
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
2. குருமார் விளக்கம்
1. இறையுண்மை, குருமார் வாயிலாக உலகுக்கு விளங்கு தலால், குருமாரைப்பற்றிச் சிறப்புமுறையில் தெளிவு பெறுதல் வேண்டும்.
2. குருவுக்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன. அவைகளுள் சில வருமாறு:- சித்தன், அருகன், புத்தன், கிறிது, நபி, மாடர், ஆச்சாரியன், தீர்த்தங்கரன், குமரன், மூர்த்தி முதலியன. இப்பலபட்ட பெயர்களின் பொருள் ஒன்றே.
3. குருவைப் பற்றிப் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. இறைவன் குருவாக வருவன் என்று சிலரும் – இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவனாதலான், அவன் குருவாக வருவதில்லை என்று வேறு சிலரும் – குருவின் உள்ளத்துள் இறைவனது ஒளி நீக்கமின்றி இடையறாது திகழ்தலானும், அவர் தமக்கென ஒன்றின்றி இறைவன் வழியே நின்று கடனாற்றுதலானும், இறைவன் செயலுக்கெல்லாம் அவர் கருவியாக நிற்றலானும், அவரை இறைவன் என்று உபசாரமாகக் கொள்ளலாமென்று மற்றுஞ் சிலரும் கூறுவர். இன்னும் வெவ்வேறு கருத்துடைய வரும் உளர்.
4. சத் என்னும் இறை, பிறப்பு இறப்பு இல்லாதது என்பதும், குரு, சமயம் நேரும்போது பிறப்பதுண்டு என்பதும் முன்னூலில் மிகத் தெளிவாக விளக்கஞ் செய்யப்பட்டிருக்கின்றன.
5. உண்மை விளங்கும்போது, குருநிலை தானே விளங்கும். குருநிலையைப்பற்றி விவாதம் வேண்டுவதில்லை.
6. குருமாருக்கென ஒரு தனித் திருக்கூட்டம் இருக்கிறது. இறை அருளால், அத்திருக்கூட்டத்தின் வாயிலாக உலகம் நடைபெற்று வருகிறது.
7. குருமார், பலப்பல இடங்களில் தோன்றிக் கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ற முறையில் சன்மார்க்கத்தை விளக்கிப் போவர்.
8. உண்மையை உணர்த்தக் குருமார், பருவுடல் தாங்கியும் வருவர். அவர் நுண்ணுடலுடன் பிறர்வாயிலாக உண்மையை உணர்த்துவதும் உண்டு.
9. சன்மார்க்கத்தை அடிப்படையாக்கொண்டு, இது காறும் வெளிப்போந்த குருமார் போதனைகள் பலதிறத்தன.
10. குருமார் போதனைகள், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறும், மக்களின் பலதிற இயல்புகளுக்கு ஏற்றவாறும் பலவகையாய்ப் பிறந்தன.
11. போதனைகளின் புறத்தோற்றம் பலவகை. அகத்தில் எல்லாம் ஒருவகையே.
12. பலவகை ஒருவகையாக விளங்குதற்கு வழிபாடு தேவை.
13. வழிபாட்டுக்குச் சில குறிக்கோள் வேண்டும்.
14. குறிக்கோள், நுண்மை பருமை என இருவகைப்படும். இரண்டும் முறையே அகத்துக்கும் புறத்துக்கும் உரியன.
15. குறிக்கோளை எங்கிருந்து பெறுவது? குருமார் போதனைகளினின்றும் அவைகளைப் பெறுதல் கூடும்.
16. குருமார் போதனைகளிற் படியப்படியக் குறிக்கோள் புலனாகும்.
17. குறிக்கோள் பலபடப் புலனாகும். அவைகளை ஒருவித முறைக்கு உட்படுத்தித் தொகுத்துக் கொள்வது வழிபாட்டுக்கு வழிகோல்வதாகும்.
18. குருமார் போதனைகளை வழிபாட்டின் பொருட்டு, எட்டு விதமாகத் தொகுத்துக் கொள்ளலாம். அவை வருமாறு:- (1) தெய்வம் ஒன்றென்பது (2) இயற்கை (3) அன்பு (4) அஹிம்சை (5) தர்மம் (6) நிஷ்காமியம் (7) அழகு (8) மோனம்.
19. இவ்வெட்டும் ஒன்றே, ஒன்று உள்ள இடத்தில் பிறவும் இருக்கும். இந்நுட்பம், சன்மார்க்கத்தில் ஈடுபட்டு ஒழுக ஒழுகப் படிப்படியாக விளங்கும்.
20. விளக்கத்தின் பொருட்டும், தொடக்கத்தில் மக்கள் மனோநிலை பலபட்டு நிற்றல் கருதியும் எட்டு என்று ஒரு விதக் கணக்கிடப்பட்டது.
21. ஒன்று எட்டாய், எட்டுப் பலவாகும். பல எட்டாய், எட்டு ஒன்றாகும். இந்நுட்பம் சன்மார்க்கத் தெளிவில் நன்கு விளங்கும்.
22. எட்டையும் குருமாருள் பொருந்தக்கொள்வது ஒருவித ஒழுங்குமுறை. அம்முறை வருமாறு:- (1) தெய்வம் ஒன்று – மகம்மது நபி (2) இயற்கை – அன்னை (3) அன்பு – கிறிது (4) அஹிம்ஸை – விருஷபதேவர் (5) தர்மம் – புத்தர் (6) நிஷ்காமியம் – கிருஷ்ணமுர்த்தி (7) அழகு – குமரன் (8) மோனம் – தட்சணாமூர்த்தி.
23. இப்பிரிவால் ஒருவர் போதனையில் பிறர் போதனைகள் இல்லை என்று கொள்ளுதல் கூடாது. ஒருவர் போதனையில் பிறர் போதனைகளும் உண்டு. பிரிவு, வழிபாட்டின் பொருட்டுக் காட்டப்பட்டது.
24. மகம்மது நபி, ஒரு தெய்வ உணர்ச்சியை நிலை பெறுத்தியவர்; அவ்வொரு தெய்வம் பிறப்பு இறப்பு இல்லாதது என்பதை அறிவுறுத்தியவர்; விக்கிரக ஆராதனையைக் கடிந்தவர். அவர் போதனைகள் பல. அவைகளுள் தலையாயது தெய்வம் ஒன்று என்பது. தெய்வம் ஒன்று என்னும் உணர்வில் எல்லாவித சமரசமும் அடங்கும் மகம்மது நபி, நபி நாயகம் என்று போற்றப் படுகிறார். அவர் வாயிலாக வெளிவந்த ஆண்டவன் மொழி, திருக்குரான் எனப்படும். மகம்மது நபி விக்கிரக ஆராதனையைக் கடிந்தவராகலான், அவருக்கோ அவர் போதனைக்கோ அவர் தொடர்புகொண்ட எதற்கோ அறிகுறி யாகக்கூட உருவம் அமைத்தலாகாது. இது சிறப்பாகக் கவனிக்கத் தக்கது.
25. இயற்கை, அன்னையாவள் இயற்கையை அன்னை என்று சொல்வது மரபு. இயற்கைவழி நிற்பவர், சில சமயங்களில் குருவின் துணையின்றி இயற்கை வாயிலாகவே இறையொளி விளங்கப் பெறுதலால், இயற்கையும் குருமரபில் கொள்ளப் பட்டது. இயற்கை, இறைவனுக்கு உடலாயிருப்பது. இறை உருவமில்லாதது; எங்குமிருப்பது. இறை எங்கும் எப்படி இருக்கிறது? இறை, இயற்கையை உடலாக்கொண்டு, தான் உயிராக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இறையின் உண்மையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கையோடு இயைந்து வாழ்வது இறையோடு இயைந்து வாழ்வதாகும். இயற்கையை வெறுப்பது இறையை வெறுப்ப தாகும். இயற்கை வாழ்வு சன்மார்க்கத்துக்கு வேண்டற்பாலது. எக்காரணம் பற்றியேனும் குருமாருண்மையில் உறுதி கொள்ளாதார் இயற்கையை நேரே பற்றலாம். இயற்கை, ஆத்திகர் எனப்படுவோர்க்கும் நாத்திகர் எனப்படுவோர்க்கும் பொது. சன்மார்க்கம் அனைவர்க்கும் உரியது.
26. கிறிது, கடவுள் அன்பு என்பதை வலியுறுத்தியவர். அவரது போதனையினாலும் சாதனையினாலும், வெறுங் கிரியை, புறக்கோலம், புரோகிதம், பலி முதலிய கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் கடவுள் நெறி அல்ல என்பதும், அன்பு நெறியே கடவுள் நெறி என்பதும் நன்கு விளங்கின. கிறிதுவின் போதனை களைத் திரட்டிப் பார்த்தால் அவைகளினூடே அன்பு என்னும் உயிர்நாடி ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய போதனையும் சாதனையும் அன்பே. கிறிதுவின் சிலுவை, அன்புக்குரிய தியாகத்தின் அறிகுறி. அன்பு உள்ள இடத்தில் சமரசம் இருத்தல் இயல்பு. கிறிதுவின் மலைப்பொழிவில் அன்பு நெறியாகிய சன்மார்க்க இயல்கள் பொலிவது காணலாம்.
27. விருஷபதேவர், அஹிம்சையைப் போதித்தவர். அவர்தம் போதனையால் அஹிம்ஸா பரமோதர்மா என்பதும், தயாமூல தர்மம் என்பதும் விளக்கம் பெற்றன. அஹிம்சை யாவது மன்னுயிரைத் தன்னுயிர்போல் கருதி ஒழுகுவது. இதுவே ஜீவகாருண்யம் என்பது. ஜீவகாருண்யம், சன்மார்க்கத் துக்கு அடிப்படை. சதுர் அநுயோகம் என்னும் பரமாகமம் பார்க்க.
28. புத்தர், தர்மோபதேசஞ் செய்தவர். பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல், கொலை வேள்வி புரிதல் முதலிய அதருமச் செயல்கள் புத்தரால் மறுக்கப்பட்டன. எல்லாரையும் ஒப்ப நோக்கும் சமதர்மம் அவரால் போதிக்கப்பெற்றது. எல்லாரையும் ஒப்ப நோக்குவதாவது எவ்வுயிர்க்குந் தீங்கு நினையாமை. இதற்கு மக்களிடத்துள்ள விலங்கியல்புகள் ஒழிதல் வேண்டும். மக்கள், விலங்கு இயல்பினின்றும் விடுதலையடையவும், தர்மவழியில் நின்று ஒழுகவும் புத்தரால் சீலங்கள் கோலப்பட்டன. பௌத்த சீலங்களால் தர்மமும், தர்மத்தால் சமரசமும் விளையும். பௌத்த தர்மம், சீலம் முதலியவற்றைத் திரிபிடகத்தில் நோக்குக.
29. கிருஷ்ணமூர்த்தி, நிஷ்காமிய கர்மத்தை உணர்த் தியவர். காமியப்போரிடைக் கிருஷ்ணமூர்த்தியின் நிஷ்காமிய கருமோபதேசம் எழுந்தது. காமிய நெஞ்சில் சமரச ஞானம் பிறவாது. நிஷ்காமிய நெஞ்சில் சமரசஞானம் நிலவும். நிஷ்காமியம் சமரசத்தின் ஊற்று. கிருஷ்ணமூர்த்தியின் நிஷ்காமியச் சிறப்பைப் பகவத் கீதையில் காண்க.
30. குமரன், அழகுக்கு அறிகுறி. அழகாவது இயற்கையி லுள்ள அழியா ஒளி. அவ்வழகு என்றும் அழியாதது; மாறுத லடையாதது; இளமையாயிருப்பது. இதனால் அழகுக்கு அறிகுறியாகக் குமார மூர்த்தம் கொள்ளப்பட்டது. அழகில் ஊறிக்கிடக்கும் உள்ளத்தில் வேற்றுமை உணர்வு தோன்று தற்கும் இடமில்லை. இது சமரச நிலை என்பது. அழகுக் கலைகள் – இயற்கையின் கோலங்கள், அவைகளின் ஓவியம் காவியம் முதலியன.
31. தட்சணாமூர்த்தி, மோனத்துக்கு அறிகுறி. மோனம் வாக்கு மனம் ஒடுங்கும் நிலை. மூர்த்தியின் பெருவிரலும் சுட்டு விரலும் ஒன்றியிருத்தல் உற்று நோக்கற்பாலது. பெருவிரல் இறையை உணர்த்துவது; சுட்டுவிரல் உயிரை உணர்த்துவது. பலவாறு அலைந்து உழன்று அமைதி இழந்து கிடந்த உயிர், இறையுடன் சேர்ந்து அமைதி பெறுகிறது.
மோனத்தில் மூன்று நிலைகள் உண்டு. ஒன்று ஒலி; மற் றொன்று ஒளி; இன்னொன்று சாந்தம்.
வாக்கு மனம் ஒடுங்கும் மோனத்தில், இயற்கையின் நானா பேதங்கள் மறைந்து, அவை யெல்லாம் ஒலி மயமாகத் தோன்றும்.
ஒலி, இரண்டு விதம். ஒன்று வாக்கு மன உணர்வில் கேட்பது. இது மாயாநாத ஒலி. மற்றொன்று வாக்கு மனம் ஒடுங்கு நிலையில் எழுவது. இஃது இறை வடிவான ஒலி. இஃது அருள்நாத ஒலி.
ஒலி, ஒளியை விளங்கச் செய்யும். இயற்கை வடிவங்கள் ஒலியாகி ஒளியாகும். ஒலிகடந்த நிலையில் எல்லாம் ஒளிமய மாக விளங்கும்.
ஒளிக்கு மேற்பட்டது சாந்தம்.
சாந்தத்தில் தெளிவுறுவது சன்மார்க்கம்.
32. ஒளிவரை இயற்கையை உடலாக் கொண்டது இறைநிலை. ஒளிக்கு மேற்பட்டது தனித்த இறை நிலை. இது வாக்கு மனங்கடந்தது; சொல்லொணாதது.
33. ஒலிக்கு அறிகுறியாகப் பெரியோர் வாயிலாகப் பிறந்த தெய்வ மொழிகளைக் கொள்ளலாம். அவை வருமாறு: திருக்குரான், பைபில், பரமாகமம், திரிபிடகம், தசோப நிஷத், பிர்மசூத்திரம், பகவத்கீதை, சிவஞானபோதம், திருக்குறள், தேவார திருவாசக நாலாயிரப்பிரபந்தம், திருமந்திரம், கந்தரநுபூதி முதலியன. இவைகளினின்றும் பிறந்த வழிநூல்கள் பலப்பல. இவை யாவும் சன்மார்க்கத்தை அறிவுறுத்துவன.
34. ஒளிக்கு அறிகுறியாகத் தீபத்தைக் கொள்ளலாம்.
35. சாந்தத்துக்கு அறிகுறியாக மரம், செடி, பாம்பு, மயில், யானை, புலி, சிங்கம், பசு ஆகிய இவைகள் சாந்தமயமாக ஒன்றியுள்ள முறையில் ஓவியம் பொறித்துக் கொள்ளலாம்.
36. தனித்த இறை நிலைக்கு எவ்விதக் குறியும் அமைத்தல் கூடாது.
37. குருமார் பெயர்கள் சரித்திர முறையில் இங்கே குறிக்கப் படவில்லை. சரித்திரத்துக்கும் இந்நூன் முறைமைக்கும் தொடர் பில்லை.
38. ஈங்குக் குறிப்பிடாத குருமார் பலர் இருக்கிறார். அவர் மேற்குறிப்பிட்ட குருமார் வழிவழி வந்தவர். அவர்தம் போதனைகள் எட்டில் அடங்கும். அப்போதனைகள் யாவும் எட்டினின்றும் பிறந்த கவடு கோடுகளாகும். அவர் போதனை எதில் இயைவதா யிருக்கிறதோ, அவரை அதற்குடையவருடன் சேர்த்துக்கொள்க. பெயர்கள் ஒருவிதக் குறிக்கோளுக்காகக் காட்டப்பட்டன. பெயரில் கருத்துச் செலுத்துவதைப் பார்க்கிலும், போதனையில் கருத்துச் செலுத்துவது சிறப்பு.
39. சன்மார்க்க சங்கத்தார் நால் வகையினர். விளக்கம் முன்னூலில் பார்க்க. முதலிரு வகையினர் பொருட்டு எட்டு என்பதும், அததற்குரிய குரு என்பதும் வகுத்துச் சொல்லப் பட்டன.
40. சன்மார்க்கத்தில் முதலில் ஈடுபடுவோர்க்குப் பன்மை உணர்வு உண்டு. ஒவ்வொருவித உணர்வு ஒவ்வொன்றை விரும்பும் இயல்புடையதாயிருக்கும். அதற்குரிய முறையில் ஒன்று எட்டாக வகுக்கப்பட்டது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவிதச் சுவையில் விருப்பு நிகழ்வது இயல்பு.
41. சன்மார்க்க சங்கத்தின் முடிந்த படியில் நிற்பவர்க்கு எல்லாம் ஒன்றாகவே தோன்றும். அவர்க்குக் குருமார் அனைவரும் உணர்வில் ஒருவராகவே தோன்றுவர்.
42. குருமார் உள்ளத்தில் ஒளிரும் தெய்வம் ஒன்றாத லானும், அவ்வொன்றன்வழி அவர் இயங்கிச் சன்மார்க்கத்தை உலகின் பொருட்டுப் பலவகையாகப் போதித்தமையானும், அவர் மொழிகள் யாவும் ஒரு தெய்வ ஒலியின் பரிணாமமாகும்.
43. குருமார் எல்லாரும் உணர்வில் ஒருவரேயாவர்.
44. தொடக்கத்தில் எவர்க்கும் குருமாரின் வடிவில் நாட்டஞ் செல்லும்; பின்னே சன்மார்க்கப் பயிற்சி மிகமிக அவருக்குக் குருமாரின் உணர்வில் நாட்டஞ் செல்லும். வடிவில் தோன்றும் பன்மை, உணர்வில் ஒருமையாகும்.
45. குருமார் போதனைகள் ஒரு தெய்வ ஒலியாதலின், அவை களுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் சன்மார்க்கத்தில் நிற்பதாகாது.
46. பன்மை உணர்வுடையவர்களில் எவர்க்கு எக்குருவின் போதனைமீது விருப்பம் நிகழ்கிறதோ, அவர், அக்குருவின் போதனைவழி நின்று ஒழுகுவாராக. அவ்வொழுக்கம், அவரைச் சன்மார்க்கத்தில் சேர்க்கும்.
47. சன்மார்க்கச் சேர்க்கை நாளடைவில் குருமார் போதனைகளின் ஒருமையை விளங்கச்செய்யும்.
48. ஒருவர், தாம் விரும்பும் குருவின் போதனைமீது பற்றுக்கொள்ளலாம். ஆனால் அது காரணமாக, அவர் மற்றக் குருமார் போதனைகளை நிந்தித்தலாகாது. நிந்திப்பின், அஃது அவர்தங் குருவின் போதனையையே நிந்திப்பதாகும்.
49. நிந்தனை உள்ள இடத்தில் சன்மார்க்கம் விளங்குதல் அரிது.
50. குருமாரையும், அவர்தம் போதனைகளையும் ஒன்றாகவே கொள்ளுதல் வேண்டும்.
51. குருமாருடைய போதனைகள்வழி நில்லாது, அவர்தம் உருவங்கட்கு மட்டும் வந்தனை வழிபாடுகள் செய்வது தவறு. இத்தகை வந்தனை வழிபாடுகள் செய்வோரது தொகை உலகில் பெருகியிருக்கிறது. குருமார் போதனைகள் வழி நிற்போரது தொகை உலகில் பெருகல் வேண்டும். இப்பெருக்கால் உலகில் சன்மார்க்கம் ஓங்கி வளரும்.
52. குருமார் உள்ளத்தில் ஒளிர்வது இறையொளி. அவ்வொளி விளங்கப்பெறுதற்குக் குருமார் போதனைகள் வழி நின்றொழுகல் வேண்டும்.
53. குருமார் வழிபாடென்பது, குருமார் போதனைகள் வழி நின்று ஒழுகி வழிபாடு செய்வது. குருமார் வழிபாடென்று பின்னே குறிக்கப்படும் இடங்களிலெல்லாம் இவ்வாறே கொள்க.
54. குருமார் போதனைகளில் சம்பிரதாயம், கட்டுப்பாடு முதலியவற்றை நுழைப்பது பாவம். குருமார் போதனைகள், சம்பிரதாயம் கட்டுப்பாடு முதலியவற்றைக் கடந்தவை.
55. குருமார் போதனைகளைச் சம்பிரதாயம் முதலிய கட்டுக்களால் பிரிவுபடுத்தி, உலகில் பல சமய உணர்வையும் பிணக்கையும் உண்டுபண்ணுவது ஆங்காங்குள்ள புரோகித மதம்.
56. சம்பிரதாயம் முதலியன புரோகிதத்தின்பாற்பட்டன. புரோகிதம், சன்மார்க்கமன்று.
57. புரோகிதத்தால் உலகம் பட்டது போதும்! போதும்! இனி உலகம் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தொழுகுவதாக.
58. குருமார் போதனைகள் மன்பதைக் கென்று பிறந்தன; அவை குறிப்பிட்ட சிலர்க்கென்று பிறக்கவில்லை.
59. குருமார் சன்மார்க்கத்தை அறிவுறுத்தியவர். சன்மார்க்கம் பொதுவானது; எல்லார்க்கும் உரியது.
60. குருமார் உண்மையையும், அவர் அறிவுறுத்திய சன்மார்க்கத்தின் நுட்பத்தையும் அநுபவத்தில் தெளிந்து, அத்தெளிவை உலகுக்கு உணர்த்திய பிற்காலப் பெரியோர் சிலர் உளர். அவருள் குறிக்கத்தக்கவர்; தால்தாய், தாயுமானவர், சுவீடன்பர்க், பிளவட்கி அம்மையார், இராமகிருஷ்ணர், இராமலிங்கர் முதலியோர்.
61. சன்மார்க்க விளக்கத்துக்குக் குருவழிபாடு இன்றியமை யாதது.



