
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
5. சீர்திருத்தம்
1. உயிர்களின் அறியாமையைப் போக்கி, அவைகளை அறிவு மயமாக்க வேண்டுமென்பது இயற்கை அன்னையின் வேட்கை.
2. இயற்கை அன்னை, தன் வேட்கையை நிறைவேற்ற உயிர்கட்குத் தனு கரண புவன போகங்களாகவும், பிற கூறு களாகவும் நின்று துணைசெய்கிறாள்.
3. இயற்கை அன்னையின் துணை படிப்படியாக உயிர்களின் அறியாமையைப் போக்கி, அறிவை விளங்கச் செய்வதாகிறது.
4. உயிர்கள், தாவர முதல், விலங்கு உடல் தாங்கும் வரை, பகுத்தறிவு விளங்கப் பெறுவதில்லை.
5. உயிர்கள், விலங்கு உடலைக் கடந்து, மக்கள் உடலைத் தாங்கியதும் பகுத்தறிவு அரும்பப் பெறுகின்றன.
6. பகுத்தறிவைப் பெற்ற மக்கள் அறிவுமயம் என்னும் முழுநிலை எய்த முயலுதல்வேண்டும்.
7. விலங்கு முதலிய உயிர்களிடம் பகுத்தறிவு விளங்கப் பெறாமையால், அவைகளிடஞ் சில குறைபாடுகள் பொருந்து கின்றன. ஆனால் அவைகள் பெரிதும் இயற்கை முறைகட்கு மாறுபட்டு நடப்பதில்லை. இஃது இங்கே சிறப்பாகக் கருதற்பாலது.
8. விலங்கு முதலியவற்றின் மாட்டுள்ள குறைபாடுகளைப் போக்க, இயற்கை அன்னை, பகுத்தறிவு விளங்குதற்குரிய நல்லுடலை அவைகட்குக் கருணை செய்கிறாள்.
9. பகுத்தறிவு பெற்ற மக்கட்பிறவி, விலங்குக்கும் தெய்விகத்துக்கும் இடைப்பட்டது.
10. மக்களிடத்தில் பொதுவாக விலங்கியல்பும், தெய்விக இயல்பும் விரவியிருத்தல் கண்கூடு.
11. அழுக்காறு, அவா, வெகுளி, பகை, வன்மம், கொலை, தன்னலம் முதலியன விலங்கியல்புகள். பொறுமை, அன்பு, மன்னிப்பு, ஒப்புரவு, தியாகம், பரநலம் முதலியன தெய்வ இயல்புகள்.
12. மக்கள் விலங்கியல்பினின்றும் முற்றும் விடுதலை யடைந்து, தெய்வ இயல்பை முற்றும் பெறுதற் பொருட்டு, அவர்கட்கு இயற்கை அன்னை பகுத்தறிவை விளங்கச் செய்கிறாள்.
13. தெய்வ இயல்புகள் முற்றும் விளங்கப் பெறுவதே அறிவு மயம் என்னும் முழுநிலை எய்துவதாகும்.
14. முழுநிலை எப்படிக் கூடும்? மக்கள், தாங்கள் பகுத்தறிவு பெறுதற்குத் துணை நின்ற இயற்கை வழியே வாழ்வு நடத்தி னால் முழுநிலை தானே கூடும்.
15. மக்கள், பொதுவாகத் தங்கள் பகுத்தறிவை இயற்கை வழியிற் செலுத்துகிறார்களா? தங்கள் பகுத்தறிவு விளங்கப் பெறுதற்குத் துணை நின்றும், மேலும் முழுநிலை பெறுதற்குத் துணைசெய்ய முனைந்தும் நிற்கும் இயற்கைத் தாயைப் பாவிகள் மறக்கிறார்கள். இது மக்கள்பாலுள்ள குறைபாடு.
16. மக்கள் தாயை மறந்தாலும், தாய் மக்களை மறப்ப தில்லை. மக்கள் தங்கள் பகுத்தறிவை இயற்கைவழிச் செலுத் தாமையால், அவர்கள் வாழ்விடை மாசுகள் படிகின்றன. அம் மாசுகளைப் போக்கி மக்கள் வாழ்வைச் சீர்செய்ய இயற்கைத் தாய் அருள் சுரக்கிறாள். அவ்வருட்சுரப்பின் ஆக்கமே சீர்திருத்தம் என்பது.
17. சீர்திருத்தம் இயற்கைவழி எழுந்து அமைவதா யிருத்தல்வேண்டும். வேறு வழியில் எழுந்து அமைவது சீர்திருத்த மாகாது. அதனைச் சொன்முறையில் செயற்கைச் சீர்திருத்த மென்று கூறலாம். ஆகவே, சீர்திருத்தம் என்பது இயற்கைவழிப் பிறப்பதையே குறிப்பதென்க.
18. இயற்கைச் சீர்திருத்தம் தெய்வ இயல்பினின்றும் எழுவது. செயற்கைச் சீர்திருத்தம் விலங்கியல்பினின்றும் எழுவது
19.தெய்வ இயில்பினின்றும் எழுவது ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும். விலங்கியல்பினின்றும் எழுவது ஜீவபோதத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும்.
20. இயற்கைச் சீர்திருத்தத்தால் சகோதர நேயம் பெருகும். மற்றதால் சகோதர நேயம் அருகும். இவ்விரு நிகழ்ச்சி கொண்டு, இயற்கைச் சீர்திருத்தம் எது என்பதை அளந்து அறிதல் கூடும்.
21. சீர்திருத்தங்களிற் சில மக்களிடைத் தாமே படியும்; சில அறிஞரால் அறிவுறுத்தப்பெற்ற பின்னை மன்பதையில் நிலவும்; சில குருமார் வாயிலாக வெளிவந்து உலகுக்கு நலம் புரியும். இவை யாவும் இயற்கையின்பாற்பட்டனவே.
22. எச்சீர்திருத்தத்திற்கும் இடந்தாராத சமூகம், நாடு முதலியன இயற்கை அன்னையின் மறக்கருணைக்கு ஆளாகி அழிந்துபடும்.
23. இயற்கை அன்னையின் இயல்பு கருணை. அக்கருணை பெரிதும் அறவழியில் இயங்குவது. சிவ சமயங்களில் அது மறவழியில் இயங்குவதும் உண்டு.
24. இயற்கை அன்னையின் அறக் கருணையினின்றும் பிறப்பன: ஒளி, நறுங்காற்று, நீர், நேயம், ஒப்புரவு முதலியன. அவள் மறக் கருணையினின்றும் பிறப்பன: பூகம்பம், புயல், கொள்ளைநோய், சீற்றம், போர் முதலியன. முன்னையது நிலை பேறாக நின்று நலஞ்செய்வது; பின்னையது அவ்வப் போது தோன்றி அறிவு கொளுத்துவது. இரண்டுங் கருணை யின் பாற் பட்டனவே.
25. நியதிவழி உயிர்கள் இயங்குங்கால், இயற்கை அன்னையின் அறக்கருணை அவ்வுயிர்களை ஓம்பி அவைகள் மேல்நிலை எய்துதற்குத் துணை செய்யும். உயிர்கள் நியதிவழி நில்லாது வழுக்கி விழுங்கால், இயற்கை அன்னையின் மறக் கருணை அவ்வுயிர்களை மீண்டும் நியதியில் நிறுத்த எழும்
26. மக்கள் பொதுவாக இயற்கைவழி நின்று மேல் நிலை எய்தல் வேண்டும் என்னும் நல்லியல்பு உடையவர்கள். அந் நல்லியல்புகளுக்குச் சிற்சில சமயங்களில் கேடு நேர்கிறது.
27. மக்களிடம் தெய்வ உணர்வும். விலங்கு உணர்வுமாக இரண்டும் கலந்திருத்தலான், அவ்வவ்வுணர்வினின்றும் கலைகள் பிறக்கின்றன.
28. தெய்வக் கலைகளால் உண்மைக் கல்வி பெருகும். மற்றக் கலைகளால் போலிக்கல்வி பெருகும்.
29. உண்மைக் கல்வி வளர வளரத் தன்னலம் அருகும்; சகோதர நேயம் பெருகும். போலிக் கல்வி வளர வளரத் தன்னலம் தடிக்கும்; சகோதர நேயம் கெடும்.
30. தன்னலம் அற அற இயற்கைச் சீர்திருத்தம் இடம் பெறும்; தன்னலம் மிகமிக அச்சீர்திருத்தம் இடம்பெறாது.
31. இயற்கைச் சீர்திருத்தம் இடம் பெறாத வாழ்வு சிறைநீர் போன்றதாகும்.
32. உண்மைக் கல்விக்கு அழகு மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்வது. இக்கல்வியாளர் தம்மை மற்றவர்க்கு ஊழியரென்றே கருதித் தொண்டு செய்வர். போலிக் கல்வி. பேர் புகழ் தலைமை சூழ்ச்சி கரவு முதலிய தீமைகளை நாடத்தூண்டும். இக் கல்வியாளர் மற்றவர்க்குத் தம்மை ஊழியரென்று கருதாது, தங்கருத்து முற்றுற, நடிப்புத் தொண்டாற்றுவர். இவர்க்கு உலகம் எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும்.
33. போலிக் கல்வியாளர் தந்நல மேலீட்டான் சமூகத்திலும், சமயத்திலும், அரசியலிலும் பிற துறைகளிலும் தாம் விரும்பு மாறு பலப்பல கட்டுப்பாடுகளைக் கிளத்துகிறார். அக்கட்டுப் பாடுகளால் மக்களின் நல்லியல்பு கெடுகிறது.
34. உலகில் எழும் வறுமை, போர், கொலைப் புரட்சி முதலிய கொடுமைகட்குக் காரணமாக நிற்பது போலிக் கல்வியாளரின் புன்மைச் செயலேயாகும்.
35. உண்மைக் கல்வியாளர், வறுமை, போர், கொலைப் புரட்சி முதலியவற்றைப் பெரிதும், உண்டுபண்ணாமலே உலகுக்கு நலஞ் செய்வர்.
36. கொலை கொலையைப் பெருக்குமென்பதும், அன்பு அன்பைப் பெருக்குமென்பதும் உண்மைக் கல்வியாளர்க்குத் தெரியும். அதனால் அவர் கொலைப்புரட்சி முதலிய துறைகளில் தலைப்படாது, இயற்கைவழி நின்று அன்புத் தொண்டாற்றுவர்.
37. இவ்விருபதாம் நூற்றாண்டில் கல்வி பெருகுகிற தென்றும், புதுமை (invention) பெருகுகிறதென்றும் சொல்லப் படுகின்றன. இப்பெருக்கைக் கண்டு மகிழ்வுறுவது அறி வுடைமையாகாது. உலகில் மக்கள் அச்சமின்றி, குறையின்றி, வறுமையின்றி, உரிமையுடனும், அமைதியுடனும், சகோதர நேய உணர்வுடனும் வாழ்கிறார்களா என்பது கவனிக்கப்படல் வேண்டும்.
38. கல்வியும் புதுமையும் நேரிய முறையில் பெறுகின், மன்பதை, அச்சம் குறை வறுமை முதலிய சிறுமைகளின்றி, உரிமையுடனும், அமைதியுடனும், சகோதர நேய உணர்வுடனும் நல்வாழ்வு பெற்று , இயற்கை இன்பம் நுகரும்.
39. இக்கால உலகம் எக்காட்சி வழங்குகிறது? இக்கால உலகில் அச்சமும் குறைபாடும் வறுமையும் இன்ன பிறவும் தாண்டவமிடுவதும், உரிமையும் அமைதியும் சகோதர நேயமும் இன்ன பிறவும் ஒடுக்கமுறுவதுங் கண்கூடு, இந்நிலையைக் கூட்டியுள்ள கல்விப் பெருக்கும், புதுமைப் பெருக்கும் எங்ஙனம் நல்லனவாகும்?
40. இலட்சத்தொருவர் வயிறார உண்டு, கள்ளாட்டயர் வதைக் கண்டு, உலகம் நன்னிலையிலிருக்கிறது என்று கருதுவது மடமை. உலகம் என்பது சிலரன்று.
41. வாழ்விற்குக் கல்விச் செல்வம் பொருட் செல்வமுந் தேவை.
42. பொருட் செல்வம் ஒருபால் திரண்டும், மற்றொரு பால் வறண்டும் பயன்படுமாயின், உலகில் இடர் விளைந்த வண்ண மிருக்கும். பொருட் செல்வ இன்பம் எல்லாரும் நுகர்வதா யிருத்தல் வேண்டும்.
43. ஏழைக் கூட்டம் பெருகுதலாகாது. அக்கூட்டம் பெருகாமைக்கு ஏழ்மை ஒழிதல் வேண்டும். ஏழ்மையைப் போக்க வல்லது பொருட் பொதுமையே யாகும்.
44. இயற்கை, ஒளி காற்று நீர் முதலியவற்றை எல்லார்க்கும் பயன்படு முறையில் வழங்குகிறது. அவ்வியற்கையின் அருளால் விளையும் பொருளும் எல்லார்க்கும் பயன்படுதல் வேண்டும். இஃதே அறம். இவ்வற வாழ்வு சன்மார்க்கத்துக்கு வேண்டற் பாலது.
45. செல்வத்தில் கள்ளாட்டயர்தலும், வறுமையில் சிறுமை யுறுதலும் சத்திய வாழ்வுக்கு இடந்தருதல் அரிது. சத்தியம் இல்லாத இடத்தில் சன்மார்க்கம் ஆக்கமுறாது. சத்தியம் சன்மார்க்கத்தின் அடிப்படை.
46. சன்மார்க்க ஆக்கத்துக்குச் செல்வம் ஒருபால் திரண்டும், மற்றொருபால் வறண்டும் பயன்படும் முறை ஒழிதல் நல்லது.
47. உலகில் இன்பதுன்பம் பெருகுதற்குப் பலதிறக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவைகளுள் தலையாயது ஆட்சிமுறை என்று கூறலாம்.
48. அரசு எவ்வழி அவ்வழி குடிகள். அரசு சன்மார்க்கத்தில் இயங்கின, குடிகளும் சன்மார்க்கர்களாக வாழ்ந்து இன்பம் நுகர்வார்கள். அரசு மற்ற மார்க்கத்தில் இயங்கின் குடிகள் நிலை என்னாகும்?
49. மக்கள் அனைவரும் சன்மார்க்கராக வாழும் ஒரு நிலை நேருமாயின், அப்பொழுது அரசும் வேண்டுவதில்லை. அந்நிலை என்றாதல் ஒருபோது கூடாமற் போகாது. அந்நிலை கூட்ட இயற்கை அன்னை முயன்ற வண்ணமிருக்கிறாள். இயற்கை அன்னையின்வழி மன்பதையை நிறுத்துதற்கும் ஒருவித நல்லரசு தேவை.
50. மக்களை இயற்கை வழியில் நிறுத்திச் சன்மார்க்கர் களாக்கத் துணை செய்வதற்கென்று அரசியல் அமைப்பு ஏற்பட்டது. அவ்வமைப்பு, இப்போது சன்மார்க்கத்தினின்றும் பிறழ்ந்து உழன்று வருகின்றது. அதனைச் சீர்செய்தல் வேண்டும்.
51. அரசியல் சீர்திருத்தம் என்னும் பெயரால் ஆங்காங் குள்ள அரசியல் வாதிகளால் ஆட்சி முறைகள் கோலப்படு கின்றன. குடியாட்சி, கோனாட்சி, குடிக்கோனாட்சி முதலிய பெயர்கள் முறைகட்குச் சூட்டப்படுகின்றன. பெயர்கள் மாறு கின்றனவே யன்றி, மனோநிலை மாறுவதில்லை. பெயர்கள் மாற்றத்தால் மன்பதையின் துயரம் நீங்குமா? பெயர்கள் மாற்றத்தால் சில அரசியல்வாதிகள் நலமுறுகிறார்கள்.
52. ஆட்சி எம்முறையில் இயங்கினும் இயங்க. முறையைப் பற்றியோ பெயரைப் பற்றியோ கவலையுற வேண்டுவதில்லை. மக்கள் அனைவரும் இன்ப வாழ்வு பெறுதற்குரிய நல்லாட்சியே போற்றற்குரியது.
53. பொருளாதாரப் புலவர்களும், அரசியல் ஞானிகளும் கூட்டம் கூட்டமாகப் பெருகாத காலத்தில் மக்கள் நுகர்ந்த இன்பங்கூட இந்நாளில் இல்லை என்று கூறல் மிகையாகாது.
54. இக்காலப் பொருளாதாரப் புலமைக்கும், அரசியல் ஞானத்துக்கும் பிறப்பிடம் மேல்நாடு என்று எவருங் கூறவர்.
55. எல்லாவற்றிற்கும் உலகம் மேல் நாட்டைப் பார்த்து நடித்துவருங் காலம் இக்காலம்.
56. மேல்நாட்டார் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர். அவர்தஞ் சுறுசுறுப்பும் ஊக்கமும் அரசியல் துறையில் அளவுமீறிச் சென்றமையான், சாம்ராஜ்யப் பித்து அவர்தந் தலைக்கேறி விட்டது.
57. சாம்ராஜ்யத்தில் பொதுமை அறம் வளர்வதில்லை. இதனால் வாழ்க்கையில் போராட்டமும், கூடா ஒழுக்கமும், இன்னபிறவும் புகலாயின. இத் தீமைகளைப் பெருக்கும் சாம்ராஜ்யத்தால் மன்பதையில் அமைதி நிலவுமா?
58. சாம்ராஜ்யப் பித்தால் விளைந்ததென்னை? அடிக்கடி போர் எழுவது என்று சுருங்கச் சொல்லலாம்.
59. மேல் நாடு முழுவதும் இப்போது முதலாளி தொழிலாளி போராட்டத்துக்கு இரையாகிவருதல் கண்கூடு.
60. கீழ்நாட்டின் நிலை எப்படி இருக்கிறது? கீழ்நாட்டின் நிலை இரங்கத்தக்கதாயிருக்கிறது. கீழ்நாடு இப்போது தனக்கென ஒரு கொள்கையுமின்றிக் கிடக்கிறது. மேல்நாடு ஆட்டும்வழி, கீழ்நாடு ஆடி வருகிறது.
61. குருமார் போதனைகள் பெரிதும் பிறந்த இடம் கீழ்நாடே யாகும். அப்போதனைகள் மதவெறியால் பாழ் பட்டன.
62. மேல்நாடு அரசியல் வெறியால் கெடுகிறது. கீழ்நாடு மதவெறியால் கெட்டது. அங்கே அவ்வெறியும், இங்கே இவ்வெறியும் தணிதல் வேண்டும்.
63. வெறியைத் தணிக்கவல்ல மருந்து சன்மார்க்கமேயாகும்.
64. மேல்நாடு தற்போதைய உலகக்குத் திறவாயிருத்தலான், அதன்கண் சன்மார்க்கம் ஆக்கம் பெறின், உலகம் நலமுறும்.
65. மேல்நாட்டின் சுறுசுறுப்பும் ஊக்கமும் சன்மார்க்கத் தில் நுழைந்தால், உலகம் விரைவில் சன்மார்க்க மயமாதல் திண்ணம்.
66. கீழ்நாடு ஒருபோது சன்மார்க்கத்தில் மூழ்கிப் பண் பட்டதாதலின், அது சன்மார்க்கத்தை மிக எளிதில் கடைப் பிடிப்பதாகும்.
67. சன்மார்க்கத்தை நிலைபெறுத்துதற்கென்று முதல் தொழில் போராட்டம் உலக முழுவதும் பரவி வருகிறது.
68. முதலாளி, தொழிலாளியை அடக்கியாள முயல் கிறான். தொழிலாளி, வன்மங்கொண்டு, உறுத்தெழுந்து, முதலாளியை அறவே சாய்த்து, முதல் தொழில் வேற்றுமை இல்லாமற் செய்ய உறுமுகிறான்.
69. தொழிலாளர் இயக்கம் நல்லதே. ஆனால் அது சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதா யிருத்தல் வேண்டும்.
70. தொழிலியக்கத்தார் சன்மார்க்கத் தத்துவங்களைத் தம்முடையனவாகக் கொண்டொழுகுதல் நல்லது.
71. சில இடங்களில் தொழிலியக்கத்தார் சன்மார்க்கத்தை வெறுத்து வருகிறார். அது தவறு.
72. சன்மார்க்கம் இயற்கை நெறியாதலான், அஃதற்ற எவ்வியக்கமும் மன்பதையைத் தூய்மை செய்யாது.
73. சன்மார்க்கம், எல்லாரும் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்னும் தத்துவத்தைத் தன்னகத்தே கொண்டது. அதன் தத்துவத்தை உணராது அதை வெறுப்பது பெருந்தவறு.
74. சன்மார்க்கம் சில இடங்களில் தொழில் இயக்கத் தாரால் வெறுக்கப்படுதற்குக் காரணம், அது புரோகித மதமெனத் திரிபாகக் கருதப்படுவதே யாகும். புரோகிதம், சன்மார்க்கம் அன்று என்பது மேலே பல இடங்களில் விளக்கப்பட்டது.
75. சில இடங்களில் பொதுமை வெறுக்கப்படுகிறது. காரணம் அது சத்தெனுஞ் செம்பொருளை ஏலாமை என்று கருதப்படுகிறது. இவ்வாறு சில பொதுவர் சொல்வதுண்டு இது தவறு.
76. வாழ்க்கைக்குச் சத்துந் தேவை; அதற்குரிய மார்க்கமுந் தேவை. சத்தென்றும் மார்க்கமென்றும் ஏன் பிரித்தல் வேண்டும்?
77. சத்தை விடுத்து மார்க்கம் இயங்குவதில்லை.
78. மார்க்கத்தில் நேரிய முறையில் நின்று ஒழுக ஒழுகச் சத்தின் உண்மை விளங்கியே தீரும். மார்க்கத்தில் பொதுமை நிலவாதொழியின் உலகில் போராட்டம் கூடாஒழுக்கம் முதலிய தீமைகள் எழும். இவைகள் சத்தின் இருப்பை விளங்கிக்கொள்ள மக்களை விடுவதில்லை.
79. சத்தின் விளக்கத்துக்கு மார்க்கம் வேண்டும். மார்க்கத்தில் பொதுமை நிலவல் வேண்டும்.
80. சத்தின் உண்மையை மார்க்க வாயிலாக விளக்க வல்லது பொதுமை – பொதுமையே.
81. சத்தின் இருப்பை மறுக்கும் பொதுமை வேரற்ற மரம்போன்றதாகும்.
82. பொதுமை போராட்டத்தை ஒழித்து, ஒழுக்கம் அமைதி முதலிய சத்துக்குரிய துறைகளை மார்க்கத்தில் நிலை பெறுத்தலால், அது மார்க்கத்துக்கு வேண்டப்படுகிறது.
83. ஒழுக்கம் அமைதி முதலியன எற்றுக்கு? உயிர்களை மார்க்கத்தளவில் நிறுத்துதற்கா? அன்று. ஒழுக்கம் அமைதி முதலியன, உயிர்களைச் சத்தாகிய பேரறிவின் மயமாக்கத் துணைபுரிவனவாம்.
84. தொடக்கத்தில் உலகம் தொழில் வண்ணமாகவே இருந்தது. இடையே அதில் முதல் என்னுங் காளான் பூத்தது.
85. முதல் ஈன்ற கல்வியாளரும் பொருளாளரும் தமது நலங்கருதிப் போரை எழுப்பி உலகை பாழ்படுத்துகின்றனர். ஆதலின், பழையபடி உலகம் தொழில் வண்ணமாதல் வேண்டும்.
86. உலகம் பழையபடி தொழில் வண்ணமாதற்கு நிலமும் பொருளும் உழைப்பும் பொதுமைப்படல் வேண்டும்.
87. முதல் தொழில் வேற்றுமையைப் போக்கக் கொலைப் புரட்சி வேண்டுமென்பது சிலரது கருத்து. அக்கருத்துப் பரவுதலாகாது. அது பரவப் பரவத் தீமையே பெருகும்.
88. புரட்சி இருவிதம். ஒன்று தன்னலத்தை அடிப்படை யாகக் கொண்டது. மற்றொன்று அந்நலத்தை அடிப்படையாகக் கொள்ளாதது.
89. (தன்னலக்)கொலையை அடிப்படையாகக் கொண்ட எவ்வியக்கமும் ஆக்கம் பெறாது. அஃது இயற்கைக்கு மாறுபட்டது.
90. போராட்டம் எழுவதன் நோக்கம் என்னை? எல்லாரும் இன்புற்று வாழ்ந்து அமைதி பெறுதல் வேண்டுமென்பது. அவ்வமைதியைத் தன்னலக் கொலைப்புரட்சி ஒரு போதும் உண்டுபண்ணாது.
91. கொலைப்புரட்சி, கொலைப்புரட்சிகளை அடிக்கடி உயிர்ப்பித்துக் கொண்டே யிருக்கும். அப்புரட்சி பெருகப் பெருக அமைதி ஏது? மக்களை மக்கள் பிடுங்கித் தின்னும் ஒரு நிலையே உலகில் ஓங்கும்.
92. இயற்கையின் உட்கிடக்கை, மன்பதையை ஒருமை அன்பில் வளர்த்தல் வேண்டுமென்பதே யன்றி, அதனைப் பகைமையால் பிரித்தல் வேண்டுமென்பதன்று.
93. இயற்கையின் குறிப்புணர்வோர் கொலைப்புரட்சியில் தலைப்படமாட்டார்.
94. இயற்கைக் குறிப்பை உணர்ந்து நடக்கும் ஆற்றல் வாய்ந்தவர் இயக்கங்களை நடாத்த முன்வருதல் நல்லது.
95. கொலைப்புரட்சியால் ஒன்றை மாய்த்து, ஒன்றை ஆக்குதல் இயலாது. கொலைப்புரட்சி, கொலைப்புரட்சிகளை ஈன்றுகொண்டு போகும் தன்மையதாதலின், அதனால் அமைதி நிலைபெறாது. அமைதி நிலைபெறாத இடத்தில் எதைச் சாதித்தல் முடியும்?
96. (தன்னலக்) கொலைப்புரட்சி எண்ணமே தீயது.
97. முதலாளி தொழிலாளியை அடக்கி ஆளுதற்குக் காரணம், அவன் இவனைச் சகோதரன் என்று கருதாமையே யாகும். வன்மத்தை வளர்க்கும். கொலைப்புரட்சி சகோதரநேயத்தை எங்ஙனம் உண்டு பண்ணும்?
98. முதலாளி, தொழிலாளியைச் சகோதரன் என்று உணர்வானாயின், அவன் இவனைத் தன்னைப்போல் நேசிக்கப் புகுவன். நேசப் பெருக்கத்தால் வேற்றுமைகள் தொலையும்.
99. முதல் தொழில் வேற்றுமையைப் போக்கிச் சகோதர நேயத்தை வளர்த்துச் சமத்துவத்தை விளைக்க வல்லது சன்மார்க்கம் ஒன்றே.
100. மேல்நாட்டில் இப்பொழுது வீறுகொண்டு எழுந்துள்ள முதல் தொழில் போராட்டத்தின் முடிவு அரசியல் வெறியைத் தணிப்பதாகும்.
101. அரசியல் வெறி தணியத் தணியச் சன்மார்க்க நாட்டம் மிகும்.
102. (தன்னலக்) கொலைப்புரட்சிகள் மட்டும் இடை இடை நடமாடாதவாறு ஆங்காங்குள்ள அறிஞர் பாதுகாத்து வருதல் வேண்டும்.
103. (தன்னலக்) கொலைப்புரட்சி நடமாட்டம் சன்மார்க்க உணர்வை விரைவில் நிலைபெறுத்தாது.
104. தொழிலாளர் இயக்கத்தை நடாத்துவோர், இயற்கைத் தத்துவத்தை உணர்ந்து நடப்பவரா யிருத்தல் நலம். அந்நடை (தன்னலப்) புரட்சியை நாடத் தூண்டாது.
105. (தன்னலப்) புரட்சி தற்போது நலஞ்செய்வது போலச் சிலர்க்குத் தோன்றலாம். பின்னே அது பேரிடர் செய்வதாகும்.
106. (தன்னலப்) புரட்சியை நாடுவோரும் நாளடைவில் அதன் கொடுமை கண்டு அதனை வெறுப்பர். பின்னே அதை வெறுப்பதினும் தொடக்கத்திலேயே அதை நாடாதிருப்பது சிறப்பு.
107. சன்மார்க்கம் உலகில் பரவி, மன்பதையைத் தூய்மை செய்ய நாளாகும் என்றும், வன்மக் கொலைப் புரட்சி விரைவில் ஒன்றை நிகழ்த்தும் என்றும் சிலர் கருதுவதுண்டு.
108. வன்மப் புரட்சியால் விழும் தீமை, மீண்டும் உயிர்பெற்றுப் பன்முகங்கொண்டு எழும். சன்மார்க்கத்தால் விழும் தீமை, மீண்டும் உயிர்பெற்றெழாது. தீமையை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒன்றை ஏன் நாடுதல் வேண்டும்?
109. சன்மார்க்கம் இயற்கை நெறியாதலான், அதனால் கழிவன கழியும்; செழிப்பன செழிக்கும். கழிவும் செழிப்பும் இயற்கை வளர்ச்சிக்குத் துணைபுரிவன.
110. உலகில் தீமை கண்டே, போராட்டத்தை இயற்கை அன்னை அவ்வப்பொழுது எழுப்புகிறாள். போராட்டத்தை எழுப்பும் இயற்கை அன்னை, அதை நல்ல வழியில் நடாத்தி முடிப்பள். அவள்வழி நிற்க உலகங் கடமைப்படுதல் வேண்டும். அவள்வழிநில்லாது? முனைப்பால் கொலைப்புரட்சி முதலிய தீய வழிகளில் நுழைவது, வளர்ச்சிக்குத் தடைபுரிவதாகும். இயற்கைப் போக்கில் உறுதி கொள்ளுதல் அறிவுடைமை.
111. இயற்கை அன்னையின் ஆணையால் சில சமயம் புரட்சி இயக்கம் எழும். அது கலைவாயிலாகவோ பிற வாயிலாகவோ நிகழும். அவ்வியக்கத்துக்குத் துணைபோதல் அறவோர் கடன். என்னை? அதனடியில் தன்னலமோ வன்மமோ இன்மையும், அன்பும் அருளும் உண்மையும் என்க.
112. தன்னலத்தாலோ முனைப்பாலோ மறப்புரட்சி நிகழ்த்தலாகாது. இயற்கை ஆணைவழி நின்று இயக்கத்தின் பெயரால் எவ்வகைப் புரட்சியிலும் ஈடுபடலாம். அவ்வீடுபாடு அறத்தின்பாற்பட்டதே யாகும். அதனால் கர்மத் தாக்குதல் விளையாது.
113. இயற்கைப் போராட்ட எழுச்சி சீர்திருத்தத்துக்கு அறிகுறி.
114. போராட்டத்திடைச் சன்மார்க்க வேட்கையை எழுப்புவது அரிது என்பது சிலருடைய கருத்து. போராட்டத்திடைச் சன்மார்க்கம் எளிதில் புகும். தாகத்தால் வருந்தி வாடிக் களைப்புற்றோருக்கு நீரின் அருமை நன்கு தெரியும். வெயிலில் திரிந்து அலைந்தவர்க்கு நிழலின் அருமை நன்கு விளங்கும். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டுச் சலிப்புறுவோருக்குச் சன்மார்க்கச் சிறப்பு இனிது புலனாகும்.
115. மேல்நாட்டு அரசியலுக்கு இப்பொழுது சன்மார்க்கந் தேவை.
116. மேல் நாட்டரசியல் சன்மார்க்கத்தில் இயங்குமாயின், உலக முழுவதும் சன்மார்க்க அரசு அரும்பும்.
117. அரசு திருந்தினால் அகிலந் திருந்தும்.
118. அரசு வாயிலாகச் சன்மார்க்கம் பரவின், சன்மார்க்கம் விரைவில் உலகைச் சீர்செய்யும் பின்னர் அரசே வேண்டாத நிலை நேரும்.
119. பல துறைகளுள்ளும் அரசியற்றுறை சீர்திருத்தம் பெறுதல் அவசியம். அதன் சீர்திருத்தம் பிறவற்றை எளிதில் ஒழுங்கு செய்யும். ஆனாலும் அச் சீர்திருத்தம் எளிதில் கைகூடப் பிற துறைகளுஞ் சீர்திருத்தம் பெறுதல் நல்லது.
120. சாதி மதம் நிறம் மொழி நாடு முதலிய பித்துக்களால் எழும் வெறி, சன்மார்க்க வளர்ச்சிக்கு இழைக்கும் தீங்குகள் மேலே சுருங்கச் சொல்லப்பட்டன. அப்பித்த வெறி வாழ்வி னின்றும் அகலுதல் வேண்டும்.
121. சாதி மதம் நிறம் மொழி நாடு முதலிய வேற்றுமை களைக் களைதற்குரிய சீர்திருத்த முறைகளைப் பலபடக் கூறலாம். இங்கே பொருந்திய ஒன்றைக் குறித்தல் சிறப்பு. அது கலப்பு மணம் என்பது.
122. கலப்பு மணம் இயற்கையின் பாற்பட்டது. அது பலதிற வேற்றுமைகளைக் களையவல்லது.
123. மக்கள் அனைவரும் இயற்கையில் சமரச சன்மார்க்கத்தில் ஒருமைப்பட்டவர். அவ்வொருமைப்பாட்டை மக்கள் உணர்ந்து நடக்கின்றார்களில்லை. அவ்வொருமை உணர்வைச் சாதி மதம் நிறம் மொழி நாடு முதலியன மறைக்கின்றன. இந்நாளில் மக்கள் ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழ்தற்குரிய சாதனங்கள் பெருகி வருகின்றன. இஃது இயற்கை அன்னையின் கருணையே யாகும். இக்காலத்தில் கலப்பு மணம், சமரச சன்மார்க்க ஒருமை உணர்வை எழுப்புதற்கும் பெருந்துணை செய்வதாகும்.
124. சடங்குகளும், சம்பிரதாயங்களும், கண்மூடி வழக்க ஒழுக்கங்களும், இன்ன பிறவும் சன்மார்க்க வளர்ச்சிக்குத் தடைசெய்கின்றன. இத்தடைகளும் நீங்கப் பெறுதல் வேண்டும்.
125. சடங்குகளும் சம்பிரதாயங்களும் முற்றும் மன்பதையை விடுத்து எளிதில் திடீரென அகலுதல் அரிது. எவ்வளவு சீர்திருத்தஞ் செய்தாலும் அவைகள் ஒவ்வோரள விலாதல் ஒவ்வொரு விதமாகக் காலமிடங்களுக் கேற்றவாறு தலைகாட்டிக் கொண்டே யிருக்கும். அவைகளை அவ்வப்போது பொருந்திய முறையில், முறை முறையே சீர்திருத்தஞ் செய்தல் அறம்.
126. கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் பலதிறத்தன. அவைகள், பலப்பல வடிவில் உலகை மயக்குறச் செய்யும்.
127. இது கண்மூடி வழக்க ஒழுக்கம் ; இது கண்மூடி வழக்க ஒழுக்கமன்று என்று அறுதியிட்டு அறிஞராலும் கூற இயலாதபடி அவ்வழக்க ஒழுக்கங்கள் சாலவித்தை புரியும். ஒருவர்க்கு ஒன்று கண்மூடி வழக்க ஒழுக்கமாகத் தோன்றும்; மற்றொருவர்க்கு அஃது அவ்வாறு தோன்றுவதில்லை. இருவரும் அறிஞராயிருப்பர். கண்மூடி வழக்க ஒழுக்கங்களை மறுத்து வருவோரிடத்திலும், அவர் உணராத வகையில், அவைகளில் ஒன்றோ சிலவோ படிந்துகொண்டிருக்கும். கண்மூடி வழக்க ஒழுக்கங்களின் மாயை அளப்பரிது!
128. கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் இன்ன இன்ன என்று எப்படி அறுதியிட்டுச் சீர்திருத்தத்தில் இறங்குவது? இயற்கை நெறிக்கு மாறுபட்டனவெல்லாம் கண்மூடி வழக்க ஒழுக்கங்க ளெனக் கொண்டு சீர்திருத்தத்தி லிறங்குவது அறிவுடைமை.
129. கர்மம் நாள் கோள் ஆகியவைகளைப் பற்றி உலகில் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. இவைகளின் ஆதிக்கம் உயிர்கள்மீது தாக்குறுவதில்லை என்று சொல்வதற்கில்லை. இத்தாக்குதலால் நல்லன விளைதலும் உண்டு; தீயன விளை தலும் உண்டு.
130. கர்மம் நாள் கோள் முதலியன இயற்கை – இறைவழி இயங்குவன. இவைகளை இயக்கும் ஒன்றன்வழி நிற்போரை இவைகள் என் செய்யும்?
131. இயற்கை – இறைவழி நிற்குஞ் சன்மார்க்கர், கர்மம், நாள் கோள் முதலியவற்றின் செல்வாக்கால் தாக்குறுவதில்லை.
132. கர்மம் நாள் கோள் முதலியவற்றின்மீது எந்நேரமுங் கருத்தை இருத்தித் துன்புறுவது மடமை. இவைகளை இயக்கும் ஒன்றன்மீது கருத்திருத்துவது அறிவுடைமை.
133. செய்த கர்மத்தை அநுபவித்தே தீர்தல் வேண்டும் என்றொரு நம்பிக்கையும் சில இடங்களில் இருந்து வருகிறது. இதுவும் மூட நம்பிக்கையின் பாற்பட்டதே. அறியாமையால் முன்னே செய்த கர்மங்களை (செய்கைகளை)க் குறித்து உண்மை யாக வருந்தி, மீண்டும் அத்தகைக் கர்மங்களில் மனஞ் செல்லா உறுதியில் நின்று, இயற்கை – இறையினிடம் நெஞ்சைப் பதித்து, தியானஞ் செய்யச் செய்யப் பழைய கர்மங்களின் வேர் அற்றுப் போகும்.
134. கர்மம் நாள் கோள் முதலியவற்றைச் சிந்திப்பதற்குப் பதிலாக, இயற்கை – இறையைச் சிந்திப்பது சிறப்பு.
135. மக்கள் தனித்தனியே புறத்திலும் அகத்திலும் சீர்திருத்தம் பெறுதல் விழுப்பம். இதற்கு நல்லியக்கங்கள் தேவை.
136. நன்முயற்சிகளில் மக்கள் தனித் தனியே ஈடுபடுதல் சுருங்கிச் சேர்க்கையாக ஈடுபடுதல் பெருகின் அன்புக்குரிய ஒருமைப்பாடு ஓங்கும். அதனால் தனித்தனித் தூய்மையும் விளையும்.
137. தனிமை உணர்வு வளர்ந்து, தனிமைப் பொருள் தனிமை அமைப்பு தனிமை அரசு முதலியவற்றைப் பெருக்கிச், சாம்ராஜ்யத்தை ஓங்கச் செய்து, தூய்மையைக் கெடுத்துப், போராட்டம் கூடா ஒழுக்கம் முதலிய தீமைகளை உலகில் நிலைபெறுத்தியது கருதற்பாலது. ஆதலின், சேர்க்கை ஈடுபாடே வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துவதாகும்.
138. மக்களின் தூய்மை, வாழ்வுத் துறைகளை யெல்லாந் தூய்மை செய்யும்.
139. புறச்சீர்திருத்தம் இயற்கைவழி உடலோம்பல், கல்வி, பொதுமை அறம் முதலியவற்றால் அமைவது; அகச் சீர்திருத்தம் சத்தியத்தால் அமைவது.
140. அகச் சீர்திருத்தத்துக்குச் சத்தியம் அவசியம். சத்தியம் இயற்கை வளர்ச்சிக்கு உரியது.
141. சத்தியம் ஒன்றுள்ள இடத்தில் எல்லா நல்லியல்பு களும் அமையும்.
142. சத்தியத்தை எப்படி நிலைக்கச் செய்வது? நல் லெண்ணங்களால் அதை நிலைபெறுத்தலாம். நல்லெண்ணங் கட்குப் புறச் சீர்திருத்தத்துக்குரிய முறைகளும் துணை புரியும்.
143. நல்லெண்ணங்கள் அகத் தூய்மைக்கு இன்றியமை யாதன.
144. அகத்தூய்மை அற்ற புறத்தூய்மையால் பயனில்லை.
145. நல்லெண்ணங்கள், உயிரையும், உயிர்வழி உடலையும் ஓம்பும் அமிழ்தம்.
146. தீய எண்ணங்கள், கூரிய அம்புகள்.
147. எண்ணமே மனிதன்.
148. நல்லெண்ணங்களால் தம்மைப் பண்படுத்திக் கொண்டவரிடம், தீயோரின் எண்ணங்கள் பாயின், அவைகள் கூர்மை மழுங்கி வீழும், மற்றவரை அவைகள் துன்புறுத்தும்.
149. நல்லெண்ணங்களால் தம்மைப் பண்படுத்திக் கொண்டவரால் தீயோரைத் திருத்தல் இயலும்.
150. பிறரைச் சீர்திருத்தஞ் செய்யப் புகுவோர் முதலாவது தம்மைச் சீர்திருத்தஞ் செய்துகொள்வது முறைமை.
151. கல்வி, அறிவு, அநுபவம், வாய்மை, பொறுமை, இரக்கம், தீங்கு புரிவோர்பால் வன்மங் கொள்ளாமை, மன்னிக்குமியல்பு, பகைவரையும் நேசித்து நலஞ்செய்தல், தற்பெருமைக்கு இறையாகாமை முதலிய நறுங்குணங்கள் சீர்திருத்தத் தொண்டரின் உடைமைகள்.
152. சீர்திருத்தரிடம் நிந்தனை தலைகாட்டலாகாது. நிந்தனை சீர்திருத்த இயல்பன்று.
153. மக்கள் மூட வழக்க ஒழுக்கங்கட்கு அடிமையாதற்குக் காரணமாக நிற்பது அவர்கள் மாட்டுள்ள அறியாமையாகும்.
154. அறியாமையைப் போக்குதற்குரிய வழி அறியாமையை நிந்திப்பதன்று; அறிவை விளக்குவதாகும். இருளை நிந்திப்பதால் இருள் நீங்காது. ஒளியைக் கொண்டுவரின், இருள் தானே ஓடும்.
155. சீர்திருத்தத் தொண்டுக்குரிய முறைகளைப் பலபடக் கூறலாம். அவரவர் தம் தம் அறிவாற்றலுக்குத் தக்கவாறும், காலதேச வர்த்தமானத்துக்கேற்றவாறும் முறைகளைக் கோலிக் கொள்ளலாம்.
156. சீர்திருத்தப் பணிகளுக்குரிய வழிகள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன மூன்று. அவை பிரசாரம் விரதம் தியானம். இம்மூன்று வழியில் சீர்திருத்தப் பணிகளை நிகழ்த்தலாம்.
157. இலட்சம் பிரசாரகர்கள் முயற்சியிலும் ஒரு நல்லோன் விரதமும் தியானமும் பெருநலஞ் செய்யும்.
158. பொருளாதாரம், ஒழுக்கம் முதலியன குறைவின்றி நிறைவுபெற்று, அவைகளால் எல்லாரும் இன்புற்று வாழும் ஒரு நிலை, உலக முழுவதும் பரவின், அப்பொழுது சன்மார்க்கம் எற்றுக்கு என்று சிலர் கருதுவதுண்டு. இக்கருத்துத் தவறுத லுடையது.
159. சன்மார்க்கமென்பது உலக வாழ்வளவில் நின்று விடுவ தன்று. அது மேலுங் கடந்து நிற்பது, தியானம் முதலிய வற்றிற்குச் சன்மார்க்கம் வேண்டற்பாலது.
160. பொருள், ஒழுக்கம் முதலியவாற்றான் எல்லாரும் இன்புறும் நிலை, தியானம் முதலிய சன்மார்க்கத் துறைகட்குச் சாரம் போன்றது.
161. பொருள் முடையும், தீயொழுக்கமும், இன்ன பிறவும் மக்களிடை அமைதி நிலைபெறுத்தாமையான், மக்கள் சன்மார்க்கர்களாக வாழ்தற்கு இடம் நேராமற் போகிறது. பொருள் நிலை முதலியன ஒழுங்குபட்டு, எல்லாருங் கவலை யின்றி இன்புறுவாராயின், மக்கள் தியானம் முதலிய சன்மார்க்கத் துறைகளில் எளிதில் ஈடுபடுதற்கு வழி நேரும்.
162. பொருளாதாரம் முதலியவற்றைச் சீர்செய்ய உலகம் முனைந்து நிற்பதன் அடிப்படையான நோக்கம் என்ன? வாழ்வில் அமைதி தியானம் முதலியன ஆக்கம் பெறுதல் வேண்டும் என்பதே.
163. உயிர்களின் அறியாமையை நீக்கி, அவைகளின் முழு அறிவை விளக்கஞ் செய்யப் புகுந்த இயற்கை அன்னை, பொருளாதாரம் முதலியன செம்மை பெறும் அளவில் தன் முயற்சியை நிறுத்திக் கொள்ளாள். அங்ஙனம் நிறுத்திக் கொள்வது இயற்கையின் அறமன்று; மேலும் உயிர்களின் நலத்துக்குத் துணைபுரிவது இயற்கை அறத்தின் இயல்பு.
164. உயிர் முழு விடுதலை அடையும் வரை, இடையிடை ஏற்படும் தடைகளை நீக்கிச் சீர்செய்வது இயற்கை அன்னையின் நியதி.



