சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

7. இறுவாய்

1. சத்தெனும் இறை ஒன்றே.

2. இறைக்கு உடல் இயற்கை.

3. இறை அப்பன்; இயற்கை அன்னை.

4. இயற்கை கடந்த இறை நிலையை மன உணர்வு உடையோர் ஆரவேண்டுவது அநாவசியம்.

5. மன உணர்வு உடையோர், இயற்கை – இறையை வழிபடும் அளவில் நிற்பது ஒழுங்கு.

6. சத்தெனும் இறையை அடைதற்குரிய மார்க்கம் இயற்கை.

7. இறையை அடைதற்கு, இயற்கை இன்பத்தை வெறுத்துக் காட்டுக்கோடி, மூச்சைப் பிடித்தல் முதலியன தேவை என்று நினைப்பது தவறு.

8. இயற்கை நெறி, இறை நெறியாதலான், இயற்கை இன்பத்தை வெறுப்பது, இறை இன்பத்தை வெறுப்பதாகும்.

9. பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் வாழ்வது இயற்கை.

10. பெண் ஆணை வெறுப்பதும், ஆண் பெண்ணை வெறுப்பதும் துறவென்று சொல்லப்படுவது தவறு.

11. தீய குணங்களை நீப்பது துறவு.

12. பெண்ணும் ஆணும் சம உரிமையுடையவர்.

13. ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழ்வது அறம்.

14. இயற்கைவழி நின்று, உடலோம்பிக், கல்வி பயின்று, இயல்புக்குரிய தொழின் முறைகளில் ஈடுபட்டு, இல்லறமேற்று, உயிர்கள் தொண்டு செய்து, இயற்கைத் தியானத்தில் பயிற்சி பெறுதல், இறைவழிபாடாகும்.

15. இயற்கைநெறி நிற்பது, இறைநெறி நிற்பதாகும் இதுவே சமயம் என்பது.

16. சமயங்கள் பல இல்லை. உள்ள சமயம் ஒன்றே. அது சன்மார்க்கம்.

17. இயற்கைத் தியான முதிர்ச்சியால் குருதரிசனம் பெறலாம்.

18. குருமார் மக்களுமல்ல; கடவுளுமல்ல. மக்கள் கடவுளை அடைவதற்கு அவர் துணைசெய்பவர்.

19. குருமார் நெஞ்சத் தாமரையில் என்றும் இறையொளி திகழ்ந்தவண்ணமிருக்கும். அவர் நுண்ணுடலுடையவர்; பொன் மேனியர்; இயற்கைத் தியான முதியோர்க்குக் காட்சியளித்து நலஞ்செய்பவர்.

20. சடங்குகள் செய்து, காசு பறிப்பவர் குருமாரல்ல; அவர் புரோகிதர்.

21. புரோகித மதங்கள் பலப்பல. அவைகள் வேறு; சன்மார்க்கம் வேறு. இரண்டுக்குந் தொடர்பில்லை.

22. சன்மார்க்கம் எல்லார்க்கும் உரியது.

23. சன்மார்க்கத்துக்கு நாடு, மொழி, நிறம், வகுப்பு, சாதி, மதம் முதலிய வேற்றுமைகளில்லை.

24. நாடு, மொழி, நிறம், வகுப்பு, சாதி, மதம் முதலிய வேற்றுமை உணர்வைக் கலப்பு மணம் ஒழிப்பதாகும்.

25. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவது அஞ்ஞானம்.

26. மக்கள் அனைவருஞ் சகோதரர்கள்.

27. எல்லா உயிர்களிலும் வீற்றிருப்பது சத்தெனும் இறை ஒன்றே. அவ்வுண்மையை உணர உணரச் சகோதர நேயம் பெருகும்.

28. கர்மம், நாள், கோள் முதலியன சன்மார்க்கரைத் தாக்குவதில்லை.

29. அறிவில் மேம்பட்டவர், அறிவில் கீழ்ப்பட்டவரை உயர்த்தத் தொண்டுசெய்தல் வேண்டும்.

30. உயிர்கட்கு அழகு தொண்டே.

31. உயிர்களுக்குத் தொண்டு செய்வது, கடவுளுக்குத் தொண்டு செய்வதாகும்.

32. சன்மார்க்கக் கலப்பில்லாத உலகியற்றுறையோ உயிரியற்றுறையோ இல்லை.

33. சன்மார்க்கம் உலகியலுக்குப் புறம்பானதன்று.

34. சன்மார்க்க சங்கம், இறை முதல் எல்லா உயிர்களையும் அங்கமாகக் கொண்டது. ஆகவே எல்லா உயிரும் சகோதரர்.

35. எல்லா உயிர்களையும் சகோதரராகப் பார்ப்பவர் சன்மார்க்கராவர்.

36. சன்மார்க்கத்தை விரித்துக்கூறுவது தெய்வமறை.

37. தெய்வ மறையின் நிலை மூன்று. அவை மோனம், ஒலி, மொழி என்பன.

38. மோனத்தினின்றும் ஒலியும், ஒலியின்றும் மொழியும் பிறக்கும்.

39. இம்மூன்று நிலையும் குருமார்க்கு உரியன.

40. குருமார் பருவுடல் தாங்கும்போது, அவர் வாயிலாகத் தெய்வமறை மொழிவடிவில் வெளிவரும்.

41. தெய்வமறை பல இடங்களில் பல மொழியில் பலவாறு இறங்கியிருக்கிறது. அவை யாவும் தெய்வத்திருவருள் மொழிகளே. அவைகள் உலகில் பல பெயர்கள் பெற்றிருக் கின்றன.

42. ஐயந் திரிபு மயக்கங்கள் நீங்கி, விளக்கம்பெறுதற்குக் குருமார் வாயிலாகப் பிறந்த தெய்வ அருள் மொழிகளைப் பயில்க; பயின்று அவைகளின் வழி நிற்க.

43. இச் சன்மார்க்க போதம் சுருங்கிய முறையில் யாக்கப் பட்டது. பலவேறு காலங்களில், பலவேறு இடங்களில் தோன்றி, அவ்வக் கால தேச வர்த்தமானங்களுக்கேற்ற முறையில் குருமார் வெளியிட்ட கருத்துக்களின் ஒருமைப்பாடு, அடியேன் உணர்வில் விளங்கிய முறைப்படி, இந்நூற்கண் தொகுத்துக் காட்டப்பட்டது.

44. அடியேன் பல துறைகளில் நின்று யாத்த நூல் பலவற்றிலும் சன்மார்க்க உயிர்நாடி ஓடிக்கொண்டிருக்கும்.

45. இந்நூலுடன் தொடர்புகொண்ட வேறு ஒரு நூல் என்னால் யாக்கப்பட்டது. அது சன்மார்க்கத் திறவு என்பது. அதில் சில விளக்கங்கள் உள்ளன.

46. இயற்கையை உடலாக் கொண்டு, என்றும் மாறுத லின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க.

47. இறைக்கு உடலாய் நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க.

48. இயற்கை – இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க.

49. கால தேச வர்த்தமான நிலைக்கு ஏற்றவாறு, அவ்வப் போது குருமார் வழிப் பிறந்த அருள் மொழிகள் வாழ்க.

50. அருள் மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க.

51. சன்மார்க்க சங்கம் வாழ்க.

திருவாரூர் – வி. கலியாணசுந்தரன்
சன்மார்க்க ஊழியன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *