சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

1. தோற்றுவாய்

1. இயற்கையை உடலாக்கொண்டு, என்றும் மாறுதலின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க.

2. இறைக்கு உடலாய்நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க.

3. இயற்கை – இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க.

4. கால தேச வர்த்தமான நிலைமைக்கு ஏற்றவாறு அவ்வப் போது குருமார்வழிப் பிறந்த அருள் மொழிகள் வாழ்க.

5. அருள்மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க.

6. சன்மார்க்க சங்கம் வாழ்க.

7. சன்மார்க்க போதம் என்னும் ஒரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அது, பொது நூல். அந்நூலில், சத் (உண்மை) இறை என்பதும், மார்க்கம் (வழி) இயற்கை என்பதும், சத்தை அடைதற்கு இயற்கை வழிபாடு தேவை என்பதும், இயற்கை வழிபாடு குருநாதன் காட்சியை வழங்கும் என்பதும், குருநாதன் காட்சியால் நுட்பம் விளங்கும் என்பதும், மிகச் சிலர் குருவருளின்றியும் இயற்கை வழி பாட்டளவிலேயே நுட்பம் விளங்கப்பெறுவர் என்பதும், இயற்கை கடந்த தனித்த இறைநிலை வாக்கு மனம் கடந்தது என்பதும், இன்ன பிறவும் விரித்துக் கூறப்பட்டன.

8. இறைநிலை இரண்டு. ஒன்று இயற்கையைக் கடந்து தனித்து நிற்பது; இது வாக்கு மனங்கட்கு எட்டாதது. மற்றொன்று இயற்கையுள்ளும் குருமாருள்ளும் ஒளிர்வது.

9. இயற்கை வாயிலாகவோ, குருவாயிலாகவோ இறையின் உண்மையை உணர்தல் கூடும். இதற்கு இயற்கை வழிபாடோ, குரு வழிபாடோ, அல்லது இரண்டுமோ தேவை.

10. இயற்கை வழிபாடு, சன்மார்க்க போதத்தில் விரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால், அதைப் பற்றிய விளக்கம் இங்கே வேண்டுவதில்லை.

11. குருமாரைப் பற்றியும் சன்மார்க்க போதத்தில் ஓர் அதிகாரம் உண்டு. அது, பொது முறையில் குருமாரைப் பற்றிச் சொல்வது. அப்பொழுது முறையைச் சிறப்பு முறையால் திறந்து காட்டுவது இந்நூல்.

12. சிலர்க்குப் பொதுநூலே போதியதாயிருக்கும். அதனால், பொதுநூலில் சிறப்பு முறைகள் சொல்லப்பட வில்லை.

13. சன்மார்க்க போதத்தில் குறிப்பிட்ட சில கருத்துக்கள், விளக்கத்தின் பொருட்டும், தொடர்பு குறித்தும், இந் நூற்கண்ணும் சுருங்கிய முறையில் சில இடங்களில் ஆளப்படும்.

14. சன்மார்க்க போதம் முன்னூல் என்று இந்நூற்கண் இனிக் குறிக்கப்படும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *