
சன்மார்க்க போதமும் திறவும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
2. சத்
1. சத் என்பது உண்மை; உண்மையாவது என்றும் இருப்பது; உள்பொருள்.
2. உள்பொருள் இருவிதம். ஒன்று என்றும் மாறுதல் அடையாததாய், ஒரே தன்மையதா யிருப்பது; மற்றொன்று மாறுதல் அடைந்து அடைந்து ஒரே நிலையதா யிராதது. முன்னையது அறிவு – சித்; பின்னையது அறிவற்றது – சடம் – மாயை – இயற்கை.
3. இயற்கைக்கும் அறிவெனுஞ் சித்துக்குந் தொடர்பு உண்டு. இத்தொடர்பால் இயற்கை இயங்குகிறது.
4. அறிவற்றது உள்பொருளாயினும் அது மாறும் பண்புடைமையான், அது சத் என்று வழங்கப்படுவதில்லை. மாறாத அறிவுக்கே சத் என்னும் வழக்கு உண்டு.
5. ஈண்டுச் சத் என்பது மாறாத அறிவெனுஞ் சித்தை உணர்த்துவது.
6. சத் என்னும் உண்மை உள்ள இடத்தில் அறிவு உண்டு. அறிவு உள்ள இடத்தில் அன்பு உண்டு. அன்பு உள்ள இடத்தில் இன்பு உண்டு. இன்பு உள்ள இடத்தில் அழகு உண்டு. ஆகவே, சத்தினை – உண்மை என்றும், அறிவு என்றும், அன்பு என்றும், இன்பு என்றும், அழகு என்றும் அநுபூதிமான்கள் கூறிப் போந்தார்கள்.
7. சத் என்பதைப் பற்றி எழுந்துள்ள ஆராய்ச்சிகள் பலதிறத்தன. சத், சடம் என்றும் அறிவு என்றும் – உள்ளது சடம் ஒன்றே என்றும், அதனின்றும் அறிவு பரிணமிக்கிறது என்றும் – உள்ளது அறிவு ஒன்றே என்றும், அதனின்றும் சடம் பரிணமிக்கிறது என்றும் – சத் ஆன்மா என்றும், அவ்வான்மாவே கடவுள் என்றும்- ஆன்மா வேறு கடவுள் வேறு என்றும் – ஆன்மாவும் கடவுளும் ஒன்றுமல்ல வேறுமல்ல என்றும், அவை பொருளில் வேறாகவும் கலப்பில் ஒன்றாகவும் பிரிவின்றிக் கிடப்பன என்றும்- பலவாறு சொல்லப்படுகின்றன. இன்னோரன்ன தத்துவ நுட்பங்கள் யாவும் பேரறிஞரிடமிருந்து பிறந்தனவே யாகும். ஒவ்வொன்றிலும் அறிவு நுட்பம் இல்லாமல் இல்லை. அங்ஙன மாகக் கருத்துக்கள் பல திறத்தனவாய் அவரிடமிருந்து வெளிவந்தமைக்குக் காரணம் என்னை? காரணம் பலபடக் கூறலாம். இங்கே விரிவு வேண்டுவ தில்லை. பேரறிஞரிடமிருந்து பலதிறப்பட்ட தத்துவ நுட்பங்கள் வெளிவந்தமைக்குக் காரணம் என்ன என்று சரித்திரக் கண் கொண்டு நோக்கின், கால தேச வர்த்தமானங்களில் அவ்வப் போது நிகழும் மாறுதல் என்பது நன்கு புலனாகும். மக்களின் அறிவுநிலை ஒரு தன்மையதா யில்லாது, பலவகைப் பட்டதாய் இருத்தலான், அவ்வந் நிலைக்குப் பயன்படு முறையில் பேரறிஞரிட மிருந்து, அவ்வப்போது தத்துவக் கருத்துக்கள் பலதிறத்தனவாய் வெளிவந்திருக்கும் என்றுங் கூறலாம். ஒருவனே தன் வாழ்வில் பலவிதக் கருத்துடையனாதலும் ஈண்டுக் கருதற்பாலது. ஆகவே, பலதிறத் தத்துவங்கள் அறிஞர் வாயிலாக வெளிவந்ததில் தவறு தலில்லை என்க. அவை யாவும் உலக நலத்தின் பொருட்டு வெளி வந்தன என்று கூறுதல் மிகையாகாது.
8. பலதிறத் தத்துவ நூல்களைப் பயிலலாம்; கேட்கலாம். அவைகளால் அறிவு விளக்கம் உண்டாகும். ஆனால் அவை களைக் கருவிகளாகக் கொண்டு வாதத்தில் இறங்குத லாகாது. காட்டில் பலதிற மரங்களிருக்கின்றன. அம்மரங்க ளெல்லாஞ் சேர்ந்தே காட்டின்பத்தை ஊட்டுகின்றன.
9. சத் என்பது மாறுதலில்லாத உண்மை; மாறுதலில்லாத அறிவு.
10. மாறுதலில்லாத அறிவுக்குக் கருவி கரணங்களில்லை. கருவி கரணங்களுடன் கூடிய அறிவு கட்டுடையது. இவ்வறிவுக்கு நிலைக்களனாயுள்ள கருவி மூளை. உயிர்களின் மூளைகளில் வன்மை மென்மை இருத்தல் கண்கூடு. அவ்வன்மை மென்மை மற்ற கருவி கரணங்களுக்கேற்ற வண்ணம் அமை கின்றன. மனித உலகத்தையும், அதற்குப் படிப்படியாய்க் கீழ்ப்பட்டு நிற்கும் மற்ற உலகங்களையும் நோக்கின், அவைகள் கருவி கரண அமைப்பில் மனித உலகத்துடன் மாறுபட்டிருத்தல் காண்கிறோம். அவ்வவ் வமைப்புக்கேற்ற வண்ணம் மூளையின் தன்மை அமைகிறது. மீன் – பறவை – விலங்கு – மனித – உலகங்களின் மூளைகளைச் சோதித்துப் பார்த்தல், அம் மூளைகள் படிப்படியே மென்மையுற்றுக் கொண்டு போதலை அறியலாம். மற்ற உயிர்களின் மூளையினும் மனித மூளை மென்மையதா யிருத்தலால், மனித உலகம் பலப்பல புதுமைகளைக் காணக்கூடியதாயிருக்கிறது. கூர்தல் (உள்ளது சிறத்தல் – Evolution). முறைப்படி, கிடந்த உயிர்கள் ஊர்தலையும், ஊர்ந்த உயிர்கள் பின்னே சிறகைப் பெற்றுப் பறத்தலையும், பறந்த உயிர்கள் பின்னே நாற்கால்களைப் பெற்று நடத்தலையும், இவ்வுயிர்கள் பின்னே தங்கள் முன்னிரு கால்கள் கைகளாகி எழுந்ததும் மண்ணிற் படிந்த தங்கள் பின்னிரு கால்களைக் கொண்டு மக்களாகி வளர்தலையும் பெறலாயின. இவ்வியற்கை வளர்ச்சியில் அவ்வப்போது உள் உறுப்புக் களிலும் புற உறுப்புக்களிலும் உறும் மாறுதல்கள் பல. விளக்கம் உயிர் நூல்களிற் காண்க. இவ்வியற்கை வளர்ச்சியைச் சிந்திக்கச் சிந்திக்க இருகால் மனித நிலைக்கு மேலும் மேலும் நிலைகளிருத்தல் வேண்டும் என்பது விளங்கும். தாழ்ந்த உயிர்கள் இருகால் மனித னாகும் வரை துணைநின்ற இயற்கை, பின்னை வாளா இராது. அஃது உயிர்களை மேலும் மேலும் உயர்த்தத் தன் கடனை ஆற்றிக்கொண்டே யிருக்கும். கூர்தல் முறைப்படி, கருவி கரணங்கள் அருக அருக, மூளை மென்மை உற்று உற்று, அறிவு படிப்படியே விளக்கம் பெறுதல் தெளிவாகிறது. இதனை மனித நிலைவரை நாம் காண்கிறோம். இவ்வாறு படிப்படியாகக் கருவி கரணங்கள் அருகி அருகி, முற்றும் அற்றுப்போகும் ஒரு நிலையை, ஒவ்வோருயிரும் என்றாதல் ஒருபோது அடைந்தே தீர்தல் வேண்டும் என்று ஊகித்து உணர்தல் கூடும். மேல்நாட்டு இயற்கைக் கலைகளும், கீழ் நாட்டுத் தத்துவக் கலைகளும் நெருங்கி நெருங்கி, உறவாடி உறவாடி, ஒன்றுபடப்பட இந்நுட்பங்கள் பல வெளியாகும். கருவி கரணங்களைப் பெற்றுப் பெற்றுப் படிப் படியாக விளங்கி விளங்கி, அவ்வவ்வளவில் கருவி கரணங்களி னின்றும் விடுதலை அடைந்து, அடைந்து முற்றும் கருவி காரணங்களை இழந்து நிற்கும் அறிவு எத்தன்மையதாயிருக்கும்? அவ்வறிவு கட்டின்றித் தன் முழு இயல்புடன் இனிது விளங்கும். கட்டிலிருந்த அறிவுக்கு, இயற்கையின் துணை நல்கிக் கருவி கரணங்களைத் தந்து, அவ்வறிவை விளக்கி விளக்கித் தன்னைப் போலாக்குதற்கு என்றுங் கட்டில்லா ஓர் அறிவு தேவை என்று சொல்ல வேண்டுவதில்லை. அவ்வறிவே சத் என்பது. சத்தெனும் அறிவும் கருவி கரணங்களுடைய தாயின், அது கருவி கரணத் தொடக்குடைய அறிவை மேல் நிலைக்குக் கொண்டுவர இயலாததாய்க் கிடக்கும். ஆகவே, இயல்பாகக் கருவி கரண மில்லாத அறிவே சத் என்று உணர்க.
11. கருவி கரணமில்லாத அறிவு, கட்டில்லாததாதலின், அஃது என்றும் மாறுதலின்றி, ஒரு தன்மையதாயிருப்பது.
12. கட்டுள்ள அறிவென்றும், கட்டில்லா அறிவென்றும் அறிவு இருவிதம் ஏற்படுதல் சிந்திக்கத்தக்கது. கட்டு என்பது அறியாமை. அறிவு ஒன்றோ இரண்டா என்பதைப் பற்றிப் பலதிற ஐயப்பாடுகள் உண்டு. அவைகளை விரிக்கிற் பெருகும். முக்கிய மான இரண்டொன்று வருமாறு:- அறிவு இரண்டு என்றும், அவை சிற்றறிவு பேரறிவு என்றும், மண் புனல் தீ காற்று ஆகியவற்றில் வெளி (ஆகாயம்) நீக்கமற நிறைந்திருப்பது போலச் சிற்றறிவில் பேரறிவு நீக்கமற நிறைந்து நிற்கிறதென்றும், அறியாமை இயல்பாயுள்ள அறிவு சிற்றறிவு என்றும், அறியாமையே இல்லா அறிவு பேரறிவு என்றும், அறியாமை உள்பொருள் என்றும், அநாதி என்றும், அவ்வறியாமையி னின்றும் அறிவு விடுதலை அடைந்து பேரறிவில் இரண்டறக் கலப்பது வீடுபேறு என்றும், வீடுபேற்றில் அறியாமை ஞாயிற்றின் ஒளி முன்னே தாரகைகள் ஒடுங்குதல் போலப் பேரறிவின் முன் ஒடுங்கிக் கிடப்பதென்றும், அறிவு இரண் டெனில் ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்றிராதென்றும், ஆகவே அறிவு ஒன்றே என்றும், அதற்கு அறியாமை இயல்பில் இல்லை என்றும், அறியாமை உள்பொருள் அன்று என்றும், அது கானற்சலம் போன்றதொன்று என்றும், விவகாரத்தில் அஃது இருப்பதே போல் தோன்றுவதென்றும், பார மார்த்தத்தில் அதற்கு இருப்பு இல்லை என்றும், அறியாமையின் பொய்மை தெளிந்து அறிவாதல் வீடுபேறு என்றும் உலகம் பலவாறு கூறுகிறது.
13. அறியாமையைப் பற்றி எழுந்துள்ள சிக்குகள் பல. அச்சிக்குகள் அறுந்தால் உண்மை விளங்கும். அச்சிக்குகள் அறுதற்கு அறியாமை உள்பொருளா இல் பொருளா ஆதியா அநாதியா என்னும் வாதத்தில் இறங்குவது அநாவசியம். வாதம் எப்பொழுதும் உண்மை உணர்த்துவது அரிது. அறியாமையை உள்பொருள் என்போரும், இல்பொருள் என்போரும், ஆதி என்போரும், அநாதி என்போரும் விடுதலைக்கு முயலுதல் வேண்டுமென்னுங் கொள்கை யுடையவர். பொய் அறியாமையி னின்றோ அல்லது மெய் அறியாமையினின்றோ விடுதலை அடைவதற்குரிய முயற்சியில் தலைப்படுவது அறிவுடைமை. வாதத்தில் இறங்குவது அறிவுடைமை யாகாது.
14. கருவி கரணமின்றியும் கட்டின்றியும் உள்ளது சத்தெனும் அறிவு ஒன்றே.
15. ஒன்றாயுள்ள சத்தெனும் அறிவுக்கு இருவித நிலை உண்டு. ஒன்று எல்லாவற்றையுங் கடந்தது; மற்றொன்று எல்லா வற்றிலுங் கலந்தது. எல்லாவற்றிலும் என்றது இயற்கையை.
16. இயற்கையெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அறிவு நிலையை இறை என்றனர் ஆன்றோர். எங்கும் இறுத்தலை யுடையது இறை.
17. எல்லாவற்றையுங் கடந்த தனி அறிவு நிலை ஊர் பேர் அற்றது. அதையும் இறை என்பது உலக வழக்கு.
18. எல்லாவற்றையுங் கடந்த இறைநிலை வாக்கு மனங்கடந்தது; வழிபாட்டுக்கு உரியதாகாது. எவ்வெவற்றிலுங் கலந்த இறை நிலையே வழிபாட்டுக்கு உரியது.
19. அறிவு விளங்கும் இடத்தில் அன்பு நிகழ்தலும், அறிவு விளங்காது அறியாமைக் கட்டுள்ள இடத்தில் பகைமை முதலியன நிகழ்தலும் அநுபவத்தில் அறிவன. இறை, என்றுங் கட்டில்லா அறிவாயிருத்தலான், அஃது என்றும் அன்பா யிருப்பது.
20. அன்பில் இன்பு இருத்தல் வெள்ளிடைமலை. இறை அன்பாயிருத்தலான், அஃது என்றும் இன்பாயிருப்பது.
21. இன்பம் பொதுவாக எப்பொழுது பிறக்கிறது? நெஞ்சை அழகு கவரும்போது இன்பம் பிறக்கிறது. இறை, என்றும் இன்பமா யிருத்தலான், அஃது என்றும் அழகாயிருப்பது.
22. சத்தெனும் இறை ஒன்றற்கே உலகில் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெயரையும் ஒவ்வொரு கடவுளாகக் கொள்வது அறியாமை. நீருக்கு உலகில் எவ்வளவோ பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்களின் பொருளாக உள்ளது நீர் ஒன்றே.
23. கட்டில்லா அறிவாய், அகண்டமாய், எல்லாவற்றையுங் கடந்துள்ள சத், மன உணர்வுக்கு எட்டாதது.
24. உணர்வு பலதிறந்தது. அது, கண் உணர்வு என்றும், காது உணர்வு என்றும், மூக்கு உணர்வு என்றும், நா உணர்வு என்றும், உடல் உணர்வு என்றும், மன உணர்வு என்றும் பலபட்டு நிற்பது.
25. கண் முதலிய உணர்வுகட்கு அடிப்படை மனஉணர்வு.
26. மனம் வெளிமனம் என்றும், உள்மனம் என்றும் இருவகைப்படும். இவை முறையே உருவ மனம் என்றும், அருவ மனம் என்றுஞ் சொல்லப்படும்.
27. வெளி மனம் உருவங்களைக் கொள்ளவல்லதென்றும், உள் மனம் உருவங் கடந்தவைகளைக் கொள்ளவல்ல தென்றும் சாதாரண உலகஞ் சொல்லும். மற்ற உலகம் அங்ஙனஞ் சொல்வ தில்லை.
28. உள் மனம், நடு மனம் அடி மனம் என்று பிரியும் போது, வெளி மனத்தை முதல் மனம் என்று கொள்வது முறை.
29. முதல் அடி என்னும்போது நடு தொக்கியிருத்தல் இயல்பு. அது முதலையும் அடியையும் நோக்கி நடுவில் நிற்றலால் அதை முதலுடன் சேர்த்தோ அடியுடன் சேர்த்தோ விடுவது மரபு.
30. இங்கே சுருங்கிய முறையில் வெளி மனம் உள்மனம் என்று சொல்லப்பட்டது.
31. வெளி மனம் புலன்களுடன் உழல்வது. உள்மனம் புலன்களின் தொடர்பற்றது.
32. வெளி மனம் ஒழுக்கத்தை நிலை பெறுத்தாது. ஒழுக்கத்தை நிலைபெறுத்தவல்லது உள் மனம். உள் மனம் ஒழுக்கக் கோயில்.
33. உருவமும் அருவமும் சேர்ந்த ஒன்றே அருவுருவ மென்பது. அருவுருவம் அருவத்திலும் உருவத்திலும் அடங்கி நிற்றலான், அதைத் தனிப்படுத்தாது உருவம் அருவம் என்று சொல்வது உலக வழக்காயிற்று.
34. உருவங்களில் பருமை நுண்மை உண்டு. பருமை உருவங்கள் கண்ணுக்குப் புலனாவன; நுண்மை உருவங்கள் கண்ணுக்குப் புலனாகாதன.
35. பருமை உருவங்களைக் கொள்வது வெளி மனம்; நுண்மை உருவங்களைக் கொள்வது உள் மனம்.
36. நுண்ணுருவம், அருவம் என்று சொல்லப்படும்.
37. அருவம், உருவ மற்றதன்று. அருவம் கண்ணுக்குப் புலனாகாமையால் அதை உருவமற்றதென்று சொல்வது தவறு. அருவம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணுருவமுடையது.
38. அருவம் எண்ணம்போன்றது. எண்ணத்துக்கும் உருவம் உண்டு என்பது தத்துவ நூலார் துணிபு.
39. உருவம் மாயா காரியம்; இயற்கைக் கூறு.
40. மாயைத் தொடர்பு உள்ளவரை உருவம் எவ் வழியிலாதல் தலைகாட்டும்.
41. மாயை பிருதிவி முதல் நாதம்வரை காரியப்பட்டு நிற்பது. நாதங் கடந்ததும் உருவம் நழுவும்.
42. சத் என்பது உருவ அருவங்களில் கலந்து விளங்கி, அவைகட்கு மேலும் தனித்து விளங்குவது.
43. உருவ அருவ நிலைகளைக் கடந்து விளங்குந் தனித்த சத், இருவித மன உணர்வுக்கும் எட்டாதது.
44. இருவித மன உணர்வையும் பொதுவாக மன உணர்வு என்று கொள்ளலாம்.
45. மன உணர்வுக்கு மேற்பட்ட நிலைகளும் உண்டு.
46. மன உணர்வுக்கு எட்டாத தனித்த சத்தின் இருப்பை, மன உணர்வினர் எப்படி உணர்வது?
47. மன உணர்வினர் தனித்த சத்தினை நேரே உணர்தல் இயலாதாயினும், அதன் இருப்பை அவர் உணர்தற்குக் கருவி இல்லாமலில்லை. கருவி எது? இயற்கை. இயற்கையைக் கொண்டு சத்தின் இருப்பை உணர்தல் கூடும்.
48. நமது உடலில் உயிர் இருக்கிறது. அதன் உண்மையை எவ்வாறு உணர்கிறோம்? உடல் வாயிலாக அன்றோ உணர் கிறோம்? அதேபோல இயற்கை வாயிலாகச் சத்தெனும் இறை உண்மையை உணர்தல் கூடும். இயற்கை உடல்; இறை உயிர்.
49. இறையை விடுத்து இயற்கை நிற்பதில்லை. இயற்கையிலே முற்றும் எங்கும் நீக்கமற இறை நிற்கிறது.
50. இயற்கை என்றும், இறை என்றும் சொல்லாலே பிரித்துக் கூறலாமேயன்றி, இரண்டையும் பொருளாகத் தனித்தனியே பிரித்துக் காண்டல் இயலாது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு பிரிவற்றது.
51. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள பிரிவற்ற தொடர்பைக் கொண்டு, இறையை, இயற்கை – இறை என்றும் சொல்லலாம்.
52. இறை உயிராய், இயற்கையில் எங்கும் நீக்கமற நிற்றலான், இயற்கையாகிய உடல் இயங்கி இயங்கித் தன் கடனாற்றுகிறது. இயற்கையின் இயக்கத்தைச் சிந்திக்கச் சிந்திக்க இறை உண்மையை உணரலாம்.
53. மன உணர்வு உடையோர், உடலாம் இயற்கையை விடுத்து, உயிராம் இறையைத் தனித்து உணர்தல் அருமை.
54. இறை, இயற்கை அளவில் நிற்பதன்று; இயற்கைக்கு மேலுங் கடந்து நிற்பது. இயற்கை கடந்த இறை நிலையின் நுட்பம் மன உணர்வைக் கடந்த பின்னையே விளங்கும். அது பேச்சற்ற அநுபூதி நிலை. மன உணர்விலே அப்பேச்சு எற்றுக்கு? அநுபூதியில் விளங்கத்தக்க ஒன்றைப் பேசிப் பேசி உலகம் இடர்ப்பட்டது போதும்! போதும்!!
55. மன உணர்வுடன் இருந்துகொண்டு, அவ்வுணர்வுக் கெட்டாது, இயற்கையையுங் கடந்து நிற்பதாயுள்ள அகண்டாகார அறிவாய தனி இறையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் அரிய காலத்தை வீணில் கழிப்பதாகும்.
56. உண்மை கண்ட ஞானிகள், வாக்கு மனங் கடந்த தனி இறை அறிதற் கரியதென்று அருளிய மொழிகள் பலபடக் கிடக் கின்றன. அறிதற்கரிய ஒன்றை அறிதற்கரியது என்று அவர்கள் அருளிப் போந்ததன் நோக்கம் என்னை? அவர்கள் நோக்கம், மன உணர்வினர், வாக்கு மனங் கடந்த தனி இறையைப் பற்றிப் பேசிப் பேசிக் காலத்தை வீணே கழியாது, இயற்கை – இறையைத் தியானித்துப் பண்படவேண்டுமென்பது.
57. இயற்கை – இறையைத் தியானித்துப் பண்பட்ட மனம், நாளடைவில் தானே ஒடுங்கி அடங்கும். அதற்குமேல் சில படிகளைக் கடந்து விளங்குவது அநுபூதி நிலை.
58. படிகள், புருடன் கலை விந்து நாதம் முதலியன. நாதங் கடந்த நிலை சொல்லுக்கு அடங்காதது.
59. அநுபூதி நிலையைப் பெறுவிப்பது இயற்கை – இறை. அவ்வியற்கை – இறைவழி நிற்பது மன உணர்வினர் கடன்.
60. இயற்கையை அன்னை என்றும், இறையை அப்பன் என்றும் கூறுவது கவிமரபு.
61. இயற்கை – இறையைக் கவிகள் மனம்போனவாறு பாடிய பாக்களினின்றும் பல வடிவங்கள் பிறக்கலாயின. அவ் வடிவங்கள் இயற்கைப் படங்களாகும். அப்படங்களை, இயற்கை – இறையை நினைவூட்டுங் கருவிகளாகக் கொள்ளவேண்டுமே யன்றி, அவைகளை இயற்கை – இறையாகவே கொள்ளுதல் கூடாது. இவ்வாறே இயற்கைக் கூறுகள் வடிக்கப்பெறும் ஓவியங்களையுங் கொள்ளுதல் வேண்டும். நமது நெஞ்சம் இயற்கையினிடஞ் சென்று படிவதற்குக் காவிய ஓவியங்கள் பாலம் போலத் துணை செய்வன.
62. இறையை உயிராக்கொண்டு, தான் உடலாக நின்று, இயற்கை அன்னை தாங்கும் பலதிற அழகுக் கோலங்களும், அவள் புரியும் பலதிறத் திருவிளையாடல்களும், இறையின் இயல்கள் என்று சொல்லப்படும் அறிவு அகண்டம் அன்பு இன்பு அழகு முதலியனவும் பாக்களாகவும், ஓவியங்களாகவும், கதை களாகவும், நாடகங்களாகவும், பிறவாகவும் புலவர்களால் எழுதப் படுவதுண்டு. அவைகளை அவ்வவ்வாறே பொருளாக் கொள்வது தவறு. அவைகள் அறிவிக்கும் இயல்களை உன்னி உன்னி இன்புறுவது அறிவுடைமை. ஒரு நாட்டிற்கோ ஒரு கொள்கைக்கோ பிற எதற்கோ அறிகுறியாகக் கொடி பறக்க விடப்படுகிறது. அக்கொடி எதற்கு அறிகுறி என்பதை உணர வேண்டுமேயன்றிக் கொடிச் சீலையையும் நிறத்தையும் பொருளாக் கொள்வது அறிவுடைமை யாகாது.
63. இறை பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை. அஃது என்றும் மாறுதலின்றி ஒரு தன்மையதா யிருப்பது.
64. உலகு உய்யக் கடவுள் மனிதராக அவதாரஞ் செய்கிறார் என்று சில இடங்களில் சொல்லப்படுவது உண்டு. அஃது உபசாரமேயன்றி உண்மையன்று.
65. உலகின் பொருட்டு அவ்வப்போது அவதாரஞ் செய்வோர் குருமாரே யாவர்.
66. குருமார் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும் சிற்சில இடங்களில் போற்றப்படுகிறார்; வீரரும் அவ்வாறே சிற்சில இடங்களில் போற்றப்படுகிறார். இதற்கு அடிப்படை யான காரணம், அன்பும் நன்றியறிதலும் ஆகும். அன்பும் நன்றியறிதலும் எல்லாஞ் சொல்லச் செய்வது இயல்பு.
67. வீரரைக் குருமாரினத்தில் சேர்த்தல் மரபாகியது.
68. குருமார் என்போர் தமக்கென ஒன்றில்லாதவராய், முனைப்புச் சிறிதுமின்றி, இயற்கை – இறைவழி நின்று, இறையொளி கண்டு, கருவி கரணச் சேட்டை ஒழியப் பெற்றவராய், கருவி கரணமெல்லாம் அமுதூறப் பெற்றவராய், இறையொளி நீங்காது விளங்கும் நெஞ்சத் தாமரை யுடையவராய், என்றும் அருளே யுடையவராய், சிவந்த பொன் வண்ணராய், இயற்கை வழிபாட்டாலும், பயன் கருதாப் பணியாலும் தம்மைப் பண்படுத்திக்கொண்ட உயிர்கட்கு மெய்ம்மொழி கூறி உண்மை விளக்குவோராய் இருப்பவர்.
69. குருமார் இறைவழி நிற்பவர்; ஆனால் அவர் இறையல்லர்.
70. எங்கும் இயங்கும் மின்சாரம், பொறி அமைத்துத் தொழிற்படுத்துமிடத்தே விளங்கித் தோன்றுவதுபோலக் கருவி கரணமின்றி எங்குமுள்ள சத், குருமாரின் நெஞ்சத் தாமரையில் ஒளியாய் நீக்கமின்றி விளங்கிக் கொண்டிருக்கும்.
71. சத்தெனும் இறை, கருவி கரணங்கள் இல்லாததாத லாலும், அவ்விறையைக் காண்டல் அரிதாதலாலும், அதனொளி விளங்கும் நிலைக்களனாய்த், தமக்கென ஒன்றின்றி, அதன்வழி நின்று, அதன் அருளால் எதையும் நிகழ்த்து வோராய்க் குரு இருத்தலாலும், அக்குரு வாயிலாக உண்மை உணர்வதாலும் அவரைக் காணுங் கடவுளாகக் கொள்ள வேண்டுமென்பது ஒருவித மரபு. கடவுளும் குருவும் வேறாயினும், குரு வாயிலாகக் கடவுளை அடைதலாலும், குருவுக்குச் செலுத்தும் வந்தனை வழிபாடுகள் யாவும் கடவுளைச் சேர்தலாலும் இருவரையும் பிரித்துக்கூறாது, ஒன்றுபடுத்திக் கூறுதல் வேண்டுமென்பது மற்றொருவித மரபு. இருவரையும் ஒன்றுபடுத்துவதால் நாளடைவில், கடவுள் கருவி கரணமுடையார் என்னுங் கொள்கை பிறத்தற்கு இடம் நேர்தலால், இருவரையும் பிரித்துக் கூறுதல் வேண்டு மென்பது இன்னொருவித மரபு. கடவுளே குருவாக வருவதில்லை; ஆனால் கடவுளின் கூறுகள் குருவாக வருகின்றன என்பது வேறொருவித மரபு. இம்மரபுகளினின்றும் பிரிந்து படர்ந்த கொடிகள் பலப்பல.
72. மரபுகள் பலவாக உலகில் தோன்றிவிட்டன. அவை களின் நுட்பங்களைச் சமரச நோக்குடன் பார்க்கப் பழகுதல் வேண்டும். உலகம் பலவிதம். எல்லார் முகமும் ஒன்றாயமைவ தில்லை. எல்லார் கருத்தும் ஒன்றுபட்டிருப்பதில்லை. ஒவ் வொருவர்க்கு ஒவ்வொருவிதச் சுவையில் விருப்புத் தோன்றுதல் இயல்பு. ஒரு மரமே பலப்பல கவடுசோடுகள் விட்டுப் பிரிந்து, பலப்பல இலை அரும்பு மலர் காய் கனிகளையுந் தாங்கி நிற்கிறது. ஒரு பேர் யாற்றினின்றும் எத்துணையோ கால்வாய்கள் பிரிந்து பிரிந்து ஓடுகின்றன. இவ்வாறே மரபுகளும் ஒன்றி லிருந்தே நாளடைவில் பலவாய்ப் பெருகிவிட்டன. மரபுகள் யாவும் இறை – இயற்கை – குரு – இவைகளை ஒட்டியே சுழன்று சுழன்று நிலவிக் கொண்டிருக்கின்றன. அவ்வம்மரபை அவ்வம் மரபினர் மனங்கொண்டு பார்த்தால் பிணக்குக்கு இடமிராது.
73. சில இடங்களில் குருமாருக்கு வழங்கப்படும் பெயர்கள் கடவுளுக்கும் வழங்கப்படுகின்றன. அப்பெயர்களைப் பற்றிய வாழ்த்தும் வணக்கமும் எங்கே சாரும்? அவை குருமார் வாயிலாக எல்லாம்வல்ல இறையையே சாரும்.
74. அவரவர் அறிவாற்றலுக்கு ஏற்றவண்ணம் இறை யுண்மை விளங்கும். அவ்வவ்வாற்றலளவில் எழும் வாழ்த்தும், நிகழும் வணக்கமும் சத் ஒன்றையே சாரும். வாழ்த்தும் வணக்கமும் மெய்யன்புவழி நிகழ்தல் வேண்டும்.
75. கருவி கரணமிலாச் சத்தெனும் இறை ஒன்றே, குருமார் உள்ளத்தைக் கோயிலாக் கொண்டு, கால தேச வர்த்தமான நிலைகளை ஒட்டி, அவ்வந்நாட்டு மொழியில் மறையை அருளிச் செய்கிறது. ஆகவே குருமார் மொழிகள் எல்லாம் இறையின் மறைமொழியே யாகும்.
76. இறைவனுக்கு இயற்கையுங் கோயில்; குருமாருங் கோயில். இவ்விரு கோயில் வழிபாட்டையும் இயற்கை வழிபாடாகவே கொள்ளலாம்.
77. இறையை விடுத்து இயற்கையை மட்டுங் கொள்வோர் சிலர் இருக்கிறார். இயற்கை புலனாகும் ஒன்றாதலானும், இறை புலனாகா ஒன்றாதலானும் இயற்கையை மட்டுங் கொள்ளுதல் வேண்டுமென்பது அவர்தங் கொள்கை. அக்கொள்கை யுடையாரை இறை நேயர்களிற் சிலர் நாத்திகரெனக் கூறுவது வழக்கம். இதனை ஒட்டி வாதங்கள் எழுகின்றன. வாதமின்றி இருசாராரும் வாழ்வு நடாத்தலாம். இருசாராரும் மன உணர்வு உடையவராதலின், இருவர்க்கும் இறை புலனாவதில்லை. இருசாராரும் இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்துவதில் ஒருமைப்பாடுடையவர். பிணக்கு எற்றுக்கு? இயற்கை உடல்; இறை உயிர். உடல்வழி நிற்பது, உயிர்வழி நிற்பதாகும். இயற்கையை மட்டுங் கொள்வோர் இறையை மறுத்தோ பழித்தோ கூறாமலும், இவரை மற்றவர் நாத்திகரென இகழாமலும் இருசாராரும் இயற்கைவழி நின்று கடனாற்றல் அறிவுடைமை இயற்கை நெறியே இறை நெறி.
78. இறை உயிர் ; இயற்கை உடல் என்னும் எண்ணத் துடன் இயற்கைவழி நிற்போரும், அவ்வெண்ணம் இன்றி இயற்கைவழி நிற்போரும் செயலில் ஒருமைப் பாடுடையவர். செயலில் ஒருமைப்பாடுடையவர் ஒருவரோ டொருவர் பிணங்க வேண்டுவதில்லை.
79. இறை உண்டு என்பது ஆத்திகம் என்றும், இறை இல்லை என்பது நாத்திகம் என்றும் சொல்லப்படுகின்றன. இறை உண்டு இல்லை என்னும் வாய்ப்பேச்சைக் கொண்டு, ஆத்திக நாத்திக நிலையை அளந்து கூறுதல் இயலாது. இயற்கை நெறி நிற்றல் நில்லாமை என்னுஞ் செயலைப் பொறுத்து ஆத்திக நாத்திக நிலை நிற்பது.
80. இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்துவோர் ஆத்திகர். அவ்வாழ்வு நடாத்தாது வேறு வழியில் செல்வோர் நாத்திகர்.
81. இயற்கையோடியைந்த வாழ்வு என்பது உயிர்கள் வழிபாட்டையும் உடன்கொண்டது.
82. சத்தினைத் தனிப்படுத்தி, அதை மன உணர்வால் ஆராய்ந்து ஆராய்ந்து, காலம் போக்காது, அதனை அடைதற் குரிய மார்க்கத்தில் நின்றொழுகுவது சிறப்பு.
83. சத்தினை அடைதற்குரிய மார்க்கம் எது?



