சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

1. தோற்றுவாய்


1. இயற்கையை உடலாக்கொண்டு, என்றும் மாறுதலின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும், ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க.

2. இறைக்கு உடலாய் நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க.

3. இயற்கை – இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க.

4. கால தேச வர்த்தமான நிலைமைக்கு ஏற்றவாறு, அவ்வப் போது குருமார்வழிப் பிறந்த அருள் மொழிகள் வாழ்க.

5. அருள்மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க.

6. சன்மார்க்க சங்கம் வாழ்க.

7. சன்மார்க்கம் அநாதி. அது தோன்றிய காலத்தை அறுதி யிட்டுக் கூறுதல் இயலாது. அதற்குப் பல பெயர்கள் வழங்கப்படு கின்றன. அப் பலபட்ட பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால் சன்மார்க்கம் ஒன்றே திகழும்.

8. சன்மார்க்க சங்க அமைப்பு :- தலைமை – இறை; அமைச்சு – இயற்கை; நிருவாகக் கூட்டம் – குருமார் திருக்கூட்டம்; உறுப்புக்கள் – எல்லா உயிர்களும்; சந்தா – இரக்கம்.

9. சன்மார்க்கம் உள்ள இடத்தில் சமரசம் உண்டு. சமரசம் உள்ள இடத்தில் சன்மார்க்கம் உண்டு. ஆதலால் சன்மார்க்கத்தைச் சமரசம் என்றோ, சமரச சன்மார்க்கம் என்றோ சொல்லலாம்; சுருங்கிய முறையில் மார்க்கம் என்றுஞ் சொல்லலாம்.

10. சத்+மார்க்கம் = சன்மார்க்கம். சத் – உண்மை; இறை. மார்க்கம் – நெறி; இயற்கை.

11. சன்மார்க்க போதத்தில் புதியது ஒன்றுங் கூறப் புகுகிறே னில்லை. கற்றல் கேட்டலாலும், அறிஞரின் இணைக்கத் தாலும், சிறு சிறு தொண்டுகளில் ஈடுபட்டதாலும் பெற்ற அடைவுகளான், விளங்கிய அறிவு கொண்டு, குருமார் அருளிய உண்மைகளை அடியேன் உணர்ந்தவாறு, அவைகளைத் தொகுத்துச் சுருக்கிக் கூறவே புகுகிறேன்.

12. முனைப்பு ஒதுங்கி ஒழிவதாக. குருமாரின் ஒளி வழி காட்டுவதாக. இயற்கை – இறையின் திருவருள் படிவதாக.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *