சன்மார்க்க போதமும் திறவும்  திரு. வி. கலியாணசுந்தரனார்

சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம்.

பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.

உலகிலுள்ள மார்க்கங்கள் பலவாகத் தோன்றும். அவை களின் உள் நுழைந்து ஊன்றி நோக்கின், அவைகள் யாவும் ஒன்றாகவே விளங்கும். அவ்வொன்று சன்மார்க்கம் என்பது.

மக்கள் வாழ்வில் பெறத்தக்க பேறுகள் பல என்பது பொது மொழி. ஒவ்வொன்றையும் தனித் தனியே பெறுவது அரிது. அப்பேறுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாயுள்ள ஒன்றைப் பெறுவது அவை எல்லாவற்றையும் பெறுவதாகும். அவ்வொரு பெரும் பேறு எது? அது சமரசப் பேறு. சமரசப் பேற்றில் எல்லாம் அடங்கும்.

இப்பெற்றி வாய்ந்த சமரசத்தைக் கூட்ட வல்லது எது? தனித்தனி நாடு – மொழி – நிறம் – வகுப்பு – மதம் முதலியன, உண்மைச் சமரசத்தை வழங்கவல்லன வாகுமா என்பது கேள்வி. இவைகள் பிரிவு உணர்வுகளை எழுப்பிக் கொண்டிருத்தல் வெள்ளிடைமலை. இவைகளினூடே ஒருமையாய்ப் பரந்து நின்று, மேலுங் கடந்து நிற்கும் சன்மார்க்கம் ஒன்றே, உண்மைச் சமரசத்தை வழங்கவல்லது என்னும் நுட்பம் அநுபவத்தில் விளங்குவது. இதனால் சன்மார்க்கம், சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுவதாயிற்று.

சன்மார்க்கத்தில் நின்று, நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலியவற்றை நோக்குவோர்க்குப் பிரிவு உணர்வு தோன்றுதல் அரிது. அவர்க்குச் சமரச உணர்வே தோன்றும். அவ்வுணர்வும் செயலும் பெற்றவர். எல்லாம் பெற்றவராவர்.

சன்மார்க்க உணர்வு இயற்கையிலேயே என்னூடு அமைந்தது. இளமையில் அவ்வுணர்வுக்குச் சில வேளைகளில் அசைவு நேர்ந்ததுண்டு. அவ்வசைவால் எனது இயற்கை உணர்விற்கு அழிவு நேர்ந்ததில்லை.

இவ்வியற்கை உணர்வும், பின்னே யான் கற்கவும் கேட்கவும் வாய்த்த நூல்கள், பெற்ற சேர்க்கை, உற்ற இல்லறம், ஏற்ற தொண்டுகள், பற்றிய இயக்கங்கள், நிகழ்த்திய போராட்டங்கள், செலுத்திய வாழ்வு முதலியவாற்றான் விளைந்த அநுபவமும் சேர்ந்து சன்மார்க்க உணர்வை என்னுள் நிலைபெறுத்தி விட்டன. பலதிறப் பொருள்பற்றி யான் பேசவோ எழுதவோ நேரும்போ தெல்லாம். அப்பேச்சிலும் எழுத்திலும் சன்மார்க்க உயிர்ப்பு, தானே நுழைந்து கொள்ளும்.

உலகம் பலதிறப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பட்டு அலுத்து அலுத்துச் சோர்வுற்று வருகிறது. சிற்சில இடங்களில் சன்மார்க்க வேட்கையும் ஒரு புடை எழுந்து வருகிறது. உலக முழுவதும் சன்மார்க்கம் பரவும் காலம் சேய்மையில் இல்லை.

இந்நிலையில் சன்மார்க்கத்தைப்பற்றித் தனிநூல் ஒன்று இயற்றுமாறு இயற்கை அன்னை என்னை உந்தினள். அவ்வுந்துதற் கேற்ப, 1933-ம் ஆண்டில் என்னால் இயற்றப் பெற்றது சமரச சன்மார்க்க போதம் என்னும் இந்நூல். இப்பதிப்பு, சுருக்கத்தின் பொருட்டுச் சன்மார்க்க போதம் என்னுந் தலைப்பைத் தாங்க லாயிற்று. இடையிடை வேறு சில பொருள்களுஞ் சேர்க்கப் பட்டன.

இந்நூற்கண் சத்தின் இயல், மார்க்கத்தின் விளக்கம், சமரசத்தின் சிறப்பு, குருமார் நிலை, சீர்திருத்த முறை, சங்க அமைப்பு முதலியன சுருங்கிய முறையில் விளக்கப் பெற்றிருக் கின்றன. இயற்கையோ டியைந்து வாழ்வது சன்மார்க்கத்தில் நிற்பது என்னும் உண்மை இந்நூலின் உள்ளுறை என்று சுருங்கச் சொல்லலாம்.

சமரச நோக்குடன் யாக்கப்பெற்ற இந்நூலை உலகம் அந்நோக்குடன் ஏற்று ஆதரிப்பதாக.

யாதும் ஊரே யாவருங் கேளிர்

திருவாரூர்வி.கலியாணசுந்தரன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *