
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்
8. உறுதியும் நோன்பும்
(முருகன் வழிபாட்டுக்கு உறுதி இன்றியமையாதது – ஏட்டுக் கல்வி – உறுதியும் அன்பும் – உறுதியின் பெற்றி – உறுதியின் முற்கால தற்கால நிலை – உறுதியும் ஆண்டவனும் – தமிழ் மக்களும் உறுதியும் – உறுதி யுடையார்க்கு மருந்து இயற்கை – மருத்துவன் முருகன் – திருக்கோயில் வழிபாட்டில் உறுதி – இவ்வழிபாட்டின் நுட்பம் – கிறிஸ்து – கடவுள் ஒருவரே – உடலோம்பல் – நோன்பு – நோன்பு கொள்ளும் முறைப்பாடு – நோன்பால் விளையும் நலன்கள் – வழிபாடு.)
முருகனை வழிபடுவோர்க்கு முருகனிடத்து இடையறாத உறுதியிருத்தல் வேண்டும். உறுதியின்றிச் செய்யப்படும் வழி பாடுகள் போலியாகவே முடியும். கடல் பொங்கி வரினும், மலை குலைந்து சாயினும், வானிடிந்து வீழினும் ‘முருகன் காப்பான்’ என்னும் உறுதி முருகன் வழிபாட்டிற்கு அடிப்படையானது. இவ்வுறுதியுடையார் விரும்பும் எல்லா நலங்களையும் பெறுவர். இன்றியமையாத அருட்செல்வம் முதலிய எல்லாச் செல்வங் களையும் முருகன் அவர்க்கு அளிப்பன். முருகப்பெருமான் தன்னை வழிபடும் அன்பர்க்குத் தோன்றாத் துணையாய் நின்று செய்துவரும் பேருதவி, அவன் அடியவர்க்குத் தெரியும். உறுதி யால் முருகனிடத்து எல்லாம் பெறலாம்.
ஒன்றனிடத்தில் உறுதி எல்லார்க்கும் உறாது; உறுதி சிலர்க்கு எளிதிலும் சிலர்க்கு அரிதிலும் உறும்; சிலர்க்கோ எளிதிலாதல் அரிதிலாதல் உறுதி உறுவதில்லை.
உறுதிப் பேற்றிற்கு ஏட்டுக்கல்வி ஆராய்ச்சி வேண்டும் என்னும் நியதியில்லை. சில வேளைகளில் ஏட்டுக் கல்வி ஆராய்ச்சி முதலியன உறுதிக்கு இடையூறு நிகழ்த்துவனவாகவும் முடி கின்றன. சிலபோழ்து அவை உறுதிக்கு ஒரோவழித் துணை புரிதலுமுண்டு. ஏட்டுக் கல்வி ஆராய்ச்சி முதலியன இல்லாதா ரிடத்து உறுதி எளிதில் விரைவில் கால்கொள்வது இயல்பா யிருக்கிறது. ஏட்டுக் கல்வி ஆராய்ச்சி முதலியவற்றிற்கும் உறு திக்குந் தொடர்பில்லை என்பதொன்றே ஈண்டுக் கொள்ளற் பாற்று.
உறுதிக்கு இன்றியமையாதது ஒன்றுளது. அஃது அன்பு அன்பாகும். எவனுக்கு எப்பொருளிடத்து அன்பு நிலைத்து முருகு எழுகிறதோ, அவனுக்கு அப்பொருளினிடத்து உறுதியும் படிந்து நிலைத்து நிற்கும். ஆகவே உறுதி, அன்புடன் தொடர்புடையதெனக் கொள்க.
உறுதி, தன்னைக் கொள்வோரையும், தன்னால் கொள்ளப் படுவோரையும் அல்லது கொள்ளப்படுவதையும் ஒருமைப் படுத்தும் பண்பு வாய்ந்தது. உறுதி இரட்டை யுணர்வை அழிப் பது. இரண்டற்ற உறுதியில் என்ன நிகழாது? நினைந்த எல்லாம் நிகழும். இல்லா ஒன்றை உண்டு என்னும் உறுதிகொண்டு ஒருவன் நோக்கினால், அதன் உண்மை அவனுக்குப் புலனாகும். உள்ள ஒன்றை இல்லை என்னும் உறுதி கொண்டு அவன் நோக்கினால், அஃது அவனுக்குப் புலனாகாது. உள்ள ஒன்றை இன்மைப்படுத்தும் அல்லது இல்லா ஒன்றை உண்மைப்படுத் தும் ஆற்றல் உறுதிக்கு உண்டு. இத்தகைய உறுதியில் ஒன்றி நிற்கும் ஒருவனால் என்ன ஆற்றல் இயலாது?
ஓரன்பன், தன் வழிபடுங் கடவுளிடத்தில் குலையாத நிலைத்த நிறைந்த உறுதிகொண்டு பழகுவனேல், அவ்வுறுதி, கடவுள் திருவருளை அவனுடன் இரண்டறக் கலக்குமாறு செய்யும். அவன் கடவுளாவன் என்றுஞ் சொல்லலாம். அவன் என்ன நினைந்து வேண்டினும் பெறுவன். செயற்கருஞ் செயல் களும் அவனால் நிகழ்த்தல் இயலும். அவன் மனங்கொள்ளின் எல்லாம் வல்ல சித்தனும் ஆதல் கூடும். உறுதிக்குள்ள அளவில் லாத வல்லமையைச் சொல்லால் சொல்லுந் தகையதன்று.
மிகப்பழைய காலத்தில் மக்களிடை உறுதி நிலைத்திருந் தது. அதனால் அவர்கள் பல அருவினைகளும் ஆற்றினார்கள். நாளடைவில் மன்பதைக்கண் உறுதி குலையலாயிற்று. இந் நாளிலோ உறுதி பெரிதுங் குலைந்து பட்டதென்று கூறல் மிகை யாகாது.
‘உறுதி குலைந்து விட்டாலென்னை? அதனால் என்ன கேடு விளைந்தது’ என்று கடாவுவோர் இருக்கிறார். இக்கடா விற்குப் பலபட விடையிறுக்க வேண்டுவதில்லை. உறுதிக் குலை வால் உலகம் உள்ளொளி (ஆத்ம சக்தி) இழந்து, புறக்கருவிகட்கு அடிமையாகியது என்றும், அதனால் வாழ்வின் துறைகளில் இசை படர்ந்து நிற்பது ஒழிந்தது என்றும் சுருங்கிய முறையில் விடையிறுக்கலாம்.
இருவர் நோய்வாய்ப்படுவதாக வைத்துக் கொள்வோம். இவருள் ஒருவன் ஏட்டுக்கல்வி ஆராய்ச்சி யுடையவன்; ஆனால்கடவுளிடத்து உறுதியில்லாதவன். மற்றொருவன் ஏட்டுக்கல்வி ஆராய்ச்சி யில்லாதவன்; ஆனால் கடவுளிடத்து உறுதியுடைய வன். முன்னவன் தான் நோயுற்ற காரணத்தை ஆய்ந்து ஆய்ந்து, ‘அவர் சொல்லும் மருந்தையும் இவர் கொடுக்கும் மருந்தையும்’ உண்டு திண்டாடிக் கொண்டிருப்பன். பின்னவனோ ஆண்டவ னிடத்தில் உறுதியுடைய னாதலான், இவன் ‘இறைவனே! நோய் தீர்க்க’ என்று வேண்டுதல் செய்யும் வாயிலாக நலம் பெறு கிறான். இவன் நோய் போக்கியது கடவுளா உறுதியா எனில், கடவுள் என்று யான்கழறேன்; உறுதியென்றே உரைப்பேன். உறுதி இல்லாவிடத்துக் கடவுள் திருவருள் இன்மையானும், உறுதியினூடே திருவருள் கலந்து நிற்றலானும் ஈண்டு உறுதிக்கு உயர்வளிக்கப்பட்டதென்க. கடவுள் திருவருள் உறுதியள வாகவே தன் வினைபுரியும் என்பதும் ஈண்டுக் கருதற்பாலது. உறுதி, நம்பிக்கை அல்லது விசுவாசம் எல்லாஞ் செய்யும்.
பண்டைத் தமிழ் மக்கள் முருகன்பால் மிக உறுதி கொண்டு வாழ்வு நடாத்தினார்கள். அவர்கள் கொண்ட முருகன் எவன் என்று ஈண்டு மீண்டுங் கூறவேண்டுவதில்லை. பழந்தமிழர் போற்றிய முருகன் இயற்கையை உடலாக்கொண்டு, அதை இயக்கும் செம்பொருள் என்பது முன்னர் விளக்கப் பட்டது. அம் முருகனிடத்து உறுதிகொண்ட மக்கள், இளமை மணம் கடவுட்டன்மை அழகு முதலிய இயற்கை யருட்செல்வம் பெற்றுச் சிறந்து வாழ்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வாழ்வுடையார் நோய்வாய்ப்படல் அரிது. ஒரு வேளை படநேரின், அவர் மருந்தையும் மருத்துவனையும் நாடி ஓட மாட்டார். அவர்க்கு மருந்து இயற்கை; மருத்துவன் முருகன். அவர், ஞாயிற்றொளி காற்று புனல் முதலிய இயற்கைப் பொருண்மாட்டுக் கொண்டுள்ள உறுதியாலோ, அல்லது இயற்கை நினைவூட்டும் இயற்கைச் சாயலாக நிலவும் (முன்னர் வழிபாட்டில் குறிப்பிட்ட) பொருண்மாட்டுக் கொண்டுள்ள உறுதியாலோ, வேண்டுதல் வாயிலாக நோய் போக்கி வந்தனர். வேண்டுதல் பழக்கம் இன்னுஞ் சிலவிடங்களில் ஆட்சியிலிருக் கிறது.
பழந்தமிழ் மக்கள் வழி வழி வந்த இக்காலத் தமிழ் மக்களிற் சிலர் நோயால் பீடிக்கப்படும்போதும், வேறு பல குறைகளால் வருந்தும்போதும், முருகனை நோக்கி வேண்டுதல் செய்து, அவன் திருக்கோயில் சென்று, தொண்டு புரிந்து, நோயும் குறைகளும் நீங்கப் பெறுகின்றனர். இவர்மாட்டும் இயற்கை முருகன் உறுதிப்பாடு குறைவு பட்டிருத்தல் வெள்ளிடைமலை.ஆனால் இவர்பால் இயற்கையின் சாயலாகவுள்ள திருக்கோயில் உறுதிப்பாடு நிறைந்து நிற்கிறது. எதன் மீதோ உறுதிப்பாடிருத் தல் நன்று.
முருகக்கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தணிகை, திருப் போரூர், திருமயிலம், திருவாவினன்குடி (பழனி), திருப்பரங் குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) முதலிய திருப்பதி களில் மக்கள் உறுதி மேலீட்டான் நிகழ்த்துஞ் செயல்களை இன்றுங் காணலாம். இச்செயல்கள் இக்கால ஆராய்ச்சி யுடையார்க்கு மிக இழிவாகத் தோன்றும். உறுதியுலகம் வேறு; ஆராய்ச்சி யுலகம் வேறு.
திருப்பதிகளிலுள்ள கோயில்களும், கோயில்களிலுள்ள வடிவங்களும், உறுதியில் ஒன்றித் திளைத்து நிற்போர்க்குக் கல் மண் செம்பாகத் தோன்றா. அவை அவர்க்கு முருகாகவே தோன் றும். மரத்தால் ஆக்கப்பட்ட ஓர் அழகிய புரவியை மரம் என்னுங் கருத்துடன் நோக்கும்போது ஆண்டுப் புரவியில்லை. அதைப் புரவி என்னும் நினைவுடன் பார்க்கும்போது ஆங்கு மரமில்லை. கோயில் வழிபாடும் இத்தன்மைத்தே. இது குறித்துச் ‘சைவத் தின் சமரசம்’ என்னும் நூலிலும் எனது கருத்தைத் தெரிவித் துள்ளேன்.
ஏட்டுக்கல்வி அறிவால் ‘இது கல்தானே – மண்தானே – செம்புதானே’ என்று ஆராய்வோர்க்கு’ வடிவம் கல் – மண் – செம் பாகவே காட்சியளிக்கும். கல் – மண் – செம்பு – என் செய்யும் பாவம்! உறுதியுடையார் ஒரு பொருளினிடத்து எவ்வெவ்வியல்பு களிருக்கின்றன என்று எண்ணுகிறாரோ, அவ்வவ் வியல்புகள னனைத்தும் அப்பொருளில் பிறங்கும். இஃது உறுதியினின் றெழும் எண்ணத்தின் ஆற்றலாகும். மக்கள் உறுதிகொண்டு அப் பொருளை நோக்கி, வேண்டுதல் செய்யும்போது, அவ்வியல்பு களை அவர்கள் பெறுகின்றார்கள். அகப்புற ஒருமைப்பாடு கூட்டவல்ல உறுதியால் பலதிற அற்புதங்களும் நிகழ்த்தல் கூடும். திருக்கோயிலில் உறுதியுடையார் அத்திருக்கோயில் வாயிலாக எல்லாம் பெறலாம். காரணம் உறுதி உறுதி என்பதை எவரும் மறத்தலாகாது.
உறுதியால் எல்லாம் ஆற்றலாம்; எல்லாம் பெறலாம். இதுபற்றிக் கிறிஸ்துநாதர் மிகத் திறம்பட உலகிற்கு அறிவுறுத்தி யிருக்கிறார். இந்நாளில் பல காரணங்களால் நம்பிக்கை இறந்து பட்டு வருகிறது. நம்பிக்கை மாய்ந்து வருவதால் வேண்டுதல் களுங் கைகூடுவதில்லை. கிறிஸ்துவத் திருச்சபையில் சேர்ந்தசிலர், அமெரிக்கா முதலிய இடங்களில், கடவுளை வழுத்தி, நோய் தீர்த்து வருவதைச் சஞ்சிகைகளில் நாம் படித்து மகிழ் வெய்துகிறோம். நோயாளரிடத்தும், நோய் போக்க ஆண்டவனை வேண்டுவோரிடத்தும், நம்பிக்கை என்பது நிரம்பி முற்றி நிற்றல்வேண்டும். இல்லையேல் விரும்பியது நிறைவேறாது. நம்பிக்கையால் மக்கள் கடவுளாகலாம்.
ஆண்டவன் ஒருவனே. அவனுக்குரிய நெறியும் ஒன்றே. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றார் திருமூலனார். ஓர் ஆண்டவன் உலகில் பல மொழியில் பல பெயரால் போற்றப் படுகிறான். ஒரு நெறி பன்னெறிகளாகப் பிரிந்து நிற்கிறது. எல்லாம் வல்ல அன்புப் பொருளை எவர் எப்பெயரால் எந்நெறி நின்றேனும் வழிபடலாம். பல பெயர்களும் பலநெறிகளும் பய னளிக்க மாட்டா. வேண்டுவது உறுதி. உறுதி கொண்டு கட வுளை எப்பெயரால் வேண்டினாலென்ன? பெயரால் விளை வது ஒன்றுமில்லை. விளைவது உறுதியால் என்க. சமயத்தவர், ‘உன் கடவுள் என் கடவுள்’ என்று பூசலிட்டுப் பொன்றுவதினும், அவரவர் தாம் தாம் விரும்புங் கடவுள்மீது உறுதிகொள்வாராக. உறுதி உய்வளிக்கும்.
பண்டைத் தமிழ்மக்கள் மனோ உறுதியால் முருகனை வழிபட்டு, இளமையையும் மணத்தையும் கடவுட்டன்மையை யும் அழகையும்பெற்றுச் செயற்கருஞ் செயல்களை நிகழ்த்தி னார்கள். அந்நாளில் முருகனை உறுதியால் வழிபட்டுச் செயற் கருஞ் செயல்களாற்றிப் பெறற்கரும் பேறுபெற்றோர் வரலாறு களை வாசித்து உண்மை உணர்வோமாக. அம்மக்கள் கொண்ட உறுதிப்பாட்டை நாட்டில் மீண்டும் உயிர்ப்பிக்க ஆங்காங்குள்ள திருநெறிக் கழகத்தார் உழைப்பாராக. நமது நாட்டுத் தற்கால ‘மூதறிஞர்’, முருகனை வழிபடும் அடியார்களின் உறுதியைக் கெடுக்க முயற்சி செய்யாதிருப்பாராக.
முருகப் பெருமானை நம்பிக்கையால் வழிபட்டு நலனடைந் தோர் வரலாறுகள் எண்ணிறந்து கிடக்கின்றன. இன்றும் நம்பிக்கையுடையார் குறைகளை முருகன் களைந்து வருகிறான். உறுதிக்கேற்ற அளவாகவே குறைகள் களையப்படும். உறுதி யின்றி, ‘முருகா முருகா’ என்று பல்லாண்டு போற்றினுங் குறைகள் களையப்பட மாட்டா. ஆதலால் வேண்டற்பாலது உறுதி உறுதியே.
உறுதி நிலைபெறுதற்குப் பலதிற முறைகளுண்டு. அவைகளுள் எவரும் எளிதில் ஆற்றக்கூடியன இரண்டு. ஒன்றுநோன்பு; மற்றொன்று வழிபாடு. இவ்விரண்டனுள் பிற முறைகள் யாவும் அடங்கும்.
நோன்பு அல்லது விரதத்தால் உடல் வளம் பெறும். உடல் வளன் உயிர்நலனுக்குத் துணைபுரியும். மனோ உறுதிக்கு உடல் நலன் இன்றியமையாதது. உடல்நலமிலா ஒருவன் நிலைத்த நெஞ்சம் பெறல் அரிது. நிலைத்த நெஞ்சத்துக்கு நல்லுடல் தேவை. நிலைத்த நெஞ்சிலேயே உறுதி கால்கொள்ளும். உறுதி நிலைக்கும் நெஞ்சம் பெறாத மகன், அந்தோ! ஏன் பிறந்தான்? அவன் எல்லாச் சிறுமைகட்குங் களியாடல்களுக்கும் எளிய னாய்ப் பிறவிப் பேற்றை இழக்கிறான்! உடல் வளனுக்குக் கேடு சூழுந் தீயொழுக்கங்கட்குக் காரணம் நெஞ்சில் உறுதியின்மை யாகும். யாண்டுமுள்ள அழகை உணர்தற்கு முன்னர்த் தன்பால் அவ்வழகை எழுந்தருளச் செய்வது அறிஞன் கடமை. ஆதலால் அழகொழுகும் நல்லுடல் பெற முயல்வதே அறிவுடைமை. நல்லுடல் நோன்பால் அமையும்.
பொருந்தா உணவு உண்டும், பெருந்திண்டி தின்றும், இயற்கைக்கு மாறுபட்ட பலவேறு வினைகளாற்றியும் மக்கள், தங்கள் உடலில் அழகுக் கடவுள் அமரவொண்ணாவண்ணம், உடல் நலனுக்குக் கேடு சூழ்ந்து கொள்கிறார்கள். உடலுக்கு உறுங் கேடுகளைப் போக்கிக் கொள்ளப் பல முறைகள் கையாளப்படுகின்றன. அவைகளுள் சிறந்த ஒன்று நோன்பு.
நோன்பு இயற்கையின் பாற்பட்டது. அளவோடு உணவு கொண்டு, நல்வழியில் வாழ்வு நடாத்துவோரும் உடல்நலன் பெருக நோன்புகொள்ளலாம். நோன்பு, உள்ளுறுப்புக்களில் சேர்ந்துள்ள பழைய அழுக்குகளைத் தள்ளி, அவ்வழுக்குகளால் குவிந்த நச்சுப் பொதிகளை நீறுபடுத்தி, வெம்மையைத் தணித்து, இயற்கை வழிக் குருதியையோட்டி, நரப்புக் குலைவை ஒழுங்கு படுத்தி, உரமூட்டி, உறுதி நிலைக்கத்தக்க உள்ளம்பெறும் உடலை நல்கும். நல்லுடல்வழி மனோ உறுதியையும், உறுதிவழி அழகெனும் முருகையும் பெறலாம்.
நோன்பு வாரத்துக்கொருமுறையும், திங்கட்கொரு முறையும், ஆண்டுக்கு ஆறுநாளுங் கொள்வது தகுதி. உடல் நிலைக்கேற்றவாறு நாட்களைக் கூட்டல் குறைத்தல் செய்து கொள்ளலாம். வாரத்துக்கொருமுறை செவ்வாய்க்கிழமை தோறும் நோன்பிருக்கலாம். திங்கட் கொருமுறை கார்த்திகை தோறும் நோன்பு கொள்ளலாம். ஆண்டுக்கொருமுறை ஐப்பசி சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம். இம் மூன்றும் முருகனுக்குரியசிறந்த நோன்புகள். வேறு பல நோன்புகளையும் முறையாகக் கொண்டொழுகுவோர் ஒழுக.
‘நோன்பு நோன்பு’ என்று ஒருவேளை பலதிறக் காய்கறி வடைபாயசங்களோடு விலாப்புடைக்கச் சோறு உண்டு, மற்றிருவேளை, ‘பலகாரம் பலகாரம்’ என்று பலதிற உணவு களை வயிறுகிழியத் தின்பது நோன்பாகுமோ? நோன்பென்ப தற்கு மற்றைய நாளினும் நன்றாக விலாப்புடைக்க உண்டு கழிப்பதென்பதோ பொருள்? இந்நாளில் நோன்புமுறை இவ் வாறாயிற்று!
நோன்பு முறையாக நிகழ்த்தப்பெறல் வேண்டும். நோன்புக் கெனச் சில முறைகளுண்டு. விரிவு நோன்பைப்பற்றிய தனி நூல்களிற் காண்க; அல்லது நோன்பினர்பால் கேட்டுத் தெளிக.
நோன்புநாளுக்கு முன்னாளிரவே ஒன்றும் உண்ணாது நீரருந்தல் வேண்டும். அதுமுதல் மற்றைநாள் பகல் முழுவதும், தொடர்ந்தே இரவு முழுவதும், எவ்வித உணவுங் கொள்ளலா காது. வறட்சி தோன்றும் போது அடிக்கடி தூய தீம்புனல் சிறுகச் சிறுக அருந்திக்கொண்டிருத்தல் நல்லது. இல்லையேல் உள்ளுறுப்புக்களில் வெம்மை மதர்த்தெழுந்து உடலுக்குக் கேடு நிகழ்த்தும். நீர் அருந்துவதால் அடிக்கடி சிறுநீர் இழி தரும். சிறு நீரில் வெம்மையுறுமேல் நீர் அருந்தலைச் சிறிது பெருக்கல் வேண்டும். சிறுநீர் பெய்யும்போது எரிவின்றித் தண்மை நிலவு தல் செவ்விய நோன்புக்கு அறிகுறி. இம்முறையால் உறுப்புக் களைத் தண்மைப் படுத்துவது பொருத்தம். மூன்றாம் நாள் வழக்கம் போலக் காலைக்கடன்களை முடித்து உணவுகொள்ள முற்படுவது ஒழுங்கு. உணவென்று திண்ணிய பொருளை அடைத்தல் கூடாது. அவ்வாறடைப்பதால் உடலுக்கு நோய் நேரும். முதலில் நீர் அருந்திச் சிறிதுநேரங் கடந்து நீர் மோரோ பழச்சாறோ பருகி, இன்னுஞ் சிறுபொழுது கழித்துப் பாலோ கஞ்சியோ குடித்துப் பின்னை வழக்கம்போல உணவுகொள்வது நலன்.
நோன்பு வேளையில் எக்காரணம் பற்றியும், பகைமை, பொறாமை, சீற்றம் முதலியன உளத்தில் எழலாகாது. அவை எழும் முயற்சிகளில் நோன்பிகள் தலைப்படலாகாது. அவை எழின், அவை குருதியைக் கருக்கி நரப்புக்களை அரிக்கும். நோன்பு வேளையில் நெஞ்சம் அன்பில் தோய்ந்து நிற்றல் வேண்டும். முருகனை நினைத்தல், அவன் திருப்புகழை ஓதல் – கேட்டல், அவனருள் பெற்ற மெய்யடியார் வரலாறுகளைச்செவிமடுத்தல் முதலிய நல்வழிகளில் நோன்புநாட்களைக் கழித்தல் சிறப்பு. சீட்டாடல் முதலிய களியாடல்களில் காலங் கழிப்பது தவறு.
அவரவர் தத்தம் உடல்நிலைக் கேற்றவண்ணம் இரண்டு நாள் மூன்றுநாள் முதல் சின்னாள் நோன்பிருக்கலாம். அளவுக்கு மீறி நோன்பிருத்தல் கூடாது. இத்துணை நாள் என்பதை உட லின் இயற்கை அறிவுறுத்துமாறு கணித்துக்கொள்ளல் பொருத் தம்.
வார நோன்பு, திங்கள் நோன்பு, ஆண்டு நோன்பு ஆகிய மூன்றையுங் குறைவற நிறைவேற்றும் மக்கள், நல்லுடல் வாழ்வும் உயிர் வாழ்வும் பெறுவார்கள். அவர்களை நோய் அணுகவே அணுகாது. நோன்பின் மாண்பை விளக்கப் பண்டைநூல் கதைகள் வேண்டுவதில்லை. இப்பொழுது நம்மிடை வாழுங் காந்தியடிகள், நோன்பின் மாண்பிற்கே ஓர் இலக்கியமாக விளங்குதல் காண்க.
நோன்பில் தலைப்பட்டு, உள்ளொளி பெருக்கிய தலைவர் தலைவியர்க்குப் பிறந்தவரே நமது நாட்டு முனிவரர்; சமயாச் சாரியர்; கவிராயர்; வீரர் முதலியோர். நோன்பு மிகுந்த நாளில் குமரர்களுங் குமரிகளுந் தெருக்களில் மயில் குயிலென ஆடிக் கொண்டிந்தார்கள்; பாடிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுதோ கட்டழகுக் காளையரையுங் கன்னியரையுங் காண்டல் அரிதா யிருக்கிறது. காரணம் நோன்புக் குறைபாடேயாகும். என்றும் அழியா அழகுநிலை எய்துதற்கு முதற்படி நோன்பு என்னலாம். இது நிற்க.
வழிபாட்டைப் பற்றி விரித்துக்கூற வேண்டுவதில்லை. வழிபாட்டு முறைகள் சில மேலே சொல்லப்பட்டன. வழி பாடாவது இயற்கையாயுள்ள எந்நெறிக்கும் மாறுபடாது வினையாற்றுவது. இயற்கைச் செந்நெறியாவது எவ்வுயிரையும் முருகெனக் கொண்டு வழிபடுவது.
நோன்பு, வழிபாடு முதலிய நல்லொழுக்க முறைகள் மக்கள் வாழ்வு குலையாதவாறு காத்துவருவன. மக்கள் உடலை வளர்க்கும் வல்லமை (சக்தி) யொன்றுண்டு; தேய்க்கும் வல்லமை (சக்தி) யொன்றுண்டு. வளர்வு தேய்வு இல்லையேல் உயிரோடு கூடி வாழும் உடல் வாழ்வு அற்றுப்போகும். வளர்வும் தேய்வும் இயற்கை நிகழ்ச்சி.
வளர்ச்சியும் தேய்வும் ஏற்றக் குறைவின்றி, ஒரு பெற்றியாய் நிகழுமாறு மக்கள் தங்கள் வழக்க ஒழுக்கங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு ஒழுகுபடுத்திக் கொள்வோர் நீண்டநாள் உலகில் வாழ்வர். மகன் இயற்கைக்கு மாறுபட்ட வினைகளில் தலைப்பட்டு வாழ்வானாயின், அவன் வளர்ச்சி குன்றித் தேய்வுமிக்கு, நரை திரை மூப்புக்களால் தொடக்குண்டு இடர்படுவன். நோன்பு வழிபாடு முதலிய நல் லொழுக்க முறைகள் வளர்ச்சி தேய்வு முறையை ஒழுங்கு படுத்தும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த நோன்பு, வழிபாடு முத லிய ஒழுக்க முறைகளால் உறுதி நிலைபெறல் எளிது. இம் முறைகளை மீண்டும் புதுக்கல் தமிழ்நாட்டார் கடமை.



