
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
4. இயற்கை வழி அழகைக் காண்டல்
[முருகும் இயற்கையும் உயிர்களும் – உயிர்கட்கு முருகன் இயற்கை வாயிலாகப் புரிந்துவருந் துணை – உயிர்கள் முருகனாதல் – அதற்குறிய வழி – எண்ணம் – அகம் – புறம் – இயற்கை வழிபாடு – புலனடக்கத்தின் நுட்பம் – திருமூலர் – ஆண்டகைமை – அப்பரும் புலனடக்கமும் – இறை யியல்பு – இயற்கைக்கும் புலன்கட்குமுள்ள தொடர்பு – இயற்கையும் புலன்களும் – புலவன் இயற்கையின் மகன் – இயற்கை வழிபாட்டின் கூறுபாடு – அழகுப் பொருள்கள் – பெண்மை வழிபாடு.]
முருகன் என்றும் இளையனாய், மணமுடையனாய்க் கடவுட்டன்மை யுடையனாய் அழகுடையவனாயிருத்தலால் உயிர்கட் கென்னை? உயிர்கள் அவ்வியல்களைப் பெறும் வழியுண்டுகொல்?
முருகன்பால் அவ்வியல்புகள் இயற்கையாய் அமைந்து கிடத்தற்குப் பொருளுண்டு. உயிர்களும் அந்திலை எய்தல் வேண்டும் என்பது முருகன் திருவுள்ளக்கிடக்கை. இயற்கைக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பைப்போல் முருகனுக்கும் உயிர்கட்குந் தொடர்புண்டு. இத்தொடர்பை உணர வேண்டுவது உயிர்களின் கடமை. முருகனோ உயிர்களைத் தன்னைப் போலாக்க ஆவல் கொண்டு நிற்கிறான். அவ்வாவலன்றி வேறு ஆவல் அவனுக்கில்லை. அவ்வாவலுடன் எப்பொழுதும் முருகன் இயற்கை வாயிலாக உயிர்கட்குத் துணை புரிந்தும் வருகிறான். ஞாயிறு, காற்று, புனல் முதலிய இயற்கைப் பொருட்களின் வாயிலாக முருகன் உயிர்களை ஓம்பா தொழிவனேல், உலகமேது? உயிரேது? வாழ்வேது?
நாடோறும் இயற்கை வாயிலாகத் தாங்கள் பெற்று வரூஉம் துணை இயற்கையினுடையதா அல்லது அதன் உள்ளுறையாக உள்ள முருகனுடையதா என்பதை உயிர்கள் உய்த்துணரல் வேண்டும். அத்துணை, இயற்கையினுடையது என்று கருதுவோர், இளமை மணம் கடவுட்டன்மை அழகு ஆகியவற்றைப் பெறல் அரிது. இயற்கை வாயிலாக முருகனுடைமையாய் அத்துணை பெறுவதை உணர்வோர் முருகனாகலாம்; அதாவது அவனது இயல்புகளைப் பெறலாம்.
முருகன் இயல்புகளாய இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகும் பெற ஒவ்வொருவரும் விரும்புவர். அவற்றை விரும்பாதார் அரியர். வெறும் விருப்பமட்டுங் கொள்வதிற் பயனில்லை. விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலே அறிவுடைமை. அதை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது? எம்முறைபற்றி நிறைவேற்றிக் கொள்வது?
முதலாவது வேண்டற்பாலது முருகைப்பற்றிய எண்ணம். முருகனை எண்ணும் போதெல்லாம் அவன் மணமுடையான், இளமையுடையான், கடவுட்டன்மையுடையான், அழகுடையான் என்று நினைத்தல் வேண்டும். அந்நினைவு கூடுதற்குப் புறத்தே அவ்வியல்புகளுடைய இயற்கைப் பொருட்கண்மீது கருத்தைப் பதியவைத்தல் வேண்டும்; அகத்தில் ஒன்று நிலைபெறுதற்கு அதன் தொடர்பாயுள்ள புறமும் அதனுடன் ஒன்றுதல் வேண்டும். என்னை? அகமே புறமாகலின் என்க. இரண்டிற்குந் தொடர்பிலா வாழ்வு செம்மைய தாகாது. ஆதலால், முருகை உணர்தற்கு அகப்புற ஒற்றுமை இன்றியமையாதது.
அகத்தின் வாயிலாகப் புறத்திற் புகுதல் ஒருமுறை. புறத்தின் வாயிலாக அகத்தை அணைவது இன்னொரு முறை. இரண்டனுள் முன்னையது மிக அரியது; இடர்ப்பாடுடையது; முடிவு காண்டல் என்னும் உறுதியுங் கூட்டாதது. பின்னையதோ எளியது; இயற்கையில் இயங்குவது; உறுதி கூட்டுவது. ஆகவே, புறவழி பற்றுதலையே ஈண்டு யான் கொள்கிறேன்.
முருகன் குணங்குறி கடந்தவன். அவனது இயல்புகளை உணர்வில் – நிகழ்ச்சியில் – பெறுதல் இயலுமே. உணர்வில் – நிகழ்ச்சியில் – அவைகளைப் பெறுதற்குத் தொடக்கத்தில் அவைகளின் பருமை நினைவு வேண்டற்பாலது. இதற்கு வழி என்னை?
முருகன் குணங்குறி கடந்த ஒருவனாயினும், இயற்கை அவனுக்கு உடலாக அமைந்திருக்கிறது. அவ்வுடல்வழி உயிராம் முருகை யணர்தல் கூடும். ஆகவே, முருமை உணர விரும்புவோர் இயற்கையைப் பற்றுக்கோடாகக் கோடல் வேண்டும். கொள்ளின், முருகை இயற்கை உணர்த்தும். உயிர்கள் இயற்கையோடும் உறவு கொள்ளும் அளவினதாக, அவைகளின்மாட்டு முருகன் உணர்வும் பெருக்கெடுக்கும். `இஃதென்ன! இயற்கை வடிவங்களை நாடோறும் காண்கிறும்; இயற்கையுடன் வாழ்கிறோம்; முருகைக் காண்கிறோமில்லையே’ என்று சிலர் கருதலாம். காண்பனவெல்லாம் காட்சியாகா. அங்ஙனே வாழ்வெல்லாம் வாழ்வாகா. புலன்களைத் தீய வழியில் செலுத்திக் கொண்டு, இயற்கையை ஒரேவழிக் காண்டலும், அதனுடன் வாழலும் முறையே அதைக்காண்பதுமாகாது; அதனொடு வாழ்வதுமாகாது. `முருகை இயற்கை உணர்த்தும்’ என்னும் உறுதியோடு, புலன்களை இயற்கைக்கு மாறுபட்ட நெறிகளில் தோயவிடாது, அவைகளை இயற்கையில் நிலைபெறுத்தி, இயற்கையுடன் கலந்த உறவு கொள்ளப் பயிலல் வேண்டும். இப்பயிற்சிக்கு முதல் முதல் வேண்டற்பாலது புலன் தூய்மை.
புலன்களின் பயிற்சிக்கேற்ற வண்ணம் உலகின் வாழ்வு அமைகிறது. புலன்கள் தீய வழியில் உழலின், வாழ்வுந்தீயதாகும். அவை நல்ல வழியில் இயங்கின், வாழ்வும் நல்லதாகும். ஈண்டுத் தீயவழி நல்லவழி என்பன முறையே செயற்கை இயற்கை வழிகளைக் குறிப்பனவும். புலன்கள் நிலையை வாழ்வு பொறுத்து நிற்றலான், அப்புலன்களைத் தூய்மைப்படுத்துவதில், இயற்கை வழி முருகைக் காண விழைவோர் கண்ணுங் கருத்துமாயிருப்பாராக.
`இறையா உணர்தற்குப் புலன்களை அடக்குமாறு ஆன்றோர் அறிவுறுத்தியிருப்ப, நீவிர் அப்புலன்களைத் தூய்மைப்படுத்துங்கள் என்று நவில்கிறீர். புலன்களை அடக்காது ஆடவிடுதலால் நலன் விளையுங்கொல்’ என்று சிலர் வினவலாம். சின்னாளாகப் புலனடக்கம் என்னுஞ் சொற்றொடர் தனக்குரிய பொருளிழந்து நிற்கிறது. புலனடக்கம் என்பதற்குப் புலனை ஒடுக்கி அழித்தல் என்னும் பொருள் சொல்லப்படுகிறது, அது தவறு. புலன் கெட்டால் அறிவேது? வாழ்வேது?
`யோகம் யோகம்’ என்று சில்லோர் புலன்களை ஒடுக்கி ஒடுக்கி முடிவில் அவைகளைக் கெடுத்துக் குருடராய்ச், செவிடராய், நோயராய் மாள்கிறார். புலன்கெட்ட ஒன்று அறிவற்ற பொருளாதல் வெள்ளிடைமலை. அறிவின் ஆக்கத்துக்கெனப் படைக்கப்பட்ட புலன்களை அறிவுக் கேட்டிற்குப் பயன்படுத்தல் எத்தகைய மடமை? புலன்கள் ஒடுக்கப்படுவனவாயின், அது ஏன் படைப்பில் அமைதல் வேண்டும்? ஆண்டவன் படைப்பில் பொருளற்றதொன்று தோன்றுமை? தோன்றவே தோன்றாது. ஆண்டவன் படைப்பில் தோன்றியுள்ள ஒவ்வொன்றும் பொருளுடையது; அருமையானது; வாழ்விற்குரியது.
புலன்கள் மக்கள் வாழ்விற்கெனப் படைப்பில் அமைந்துள்ள அறிவுக் கருவிகள். அவைகளின் வாயிலாகவே உயிர்கள் எல்லாவற்றையும் உளத்தால் உணர்தல் வேண்டும். புலன்கள் புறத்தையும் அகத்தையும் ஆற்றுப்படுத்தும் பெரும்புலவர்கள். அத்தகைப் புலவர்களை அடக்குவதும் ஒடுக்குவதும் இயற்கைக்கு மாறுபட்டு நடத்தலாகும்.
புலனடங்கி வாழுமாறு ஆன்றோர் அருளியதன் கருத்தென்னை? புலனடங்கி வாழுமாறு ஆன்றோர் அருளிய மெய்யுரைகளைப் பொன்னேபோல் போற்றுகிறுன். புலனடக்கம் என்பதற்கு ஆன்றோர் கொண்ட கருத்தை உணர்தல் வேண்டும். அன்னார் புலன்களைக் கெடுத்தொழிக்குமாறு ஒருபோதும் அறிவுறுத்தினாரில்லை. புலனடக்கத்தைப் பிறழக் கொண்டு, புலன்களைக் கெடுத்து, உலகம் இடர்ப்படப் போகிறதென்று அஞ்சி, யோக நெறியில் தேர்ச்சி பெற்ற திருமூலனார்,
`அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆகுமென்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே’
என்று கூறிப்போந்தார். இத்திருமூலனாரே பல இடங்களிற் புலனடக்கங் கூறியுள்ளார். அப்புலன் அடக்கம் என்பதற்குப் புலன் கேடு என்பது பொருளாயின், அவர் `அஞ்சும் அடக்கடக்கென்பர் அறிவிலார்’ என்னும் திருமந்திரத்தை ஓதியிரார். ஆகவே புலனடக்கம் என்பதன் பொருள் ஓர்தல் வேண்டும்.
புலனடக்கமென்றால் என்னை? புலன்களைத் தீய வழியில் செல்லாதவாறு காத்தலே புலனடக்க மென்பது; புலன்களைக் கெடுத்தல் என்பதன்று. நாவடக்கம் – வாயடக்கம் – கையடக்கம் என்னும் வழக்குகளை நோக்குக. `ஒன்றையுந் தின்னாதே; பேசாதே; செய்யாதே’ என்று முறையா பொருள் கொள்ளலாம் போலும்! `பொருந்திய உணவை அளவாக உண்; தீயவனவற்றையும் பயனில் சொற்களையும் பேசாது வாய்மையைப் பேசு; பிறர் பொருள் கவரல் முதலியனவற்றைச் செய்யாது நல்லனவற்றைச் செய்’ என்று அவ்வழக்குத் தொடர்க்குப் பொருள் கூறல் மரபு. அங்ஙனே புலனடக்கம் என்பதற்கும் பொருள் கோடல் வேண்டும். புலனடக்கம் என்பது புலன் அழிவைக் குறிப்பதன்று. இத்தொடர் புலன்களை நெறியில்லா நெறியில் செலுத்தாமையைக் குறிப்பதென்க.
இயற்கையுடன் உறவுகொண்டு, புறத்தையும் அகத்தையும் ஒன்றச் செய்து, உயிர்கட்கு இன்பமூட்டப் படைப்பில் அமைந்துள்ள புலன்களை அவா என்னும் பேய்க்கும், மற்றும் பல செயற்கை நரகத்துறைகட்கும் அடிமைப்படுத்தல் இயற்கையையும், அதன் உள்ளுறையாம் முருகையும் மறப்பதாகும். இம்மறப்புள்ள மட்டுந் துன்பம் நீங்காது.
உலகில் ஆண்டகைமை என்னுஞ் சொல் வழங்கப் படுகிறது. எது ஆண்டகைமை? அவா முதலிய பேய்கட்கு புலன்களை அடிமைப்படுத்தாது காப்பதே ஆண்டகைமை; இவ்வாண்டகைமையுடைய ஒருவனே மகன்; ஒருத்தியே மகள் என்க.
`உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து’
என்றார் திருவள்ளுவனார்.
பெரியோர் புலன்களை நோக்கி, `நீங்கள் கள்ளர்கள்; வஞ்சகர்கள்; பேய்கள், உங்களைக் கொல்லல் வேண்டும்; அடக்கள் வேண்டும்; ஒடுக்கல் வேண்டும்’ என்று பலதிறமாகப் பேசியிருத்தலைப் பற்றியுஞ் சிலர்க்கு ஐயந் தோன்றலாம். புலன்கள், அவா முதலிய பேய்கட்கு எளியனவாகும்போது, அவைகளைக் கடிந்து, நன்னெறியில் திருப்பவேண்டி, அவைகளை நொந்தும், வைதும், குறைகூறியும் பெரியோர் பேசுவது வழக்கம். இதுகுறித்து ஈண்டு விரித்துக் கூறல் வேண்டுவதில்லை. இதைப்பற்றிப் `பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’ என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன். ஈங்கு ஒரு பெரியார் கருத்தை எடுத்தாளும் அளவில் நின்று மேற்செல்ல விரும்புகிறேன். எப்பெரியாரை ஈண்டுக் கொள்வது நலன்? அகவையிலும், அறிவிலும், அன்பிலும் முதிர்ந்த அப்பரம்பெருமானாரைக் கொள்கிறேன்.
அப்பெரியார்,
`படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேதுகின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே யிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே’
`புழுப்பெய்த பண்டிதன்னைப் புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமெ யொன்று மில்லைச்
சழக்குடை யிதனு ளைவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆருர்மூ லட்ட னீரே’
`உயிர்நிலை யுடம்பே காலா யுள்ளமே தாழி யாகத்
துயரமே யேற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து மிக்க
அயர்வினா லைவர்க் காற்றே னாரூர்மூ லட்ட னீரே’
`பக்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்டனீரே’
`புள்ளுவ ரைவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை பொள்வர் தூநெறி விளைய லொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே’
இத்திருப்பாக்களால், புலன்கள் தீயவழியில் தம்மை யீர்த்து அலைத்தலையும், அவைகளின் கொடுமைகளையும் விளக்கியவாறும், அக்கொடுமைகளினின்றும் விடுதலையடைவான் ஆண்டவனைக் குறையிரந்து வேண்டுமாறுங் காண்க.
தீய வழியுழலும் புலன்களை அடக்கியாளல் வேண்டுவது அறிஞர் கடமை. அப்பர் சுவாமிகள் புலன்களை நல்வழிப் படுத்தவே முயன்றார். புலன்களைத் தீயவழியினின்றுங் காத்து, அவைகளை நல்வழிப்படுத்த அப்பர் முயன்றாரேயன்றி, அவைகளை அழித்துத் தாமும் அவைகளுடன் அழிய முயன்றாரில்லை. தீநெறியில் தம்மை ஈர்க்கும் புலன்களைக் கடிந்து, அவைகளை நோக்கி, நம் ஆண்டகை என்ன கட்டளை யிடுகிறார் பாருங்கள்!
`கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசிநின் றாடும் பிரான் தன்னைக்
கண்காள் காண்மின்களோ’
`செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிற மெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களே’
`மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணணை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்’
`வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்தனை
வாயே வாழ்த்துகண்டாய்’
`ஆக்கை யாற்பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றியென் னாதில்
வாக்கை யாற்பயனென்’
புலன்கள் எதற்காகப் படைக்கப்பட்டன? அன்பர்களே! அப்பர் அருண்மொழியை உற்று நோக்குங்கள்; உன்னுங்கள் புலன்களின் கடனை உணருங்கள். நலன்தரும் புலன்களையா கெடுப்பது? அழிப்பது? அந்தோ! கொடுமை! கொடுமை! ஆகவே, புலன்களைத் தீய பேய்வழியில் உழலாதவாறு காத்து, இறை வழியில் திருப்புவதே அவைகளைத் தூய்மைப் படுத்துவதாகும்.



