தில் நடாத்திப் பின்னைச் சாக்காட்டுக் கஞ்சி மருத்துவம் முதலிய செயற்கை முறைகளைக் கையாள்வதினும், முன்னைய பிழை பாடுணர்ந்து இயற்கை அன்னையின் திருவருளைப் பெற, மீண்டும் அவள் அருள் நாடியுழைப்பின் அவள் இரங்கியருள்வாள்.

இயற்கைத் துணையால் முதியோர், இளமைப்பேறு பெறுதல் அரிதன்று.  அமெரிக்காவில் சில அறிஞர் இயற்கைத் துணையால் இளமைக்காக்க முயன்று வருகிறார்.  பண்டைத் தமிழ்நாட்டார் இயற்கையோடு முரண்படா வாழ்கு நடாத்தி, இயற்கை அழகாம் முருகனை வழிபட்டமையான், அவர் இளமை இன்பம் நுகர்ந்து வந்தனர்.  (குமரனை மன மொழி மெய்களால் தொழுவோர் என்றுங் குமரனாயிருப்பது இயல்பே.)  இளமை காக்க விரும்புவோர் என்றும் இளையனாக உள்ள முருகனைப் பொருள் தெரிந்து போற்றி உய்வாராக.  இயற்கை மணமும் மாறா இளமையும் உடைய ஒன்று எவ்வித மாறுதலும் எய்தாது.  அஃது என்றும் ஒரு பெற்றியதாயிலங்கும்.  மாறுபாடின்றி என்றும் ஒரு பெற்றியதாயிருப்பது கடவுளியல்பாகும்.  தோற்றம் ஒடுக்கமென்னும் மாறுதல் தத்துவத்துக்குண்டு.  மாறுதலில்லாக் கடவுள் தத்துவங்கடந்த தனிப்பொருளென்று அறிவு நூல்கள் முழங்குகின்றன.  இதுவே கந்தழி என்பது.  இயற்கை மணமும் மாறா இளமையும் மாறுதலுடைய தத்துவத்துக்கில்லை; அவை மாறுதலில்லாக் கடவுளுக்கேயுண்டு.  அழியா அழகில் இயற்கை மணமும், மாறா இளமையும் இருத்தல்போலக் கடவுட்டன்மையு மிருத்தல் காண்க.  இவையெலா முடைய ஒன்றை முருகன் என்று நம் முன்னோர் கொண்டனர்.  அம்முருகனை இடையீடின்றி வழிபட்டுவோரின் கடவுட்டன்மையும் பெறலாம்.

ஆகவே, முருகு என்னும் அழகில் மணமும் இளமையுங் கடவுட்டன்மையும் ஒன்றியிருத்தலுணர்க.

பழந்தமிழர் தாம் தொழுத கடவுளை அழகுப் பொருளாகவே கொண்டனர் என்பதற்குப் பல சான்றுகள் உள அச்சான்றுகளுள் இரண்டொன்று வருமாறு:

தமிழ் பிறந்த இடமும், தமிழ் வளர்த்த குறுமுனி வாழ்ந்த இடமும், தமிழ்ச் சங்கம் மருவிய இடமும் பாண்டிநாடு என்று சொல்லப்படுகிறது.  அப்பாண்டி நாட்டுப் பழைய மக்கள் தங்கள் ஆவலாய் அவிர்சடைக் கடவுளைச் சொக்கன் என்னும் பெயரால் வழிபட்டார்கள்.  (அச்சொக்கன் பின்னைச் சுந்தரேசனானான்).

சொக்கன் என்னுஞ் சொற்குரிய பொருளென்ன?  முழு அழகன் – பேரழகன் என்பது.  சொக்கு – பேரழகு.

பாண்டி நாட்டில் சிறப்புற்று விளங்கும் மற்றொரு பழம்பதியாகிய திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தமிழ்மக்கள் `அழகன்’ என்று போற்றியிருத்தலையும் உன்னுக.

`அழகனே ஆலவாயில் அப்பனே
                அருள் செய்வாயே’          
                                 – அப்பர்

`தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்
                சொக்கனே யஞ்ச லென்றருள செய்யெனை’

                                                                                                – ஞானசம்பந்தர்

`மொக்கனி யதனின் முழுத்தழல் மேனி
                சொக்க தாகக் காட்டிய தொன்மையும்’

                                                                                                – மாணிக்கவாசகர்

`பலபலநாளும் சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே’

                                                                                                – பெரியாழ்வார்

பண்டைத் தமிழர் அழகை அல்லது முருகைப் பொருளாகக்கொண்டு வழிபாடு நிகழ்த்தி வந்தனரென்பது வெள்ளிடைமலை.

இதுகாறுங் கூறியவாற்றான், மணம், இளமை, கடவுட்டன்மை, அழகு ஆகிய இவைகளின் பொருளாக முருகன் பொலிதலும், இந்நான்கனுள் ஒன்றாய அழகிடை ஏனைய மூன்றும் பிரிவின்றி விராவி நிற்றலும், அதனான் அவ்விராவுதலுடைய அழகை முருகெனக் கோடலும் பிறவும் பெறப்படுகின்றன.

முருகில் இவ்வியல்புகள் கெழுமியிருத்தலை யுணர்ந்த புலவர் பல்லோர், அவருள் பழையவர் நக்கீரனார்.  இவர் அருளிய திருமுருகாற்றுப்படையை, முருகில் ஒளிரும் நுண்ணியல்களின் பருமை அல்லது பரிணாமம் என்று கூறலாம்.  நூல் முற்றும் அவ்வியல்புகள் பொதுளி நிற்பினும், அவை வெளிப்படையாகவும் விளக்கமாகவும் நூலின் இறுவாயில் ஆசிரியரால் நிரலே பெய்யப்பெற்றிருக்கின்றன.  கீரனார், ‘அரும் பெறன் மரபின் பெரும்பெயர் முருக’ என்று முருகின் பெயர் வழித் தொன்மை குறித்து, அம்முருகில் திகழும் அழகையும், அவ்வழகினூடே பிரிவின்றி விராவி நிற்கும் மணம், இளமை, கடவுட்டன்மை என்னும் இவைகளையும் ஒருசேர வைத்து, `அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் – மணங்கமழ தெய்வத் திளநலங்காட்டி’ என்று கூறியிருத்தல் காண்க.  அணங்கிற்று ஈண்டு அழகுப் பொருள் கொள்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *