முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார்

3. முருகின் தொன்மை

[முருகு என்னுஞ் சொல்வரலாறு – முருகு முருகனானமை – முருகன் சொல்வழைக்குக் காலம் – மருகன் தொன்மைக்கு இரண்டு குறிப்புகள் – முதன் மகன் தோன்றிய இடமும் மக்கள் வாழ்வு முதல் முதல் தொடங்கப்பட்ட இடமும் – தமிழரின்மலைவாழ்வும் முருகும் – பெயரின் பன்மையும் பொருளின் ஒருமையும் – நால்வகை நிலத்தில் அழகின் கூறுபாடுகள் – தொல்காப்பியக் காலம் – தொல்காப்பியத்துக்கு முன்னரே முருகன் வழிபாடுண்மை – விலங்கும் முதல் மகனும் – ​ெஹக்கல், டார்வின் கொள்கை – உள்ளது சிறத்தல் – திருமால்பத்துப் பிறவி நுட்பம் – பழைய மகன் பல்லமைப்பு – பல்லுக்கும் மூளைக்குமுள்ள இயைபு – மகனுக்குக் கடவுளுணுர்வுற்ற காலம் – மக்கள் மாக்கள் நிலை – முதன் மக்களின் உணவு முதலியன – மக்கள் அட்டில் தொழில் கொண்டகாலம் – இயற்கை முருகன் அநாதி]

முருகு என்னுஞ் சொல்வழக்கு எந்நாளில் உண்டாயிற்று?  அதன் வரலாறென்னை?  முருகு என்பது மிகத்தொன்மை வாய்ந்த ஒரு தமிழச் செஞ்சொல்?  பண்டை நாளில் தமிழ்ச் சொற்கள் பல முதல் நிலையளவாக நின்று ஆட்சி பெற்று வந்தன,  பின்னே நாளடைவில் அவைகளுள் பல இடைநிலை இறுதிநிலைகள் பெறலாயின.  அச்சொற்களுள் முருகு என்பதும் ஒன்று.  முருகு என்னும் முதல்நிலை அன் என்றும் ஆண்பால் இறுதி நிலையேற்று முருகன் ஆயிற்று.  ஆகவே முருகினின்றும் முருகன் பிறந்தானென்க.  முருக்கும் முருகனுக்கும் பொருளில் வேற்றுமை யுண்டோவெனில் இல்லை யென்க.  இரண்டும் ஒரு பொருளையே குறிப்பன.  முருகே முருகன்; முருகனே முருகு.

முருகு அல்லது முருகன் என்னுஞ் சொல்வழக்கு மிக மிகத் தொன்மையது.  அச்சொல் வழக்கு இந்நாளையது என்று எவராயினும் வரையறுத்துக் கூறல் இயலாது.  தொன்மை வாய்ந்த முருகன் என்னுந் தமிழ்ச்சொல் இன்னும் இறந்து படவில்லை; இன்னும் ஆட்சி பெற்றே நிற்கிறது.  அச்சொல் வழி அதற்குரிய பொருளை இன்னும் போற்றுவோருளர்; பாடுவோருளர்.  இன்றும் அப்பெயரான் விழாக்கள் நடைபெறுகின்றன; நோன்புகள் கொண்டாடப்படுகின்றன.  அச்சொல்லின் உறுதியும் மாண்பும் தூய்மையும் என்னே என்னே என்று இறும்பூதெய்துகிறேன். 

முருகின் தொன்மை காணச் சிறப்பாக ஈண்டு இரண்டு குறிப்புக்கள் பொறிக்கலாம்.  ஒன்று முருகன் தமிழ்க்கடவுள் என்பது; மற்றொன்று முருகன் மலைநிலக் கடவுள் என்பது.  இவ்விரண்டானும் முருகின் தொன்மை நனிவிளங்கும்.  `தமிழன்’, `தமிழ்ப் பெருமான்’, `தமிழ் இறை’, `முத்தமிழோன்’ எனவும், `குறிஞ்சி கிழவோன்’, `மலை கிழவோன்’ எனவுந் தமிழ்ப் பெரியோர் முருகனை அழைத்திருத்தல் காண்க.

தமிழன் முதுமையையும், தமிழ் மக்களின் பழமையையும் ஈண்டு விரிக்கிற் பெருகும்.  முதன் மகன் தோன்றிய இடம் தமிழ்நாடு என்று ஆராய்ச்சியாளர் கண்ட உண்மையொன்றை ஈண்டு நினைவூட்டுவது சாலும்.  இப்பழம் பெரு நாட்டார் கடவுளுக்கு முதல் முதல் தூவிய சொன்மலர் முருகு எனில், அதன் தொன்மையை என்னென்று இயம்புவது?

மக்கள் வாழ்வு முதல் முதல் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கொள்கை.  இஃது இயற்கை நூலாசிரியர் பலர் ஒப்பமுடிந்த உண்மை.  மலையில் வாழ்ந்த பழைய மக்கள் தங்கள் கடவுளைக் `குறிஞ்சிக் கிழான்’ என்று கோடல் இயல்பு.  பழந்தமிழ் மக்கள் மலையிடை வாழ்ந்தபோது, தங்கள் கடவுளை மலைநிலக்கடவுளாகக் கொண்டதில் வியப்பென்ன?  மக்களின் நல்வாழ்வு மலையிடை அரும்பிய போழ்து முருகெனுஞ் சொல்லும் அலர்ந்தது.  இத்தகைய சொல்லின் தொன்மையை எங்ஙனம் அளந்துரைப்பது?

மலையில் வாழ்ந்த தமிழ் மக்கள், பின்னைப் பிற நிலங்களில் குடிபுகுந்து, அவ்வந் நிலங்களின் இயல்புக்கேற்ப முழுமுதலுக்குப் பலவேறு பெயரிட்டார்கள்.  பல வேறு பெயர்களைக் கொண்டு, கடவுளரும் பலர் என்று கோடலாகாது.  நிலத்தின் இயல்பிற்கேற்ப இடப்பட்ட பெயர்கள் பலவாயினும், அவை யாவும் ஒரு பொருளையே குறிக்கொண்டு நிற்பனவாம்.  அவ்வொரு பொருள் எது?  அஃது இயற்கையிலுள்ள அழகு அல்லது முருகு என்க.  இயற்கையழகு காடாகப் பசுமைக்காட்சி வழங்கியபோது, அவ்வழகை அல்லது முருகைத் தமிழ்மக்கள் திருமால் என்றார்கள். மற்ற நிலக்கடவுள் பெயர்களையும் இவ்வாறே கொள்க.  தமிழ் மக்கள் அழகெனும் முருகைப் பொருளாக் கொண்டதொன்றே ஈண்டுக் கருதற்பாற்று.  தமிழ் மக்கள் வாழ்வு, என்று மலைநிலத்தில் துவங்கப்பட்டதோ, அன்று தொட்டு இன்றுவரை, முருகன் தமிழ் நாட்டுத் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகிறான்.  தமிழ்நாட்டுப் பழங்கடவுள் முருகனே.

தமிழ்நாட்டைப் பற்றிய எவ்வாராய்ச்சிக்குந் தொல்காப்பியத்தைக் கருவாயாகக் கொள்வது வழக்கம்.  என்னை?  இப்பொழுதுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் பழமையுடையதாகலின் என்க.  தொல்காப்பியக் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை.  அஃது இன்னும் வளர்ந்து செல்கிறது.  அதுகுறித்து இதுகாறும் ஆராய்ந்தவர்க்குள்ளுங் கருத்து வேற்றுமை உலவி வருகிறது.  தொல்காப்பியக் காலம் இத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறாரேயன்றி, ஏறக்குறைய ஆதல் `இக்காலம்’ என்று எவரும் அறுதியிட்டுக் கூறினாரில்லை.  தொல்காப்பியனார் காலம் மூவாயிரம், ஐயாயிரம், பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருத்தல் வேண்டுமென்று முறைமுறையே சிலர் கிளந்து கூறியுள்ளனர்.  தொல்காப்பியனார் காலம் எத்துணை ஆயிரம் ஆயிரம் ஆண்டுட்கு முன்னர் ஆயினுமாக.  அவர் காலத்தில் முருகன் வழிபாடு இருந்ததா இல்லையா என்பதொன்றே ஈண்டு ஆராயற்பாலது.ள

தொல்காப்பியனார் காலத்தில் முருகன் வழிபாடு இருந்தது என்பதற்கு அவர் தம் நூலினுள் அகச்சான்றுகளுண்டு.  அக்காலத்தில் முருகன் வழிபாடு இருந்தது உண்மை.  அப்பொழுது அஃது எந்நிலையிலிரிந்தது?  தொடக்க நிலையிலா அல்லது பழகி வளம்பட்ட நிலையிலா?  பழகிப் பழகி முதிர்ந்து வளம்பட்ட நிலையில் அவ்வழிபாடு அந்நாளில் இருந்தது.  ஆகவே, தொல்காப்பியனார் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டில் முருகன் வழிபாடு ஆட்சியிலிருந்ததெனக் கொள்க.  எப்படி?

தொல்காப்பியத்தில் நால்வகை நிலன்களும், அவ்வந்நில இயலுக் கேற்றவாறு மக்கள் கொண்ட வழக்க ஒழுக்கங்களும், பிற வாழ்வுத் துறைகளும் பேசப்படுகின்றன.  அப்பேச்சான் தொல்காப்பியக் காலத்துக்கு முன்னரே தமிழ்மக்கள் குறிஞ்சி நிலம் விடுத்து, மற்ற முல்லை மருதம் நெய்தல் நிலங்களில் குடிபுகுந்து, வாழ்வு நடாத்தினார்கள் என்று தெரிகிறது.  தமிழ் மக்கள் நால்வகை நிலங்களிலும் வாழ்வு துவங்கா முன்னர் அதாவது அவர்கள் மலைநிலத்தில் மட்டும் வாழ்ந்த வேளையில், அவர்கள் முருகன் வழிபாட்டைத் தொடங்கிப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.  இது முருகனுக்குரிய `குறிஞ்சி கிழான்’, `மலை கிழவோன்’ முதலிய சிறப்புப் பெயர்களான் அறியக் கிடக்கிறது.  மலையிடை மட்டும் மக்கள் வாழ்வு துவங்கிய நாள் எந்நாளோ?

மலையிடை மக்கள் நல்வாழ்வு செலுத்தப் புகு முன்னர் மக்கள் எப்படி இருந்தார்கள்?  மக்கள் தோற்ற வரலாற்றை ஆராய்ந்தால் பலதிற உண்மைகள் போதரும்.  மக்கள் தோற்ற வரலாற்றைப் பற்றிச் சமய நூல்கள் பலவாறு பகர்கின்றன.  அவை நம்பிக்கை யுலகுக்கு உரியனவாம்.  இயற்கைத் துணை கொண்டு ஆராய்ந்து முடிவு கண்ட அறிஞர், மக்களின் மூதாதைகள் விலங்குகளென்று கருதுகின்றனர்.    மக்களுலகின் தோற்றுவாய்க்கு நிலைக்களன் விலங்கு உலகம் என்பது அக்கூர்த்த மதியினர் ஆராய்ச்சியிற் போந்த உண்மை.  இவ்வாராய்ச்சியிற் புகுந்து பன்னெடு நாள் உழைத்துப் பலதிற நுட்பங்களை உலகிற்குணர்த்திய ​ெஹக்கல், டார்வின் முதலிய பேரறிஞர்க்கு உலகங் கடமைப் படுவதாக. 

நமது நாட்டுப் புராணங்கள் சில இவ்வுண்மையை ஒருவாறு கதைகள் வடிவாக அறிவுறுத்துகின்றன.  புராண நூல்களின் பல இடங்களில் திருமாலின் பத்துப் பிறவிகள் சொல்லப்படுகின்றன.  கூர்தல் அல்லது உள்ளது சிறத்தல் (Evolution) முறைப்பற்றி அப்பத்தையும் உற்று நோக்கின் படிப்படியாக உயிர்களின் பிறவி வளர்ச்சி புலனாகும்.  நம் நாட்டு பௌராணிகர்கள் பெரிய ​ெஹக்கல்கள், டார்வின்கள் போலும்.

விலங்கினின்றும் பிறந்த மகனுக்குத் தொடக்கத்தில் பலதிற விலங்குக் கூறுகளிருந்தன.  அவைகளுள் ஒன்று பல்.  அந்நாளைய மகனுக்குக் கூரிய வாளனைய கோரைப் பற்களிருந்தன.  அப்பல் நாளடைவில் தேய்ந்து தேய்ந்து இப்பொழுதுள்ள நிலையை அடைந்திருக்கிறது.  கோரைப் பல்லினின்றுந் தேய்வுற்ற அப்பல்லுக்கு இன்னும் நாய்ப்பல் என்னும் வழக்கிருத்தலை யோர்க.  கோரைப்பல்லெனும் விலங்குப் பல்லுடைய பாவைகள் இன்னும் கோயில்களில் நின்று கொண்டிருக்கின்றன.  அவை நமது மூதாதைகளின் நினைவுக் குறிகளாகும்.

விலங்கினின்றும் பிறந்த மகனுக்குக் கடவுள் உணர்வெனும் அன்புநெறி உடனே விளங்கியிராது.  பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குக் கடவுள் உணர்வு தோன்றியிருக்கும்.  எப்போது அவ்வுணர்வு தோன்றியிருக்கலாம்?

நீண்ட கோரைப்பல் விலங்குணர்விற்கு அறிகுறி.  அஃதிருந்த மட்டும் மகனுக்குக் கடவுள் உணர்வு தோன்றியிராது.  பல்லுக்கும், குடரின் உள்ளுறுப்புச் சிலவற்றிற்கும், மூளைக்குந் தொடர்புண்டு.  பல் தேயும் அளவினதாக மூளையின் வன்மை அருகி மென்மை பெருகும்.  மென்மை அளவாக அறிவு விளக்கமுறும்.  சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உள்ளுறுப்புகட்கும், சிலநூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உள்ளுறுப்புகட்கும், இப்போதைய மக்களின் அவ்வுறுப்புகட்கும் வேற்றுமையுண்டு.  இப்பொழுதுஞ் சில உள்ளுறுப்புக்கள் பயனின்றிக் கிடக்கின்றன என்று மருத்துவ அறிஞர் கருதுகின்றனர்.  இவ்விரிந்த ஆராய்ச்சியில் ஈண்டு நுழைய வேண்டுவதில்லை.  விலங்கினின்றும் பிறந்த மகன் எப்பொழுது கடவுள் உணர்வு பெற்றிருப்பான் என்பதொன்றே ஈண்டு நமக்குத் தேவை.

விலங்கினின்றும் தோன்றிய மகன், வடிவான் விலங்கொடு வேறுபட்டு விலங்கினும், உணர்வால் நீண்டநாள் அதனொடு வேறுபடாமலிருந்தான்.  பின்னைப் பல் முதலியன தேய்வுற வுற உணர்வானும் அவன் விலங்கினின்றும் வேறுபடலானான்.  ஆகியும் மகன் இன்னும் விலங்குணர்வினின்றும் முற்றும் விடுதலையடைந்தானில்லை.  விடுதலையடையாமையான் அவன் இனத்துள் இரு பிரிவு தோன்றலாயின.  ஒன்று மாக்கள் இனம்; மற்றொன்று மக்கள் இனம்.  மாக்களாவார் விலங்கையொத்த ஐயறிவுடையார்; மக்களைவார் ஆறறிவுடையார்.  `மாவு மாக்களும் ஐயறி வினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே’ என்றார் தொல்காப்பியனார்.  அம்மாக்களும் மக்களுஞ் சேர்ந்த ஒன்றே மன்பதை என்பது.

ஆறாவது அறிவு எது?  அவ்வறிவே கடவுள் உணர்வெனும் அன்புநெறி விளக்கத்துக்கு நிலைக்களனாயிருப்பது.  அவ்வறிவு விளங்கிய மக்கள், அவ்வறிவு விளங்காத மாக்களினின்றும் பிரிவுற்ற போழ்து, அவர்களிடை (மக்களிடை)க் கடவுள் உணர்வு அரும்பியிருத்தல் வேண்டும்.  அக்கடவுள் உணர்வே மக்களையும் மாக்களையும் வேறுபடுத்துவதென்க.  மக்களிடைக் கடவுளுணர்வு, அவர்கள் மலையிடை மட்டும் வாழ்ந்துபோது தோன்றினமையால், அவர்கள் கடவுளைக் `குறிஞ்சி கிழான்’, `மலைக் கிழவோன்’ என்று போற்றினார்கள் போலும்.

மாக்கள் மக்கள் இயல்புகளும் தொல்காப்பியனார் காலத்தில் முதிர்ந்து ஆட்சியிலிருந்தன.  ஆதலால் அவ்வேற்றுமை தோன்றிய காலமும் தொல்காப்பியத்துக்கு முந்தியதே.  அவ்வேற்றுமையுற்ற காலத்தைக் கணித்துக் கூறல் எளிதோ?  ஆதலால் முருகன் தொன்மையைக் காலவரையறைப் படுத்திக் கூறலும் எளிதாகுங்கொல்?

மகன் தொடக்கத்தில் காய்கறிகளை அவித்துத் தின்றானில்லை.  அவன் அவற்றை இயற்கையாகவே உண்டு கழித்து வந்தான்.  பின்னை அவன் பல்லாயிரம் ஆண்டு கடந்து காய்கறிகளை அவித்துத் தின்னலானான்.  அக்காலத்தை இயற்கைநூல் வல்லார் சிலர் இற்றைக்குச் சுமார் முப்பதாயிரம் ஆண்டிற்கு முன்னதெனச் சொல்கிறார்.

முதல் முதல் மலையிடை வாழ்வு துவக்கிய மக்கள், காய்கறிகளைப் பசுமையாகவே உண்டிருத்தல் வேண்டும்.  அவர்கள் முருகனுக்குத் தேனும் தினையும் வைத்து வழிபட்டதை அன்பர்கட்கு நினைவூட்டுகிறேன்.  மன்பதைக்குள் மாக்கள் மக்கள் வேற்றுமை புலனாய்க் கடவுள் உணர்வு பெற்ற போதும், மக்கள் காய்கறிகளைப் பசுமையாகவே புசித்திருந்தார்கள் என்று ஊகித்துணரலாம்.  அந்நாள் முப்பதினாயிரம் ஆண்டிற்கு மேம்பட்டு, எத்துணை ஆயிரம் ஆண்டுகடந்து நிற்குமோ தெரியவில்லை.

இதுகாறுங் கூறிவந்த சில குறிப்புக்களான், முருகு என்னுஞ் சொல் வழக்கு எந்நாளில் உண்டாயிற்று என்று காண்டல் இயலாமற் போயிற்று.  பின்னை எம்முடிபு கொள்வது?  மன்பதைக்குள் மாக்கள் மக்கள் வேற்றுமையுணர்வு தோன்றி, மக்களினத்தில் கடவுள் அறிவு அரும்பிய நாள் தொட்டு, முருகு என்னுஞ் சொல்வழக்குத் தோன்றியிருத்தல் வேண்டும்.  அந்நாள் இன்னும் ஆராய்ச்சி யுலகிற்கு எட்டவில்லை.

(முருகெனுஞ் சொல்வழக்குக் காலத்தைக் காண்டலே அரிதாயிருக்கிறது.  அங்ஙனமாக, அச்சொற் பொருள் காலத்தை ஆராயப் புகுவது அறியாமையாகவே முடியும்.  இவ்வாராய்ச்சியில் தலைப்பட வேண்டுவதில்லை.  முருகெனுஞ் செம்பொருள் கால எல்லைக்கு உட்பட்டதன்று என்று கொள்வதே அறிவுடைமை.  முருகன் காலங் கடந்த கடவுள்.  இயற்கை என்று உண்டோ, அன்று முதல் முருகனும் உளன்; இயற்கை அநாதி; முருகனும் அநாதி.)

மலையிடை வாழ்ந்த தமிழ் மக்கள் தங்கட்குக் கண்கூடாகக் காட்சியளித்த இயற்கையை அடிக்கடி கண்ணாற் கண்டு, உளத்தால் முகந்த, அதை இடையறாது நினைந்து நினைந்து, அதன்கண் படிந்த வாழ்வு நடாத்தினார்கள்.  அதன் பயனாக அவர்கள் இயற்கையினுள் பிரிவின்றி விராவி நிற்கும் அழகையும், அழகின் மாறாத இளமையையும், இளமையிலூரும் அழியா மனத்தையும், இவையுடைய ஒன்று எல்லாவற்றையுங் கடந்து மாறுதலின்றி யொளிருந்தன்மையையுங் கண்டார்கள்.  இவ்வழகு, இளமை மணம், கடவுட்டன்மை ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒன்றைப் பண்டைத் தமிழ் மக்கள் முருகு என்னுஞ் சொல்லால் அழைத்துப் போற்றினார்கள்.  முருகு என்பது பொருள் பொதிந்த ஒரு சொல்.  அம்முருகையுடையவன் முருகன்.

`பழந்தமிழர் இயற்கை அழகையே உயர்ந்த பொருளாக அதாவது கடவுளாகக் கொண்டு வாழ்ந்தனர்.  அவர் மலைமீது வாழ்ந்தபோது அவர் உள்ளத்தைக் காலையிலும் மாலையிலும் ஞாயிற்றின் செம்மையும், வானத்திற் படருஞ் செம்மையும், பிற செம்மைகளுங் கவர்ந்தன.  அச்செவ்விய இயற்கையழகை அவர் சேய் என்று போற்றினர்.  அம்மக்கள் தங்கள் கண்ணுக்குப் பச்சைப் பசேலெனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினர்.  அவர் மருத நிலத்தில் குடி புகுந்தபோது அங்கே பெரிதும் தம் இனமாகிய மக்கள் கூட்டத்துடன் நெருங்கி நெருங்கிப் பழக நேர்ந்தமையான், மக்கள் மாட்டொளிரும் இறைமை என்னும் இயற்கை அழகைக் கண்டு அதை வேந்து என்று கொண்டனர்.  அவர் கடற்கரை நண்ணியபோது கடலின் இயற்கையழகை வண்ணம் என்றனர்.  பழந்தமிழ் மக்கள் அவ்வந்நில இயற்கை அழகுக்கிட்ட பெயர்கள் சேய் மால் வேந்த வண்ணம் என்பன.  

இவ்வியற்கை அழகுப் பெயர்கள் தொல்காப்பினார் காலத்திலேயே அன் (வண்ணம் – வர்ணம் – வருணம் – வருணன்) விகுதி பெறலாயின.  பின்னை நாளடைவில் இப்பெயர்கள் பிரிவுபட்ட கடவுளராகச் சமயவாதிகளால் கொள்ளப்பட்டன.  பழந்தமிழ் மக்கள் கொண்ட கடவுள் இயற்கை அழகு என்பதை மட்டும் நாம் மறத்தலாகாது’.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *